Friday, June 30, 2017

‘பாசப் பைத்தியங்கள்!’...கதை உலகில் ஒரு புரட்சி!!

படித்தவுடன் உங்களுக்கும்  என்னைக் கடிந்துகொள்ளத் தோன்றும். சிறிதே சிந்தித்தால் பாராட்டவும் தோன்றக்கூடும்! அன்று[13.08.2012] இதை வாசித்தவர் எண்ணிக்கை வெறும் 90 மட்டுமே!!

இனி அது ‘தொள்ளாயிரம்’ ஆக அதிகரிக்குமா? இல்லை, 9 ஆயிரமா? இல்லையில்லை, 9 லட்சமா?! இல்லையில்லையில்லை, 9.....!!!
கடவுளும் ஒரு கருணைக் கொலையும்

வீடு திரும்பிய தந்தையும் தாயும் தன்னருகே வந்து அமர்ந்ததும் சந்திரன் கேட்டான்: “வக்கீலைப் பார்த்தீங்களா?”

அவன் அப்பா மட்டும் “இல்லை” என்பதாகத் தலையாட்டினார்.

“அப்படீன்னா இவ்வளவு நேரமும் எங்கே போயிருந்தீங்க?”

அப்பா தலை குனிந்தார். அம்மா சொன்னார்:  "கோயிலுக்கு.”

“எதுக்கு?”

“ஏம்ப்பா இப்படிக் கேள்வி கேட்டு எங்களை நோகடிக்கிறே? உனக்கு நோய் குணமாகணும்னு வேண்டிக்கத்தான் போனோம்.”

“நான் நோய்வாய்ப்பட்ட நாளிலிருந்து கோயில் கோயிலாப் போய் வர்றீங்க. பலன் கிடைச்சுதா?”

“.......... ஏதோ கொஞ்சம் நிம்மதி கிடைக்குது.”

“நிம்மதி கடவுளை வேண்டிக்கிற உங்களுக்குத்தான். தீராத நோயால் பாதிக்கப்பட்ட எனக்கல்ல. என் உடம்புல எதிர்ப்புச் சக்தி ரொம்பவே குறைஞ்சுட்டுது. நோவு அதிகரிச்சிட்டே போகுது. டாக்டர்கள் கை விட்ட என்னை எந்தக் கடவுளும் காப்பாத்தாதுன்னு திரும்பத் திரும்பச் சொல்லிட்டிருக்கேன். காதுல போட்டுக்காம, கடவுள் கைவிட மாட்டார் மாட்டார்னு கண்ட கண்ட கோயிலுக்கெல்லாம் போறீங்க; தலைமுடி வளர்த்துத் தாடி மீசை வெச்சவன் காலில் எல்லாம் விழறீங்க. இந்த நிலைமை நீடிச்சா நான் சாகறதுக்குள்ளே உங்க ரெண்டு பேருக்கும் பைத்தியம் பிடிச்சுடும்.”

“அப்படியெல்லாம் சொல்லாதேப்பா.” -குரல் தழுதழுக்கச் சொன்னார் அப்பா.

“சொன்னா என்ன? நடக்கக் கூடாததையா நான் சொன்னேன்? புருஷனை இழந்த எதுத்த வீட்டு அமுதா மாமியோட பத்து வயசுப் பொண்ணு ஆறு மாசம் முந்தி காணாம போச்சு. போலீசில் சொன்னாங்க; எல்லாப் பேப்பரிலும் விளம்பரம் குடுத்தாங்க. பொண்ணு திரும்பக் கிடைக்கல. கண்ட சாமியார் காலில் எல்லாம் விழுந்தாங்க. கோயில் கோயிலா அலைஞ்சாங்க. பலன் இல்ல. மனசைத் தேத்திக்கணும். செய்யல. அது அவங்களால் முடியலேன்னும் சொல்லலாம்.  “கடவுளே என் மகளை மீட்டுக் கொடு..... மீட்டுக் கொடுன்னு சோறு தண்ணி இல்லாம தியானத்தில் மூழ்கிக் கிடந்தாங்க. என்னாச்சு?..............

..............என் மகளைப் பார்த்தீங்களா, பார்த்தீங்களா சாமி’ன்னு எதிர்ப்பட்டவங்களை எல்லாம் விசாரிச்சுட்டுப் பைத்தியமா அலைஞ்சிட்டிருக்காங்க...........”

கொஞ்சம் இடைவெளியில் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்ட சந்திரன் தொடர்ந்தான். “நீங்களும் அந்த நிலைக்கு ஆளாயிடக் கூடாதுன்னுதான் ரெண்டு பேரையும் வக்கீல்கிட்டே அனுப்பினேன்” என்றான்.

அம்மா சொன்னார்:  “வக்கீல் மூலமா, உன்னைக் கருணைக் கொலை செய்யக் கோர்ட்டில் அனுமதி வாங்கணும்னு சுலபமா சொல்லிட்டே. இதுக்கு உன்னப் பெத்த எங்க மனசு இடங்கொடுக்குமா ராசா?”

“இடம் கொடுக்காதுதான். வேற வழி இல்லியேம்மா. இப்போ ஓரளவுக்கு நோவைத் தாங்கக் கூடிய சக்தி எனக்கு இருக்கு. நாளாக ஆக, தாங்குற சக்தி குறையக் குறைய வேதனை அதிகமாகும். அப்புறம் அணு அணுவா துடிச்சிச் சாக வேண்டிய பரிதாப நிலைக்கு நான் ஆளாயிடுவேன். அப்படியொரு நிலைக்கு ஆளாகாம இப்பவே நிம்மதியாச் செத்துடணும்னு ஆசைப்படுறேன். என் விருப்பத்தை இனியாவது நிறைவேத்தப் பாருங்க...........

...........அப்பா, அம்மா வேண்டாம். ஒரு தாய் மனசு எந்த வகையிலும் இதுக்கெல்லாம் சம்மதிக்காது. நீங்க மட்டுமே போங்க. நான் சொன்ன லாயரைப் பாருங்க. செய்ய வேண்டியதைச் சீக்கிரம் செஞ்சி முடிங்க. நான் சீக்கிரமா சாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கேன்” என்றான் சந்திரன்.

பொங்கி வரும் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு, இயந்திர கதியில் நகர முற்பட்ட தந்தையிடம்,  “அப்பா, மனசு மாறி மறுபடியும் கோயிலுக்குப் போயிடாதீங்க. என்னை நிம்மதியா சாகடிக்க டாக்டர்களால்தான் முடியும்; கடவுளால் முடியாது” என்றான் மெல்லிய வேதனை கலந்த புன்முறுவலுடன்.

அதிகம் பேசிவிட்ட களைப்பில் கண்மூடி மயக்கத்தில் ஆழ்ந்தான் சந்திரன்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Thursday, June 29, 2017

“அவன் அயோக்கியன்! அவர்கள் அயோக்கியர்கள்!!”

திடீர் விபத்துகள், அவ்வப்போது நிகழும் இயற்கைச் சீற்றங்கள், தீராத நோய்களின் தாக்குதல்கள், எதிர்பாராத மரணங்கள், எதிரிகளால் விளையும் ஆபத்துகள் போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு ‘விதி’யே காரணம் என்று நம் மூதாதையர் பலரும் நம்பினார்கள்; இன்று நம்புவோர் எண்ணிக்கையும் பெருமளவில் உள்ளது.

இந்த நம்பிக்கை சரியானதா? 
மரணம் பல்வேறு வடிவங்களில் நம்மை அரவணைக்கிறது.

ஒன்று:
சக மனிதர்களாலோ [கொலை, தற்கொலைக்குத் தூண்டுதல் என்றிப்படி] ஏனைய பிற உயிரினங்களாலோ[யானை மிதித்து, நாய்கள் கடித்து .....] இறப்பு நிகழலாம். இதற்கு எவரும் விதிவிலக்கானவர் அல்லர். சூழல் காரணமாக எவருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.

இரண்டு:
கண்ணுக்குத் தெரியாத நோய்க் கிருமிகள் காரணமாகலாம். இன்ன நேரத்தில் இன்னாரைத் தாக்குவது என்று பட்டியல் தயாரித்து அவை செயல்படுவதில்லை.

