திங்கள், 28 செப்டம்பர், 2015

நீங்கள் ‘புதிர்’க்[suspense] கதைப் பிரியரா? மகா மகா புத்திசாலியா? ஒரு தேர்வு’! [பழையது]

“இந்தக் ‘குமுதம்’ கதையின் கடைசி இரண்டு பத்திகளைப் படிக்காமல் கதையின் முடிவைச் சொல்ல முடியுமா?” சவால் விட்டாள் என் தோழி. ஒரு வாரம் போல யோசித்தேன். ஊஹூம்...!!! உங்களால் முடிகிறதா பாருங்கள்.


தலைப்பு:                                   கவலை

எழுதியவர்:                              ‘மலர்மதி’

வெளியான இதழ்:                 ‘குமுதம்’ வார இதழ் [28.08.1986].
“என்ன கண்ணபிரான், ஒரு மாதிரியா உட்கார்ந்திருக்கீங்க? என்ன ஆச்சு?”

“அதை ஏன் கேட்குறீங்க? என் மனைவி, மூனு மாசம் முழுகாம இருக்கும்போதே எனக்குத் தெரிஞ்ச ஒருத்தரைக் காக்கா பிடிச்சேன்!”

“எதுக்கு?”

“வேற எதுக்கு? எல்.கே.ஜி. அட்மிஷனுக்குத்தான்!”

“சரி.....!”

“அந்தக் கான்வெண்ட் பிரின்சிபால் அவருக்கு ரொம்ப தோஸ்து!”

“அப்படியா! ரொம்ப நல்லதாப் போச்சு!”

“அவர் என்னை அழைச்சுட்டுப் போயி முதல்வர்கிட்டே அறிமுகப்படுத்தினார்.”

“அப்புறம்?”

“ரெண்டு ஆண்டுக்கு மூச்சு விடக் கூடாது. எல்லா இடங்குளும் நிறைஞ்சிடிச்சி. மூணாவது வருசத்துக்கு வேணும்னா நீங்க முயற்சி பண்ணிப் பார்க்கலாம்னு சொல்லிட்டார்!”

“நல்லதுதானே? உங்க குழந்தைக்கு மூனு வயசு ஆகறதுக்கும் சீட் கிடைக்கிறதுக்கும் சரியா இருக்குமே!”

“அப்படித்தான் நானும் நினைச்சி சந்தோசப்பட்டேன். அவர் ரெண்டாயிரம்   நன்கொடை [இது நடந்தது 26 ஆண்டுகளுக்கு முன்பு!] வேறு கேட்டார். சரின்னு சொல்லி, அலைஞ்சி திரிஞ்சி ரெண்டாயிரத்தைத் திரட்டி அவர் கையில் திணிச்சேன். அவரும் 1989ஆம் ஆண்டுக்கான சேர்க்கைச் சீட்டைக் கைப்பட எழுதிக் கொடுத்துட்டார். என்னோட சீட்தான் கடைசி. எல்லாம் பூர்த்தி ஆயிடிச்சி!”

“அடடா...! ரொம்ப அதிர்ஷ்டசாலி நீங்க!”

“தாய் வீட்டுக்குப் போன என் பெண்டாட்டிக்குப் பிரசவம் ஆயிடிச்சி.....”

“வாழ்த்துகள். சந்தோசமா இருக்க வேண்டிய நேரம் இது. ஆனா, நானும் வந்ததிலிருந்து 
கவனிச்சிட்டிருக்கேன், நீங்க ஏன் இப்படி இடிஞ்சி போயி உட்கார்ந்திருக்கீங்க?”
தொடரும்.....
........................................................................................................................................

“அடுத்து, கதையின் முடிவு வரப்போகுது. அட்டகாசமான புதிர் காத்திருக்கு. கடைசி ரெண்டு பத்தி படிக்காம, ‘முடிவை’ச் சொல். சொல்லிட்டா, நீ  மகா மகா புத்திசாலி”ன்னு குமுதம் இதழைப் பிடுங்கிட்டா என் தோழி. 

நான் ஏற்கனவே மகா புத்திசாலின்ற மிதப்பில் இருக்கிறவன். “மகா மகா புத்திசாலி நீ”ன்னு அழகான தோழியால் புகழப்படணும்ங்கிற ஆசை எனக்கு மட்டும் இருக்காதா என்ன?

ஒரு நாள் அல்ல; ரெண்டு நாள் அல்ல; ஒரு வாரம் போல,  ‘பசி’ நோக்காமல், மெய் வருத்தம் பாராமல் சிந்தித்தும் என்னால் கதையின் மர்ம முடிச்சை அவிழ்க்கவே முடியவில்லை.


உங்களால் முடிந்ததா? நீங்கள் மகா மகா புத்திசாலியா?!

“ஆம்” என்றால் பாராட்டுகள்.

‘முடிவு’ கீழே..........














கதை முடிவு.....

“எல்.கே.ஜி.ல ஒரே ஒரு சீட் பிடிக்க நான் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. இப்ப என்னடான்னா, என் பெண்டாட்டி ரெட்டைக் குழந்தை பெத்துத் தொலைச்சிருக்கா!”

“அடப் பாவமே!”

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வியாழன், 24 செப்டம்பர், 2015

அழிந்துகொண்டிருக்கும் தமிழும் அதிரவைக்கும் தமிழ்ப்பதிவர் திருவிழாவும்!


தமிழ் அழிந்துகொண்டிருக்கிறது.....வெகு வேகமாக!

'இந்தக் கல்வியாண்டில், தமிழில் பயின்றவர்களில் மிக மிகக் குறைந்த மாணவர்களே[மூன்று பேர்?} மருத்துவப் படிப்பிற்குத்  தேர்வு பெற்றார்கள்’[காரணங்கள் ஆய்வுக்குரியவை] என்னும் ஒரு செய்தி போதும் இதை உறுதிப்படுத்த.

ஆங்கிலத்தில் படித்தால்தான் பிற மாநிலங்களிலோ பிற நாடுகளிலோ வேலை தேட முடியும்’ என்று பெற்றோர்கள் நம்புகிறார்கள். 

இது முழுக்க முழுக்கத் தவறான நம்பிக்கை என்று சொல்லிவிட முடியாது. காரணம், அயல் மாநிலங்களிலும் அயல் நாடுகளிலும் ஆங்கிலவழிப் படிப்பின் மூலம் வேலை தேடிப் பிழைப்பு நடத்தும் தமி்ழர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

இவர்கள் மிகச் சிறுபான்மையினரே என்பதைப் புள்ளிவிவரங்கள் சேகரித்து வெளியிடுவதன் மூலம் மக்களின் ஆங்கில மோகத்தைக் குறைக்க அரசு முயற்சி செய்யலாம். அம்முயற்சி ஆளுவோரால் ஒருபோதும் மேற்கொள்ளப்படவில்லை என்பது வருத்தும் உண்மை.

