திங்கள், 30 ஏப்ரல், 2018

மயக்கும் வாலிபமும் அறிஞர் அண்ணாவின் வியத்தகு சாதனைகளும்!!

கல்லூரி மாணவராக இருந்தபோதே ஆழ்ந்து சிந்தித்து எழுதும் திறன் வாய்த்திருந்தது அறிஞர் அண்ணாவுக்கு. 'ஆனந்த விகடன்', 'ஆனந்த போதினி'[1964இல் நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது, என் கதை இந்த இதழில் வெளியானது! இருந்தும்... இன்றுவரை நான் 'கத்துக்குட்டி'தான்!  ஹி...ஹி...ஹி!] ஆகிய இதழ்களில் அவருடைய படைப்புகள் வெளியாயின.

1931ஆம் ஆண்டில் 'தமிழரசு' என்னும் வார இதழில், 'மகளிர் கோட்டம்' என்னும் அவரின் கட்டுரை பிரசுரம். அப்போது அவரின் வயது.....

இருபத்தொன்றுதான்.

1932இல், கல்லூரியில் நடைபெற்ற 'சேஷைய சாஸ்திரி கட்டுரைப் போட்டி'யில், 'அணிவகுப்பு' என்னும் தலைப்பிலான ஆங்கிலத்தில் அவர் எழுதிய கட்டுரை முதல் பரிசு பெற்றது.

'கொக்கரக்கோ' என்னும் வசீகரமான தலைப்பில் விகடனில்[1934] இடம்பெற்ற அவரின் படைப்புக்கு விகடன் ரூ20/=[அன்று இது மிக உயரிய சன்மானம்] வழங்கியது.

1935இல் 'பால பாரதி' என்னும் ஏட்டின்[நீதிக்கட்சித் தலைவர் பாசுதேவ் என்பவருடன் இணைந்து தொடங்கியது] ஆசிரியர் ஆனார். அதில் பொதுவுடைமைத் தத்துவம் பேசும் கட்டுரைகளும், தொழிலாளர் நலம் பேணும் பதிவுகளும் முக்கிய இடம் பெற்றன.

1937இல் காஞ்சி மணிமொழியார் தொடங்கிய 'நவயுகம்' என்னும் வார இதழின் ஆசிரியரானார் அறிஞர் அண்ணா.

1938இல், 'விடுதலை', 'குடியரசு' ஆகிய இதழ்களில் உதவியாசிரியர்.

1942இல், அப்போது பிரபல நடிகராயிருந்த கே.ஆர்.ராமசாமி போன்றோரின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட 'திராவிட நாடு' இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.
அதில்.....

'உங்கள் ஆஸ்திகம் உங்கள் வைதிகம்
உங்கள் கடவுள் உங்கள் கோயில்
உங்கள் குருக்கள் உங்கள் அய்யர்
உங்கள் மந்திரம் உங்கள் வேதாந்தம்
உங்கள் யோகம் உங்கள் யாகம்
உங்கள் விரதம் உங்கள் பூசனை 
உங்கள் மடங்கள் உங்கள் சடங்குகள்
இவைகள் இதுவரை சாதித்ததென்ன?
ஆயிரம் ஆண்டாய் அசைத்ததென்ன?...'

என்பன போன்ற விழிப்புணர்வூட்டும் படைப்புகள் மட்டுமல்லாமல், அறிவியல், வரலாறு, தமிழ் இலக்கியம், புராணப் புரட்டு, மூடநம்பிக்கை, வர்க்க பேதம், தொழிலாளர் நலன் குறித்த ஏராளமான படைப்புகளும் வெளியாயின.

பெரியாரின் இலட்சியங்களைப் பரப்புரை செய்த  தன்மான ஏடாகவும் இது திகழ்ந்தது.

கலைஞர் மு.கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன், என்.வி.நடராசன், அரங்கண்ணல், தில்லை வில்லாளன் போன்றோரின் ஆக்கபூர்வமான எழுத்துகளும் இடம்பெற்றன.

திராவிடநாடு ஆரம்பிக்கப்பட்டபோது 'உலகப்போர்' தொடங்கியிருந்தது. தமிழகத்திலும் தமிழருக்கு எதிரான ஆளும் வர்க்கத்தாரின் செயல்பாடுகளைக் கண்டித்துக் களம் இறங்கியிருந்தது திராவிடர் கழகம். இச்சூழ்நிலையில்.....

'திராவிடநாடு' இதழில் அண்ணா எழுதிய முதல் தலையங்கத்திற்கு, 'கொந்தளிப்பு' என்று அவர் தலைப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி: ''பேரறிஞர் அண்ணாவின் திராவிடநாட்டில் சிந்திய முத்துக்கள்', முதல் பதிப்பு: 2010; அதியமான் பதிப்பகம், கோவை.

சனி, 28 ஏப்ரல், 2018

உடலுறவுக்கு 'ஒவ்வாத' நேரமும் காலமும்!!

எது எதற்கோ 'நல்ல நேரம்' பார்க்கும் நம்மவர்கள், முதலிரவுச் சுகபோகத்திற்கும் நேரம் பார்க்கத் தவறுவதில்லை. ஆண்&பெண் இருவரிடையேயான முதல் உடலுறவு[முதலிரவு]க்குப் புரிதலும் குதூகலமான மனநிலையும் மிக முக்கியம். இப்பொருத்தம் இருந்தால் அவர்கள் முதலிரவுக்குப் பதிலாக 'முதல் பகல்'கூடக் கொண்டாடலாம். 

முதலிரவு என்றில்லாமல், உடலுறவுக்கென்று  'நல்ல நேரம்' கணித்துச் சொன்னார்களோ இல்லையோ, அதைத் தவிர்ப்பதற்கான கெட்ட நேரங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்கள் ஜோதிடர்கள். அதற்கான சிறு பட்டியலொன்றைத் தருவதோடு உள்மனதில் எழும் ஐயங்களையும் பதிவு செய்திருக்கிறேன்.

1. 'அஷ்டமி, பௌர்ணமி, அமாவாசை, பிரதமை, சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி, சதுர்த்ததி போன்ற நாட்களில் உடலுறவு கூடாது.

கேள்வி:
ஜோதிட சிகாமணிகள் அதற்கான அறிவியல்பூர்வமான காரணங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்களா? 

2. 'ரோகிணி, அஸ்தம், அனுஷம், சுவாதி, ரேவதி, மூலம், உத்தரம், சதயம் நட்சத்திரங்கள் உடலுறவுக்கு ஆகாது.'

கேள்வி:
உடலுறவுக்குத் தேவை நல்ல உடல் நலமும் உகந்த சூழ்நிலையும் மனப்பக்குவமும்தான். எட்டாத தொலைவில் உள்ள நட்சத்திரங்களுக்கும் உடலுறவுக்கும் என்னய்யா தொடர்பு?

3. 'மாதப்பிறப்பு, வருசப் பிறப்பு, விரததினம், விரதத்துக்கு முந்தைய, பிந்தைய தினங்கள், தீட்டு நாட்கள், ஞாயிற்றுக் கிழமை, கிரகணம் போன்ற நாட்களிலும் உடலுறவு கொள்ளுதல் தவறாகும்.'

கேள்வி:
தீட்டு நாளில் அது கூடாது என்று சொல்ல ஜோதிடர்கள் தேவையில்லை. வீட்டிலுள்ள பெரியவர்களுக்கே தெரியும். விரத நாட்களில் உடலும் மனமும் ஒத்துழைப்புத் தரா. மாதப் பிறப்புகளிலும் வருடப் பிறப்புகளிலும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் கூடாதுன்னு சொல்லி ஏன் மண்டை காய வைக்கிறார்கள்? 

4. 'இரவில் முதல் இரண்டு ஜாமத்திலும் (மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை), அதிகாலை நான்காம் ஜாமத்திலும் (அதிகாலை 2.00 மணி முதல் 4.00 மணி வரை) உடலுறவு கொள்வது தீமை பயப்பதாகும்.'

கேள்வி:
ஜாமம் ஏமம்னு பயமுறுத்தறாங்களே. கூட்டுக் குடும்பங்களில், முதல் இரண்டு ஜாமங்களில் அதுக்கு வாய்ப்பில்லை[தண்ணி தெளிச்சி விடப்பட்ட புதுசுகளுக்கு நல்ல நேரம் கெட்ட நேரம்னு எதுவும் இல்ல]. 4ஆம் ஜாமம் ஆழ்ந்த உறக்கத்துக்கானது. இரவு 10.00 - 12.00  புணர்ச்சிக்கு ஏற்ற நேரம். இதுக்கெல்லாம் ஜோதிடம் பார்க்கணுமா? அடப் போங்கப்பா.

5. 'ஆண், எண்ணெய் தேய்த்துக் குளித்த நாட்களில் பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடாது.

கேள்வி:
எண்ணைக் குளியலென்ன ஷாம்புக் குளியலென்ன, உடலுறவுக்கு முன்னர்[பின்னரும்தான்] அழுக்குப் போகக் குளிப்பதுதானே முக்கியம்?

6. 'நண்பகல் 12 மணி, இரவு 12 மணி ஆகிய நேரங்களில் உடலுறவு கொள்ளக்கூடாது.

கேள்வி:
பகல் 12.00 மணி இருக்கட்டும். இரவு 12.00 மணி, அதாவது நடுச்சாமம் பேய்களும் பிசாசுகளும் சஞ்சரிக்கிற... சல்லாபிக்கிற நேரம் என்பதால், ஆணும் பெண்ணும் சங்கமிக்கக் கூடாதோ? ‘அது’க்கான நேரங்களிலும் ஒரு கடிகாரம் கைவசம் இருக்கணுமோ?!

7. 'ஆடியில் அது கூடாது. காரணம், சித்திரையில் குழந்தை பிறக்கும். தந்தைக்கு ஆகாது.'

கேள்வி:
சித்திரை மாதம், வெய்யில் வாட்டி வதைக்கும் காலம். ஆடி மாதம் உறவு வைத்துக் கொண்டால் சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும். எனவே, ஆடி 'அது'க்கு ஆகாத காலம் என்பது சரி. சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் தந்தைக்கு ஆகாது என்கிறார்களே, அதுக்கு என்ன ஆதாரம்?

மிக முக்கிய குறிப்பு:

கேள்வி கேட்பது என் வழக்கம். ஜோதிடத்தை நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்.

வருகைக்கும், வரி வரியாக வாசித்தமைக்கும் நன்றி.
====================================================================

வியாழன், 26 ஏப்ரல், 2018

ஆட்சியாளர்களின் அதீத பக்தியும் சாமியார்களின் 'சல்லாப' புத்தியும்!!

சாமிகளை[கடவுள்]ப் பார்த்தவன் எவனும் இல்லை என்பதால்,  நெடு நெடு தலைமுடியுடன், முகம் முழுக்கத் 'தாடி மீசை' வளர்த்தவனெல்லாம் இங்கே சாமியாராக மட்டுமல்ல, 'சாமி' யாகவும் ஆக முடிகிறது; சம்பாதிக்க முடிகிறது; மனம்போன போக்கில் சல்லாபிக்கவும் முடிகிறது!