மூன்று:
புயல், சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் மரணம் நிகழ்வதும் தவிர்க்க முடியாதது. இவற்றிற்கு மனிதரில் ‘நல்லவன் கெட்டவன்’, ‘பக்தன் நாத்திகன்’, ‘ஏழை பணக்காரன்’ போன்ற வேறுபாடுகள் பற்றியோ, அவரவர் தலைவிதி பற்றியோ எதுவும் தெரியாது.

நான்கு:
இயற்கையின் முரண்பட்ட நிகழ்வுகளால் உருவாகும் பஞ்சம், பட்டினி போன்றவையும் காரணமாகின்றன.

ஐந்து:
மனிதன் தன் ஆறறிவால் கண்டுபிடித்த போர் ஆயுதங்கள், வெடிபொருட்கள், வாழ்க்கை வசதிகளைப் பெருக்குவதற்குப் பயன்படும் கருவிகள் போன்றவையும் சற்றும் எதிர்பாராத வகையில் மனிதன் செத்தொழியக் காரணமாக இருக்கின்றன. 

ஆறு:
உடம்பின் ஒட்டுமொத்த அணுக்களின் அழிவால்  ஏற்படும் மரணம் எல்லோருக்கும் எக்காலத்தும் பொதுவான ஒன்று.  விதிவிலக்கானவன் எவனுமில்லை.

அனைத்துப் பொருள்களுக்குள்ளேயும் உயிரினங்களுக்குள்ளேயும் ஆற்றல் பொதிந்து கிடப்பதால் அவை இயங்குகின்றன. மனிதனுக்குள்ளும் இயங்குவதற்கான ஆற்றலோடு சிந்திப்பதற்கான   பகுத்தறிவும்  இருக்கிறது. 

ஆற்றல் மற்றும் அறிவுடன் மேற்குறிப்பிட்ட இயற்கைச் சீற்றங்கள், முரண்பட்ட நிகழ்வுகளின் கொடிய விளைவுகள், தான் கண்டுபிடித்த கருவிகளால் ஏற்படும் பாதிப்புகள், அணுக்களின் அழிவுகளால் ஏற்படும் மரணம் போன்றவற்றை எதிர்த்துப் போராடுகிறான் மனிதன். போராட்டங்களுக்கிடையே தன்னைத் தாக்கும் இன்பதுன்பங்களை ஏற்று வாழ்கிறான். இது...இந்த வாழ்க்கை.....

மனிதகுலத்துக்கு இயற்கையாக வாய்த்தது.


இயல்பாக அமைந்த இத்தகைய வாழ்வில், தன்னைத் தேடிவரும் இன்பங்களை மனிதன் மகிழ்வோடு ஏற்பான்; துன்பங்களை ஏற்க மனம் மறுக்கும். 

அவற்றை ஏற்று வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதால், அதற்குரிய மனப்பக்குவத்தை அவன் வளர்த்துக்கொள்ளுதல் வேண்டும்.

‘இது ஏன் நிகழ்கிறது? எப்போதிருந்து நிகழ்கிறது? எவ்வாறு நிகழ்த்தப்படுகிறது?’ என்னும் கேள்விகளுக்கெல்லாம் இந்நாள்வரை எவரும் விடை சொன்னதில்லை.   இனியும் விடை தேடுவதில் தவறில்லை.

விடை கிடைக்கிறதோ இல்லையோ, தனக்கு வாய்த்திருக்கும் அற்ப வாழ்க்கையை இயன்றவரை அமைதியாக ஏற்று வாழ்ந்திட முயல்வதே மனிதப் பிறவி எடுக்கும் அத்தனை பேருடைய கடமை ஆகும்.

இயல்புநிலை இதுவாக இருக்க.....

“இல்லை இல்லை. ‘விதிப்படிதான் எல்லாம் நடக்கிறது. அந்த விதியை வகுத்தவன் கடவுள். அவனை வழிபடுவதன் மூலம் விதியை வெல்லலாம். சுவர்க்கம் புகலாம்; இறைவனின் திருவடியை அடையலாம்”[அடைந்து யுகம் யுகமாய்க் குறட்டை விட்டுத் தூங்கலாம்] என்றெல்லாம் பொய்யுரைத்து, மனப்பக்குவத்தை வளர்த்திடும் மனித முயற்சிக்குத் தடையாய் நிற்பவர்களை அயோக்கியர்கள் என்று சொன்னால் அது தவறாகுமா? 

இவர்கள் சொல்லும் விதியை[தீமை பயப்பவை] வகுத்தவன் கடவுள் என்றால், அவனை ‘அயோக்கியன்’ என்று குறிப்பிடுவது குற்றம் ஆகுமா?

சிந்தியுங்களேன்.
=====================================================================
விதி தொடர்பான பழைய இடுகைகள்:

1.விதியாம் விதி!.....‘மசுரு’ விதி!!

 http://kadavulinkadavul.blogspot.com/2015/10/blog-post_25.html
2.பொல்லாத விதியும் ஒரு ‘கவர்ச்சி நடிகை’யின் உள்ளாடையும்!!! [எச்சரிக்கை! நீ..ண்..ட பதிவு]
http://kadavulinkadavul.blogspot.com/2015/06/blog-post_20.html

Tuesday, June 27, 2017

சூரியக்குடும்பம் அழியும்! மனிதன்?!

ஒரு சூரியனும் அதைச் சுற்றி ஏ...ரா...ள நட்சத்திரங்களும் கிரகங்களும் ஒருங்கிணைந்து ஒரு குழுவாய்ச் சுழன்றுகொண்டிருக்கின்றன. இந்த ஒரு குழுவைச் ‘சூரியக் குடும்பம்’ என்கிறார்கள்.
அண்டவெளியில் இம்மாதிரிச் சூரியக் குடும்பங்கள் கணிக்க இயலாத அளவுக்குப் பெரும் எண்ணிக்கையில் இருப்பதாகச் சொல்கிறது அறிவியல்.

மா...மா...மாபெரும் சக்தியின் இருப்பிடமாக உள்ளது சூரியன். அதிலிருந்து ‘சக்தி’ வெளிப்பட்டு, வெளியெங்கும் பரவிக்கொண்டே இருக்கிறது. சூரியனில் உள்ள ‘வாயு’ அணுக்களில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களால்தான் இந்தச் சக்தி உருவாகிறதாம்.

இன்னும் பல பல பல கோடி ஆண்டுகளுக்கு இந்தச் சக்தியை உருவாக்கத் தேவையான அணுக்கள் சூரியனில் உள்ளன என்றும் விஞ்ஞானிகள் பகர்கிறார்கள். ஆயினும் அந்தோ.....

என்றே.....[சில நிமிடங்களுக்கு நீட்டி முழக்கி வாசிக்கவும்]னும் ஒரு நாள் இந்த அணுக்கள் முற்றிலுமாய் எரிந்து அழிந்துவிட, சூரியனிலிருந்து  சக்தி வெளியாவது நின்றுவிட, சூரியக்குடும்பத்திலுள்ள அத்தனை நட்சத்திரங்களும் கிரகங்களும் படிப்படியாய் அழிந்துபோகுமாம்.

இந்த அழிவைத்தான் ‘நட்சத்திர மரணம்’[Death of Star] என்கிறார்கள்.

இச்செய்தி, என்னைப் போலவே நீங்களும் படித்தோ கேட்டோ அறிந்ததாக இருக்கக்கூடும்.

ஆனால், கீழ்வரும் செய்தி நீங்கள் அறிந்திருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கலாம்.

அது.....

#இந்தச் சூரியக்குடும்பம் அழியும்போது நாம் வாழும் பூமியும் சேர்ந்து அழிந்துவிடும்; மனித இனமும் காணாமல் போகும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. பூமி அழியும்.  மனித இனம் அழியாது. மனிதர்கள் வெகு தொலைவிலுள்ள இன்னுமொரு சூரியக்குடும்பத்தின் ஓர் உறுப்பான பூமியில் குடியேறியிருப்பார்கள்# என்பதாகும்.

