'பிரபஞ்சத் தோற்றம்' குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், 'ஏதும் புரியவில்லை' என்பது புரியும். தோற்றுவித்தவர் கடவுள் என்பது வெறும் அனுமானம்தான்!

Monday, December 31, 2012

’குமுதம்’ ஆசிரியர் ப்ரியா கல்யாணராமனுக்கும் ’குங்குமம்’ ஆசிரியருக்கும் ஒரு போட்டி!!!

கீழ் வரும் ‘தப்புத் தப்பாய் ஒரு காதல்’ என்னும் ஒ.ப.கதையின் ‘முடிவு’ என்ன???

குமுதம், குங்குமம் ஆகிய இரண்டு முன்னணி வார இதழ்களும் போட்டி போட்டிக்கொண்டு ஒ. ப. கதைகளை வெளியிடுகின்றன. இதன் ஆசிரியர்களுக்கான ‘சிறப்புப் போட்டி’ இது.

வெற்றி பெறுபவர்களுக்கு, ‘சிறந்த இதழாசிரியர்’ என்னும் விருது வழங்கப்படும்!

தோற்றால்..........

பாதகமில்லை. இத்தளத்தில் வெளியாகும் ஒ.ப.கதைகளைத் தொடர்ந்து படித்துத் தங்கள் தகுதியை மேம்படுத்திக் கொள்ளலாம்.

இதோ கதை..........

தலைப்பு:                    தப்புத் தப்பாய் ஒரு காதல் !

ந்தக் கல்லூரி வளாகத்தின் வடகிழக்குத் திசையில், சுற்றுச் சுவரை ஒட்டியிருந்த புங்கமரத்தடியில் குப்புசாமி காத்திருந்தான்.

நேற்று அவன் ரதிரேகாவுக்குத் தந்த காதல் கடிதத்திற்கு இன்றே பதிலை எதிர்பார்த்தான்.

தன்னோடு படிக்கும் அத்தனை குமரிகளுக்கும் அவரவர் அழகுக்கேற்ப மதிப்பெண்கள் போட்டு, நீண்ட பட்டியல் தயாரித்து, தீர யோசித்து இந்த ரதிரேகாவைத் தேர்வு செய்தான் குப்புசாமி.

அவளை நினைத்து நினைத்து உருகுவதாக ஒரு காதல் கடிதம் தீட்டினான்.

ஆய்வுக்கூடத்தில், எல்லோரும் கருமமே கண்ணாய் இருந்தபோது, ஓசைப்படாமல், அவள் கையில் கடிதத்தைத் திணித்து, “நாளை பகலுணவு இடைவேளையில் உனக்காகப் புங்க மரத்தடியில் காத்திருப்பேன்” என்று அவன் கிசுகிசுத்தபோது, அவள் பார்த்த பார்வை இருக்கிறதே, அப்பப்பா! அப்போதே முக்கால் கிணறு தாண்டிவிட்டதாக நினைத்தான் குப்புசாமி.

குப்பு தப்பு வழியில் போகிற பையனல்ல. தானுண்டு தன் படிப்புண்டு என்றுதான் இருந்தான். வயசுக் கோளாறு கரணமாகக் கன்னியரைப் பற்றிய நினைப்புக்கு மனதில் இடம் தந்துவிட்டான்.

அந்த ஆண்டுதான் கல்லூரியில் காலடி வைத்த வேலுச்சாமி,  “இருபத்தொரு வயசில் இருபத்தேழு பெண்களைக் காதலிச்சிட்டேன்” என்று தம்பட்டம் அடித்தது, குப்புசாமிக்குள் அடங்கிக் கிடந்த காதல் பேயை உசுப்பி விட்டுவிட்டது.

தன் வகுப்புத் தோழி மோகனாவுக்கு மட்டும் முப்பத்தேழு ‘மோக மடல்கள்’ தீட்டிவிட்டதாக முரளிமோகன் பீற்றித் திரிந்தது, இவனுக்குள் காதல் பித்தம் பெருக்கெடுக்கக் காரணமாய் அமைந்துவிட்டது.

கையில் விரித்துப் பிடித்த கடிதமும், கழுத்தில் உயர்த்திவிட்ட காலருமாக, “சரிதா என் காதலை ஏத்துகிட்டா. என்னை மனசாரக் காதலிக்கிறா” என்று சொல்லிச் சொல்லி, செல்வராசு கர்வப்பட்டது, ‘நானும் காதலிக்கப்பட மாட்டேனா” என்ற ஏக்கத்தை இவனுக்குள் வளரச் செய்துவிட்டது.