நம் ஆட்சியாளர்களுக்குச் சாமியார்களென்றால் அளப்பரிய பயபக்தி. இதன் விளைவு.....

சாமியார்களால் நிர்வகிக்கப்படும் ஆசிரமங்களுக்கு ஏராள சலுகைகள். அங்கே கண்மூடித்தனமான பழக்கவழக்கங்கள், காமக்களியாட்டங்கள், தவறான வழிகளில் சொத்து சேர்த்தல் என்று 'பலவும்' நடக்கும். காவல்துறையோ, வணிகவரித் துறையோ, வருமானவரித் துறையோ கண்டுகொள்வதில்லை.

ஏனைய கடமைகளை மறவாமல் செய்கிறார்களோ  இல்லையோ, அவ்வப்போது இந்தச் சாமியார்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றிட நம்மை ஆள்பவர்கள் தவறுவதே இல்லை.

சிறுமியைப் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, வாழ்நாள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ''ஆசாராம் பாபு'[26.04.2018 ஊடகச் செய்தி]வுக்கு இப்போது வயது 77. 

40 ஆண்டுகளாக ஆசிரமம் நடத்தி 10,000 கோடி மதிப்புள்ள சொத்துச் சேர்த்திருக்கிறான் இவன்.  இவனின் ஆசிரமத்தில் தங்கிப் பயின்றுவந்த ஒரு சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக 2013இல் தொடுக்கப்பட்ட வழக்கில் இவனைக் குற்றவாளி என்று ஜோத்பூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துத் தண்டனையும் வழங்கியிருக்கிறது.

77 வயதில்தான் இந்தப் போலிச் சாமியார் தண்டிக்கப்பட்டிருக்கிறான். இதற்கு முன்பாக இதுபோன்ற, இதனைவிடவும் கீழ்த்தரமான பல குற்றங்களை நிச்சயம் இவன் செய்திருப்பான். அவற்றிற்கான அத்தனை தண்டனைகளிலிருந்தும் இவன் தப்பியிருக்கிறான. காரணம், நம் ஆட்சியாளர்களின் சாமியார் பக்தி.

ஏற்கனவே, கற்பழிப்புக் குற்றச்சாட்டில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவன்  அரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரேதேசங்களில் தேரா சச்சா சவுதா ஆசிரமத்தை நடத்திவந்த  50 வயதான சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்23 வயதிலேயே ஆசிரமத்தின் தலைவனாகப் பொறுப்பேற்றவன் இவன். பொறுப்பிலிருந்த 27 ஆண்டுகளில் பல குற்றங்களை இவன் இழைத்திருக்க வாய்ப்புள்ளது. அவற்றிற்கான தண்டனைகளிலிருந்து இவனைத் தப்பிவிட அனுமதித்தது, மேன்மை தங்கிய நம் ஆட்சியாளர்களின் கரை கடந்த  பக்தியுணர்வு.

'கங்காநந்தா தீர்த்தபதா', என்பவன், கேரள மாநிலம், கொல்லம் நகரில் தன்னைக் கடவுளாகக் கூறிக்கொண்டு பரப்புரை செய்தவன். தக்க தருணத்தில் இவனைக் கைது செய்து சிறையில் அடைத்திருந்தால், இவன் சட்டக்கல்லூரி மாணவி ஒருத்திக்குப் பரிகாரம் செய்வதாகச் சொல்லி  ஏமாற்றி, 5 ஆண்டுகள் அவளைப் பலாத்காரம் செய்தது நடந்திருக்காது.

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த சாமியார் மெகந்தி காசிம். இவன் 7 சிறுமிகளைப் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பை நீதிமன்றம் இவனுக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவர்களைக் குணமாக்குவதற்காகவும் மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகள் எதிர்காலத்தில் பிறந்துவிடக்கூடாது என்பதற்காகவும் சிறப்புப் பூஜை செய்வதாகச் சொல்லிப் பல சிறுமிகளைப் பலாத்காரம் செய்தவன் இவன். முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் பல ஆண்டுகள் இம்மாதிரி ஈனச் செயல்களில் இவன் ஈடுபடுவதற்கான வாய்ப்பு நேர்ந்திருக்காது.

கேரளாவைச் சேர்ந்த சாமியார் சந்தோஷ் மாதவன் என்ற சுவாமி அமிர்தா சைதன்யா. இவன் கடந்த 2009ஆம் ஆண்டு 3 சிறுமிகளைப் பலாத்காரம் செய்த  குற்றத்துக்காக நீதிமன்றத்தால் 16 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டவன்; ஏழைக் குடும்பங்களில் இருந்து சிறுமிகளைப் படிக்க வைப்பதாகக் கூறி அழைத்து வந்து பலாத்காரம் செய்தவன். இம்மாதிரிக் குற்றவாளிகளின் எண்ணிக்கை பெருகுவதற்கும் குற்றங்கள் நடைபெறுவதற்கும் ஆட்சியாளர்களின் சாமியார்களின் மீதான அளவு கடந்த மதிப்பும் மரியாதையுமே காரணம் ஆகும்.

இலங்கையைச் சேர்ந்த பிரேமானந்தா  கடந்த 1984ஆம் ஆண்டு திருச்சியில் ஆசிரமம் தொடங்கினான். அந்த ஆசிரமத்தில் பணியாற்றிய ஒரு பெண் பிரேமானந்தா தன்னைப் பலாத்காரம் செய்ததால் கர்ப்பமானதாகப் புகார் செய்தார். இதன் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டு நடந்த விசாரணையில், 13 சிறுமிகளைப் பலாத்காரம் செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றான். ஏறத்தாழப் பத்தாண்டுகள் பலாத்காரச் செயல்களில் ஈடுபட்டருக்கிறான். இவனைப் போன்றவர்களின் துணிச்சலான பாலியல் குற்றச் செயல்களுக்கு வழிவகுத்துக் கொடுத்தது ஆட்சியாளர்களின் மேற்குறிப்பிட்ட  கண்டிக்கத்தக்க போக்குதான் காரணம்.

கர்நாடகத்தில் பிடரி எனுமிடத்தில் ஆசிரமம் நடத்தி வருபவன் சாமியார் நித்யானந்தா. இவன் மீதும் ஏராளமான பாலியல் புகார்கள் உள்ளன. நடவடிக்கை மட்டும் இல்லை. காரணம், மேற்கூறியதுதான்.

மேற்குறிப்பிட்ட சாமியார்கள் எல்லாருமே தொடர்ந்து பல ஆண்டுக்காலம் பலாத்காரச் செயல்களில் ஈடுபட்டவர்கள். ஆனால், புகார்கள் எழுப்பப்பட்ட பின்னரே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்கள் ஆட்சியாளர்கள்.

இனியேனும், இம்மாதிரிக் குற்றங்களைத் தடுத்திட....

நாட்டிலுள்ள பல்துறை நிறுவனங்களையும் அமைப்புகளையும் காவல்துறையும் ஏனைய துறைகளும் கண்காணிப்பது போல, ஆசிரமங்களை அல்லது அவை போன்ற பிற அமைப்பகளைக்[எம்மதம் சார்ந்ததாயினும்] கண்காணிப்பதையும், தேவை எனில் சோதனை செய்வதையும் நடைமுறைப்படுத்துதல் வேண்டும்.

செவ்வாய், 24 ஏப்ரல், 2018

இவர்கள் வளர்ப்பது 'இந்தி'யை மட்டும்; இந்தியாவை அல்ல!!!

சீனா சென்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், ''சீனர்கள் இந்திமொழி கற்க வேண்டும்'' என்று வற்புறுத்தியிருக்கிறார். இந்தியாவில் இந்தியைத் தவிர வேறு மொழிகளே இல்லையா?!
'இந்திய சீன உறவில் இந்தி மொழியின் பங்களிப்பு' என்னும் தலைப்பில் சீனாவில் நேற்று[23.04.2018] கருத்தரங்கு நடைபெற்றதாம்['தி இந்து' 24.04.2018]. அதில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மேற்கண்டவாறு பேசியிருக்கிறார்.

இந்திதான் இந்தியாவின் 'உயிர் மொழி', 'உயர் மொழி' என்றால் இந்தியாவில் இந்தி பேசுகிறவர்கள் மட்டுமே உயர்வானவர்களா? மற்றவர்கள் நாலாந்தர, ஏழாந்தரக் குடிமக்களா?

இந்தி மொழி கற்ற சீன மாணவி ஒருவர் இந்தியா வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளாராம். அதற்கான ஏற்பாட்டை உடனே செய்யுமாறு அங்குள்ள இந்தியத் தூதருக்கு ஆணை பிறப்பித்தாராம் அமைச்சர். சீனாவில் உள்ள இந்தி பேசும் மேலும் 25 மாணவ மாணவிகளை இங்கு அனுப்பி வைக்கும்படிப் பரிந்துரை செய்திருக்கிறாராம்.

''சீனாவில், தமிழ் கற்ற அல்லது பிற இந்திய மொழி கற்ற மாணவர்கள் உள்ளனரா?'' என்று விசாரிக்கும் பரந்த மனம் அமைச்சருக்கு இல்லாமல் போனது ஏன்?

சீனர்கள், சீனாவில் திரையிடப்படும் இந்தி மொழிப் படங்களை, 'சப் டைட்டில்' மூலம் புரிந்துகொள்ள முயற்சிக்காமல், இந்தியைக் கற்றுக்கொண்டு படம் பார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார் மாண்புமிகு அமைச்சர்.

இந்தி தவிர மற்ற இந்திய மொழிப் படங்கள் சீனாவில் திரையிடப்படுவது உண்டுதானே? ''தேவைப்படும் பிற இந்திய மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள்'' என்று சொல்லும் பெருந்தன்மை அம்மையாருக்கு இல்லை.

செல்லும் இடங்களில் எல்லாம், வாய்ப்பமையும் நேரங்களில் எல்லாம் இந்தி வளர்க்கும் நடுவணரசின் நடவடிக்கைகளைத்   தமிழர்களாகிய நாம் மட்டுமே அவ்வப்போது கண்டித்துக்கொண்டிருக்கிறோம்; போராடுகிறோம். மற்ற மொழிக்காரர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். அது எதிர்காலத்தில் எத்தகைய விபரீத விளைவுகளை உண்டுபண்ணும் என்பதை அவர்கள் அறியாமலிருப்பது ஆச்சரியம்.

நம் மக்களைப் போலவே, இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற மாநில மக்களுக்கும் 'சொரணை' பிறக்காதவரை.....

இந்தி வெறியாட்டத்தை மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டுதான் இருப்பார்கள்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------




திங்கள், 23 ஏப்ரல், 2018

தமிழ்நாட்டுப் பிராமணர்களின் சிந்தனைக்கு.....!

ஆரியர்கள், வந்தேறிகள், பார்ப்பனர்கள், நால்வகை வர்ணம் கற்பித்தவர்கள், ஜாதிமத ஏற்றத்தாழ்வுகளுக்கு வித்திட்டவர்கள், கற்பிக்கப்பட்ட கடவுளரின் பெயரால் ஏராள மூடநம்பிக்கைகளைத் திணித்தவர்கள் என்றெல்லாம் தமிழ் இன உணர்வாளர்களால்  சாடப்பட்டவர்கள் பிராமணர்கள் என்றாலும்கூட, அந்த இனத்தில் தோன்றித் தமிழ் வளர்த்தவர்களும் தமிழ் இனத்துக்காகப் பாடுபட்டவர்களும் இல்லாமலில்லை.