கடைசிப் பத்திச் செய்தி வெறும் கதையா, கற்பனையா? நம்புவதும் நம்பாமலிருப்பதும் உங்கள் விருப்பம்!

கொசுறு: “மனுச ஜாதி எங்கேயோ இருந்துட்டுப்போகட்டும். அப்போது என் ஆன்மா எங்கே இருக்கும்?” என்று கேட்கிறார் இதை வாசித்த என் எதிர்வீட்டுப் பெரியவர்!!
=====================================================================

Sunday, June 25, 2017

ஓடு...ஓடு...ஓடு! தேடு...தேடு...தேடு!!

நீங்கள் வாசிக்கவிருப்பது ‘தேடோடி’ என்பவர் எழுதியது. பிரபஞ்சத் தோற்றம் குறித்த இவரின் இந்தப் பதிவு நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறது. 2015இல் மட்டும் பதிவுகள் எழுதிவிட்டுப் பின்னர் காணாமல் போனாரே, ஏன்? 
அவரின் தளம்http://babutheseeker.blogspot.in/2015/01/blog-post_76.html
எனது புகைப்படம்
ரந்து விரிந்து இருக்கும் இப்பிரபஞ்சத்தில், கோடானுகோடி நட்சத்திரங்களில் கவனத்தையே ஈர்க்காத ஒரு சிறு நட்சத்திரம்தான் நம் சூரியன். அச்சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் பூமி என்ற கிரகத்தில் வசிக்கும் மனிதர்களாகிய நாம் அற்பத்திலும் அற்பம். ஆனால் அந்த அற்பத்திற்கு அறிவு பெருகும் மூளை என்ற ஒன்றின் வளர்ச்சி மிகச் சிறப்பானது. அச்சிறப்பால், சிந்தனையால் அதற்குள் எழும் கேள்விகள்தான் எத்தனையெத்தனை, எத்தனை அபாரமானவைகள்....?

இதோ தன் தோற்றம் குறித்தும், தானிருக்கும் பிரபஞ்சத்தோற்றம் குறித்தும் அறியப் புறப்பட்டதன் விளைவாக உருவாக்கப்பட்டிருக்கும் கோட்பாடுகளைக் காண்போம். பிரபஞ்சத் தோற்றம் குறித்து பல்வேறு கருத்துகள், கொள்கைகள் நிலவுகின்றன. அவற்றில் சில,

1. ஸ்திர நிலைத் தத்துவம் (Steady State Theory)
2. பெருவெடிப்புக் கொள்கை (Big Bang Theory)
3. கடவுளால் படைக்கப்பட்டது (God's Creation)

இதில் பெருவெடிப்புக் கொள்கை பற்றி இங்கு சற்று பார்ப்போம்.

இன்றிலிருந்து ஏறக்குறைய 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏதுமற்ற பாழ்வெளியில், சூனியத்தில், ஓரிடத்தில் மட்டும் ஒரு பொருண்மை இருந்தது. அதி எடையுடன் அனைத்தையும் தனக்குள் அடக்கிக்கொண்டு உள்ளுக்குள் ஒரு பரபரப்பில் இருந்திருக்கவேண்டும். அதனை ஆங்கிலத்தில் Singularity என்கிறார்கள். நாம் தமிழில் அதனை அனைத்தொருமை எனச் சொல்லலாமா..?

அவ்வனைத்தொருமை ஒரு கணத்தில் அதி வேகத்தில் விரிவடையத் துவங்கியது. அந்த அதிவேகத் தொடக்கத்தினைத்தான் நாம் பெருவெடிப்பு என்கிறோம். அதுதான் நம் பிரபஞ்சப் பிறப்பின் முதற்கணம். கணக்கிட முடியாத அளவிற்கான பெருவெப்பம். விரிவிலிருந்து 10ன் அடுக்கு -37வது நொடியில், (அதாவது 0.0000000000000000000000000000000000001 என ஒரு புள்ளி வைத்து 36 சுழியன்கள் போட்டுப் பின் ஒன்று) பிரபஞ்ச வீக்கம் பெறத் துவங்குகின்றது. அப்பொழுது தோன்றுகின்றது முதற்பொருள். Quark-Gluon Plasma (GGP) அல்லது குவார்க் குழம்பி. அதனைத் தொடர்ந்து மற்ற அடிப்படைத் துகள்கள் பிறக்கின்றன.

பெருவெப்பத்தில், அதிவேகத்திலும், ஒன்றோடு ஒன்று மோதி துகள்கள் மற்றும் எதிர்த்துகள்கள் உருவாக்கப்படுகின்றன. உருவான அதே வேகத்தில் அழிக்கவும்படுகின்றன. அப்படியொரு கணத்தில் திடீரென்று Baryogenesis என்றொரு வினை நிகழ்த்தப் பெற்று குவார்க்குகள் மற்றும் லெப்டான்கள் உருப்பெறுகின்றன. இவைகள்தான் நம் இன்றையப் பிரபஞ்சத்தின் பொருள் மற்றும் எதிர்ப்பொருள்களின் (Matter and Antimatter) முன்னோடி.

பிரபஞ்சம் இன்னும் விரிவடையத் துவங்குகின்றது. அளவில் விரிய விரிய வெப்பம் குறையத் துவங்குகின்றது. காரணம் பொருட்களின் சக்தி குறைகின்றன. பல்வேறு தொடர்மாறுதல்களில் இருந்தவைகள் எல்லாம் இப்பொழுது நாம் உணரும் பிரபஞ்சத்தின் இன்றைய அடிப்படை விதிகளுக்குட்பட்டு பொருட்களின் தற்போதைய அமைப்பு உருவாகின்றது.

இதுவரை தன் நிகழ்வில் கண்கொள்ளாக்காட்சியாக இருந்த பெருவெடிப்பு, 10ன் அடுக்கு -11வது நொடியில் தன் வசீகரம் இழக்கத் துவங்குகின்றது. துகள்களின் வேகமும் சக்தியும் இன்றைக்கு நாம் சோதனைச்சாலைகளில் அடைத்துவைத்து சோதிக்கும் அளவிற்குக் குறைகின்றன.

10ன் அடுக்கு -6வது நொடியில் குவார்க்குகளும் குளூவான்களும் ஒன்றிணைந்து பேரியான்களாக (baryon) அதாவது புரோட்டான் நியூட்ரானாக உருவாகின்றன. இப்பொழுது போதுமான வெப்பம் இல்லாத காரணத்தினால் இனி புதிய புரோட்டான்களோ எதிர்-புரோட்டான்களோ உருவாவது நின்று போகின்றது. அதுபோன்றே நியூட்ரான்களும், எதிர்-நியூட்ரான்களும் உருவாவதும் நின்று போகின்றது. பொருண்மை அழிவு துவங்கி (Mass annihilation) சில புரோட்டான் நியூட்ரான்களைத் தவிர மற்றவைகள் அழிவு பெறுகின்றன.

ஒரு நொடி கழித்து இதே போன்றதொரு நிகழ்வு எலக்ட்ரான்களுக்கும் பாஸிட்ரான்களுக்கும் நிகழ்கின்றது. இந்த அழிவுகளுக்குப் பின்னர் எஞ்சியிருக்கும் புரோட்டான்கள், நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்கள் முன்புபோல் பிரபஞ்சத்தில் அலையவில்லை. வேகம் குறைந்துவிட்டது. ஆனால், போட்டான்கள் (Photons) பிரபஞ்சத்தினை ஆளுமை செய்யத் துவங்கிவிட்டன நியூட்ரினோக்களின் (Neutrinos) சிறிய பங்களிப்போடு.

பெருவிரிவின் சில நிமிடங்களுக்குப் பிறகு ஏறத்தாழ ஒரு பில்லியன் கெல்வின் அளவிற்கு வெப்பநிலையில் நியூட்ரான்கள் புரோட்டான்களோடு ஒன்றிணைந்து இன்றைய பிரபஞ்சத்தின் டியூட்டிரியம் (Deuterium) மற்றும் ஹீலியம் அணுக்கருவை உருவாக்குகின்றன. இதற்கு பெருவெடிப்பு அணுக்கருச்சேர்க்கை (Big Bang Nucleosynthesis) என்று பெயர். பெரும்பாலான புரோட்டான்கள் நியூட்ரான்களோடு சேராமல், ஹைட்ரஜன் அணுக்கருவாகவே நீடிக்கத் தொடங்கின.