போதிய தரமான நூல்களை வெளியிடும் முயற்சியை மேற்கொள்ளாமலே, அறிவியல் கல்வியைத் ‘தமிழில் கற்பிக்க நூல்கள் இல்லை’ என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்

இம்மாதிரி நூல்களைத் தனியார் புத்தக நிறுவனங்கள் வெளிடுவதும் பொருளாதார ரீதியாக சாத்தியம் இல்லை. 

எது எப்படியோ, அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் தமிழ்வழிக் கல்வி என்பது வெறும் பகற்கனவாய் ஆகிப்போனது.

இந்த அவல நிலை மாறுமா? 

இணையத்[வலைத்] தமிழ்ப் பதிவர்கள் மனம் வைத்தால் மாறக்கூடும்.

ஆங்கிலம் அறிந்த தமிழ் ஆர்வலர்கள்,  அறிவியல் தொழில்நுட்பம் அறிந்த நண்பர்களுடன் இணைந்து தரமான கட்டுரைகளை இணையத்தில் பதிவு செய்யலாம். சிலரோ பலரோ இணைந்து பிற துறை சார்ந்த கட்டுரைகளை வெளிடுவதும் சாத்தியமே.

எந்தவொரு துறை சார்ந்த தகவலையும் இணையத்தில் தமிழ் வாயிலாகப் பெற இயலும் என்னும் நிலை உருவாகிவிட்டால், போதிய ஆங்கில அறிவு இல்லாத மாணவர்கள்[இவர்களே பெரும்பான்மை] தமிழ்ப் பதிவுகளைத் தேடிப் படித்துப் பயன்பெறுவார்கள்.


தமிழில் கற்பதோடு ஆங்கில அறிவையும் வளர்த்துக்கொள்வதன் மூலம் பிற மாநிலங்களிலும் பிற நாடுகளிலும் வேலை தேடிக்கொள்ள முடியும் என்பதைப் புரிந்துகொள்வார்கள். காலப்போக்கில், பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கும் இது புரிந்துவிடும்.

அதன்பின்னர் பெற்றோர்களிடமும் பிள்ளைகளிடமும் தமிழ்மொழியைக் கொண்டுசேர்க்கும் முயற்சி தேவையற்றுப்போகும். அவர்களாகவே தாய்மொழியாம் தமிழின் அவசியத்தைப் புரிந்துகொண்டு அதைத் தேடி வருவார்கள்.

இந்நிலை உருவானால், அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் தமிழைப் பயிற்றுமொழியாக்கும் முயற்சியில் அரசு தயங்காமல் ஈடுபடக்கூடும்

‘பல்வேறு துறைகளில் ஆற்றல் உள்ளவர்களை அந்தந்தத் துறை சார்ந்து தமிழில்  எழுதுவதற்குத் தூண்டுகோலாக அமைய வேண்டும் என்பதைச் சந்திப்பின் முக்கிய  குறிக்கோளாகக் கொள்ளலாம். இணையத்தில்  தமிழின் பங்களிப்பை அதிகமாக்க வேண்டும். எந்தத் துறையாக இருந்தாலும் தகவல்களைத்  தமிழில் தேடிப் பெற முடியும் என்ற நிலை உருவாக வேண்டும். பொழுதுபோக்கு மட்டுமல்லாது அறிவியல் கலை, பண்பாடு, வரலாறு, வாழ்வியல் , அரசியல், ஆய்வுகள்  என்று எல்லாத் தளங்களிலும் இப்போதுள்ளதை விடப் பல மடங்கு அதிக அளவில் உள்ளடக்கம் காணக் கிடைக்க வேண்டும். இணையத்தில் தமிழ்ப் பயன்பாட்டை எந்த அளவுக்கு அதிகரிக்க முடியுமோ அந்த அளவுக்கு அதிகரிப்பதற்கு அடித்தளமாக வலைபதிவர் சந்திப்பைப் பயன் படுத்திக் கொள்ளவேண்டும் எனபது தமிழை நேசிக்கும் பலரது விருப்பம் என்றால் மிகையாகாது’.....‘புதுக்கோட்டையில் மையம் கொண்டுள்ள புயல்என்னும் தலைப்பிலான தன் பதிவில்  டி.என்.முரளிதரன் அவர்கள் குறிப்பிட்டிருப்பதை இங்கு நினைவுபடுத்துகிறேன்.

‘இம்மாதிரி நிகழ்வுகளைப் பொது மக்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும்; வலைப்பதிவர் கையேட்டை நூலகங்களில் சேர்ப்பதன் மூலம் இளைஞர்களை வலைப்பதிவுகள் பற்றி அறியச் செய்யலாம்’ என்பதான கருத்துகளை முன்வைத்திருக்கிறார் மதுரைத் தமிழன் அவர்கள்.

‘இணையத்தில் பொழுதுபோக்குபவர்கள் எல்லாம் கணினித் தமிழால் நாளைய உலகைப் புரட்டிப் போடுபவர்கள் எனும் எண்ணத்தை நாம் போட்டி அமைப்பாளர்கள் மனதில் விதைக்க வேண்டும் என்பதே வேண்டுகோள்’ என்கிறார் அ.பாண்டியன் அவர்கள்.

'பிறமொழிகளுடன் ஒப்பிடும்போது இணையத்தில்  சொந்தமாகத் தமிழில் தட்டச்சு செய்து ஒரு செய்தியை வெளியிடுபவா்களைவிட காப்பி, பேஸ்ட் செய்து வெளியிடுபவா்களே அதிகமாக உள்ளனா். அதனால் பிற மொழிகளுக்கு இணையாக விக்கிப்பீடியா போன்ற தளங்களில் தமிழ்க்கட்டுரைகள் குறைவாகவே உள்ளன' என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார் முனைவர் குணசீலன் அவர்கள்.

இவர்கள் தவிர இன்னும் பல பதிவர்களும் தங்களின் உயரிய கருத்துகளை முன்வைத் திருக்கிறார்கள்.

அனைத்து ஆலோசனைகளையும் மனதில் இருத்திப் பதிவர் திருவிழாவை மிகச் சிறப்பாக நடத்தி முடிக்க முனைப்புடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் ஒருங்கிணைப்பாளர் நா.முத்துநிலவன் அவர்களும், திண்டுக்கல் தனபாலன் அவர்களும், விழாக் குழுவினரும். அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.

'தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்' என்னும் அமைப்புடன் இணைந்து போட்டிகளை அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்க செயல்.
இது, தமிழ்வழிக் கல்வியின்மீது  கவனம் செலுத்தத் தமிழ்நாடு அரசைத் தூண்டும்; தமிழில் தரமான பதிவுகள் வெளிவரக் காரணமாகவும் அமையும்.

எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக, புதுக்கோட்டையில் தமிழ்ப்பதிவர் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற அனைவரும் மனப்பூர்வமாக வாழ்த்துவோம்.
வாழ்த்துகள். நன்றி.
=====================================================================================================================================================





சனி, 19 செப்டம்பர், 2015

தமிழா, இத்தனை இழிகுணங்களின் உறைவிடமா நீ!?!?!

தமிழைத் தாய் மொழியாகக் கொண்டு பேசி... வாழ்ந்த...வாழும் தமிழ் மன்னர்களோ மக்களோ, ‘தமிழன்’ என்னும் உணர்வுடன் ஓர் இனத்தவராக ஒரு போதும் ஒன்றுபட்டு வாழ்ந்ததில்லை!!!

மாறாக, சேரர் குடியினர், சோழர் குடியினர், பாண்டியர் குடியினர், வேளிர் குடியினர் என வேறு வேறு குடியினராகப் பிரிந்தும், பிளந்தும், பகைத்தும் நின்றனர். தமக்குள்ளே போரிட்டுக்கொண்டு ஒருவரையொருவர் அடுதலும் தொலைதலுமாக இருந்தனர்.
இவர்கள் வாழ்வில் சமயங்கள் ஊடுருவிய பிறகு சைன மதத்தார் எனவும், பௌத்த மதத்தார் எனவும், சைவ மதத்தார் எனவும், வைணவ மதத்தார் எனவும் மத அடிப்படையில் பிரிந்து நின்றனர்.

பிற்காலத்தில், இவர்களே இசுலாமியர், கிறித்தவர் என மாறுபட்டு வாழ்ந்தனர்.
பல்லவர் காலம்  தொடங்கிச் சாதிப் பிரிவுகள் வலுப் பெற்றன. தமிழ் மக்கள் அனைவரும் பல்வேறு சாதிப் பாகுபாடுகளில் புதையுண்டனர்.

ஐரோப்பியரின் வரவும் உறவும் ஏற்பட்ட பிறகு காரல் மார்க்ஸ் கருத்து இங்கு பரவியது. சோவியத் ஒன்றியம், சீனா ஆகிய பொதுவுடைமை நாடுகளின் செல்வாக்கும் இணைந்து கொண்டது. இதன் விளைவாக, வர்க்க அடிப்படையில் மேல்தட்டு, நடுத்தட்டு, அடித்தட்டு என்று மக்கள் பிரிந்தனர்.

வெள்ளைக்காரனிடமிருந்து காப்பியடித்துக் கற்றுக்கொண்ட கட்சிவழி அரசியல் ஒன்றிப் பரவிய பிறகு அதே தமிழ் மக்கள் வேறு வேறு கட்சியினாராய்ப் பிரிந்தனர்.

இப்படிப் பிரிந்து வாழ்ந்தே பழக்கப்பட்டுவிட்ட இவர்கள், தமிழர் என எக்காலத்தும் ஒன்று திரண்டு, தமிழினத்தின் தன்மானம் காக்கப் போராடியதில்லை என்பது என்றும் நீங்காத வேதனை தரும் உண்மை.
ஒரு மதத்தார் மறு மதத்தார்க்கும், ஒரு சாதியார் மறு சாதியார்க்கும், ஒரு கட்சியார் மறு கட்சியாருக்கும் குழி தோண்டிக் கொள்கின்றனர். அவர்கள் தோண்டிய குழியில் இவர்களும், இவர்கள் தோண்டிய குழியில் அவர்களும் என அனைத்துப் பிரிவுத் தமிழருமே விழுந்து மடிகின்றனர்.

புறச்சக்திகளின் தலையீடு இல்லாமலே தமக்குள் அடித்துக்கொண்டு அழிகின்றனர்.

தமிழினத்திற்கு இழிவு நேரும்போது ஒன்று பட்டுப் போராடும் போர்க்குணம்
இல்லாததால்தான், தமிழன் பல்வேறு வந்தேறிகளுக்கும் அடிமையாக வாழ்ந்திருக்கிறான்; வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

தமிழகத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக ஆங்கிலேயர் ஆண்ட காலம் 147 ஆண்டுகள் [1801-1947] ஆகும்.


330 ஆண்டுகள் இந்தியா முழுமையும் ஆண்ட டில்லி சுல்தானியர் தமிழகத்தை மட்டும் ஆண்ட காலம் சுமார் 50 ஆண்டுகள்.


விஜய நகர ஆந்திர நாயக்கர்கள் தமிழகத்தை ஏறத்தாழ 250 ஆண்டுகள் [1572-1736] ஆண்டிருக்கிறார்கள்.


{மதுரை நாயக்கர் வழி வந்த நாயக்கர்கள் தஞ்சையை 1532 முதல் 1765 வரை [233 ஆண்டுகள்] ஆண்டிருக்கிறார்கள்]


தஞ்சையை மராட்டியர் ஆண்ட து 179 ஆண்டுகள் [1676-1855].


ஆர்க்காட்டைத் [சென்னை] தலைநகராகக் கொண்டு வட தமிழ்நாட்டை இசுலாமிய நவாப்புகள் ஆண்டது 110 ஆண்டுகள் [1710-1820].

இவ்வாறாக, ஒரு காலத்தில், இமயத்தில் நம் கொடி நட்டு, கடாரம் வென்று  [இது சோழர் காலம். அப்போதும் அந்தத் தமிழ் மன்னர்கள் சமஸ்கிருதத்துக்கு அடிமைப்பட்டுக் கிடந்தார்கள்] பெரும் நிலப்பரப்பை ஆண்ட தமிழினம் குற்றேவல் புரியும் இனமாக மாறிப்போனது மறுக்க முடியாத...நம்மால் மறக்க இயலாத கசப்பான வரலாற்று உண்மை........

..........தமிழனின் ‘அடிமைப் புத்திக்கு’க் காரணங்களாய் அமைந்தவை பல. அவற்றுள் தலையாயது ‘மத நம்பிக்கை’.

தமிழன் பின்பற்றிய மதங்கள் அனைத்தும் [புத்த மதம் விதிவிலக்கு] விதியையும் அடுத்தடுத்த பிறவிகளையும் நம்பியவை. நிகழ்கால வாழ்வில் தாம் படும் துன்பங்களுக்குக் கர்மாவும் கடவுளுமே [சமணம், கடவுளை மறுத்து ஆன்மாவை முதன்மைப்படுத்துகிறது. புத்தர், கடவுள் பற்றி ஏதும் சொல்லவில்லை] காரணம் என்று எண்ணியவை.