பாரதியின் தமிழ்ப்பற்றையும் தமிழினப் பற்றையும் இங்குள்ள தமிழ்/இனப் பற்றாளர்கள் ஒருபோதும் குறைத்து மதிப்பிட்டதில்லை.

தந்தையார் கண்டித்தும்கூட, தம் இளம் வயதில் சம்ஸ்கிருதம் கற்காமல், தணியாத ஆர்வத்துடன், மீனாட்சிசுந்தரம் என்னும் தமிழ் அறிஞரைக் குருவாக ஏற்றுப் பணிந்து போற்றித் தமிழ் கற்றதோடு, பட்டிதொட்டியெல்லாம் அலைந்து திரிந்து திரட்டிய ஏட்டுச் சுவடிகளை அச்சேற்றுவதற்கென்றே தம் வாழ்வை அர்ப்பணித்த உ.வே.சாமிநாத ஐயர், தமிழ்த் தொண்டாற்றிய சான்றோர் பட்டியலில் நிரந்தர இடம் பெற்றவர்.

கி.வா.ஜகன்னாதன் என்னும் தமிழ் அறிஞரின் தமிழ் இலக்கியப்பணியும் புறக்கணிக்கத்தக்கதல்ல.

வை.மு.கோதைநாயகி, கல்கி, சாண்டில்யன் என்று தமிழ் மொழிப் பற்றுடன் தமிழ்ப் புதின வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்களுக்கென்று ஒரு பட்டியல் உருவாக்கலாம்.

தினமணி நாளிதழில், இயன்றவரை தூய தமிழ்ச் சொற்களைக் கையாள்வதோடு, செல்லுமிடமெல்லாம் தமிழ் முழக்கம் செய்துவரும் அதன் ஆசிரியர் கே.வைத்தியநாதனின் தமிழ்ப்பற்றும் பணியும் என்றென்றும் நினைவுகூரத்தக்கவை.

சௌராஷ்ர மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணர் ஆயினும், ''தமிழைத் தவிர வேறொரு மொழியில் பாட மாட்டேன்'' என்று சொன்ன திரைப்படப் பாடகர் டி.எம்.சௌந்திராஜன் தமிழ் உள்ளங்களில் நிரந்தரமாத் தங்கிவிட்டவர்.

யோசித்தால், இப்பட்டியலில் இன்னும் சிலர் இடம்பெறக்கூடும்.

மொழி, இலக்கியம் குறித்த பிராமணர்களின் பணி ஒருபுறம் இருக்க, அரசியலில் அவர்கள் தமிழர் நலன்களுக்காக ஆற்றிய பணி குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லை.

ராஜாஜியைப் பொருத்தவரை அவர் ஒரு தேசியத் தலைவர். மூதறிஞர் என்று பாராட்டப்பட்டாலும், அவர் தமிழக[சென்னை மாகாணம்] முதல்வராயிருந்த குறுகிய காலத்தில் கொண்டுவந்த குலக்கல்வித் திட்டமும், பள்ளிகளில் இந்தியைத் திணித்ததும் தமிழர்கள் அவர்மீது கொண்டிருந்த மதிப்பு சற்றே குறைந்திடக் காரணமாக அமைந்துவிட்டன.

எது எப்படியோ,  மொழி & இலக்கியப் பணிகளில் பிராமணர்கள் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பங்காற்றியும்கூட, பெரும்பான்மையான பிராமணர்கள் தமிழுக்கு உரிய மரியாதை அளிக்கத் தவறியதாலோ என்னவோ, தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் எதிரானவர்கள் அவர்கள் என்ற எண்ணம் தமிழர் மனங்களில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

இந்நிலையில்.....

'தமிழால் இணைவோம்' என்று உரத்த குரல் எழுப்பி, பிழையற்றதும் தரமானதுமான தமிழில் செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவரும் 'தி இந்து'[தமிழ்] நாளிதழின் தமிழ்ப்பணி, பிராமணர்களின் மீதான அபிப்ராயத்தைச் சற்றே மாற்றியிருக்கிறது எனலாம்.

ஆனந்த விகடன் ஆற்றிவரும் தமிழ்ப் பணியும் தமிழ் இனத்தின்[குறிப்பாக, இலங்கைத் தமிழர்] நலம் குறித்தான அதன் பங்களிப்பும் பிராமணர்கள் மீதான மதிப்பைச் சற்றே கூட்டுவனவாக உள்ளன.

''நான் தமிழன்; பகுத்தறிவாளன்; தமிழினத்துக்காக உழைப்பேன்'' என்று கனத்த குரலில் முழக்கமிடுகிறார் நடிகர் கமலகாசன்.

இவ்வகையில் பிராமணர்களில் சிலரின் ஆக்கபூர்வமான இச்செயல்கள் ஆரியர் என்றழைக்கப்பட்ட அவர்களுக்கும் ஏனைய தமிழர்களுக்குமான இடைவெளி குறைந்துவருதற்குக் காரணமாக அமைந்துள்ளன.

இது வரவேற்கத்தக்க நல்லதொரு சூழல் ஆகும். இந்நிலையில்.....
ஆண்டாள் குறித்த சிறப்புரையில் ஆண்டாளை அவமதிக்கும் நோக்கம் தனக்கு அணுவளவும் இல்லை என்று மீண்டும் மீண்டும் கவிஞர் வைரமுத்து விளக்கம் தந்த நிலையில், ஜீயர் தலைமையில், திருவரங்கத்துப் பிராமணர்கள் ஒருங்கிணைந்து [ஒருங்கிணைத்தவர்கள், விசு, எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜா போன்றவர்கள்] போராட்டம் நடத்தியது, கவிப்பேரரசு வைரமுத்துவை மட்டும் சிறுமைப்படுத்துவதற்காக அல்ல; ஒட்டுமொத்த தமிழர்களையும் சிறுமைப்படுத்தி, மொழி மற்றும் இனத்தின் மீதான அவர்களின் பற்றுதலைப் பலவீனப்படுத்துவதற்காகவே என்று நம்பத் தோன்றுகிறது.

எஸ்.வி.சேகரும் ஹெச்.ராஜாவும் மனம்போன போக்கில் வெளிட்டுவரும் அறிக்கைகள் அந்த நம்பிக்கையை வலுப்படுத்துவனவாக உள்ளன; பிராமணர்களையும் தமிழர்களையும் பிரித்து வைத்திருக்கும் இடைவெளி, இனிக் குறைவதற்கு மாறாக அதிகரிக்குமோ என்னும் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளன.

தமிழ்நாட்டுத் தமிழ்ப் பிராமணர்கள் ஆழ்ந்து சிந்தித்துச் செயல்பட வேண்டிய நேரம் இது.

சிந்திப்பார்களா?!
=================================================================================


ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

'மனம்' என்னும் மாய பிம்பம்!

மண்டைக்குள் இருக்கும் நம் மூளை, வெள்ளை மற்றும்  க்ரே வண்ணப் பொருளால் ஆனது.  நம் உடல் உறுப்புகளைக் கட்டுப்படுத்துவதோடு, நம்மைச் செயல் புரிய வைப்பதும் அதுதான் என்பது நமக்குத் தெரியும்.

மனம்?
''அறிவு சொல்லுது. மனசு வேண்டாம்னு அடம்பிடிக்குதே'' என்பது போல, பேச்சு வழக்கில் அடிக்கடி மனம் என்று ஒன்று இருப்பதாகக் காட்டிக்கொள்கிறோம். ஆனால்.....

அது நம் உடம்புக்குள் எவ்விடத்தில் இருக்கிறது? அதன் வடிவமைப்பு எத்தகையது? என்பன போன்ற கேள்விகளுக்கு நம்மில் எவருக்கும் விடை தெரியாது. 'நம்மில்' என்பதில் உடற்கூற்று அறிஞர்களும், அதாவது விஞ்ஞானிகளும் அடக்கம்.

மூளையைக் கம்ப்யூட்டருடன் ஒப்பிடுகிறார்கள்.

''மூளைதான் ஹார்டுவேர் என்று கொண்டால், அதை இயக்க, சாஃப்ட்வேர் வேண்டும். அது மனம் எனலாம். ஆனால், இரண்டில் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு உடம்பை இயக்க இயலாது; உடல் இயக்கத்திற்கு இரண்டும் தேவை'' என்று சொல்லி, மனம் என்று ஒன்று இருப்பதாக வாதிடுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ''இதை நிரூபிப்பது அத்தனை எளிதல்ல'' என்று உறுதிபடச் சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

ஏன்? எதற்கு? எப்படி? என்றெல்லாம் ஒவ்வொன்றையும் அலசி ஆராய்வது; எண்ணுவது, எண்ணங்களையும் வாழ்க்கை அனுபவங்களையும் சேமிப்பது; காதல், பயம், மகிழ்ச்சி, வெறுப்பு, சலிப்பு போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது; தன்னுணர்வுடன்[கான்ஷியஸ்] செயல்படுவது என்று எல்லாவற்றிற்கும் தூண்டுதலாக இருப்பவை மூளையில் உள்ள நியூரான்கள்தான் என்கிறார்கள். 

உண்மை இதுவாக இருக்கையில், ''மனம் என்ற ஒன்றின் தேவை என்ன?'' என்னும் கேள்விக்கு இன்றளவும் அறிவுபூர்வமான விடை கிடைத்திடவில்லை என்பது அறியற்பாலது.

மனத்தின் மீதான நம்பிக்கை கி.மு.300இல் வாழ்ந்த அரிஸ்டாட்டில் காலத்துக்கு முன்பிருந்தே இருந்திருக்கிறதாம்.

அரிஸ்ட்டாட்டிலும் பிளேட்டோவும் மனம் என்பது உடம்புக்கு வெளியே உள்ள ஒன்று என்று நம்பினார்களாம். அரிஸ்டாட்டில் தன் நூலில், 'மனிதன் பிறக்கும்போது வெற்றுப் பலகை போல் பிறக்கிறான். அனுபவங்கள் மற்றும் உணர்ச்சிகள் அவனுள் மனதை உருவாக்குகின்றன' என்று குறிப்பிட்டிருக்கிறாராம்.

இன்றைக்கும் மருத்துவ உலகில், மனம் குறித்த ஆய்வுகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன. ஃபங்ஷனல் எம்.ஆர்.ஐ. உள்ளிட்ட கருவிகளைப் பயன்படுத்தித் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறுகின்றன. 

ஆய்வுகள் தொடர்கின்றனவே தவிர, இன்றளவும் மனம் என்ற ஒன்று நம் உடலுக்குள் பதுங்கி அல்லது ஊடுருவியிருப்பது உறுதி செய்யப்படவில்லை. எது எப்படியோ.....