பிரபஞ்சம் குளிரக் குளிர (ஒரு பேச்சுக்குத்தான் குளிர என்கிறோம்... ஆரம்ப கணத்தின் வெப்பத்தினை ஒப்பிடும்பொழுதுதான் இது குளிர். நம்மைப் பொறுத்தவரை இது அதிவெப்பம்தான்.) மிச்சமிருக்கும், பொருண்மை, ஆற்றல் நிறைகள் எல்லாம் ஒன்றாக, ஈர்ப்பு விசை உருவாகின்றது.

3,79,000 ஆண்டுகள் கழித்துதான் அணுக்கருவுடன் எலக்ட்ரான்கள் சேர்ந்து அணுக்களே உருவாகின்றன. பெரும்பாலும் ஹைட்ரஜன் அணுக்கள். அதிலிருந்து கதிரியக்கம் பெருகிப் பிரபஞ்சம் முழுவதும் விரைகின்றன. அதனையே பிரபஞ்சப் பின்புல நுண்ணலைக் கதிரியக்கம் (Cosmic Microwave Background Radiation-CMBR) என்கிறோம். இன்றைக்கும் அதனை நாம் உணர்கின்றோம். இந்த ஒன்றைத்தான் பெருவெடிப்பிற்கான ஆதாரமாக விஞ்ஞானிகள் சுட்டுகின்றனர். இதனைத் தொடர்ந்து பின்னோக்கிப் போய்தான் இத்தனையையும் உணர்கின்றோம்.

அதன் பின்னரே, வெகுகாலத்திற்குப் பிறகு அடர்த்தியான பொருள்கள் ஈர்ப்புவிசையின் காரணமாக ஒன்றிணைந்து, அதனால் ஏற்பட்ட நிறையின் காரணமாக ஈர்ப்பு விசை கூடி மேலும், தன்னைச்சுற்றி உள்ள பொருட்களை மேலும் ஈர்த்து, மேகங்கள், நட்சத்திரங்கள், மண்டலங்கள் மற்றும் இதரவைகளாக உருப்பெற்றன. அதன் பின்னர்தான் நம் சூரியன் மற்றும் கோள்கள். அதற்குப்பின் பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர்தான் முதல் உயிரினம். அதற்குப் பின் பல மில்லியன் ஆண்டுகள் கழித்துதான் மனிதன்.

பெருவெடிப்பில் நாம் தவறாகப் புரிந்துகொள்வது

1. பெருவெடிப்பு என்றதும், ஏதோ வாணவெடி வெடித்துச் சிதறுவது போன்று கற்பனை செய்துகொள்கின்றோம். விஞ்ஞானிகள் என்ன சொல்கின்றார்கள் என்றால், அது ஒரு திடீர் விரிவடைவு அவ்வளவுதான் என்கிறார்கள்.

2. அனைத்தொருமை (Singularity) என்றதும், அது ஏதோ விண்வெளியில் இருந்த ஒரு சிறிய புள்ளி போன்ற ஒரு பொருள், அல்லது ஒரு கனன்று கொண்டிருந்த ஒரு நெருப்புப் புள்ளி என்று நினைக்கிறோம். அதுவும் தவறு. நினைவில் கொள்ளுங்கள், பெருவெடிப்பிற்குப் பின்னர்தான் வெளி என்ற ஒன்றே உருவானது. பொருள், நிகழ்வு மற்றும் காலமும் அப்படித்தான்.

அதாவது வெளியில் அந்த அனைத்தொருமை இல்லை. மாறாக வெளியே அந்த அனைத்தொருமைக்குள்தான் இருந்தது. அப்படியென்றால் அது எங்கேதான் இருந்தது? எங்கிருந்து வந்தது? எதற்காக வந்தது? சரியான பதில், நமக்குத் தெரியாது என்பதுதான். உண்மையில் நமக்குத் தெரிந்தது என்றால், நாமெல்லாம் அதற்குள் இருந்து வந்தோம் என்பது மட்டும்தான்.
000000000000000000000000000000000000000000000000000000000000000000

Saturday, June 24, 2017

சில நேரங்களில் சில குடிமகன்கள்!!


இது பழங்கஞ்சி! ‘புதுசு புதுசா’ தேடுபவர்களுக்கு[கதைகளைச் சொன்னேன்]ப் பிடிக்குமா? ஒரே ஒரு முறை ருசித்துப் பார்க்கலாம்!
“உங்க கம்பெனி வாட்ச்மேன் சேது வந்திருந்தார். உங்களைப் பார்த்தே ஆகணும்னு ரெண்டு மணி நேரம் காத்திருந்தார். மறுபடியும் வர்றதாச் சொல்லிட்டுப் போனார்.”

-கம்பெனி வேலையாக இரண்டு நாள் வெளியூர்ப் பயணம் போய்விட்டுத் திரும்பிய கணேசனிடம் அவன் மனைவி சவீதா சொன்னாள்.

“என்ன விஷயம்னு கேட்டியா?”

“கேட்கல.” -சொல்லிக்கொண்டே சமையல் கட்டில் புகுந்தாள் சவீதா.

‘எதற்கு வந்தான் சேது? டியூட்டி நேரத்திலும் போதையில் மிதப்பவன். டிஸ்மிஸ் செய்வதாகப் பல தடவை மேனேஜர் எச்சரித்திருந்தார். செய்துவிட்டாரோ?’ என்று சந்தேகப்பட்டான் கணேசன். தான் மேலாளருக்கு நெருக்கமானவன் என்பதால் சிபாரிசுக்காக வந்திருப்பான் என்றும் நினைத்தான்.

வாழ வேண்டிய வயதில் குடித்துக் கெட்டவன் சேது. குறையக் குறையக் குடித்துவிட்டு நடைபாதையில் விழுந்து கிடப்பான். நான்கைந்து தடவை ஆட்டோ பிடித்து அவனை வீடு சேர்த்திருக்கிறான் கணேசன்.சேது மீண்டும் வந்தான். நடையில் தள்ளாட்டம்.

“வாப்பா சேது. ஏற்கனவே வந்துட்டுப் போனியாமே. என்ன விஷயம்?” என்றான் கணேசன்.

“ஒரு முக்கியமான விஷயம்.....”

“சொல்லுப்பா.”

“குடிச்சிட்டுத் தெருவில் கிடக்கிற என்னை அடிக்கடி நீதான் வீட்டில் கொண்டுபோய்ச் சேர்க்குறே. ......” -நா குழற, தெளிவற்ற வார்த்தைகளை உதிர்த்தான் சேது.

தொடர்ந்தான்: “இதோ பாரு சார், நான் குடிச்சிட்டு நடைபாதையில் கிடப்பேன்; நடுத் தெருவிலும் கிடப்பேன். உனக்கு எதுக்கு இந்த வேலை?”

சேதுவின் கேள்வி, கணேசனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ”ஒரு உதவிதானேப்பா” என்றான்.

“எனக்கு உதவி செய்யுறேன் பேர்வழின்னு இனியும் என் வீடு தேடி வர்ற வேலையை உட்டுடு. ஆளு அம்சமா இருக்கே. கையில் தாராளமா காசு புரளுது. வெகு சுளுவா நீ என் பெண்டாட்டியைக் கணக்குப் பண்ணிடுவே. என்ன...சொன்னது புரிஞ்சுதா?” என்றான் சேது.

சொல்லிவிட்டுத் தள்ளாடியபடியே புறப்பட்டுப் போனான்.

புன்னகை படர்ந்த முகத்துடன் அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான் கணேசன்.

“அவன் உங்களை அவமானப் படுத்திட்டுப் போறான். கோபப்படாம சிரிச்சிட்டே இருக்கீங்களே?” -சவீதா கேட்டாள்.

