எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 3 ஜனவரி, 2018

'அது'க்குத் 'தோதான' வேறு இடம் இல்லையா?!

ப்போது எனக்கு முப்பது வயது.

இயல்பாகவே, இறை வழிபாட்டில் ஈடுபாடு இல்லாத நான், அன்பு மனைவியின் தட்ட முடியாத வேண்டுதலின் பேரில், தன்னந்தனியனாகத் திருச்செங்கோடு மலைக் கோயிலுக்குச் செல்ல நேர்ந்தது.

வாகனங்கள் செல்லுவதற்கான சாலை வசதியெல்லாம் அப்போது இல்லை. படிகளில் பயணம் செய்துதான் மலை உச்சியிலுள்ள மாதொருபாகனைத் தரிசிக்க வேண்டும்.

கால் வலியைச் சற்றே குறைக்க, படிகளை எண்ணிக்கொண்டே ஏறுவது ஒருவகை நம்பிக்கை.

“ஒன்னு...ரெண்டு...மூனு...”

நினைவு சிதறாமல் எண்ணியபடி மேலே சென்று கொண்டிருந்தேன்.

எண்ணிக்கை சில நூறுகளைக் கடந்தபோது.....

“ம்...ம்...ம்...விடுங்க.” -மனதைக் கிறங்கடிக்கும் இளம் பெண்ணின் சிணுங்கல் ஓசை கேட்டது.
அதிர்ச்சியுடன், பார்வையைச் சற்றே உயர்த்திய போது, களைப்பாறுவதற்கான ‘ஓய்வு மண்டபம்’ கண்களில் பட்டது. மலையின் உச்சி வரை இவ்வகை மண்டபங்கள் உள்ளன.

எதிர்ப்பட்ட மண்டபத்தின் உள்ளே, ஒரு வாலிபனின் அரவணைப்பில் ஓர் இளம் பெண் நெளிந்துகொண்டிருந்தாள். அவளின் கன்னங்களை வருடி, இதழ்களில் முத்தமிடும் கட்டத்தை அவன் அணுகிவிட்டிருப்பது தெரிந்தது..

படி எண்ணுவதை அறவே மறந்தேன். அடுத்த அடி வைக்கவும் மனமில்லாமல், நின்ற இடத்தில் நின்ற போது.....

"இங்கே வேண்டாம். 'அந்த' மண்டபத்துக்குப் போயிடலாம்” என்று அவள் சொல்ல, அவர்கள் இடம்பெயர்ந்தார்கள்.

“இவர்களின் காமக் களியாட்டத்துக்குப் புனிதமான இந்தக் கோயில்தானா கிடைத்தது” என்று முணுமுணுத்துக்கொண்டே, சற்று இடைவெளி கொடுத்து அவர்களைப் பின்தொடர்ந்தேன்.

வழியில், சரிவான பாறையில் வடித்தெடுத்த அந்தப் பிரமாண்ட ஐந்து தலை நாகத்துக்குக் குங்குமப் பொடி தூவினேன்[மனைவியின் ஆணைப்படி!].

பக்கவாட்டில், அறுபது அறுபது விளக்குகள் கொண்ட அறுபதாம் படியைக் கடந்த போதும், கை நீட்டும் பிச்சைக்காரர்களுக்குச் சில்லரை போட்ட போதும் என் பார்வை அந்த இணையை விட்டு விலகாமலே இருந்தது.

“ஒரு சாமி கோயிலில், தட்டுறதும் தொட்டுத் தடவுறதும் இடிக்கிறதுமா ஜல்சா பண்ணிட்டுப் போறான். கலி முத்திப் போச்சி.” -இறங்கி வந்துகொண்டிருந்த கும்பலில் ஒரு பெரியவர் மனம் நொந்து சொன்னது கேட்டது.

தொடர்ந்த மலையேறும் பயணத்தில், 'தேவரடியார் மண்டபம்’ குறுக்கிட்டது. அதனுள் நுழைவதைத் தவிர்த்துப் பக்கவாட்டுப் பாதையில் செல்வதே பக்தர்களின் வழக்கம்[இதற்கு ஒரு கதை உண்டு].

