எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

செவ்வாய், 1 நவம்பர், 2022

கடனை அடைக்கக் கன்னிப் பெண்களை விற்கும் பெற்றோர்கள்!!!

'ராஜஸ்தான்' மாநிலத்தின் கிராமப்புறங்களில் கடனுக்குக் கன்னிப் பெண்களை விற்கும் அவலத்தை அம்பலப்படுத்தியது 'தேசிய மனித உரிமைகள் ஆணையம்'. இது தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு, 30 நாட்களுக்குள் அறிக்கை தருதல் வேண்டும் என்று இது மாநிலத்தின் மாவட்ட நிர்வாகத்திற்குக் கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்தத் தகவல்கள் ஊடகங்களில் வெளியானது இரண்டு நாட்களுக்கு முன்பு[https://ibctamil.com/article/repay-loans-young-girls-being-sold-india-1667019139].

ராஜஸ்தான் மாகாணத்தின் பில்வாரா பகுதியைச் சுற்றியுள்ள மாவட்டங்களில், ஒரு குடும்பத் தலைவர் தான் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால், கடன் அளித்தவர் தங்கள் சாதி சார்ந்த பஞ்சாயத்தாரிடம் புகார் அளிப்பார்.

விசாரணை செய்யும் பஞ்சாயத்தார், பணத்திற்குப் பதிலாக, கடன் வாங்கிய குடும்பத்தினர் தங்களின் இளம் வயதுப் பெண் பிள்ளைகளைக் கடன் கொடுத்தவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடுவார்கள்.

அவர்களை[கடன் தொகைக்கு ஏற்ற வகையில் பெண்களின் எண்ணிக்கை அமையும்]ப் பெற்றுக்கொள்ளும் நபர் அவர்களை வேறொருவருக்கு விற்று, தனக்கான தொகையைப் பெறுவார்[லாபம் பார்ப்பதும் உண்டு].

பெண் பிள்ளைகளைக் கையளிக்க மறுக்கும் தாய்மார்கள் கூட்டு வன்புணர்வுக்கு இரையாகும் கொடூரமும் நடந்தேறுவதாக மனித உரிமைகள் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

சுமார் 1.5 மில்லியன் இந்திய ரூபாயைக் கடனாக வாங்கிய ஒருவர், தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாமல்போகவே, கடனை அடைப்பதற்காகத் தன் சகோதரியையும் 12 வயது மகளையும் விற்கும் நெருக்கடிக்கு ஆளானார் என்பதும், மனைவியின் சிகிச்சைக்காக 600,000 ரூபாய் கடனாக வாங்கிய இன்னொருவர், அதைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலையில், தன் இளம் வயது மகளைக் கடன் கொடுத்தவரிடம் ஒப்படைத்தார் என்பதும் இது தொடர்பான சோகச் செய்திகள்.

ஒப்படைக்கப்படும் ஒரு பெண் அடுத்தடுத்து இருவர், மூவர் என்று முறையே பல நபர்களுக்கு விற்கப்படுதலும் நிகழ்வதுண்டு.

விற்கப்படும் பெண்கள் பலமுறை கருவுற்றுக் கருக்கலைப்பும் செய்து உடல் நலம் வெகுவாகப் பாதிக்கப்படுதலும் நிகழ்ந்துள்ளது.

தற்போது இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், சாதிப் பஞ்சாயத்துகள்தான் கிராமங்களைக் கட்டுப்படுத்துவதால், இதுபோன்ற விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் அல்லது மாநில நிர்வாகம் தலையிட முடியாத சூழல் உள்ளதாகப் பெண்கள் உரிமை ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளாராம்.

இந்த அநியாயத்தை இனியும் தடுத்து நிறுத்திட முடியாது என்றால், பணம் படைத்தவர்களில் காடுகளில் தொடர்ந்து அடைமழை பெய்யும்.

கடன் மேல் கடன் கொடுத்து, நிறையக் கன்னிப் பெண்களைக் கடனுக்கு ஈடாகப் பெற்று அவர்களை விற்று, கோடி கோடிக் கணக்கில் அவர்கள் பணத்தை அள்ளிக் குவிக்கலாம். அழகான பெண்களைத் தம் வசம் வைத்துக்கொண்டு ஆசை தீர அனுபவிக்கவும் செய்யலாம்.

ராஜஸ்தான் கிராம மக்களின் இந்தக் கொடூரப் பழக்கவழக்கத்தைத் தடுத்திட வழியே இல்லையா என்றால், உண்டு. அது.....

நம் 'பாஜக' மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களிடம் முறையிட்டால், கோவையிலுள்ள கோட்டை ஈஸ்வர சாமி[கோவைக்கு நேர இருந்த பெரிய ஆபத்தைத் தடுத்து நிறுத்தியவர்]யைக் கும்பிட்டுப் பரிகாரம் காண்பார் என்பது உறுதி!

இது விசயத்தை உடனடியாக யாரேனும் அவர் காதில் போட்டுவிடுங்களேன்!

கடனுக்காக இளம் வயது சிறுமிகளை விற்கும் பெற்றோர்..! கூட்டு வன்புணர்வுக்கு இரையாகும் கொடூரம் | Repay Loans Young Girls Being Sold India
[ராஜஸ்தான் கிராமப் பஞ்சாயத்தார்... அத்தனை பேருமே அயோக்கியர்களா?!]
===============================================================================