“சிரிக்காம என்ன செய்யுறது? அவன் பெண்டாட்டி இன்னொருத்தனோட ஓடிப் போயி ஆறு மாசம் போல ஆகுது. அதை மறந்துட்டு, போதையில் இப்படி உளறிட்டுப் போறான்” என்றான் கணேசன்.

=====================================================================
முன்னொரு காலத்தில் ‘இதயம் பேசுகிறது’ன்னு ஒரு வார இதழ் வந்திட்டிருந்துதே நினைவிருக்குங்களா? அதுல[23.01.2000 'இதயம் பேசுகிறது' இதழில் வெளியானது இந்தக் கதை. கதாசிரியர்?

வேறு யார்? உங்கள் ‘பசி’பரமசிவம்தான்!

Thursday, June 22, 2017

‘பதஞ்சலியும் யோகாவும்!’.....சில ‘பரபர’ தகவல்கள்!

‘மனதில் எந்தவொரு பற்றுக்கும்/நினைவுக்கும் இடம்தராமல் அதனை வெறுமையாக வைத்துக்கொள்ளப் பயிலுவதே ‘யோகா’வின் அடிப்படை நோக்கம்’ என்கிறார்கள்.

‘பதஞ்சலி யோக சூத்திரம்’ என்பது யோகக் கலை பற்றிய நூல். இதை எழுதியவர் பதஞ்சலி முனிவர்.
பதஞ்சலி முனிவர் கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது பொதுவான ஊகம். கி மு இரண்டாம் நூற்றாண்டில் என்று சொல்பவர்களும் உண்டு. யோக சூத்திரங்கள் 1]சமாதி, 2 சாதனை, 3 விபூதி, 4 கைவல்யம் என்று நான்கு பாதங்களிலாக 195 சூத்திரங்கள் கொண்டது’ என்கிறது ‘விக்கிப்பீடியா

#இந்தச் சூத்திரத்தில் மூன்று சொற்கள் உள்ளன. மூன்று தன்னிலைகள் என இதை வகுக்கலாம். திருஷ்டு என்றால் பார்ப்பவன், அவதானிப்பவன், உணர்பவன். மனதை உணரும் தன்னிலை என்று இதைச் சொல்லலாம்[புரிகிறது]. இரண்டாவது சொல் ஸ்வரூபம். தன்னுடைய உண்மையான அகநிலை. அல்லது தூய தன்னிலை. இங்கே இன்னும் அது ஒரு உருவகம்தான். மூன்றாவது அவஸ்தை. அந்த தூய நிலையில் உறைதல் என்ற நிலை. தான் என தன்னை உணர்பவன் அந்த உணர்தல் மூலம் உருவாகும் அலைகள் அனைத்தையும் அடக்கி இல்லாமலாக்கிக் கொண்டால் மட்டுமே தூய தன்னிலையாக தன்னை உணர்ந்து அந்நிலையில் அமைய முடியும் என்று இச்சூத்திரத்தை விளக்கலாம்[முடிவற்ற அறிதல்: பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்2 http://www.jeyamohan.in/771#.WUvkMGiGPIU ]

-இத்துடன் நிற்காமல் மேலும் விளக்கிக்கொண்டே போகிறார் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன். ‘தாங்காதுடா சாமி’ என்று தலைமுடியைப் பிய்த்துக்கொண்டு ஓடி வந்துவிட்டேன்.

#யோகா என்பது ஒன்றிணைப்பதை குறிக்கும் ஓரு விசாலமான வார்த்தை. ஓன்றிணைக்க உதவும் எதுவும் யோகா என்று அழைக்கப்படும். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் இந்த எளிமையான சுவாசத்தில் இருந்து, அமர்தல், நடத்தல், உண்ணுதல் மற்றும் மனிதன் செய்யும் எந்த செயலையும் யோகாவாய் மாற்ற முடியும். நீங்கள் இப்போது உண்கிறீர்கள், அப்போது, நாம் அல்லாத ஓன்றை நம்முடைய ஓரு பகுதியாக மாற்றுகிறோம் என்ற விழிப்புணர்வு இருக்குமானால் பத்து நிமிடங்களுக்கு முன் நாம் அல்லாத ஒன்றை, நம்மோடு ஓன்றிணைக்கிறோம் என்பது உங்கள் அனுபவமாக இருக்குமானால், அப்போது, அதனை நீங்கள் “உண்ணும் யோகா” என்றழைக்கலாம்.’ - இது பிரபல ஆன்மிகவாதி ஜக்கி வாசுதேவ் தரும் விளக்கம்.

‘நாம் அல்லாத ஒன்றை நம்முடையதாக மாற்றுகிறோம்’ என்கிறார்.
நாம் எங்கே மாற்றுகிறோம்? அதுவாகத்தானே மாறுகிறது!

‘நாம் அல்லாத ஒன்றை நம்மோடு ஒன்றிணைக்கிறோம் என்பது உங்கள் அனுபவமாக இருக்குமானால் அதனை நீங்கள் உண்ணும் யோகா என்று அழைக்கலாம்’ என்றும் சொல்கிறார் ஜக்கி. [‘ஈஷா’ http://isha.sadhguru.org/blog/ta/patanjali-naveena-yogavin-thanthai/

உண்ணுகிறோம். அது சத்தாக மாறுகிறது. அவ்வளவுதான். இதற்குப் பேரு உண்ணும் யோகாவாம்? நன்றாகவே காதில் பூச்சுற்றுகிறார் உலகமகா யோகி.

இவர் தொடர்ந்து தரும் விளக்கங்களும் இந்த லட்சணத்தில்தான் இருக்கின்றன.

யோகா என்ற வார்த்தை, பண்டைய காலங்களில் குறிப்பிட்ட ஒரு புரிதலோடு உபயோகப்படுத்தப்பட்டது. ஆனால் இன்று அது தளர்வான, அற்பமான பொருளில் உபயோகப்படுத்தப்படுகிறது. மேற்கு நாடுகளில் இன்று “தண்ணீர் யோகா, நாய் யோகா, பூனை யோகா” என்று பலதும் இருக்கின்றன. இது தவறான புரிதல். மேம்போக்கான யோகா மட்டுமே, மேற்கு நாடுகளுக்கு சென்றிருக்கிறது. யோகாவின் ஆத்மா அல்ல. இது மிகத் தீவிரமான பிரச்சினை. யோகாவை ஒரு பயிற்சி என எண்ணுவது, இறந்த குழந்தையைப் பெறுவதைப் போன்றது. அதில் உயிர் இருக்காது.

‘குறிப்பிட்ட ஒரு புரிதலோடு...’ -அதென்ன குறிப்பிட்ட புரிதல்?[விளக்கம் தரப்படவில்லை]

‘யோகாவின் ஆத்மா’[என்கிறார்] - என்னய்யா இது, புதுக் கதை! உடம்புக்குள்ள ‘ஆத்மா’ இருக்கிறதா கதையடிச்சிட்டிருக்கீங்களே, போதாதா?

மேற்கண்ட இரு பிரபலங்களும் இவர்களைப் போன்ற பிற பிரபலங்களும் தரும் விளக்கங்களைச் சுற்றிவளைக்காமல் சுருக்கிச் சொன்னால்.....

பதஞ்சலி யோகா என்பது, ‘மனதில் எந்தவொரு பற்றுக்கும் இடம் தராமல் அதனை வெறுமையாக வைத்துக்கொள்ளப் பயிலுவதே’[அப்படி வைத்துக்கொள்வதால் நன்மைகள் விளைகின்றனவாம். அது குறித்த ஆய்வு இங்கு தேவையில்லை]. 

எந்தவொரு பற்றுக்கும்/எண்ணங்களுக்கும்  இடம் தராமல் மனதை வெறுமையாக வைத்துக்கொள்வது என்பது ஆழ்ந்த உறக்கத்திலும்கூட இயலாத காரியம்; செத்துப் பிணமான பின்னரே இது சாத்தியம்.

மேலும், திருமூலர் காலத்தவரான பதஞ்சலியின் வரலாறாகக் குறிப்பிடப்படும் தகவல்களில் பலவும் கற்பனையில் உதித்தவை.