அந்த இளஞ்ஜோடியோ, தயங்காமல் அதனுள் நுழைந்தது.

உள்ளேயிருந்து வந்த தொடர்ச்சியான ‘இச்...இச்...இச்...” ஓசை என் செவிகளில் பாய்ந்து என்னைச் சுட்டெரித்தது.

“ஈனப் பிறவிகள்” என்று மனத்தளவில் சாடிக்கொண்டே நகர முற்பட்டபோது, எனக்குப் பின்னாலிருந்து பேச்சுக் குரல்.

“தள்ளிகிட்டு வந்திருக்கான்.”

“இளசு...புதுசு.”

”நல்ல சான்ஸ். வாங்கடா.”

பக்கவாட்டுக் குன்றுகளின் மறைவிலிருந்து நான்கு முரடர்கள் வெளிப்பட்டார்கள்.

தண்ணியடித்துவிட்டுக் களவாடிய பணத்தை வைத்துச் சூதாடும் கும்பல் அது. குன்றுகளுக்கும் புதர்களுக்கும் இடையே உள்ள மறைவிடங்கள்தான் அவர்களின் பாசறை.

என்னையும் தாக்கக்கூடும் என்பதால், அவர்களின் பார்வையில் தட்டுப்படாமலிருக்க, மண்டபத்தைக் கடந்து, படிகளை ஒட்டிய ஒரு பெரிய குன்றின் மறைவில் பதுங்கி, நடக்கவிருப்பதைக் கண்காணித்தேன்.

நான் பயந்தது போல ஏதும் நடந்துவிடவில்லை.

ரவுடிகளின் காலடிச் சத்தம் கேட்டோ என்னவோ, அந்த ஜோடி மண்டபத்திலிருந்து வெளியேறி, விரைந்து படியேறியது.

ரவுடிகளும் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள்.

“புத்தி கெட்ட புள்ளைகளா இருக்கே. இவர்களின் இன்ப விளையாட்டுக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா?” என்று அலுத்துக் கொண்டேன்.

அன்று பக்தர்களின் வருகையும் மிகக் குறைவாக இருந்தது. அவர்களிலும் இளைஞர்களைக்  காண முடியவில்லை. அச்சத்தில் என் ஒட்டுமொத்த உடம்பும் லேசாக நடுங்கத் தொடங்கியது. நீண்ட இடைவெளி கொடுத்து, மிக மெதுவாகப் படிகளில் பயணித்தேன்.

அந்த இளஞ்ஜோடிக்கு நேரப்போகும் ஆபத்தைத் தாறுமாறாகக் கற்பனை செய்துகொண்டே படியேறிய போது மேலேயிருந்து கூச்சல் கேட்டது.

கோயிலுக்குள் இருந்த ஒரு கும்பல், மலடிக் குன்றை நோக்கி விரைந்துகொண்டிருப்பது கண்டு, அவர்களுடன் என்னையும் இணைத்துக் கொண்டேன்.

குன்றின் அருகே....

காதலர்களைக் காணோம்; ரவுடிகளையும் காணோம்.

நாற்பது வயது மதிக்கத் தக்க ஒருவர், தன்னைச் சூழ்ந்திருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

“நாங்க பத்து பேர் குன்றைச் சுத்திட்டுத் திரும்பும் போது, அந்த ஜோடி எங்களைக் கடந்து போச்சு. குழந்தைப் பேறு இல்லாததால, மலடிக் குன்றைச் சுத்தப் போறாங்கன்னு நினைச்சோம்; அங்கிருந்து குதிச்சித் தற்கொலை பண்ணிக்குவாங்கன்னு எதிர்பார்க்கல."