குப்புசாமி தீவிரமாக யோசித்தான். தானும் காதலித்துப் பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தான். ரதிரேகாவுக்குக் காதல் கடிதம் தந்தான். புங்க மரத்தடியில் காத்திருந்தான்.

அதோ.....

தோழியர் குழாமிலிருந்து விடுபட்டு, புங்கமரத்தைக் குறிவைத்து விரைந்து வந்துகொண்டிருப்பது...........

ரதிரேகாவேதான்.

அவள் கரத்தில் படபடத்துக் கொண்டிருக்கும் அந்தக் கடிதம்.....?

இவனுக்கு அவள் தீட்டிய தீஞ்சுவை மடலோ?

குப்புசாமியை நெருங்கிவிட்டிருந்தாள் ரதிரேகா.

குப்புசாமியின் நெஞ்சில் படபடப்பு. “ரதி...வந்து...” என்று ஏதோ சொல்ல முயன்றான்.

வார்த்தைகள் வெளிவரும் முன்னரே, ரதிரேகா தன்னிடமிருந்த கடிதத்தைக் [நம் குப்பு எழுதியதுதான்!] கசக்கிச் சுருட்டி, “இந்த குரங்கு மூஞ்சிக்குக் காதல் ஒரு கேடா?” என்று இவன் முகத்தில் வீசியடித்துவிட்டு, வந்த வேகத்தில் திரும்பிப் போனாள்.

குப்பு லேசான அதிர்ச்சிக்கு ஆளானான். சுதாரித்துக் கொண்டு வெகு விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பினான். அவன் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள்; இதழ்களில் புன்னகை!

தொடரும்......................

குறிப்பு: கதையின் முடிவு என்ன?

சிந்திப்பதற்குச் சிறிது அவகாசம்.

முடிவு கீழே......................................
முடிவு:

“அடேய் குப்பு, அழகுக்கு மதிப்பெண் போட்டு நீ தயாரித்த மதிப்பெண் பட்டியலில், இந்த ரதிரேகா கடைசி ஆள். இவளே உன்னை நிராகரிச்சிட்டான்னா, வேறு எவளும் உன்னைச் சீந்தப் போவதில்லை. இனி, காதல் கத்தரிக்காய்னு மனசைத் தவிக்க விடாம நிம்மதியா படி. பெரிய உத்தியோகத்துக்குப் போ. கவுரவமா வாழ்ந்து காட்டு. அப்புறம், இந்த ரதியென்ன, தேவலோகத்து ரதியே வந்து, ‘என்னை ஏத்துக்கோ’ன்னு கியூவில் நிற்பா” என்று தன்னைத்தானே உற்சாகப்படுத்திக் கொண்டு, புங்கமரத்தடியில் அமர்ந்து புத்தகம் படிக்கலானான் குப்புசாமி.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


Monday, December 24, 2012

காமம் பொல்லாதது!

’காமம் வலியது: பொல்லாதது’ என்பதை உணர்த்த முயலும் கதைகள்!!!

காமக் கதை1:                        நடுநிசிக் காமம்

தூக்கம் கலைந்து புரண்டு படுத்தான் தங்கராசு.

அவனுடைய ஒரு கை, முந்தானை விலகிய மருக்கொழுந்துவின் மார்பகத்தின் மீது விழுந்தது.

மனதில் காமம் துளிர்விட, அதை இன்னும் சுதந்திரமாகப் புழங்கவிட்டபோது....

“எடுய்யா கையை.” மருக்கொழுந்து அதட்டினாள்.

கையைப் பின்னுக்கு இழுத்தான் தங்கராசு.

‘என்னய்யா நடு ஜாமத்தில் சேட்டை பண்றே?”

“அது வந்து மருக்கொழுந்து.....தூக்கக் கலக்கத்தில்.....” வாய் குழறியது தங்கராசுக்கு.

“உன் கை பட்டவுடனே எனக்கு விழிப்பு வந்துட்டுது. மேற்கொண்டு என்ன நடக்குதுன்னு பார்க்கத்தான் தூங்குற மாதிரி நடிச்சேன். இதோ பாருய்யா, இந்த மாதிரி அர்த்த ராத்திரியில் எல்லாம் இது வெச்சுக்கக் கூடாது. உடம்பு கெட்டுடும்னு சொல்லியிருக்கேன் இல்லியா? நல்ல தூக்கத்தைக் கெடுத்துட்டியே.”

உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முயன்றும் முடியாத நிலையில்,  “என்னை மன்னிச்சுடு மருக்கொழுந்து. காத்தால இருந்து ராத்திரி எட்டு மணி வரைக்கும் மூட்டை சுமந்துட்டு வர்றேன். சுடு தண்ணியில் குளிச்சுட்டு, சுடச்ச்சுட நீ போடுற சோத்தை வயிறு முட்டத் தின்னதும் அடிச்சிப் போட்ட மாதிரி படுத்துத் தூங்கிடறேன். ஒரு தூக்கம் தூங்கி முழிக்கும் போது, பக்கத்தில் உன்னைப் பார்த்ததும் ‘அந்த நினைப்பு’ வந்துடுது.....”

அவன் பேசி முடிப்பதற்குள் அவசரமாய் அவனை இழுத்து அணைத்து, “நீ தப்புப் பண்ணல. நான்தான் உன் நிலைமை புரியாம தப்பாப் பேசிட்டேன். இனி, உன் மனசறிஞ்சி நடந்துக்குவேன்” என்றாள் இன்னும் ’புதுசு’ மாறாத மருக்கொழுந்து!

                        *                                            *                                          *

காமக் கதை 2:                    திணவு    

“மல்லிகா,   எங்கடி போய்ட்டு வர்றே?”

வீட்டுக்குள் நுழைந்த மகளை முறைத்தபடி கேட்டாள் செல்லம்மா.

“புவனாவைப் பார்த்துட்டு வர்றேன்” என்றாள் மல்லிகா.

“இல்ல. அவ புருஷனைப் பார்த்துட்டு வர்றே. புவனா நேத்தே அவ அம்மா வீட்டுக்குப் போய்ட்டா. உன்கிட்டே சொல்லிட்டுத்தான் போனா. உங்க பேச்சைப் பாத்ரூமிலிருந்து கேட்டேன்.

மல்லிகா மவுனம் போர்த்து நின்றாள்.

“புருஷன் இருக்க வேறொருத்தன் மேல ஆசைப்படுறது தப்புடி.”

“நீயும் அந்தத் தப்பைப் பண்ணியிருக்கே. நான் வயசுக்கு வந்தப்புறம்தான் ’அந்த ஆளு’ உன்னைத் தேடி வர்றதை நிறுத்தினான்.” அவள் பிரசவித்த வார்த்தைகளின் சூடு, செல்லம்மாவை வெகுவாக வாட்டியது.

மனதைத் தேற்றிக் கொள்ளச் சற்றே அவகாசம் தேவைப்பட்டது அவளுக்கு.

சொன்னாள்: “இளம் வயசிலேயே என் புருஷன், அதான் உன் அப்பன் செத்துட்டான். கொஞ்ச வருஷம் இன்னொருத்தனுக்கு வைப்பாட்டியா இருந்தேன்.

நான் செஞ்சது தப்புன்னாலும், அதுக்குப் பாவ மன்னிப்பு உண்டு. ஆனா நீ.....

புருஷன் இருக்கும்போதே, அவனுக்குத் துரோகம் பண்ண நினைக்கிறே. இதோ பாருடி.......மற்றதில் எப்படியோ, இந்த விஷயத்தில் கண்டிப்பா ‘போதும்’கிற மனசு வேணும். ‘இன்னும் வேணும்.....இன்னும் வேணும்’னு திணவெடுத்துத் திரிஞ்சா குடும்பம் சிதைஞ்சி சின்னாபின்னம் ஆயிடும். புரிஞ்சுதா”

“புரிந்தது” என்பதுபோல் தலையசைத்தாள் மல்லிகா.

**************************************************************************************************************************************

குறிப்பு: இரண்டு கதைகளுமே நான் கிறுக்கியவைதான்!

**************************************************************************************************************************************
Saturday, December 22, 2012

பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் படைத்த ஒரு பக்கக் கதை!

அற்புதமான ‘சஸ்பென்ஸ்’ கதை இது!!

1981 ஆம் ஆண்டில், ‘ராணி’ இதழில் [26.07.81] ராஜேஷ்குமார் எழுதிய கதை இது.

கதையைப் பிரதி எடுக்கவில்லை. எழுதி வைத்த குறிப்பின் துணைகொண்டு என் சொந்த நடையில் எழுதியிருக்கிறேன்.