நம்மை இயக்குவது மூளையோ மனமோ எதுவாக இருப்பினும் நல்லவை நினைந்து, நல்வினை ஆற்றி இயன்றவரை நல்லவர்களாக வாழ்ந்து முடிப்போம்.
=================================================================================
உதவி: 'மூளை', விகடன் பிரசுரம், முதல் பதிப்பு: டிசம்பர், 2016.




சனி, 21 ஏப்ரல், 2018

நம்ம ஊர்ப் பொதுஜனங்களின் யோக்கியதை!!!

சென்னை அண்ணா நகர்.

வயிற்றுவலியால் துடிக்கிற பெண்ணை அழைத்துவருவதாகச் சொல்லிச் சென்ற ஒரு நபருக்காக, இரவில் தன் மருத்துவமனையில் காத்திருக்கிறார் மருத்துவர் அமுதா.

சில நிமிடங்களில் அவன் வருகிறான்...பெண்ணுடன் அல்ல; கையில் கத்தியுடன். அவனின் முகத்தை மறைத்திருக்கிறது கைக்குட்டை. மருத்துவரை அச்சுறுத்தி அவர் அணிந்திருந்த 10 சவரன் தங்க நகையைப் பறித்துக்கொண்டு ஓடுகிறான்.

அறையிலிருந்து வெளியே வந்து, நகை பறிக்கப்பட்டதைச் சொல்லி மருத்துவர் அலற, அலறல் ஓசை கேட்டு ஏ.சி.மெக்கானிக் கடையில் வேலை பார்க்கும் சிறுவன் சூர்யா, திருடன் ஓடுவதைக் கவனிக்கிறான்; கூச்சல் கேட்டுத் திரண்டிருந்த பொதுஜனங்களை, ''அதோ ஓடுறான் திருடன். வாங்க விரட்டிப் பிடிக்கலாம்'' என்று அழைக்கிறான்.

நம்ம பொதுஜனங்களில் ஒருவர்கூட அவனின் அழைப்பைக் கண்டுகொள்ளவில்லை; அவர்களில் கணிசமானவர்கள் தத்தம் செல்ஃபோன் கேமராவில், அந்த அரிய காட்சியை வீடியோ எடுக்கிறார்கள்.

சிறுவன் சூர்யா திருடனை விரட்டுகிறான். அவனோ.....

இவனின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக, தங்கச் சங்கிலியின் ஒரு பகுதியை மட்டும் துண்டித்துக் கீழே எறிந்துவிட்டு ஓடுகிறான்.

புத்திசாலி சூர்யா, தரையில் கிடக்கும் சங்கிலியைக் காலால் இடறி, லாவகமாகப் பிடித்து எடுத்துக்கொண்டு கள்வனை நெருங்குகிறான்.

அவன் இவனைக் கல் எடுத்துத் தாக்குவதற்கு முயல, இவனோ அவன் முகத்தில் கனமானதொரு குத்து விடுகிறான். நிலைகுலைந்து தரையில் சாய்ந்து விழுகிறான் திருடன். பறிக்கப்பட்ட நகை மீட்கப்படுகிறது.

சென்னைக் காவல்துறை ஆணையர் விஸ்வநாதன், சிறுவனைப் பாராட்டிச்  சான்றிதழ் வழங்கியதோடு ஊடகங்களுக்கும் இது குறித்துத் தெரிவிக்கிறார்.

தமிழ் நாளிதழ்களில் ஒன்றான காலைக்கதிர்[20.04.2018] இச்செய்தியை விரிவாக வெளியிட்டிருந்தது.

இதை உங்களில் பலரும் ஊடகங்களின் வழியாக அறிந்திருக்கக்கூடும்.

பொதுமக்களின் சுயநலப் போக்கு குறித்த, சிறுவனின் மனவருத்தம் மறத்தற்கரிய ஒன்று.

அவன் சொல்கிறான்[பதிவின் முக்கிய நோக்கமும் இதைப் பதிவு செய்வதுதான்].....

தொட்டதுக்கெல்லாம் பொதுஜனம் பாதிக்கப்படுவாங்கன்னு குரல் கொடுக்கிறோமே, அந்தப் பொதுஜனத்தின் யோக்கியதை இதுதாங்க!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பதிவர் 'ஜோதி', மேற்கண்ட வீடியோவைத் தனிப்பதிவாக வெளியிட்டிருக்கிறார். இந்நிகழ்வின் முக்கியத்துவம் கருதி இப்பதிவு வெளியிடப்படுகிறது.



வியாழன், 19 ஏப்ரல், 2018

தமிழகத்தில் ஒரே நாளில் மூடர்களின் எண்ணிக்கை 30% உயர்வு!!!

அட்சய திருதியை, தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய[என்றும் குறையாத] திருதியை என்கிறார்கள்.
இந்த நாளில் தங்கம் வாங்கினால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது 'மக்களின் நம்பிக்கை' என்கிறார்கள் நகை வணிகர்கள்; வழிமொழிகிறார்கள் ஊடகக்காரர்கள். ஒரு வேண்டுகோள்.....
'மக்களின் நம்பிக்கை' என்பதை, 'மக்களின் மூடநம்பிக்கை' என்று திருத்தி வாசியுங்கள்.

'தமிழகத்தில் கடந்த ஆண்டு அட்சய திருதியை நகை விற்பனையை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்' என்பது இன்றைய ஊடகச்[19.04.2018] செய்தி.

'இந்த ஆண்டு விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது' என்பதோடு, 'இந்த ஓராண்டில் மட்டும்[ஒரே ஒரு நாளில்] தமிழகத்திலுள்ள முட்டாள்களின் எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளது' என்ற தொடரையும் இணைத்துப் படியுங்கள்.
அட்சய திருதியை நாளில்தான் 'திரேதா யுகம்' தொடங்கியதாம். இதே நாளில்தான் 'முனிவர் பரசுராமர்' பிறந்தாராம். இந்தப் புனித நாளில்தான் சொர்க்கத்தில் ஓடிக்கொண்டிருந்த கங்கை நதி, இந்தப் புண்ணிய பூமிக்கு இறக்குமதி செய்யப்பட்டதாம்.
இவை எல்லாமே புராணங்கள் சொல்லும் கற்பனை நிகழ்வுகள்.
இந்நிகழ்வுகள் இடம்பெற்ற நாளுக்கு 'அட்சய திருதியை' என்று பெயரிட்டு, அதைப் புனித நாளாக்கி, அந்நாளில் பொன்னால் ஆன அணிகலன்கள் வாங்கினால் ஐஸ்வர்யம் பெருகும்  என்று யாரெல்லாமோ புளுகிவிட்டுப் போனார்கள்.

அவர்களின் பொய்மொழி இன்று புதுப்பிக்கப்பட்டுப் பரப்புரை செய்யப்படுகிறது. இதைச் செய்பவர்கள் கோடிகளில் புரளும் நகை வியாபாரிகள்; அவர்களால் 'கவனிக்கப்பட்ட' ஊடகக்காரர்கள்.

'கங்கையில் குளித்தெழுந்து மகாலட்சுமியை வழிபடணும்; உப்புக்குப் பூஜை பண்ணனும். அப்புறம், நகைக் கடைகளுக்குப் போய், தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் எல்லாம் வாங்கணும். வாங்கினால் அவற்றின் மதிப்பு  நாளும் பெருகிக்கொண்டே இருக்கும்......'

இப்படி இன்னும் எப்படியெல்லாமோ சொல்லிச் சொல்லிச் சொல்லி அள்ளக் குறையாத ஆசைகளை மக்களின் மண்டைகளுக்குள் திணித்துத் தம் வணிகத்தை மேம்படுத்துகிறார்கள்; செல்வத்தை அள்ளிக் குவிக்கிறார்கள் பொன் வணிகர்கள்.

பூட்டை உடைத்து வீடு புகுந்து திருடுகிறான் ஒருவன். அவன் குற்றம் புரிந்தவன் என்று தண்டிக்கப்படுகிறான். கத்தியைக் காட்டி மிரட்டிப் பணம் பறிக்கிறான் கொள்ளைக்காரன். அவனுக்கும் தண்டனை வழங்கப்படுகிறது. இப்படித் தவறான வழிகளில் பிறர் பொருளை அபகரிப்பவர்கள் எல்லோருமே தண்டிக்கப்படும் நிலையில்.....

மக்கள் மனங்களில் மூடநம்பிக்கைகளைத் திணித்து, சிறு சிறு சலுகைகளால்  ஈர்த்து, அவர்களின் சேமிப்பைக் களவாடும் வணிகர்கள் மட்டும் ஒறுத்தலுக்கு உள்ளாவதில்லையே, ஏன்? ஏன்? ஏன்?
----------------------------------------------------------------------------------------------------------------------------------









புதன், 18 ஏப்ரல், 2018

சாத்தான் குறித்த கேள்வியும் ஐன்ஸ்டீனின் 'சொதப்பல்' பதிலும்!

ஒரு வகுப்பறை.

''உலகில் உள்ள அனைத்தையும் படைத்தவர் கடவுளா?'' -இது ஆசிரியரின் கேள்வி.

மற்ற மாணவர்கள் மௌனம் சுமக்க, ஒரே ஒரு மாணவன் மட்டும், ''ஆமாம்'' என்றான்.

ஆசிரியர், ''சாத்தானைப் படைத்தவரும் அவர்தானே?'' என்று அடுத்ததொரு கேள்வியையும் முன்வைத்தார்.

ஆசிரியரின் முதல் கேள்விக்குப் பதில் சொன்ன அதே மாணவன், ஆசிரியரின் 2ஆம் கேள்விக்கு நேரடியான பதில் தருவதற்கு மாறாக, ஆசிரியரிடம் கேட்டான்: ''குளிர்நிலை என்று ஏதேனும் உள்ளதா?''

''ஆமாம், குளிர் என்று ஒன்று உள்ளது.''

''மன்னிக்கவும், தங்களின் பதில் தவறானது. குளிர் என்று ஒன்று இல்லை. அது, வெப்பப் பற்றாக்குறையின் விளைவு. சராசரி வெப்பம் குறைவதைத்தான் குளிர் என்கிறோம்'' என்றான் மாணவன்.

இன்னொரு கேள்வியும் கேட்டான்; ''இருள் என்ற ஒன்று இருக்கிறதா?''

''ஆம்'' என்பது ஆசிரியரின் பதில்.

''மன்னிக்கவும். மீண்டும் தவறான பதில் தந்திருக்கிறீர்கள். இருள் என்ற ஒன்று இல்லை. ஒளியின் பற்றாக்குறையைத்தான் இருள் என்கிறோம். அது போல், சாத்தான் என்று இவ்வுலகில் எதுவும் இல்லை. கடவுள் மீது கொண்ட நம்பிக்கைப் பற்றாக்குறையின் காரணமாகத்தான் சாத்தான் இருப்பதாக நினைக்கிறோம்'' என்றான் மாணவன்.

அந்த மாணவன் ஐன்ஸ்டீன் என்று 'உங்கள் பாக்யராஜ் பதில்கள்'[பாக்யா வார இதழ், ஏப்ரல் 20 - 26, 2018] பகுதியில் குறிப்பிட்டிருக்கிறார் ஆசிரியர் பாக்யராஜ்.