‘அத்ரி மகரிஷி’ என்றொரு முனிவர். அவரின் மனைவி அனுசூயை.

மும்மூர்த்திகளும் தனக்குப் பிள்ளைகளாகப் பிறக்க வேண்டும் என்று இந்த முனி ஆசைப்பட்டதன் விளைவாகப் பிறந்த மூன்று பேரில் இந்தப் பதஞ்சலியும் ஒருவராம். இவர் மனித முகமும் பாம்பு உடலும் வாய்க்கப்பெற்ற சித்தர்...இப்படிப் போகிறது கதை[மேலே தலைப்பில்[Header] உள்ளவர்தான் பதஞ்சலி. ஜக்கி வாசுதேவின் ‘ஈஷா’ தள உபயம்]. கதைதானே...இருக்கட்டும்.

இந்த இந்திய தேசத்தின் பிரதமர்,  ஜக்கி வாசுதேவ். யோக[கா] குரு எனப்படும் பாபா ராம்தேவ் போன்றவர்களால்,  இந்த யோகா[21.06.2017 யோகா தினம். அனைத்து நாளிதழ்களிலும் செய்திகள்] உலக அளவில் பிரபலம் ஆகியுள்ளதே தவிர இதனால் விளையும் பயன்கள் உறுதி செய்யப்பட்டனவா என்பது தெளிவாக அறியப்படவில்லை.

மூச்சுப் பயிற்சியில் நிச்சயம் பலன் உண்டு. உடம்பை வளைத்தும் இறுக்கியும் முறுக்கியும் செய்யப்படும் உடற்பயிற்சிகளால் நன்மைகள் மட்டுமே விளைகின்றனவா? தீமைகளே இல்லையா?

ஆய்வுகளின் மூலம் யோகா என்னும் உடற்பயிற்சியால் விளையும் நன்மைகள் உறுதி செய்யப்பட்ட பிறகே அது பிரபலப்படுத்தப்படல் வேண்டும். ஆனால்.....

யோகாவை மையப்படுத்தி ஏதேதோ நடக்கிறது; நடந்துகொண்டிருக்கிறது.

நம் மக்கள் சிந்திக்கத் தெரிந்தவர்கள். இது குறித்தும் தீவிரமாகச் சிந்திப்பார்கள்தானே?
===============================================================================


Wednesday, June 21, 2017

காக்கும் கடவுள் விஷ்ணுவா, கர்னாடகக் காவலரா? சிலை யாருக்கு?!

இன்றைய நாளிதழில்[‘தி இந்து’ 21.06.2017]  இருவேறு மாறுபட்ட செய்திகள் வெளியாகியுள்ளன. ஒன்று இன்புறுத்தியது. மற்றொன்று துன்புறுத்தியது!

#பெங்களூர் சென்ற குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, 17ஆம் தேதி திட்டமிடப்பட்ட தம் பணியை முடித்துக்கொண்டு, பாதுகாப்பு வாகனத்தில் ராஜ்பவன் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.

குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு வாகனங்கள் டிரினிட்டி சதுக்கம் அருகே வந்தன. அதே நேரத்தில், எதிர்த் திசையில் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தன் பயணத்தைத் தொடர இயலாமல் திணறி நின்றது.

இதைக் கவனித்த, டிரினிட்டி சதுக்கப் போக்குவரத்துக் காவல் துணை ஆய்வாளர் நிஜலிங்கப்பா, நிற்காமல் வந்துகொண்டிருந்த பிரணாப் முகர்ஜியின் பாதுகாப்பு வாகனங்களைத் தடுத்து நிறுத்தி, ஆம்புலன்ஸ் செல்வதற்கு முதலில் வழி ஏற்படுத்தினார். முகர்ஜியின் பாதுகாப்பு வாகனங்களைக் கடந்து சென்றது ஆம்புலன்ஸ்# - இது ஒரு செய்தி.
மற்றொரு செய்தி:
#கர்னாடக மாநிலம் பெங்களூரு தெற்கு, ஈஜிபுரா பகுதியில் கோதண்ட ராமசாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில், 64 அடி உயரத்தில் விஸ்வரூப மகா விஷ்ணு சிலை[பீடத்தைச் சேர்த்து 108 அடி உயரம்] நிறுவுவதற்குக் கோயிலின் அறக்கட்டளை முடிவெடுத்திருந்தது.

இந்தச் சிலைக்காக, வந்தவாசி அருகே கொரக்கோட்டை கிராமத்தில் பாறையை வெட்டி எடுத்து 400 டன் எடையில் 64 அடி உயரத்தில் விஷ்ணுவின் சிலை செதுக்கப்பட்டுள்ளது[விஷ்ணுவின் முகம், சங்கு சக்கரம் மற்றும் கைகள் மட்டுமே செதுக்கப்பட்டுள்ளன. சிலை, பெங்களூரு கொண்டுசெல்லப்பட்ட பிறகு எஞ்சிய பகுதிகள் செதுக்கப்படும்]. கூடவே, 24 அடி உயரத்தில் ஆதிசேஷன்{7 தலைப் பாம்பு} சிலையும் வடிவமைக்கப்பட்டுள்ளது#
இந்தப் பிரமாண்ட சிலைக்கான கல் செயற்கைக்கோள் மூலம் தேடப்பட்டதாம். பல நாட்கள் தேடித் தேடித் தேடி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கொரக்கோட்டை கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாம்.

மத்திய மாநில அரசுகளிடம் அனுமதி பெற்று, கற்களை வெட்டி எடுத்துச் சிலையை வடிவமைக்கும் பணி 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாம்.

அடுத்து வரும் செய்தி வெகு வெகு வெகு சுவாரசியம்.

#சிலைகள், 170 மற்றும் 96 டயர்களைக் கொண்ட கார்கோ லாரிகள் மூலம் வந்தவாசி, வேலூர், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு கொண்டுசெல்லப்படும்.

அதிக பாரம் கொண்ட கார்கோ வாகனங்கள் செல்வதற்கான அனுமதியை மத்திய மாநில அரசுகளிடம் அறக்கட்டளை நிர்வாகிகள் பெற்றுள்ளனர். செல்லும் வழியிலுள்ள பாலங்களின் உறுதித்தன்மையை வல்லுனர்கள் ஆய்வு செய்துள்ளனர். பாலங்களுக்கு அடியில் கூடுதல் ஜாக்கிகள் பொருத்தப்பட உள்ளன. மணல் மூட்டைகளை அடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது#

காக்கும் கடவுள் எனப்படும் விஷ்ணுபகவான் பற்றிக் கொஞ்சமும் வஞ்சனையில்லாமல் வகை வகையான ஆபாசக் கதைகளை அருளிச் சென்றிருக்கிறார்கள் நம் மூதாதையர்கள். கதைகளை அடிப்படையாகக்கொண்டு நாடெங்கும் நிறுவப்பட்டுள்ள சிலைகளுக்கும் பஞ்சமில்லை.

இப்போது, 108 அடி உயரத்தில் 400 டன் எடையில் பெங்களூருவில் விஷ்ணு பகவானுக்குப் பிரமாண்ட சிலை!

இருக்கிற சிலைகள் போதாவா? இருக்கிற மூடநம்பிக்கைகள் போதவில்லையா?

இந்த அநாவசிய வெற்றுப் பணி[?]க்கு அறிவியல் தொழில்நுட்ப உதவி வேறு!  மத்திய மாநில அரசுகளின் பேராதரவு வேறு.

கேள்வி கேட்பார் இல்லையா?

கொஞ்சம் கொஞ்சமாகவேனும் மூடநம்பிக்கைகளிலிருந்து மக்கள் விடுபடவே கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்களா விஷ்ணு[கடவுள்] பக்தர்கள்!