எழுத்தாளரின் கொள்கையைப் பின்பற்றி, ‘ஆபாசம்’ கலவாத நடையைக் கையாண்டிருக்கிறேன்.

சாதனை எழுத்தாளருக்கு என் மனப்பூர்வ நன்றி.

ஒரு பிரபல படைப்பாளரின் ஒரு பக்கக் கதையைப் படிப்பதில் அனைவரும் ஆர்வம் காட்டுவர் என்ற நம்பிக்கையில் இதை வெளியிடுகிறேன்.

கதைத் தலைப்பு:                அவளுக்கு வெட்கமில்லை     

“என்னடா யோசிக்கிறே? காரியத்தில் இறங்கு” என்றான் துரைசாமி.

”அண்ணே, பட்டுப் புடவையில் ரூபி ஒரு அப்சரஸ் மாதிரி இருக்கா. பார்த்துட்டே இருக்கணும்னு தோணுது” என்றான் செல்வம்.

“சும்மா பார்த்துட்டே இருந்தா காரியத்தை எப்போ முடிக்கிறது. போடா. சீக்கிரம் போயி அவள் சேலையை உருவு.” அதட்டும் தொனியில் சொன்னான் துரைசாமி.

”துரையண்ணே, நீங்க எனக்கு சீனியர். நீங்க ஆரம்பிச்சி வைங்க.”

“இதுல என்னடா சீனியர் ஜூனியர்? போடா. உன் திறமையைக் காட்டுடா.”

“அவ கட்டியிருக்கிறது விலை உயர்ந்த பட்டுச்சேலை. கண்டபடி கை வெச்சா சீலை பாழாயிடும். பக்குவமா கையாளணும்.....” தயங்கினான் செல்வம்.

இவர்கள் பேசுவதை ரூபி நின்ற நிலையில், புன்னகை தவழும் முகத்துடன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“யாரும் வந்துடுவாங்க. போ. சீக்கிரம்  ஆரம்பிச்சுடு.” துரிதப்படுத்தினான் துரைசாமி.

தயக்கத்துடன் அவளை நெருங்கினான் செல்வம்.

அப்போது..........

அவர்களின் முதுகுப்புறத்திலிருந்து காலடி அரவம் கேட்டது.

இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள்.

முதலாளி நின்றுகொண்டிருந்தார்!

“ரெண்டுபேரும் அரட்டை அடிச்சிட்டு நிக்கிறீங்களே. வாடிக்கையாளர் வர்ற நேரமாச்சில்ல. ’ஷோகேஸ்’ பொண்ணு ரூபிக்குச் சீக்கிரம் சேலையை மாத்துங்கப்பா...ம்ம்ம்...சீக்கிரம்” என்றார் அந்த ஜவுளிக்கடை முதலாளி.

கையில் புதிய பட்டுச்சேலையுடன் இருந்த செல்வமும் துரைசாமியும் பொம்மையை நெருங்கினார்கள்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

          


Tuesday, December 18, 2012

நீங்கள் ‘குமுதம்’ ஆசிரியராக இருந்திருந்தால்.....

கீழ் வரும் ’ஒ.ப.கதைகளை’த் தேர்வு செய்திருப்பீர்களா?

நீங்கள் வாசிக்கவிருக்கும் இரண்டு ஒ.ப.கதைகளும் அடியேன் எழுதியவை.

குமுதம் ஆசிரியரால்  அண்மையில் நிராகரிக்கப்பட்டவை!

குமுதம் ஆசிரியர்  பொறுப்பில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?

மனம் திறந்து உங்கள் முடிவைப் பதிவு செய்யலாம். செய்வீர்களா?

கதை 1:

தலைப்பு:                          விருது

ரு விருது வழங்கும் விழாவுக்குக் காரில் சென்றுகொண்டிருந்தார் எழுத்தாளர் நீதிவாணன்.

கடைவீதியைக் கடந்தபோது அந்த அசம்பாவிதம் அவர் கண்ணில் பட்டது.

நான்கு ரவுடிகள் ஒரு இளம் பெண்ணைக் கடத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.

“என்னைக் காப்பாத்துங்க” என்று அவள் அவலக் குரல் எழுப்பி, அவர்களிடமிருந்து விடுபடப் போராடிக்கொண்டிருந்தாள்.

மக்கள் வேடிக்கை பார்த்தார்களே தவிர, அவளுக்கு உதவ எவருமே முன்வரவில்லை!