கடவுள் தொடர்பான ஐன்ஸ்டீனின் பதிலில் நமக்குச் சில சந்தேகங்கள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

''சாத்தானைப் படைத்ததும் கடவுள்தானா?'' என்ற ஆசிரியரின் கேள்விக்கு, ''ஆம்'' அல்லது ''இல்லை'' என்று பதில் தருவது, மாணவப் பருவத்திலேயே அறிவியல் அறிவு பெற்றிருந்த ஐன்ஸ்டீனுக்கு அழகு. அருள்வடிவானவர் எனப்படும் கடவுளால் நன்மைகள் விளைகிறதென்றால், தீமைகள் விளைவது யாரால் என்பன போன்ற கேள்விகளை மனதில் பதிய வைத்து, முறையான ஆய்வுகள் மூலம், ஆதாரங்கள் காட்டி, 'கடவுள் உண்டு; சாத்தான் இல்லை'  என்று நிறுவுவதும் அவர்தம் கடமையாகும்.

[குளிருக்குக் காரணமான நீர், வெப்பத்திற்குக் காரணமான நெருப்பு போன்றவை மட்டுமல்லாது, அனைத்தையும் படைத்தவர் கடவுள் என்று சொல்லப்படுவதால், அனைத்திற்கும் அப்பாற்பட்டவர் ஆகிறார் அவர். அவரால் படைக்கப்பட்ட பொருள்களையோ, அவற்றின் செயல்பாடுகளையோ உதாரணமாக்கி அவரின் இருப்பு குறித்து ஆராய்வது ஏற்கத்தக்கது அல்ல].

அதோடுகூட, ஐன்ஸ்டீன் எடுத்தாண்ட ஒப்புமைகளிலும் குழறுபடிகள் உள்ளன.

வெப்பப் பற்றாக்குறை காரணமாகத்தான் குளிர் உணரப்படுகிறது என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், அதை வைத்துக் குளிரே இல்லை என்று சொல்லிவிட இயலாது. வெப்பத்தை வெளிப்படுத்துகிற சூரியனை ஒத்த நெருப்புக் கோளங்கள் இடம்பெறாத இடங்கள் விரிந்து பரந்த வான வெளியில் இருக்கும்தானே? அங்கெல்லாம் குளிர் இருக்கத்தானே செய்யும். அப்புறம் எப்படிக் குளிர் என்ற ஒன்றே இல்லை என்றார் ஐன்ஸ்டீன்?!

வெப்பம் அதிகரிக்கும்போது குளிர் இல்லாமல் போவது போலவே, குளிர் அதிகரிக்கும்போது வெப்பமும் இல்லாமல் போகும் என்பதும் அறியத்தக்கது.

ஒளியின் பெருக்கத்தில் இருள் இல்லாமல் போகலாம். அதனால், இருளே இல்லை என்று ஆகிவிடாது. வரையறைக்குக் கட்டுப்படாத விண்வெளிப் பரப்பில் ஒளி, இருள், குளிர், வெப்பம் என்றிவை[யும்]  இடம்பெற்றுள்ளன. ஒன்று கூடும்போது, அதற்கு எதிர்மறையான தன்மை அல்லது குணம் கொண்ட பிறிதொன்று குறையும் அல்லது அப்போதைக்கு மறையும் என்பதே உண்மை. எதுவும் இல்லை என்று ஆகிவிடாது. எந்தவொரு அளவுகோலுக்கும் கட்டுப்படாத வெளிப் பரப்பில், ஒளி பரவாத இடங்கள் இருந்தே தீரும். அங்கெல்லாம் இருள் படர்ந்து கிடக்கும் என்பதை ஐன்ஸ்டீன் உணரத் தவறியது ஏன் என்று புரியவில்லை.

''குளிர் என்பது இல்லை; இருள் என்பது இல்லை'' என்றெல்லாம் மாணவ விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் குறிப்பிட்டதும் ஏற்கத்தக்கதாக இல்லை.

கடவுள் மீதான நம்பிக்கை குறையாமல் இருந்தால், அதாவது கடவுள் மீது முழு நம்பிக்கை வைத்தால் சாத்தான் இல்லை என்பது அறியற்பாலது என்ற அவரின் கூற்றும் ஏற்புடையதன்று. வாழ்வில் தீராத துயரங்களும் என்றும் மாறாத கொடூர நிகழ்வுகளும் நீடிக்கும்வரை சாத்தான் குறித்த எண்ணங்களும் இருந்துகொண்டுதான் இருக்கும்.
=================================================================================
பாக்யராஜ் அவர்களின் பதிலில் இடம்பெற்ற மேற்கண்ட உரையாடலை ஆதாரமாகக் கொண்டுதான் இப்பதிவு உருவாக்கப்பட்டது. உரையாடல் இடம்பெற்ற  மூலநூல் எது என்பதை நான் அறிந்திலேன். 

திங்கள், 16 ஏப்ரல், 2018

'இது'வோ 'அது'வோ வேறு 'எது'வோ, 'அந்த அது' மிக மிக மிக அவசியம்!!!

இந்தப் பதிவு அனைத்து ஆண்களுக்கும் பிடிக்கும். பிடிக்காத பெரும்பாலான பெண்கள் எப்படி வேணுன்னாலும் என்னைத் திட்டலாம். அவர்களுக்காகவே 'கருத்துப் பெட்டி'யைத் திறந்து வைத்திருக்கிறேன். நன்றி.

“மல்லிகா,   எங்கடி போய்ட்டு வர்றே?”

வீட்டுக்குள் நுழைந்த மகளை முறைத்தபடி கேட்டாள் செல்லம்மா.

“புவனாவைப் பார்த்துட்டு வர்றேன்” என்றாள் மல்லிகா.

“இல்ல, அவ புருஷனைப் பார்த்துட்டு வர்றே. புவனா நேத்தே அவ அம்மா வீட்டுக்குப் போய்ட்டா. உன்கிட்டே சொல்லிட்டுத்தான் போனா. உங்க பேச்சைக் குளியலறையிலிருந்து கேட்டேன்."

மல்லிகா மவுனம் போர்த்து நின்றாள்.

“புருஷனைத் தவிர வேறொருத்தன் மேல ஆசைப்படுறது தப்புடி.”

“நீயும் அந்தத் தப்பைப் பண்ணியிருக்கே. நான் வயசுக்கு வந்தப்புறம்தான் ‘அந்த ஆளு’ உன்னைத் தேடி வர்றதை நிறுத்தினான்.” - அவள் பிரசவித்த வார்த்தைகளின் சூடு, செல்லம்மாவை வெகுவாக வாட்டியது.

மனதைத் தேற்றிக்கொள்ளச் சற்றே அவகாசம் தேவைப்பட்டது அவளுக்கு. சொன்னாள்: “இளம் வயசிலேயே என் புருஷன், அதான் உன் அப்பன் செத்துட்டான். கொஞ்ச வருஷம் இன்னொருத்தனுக்கு வைப்பாட்டியா இருந்தேன். நான் செஞ்சது தப்புன்னாலும், அதுக்குப் பாவ மன்னிப்பு உண்டு. உனக்குன்னு புருசன் இருக்கான். அவன், 'அது' விசயத்திலும் உன்னைத் திருப்திபடுத்த நினைக்கிற நல்ல ஆம்பிளைன்னு நான் நம்புறேன். இருந்தும், அவனுக்குத் துரோகம் பண்ண நினைக்கிறே நீ. இதோ பாருடி.... மற்றதில் எப்படியோ, ஆணுக்காகட்டும் பெண்ணுக்காகட்டும், இந்த விஷயத்தில் கண்டிப்பா ‘போதும்’கிற மனசு வேணும். ‘இன்னும் வேணும்.....இன்னும் வேணும்.....வேணும் வேணும்’னு திணவெடுத்துத்[திணவு-செறிவு; தினவு-சொறிதல்] திரிஞ்சா குடும்பம் சிதைஞ்சி சின்னாபின்னம் ஆயிடும். புரிஞ்சுதா.”

“புரிந்தது” என்பதுபோல் தலையசைத்தாள் மல்லிகா.
=================================================================================
கருவில் சற்றே திருத்தம் செய்யப்பட்ட பதிவு.

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

தமிழ்மணம் நிர்வாகிகள் தீவிரக் கடவுள் பக்தர்களா?!?!

தமிழ்மணம் தற்சார்புடன் செயல்படுவதாகக் குறிப்பிட்டுப் பதிவுகள் எழுதியிருக்கிறேன். கடவுள் நம்பிக்கையை விமர்சிப்பதை முக்கிய நோக்கமாகக்கொண்டவை என்னுடைய பதிவுகள். அவற்றில் கணிசமானவை சூடான 30 இடுகைகள் பட்டியலில் முதல் 10 இல் இடம் பிடித்தாலும், அவை முகப்புப் பக்கத்தில் தெரிவதில்லை. இது அரிதான நிகழ்வு என்றால் அலட்சியம் செய்துவிடலாம். அடிக்கடி நிகழ்கிறது. 

கீழ்வரும் பதிவுக்கான தலைப்பைக்[ஒரு 'டூப்ளிகேட்' கடவுளைக் கைது செய்த ஈரோடு காவல்துறை!!!] கவனியுங்கள். சற்று முன்னர்[பிற்பகல் 03.45], சூடான இடுகைகளில் 4ஆம் இடம் பெற்றிருந்தும் முகப்புப் பக்கத்தில் அதைக் காண இயலவில்லை. ஏன் இப்படி?

தமிழ்மணத்திற்கு என் பதிவு உடன்பாடானது அல்ல எனின் அதை இணைத்துக்கொள்ளாமல் தவிர்த்துவிடட்டும். தயவு செய்து, நடுநிலை உணர்வு கொண்ட என்  மனதைப் புண்படுத்த வேண்டாம். இது என் வேண்டுகோள்.