சொல்லிவிட்டு, அவர்கள் விட்டுச் சென்ற கடிதத்தைப் படித்தார்: “வெவ்வேறு சாதியில் பிறந்துவிட்ட எங்கள் காதலுக்கு, அர்த்தமில்லாத கட்டுப்பாடுகள் கொண்ட இந்தச் சமுதாயத்தில் இடமில்லை. கொஞ்ச நேரமேனும் , இந்தச் சமுதாயத்தைத் துச்சமாக மதித்து நடந்து கொண்டதில் ஒருவித அற்ப சந்தோசம். அந்தச் சந்தோசத்துடன் இந்தக் கேடுகெட்ட உலகத்தைவிட்டே போகிறோம்.”

“இவர்களுக்குக் காமக் களியாட்டம் புரிய வேறு இடம் இல்லையா?” என்று எரிச்சலுடன் முன்பு முணுமுணுத்த வார்த்தைகளை நெஞ்சுருக நினைத்துப் பார்க்கிறேன்.

ஆண்டுகள் பல உருண்டோடிவிட்ட நிலையிலும், இந்தச் சம்பவம் என் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றுவிட்டது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

குறிப்பு; மலையின் உச்சியில், செங்குத்தான பகுதியில் அமைந்துள்ளது ‘மலடிக் குன்று’.

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் அதை வலம் வந்தால் பலன் கிடைக்கும் என்பது திருச்செங்கோடு வட்டார மக்களின் நம்பிக்கை.

அது சாத்தியமோ இல்லையோ, காதலில் தோல்வியுற்றவர்களும், பிற தோல்விகளைக் கண்டவர்கள் பலரும் அங்கிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டது மிகப் பெரிய சோகம்.

நான் மலைக் கோயிலுக்குச் சென்று மிகப்பல ஆண்டுகள் ஆயிற்று. இப்போதைய நிலவரத்தை  அறியேன்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++











துக்ளக் குருமூர்த்தியின் குரூர புத்தி!

கீழே, 10.01.2018 'துக்ளக்' இதழில் வெளியான அட்டைப்படக் 'கருத்துப் படத்தைக்[கார்ட்டூன்]' கவனியுங்கள்.
'.....ஆன்மீகம், நேர்மை, ஒழுக்கத்திற்கு இங்கு இடமில்லை. இது பெரியார் மண்' என்று திராவிடர் கழக வீரமணி அவர்கள் சொல்வதாகச் சொல்கிறது கருத்துப்படம்.

உண்மையில் சொல்பவர்.....?

குறுக்குப் புத்தியும் குரூர புத்தியும் கொண்ட துக்ளக் குருமூர்த்தி.

இறுதி மூச்சு உள்ளவரை, தமிழ் இனத்துக்காகவும், மூடநம்பிக்கை ஒழிப்புக்காகவும் தன்னை அர்ப்பணித்து, நேர்மையுள்ளவராகவும் ஒழுக்கசீலராகவும் வாழ்ந்து காட்டிய பகுத்தறிவுப் பகலவன் பெரியாரை இகழ்ந்து பேசிக் குதூகலிக்கும் துணிவை இந்த ஆள் பெற்றது எப்படி?

"பெரியாரைச் செருப்பால் அடிப்பேன்" என்று ஒரு 'பொறுக்கி' சொன்னானே, அப்போதே அவனுக்கும் அவன் போன்றவர்களுக்கும் உரிய பதிலடி தராமல் தமிழர்கள் வேடிக்கை பார்த்ததே காரணம் ஆகும்.

தமிழர்கள் நன்றியுணர்ச்சி உள்ளவர்கள். பெரியார் தம் இனத்துக்கு ஆற்றிய தொண்டினை என்றென்றும் மறவாதவர்கள்.

பெரியாரை அவமதிக்கும் துக்ளக் குருமூர்த்தியின் இந்த இழி செயல் கடும் கண்டனத்திற்குரியது.

பெரியாரைப் போற்றும் தன்மானத் தமிழர்களும், அவர் பெயரில் கட்சிகள் நடத்தும் தோழர்களும் ஆற்றவிருக்கும் எதிர்வினை என்ன?
_____________________________________________________________________________________