அவள் கடத்தப்பட்டாள்!

விழா தொடங்கியது.

வரவேற்புரை நிகழ்த்த ஒருவர் முன்வந்தார்.

அவரைக் கையமர்த்திய நீதிவாணன், என் எழுத்தைப் பாராட்டி எனக்கு விருது வழங்கவே இந்த விழா. நான் வந்துகொண்டிருந்தபோது, ஜன நெரிசல் மிகுந்த கடை வீதியில், நான்கு ரவுடிகள் ஒரு இளம் பெண்ணைக் கடத்திக்கொண்டு போனார்கள். நானூறு கோழைகள் வேடிக்கை பார்த்தார்கள். அவளைக் காப்பாற்றுவதற்கான சிறு முயற்சிகூட மேற்கொள்ளப்படவில்லை.

சமுதாயத்தைத் திருத்தப் பலரும் எழுதுகிறார்கள். நானும் எழுதுகிறேன்.

எழுத்துக்களால் விளைந்த பயன் என்ன?

ரவுடிகள் இன்னும் ரவுடிகளாகவே இருக்கிறார்கள். கோழைகள் கோழைகளாகவே இருக்கிறார்கள்.

நான் இவர்களை மட்டுமல்ல, இவர்களைத் திருத்தாத எழுத்துகளை, குறிப்பாக என் எழுத்தையே நான் வெறுக்கிறேன்; விருதுகளையும் வெறுக்கிறேன்.

என்னை மன்னியுங்கள்.

                                     *                                     *                                    *


கதை 2:

தலைப்பு:                            ஏழை மனசு

வேலை நாட்களில் பேருந்துக்குக் காத்திருக்கும்போது அந்தப் பிச்சைக்காரக் கிழவி கண்ணில் படுவதுண்டு.

இறந்துபோன என் பாட்டியின் சாயலில் இருந்ததாலோ என்னவோ, அவளைப் பார்க்கும்போதெல்லாம் என் நெஞ்சில் இரக்கம் சுரந்துவிடும். சில்லரை இருந்தால் தவறாமல் பிச்சை போடுவேன். போன வாரத்தில் ஒரு ரப்பர் செருப்புக்குப் பணம்கூடக் கொடுத்தேன்.

இன்றும் அவள் என் கண்ணில் பட்டாள்.

இன்று, இரக்கத்திற்குப் பதிலாக, என் மனதில் கோபம் தலை தூக்கியது.

“கிழவி இங்கே வா.” அழைத்தேன்.

வந்தாள்.

“பணம் கொடுத்தேனே, ஏன் செருப்பு வாங்கல?”

”வாங்கிட்டேன் மவராசரே.”

“உன் காலில் செருப்பு இல்லியே?”

”அதுவா? பழைய பஸ் ஸ்டாண்டில் என் புருஷன் பிச்சையெடுக்குது. அதுக்குக் கொடுத்திட்டேன் சாமி” என்றாள் கிழவி.

புருஷன் மீதான கிழவியின் பாசம், என் உடல் முழுக்க லேசான சிலிர்ப்பை உண்டு பண்ணியது.

இன்னொரு ஜோடி ரப்பர் செருப்புக்குக் கிழவியிடம் பணம் கொடுத்துவிட்டுப் பஸ் ஏறினேன்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

குறிப்பு:

வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதால், பின்னூட்டங்களுக்கு நன்றி சொல்வதில் சற்றே தாமதம் ஏற்படும். மன்னித்திடுக.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

Sunday, December 16, 2012

புனைகதை எழுத்தாளர்களுக்கு ஒரு சவால் !!!

விகடனின் ஒரு பக்கக் கதையை முதலில் படியுங்கள்!

எழுத்தாளர்களே,

‘முல்லை எம்.வசந்த்’ என்பவரின் படைப்பாக, ஆனந்த விகடனில் [14.04.1985]  வெளியான ‘தரமான’ ஒரு பக்கக் கதை இது. இதற்கு நிகரான ஒரு கதையை உங்களால் படைத்தளிக்க முடியுமா? முன் வைக்கவேனும் இயலுமா? முயற்சி செய்யுங்களேன்!

கதை: ”போட்டதுதானுங்களே முளைக்கும்”

ரு ஆலமரத்தடியில் சோமனூர் கூடியிருந்தது.

‘டாப்லெஸ்’ ஆக நின்ற முனியப்பனின் கண்கள் சங்கடமாய்ப் புரண்டன.

