'பிரபஞ்சத் தோற்றம்' குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், 'ஏதும் புரியவில்லை' என்பது புரியும். தோற்றுவித்தவர் கடவுள் என்பது வெறும் அனுமானம்தான்!

Sunday, April 22, 2012

கோயிலுக்கா போகிறீர்கள்.....? கொஞ்சம் நில்லுங்கள்!
                     கோயிலுக்கா போகிறீர்கள்.....? கொஞ்சம் நில்லுங்கள்!.....


[இது பண்பற்ற செயல் என்பது புரிந்தும்.....கருத்துகள் மனதில் ஆழப் பதிய வேண்டும் என்பதற்காகச் சற்றுக் கடுமையான சொற்களைப் பயன்படுத்துயிருக்கிறோம். மன்னியுங்கள்]

“நீங்கள் கோயிலுக்குப் போகும் வழக்கம் உள்ளவரா? உங்களுடன் அது பற்றிய எமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விழைகிறோம்.

அதற்கு முன்னதாக, கடவுள் வழிபாடு பற்றி நாம் எழுப்ப விரும்பும் கேள்விகளை ஆராய்வது மிக அவசியம் எனக் கருதுகிறோம்.

கேள்வி 1:

“கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தவர். அவர் எல்லாம் வல்லவர்; தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார். அணுவிலும் அவர்தான் இருக்கிறார். ஏன்.....உங்களுக்குள்ளேயும் அவர் நிரந்தரமாய்த் தங்கியிருக்கிறார். உங்களைப் படைத்த அவருக்கு உங்களைப் பாதிக்கிற கஷ்ட நஷ்டங்கள் பற்றி அத்துபடியாய்த் தெரியும். உண்மை இதுவாக இருக்கும் போது, நீங்கள் முறையிட்டால்தான் உங்கள் குறைகளை அவர் போக்குவார் என்று நினைப்பது முட்டாள்தனம் அல்லவா?”

கேள்வி 2:

உங்களுக்கோ உங்களின் சொந்தபந்தங்களுக்கோ நேரிட்ட துன்பங்களைக் களையும்படி நீங்கள் எத்தனை முறை அவரிடம் முறையிட்டிருக்கிறீர்கள்? எத்தனை முறை அவர் உங்கள் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்திருக்கிறார்?
அதற்கு ஒரு பட்டியல் தயார் செய்ய முடியுமா?

கேள்வி 3:

உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், கடவுளின் கருணை உள்ளம் குறித்து நீங்கள் சந்தேகப் பட்டதில்லையா? இல்லையென்றால், எந்தவொரு பயனையும் அவரிடமிருந்து எதிர்பார்க்காமல் அவரை 100% நம்பும் முட்டாளாக நீங்கள் ஆனதெப்படி என்று சிந்திப்பதில்லையே, ஏனோ?

உங்களை முட்டாள் ஆக்கிய அவதாரங்களின்...ஆன்மிகங்களின் அருகதை பற்றி ஆராயும் எண்ணம் உங்கள் மனதில் உதிப்பதே இல்லையே, ஏன்...ஏனோ?

கேள்வி 4:

உங்கள் கோரிக்கைகளில் பல நிறைவேறாமல் மிகச் சில மட்டுமே நிறைவேறும் நிலையில், அவ்வாறு நடப்பது கடவுளின் கருணையால்தான் என நீங்கள் நம்புவது உண்டா?

“ஆம்” எனில், பல கோரிக்கைகளை அவர் நிராகரித்தது ஏன் என்று கேள்விகள் எழுப்பி ஆராய்ந்ததுண்டா?

இல்லையெனின், நீங்கள் ஓர் அடிமுட்டாள் என்பதை உங்களுக்குப் புரியும்படி எவருமே எடுத்துச் சொல்லவில்லையா?

கேள்வி 5:

அனைத்திற்கும் மூல காரணமானவர் கடவுள்தான் என்றால், நம்மைத் தாக்குகிற துன்பங்களுக்கும் அவரே காரணம். அவரைப் போற்றித் துதி பாடுவது அறிவீனம் என்ற தெளிவு உங்களுக்கு ஒரு போதும் ஏற்பட்டதில்லையே, ஏன்?

கேள்வி 6:

துன்பங்கள் நேர்வது கடவுளால் அல்ல என்று நீங்கள் நம்பினால், நம்மை இம்சிக்கிற துன்பங்கள் தாமாக வந்தன என்று அர்த்தமாகிறது. நமக்கு உண்டான துன்பங்கள் விலகும் போது அவை தாமாக விலகின எனக் கொள்ளாமல் கடவுளின் கருணையால் அது நிகழ்ந்தது என்று நீங்கள் நம்புகிறீர்களே, அது வடிகட்டின முட்டாள்தனம் என்பதை நீங்கள் ஒருபோதும் உணர்ந்ததில்லையா?

கேள்வி 7:

உங்களோடு தொடர்புடையவர்களுக்கு என்றில்லாமல், ஊர் உலகத்திற்காகவும் பிறருடன் இணைந்து, ஒட்டு மொத்த மக்கள் சமுதாயத்தின் துன்பம் களையும்படி கடவுளை நினைத்துப் பிரார்த்தனை செய்திருக்கிறீர்கள். அதாவது, கூட்டுப் பிரார்த்தனை நிகழ்த்தியிருக்கிறீர்கள்.