‘மனிதப் பிறப்பின் இலக்கு, இறைவன் திருவடியைச் சேர்தலே’ என்று வலியுறுத்துவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டவை.

இவை, தமிழ், தமிழர் என்ற எல்லைகளைக் கடந்து, மதத்தை அவன் மனதில் புதைத்து  தமிழ் உணர்வையும் தமிழன் என்னும் இன உணர்வையும்  மழுங்கடித்துவிட்டன.

இவ்வாறு, இன உணர்வு மழுங்கடிக்கப்பட்டதாலேயே மிக எளிதாக மற்ற இனத்தவர்க்குத் தமிழன் அடிமை ஆகிப்போனான்.

கல்விக் கூடங்கள் நிறுவுவதையும் கல்வியின் மீதான பற்றுதலை வளர்ப்பதையும் விடுத்து, கோயில்களை எழுப்புவதிலும், பக்தியை வளர்ப்பதிலும் தமிழ் மன்னர்கள் காட்டிய அக்கறையும் கூட அவர்களின்...அவர்களைச் சார்ந்து வாழ்ந்த மக்களின் இனப்பற்று மழுங்குவதற்குக் காரணமாய் அமைந்துவிட்டது.

3ஆம் நூற்றாண்டு தொடங்கித் தமிழகத்தின் மீது பிற இனத்தவரால் பல்வேறு படையெடுப்புகள் நிகழ்ந்த போதெல்லாம், தமிழ் நாட்டை ஆண்ட தமிழ் மன்னர்களிடமிருந்து போதிய எதிர்ப்பு இல்லாத காரணத்தால், போருக்குச் சற்றும் தொடர்பில்லாத பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் கண்டதுண்டமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.

மிகக் கடுமையான மதமாற்றங்கள் வாள் முனையில் நிகழ்த்தப்பட்டன.

குழந்தைகளைக் கடத்திச் சென்று மதமாற்றம் செய்வதும், கோயில் சிலைகள் உடைக்கப்படுவதும், சிலைகள் கடத்தப்படுவதும் நிகழ்ந்தன. இத்தனை கொடுமைகளையும், ஆயிரக்கணக்கில் மக்கள் மடியும் வகையில் பஞ்சங்கள் ஏற்பட்டதையும், உயிரைக் கொள்ளை கொள்ளும் நோய்களின் தாக்குதல்களையும் தாம் நம்பும் மதங்களும் கடவுளும் ஏன் தடுத்து நிறுத்தவில்லை என்பதைச் சிந்திக்கத் தவறிவிட்டனர் தமிழ் மக்கள்.

எல்லாவற்றிற்கும் தம் கர்ம வினையே காரணம் என்பதை நம்பிய அவர்கள் எல்லை கடந்த பக்தி என்னும் சகதியிலிருந்து மீண்டெழும் முயற்சியில் ஈடுபடவே இல்லை.

ஆக, எல்லாம் மதங்கள் பார்த்துக் கொள்ளும்; கடவுள் பார்த்துக்கொள்வார் என்ற அபிரிதமான நம்பிக்கையே தமிழினம் தொடர்ந்து அடிமைப்பட்டுக் கிடந்ததற்கான...கிடப்பதற்கான காரணமாய் அமைந்துவிட்டது.

‘நம்மைப் போல், ஆசியாக் கண்டத்தில் அரிசிச் சோற்றை உண்டு வாழும் ஜப்பானியரும், தாய்லாந்தினரும், சீனரும் தொலை நோக்குடன் ஐரோப்பிய வணிக, மத, ஆட்சியாளர்களை தம் நாட்டுக்குள் அனுமதிக்கவே இல்லை’ என்பதையும், உலகில் தமிழனைப் போல் இத்தனை சொரணை கெட்ட இனம் உண்டா என்பதையும் உலக வரலாறு அறிந்த தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

                     *                                          *                                           *
இது ஒரு ‘மீள் பதிவு.
*****************************************************************************************************************************************************

தமிழறிஞர், டாக்டர் க.ப. அறவாணன் [மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்] அவர்கள் எழுதிய, ‘தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு?’ என்னும் நூலிலிருந்து [தாயறம் பதிப்பகம், திருச்சி. முதல் பதிப்பு:டிசம்பர் 2002] தொகுக்கப்பட்டது இப்பதிவு.

அறிஞர் அறவாணன் அவர்களுக்கு நன்றி.

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

‘உள்ளம் உருகுதய்யா!’...கன்னியரைக் கண்ணீர் சிந்த வைக்கும் கதை!!

வேலை கேட்டு வந்த சிறுவனிடம், “டேபுள் கிளீன் பண்ணனும். தரையைக் கூட்டித் துடைக்கணும். சொல்ற வேலையை முகம் சுழிக்காம செய்யணும். என்ன?” என்றார் ஓட்டல் உரிமையாளர் செல்வம்.

“சரிங்கய்யா.”

“எந்த ஊரு?”

“கீரனூருங்க. அப்பா செத்துப் போயி ஆறு மாசம் ஆச்சு. அம்மாவுக்குக் கூலி வேலை. அடிக்கடி உடம்பு சரியில்லாம போயிடும். ஒரு தங்கச்சிப் பாப்பாவும் இருக்கு. அம்மாவுக்கு ஒத்தாசை பண்ணனும்னு பிளஸ் டு படிப்பைப் பாதியிலேயே விட்டுட்டு வேலை தேடி வந்தேன்” என்றான் சிறுவன்.

“பாதியில் ஓடிட மாட்டியே?”

“மாட்டேங்க.”

“இங்கேயே தங்கிக்க. மூனு வேளையும் வயிறாரச் சாப்பிட்டுக்கோ. சம்பளம் எவ்வளவுன்னு அப்புறம் சொல்றேன்” என்றார் செல்வம்.

“ஐயா வந்து.....”

“தயங்காம சொல்லுப்பா.”

“நம்ம கடையில் மதியச் சாப்பாடு எவ்வளவுங்க?”

“அம்பது ரூபா.”

“எனக்குக் காத்தாலயும் ராத்திரியும் சாப்பிட்டாப் போதும். என் மதியச் சாப்பாட்டுக்கான அம்பது ரூபாயை மாசச் சம்பளத்தோட சேர்த்து நீங்களே என் அம்மாவுக்கு அனுப்பிடுங்கய்யா.”