இன்று தமிழ்மணத்தில் இணைக்கப்பட்ட என் பதிவு:

இன்று[13.04.2018] காலை 06.45 மணியளவில், 'பாலிமர் தொலைக்காட்சி' வெளியிட்ட ஒரு சூடானதும்  சுவையானதுமான பரபரப்புச் செய்தி கீழே. தவறாமல் படியுங்கள்.  
ஈரோடு அருகே சக்தி வாய்ந்த இரிடியம் குடுவை விற்பனைக்கு இருப்பதாகக் கூறி 4 கோடியே 22 லட்சம் ரூபாயை மோசடியாகச் சுருட்டிய போலிச் சாமியார் தனது மகனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சதுரங்க வேட்டைப் பட பாணியில் பலரை ஏமாற்றிய கடவுள் குருசாமியின் மறுபக்கம்.
இதே பட பாணியில் சாமியார் வேடமிட்டுத் தொழில் அதிபரை ஏமாற்றி 4 கோடியே 22 லட்சம் ரூபாயைச் சுருட்டிய, ஈரோடு மாவட்டம் தொட்டியங்கிணத்துப் புதூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் கடவுள் குருசாமி என்பவர் இவர் தான்..!
இவர் தன்னிடம் கடவுள் நேரடியாகப் பேசுவதாகக் கூறிக்கொண்டு கடவுள் என்ற பெயரிட்ட சொகுசுக் காரில், சாமியார் வேடத்தில் வலம் வந்துள்ளார். பல தொழில் அதிபர்களைச் சந்தித்துத் தன்னிடம் மிகவும் சக்திவாய்ந்த இரிடியம் இருப்பதாகக் கூறிப் பல கோடி ரூபாய் பேரம் பேசி வந்ததாகக் கூறப்படுகின்றது.
இதனை உண்மை என்று நம்பிய யுவராஜ் என்ற தொழில் அதிபரிடம், குடுவையைப் பார்க்க வேண்டுமானால் கவச உடை அணிய வேண்டும், இல்லையென்றால் அதன் சக்தி நம்மை எரித்துவிடும் என்று கூறி ஏமாற்றிக் கவச உடை அணியவைத்துப் பழைய குடுவை ஒன்றை இரிடியம் குடுவை என்று காண்பித்து 4 கோடியே 22 லட்சம் ரூபாய் பணத்தை மோசடியாகச் சுருட்டியுள்ளார் கடவுள் குருசாமி. பணத்தைப் பெற்றுக்கொண்டு குடுவையைக் கொடுக்காமல் அதே குடுவையை மேலும் சிலரிடம் காண்பித்துப் பல லட்சங்கள் மோசடியில் ஈடுபட்டதாகவும் காவல்துறைக்குப் புகார் வந்தது.
அதன் பேரில் ஈரோடு மாவட்டப் பொருளாதாரக் குற்றப்பிரிவுப் போலீசார், சாமியார் வேடமிட்டிருந்த கடவுள் குருசாமியைப் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் ஒரு போலிச் சாமியார் என்பதும் அவர் வீட்டில் வைத்திருந்தது இரிடியம் அல்ல; பித்தளைக் குடத்தை அதிர்ஷ்டக் குடுவை என்று கதை அளந்து 4 கோடி ரூபாயைச் சுருட்டியதும் கண்டு பிடிக்கப்பட்டது. அவரது மோசடிக்கு மகன் நெப்போலியன் என்பவர் உடந்தையாக இருந்து குடுவையை அபாரசக்தி வாய்ந்தது என்று இணையதளத்தில் போலியான செய்தி பரப்பி உள்ளதும் அதனைக் காண்பித்து மோசடி செய்திருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, கடவுள் குருசாமி, மோசடிக்குத் திட்டம் வகுத்துக் கொடுத்த அவரது மகன் நெபோலியன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 இரு சக்கர வாகனங்கள், போர்டு எண்டவர் கார்இரண்டு டிராக்டர், போலிக் குடுவை, சாமியார் உடை, கவச உடை, கம்யூட்டர்கள், பிரிண்டர்கள் போன்ற 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.
இரிடியம் இருப்பதாகக் கூறி யாராவது உங்களை அணுகினால் அதிர்ஷ்டம் கதவைத் தட்டுகிறது என்று எண்ணாதீர்கள். அது உங்களை ஏமாற்றும் செயல் என்று உணருங்கள். இரிடியத்தைத் தங்கம் போல, எங்கு வேண்டுமானாலும் கொடுத்துப் பணம் ஆக்க இயலாது. இரிடியத்தில் குடுவை, கோபுரக் கலசம், பெட்டரமாஸ் லைட்டு எல்லாம் செய்ய இயலாது. எனவே, மோசடிப் பேர்வழிகளிடம் உஷாராக இருங்கள் என்று எச்சரிக்கின்றனர் காவல்துறையினர்.

நாமும் எச்சரிக்கிறோம்:

கடவுளின் பெயரால்  மூடநம்பிக்கைகள் பரப்பப்படுவதைத் தடுப்பதற்கான ஒரே...ஆகச் சிறந்த வழி, நிரூபிக்கப்படாத கடவுளைப் புறக்கணித்து, மனித நேயம் போற்றுவது மட்டுமே.
=================================================================================================
நன்றி: பாலிமர் தொலைக்காட்சி

ஒரு 'டூப்ளிகேட்' கடவுளைக் கைது செய்த ஈரோடு காவல்துறை!!!

இன்று[13.04.2018] காலை 06.45 மணியளவில், 'பாலிமர் தொலைக்காட்சி' வெளியிட்ட ஒரு சூடானதும்  சுவையானதுமான பரபரப்புச் செய்தி கீழே. தவறாமல் படியுங்கள்.  
https://www.polimernews.com/.../6042-Rolled-priest-disguised-Rs-4-crore-Gurusami
ஈரோடு அருகே சக்தி வாய்ந்த இரிடியம் குடுவை விற்பனைக்கு இருப்பதாகக் கூறி 4 கோடியே 22 லட்சம் ரூபாயை மோசடியாகச் சுருட்டிய போலிச் சாமியார் தனது மகனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சதுரங்க வேட்டைப் பட பாணியில் பலரை ஏமாற்றிய கடவுள் குருசாமியின் மறுபக்கம்.
இதே பட பாணியில் சாமியார் வேடமிட்டுத் தொழில் அதிபரை ஏமாற்றி 4 கோடியே 22 லட்சம் ரூபாயைச் சுருட்டிய, ஈரோடு மாவட்டம் தொட்டியங்கிணத்துப் புதூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் கடவுள் குருசாமி என்பவர் இவர் தான்..!
இவர் தன்னிடம் கடவுள் நேரடியாகப் பேசுவதாகக் கூறிக்கொண்டு கடவுள் என்ற பெயரிட்ட சொகுசுக் காரில், சாமியார் வேடத்தில் வலம் வந்துள்ளார். பல தொழில் அதிபர்களைச் சந்தித்துத் தன்னிடம் மிகவும் சக்திவாய்ந்த இரிடியம் இருப்பதாகக் கூறிப் பல கோடி ரூபாய் பேரம் பேசி வந்ததாகக் கூறப்படுகின்றது.
இதனை உண்மை என்று நம்பிய யுவராஜ் என்ற தொழில் அதிபரிடம், குடுவையைப் பார்க்க வேண்டுமானால் கவச உடை அணிய வேண்டும், இல்லையென்றால் அதன் சக்தி நம்மை எரித்துவிடும் என்று கூறி ஏமாற்றிக் கவச உடை அணியவைத்துப் பழைய குடுவை ஒன்றை இரிடியம் குடுவை என்று காண்பித்து 4 கோடியே 22 லட்சம் ரூபாய் பணத்தை மோசடியாகச் சுருட்டியுள்ளார் கடவுள் குருசாமி. பணத்தைப் பெற்றுக்கொண்டு குடுவையைக் கொடுக்காமல் அதே குடுவையை மேலும் சிலரிடம் காண்பித்துப் பல லட்சங்கள் மோசடியில் ஈடுபட்டதாகவும் காவல்துறைக்குப் புகார் வந்தது.
அதன் பேரில் ஈரோடு மாவட்டப் பொருளாதாரக் குற்றப்பிரிவுப் போலீசார், சாமியார் வேடமிட்டிருந்த கடவுள் குருசாமியைப் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் ஒரு போலிச் சாமியார் என்பதும் அவர் வீட்டில் வைத்திருந்தது இரிடியம் அல்ல; பித்தளைக் குடத்தை அதிர்ஷ்டக் குடுவை என்று கதை அளந்து 4 கோடி ரூபாயைச் சுருட்டியதும் கண்டு பிடிக்கப்பட்டது. அவரது மோசடிக்கு மகன் நெப்போலியன் என்பவர் உடந்தையாக இருந்து குடுவையை அபாரசக்தி வாய்ந்தது என்று இணையதளத்தில் போலியான செய்தி பரப்பி உள்ளதும் அதனைக் காண்பித்து மோசடி செய்திருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, கடவுள் குருசாமி, மோசடிக்குத் திட்டம் வகுத்துக் கொடுத்த அவரது மகன் நெபோலியன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 இரு சக்கர வாகனங்கள், போர்டு எண்டவர் கார், இரண்டு டிராக்டர், போலிக் குடுவை, சாமியார் உடை, கவச உடை, கம்யூட்டர்கள், பிரிண்டர்கள் போன்ற 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.
இரிடியம் இருப்பதாகக் கூறி யாராவது உங்களை அணுகினால் அதிர்ஷ்டம் கதவைத் தட்டுகிறது என்று எண்ணாதீர்கள். அது உங்களை ஏமாற்றும் செயல் என்று உணருங்கள். இரிடியத்தைத் தங்கம் போல, எங்கு வேண்டுமானாலும் கொடுத்துப் பணம் ஆக்க இயலாது. இரிடியத்தில் குடுவை, கோபுரக் கலசம், பெட்டரமாஸ் லைட்டு எல்லாம் செய்ய இயலாது. எனவே, மோசடிப் பேர்வழிகளிடம் உஷாராக இருங்கள் என்று எச்சரிக்கின்றனர் காவல்துறையினர்.

நாமும் எச்சரிக்கிறோம்:

கடவுளின் பெயரால்  மூடநம்பிக்கைகள் பரப்பப்படுவதைத் தடுப்பதற்கான ஒரே...ஆகச் சிறந்த வழி, நிரூபிக்கப்படாத கடவுளைப் புறக்கணித்து, மனித நேயம் போற்றுவது மட்டுமே.
=================================================================================================
நன்றி: பாலிமர் தொலைக்காட்சி

வியாழன், 12 ஏப்ரல், 2018

தினமலர் நாளிதழின் கயமைக் குணம்!!!

தமிழில் வெளிவரும் அனைத்து நாளிதழ்களும்[11.04.2018], தமிழ் அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கிடையே ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள்[சென்னையில்] நடத்தப்பட்டதாகச் செய்தி வெளியிட்டுள்ள நிலையில்..... 

தினமலர் மட்டும் #சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஐ.பி.எல் 'விசில்'[ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விசிலடித்துக் கண்டு களித்தார்களாம்]# என்பதாகத் தலைப்புச் செய்தி வெளியிட்டதோடு, முதல் பக்கத்திலேயே, 'ரஜினி முகத்தில் கரி' என்று தலைப்பிட்டு.....

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளைச் சென்னையில் நடத்தாமலிருப்பது நல்லது என்று ரஜினி கருத்துத் தெரிவித்ததாகவும், போட்டியை நடத்திக் காட்டியதன் மூலம் அவர் முகத்தில் ஐ.பி.எல். கரி பூசிவிட்டதாகவும் செய்தி வழங்கியிருக்கிறது. 

தமிழில் பத்திரிகை நடத்திப் பிழைப்பு நடத்தினாலும், தமிழையும் தமிழ் இனத்தையும் அவர்தம் நல்லுணர்வுகளையும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் இழிபடுத்துவதையே தன் தொழில் தர்மமாகக் கொண்டிருக்கிறது இந்தக் கழிசடை நாளிதழ்.
''கிரிக்கெட் போட்டியை ஒத்திப் போடலாம். போட்டி நடைபெற்றாலும்கூட விளையாட்டு வீரர்களும் ரசிகர்களும் கறுப்பு பேட்ஜ் அணிந்துகொள்ளலாம்'' என்று ரஜினி சொல்லியிருந்தார்.