இனியேனும் ஆபாசக் கடவுள்களுக்குச் சிலைகள் நிறுவுவதைத் தடுத்தி நிறுத்தி, மனித நேயத்தின் உச்சத்தைத் தொட்ட நிஜலிங்கப்பா[இவர், குடியரசுத் தலைவருக்குப் பதிலாகக் கடவுளே வந்திருந்தாலும் தடுத்து நிறுத்தியிருப்பார். இந்தத் துணிச்சலான செயலுக்கு இவரைத் தூண்டியதே கடவுள்தான் என்று எவரும் குரல் எழுப்ப வேண்டாம்] போன்றவர்களுக்குச்  சிலைகள் நிறுவினால் மக்கள் மனங்களில் மனிதநேயம் வளரும்.

நாடெங்கிலும் உள்ள நற்சிந்தனையாளர்களும் மனிதநேயம் மிக்கவர்களும் ஒருங்கிணைந்து துணிந்து போற்றுதற்குரிய  இம்மாதிரிப் பணிகளை மேற்கொள்ளுதல் உடனடித் தேவை.

செய்வார்களா? மக்களின் ஆதரவு கிடைக்குமா?
===============================================================================

Monday, June 19, 2017

கல்லில் பலன் சொன்ன கில்லாடி ஜோதிடர்! [பொழுதுபோக்கு]

இது, என் சொந்தக் கதையல்ல; ‘சுட்ட’ கதைதான். எங்கிருந்து சுட்டேன் என்பது எனக்கே நினைவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். இங்கு பதிவு செய்துவிடலாம். [ஜோதிடம் பொய் என்றாலும், தம் படிப்பறிவால் நேர்மையாகப் பலன் சொல்லும் ஜோதிடர்களும் இருக்கிறார்கள்{வெகு அரிதாக}. அவர்களை வருத்துவது என் நோக்கமல்ல]].

ரு கிராமத்தில் ஒரு ஜோதிடர் இருந்தார்; மகா கெட்டிக்காரர்.

ஒரு நாள் ஒரு வீட்டிற்கு ஜோஸ்யம் சொல்லப் போனார். அந்த வீட்டுப் பையன் நோய்வாய்ப்பட்டிருந்தான். “கிரஹங்களின் சஞ்சாரப்படி பையனுக்கு நேரம் சரியில்லை” என்றார் ஜோதிடர்.

“பரிகாரம் பண்ணுங்க” என்றனர் பையனின் பெற்றோர்.

தம் கைப்பையில் சேகரித்துவைத்திருந்த  சிறிய கற்களில் ஒன்றை எடுத்து வைத்து அதற்கு ஏதேதோ சடங்குகள் எல்லாம் செய்து முடித்து, தமக்குரிய காணிக்கையைப் பெற்றுக்கொண்டு கல்லை மட்டும் கொடுத்துவிட்டுப் புறப்பட்டார் ஜோதிடர்.
“பையனுக்கு நோய் குணமாகுமா?” என்றார்கள் பையன் வீட்டார்.

‘காத்திருங்கள்” என்று மட்டும் சொல்லி விடைபெற்றார் அவர்.

இன்னொரு வீட்டார் வந்து அவரை அழைத்துப் போனார்கள். அந்த வீட்டிலும் ஒரு சிறுவன் உடல்நலமின்றிப் படுத்திருந்தான். ஜாதகனுக்குத் தோஷம் இருப்பதாகச் சொன்ன ஜோதிடர், அங்கேயும் ஒரு கல்லுக்குச் சடங்குகள் செய்து முடித்து, அதைக் கொடுத்துவிட்டு, “காத்திருங்கள்” என்று சொல்லிக் காணிக்கையும் பெற்றுக்கொண்டு போனார்.

மாதம் ஒன்று கழிந்தது.

ஜோதிடர் முதலாவதாகக் கல் கொடுத்த வீட்டுக்காரர்கள் அவரைத் தேடிவந்து, “ஐயா, பையன் செத்துப் போய்ட்டானய்யா” என்று அழுது அரற்றினார்கள்.

“உங்க தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுட்டுப் போவான் என்பதை உணர்த்தத்தான் ஒரு கல்லைக் கொடுத்துவிட்டு வந்தேன்” என்றார் ஜோதிடர்.

இரண்டாவது வீட்டுக்காரர்களும் அப்புறம் ஒரு நாள் தேடிவந்தார்கள்; “உங்க புண்ணியத்தில் பையன் பிழைச்சுட்டான்” என்றார்கள்.

ஜோதிடர் சொன்னார்: “பையனின் ஆயுள் கல்லைப் போலக் கெட்டியானதுன்னு உணர்த்தத்தான் கல்லைக் கொடுத்துட்டு வந்தேன்.”

‘பசி’பரமசிவம்: நாட்டில் ஜோதிடத்தின் பெயரால் ஏதேதோ நடக்குதுங்க. அறிவு ஜீவியான நானே ஏமாந்திருக்கேன்!

நீங்க? 
***********************************************************************************************************************

Sunday, June 18, 2017

பெரியார் சொன்ன ‘குள்ளநரி’க் கதை!

‘பெரியார் இந்தக் கதையை ஏன் சொன்னார்?’ என்ற கேள்வி இப்போது வேண்டாம். கதை, வெகு சுவையானது! படித்து இன்புறுங்கள்!!
ற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு குள்ளநரி வெள்ளத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது.

கரையில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மனிதர்களைப் பார்த்து, “ஐயோ...ஐயோ...என்னைக் காப்பாத்துங்களேன்” என்று அபயக்குரல் கொடுத்தது.

மனிதர்களில் எவரும் கண்டுகொள்ளவில்லை.

வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டே சிறிது நேரம் யோசித்த குள்ளநரி, “ஐயோ...உலகம் அழியப்போவுது! ஒட்டுமொத்த உலகமும் அழியப்போவுது”ன்னு கூக்குரல் எழுப்பியது; எழுப்பிக்கொண்டே இருந்தது.

மனிதர்களில் ஒருவர், “குள்ளநரி, உலகம் அழியப்போவுதுன்னு சொல்லுதே” என்றார் பதற்றத்துடன்.

“அது ஏதோ உளறுது” என்றார் மற்றொருவர்.

“அப்படியில்ல. ஒருவேளை உண்மையா இருந்துட்டா[“கிழவன் கடவுள் இல்லேன்னு சொல்றான். ஒருவேளை கடவுள் இருந்துட்டா நம்மையெல்லாம் தண்டிப்பார். எதுக்கும் கும்பிட்டு வைப்போம்”னு நம்மவர்கள் சொல்ற மாதிரி!] நாம் எல்லாரும் அழிஞ்சிடுவோமே. எதுக்கும் நரியைக் காப்பாத்தி விசாரிப்போம்” என்றார் வேறொருவர்.

“அப்படியே செய்வோம்” என்றார்கள் மற்றவர்கள்.

எல்லாருமா நீந்திப்போய் குள்ளநரியைப் பத்திரமா கரை சேர்த்தார்கள்.

எல்லோரும் ஒருமித்த குரலில் கேட்டார்கள்: “உலகம் அழியப்போகுதுன்னு சொன்னியே, நிஜமா?”

நீண்ட பெருமூச்சு விட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்ட குள்ளநரி, “உண்மையைச் சொல்லி என்னைக் காப்பாத்துங்கன்னு கெஞ்சினேன். ஒருத்தனும் கண்டுக்கல. உலகம் அழியப்போகுதுன்னு ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டதும், அதை நம்பி அலறியடிச்சிட்டு வந்து என்னைக் காப்பாத்துனீங்க. இனியாவது உண்மையை மதிக்கக் கத்துக்கோங்கடா முட்டாள்களா”ன்னு சொல்லிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. 
===============================================================================
பெரியார் சொன்ன ஆறுவரிக் கதையை அரைப்பக்கக் கதையாக்கியிருக்கிறேன். பெரியார் ஆவி[!!!!!] என்னை மன்னிக்கட்டும்!


Friday, June 16, 2017

விதியும் கடவுளும் வில்லங்க மனிதர்களும்!!