மனம் நெகிழ்ந்தார் செல்வம். “ரொம்பப் பாசம் உள்ள புள்ளயா இருக்கே. மதியம் பட்டினி கிடக்க வேண்டாம். சாப்பிட்டுக்கோ. நான் உனக்குத் தரப்போற சம்பளத்தோட கண்டிப்பா அம்பது சேர்த்து அனுப்பிடுறேன். ரொம்பப் பசியோட இருப்பே. போய்ச் சாப்பிடு” என்று பரிவுடன் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார் செல்வம்.
============================================================================================= 




வியாழன், 17 செப்டம்பர், 2015

!‘கல்யாணமாம் கல்யாணம்!'.....புத்தம்புதிய சூப்பர் ஒரு பக்கக் கதை!!

வெட்டியாய்ப் பொழுது கழிவதைத் தவிர்க்க நான் எழுதிய கதை இது. பொழுது போகாதவர்கள் படிக்கலாம்! பிடித்திருந்தால் நண்பர்களுக்கும் பரிந்துரைக்கலாம்!!


லுவலகம் புறப்பட்ட கணவனிடம், “ஒரு மாசம் லீவு போட்டுடுங்க” என்றாள் மனோன்மணி.

“ஒரு மாசம் எதுக்கு?” என்றார் சாரதி.

“என்னங்க கேள்வி இது? நம்ம பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டோம். நல்ல நாள் பார்த்து மாங்கல்யத்துக்குக் கொடுக்கணும்; பத்திரிகை அடிக்கணும். அதைக் கொடுத்து முடிக்க ரெண்டு வாரம் போதாது. பட்டு எடுக்கக் காஞ்சிபுரம் போனா முழுசா ரெண்டு நாள் காலி. மத்த துணிமணிகளூக்கு ஈரோடோ கோயமுத்தூரோ போகணும். அப்புறம், நாள் விருந்து, வரவேற்பு, கல்யாணம் எல்லாம் இருக்கு. எல்லாம் முடிஞ்சப்புறம் தடபுடலா சம்பந்தி விருந்து நடத்தி முடிக்கணும். தலைக்கு மேல இத்தனை வேலைகளை வெச்சிகிட்டு எதுக்கு ஒரு மாச லீவுன்னு கேட்குறீங்களே, நல்லா கேட்டீங்க போங்க.” 

மூச்சு வாங்க மனோன்மணி சொல்லி முடித்தபோது வேலைக்காரி கமலம் வந்து நின்றாள்.

“ரெண்டு நாள் லீவு வேணுங்க” என்றாள்.

“எதுக்கு கமலா?” -மனோன்மணி கேட்டாள்.

“என் பொண்ணுக்குக் கல்யாணம்.”
“பொண்ணுக்குக் கல்யாணம்னு சொல்றே. ரெண்டு நாள் லீவு போதுமா?” -புரியாமல் கேட்டாள் மனோன்மணி.

“போதும்மா. பக்கத்தில் காந்தமலை முருகன் கோயில் இருக்கு. ஒரு இருபது பேர் போல பஸ் பிடிச்சிப் போறோம். சூடம் கொளுத்திச் சாமி கும்பிட்டதும் பொண்ணுக்கு மாப்பிள்ளை மஞ்சள் கயிறு கட்டினா கல்யாணம் முடிஞ்சுது. தட்டி விலாஸ் ஓட்டலில் டிஃபன். அடுத்த நாளே குலதெய்வம் கோயிலுக்குப் போய்வந்து சாந்திமுகூர்த்தம் வெச்சிட்டா என் கடமை முடிஞ்சுது” என்றாள் கமலம், நீண்டதொரு பெருமூச்சுடன்.

மனோன்மணிக்கும் சாரதிக்கும் உள்மண்டையில் ஏதோ உறைப்பதுபோல் இருந்தது!
*****************************************************************************************************************************************************

சூப்பர் கதைதானே? நன்றி.

ஒரு ரகசியம்.....

பிரபல வார இதழ்களுக்கு அனுப்பப்பட்டுக் குப்பைத் தொட்டியைச் சரணடைந்த கதை இது!!!



புதன், 16 செப்டம்பர், 2015

இந்தக் கேள்விக்கு நேற்று இன்றல்ல, இனி எப்போதும் பதில் இல்லை!!!

இந்தப்பதிவு, 18.06.2012இல் எழுதப்பட்டது. இப்போது மட்டுமல்ல, இனி எப்போதும்...கி.பி.18.06.20000000000000000000000000000000000000000000000000000000000000000012லும் [மறு...மறு...மறு...பிறவியில்!] படிக்கலாம். அப்போதும் இது உங்களைச் சிந்திக்கத் தூண்டும்! வாசித்துப் பாருங்களேன்.

 ‘கடவுள் உண்டா இல்லையா?’
மிகப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடை பெறும் இவ்விவாதத்தில், ‘அனுமானம்’ என்னும் ‘உத்தி’ யைத் துணைக் கொண்டு, வெகு எளிதாகக் கடவுளின் ‘இருப்பை’ நிலை நாட்ட முயன்று வருகிறார்கள் கடவுள் நம்பிக்கையாளர்கள்.

ஒரு மண்பாண்டத்தைப் பார்க்கிறோம். அதை வனைந்தவர், அதாவது, படைத்தவர் ஒரு குயவர் என்பதை அறிகிறோம்.

நார்களாலும் களிமண் போன்ற பிற உபகரணங்களாலும் உருவாக்கப்பட்ட , ஒரு கூட்டைக் காணுகிற போது, அதை உருவாக்கியது ஒரு பறவை என்பதை அறிய முடிகிறது.

இவையெல்லாம் அரதப் பழசான எடுத்துக் காட்டுகள்.

இன்று புதிய புதிய உதாரணங்கள் தரப்படுகின்றன.

ஓர் ஓவியத்தைக் கண்ணுறும் போது. அது தானாக உருவாகவில்லை; அதை வரைந்தவன், அதாவது படைத்தவன் ஓர் ஓவியன் என்பதையும், ஒரு கணினி தானாகத் தோன்றிவிடாது; அதைத் தோற்றுவிக்க ஒரு தொழில் நுட்ப அறிஞன் தேவை என்பதையும் மிக எளிதாக நம்மால் உணர முடிகிறது. [இப்படிப் பல எ-டுக்கள் தருகிறார்கள்]

இம்மாதிரி அனுபவங்களை விவரித்து, ஒரு பொருள் தானாக உருவாவதில்லை; அதை உருவாக்க, அதாவது, படைக்க ஒருவர் தேவை என்று பிறரை நம்ப வைக்க முயலுகிறார்கள்.