அவர் காவிரி மேலாண்மை வாரியம் குறித்த தமிழ் இன உணர்வாளர்களின் போராட்டத்தை ஆதரிக்கிறார் என்னும் கடுப்பில், ஐ.பி.எல். அவர் முகத்தில் கரி பூசியதாகச் செய்து வெளியிட்டுப் புளகாங்கிதப்பட்டிருக்கிறது தினமலர்.

ஒரு தலைமையின் கீழிருந்த தினமலர், பங்காளிச் சண்டை காரணமாகப் பாகப்பிரிவினை செய்யப்பட்ட நிலையில் அதன் விற்பனை வெகுவாகச் சரிந்துவிட்டமை ஊரறிந்த உண்மை.

விற்பனையைத் தூக்கி நிறுத்தும் முயற்சியில், 'ரஜினி முகத்தில் கரி'' என்பது போன்ற பரபரப்பான செய்திகளை வெளியிடுவது இதன் 'கிரிமினல்' புத்தியைக் காட்டுகிறது. இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ திடுக்கிட வைக்கும் செய்திகளை வெளியிட்டு விற்பனையைத் தூக்கி நிறுத்திடப் படாதபாடு படுகிறது தினமலர் நிர்வாகம்.

சென்னையில் நடத்தவிருப்பதாகத் திட்டமிடப்பட்ட அனைத்து ஐ.பி.எல்.போட்டிகளும் புனே நகருக்கு மாற்றப்படவிருப்பதாக ஐ.பி.எல்.தலவர் அறிவித்திருக்கிறார்[இனியும் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துவிட்டது காரணமாம்].

ரஜினி முகத்தில் கரி பூசப்பட்டதாகப் பெட்டிச்செய்தி வெளியிட்டுப் பரவசப்பட்ட தினமலர் நிர்வாகி, இப்போது தன் முகத்திலும் கரி பூசப்பட்டிருப்பதைக் கண்ணாடியில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

ஒரு துணுக்குச் செய்தி: 'ரஜினி முகத்தில் கரி' என்று இது வெளியிட்ட செய்தி ரஜினி ரசிகர்களின் பார்வையில் படவில்லைபோலும். பட்டிருந்தால்.....

ஊரூராக, நடுத்தெருவில் வைத்து அதை எரித்துப் போராட்டம் நடத்தியிருப்பார்கள் அவர்கள்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

புதன், 11 ஏப்ரல், 2018

உச்ச நீதிமன்றத்தின் கண்டனங்களால் பயன் ஏதும் உண்டா?

'காவிரி நீர்' வழக்குத் தொடர்பான விசாரணையின்போது[09.04.2018], 'ஸ்கீம்' குறித்து நடுவணரசு மிகவும் தாமதமாக 'விளக்கம்' கேட்டதைச் சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
''ஆகா...உள்நோக்கத்துடன் செயல்படும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துவிட்டது'' என்று நம் அரசியல் தலைவர்களும் தமிழ் இன உணர்வாளர்களும் மகிழ்ச்சி தெரிவித்தார்கள். நீங்களும் நானும்கூட மகிழ்ந்தோம்.

கொஞ்சம் யோசித்தபோது.....

'உச்ச நீதிமன்றம் இவ்வாறு கண்டனம் தெரிவிப்பதால் பயன் ஏதும் உண்டா? அதாவது, அடுத்தடுத்துத் தெரிவித்தால், அக்கண்டனங்களால் நடுவணரசுக்கு ஏதும் பாதிப்பு உண்டா?' என்னும்  கேள்வி என்னுள் எழுந்தது.

'உண்டு' என்றால் நடுவணரசு தண்டிக்கப்பட வேண்டும். 

இது சாத்தியம் எனின்,  தண்டனையை வழங்குவது யார்?

குடியரசுத் தலைவர்தானே?

உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில் அமைச்சரவையைக் கலைத்திட குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பிக்கலாம்; வாய்ப்பு அமையுமெனின், பிறிதொரு கட்சிக்கு ஆட்சியமைக்க வாய்ப்பளிக்கலாம். அது சாத்தியப்படவில்லையெனில், நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டுப் புதிய தேர்தலுக்கு ஆணை பிறப்பிக்கலாம்[சட்ட ரீதியான பிற நடவடிக்கைகள் குறித்து எனக்கு ஏதும் தெரியாது].

குடியரசுத் தலைவரின் ஆணைக்கு ஆளும் கட்சி  கட்டுப்படுதல் வேண்டும். மறுத்தால் நடுவணரசுக்குரிய முழு அதிகாரத்தையும்[முப்படையையும் நிர்வகித்தல் உட்பட] குடியரசுத் தலைவர், தம்வசப்படுத்துவதன் மூலம் சட்டத்துக்கு உட்பட்டு உரிய நடவடிக்கையை எடுக்கலாம்.

ஆக, உச்ச நீதிமன்றம் என்னும் உச்ச அதிகாரம் படைத்த அமைப்பானது, தன் உத்தரவை நடுவணரசு நடைமுறைப்படுத்தாமல் காலம் தாழ்த்தும்போது, அல்லது உத்தரவைக் கிடப்பில் போடும்போது அது தெரிவிக்கும் கண்டனம் அத்தியாவசியமானது என்பதும், அந்தக் கண்டனத்திற்கு உரிய பயன் விளைதல் முக்கியம் என்பதும் தெளிவாகிறது.  பயனேதும் விளைவதில்லை எனின்.....

அது தெரிவிக்கும் கண்டனங்கள் எல்லாமே வெற்றுச் சடங்குகள் என்றாகிவிடும்.
=================================================================================
முக்கிய குறிப்பு:

இந்திய அரசியல் சட்டம் குறித்த அடிப்படை அறிவுகூட இல்லாதவன் நான். ஆர்வம் காரணமாக என்னுள் எழுந்த சந்தேகத்தைப் பதிவு செய்திருக்கிறேன். அரசியல் சட்ட அறிவு வாய்த்தவர்கள் இது குறித்துப் பதிவு எழுதினால் என் போன்ற பலருக்கும் அது பயன் தருவதாக அமையும். நன்றி.


செவ்வாய், 10 ஏப்ரல், 2018

தமிழ்நாட்டின் அடுத்த 'முதலமைச்சர்' தமிழிசையே!!!

தமிழகப் 'பாசக' தலைவர் தமிழிசை அவர்களின் கனிவான கவனத்திற்கு.....

''தமிழ்நாட்டிற்கு ராணுவத்தை அனுப்பினாலும் அஞ்சமாட்டோம்'' என்று, திரையுலகம் நடத்திய, காவிரி நீருக்கான அறப்போராட்டத்தில் ஆர்ப்பரித்தார் நடிகர் சத்தியராஜ். ''ஐ.டி. ரெய்டுக்கும் அஞ்ச மாட்டீர்களா?'' என்று நீங்கள் கொடுத்த அடியால் அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டார் அந்த நடிகர்.
''எனக்கு அந்த ஆசை இல்லை, இந்த ஆசை இல்லை. இதுவரை என் வீட்டில் ஐ.டி.ரெய்டு நடந்ததில்லை'' என்று உங்களுக்குப் பதிலளிக்கும் முகமாக ஏதேதோ உளறிக்கொட்டியிருக்கிறார்.

சத்தியராஜைப் பொருத்தவரை, மேடைகளில்தான் ''ஆய்...ஊய்...'' என்றெல்லாம் அலட்டிக்கொள்வாரே தவிர, உண்மையில் அவர் ஒரு தொடைநடுங்கி நடிகர். உங்களுக்கு அவர் பதிலளித்தபோது, மைக் பிடித்திருந்த அவரின் கை வெடவெடவென்று நடுங்கியதே, அதைக் கவனித்திருந்தால் உங்களுக்குப் புரிந்திருக்கும்.

உள்ளுக்குள் பயந்து நடுங்கினாலும், தமிழ் மக்கள் தன்னை ஒரு கோழை என்று எண்ணிவிடாமலிருக்கவே உங்களுக்குப் பதில் சொல்லித்  'தில்' காட்டியிருக்கிறார் நடிகர்.

'காவி'யத் தலைவி தமிழிசை அவர்களே,

சத்தியராஜை பகிரங்கமாகக் கேள்வி கேட்டதன் மூலம் ஒரு பெரும் தவற்றை இழைத்துவிட்டீர்கள் நீங்கள். 

நீங்கள் அவரிடம் கேள்வி கேட்டதற்குப் பதிலாக, அதே கேள்வியை, வருமான வரித்துறையினர் மூலம், குறுந்தகவல் அனுப்பி ரகசியமாகக் கேட்டிருந்தால்.....

இந்நேரம் ஓடிவந்து உங்களிடம் சரணடைந்திருப்பார் சத்தியராஜ்; பாசகவில் உறுப்பினராகவும் ஆகியிருப்பார்.

இதே குறுஞ்செய்தியை பாரதிராஜா, கமல்காசன், ரஜினிகாந்த் போன்ற திரையுலகப் பிரமுகர்களுக்கும் அனுப்பியிருந்தால், ஒட்டுமொத்த திரையுலகமே உங்கள் பின்னால் அணிவகுத்திருக்கும்.

இதே அஸ்திரத்தைப் பிரயோகித்து, ஸ்டாலின், வைக்கோ, திருமாவளவன், இராமதாஸ், அன்புமணி, கொங்குதேசக் கட்சி ஈஸ்வரன், தினகரன், வேல்முருகன், எடப்பாடி, பன்னீர் மற்றும் இன்னபிற அரசியல் கட்சித் தலைவர்களையும் உங்கள் காவிக் கட்சியில் இணைய வைத்திருக்கலாம். 

இத்தகையதொரு புத்திசாலித்தனமான காரியத்தை இனியேனும் நீங்கள் செய்து முடியுங்கள். முடித்தால்.....

தேர்தலே நடத்தாமல், நீங்கள் தமிழ்நாட்டின் 'அன்னப்போஸ்ட்' முதலமைச்சர் ஆகிவிடலாம். மத்தியில் மோடி ஆட்சி நீடிக்கும்வரை உங்களின் ஆட்சியும் நீடிக்கும்.

வாழ்த்துகள் தமிழிசை!

திங்கள், 9 ஏப்ரல், 2018

கிரிக்கெட் வாரியத்திற்குத் தமிழக ரசிகர்கள் 'பாடம்' கற்பிப்பார்களா?

சென்னை, சேப்பாக்கம் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நாளை[10.04.2018] நடைபெறவுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியைக் காண வருகிற ரசிகர்கள், பேனர், கொடி, இசைக் கருவிகள், கேமரா, கத்தி கப்படா, கத்தரிக்கோல், சிகரெட், தீப்பெட்டி, கண்ணாடிப் பொருட்கள் போன்றவற்றைக் கொண்டுவரக்கூடாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகத் தமிழ்த் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன[09.04.2018 மாலை: 05.30 மணி].

கிரிக்கெட் வாரியம் தமிழக ரசிகர்களைத் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்துவிட்டதா?

இனவெறியைத் தூண்டும் முழக்கங்களை எழுப்பினால், எழுப்புபவர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது. இவ்வாரியம் தமிழ் இனப் பற்றுகொண்ட இளைஞர்கள் மீது, 'இன வெறியர்கள்' என்று முத்திரை குத்திவிட்டதா?