உங்கள் பிரார்த்தனைக்கு நெகிழ்ந்து, உயிர்கள் வறுமையில் உழன்று, கடும் துன்பத்திற்கு உள்ளாகி அழிவதையும், தீராத நோய்களின் கொடூரப் பிடியில் சிக்குண்டு சித்திரவதைப்பட்டு மாண்டு போவதையும், சுனாமி போன்ற கொடூர நிகழ்வுகளில் அகப்பட்டு பல்லாயிரக் கணக்கில் உயிர்கள் செத்தழிவதையும் இது போன்ற இன்ன பிற அவலங்களையும் கடவுள் தடுத்து நிறுத்தவில்லை என்பதற்காகக் கடவுளை ஒருபோதும் நீங்கள் நொந்து கொண்டதில்லையே, அது ஏன்?...ஏன்?...ஏன்?

இவ்வாறாக, நாம் எழுப்பிய எந்தவொரு கேள்விக்கும் ஆத்திக நண்பர்களிடமிருந்து ஏற்புடைய பதில்கள் வந்ததில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் இப்போது நினைவு கூர்கிறோம்.

“இப்படியெல்லாம் லாப நஷ்டங்களைக் கணக்குப் போட்டு நாம் கடவுளைக் கும்பிடுவதில்லை.. ’கடவுளை நம்பு. நல்லது நடக்கும்’னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. அவங்க அறிவுரைப்படி நடக்கிறோம்.” என்று சொல்லி, நாம் எழுப்பிய அத்தனை கேள்விகளையும் அர்த்தமற்றதாக்கச் சிலர் முயல்வதுண்டு.

‘கடந்த காலத்தில் பெரியவர்கள் சொன்னவை எல்லாம் இன்றைய காலக் கட்டத்திலும் நல்லனவாகவே இருக்கும் என்று சொல்ல முடியாது. பொத்தாம் பொதுவாகப் பெரியவகள் சொன்னார்கள் என்று சொல்லி, செய்கிற தவறுகளுக்கு நியாயம் கற்பிப்பதும் இன்று சகஜம் ஆகிவிட்டது.

மனத்தளவில் அல்லது தத்தம் வீட்டளவில் கடவுளை வழிபடுவதோடு நில்லாமல், கோயிலுக்குச் சென்று வழிபடுவது ஏறத்தாழ அத்தனை கடவுள் பக்தர்களின் வழக்கமாக உள்ளது.

அவர்களின் முன் நாம் சமர்ப்பிக்கும் ஒரு கேள்வி.......................

கோயிலுக்குச் சென்று வழிபடுவதால் நீங்கள் பெறும் கூடுதல் பயன் என்ன?

“ கோயிலுக்குப் போயி ஆண்டவனை வழிபட்டா, ஒருவித நிம்மதி பிறக்குது; மனசு சுத்தமாகுது.” இது மிகப் பலரின் நம்பிக்கையாக இருக்கிறது.

தாம் பொய் சொல்வதை உணராமலே பலரும் இப்படியொரு பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்!

ஆறறிவு கொண்டு இன்றுவரை அறியப்படாத, சிந்தித்து உணரப்படாத, கற்பனை செய்யப்பட்ட ஒரு நபருக்கு ஊரூருக்குக் கோயில் கட்டி வைத்து, அங்கு சென்று வழிபட்டால் மனம் தூய்மை பெறும் என்பது அப்பட்டமான ஒரு பொய். இந்த அனுமானக் கடவுளை நம்புவதால் மனம் தூய்மை பெற்று விடாது என்பது உறுதி.

நம்மில் மிக மிகப் பெரும்பாலோர் கடவுளைக் கும்பிடுபவர்கள்தான். அத்தனை பேர் மனமும் சுத்தமானதா என்ன? [வழிபடாதவர்களில் அத்தனை பேர் மனதும் சுத்தம் என்று நாம் சொல்லவில்லை]

கோயிலுக்குப் போவதைக் கைவிட்டு ஒரு மருத்துவ மனைக்குப் போகலாம். அங்குள்ள நோயாளிகள் படும் துன்பங்களைப் பார்க்கும் போது நம் உள்ளம் இளகும்; உருகும். கெட்ட எண்ணங்கள் அகன்று தூய்மை பெறும்.

அனாதை இல்லங்களுக்குப் போகலாம். நம்மால் முடிந்த அன்பளிப்புகளை அங்குள்ளவர்களுக்குக் கொடுத்து ஆறுதல் சொன்னால். நெஞ்சில் அன்பு சுரக்கும்; மகிழ்ச்சி நிரம்பும்.

மனநலம் பாதிக்கப் பட்டவர்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் போய்ப் பார்க்கலாம். அவர்களுடைய பரிதாப நிலை கண்டு கண்ணீர் உகுக்கும் போது மனசில் கருணை பிறக்கும்; அன்புணர்ச்சி பெருகும்.

இன்னும், முதியோர் இல்லம்; குழந்தைகள் காப்பகம்னு நம் மனதைத் தூய்மைப் படுத்துற இடங்கள் நிறையவே இருக்கின்றன.

இம்மாதிரி, பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுவதை விட்டுட்டு, கோயிலுக்குப் போய்க் கடவுளை வணங்கினால் மனம் சுத்தமாகும் என்று சொல்வது கலப்படமில்லாத பொய்; பித்தலாட்டம்; ஏமாற்று வேலை.

நாம் மேற்குறிப்பிட்ட நல்ல பழக்கங்களை எல்லாரும் கடைபிடித்தால், நாட்டில் நல்லவர்கள் எண்ணிக்கை கூடும். ஒருவருக்கொருவர் மனப்பூர்வமா உதவுகிற மகோன்னதமான நிலை உருவாகும். அத்தனை மனங்களிலும் மகிழ்ச்சி வெள்ளம் பெருகி வழியும்.

மக்கள் சிந்திப்பார்களா?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++