‘மண்பாண்டம், கணினி போன்றவற்றைப் போல, நாம் பார்க்கிற இந்தப் பிரபஞ்சப் பரப்பிலுள்ள ஒவ்வொரு பொருளையும், உயிரையும் பிறவற்றையும் தோற்றுவிக்க, அதாவது, படைக்க ஒருவர் தேவை’ என்ற முடிவுக்குப் பிறரை இட்டுச் செல்கிறார்கள்.

இவ்வாறு முடிவெடுப்பதைத்தான் ‘அனுமானம்’ என்பார்கள்.

‘இது இப்படி நிகழ்ந்தது. எனவே, அதுவும் இப்படித்தான் நிகழ்ந்திருக்க வேண்டும்’ என வாதிப்பது இதன் அடிப்படை அம்சம்.

ஒன்றை இங்கு மிக ஆழமாக மனதில் பதித்தல் அவசியம்.

அனுமானம் என்பதும் ஒருவகை நம்பிக்கைதான். எல்லா அனுமானங்களும் ‘உண்மை’ ஆகிவிடா. காரணங்கள் பல உள்ளன.

அவற்றில் ஒன்று............

ஓவியத்தைப் பார்த்ததும், அதை வரைந்தவர் ஓர் ஓவியர் என்று முடிவெடுப்பதிலேயே தவறு நிகழ்கிறது.

ஓர் ஓவியர், ‘தானே தனியராய்’ வெறுங்கைகளுடன் அதைப் படைத்தாரா?

அதை உருவாக்க, வண்ணம், தூரிகை, தாள் போன்ற மூலப் பொருள்கள் தேவையாயிற்றே. [செய்பவன்,கருவி,காரியம் என்றெல்லாம் நம் முன்னோர்கள் இது பற்றி ஆய்வு நிகழ்த்தியிருக்கிறார்கள்]. இங்கே, படைப்புக்கு அடிப்படைத் தேவையாக இருக்கும் பொருள்கள் மற்றும் சாதனங்களை ‘மூலப் பொருட்கள்’ எனக் கொள்வோம்.


மூலப் பொருள்களை வழங்கியவர்களும் படைப்புக்குத் துணைக் காரணமாக இருக்கையில், ஓவியத்தை ஓவியன் மட்டுமே ‘படைத்தான்’ என்று முடிவெடுப்பது தவறல்லவா?

ஒரு பொருளின் தோற்றம் பற்றிச் சிந்திக்கும் போது, அதை ‘ஒருவர் படைத்தார்’ என்று முடிவெடுப்பதில் நம்மவர்களுக்கு ஏன் இத்தனை ஆர்வம் என்பது புரியாத புதிராக இருக்கிறது!

அவ்வாறு முடிவெடுப்பதால் விளையும் பயன் என்ன என்பதும் விளங்கவில்லை.

‘வெளி’யிலுள்ள அத்தனை பொருள்களையும் உயிர்களையும் பிறவற்றையும் கடவுள் என்றுஒருவர் படைத்தார் என்று அனுமானிக்கும் போதும் கடவுள் நம்பிக்கையாளர்கள் இதே தவற்றைத்தான் செய்கிறார்கள்.

அனைத்தையும் உருவாக்குவதற்கான ‘மூலப் பொருள்களை அவருக்குப் பிறர் வழங்கினார்கள்; அல்லது, அவை கடவுளைப் போலவே ‘என்றும் இருப்பவை’ எனக் கொண்டால்....................

‘முழு முதலானவர்’, ‘எல்லாம் வல்லவர்’ எனப்படும் அவரது தகுதிகளுக்குப் பங்கம் நேர்ந்துவிடும் என்பதால்..........

மூலப் பொருள்கள் அனைத்தையும் அவரே படைத்துக்கொண்டார் சொல்லியிருக்கலாம். அது ஏற்புடையதுதானா? “அல்ல” என்பதே நம் பதில்.

தானே தனக்குள் இருந்து அவற்றைப் பிரித்து எடுத்துக் கொண்டார் என்று சொல்லிச் சமாளிக்கலாம்.

இது சாத்தியம் எனின்.....இதுவே உண்மை எனின், அனைத்துப் பொருள்களும், உயிர்களும் பிறவும் முழுக்க முழுக்கக் கடவுளின் பிரதிகள் அல்லது கூறுகள் என்றாகிறது.

நீங்களும் நானும் கடவுளின் பிரதிகள்!

நாம் சிரித்தால் அவரும் சிரிப்பார். நாம் அழுதால் அவரும் அழுவார். நாம் அழுதுகொண்டே சிரித்தால் அவரும் அவ்வாறே செய்வார்.

நினைக்கும் போது மனம் பேரானந்தத்தில் மூழ்கித் தவிக்கிறது.

ஆனாலும் ஒரு சந்தேகம்.....................................

அடுக்கடுக்கான துன்பங்கள் அலை அலையாய் வந்து நம்மைத் தாக்கிச் சிதைக்கிற போது, கடவுளின் மறு பிரதியான நாம் வேதனையில் கிடந்து துடிக்கிறோமே, அது ஏன்???

ஏன்? ஏன்? ஏன்?

எல்லாம் அவரின் ‘திருவிளையாடல்’ என்கிறால்..........

இந்தத் திருவிளையாடல் இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தொடரும்?

விடை தெரிந்தவர் யார்?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


சனி, 12 செப்டம்பர், 2015

மதம்..........உயிர் பறிக்கும் ‘வெறி நோய்’!!!

இஸ்லாமியராகப் பிறந்து, சிறிதும் கடவுள் நம்பிக்கை அற்றவராக வாழ்பவர் கவிஞரும் பேராசிரியருமான இன்குலாப் அவர்கள். மனித மனங்களைத் தூய்மைப்படுத்தவே கதைகளும் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதினார். கீழ்வருவது, சிறுகதை வடிவில் அமைந்த அவரின் மிகச் சிறந்த கட்டுரைகளில் ஒன்று. படியுங்கள்.


திருப்பாலைக்குடி என்ற கிராமத்திலிருந்து பஸ்ஸில் ஏறினேன், என் மனைவியோடும் மகளோடும். மூன்று பேர் ஓடிவந்து ஏறவும் பஸ் புறப்படவும் சரியாய் இருந்தது.

அவர்களுக்கு உட்கார இடமில்லை; நின்றார்கள். ஒரு நடுத்தர வயதுக்காரர் எங்களை நோட்டமிட்டார்.

என் மனைவியின் நெற்றியில் பொட்டில்லை. மகளுடைய நெற்றியிலும்தான்.

அடுத்து நின்றவரிடம் உரக்கச் சொன்னார்:

“இந்த முஸ்லீம்களைக் கண்டாலே வெட்டணும்.”

பலர் அதைக் கேட்டார்கள். பஸ் இரைச்சலில் அமுங்கிவிடாத தொனியில்தான் அவர் அதைச் சொன்னார்.