பஞ்சாயத்துத் தலைவர் ஆதிலிங்கம், ஒரு செருமலை உதிர்த்துவிட்டுச் சொன்னார்: “ முனியப்பா, உங்க காலனிக்குன்னுதான் தனிக் கிணறு ஒதுக்கித் தந்துட்டமே. அப்புறம், ஊர்க் கெணத்துல ஒங்க வீட்டுப் பொம்பள தண்ணி எடுக்கிறது பெரிய அடாவடித்தனம் இல்லையா?”

வாணலியில் அப்பளமாய் நெளிந்தான் முனியப்பன்.

“அது நம்ம ஊருப் புள்ள இல்ல சாமி. கொளத்தூர்லே இருந்து நம்ம வூட்டுக்கு விருந்தாளியா வந்தவ. தெரியாம உங்க கெணத்துல எறச்சிட்டா. அவள நல்லா திட்டிபுட்டமுங்க. பெரிய மனசு பண்ணி.....”

“.....மன்னிக்க முடியாதுப்பா. தண்டனையை வேணுன்னா கொஞ்சம் கொறைக்கலாம்...ம்ம்...”

அபராதத் தொகையைச் சொன்னார். ஆதிலிங்கம். முனியப்பனும் லேசாகத் தலையசைத்தான்.

முனியப்பன் நகரவில்லை: ஆதிலிங்கத்திடம் தலையைச் சொறிந்து நின்றான்; தயக்கத்துடன் சொன்னான்; ”ஐயா, பெரியவங்க சமூகத்தில் ஒன்னு சொல்லணுமுங்க.....”

“சொல்லு.”

“வயசுக்கு வந்த என் புள்ளகிட்ட சின்ன எசமான் தாறுமாறா நடந்துக்கிறதும், மெரட்டி உருட்டி அவ வாயை அடைக்கிறதும்.....”

கூட்டம் ஆக்ரோஷித்தது.

“அடி செருப்பால...”

“எங்களப் பத்தியே ‘கம்ப்ளேன்’ கொண்டு வர்றியா...?”

“அவ்வளவும் திமிரு...” சத்தம் அதிககமாக, முனியப்பன் நடுங்கிப் போய்ப் பின் வாங்க, “சரி...சரி...போவட்டும் விடுங்க...” என்று பஞ்சாயத்தைக் கலைத்தார் ஆதிலிங்கம்.

முனியப்பன் எழுப்பிய பிரச்சினை அனாதையாய் நின்றது!

தலை குனிந்தவாறு நடந்தான் முனியப்பன்.

ருபது வருடங்கள் கழிந்தன.

பஞ்சாயத்தைக் கூட்டி ஆதிலிங்கம் கேட்டார்:

“என்னவே முனியப்பன்! ஒம் பேரனுக்குத் தெனாவெட்டு கூடிப் போச்சு. டிரான்சிஸ்டரைக் கழுத்தில் மாட்டிகிட்டு, சிகரெட் பிடிச்சிட்டு, சீட்டியடிச்சுட்டு, நெஞ்சை நிமிர்த்தி எங்க தெருவில் அலையறான். எங்க ஓட்டலில் எங்களுக்குச் சமதையா பேப்பர் படிக்கிறான்.....”

முதுமையில் தளர்ந்து ஒடுங்கிய முனியப்பன், இடுங்கிய கண்களால், அதே சமயம் நேர்க்கோட்டில் பார்த்தார்; அவர் முகத்தில் லேசான புன்னகை அரும்பியது. பயமின்றி வந்தன வார்த்தைகள்:

“இருபது வருஷம் முந்தி நான் சொன்னபோது நீங்க மதிக்கல... என் வாயைக் கட்டி அனுப்பினீங்க...இப்பவும் என் வாரிசுகள் அடக்கமாத்தான் நடந்துக்கிறாங்க. ஆனா, என் பேரன் விதிவிலக்கா இருக்கான். அவன் ஒடம்புல எங்க பரம்பரை ரத்தம் ஓடல. யாரு ரத்தம் ஓடுதுன்னு உங்களுக்கே தெரியும். நான் என்ன செய்யட்டும்? எங்க வாரிசா இருந்தா நான் ‘கண்ரோலு’ பண்ண முடியும்!”

அவமானத்தில் தலை குனிந்தபடி நகர்ந்தார் ஆதிலிங்கம்!

******************************************************************************************************************************************