தேசியக்கொடியை அவமதிப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அறிவிப்புச் செய்திருக்கிறது. எந்தவொரு போராட்டத்திலும் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபட்டிராத நம்மவர்களைத் தேசத் துரோகிகள் என்று உலகுக்கு அடையாளப்படுத்துகிறதா வாரியம்?

குடிநீர்ப்பாட்டில்கூட எடுத்துச் செல்ல அனுமதி இல்லையாம்.

எத்தனை எத்தனை கட்டுப்பாடுகள்!

இதைவிடவும் வேறு எந்த வகையிலும், வேறு எந்தவொரு அமைப்பும்  நம் இளைஞர்களை/ரசிகர்களை அவமானப்படுத்திவிட முடியாது.

தமிழக ரசிகர்களை இழிவுபடுத்திய இந்தக் கிரிக்கெட் வாரியத்திற்கு ரசிகப்பெருமக்கள் உரிய வகையில் 'பாடம்' கற்பிக்க வேண்டும்.

செய்வார்களா?
----------------------------------------------------------------------------------------------------------------------------------


ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

தமிழ்நாட்டு அமைச்சர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்!

''அமைச்சர்களே, உங்களின் சுகபோக வாழ்க்கை முக்கியமா, தமிழனின் தன்மானமா? எது? எது? எது? இன்றே, இக்கணமே முடிவு செய்யுங்கள்.''
'சொடக்கு'ப் போடும் நேரத்தில், ஒருவரின் பேச்சை அல்லது எழுத்தை மொழியாக்கம் செய்வதற்கான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்ட இன்றைய அறிவியல் யுகத்தில், பிடிவாதமாக, மாநில மொழிகளை ஆட்சிமொழிகளாக ஆக்க மறுத்து, இந்தியே 'இந்தி'யாவின் தேசிய மொழி என்று சொல்லி அதைத் திணித்துக்கொண்டிருக்கும் மத்திய அரசு, சமற்கிருதத்தைத் திணித்தது; 'நீட்'டைத் திணித்தது. 

காவிரிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் உச்சநீதிமன்ற ஆணையை அலட்சியம் செய்து நமக்குத் துரோகம் இழைத்தது.

அண்மைக் காலங்களில், கவர்னருக்கான அதிகாரம் என்ற பெயரில் பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தர்களைத் திணித்திருக்கிறது.

தமிழன், ஜாதிமத வேறுபாடுகளைக் களைந்து, தன் முழு பலத்தையும் திரட்டி நடுவணரசை எதிர்த்துப் போராட வேண்டிய தருணம் இது. 

அமைச்சர்களே, நீங்களும் தமிழர்கள்தான். ஆனாலும், ஆட்சியாளர்களாகிய நீங்கள் போராடுவதுபோல் நடிப்பீர்களே தவிர உண்மையில் போராட மாட்டீர்கள். காரணம்.....

உங்களின் உலகறிந்த 'பலவீனம்'. அதைப் புரிந்துகொண்டுதான், உங்களைத் தங்களுக்கான 'சேவகர்கள்' ஆக்கித் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறார்கள் 'அவர்கள்'; திணிப்புகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். எனவே.....

நெஞ்சு நிறைந்த தமிழ் உணர்வுடன் வேண்டுகிறோம், ஆட்சிக் கட்டிலிலிருந்து இறங்குங்கள்; ஒதுங்கி நில்லுங்கள். நீண்ட நெடும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திட நம் மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

''போராடட்டுமே. அந்தப் போராட்டத்துக்கு நாங்கள் தடையாகவா இருக்கிறோம்?'' என்று கேட்கிறீர்களா?

ஆம். நீங்கள் ஆட்சியிலிருப்பது மிகப் பெரும் தடைதான்.

போராடும் தமிழ் இன உணர்வாளர்களைக் காவல்துறையினரைக் கொண்டு தாக்கி, அவர்களின் உத்வேகத்தைக் குறைக்கிறீர்கள்; ஜாமீனில்கூட வெளிவர இயலாத பிரிவுகளில் வழக்குப் போட்டு உள்ளே தள்ளுகிறீர்கள்.

நாங்கள் பதவி விலகி, கவர்னர் ஆட்சி வந்தால் இதெல்லாம் நடக்காதா என்றெல்லாம் கேள்விகள் கேட்டுக் காலதாமதம் செய்யாதீர்கள். கவர்னர் ஆட்சியின் அடக்குமுறைகளையெல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். உங்களின் பரம எதிரிகள் ஆட்சியைக் கைப்பற்றுவார்களே என்றும் கவலைப்படாதீர்கள். இனி தமிழகத்தை யார் ஆளவேண்டும் என்பதையும் அவர்கள் கவனத்தில் கொள்வார்கள்.

மீண்டும்  வேண்டுகிறோம்.....

ஒதுங்கி நில்லுங்கள். தன்மானமுள்ள தமிழர்கள் போராடட்டும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------









.





சனி, 7 ஏப்ரல், 2018

ஆதியோகியும் ஜக்கியின் அதிபுத்திசாலித்தனமும்!!

'இந்தியச் சுற்றுலாத்துறை, கோவை ஈஷா யோக மையத்திலிருக்கும் 112 அடி ஆதியோகி சிலையை இன்கிரிடிபிள் இந்தியா[Incredible India (styled as Incredıble!ndıa) is the name of an international tourism campaign by the Government of India to promote tourism in India since 2002 to an audience of global appeal..Wikipedia] சுற்றுலாத் தலமாக அறிவித்துள்ளது' என்பது செய்தி[தினமலர், 04.04.2018].

செய்தியறிந்து மகிழ்கிறோம்.

ஈஷாயோக மைய நிறுவனர் சத்குருவால்['சத் (Sat) (சமக்கிருதம்सत्) எனும் சமசுகிருத மொழிச் சொல்லிற்கு உண்மையான, மாறாத, முக்காலங்களில் என்றும் நிலைத்து இருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது' என்கிறது விக்கிப்பீடியா. இவரென்ன பரம்பொருளுக்கே குருவா?] வடிவமைக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இச்சிலை, 2017ஆம் ஆண்டு மகா சிவராத்திரி நாளில் புண்ணிய பாரதத்தின் பிரதான் மந்திரி நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டதாம். மிக்க மகிழ்ச்சி.

இச்சிலை, 'உலகின் மிகப் பெரிய மார்பளவுச் சிலை' என்று கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் மே 2017இல் இடம்பெற்றதாம். மிகவும் மகிழ்கிறோம்.

ஆதியோகியின் மகிமை பொருந்திய திருமுகத்திற்கு முன்னால் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெகு சாதாரணமாக அமர்ந்து தியானம் செய்ய முடியுமாம். மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

இத்துடன் செய்தி முற்றுப்பெற்றிருந்தால் தேவலாம். இதற்கு மேலும், ஜக்கி உதிர்த்த சில தத்துவங்களைத் தொகுத்தளித்திருக்கிறது தினமலர்.

''எந்தவொரு மதமும் தோன்றுவதற்கு முன்னால், தோராயமாக 15000ஆண்டுகளுக்கு முன்பு, யோக அறிவியலைத் தன் ஏழு சீடர்களான சப்தரிஷிகளுக்குப் பரிமாறினார் முதல் யோகியான ஆதியோகி'' என்கிறார் வாசுதேவ்.
பரம்பொருளின் குருவான அருள்மிகு ஜக்கி அவர்கள் இதற்கான வரலாற்று ஆதாரங்களைத் தரவில்லை; இவ்வாறான கற்பனைக் கதைகளை மக்கள் மத்தியில் பரப்புவதன் மூலம் பக்தி நெறி வளர்க்கிறாரா, தன்னை வளர்த்துக்கொள்கிறாரா?

நெற்றிக்கண் போன்ற திலகத்துடனும், ஜடாமுடியுடனும் காட்சியளிக்கிற இந்தச் சிலை சிவபெருமானுக்கான உருவத்தை  மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டது.  இந்தச் சிவபெருமான்தான் 15000ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆதியோகி என்கிறார் வாசுதேவ்.

பதினையாயிரம் என்ன, பத்து லட்சம் யுகங்கள், பத்துக் கோடி யுகயுகாந்தரங்கள் என்றுகூட அடித்துவிட்டிருக்கலாம். யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். பிரதான் மந்திரியின் ஆத்ம நண்பரல்லவா?

மேலும், தத்துவம் என்னும் பெயரில் ஏதேதோ சொல்லி மண்டை காய வைக்கிறார் ஜக்கி.

''உலகின் அடுத்த தலைமுறையினர் நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்களாக இல்லாமல் தேடுதல் உடையவர்களாக இருப்பார்கள்'' என்கிறார் 

நம்பிக்கைகள் என்று எவற்றைச் சொல்லுகிறார்?

கடவுள், மதம் போன்றவற்றின் மீதான நம்பிக்கைகளா?  பாவம், புண்ணியம் தொடர்பான நம்பிக்கைகளா? மூடநம்பிக்கைகளா? 

''வரும் வருடங்களில் தத்துவம், சித்தாந்தம் மற்றும் நம்பிக்கை முறைகள்[நம்பிக்கையில் முறைகளா? புரியலையே!] அனைத்தும் காரண அறிவு[இதுக்கென்ன விளக்கம்? காரணங்களைத் தேடும் அறிவா?] மற்றும் அறிவியல்பூர்வமான சோதனைகளுக்கு முன் தாக்குப்பிடிக்க முடியாமல் தன்னால் உடைந்துபோகும்'' என்பது சத்குருவின் நவயுக தத்துவம்.

அறிவியல் வளர்ச்சி பெறும்போது, தத்துவம், சித்தாந்தம் எல்லாம் உடைந்து போகும், அதாவது அழிந்துப்போகும் என்கிறார். அப்புறம் எதற்கு இவர் இன்னும் தத்துவம் சித்தாந்தம் எல்லாம் பேசித் திரிகிறார்? பிரமாண்ட ஆதி யோகியை வைத்து மக்களைப் பித்தர்கள் ஆக்கிக்கொண்டிருக்கிறார்?

இந்த மனிதருக்குத் தத்துவமும் தெரியாது; சித்தாந்தமும் புரியாது.

மனம்போன போக்கில் கொஞ்சம் வித்தியாசமாக எழுத வைத்ததோடு ஆடம்பர ஆடைகளுடுத்த படங்களையும் போட்டு, சத்குரு ஆக்கி இவரைப் பிரபலப்படுத்தியது ஆனந்தவிகடன் வார இதழ். 

பயன் விளைகிறதோ இல்லையோ, தியானப் பயிற்சி, கூட்டு வழிபாடு, ஆட்டம்பாட்டம் என்று கவர்ச்சிகரமான பல செயல்திட்டங்களின் மூலம் மக்களை ஈர்த்துத் தம்வசப்படுத்திய ஜக்கி வாசுதேவ், ஊடகங்களின் ஆதரவுடன் புகழைத் தக்கவைத்ததோடு ஆன்மிகத்துறையில் உச்சநிலையை எய்திவிட்டார்.

ஜக்கி ஆங்கில அறிவு படைத்தவர் மட்டுமல்ல, மக்களின் மனங்களைப் படிப்பதில் அதிபுத்திசாலியும்கூட!
=============================================================================