வெள்ளி, 13 ஏப்ரல், 2018

ஒரு 'டூப்ளிகேட்' கடவுளைக் கைது செய்த ஈரோடு காவல்துறை!!!

இன்று[13.04.2018] காலை 06.45 மணியளவில், 'பாலிமர் தொலைக்காட்சி' வெளியிட்ட ஒரு சூடானதும்  சுவையானதுமான பரபரப்புச் செய்தி கீழே. தவறாமல் படியுங்கள்.  
https://www.polimernews.com/.../6042-Rolled-priest-disguised-Rs-4-crore-Gurusami
ஈரோடு அருகே சக்தி வாய்ந்த இரிடியம் குடுவை விற்பனைக்கு இருப்பதாகக் கூறி 4 கோடியே 22 லட்சம் ரூபாயை மோசடியாகச் சுருட்டிய போலிச் சாமியார் தனது மகனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சதுரங்க வேட்டைப் பட பாணியில் பலரை ஏமாற்றிய கடவுள் குருசாமியின் மறுபக்கம்.
இதே பட பாணியில் சாமியார் வேடமிட்டுத் தொழில் அதிபரை ஏமாற்றி 4 கோடியே 22 லட்சம் ரூபாயைச் சுருட்டிய, ஈரோடு மாவட்டம் தொட்டியங்கிணத்துப் புதூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் கடவுள் குருசாமி என்பவர் இவர் தான்..!
இவர் தன்னிடம் கடவுள் நேரடியாகப் பேசுவதாகக் கூறிக்கொண்டு கடவுள் என்ற பெயரிட்ட சொகுசுக் காரில், சாமியார் வேடத்தில் வலம் வந்துள்ளார். பல தொழில் அதிபர்களைச் சந்தித்துத் தன்னிடம் மிகவும் சக்திவாய்ந்த இரிடியம் இருப்பதாகக் கூறிப் பல கோடி ரூபாய் பேரம் பேசி வந்ததாகக் கூறப்படுகின்றது.
இதனை உண்மை என்று நம்பிய யுவராஜ் என்ற தொழில் அதிபரிடம், குடுவையைப் பார்க்க வேண்டுமானால் கவச உடை அணிய வேண்டும், இல்லையென்றால் அதன் சக்தி நம்மை எரித்துவிடும் என்று கூறி ஏமாற்றிக் கவச உடை அணியவைத்துப் பழைய குடுவை ஒன்றை இரிடியம் குடுவை என்று காண்பித்து 4 கோடியே 22 லட்சம் ரூபாய் பணத்தை மோசடியாகச் சுருட்டியுள்ளார் கடவுள் குருசாமி. பணத்தைப் பெற்றுக்கொண்டு குடுவையைக் கொடுக்காமல் அதே குடுவையை மேலும் சிலரிடம் காண்பித்துப் பல லட்சங்கள் மோசடியில் ஈடுபட்டதாகவும் காவல்துறைக்குப் புகார் வந்தது.
அதன் பேரில் ஈரோடு மாவட்டப் பொருளாதாரக் குற்றப்பிரிவுப் போலீசார், சாமியார் வேடமிட்டிருந்த கடவுள் குருசாமியைப் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் ஒரு போலிச் சாமியார் என்பதும் அவர் வீட்டில் வைத்திருந்தது இரிடியம் அல்ல; பித்தளைக் குடத்தை அதிர்ஷ்டக் குடுவை என்று கதை அளந்து 4 கோடி ரூபாயைச் சுருட்டியதும் கண்டு பிடிக்கப்பட்டது. அவரது மோசடிக்கு மகன் நெப்போலியன் என்பவர் உடந்தையாக இருந்து குடுவையை அபாரசக்தி வாய்ந்தது என்று இணையதளத்தில் போலியான செய்தி பரப்பி உள்ளதும் அதனைக் காண்பித்து மோசடி செய்திருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, கடவுள் குருசாமி, மோசடிக்குத் திட்டம் வகுத்துக் கொடுத்த அவரது மகன் நெபோலியன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 இரு சக்கர வாகனங்கள், போர்டு எண்டவர் கார், இரண்டு டிராக்டர், போலிக் குடுவை, சாமியார் உடை, கவச உடை, கம்யூட்டர்கள், பிரிண்டர்கள் போன்ற 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.
இரிடியம் இருப்பதாகக் கூறி யாராவது உங்களை அணுகினால் அதிர்ஷ்டம் கதவைத் தட்டுகிறது என்று எண்ணாதீர்கள். அது உங்களை ஏமாற்றும் செயல் என்று உணருங்கள். இரிடியத்தைத் தங்கம் போல, எங்கு வேண்டுமானாலும் கொடுத்துப் பணம் ஆக்க இயலாது. இரிடியத்தில் குடுவை, கோபுரக் கலசம், பெட்டரமாஸ் லைட்டு எல்லாம் செய்ய இயலாது. எனவே, மோசடிப் பேர்வழிகளிடம் உஷாராக இருங்கள் என்று எச்சரிக்கின்றனர் காவல்துறையினர்.

நாமும் எச்சரிக்கிறோம்:

கடவுளின் பெயரால்  மூடநம்பிக்கைகள் பரப்பப்படுவதைத் தடுப்பதற்கான ஒரே...ஆகச் சிறந்த வழி, நிரூபிக்கப்படாத கடவுளைப் புறக்கணித்து, மனித நேயம் போற்றுவது மட்டுமே.
=================================================================================================
நன்றி: பாலிமர் தொலைக்காட்சி