சிறிது தயக்கத்திற்குப் பிறகு கேட்டேன்: “முஸ்லீம்களை ஏன் வெட்டணும்?”

“பக்கத்துக் கிராமத்தில் ஒரு பொம்பளையைக் கெடுத்துக் கொலை பண்ணிட்டானுவ.”

“ரொம்பக் கொடுமை. இதைச் செஞ்சது முஸ்லீம்தான்கிறதுக்கு என்ன ஆதாரம்?”

“கேள்விப்பட்டோம்.”

“கேள்விப்பட்டதை வச்சி இப்படிப் பேசலாமா?”

அமைதி.

“ஒரு பொம்பளையை மானபங்கப் படுத்தறவன் முஸ்லீமோ இந்துவோ எவனா இருந்தாலும் வெட்டணும்னுதான் நான் சொல்லுவேன். முஸ்லீமை வெட்டணும்னு நீங்க சொல்றது என்ன நியாயம்?”

அவர் சொன்னார்: “நீங்க சொல்றது சரி. எல்லாரும் சொல்றாங்கன்னு நான் வார்த்தையை விட்டுட்டேன்.

‘அண்ணன், தம்பி, மாமன், மச்சான், வாப்பா, காக்கா’ என்று நாங்கள் வளர்த்து வந்த உறவுகளுக்கு என்ன ஆனது? எனக்கு ஒன்றும் புரியவில்லை.

எனது மண்ணில் இப்பொழுது வேகமாகப் பரவுவது...மத நோய்.

எனது ஊரில் பல தெருக்களில் சாக்கடை தேங்குகிறது. முக்குக்கு முக்கு குப்பை நாறுகிறது. குடிப்பதற்குப் போதுமான தண்ணீர் இல்லை. ஒழுங்கான மருத்துவ வசதி இல்லை. மின் விளக்குகள் சிம்னி விளக்குகள் போல் அழுது வடிகின்றன, விரல்விட்டு எண்ணக்கூடிய சில செல்வந்தர்களின் வீடுகள் தவிர. இந்த அவலம் எல்லாத் தெருக்களிலும் இருக்கிறது. இதில் இந்து முஸ்லீம் என்ற பேதமில்லை.

இத்ற்காக யாரும் போராட முன்வரவில்லை. ஆனால், மதத்தைக் காப்பதற்காக மட்டும் வன்முறை வெறியாட்டம் தூண்டி விடப்படுகிறது........

..........கொஞ்ச நாட்கள் முன்பு, எங்கள் ஊரிலும், நான் ஊரில் இல்லாதபோது, இப்படியொரு அநாகரிகம் நடந்து ஊர் அமளிப்பட்டு, துப்பாக்கி புகைந்தது.  சில நாள் கழித்து என் மருமகன் சொன்னார்: 

“கலவரம் தொடங்கினவுடனே எங்களை அந்த ஆசாரி அப்பு தன் வீட்டுக்குள்ளே கூட்டிகிட்டுப் போய்ட்டாரு. அதே மாதிரி சில முஸ்லிம் நண்பர்களுக்கும் இந்துக்கள்தான் புகலிடம் கொடுத்தாங்க. சில இந்துக்களை சில முஸ்லிம்கள் தங்கள் வீடுகளுக்குள்ளே கூட்டிட்டுப் போய்ப் பாதுகாத்தாங்க.”

“அப்போ யாரெல்லாம் அடிச்சிகிட்டது?” என்று என் மாப்பிள்ளையிடம் கேட்டேன்.

“சமூக விரோதிகள். அவங்களுக்கு இது ஒரு சாக்கா அமைஞ்சிட்டுது” என்றார் மாப்பிள்ளை.

ஒரு வெறியாட்டத்துக்கு இடையிலும் பலர் மனிதர்களாய் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.

ccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccc











செவ்வாய், 8 செப்டம்பர், 2015

‘ஆபாச’ வலைத் தளங்களின் [porn sites] அசுர வளர்ச்சி! மனித குலம் தப்பிப் பிழைக்குமா?!

ஒரு வினாடியில், 28258 வலைத்தளப் பயனர்கள் ‘ஆபாசத் தளங்களில்’ ஐக்கியமாகிறார்கள்! 42.7% பேர் [இதெல்லாம் பழைய கணக்கு] இவற்றின் வாடிக்கையாளர்கள்!! ஆ.வ. தளங்கள் தடை செய்யப்பட்டால், இவர்களில் பாதிப்பேருக்காவது பைத்தியம் பிடிக்கும்!!



இணையத்தில் புழங்குகிற எவரும் ‘ஆபாசத் தளங்கள்’ பற்றி அறியாமலிருக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும், “ஆபாசத் தளமா? சே...” என்று நம்மில் முகம் சுழிப்பவர்கள் பலர்.

“அதிலென்ன தப்பு? அது மாதிரி தளங்களில் ஒரு ரவுண்டு வந்தா, அன்னிக்கிப் பூரா புத்துணர்ச்சியோட செயல்பட முடிகிறது” என்பாரும் உளர். யாரோ denwuld னு ஒரு வெள்ளை மனசுக்காரர் சொல்கிறார்:

By denwuld on 6/18/2010 1:32:22 AM Rating: 1
I don't think that its wrong.there are so many legal porn sites on internet, who gave that kind of services to their customer.i read some articles on internet about pornography who said that its a good option to keep our mind fresh.i don't know how it right but some time pornography is ok.
http://twitter.com/denwuld

“addiction to internet pornography is increasing at an outstanding rate"[www.familysafer.com] என்று எச்சரிக்கை செய்பவர்களும் இருக்கிறார்கள்.

“there are more porn sites than there are stars in the sky" என்று கிண்டலடிக்கவும் செய்கிறார்கள்.

'porn is the life blood of the internet' என்கிறார் ஓர் ஆ.வ. தள ஆய்வாளர்.

ஒட்டு மொத்த வலைத்தளங்களில், 37% பக்கங்களை, pornography எனப்படும் ஆபாசப் பதிவுகள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன என்பது ஒரு புள்ளிவிவரம்.[dailytech.com]
                              +                                      +                                                      +

அடுத்து வரும் தகவல், நம்மை வாய் பிளக்க வைக்கிறது.



Pornography Time Statistics
Every second - $3,075.64 is being spent on pornography
Every second - 28,258 Internet users are viewing pornography
Every second - 372 Internet users are typing adult search terms into search engines
Every 39 minutes: a new pornographic video is being created in the United States [www.extrmetech.com]

Internet Pornography Statistics

Pornographic websites 4.2 million (12% of total websites)
Pornographic pages 420 million
Daily pornographic search engine requests 68 million (25% of total search engine requests)
Daily pornographic emails 2.5 billion (8% of total emails)
Internet users who view porn 42.7%
Received unwanted exposure to sexual material 34%
Average daily pornographic emails/user 4.5 per Internet user
Monthly Pornographic downloads (Peer-to-peer) 1.5 billion (35% of all downloads)   [answers. yahoo.com]

[அம்மாடியோவ்.....இதெல்லாம் நிஜமா!!!]
        
             +                                +                           +
கூகிளின் அரிய தொண்டு!

now google; "google" you get 1,990,000,000.... as you can seee porn is not the number one main part of the internet, it can still be high up but rather, websites about google dominate all other factors...[answers.yahoo.com]

ஆஹா.....இதிலும் கூகிள்தான் நம்பர்: 1 !!

             +                         +                       +
                                       

இம்மாதிரி, ’hot...hotter...hottest’ தளங்களால் விளையும் பாதிப்புகள் என்ன? ஆங்கிலத்திலேயே படியுங்கள்.


‘Porn can alter attitudes about sex. One study showed that when exposed to large amounts of porn, both males and females came to view things like casual or extramarital sex as more acceptable. Porn can also make people dissatisfied with their real-life sex partners' appearance and performance. Porn can create unrealistic expectations about sex. Aggressive porn, which typically shows violence against women, can make males exhibit more aggressive behavior toward women in real life. Aggressive porn that shows women giving into and even enjoying things like rape can lead to the attitude that coercion is not so offensive and that rape victims "asked for it". There are a few additional disadvantages as well. For example, browsing porn sites at work could get you into trouble.’

ஆபாசத் தளங்களில், ‘படு கவர்ச்சி’க் கன்னிகளைக் கோடிகள் கொடுத்து நடிக்க வைக்கிறார்கள். அயல் நாடுகளில், இதையே தொழிலாகக் கொண்ட ‘விபச்சாரர்’களை உறவாடவிட்டு, நவீன தொழில் நுட்பங்களைக் கையாண்டு பிரமிக்க வைக்கிறார்கள்.

இது, நடைமுறை சாத்தியமே இல்லாத எதிர்பார்ப்புகளையும், நிறைவேறாத ஆசைகளையும் மனதில் திணிக்கிறது; கட்டுப்படுத்தவே முடியாத காம வெறியைத் தூண்டுகிறது.

இதனால், காம இன்பமே வாழ்க்கை என்ற எண்ணம் மனதில் வேரூன்றுகிறது.  அதைத் தேடி நாயாய்...பேயாய் அலைவதில், மன அமைதி நிரந்தரமாய்த் தொலைந்து போகிறது.

கீழ்வரும் ஒரு கருத்துரையையும் படியுங்கள்.

'I think the disadvantages of porn are the fact that you wife or gf might not be as pretty as the women in the pornography. Also your wife or gf might not have the same skills in the bedroom as the women in the porno film. Also your wife or girlfriend might not be willing to do all of the things that the women do in porno. Kinda sad because the women in the videos do it for money, but the wife / gf do it for love i mean if your wife doesn't want to do it, it makes it seem like money is more important that love. Also porno is to please the man and fulfilling fantasies, sometimes the wife just wants to get it over with or does stuff just 2 get things in return. Kinda sad, plus porno u can just turn it off when your done, a wife u can't u gotta keep the movie playing 24/7 and you have to deal with the drama afterwards which can be a good or a bad thing. I am trying 2 stay away from porno it gives me false hopes of happiness, and every time i watch it i feel guilty because i think i try 2 hold my girlfriend 2 false expectations. Especially when she makes comments like i'm not a porn star.' 
பணத்துக்காக ஒரு ‘நீலப்பட நாயகி’ செய்வதையெல்லாம் ஒரு மனைவியால் செய்ய முடியுமா? அது முடியாத போது, கணவன் மனைவி உறவு, உடைந்த கண்ணாடியாய்ச் சிதறிப் போகும்தானே?

                                  +                                          +                                          + 


ஆக, ஆபாசத் தளங்களின் எண்ணிக்கையும், அவற்றில் உலா வருவோரின் எண்ணிக்கையும் பெருகி வரும் நிலையில், இதற்கான தீர்வுதான் என்ன?

’ஒரு காலக்கட்டத்தில், குடும்ப உறவுகள் சிதைந்து,  பெரும்பாலான மனிதர்கள் சுயநலமிகளாய் மாறிப்போவார்கள்.. செக்ஸ் அடாவடித்தனங்களால், சச்சரவுகளும், மோதல்களும் அதிகரித்து, மிகப் பெரிய அழிவை மனித குலம் சந்திக்கும். அதன் மூலம் பாடம் கற்றுப் படிப்படியாய்த் திருந்தும்.’ என்றிப்படி அனுமானிப்பவர்கள் இருக்கிறார்கள்.

’இப்படியொரு அசாதாரண நிலை உருவாவதற்குள், உலக நாடுகள் விழித்துக்கொள்ளும். பெரும்பாலான் இஸ்லாமிய நாடுகளில் தடை விதித்திருப்பது போல, உலகின் அனைத்து நாட்டு அரசுகளும் ஆபாசத் தளங்களுக்குத் தடை விதிக்கும் காலம் வரும். எப்போதும் போல உலகம் இயங்கிக் கொண்டிருக்கும். கவலைப்பட ஒன்றுமில்லை’ என்று நம்பிக்கை தெரிவிப்பவர்களும் இருக்கிறார்கள்.


யார் எதைச் சொன்னாலும், சமூக நலனில் அக்கறை கொண்டவர்கள், ஆபாசத் தளங்களின் வளர்ச்சி கண்டு அஞ்சவே செய்கிறார்கள். 

இனி என்னவெல்லாம் நடக்கும் என்பதை ஊகம் செய்வதும் அவ்வளவு எளிதல்ல.

முடிவாக, ஒரு உபாயத்தை முன் வைக்க என் மனம் விரும்புகிறது.

அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து ஆபாசத் தளங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்.

தடை நீடித்தால்..........

திருமணம் செய்வதற்கான சூழல் இல்லாதவர்களும், ஆ.வ.தளங்களுக்கு அடிமையாகிப் போனவர்களும் வடிகால் தேடுவார்களே, என்ன செய்வது?

என்ன செய்வது?

‘சிவப்பு விளக்கு’த் தொழிலுக்கு அரசுகள் அனுமதி வழங்குவது போல, ‘சிவப்பு விளக்கு browsing centre' களுக்கு அனுமதி வழங்குவது பற்றிப்  பரிசீலனை செய்யலாம்.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

14.04.2013 இல் எழுதப்பட்ட பதிவு!