‘விதி’ பற்றிய முற்றிலும் புதுமையானதொரு பார்வை. படியுங்கள். கொஞ்சமேனும் பயன் விளையலாம்.
நாம்  விரும்பாதவை, அல்லது எவராலும் விரும்பத்தகாதவை நடந்தால், அவற்றிற்கு  ‘விதி’யைக் காரணம்  காட்டுகிறோம். தீராத நோயின் தாக்குதல்; எதிர்பாராத சாவு; காதல் தோல்வி என்றிப்படி நிறையச் சொல்லலாம்.

நோய்நொடி அண்டாமல் முழு உடல்நலத்துடன் வாழவே நாம் விரும்புகிறோம். கொடிய நோய்கள் நம்மைத் தாக்கும்போது விதியை நொந்துகொள்கிறோம். நம்மைப் படைத்து மண்ணில் வாழப் பணித்தவர் கடவுள் எனின், நோய்களையும் படைத்து[படைப்பாளி அவர் மட்டுமே என்பதைக் கருத்தில் கொள்க] நம் மீது தாக்குதல் தொடுப்பவர்  அவரே என்பதால் நம் வாழ்வில் ‘விதி’  புகுந்தது எப்படி?

காதல், காமம், ஆசை, பாசம், நேசம், பொறாமை என்று விதம் விதமான உணர்ச்சிகளுடன் நம்மை நிலவுலகில் உலவவிட்டவரும் கடவுளே. உணர்ச்சிகளுடன் போராடுவதோடு உணர்ச்சியுள்ள மனிதர்களுடனும் போராடுகிறோம். போராட்டத்தில் வெற்றியும் தோல்வியும் தவிர்க்க இயலாதவை. வெற்றியைத் தழுவும்போது கடவுளைப் போற்றுவதும் தோற்கும்போது  விதியைக் காரணம் காட்டுவதும் அறியாமையின் உச்சமல்லவா?

நிலநடுக்கங்களையும் சுனாமிகளையும், பஞ்சம், தீராத வறுமை போன்றவற்றையும் கோரத்தாண்டவம் ஆடவிட்டுப் பல்லாயிரக் கணக்கில் உயிர்களைச் சாகடிப்பவர் கடவுளாக  இருக்கையில், கண்ணுக்குத் தெரியாத விதியைக் காரணம் ஆக்குவது விந்தையிலும் விந்தையல்லவா!?

புதிய புதிய கொலை ஆயுதங்களைக் கண்டுபிடிப்பதற்கான அதிபுத்திசாலித்தனத்தை மனிதனுக்கு அள்ளி அள்ளி வழங்கியவர் கடவுள். இதன் விளைவு.....

வெடி விபத்து, வாகன விபத்து என்று வகை வகையான விபத்துகளில் சிக்கி, வகைதொகையின்றிச் செத்துத் தொலைக்கிறான் மனிதன். விபத்துகளுக்கு மூலகாரணமான கடவுளைப் புறந்தள்ளி, விதியே விபத்துகளுக்குக் காரணம் என்பது அறிவுடைமை அல்லவே!

“நான் மனதாலும் பிறருக்குக் கெடுதல் நினைத்ததில்லை. எனக்கு ஏன் இத்தனை கஷ்டங்கள்? எல்லாம் என் தலைவிதி...விதி” என்று நாளும் புலம்புவோர் நம்மில் கணக்கிலடங்காதவர். விதியை வகுத்தவர் கடவுள்[என்று சொல்லப்படுபவர்]  என்கிறார்கள். எல்லாம் கடவுளே என்னும்போது, ‘விதி’ என்ற ஒன்று எதற்கு?

“அவன் ரொம்ப ரொம்ப நல்லவனாயிற்றே, அவனா எனக்குத் துரோகம் செய்தான்? நம்ப முடியல. எல்லாம் விதியின் விளையாட்டு” என்று மாய்ந்து மாய்ந்து சொல்லிக் கலங்கும்  மாந்தர் நம்மில் மிகப்பலர். கடவுளின் படைப்பில், ரொம்ப ரொம்ப நல்லவனும் இல்லை; ரொம்ப ரொம்பக் கெட்டவனும் இல்லை என்பதை மறந்துவிட்டு, இல்லாத விதியின் மீது பழி போடுவது தவறல்லவா? இவ்வாறாக.....

நல்லவை நடந்தால் கடவுளைத் துதி பாடுவதும், அல்லவை விளைந்தால் அவரை நிந்திக்க மறுத்து, சாத்தானைச் சாடுவதையும், விதியை நொந்துகொள்வதையும் வழக்கம் ஆக்கிக்கொண்டார்கள் மனிதர்கள். 

இது எத்தனை பெரிய தவறு?

இந்தத் தவற்றை இவர்கள் தெரிந்தே செய்கிறார்களா, செய்யும்படிக் கடவுள் தூண்டுகிறாரா?!

பதில் தெரிந்தவர் யார்?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

உங்கள் பறவைப் படம் பார்த்ததும் என் ஒரு போஸ்ட் நினைவு வந்துவிட்டது... நேரம் இருப்பின் பார்த்து அழுங்கோ விதியை நினைச்சு ஹா ஹா ஹா:)..

http://gokisha.blogspot.com/2012/02/blog-post_24.html

Friday, 24 February 2012

‘அதிரா’ வின் கீழ்க்காணும் பதிவை வாசித்து நீங்களும் அழலாம்.....
பாரம்மா பறவைக்கும் பாசங்கள்..இருக்கின்றது..
து எனக்கு, சில மாதங்களின் முன்பு கொசு மெயிலுக்கு வந்திருந்தது, பார்த்ததும், மீண்டும் பார்க்க முடியாமல் அப்படியே விட்டுவிட்டேன்... இன்று போடலாமே, விலங்குகளின் பாசத்தை மனிதர்களும் உணர்வோமே, ஏதோ நாம் மட்டும்தான் அன்பில், பாசத்தில் ஓங்கி உயர்ந்து நிற்கிறோம் என எண்ணிக் கொண்டிருக்கிறோம், விலங்குகளின், பறவைகளின் பாசத்தை உணர்ந்தாலும், அதை நாம் பெரிது படுத்துவதில்லை, ஆனால் இதைப் பார்த்ததும், இதயம் கரைந்துவிடுகிறது... நீங்களும் பாருங்கோ....

காதல் ஜோடியாகப் பறந்தபோது, பெண் பறவையைக் கார் அடித்துவிட்டது..., நடக்க முடியாமல், கரையை நோக்கி தவழ முயற்சிக்கிறது.... 
விதி செய்த சதியோ அத்தான்...

அதைப் பார்த்த ஆண் பறவை, ஓடிச்சென்று, உணவெடுத்து வந்து ஊட்டுகின்றது..
பாரம்மா பறவைக்கும் பாசங்கள் இருக்கின்றது, பறந்தோடி இரைதேடி, துணைக்குக் கொடுக்கின்றது....மீண்டும் ஓடிச்சென்று உணவெடுத்து வந்த வேளை, பெண்பறவை பிரிந்துவிட்டது... திகைத்து நிற்கிறது ஆண்பறவை..
கடவுளே இது கனவாகிடக்கூடாதா.... கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்.....நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி.. அது நீதானம்மா....அழுதழுது, பெண்ணைத் தட்டி எழுப்ப முயல்கின்றது....
தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவர் இல்லை.... என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்ன்..


சத்தமாக அழுது கூப்பிடுகின்றது...
ஆலம் விழுதுகள்போல் உறவு ஆயிரம் வந்தும் என்ன, வேரென நீயிருந்தாய், அதில்நான் வீழ்ந்து விடாதிருந்தேன்:(((


எதுவுமே பண்ண முடியாமல் உரக்க ஓலமிடுகின்றது தனித்துவிட்ட ஆண் பறவை:(((
இறைவா... உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு... எனக்கென இருந்தது ஒரு விளக்கு... இதனுடந்தானா உன் வழக்கு:(((( பின் இணைப்பு:
Millions of people cried after seeing these photos in  America,  Europe, Australia , and even India . The photographer sold these pictures for a nominal fee to the most famous newspaper in France .  All copies of that edition were sold out on the day these pictures were published.Thursday, June 15, 2017

கூகுளில் கணினித் தமிழ்ச் சொற்களைத் தந்தவர் யார்?

“தமிழ் வாழ்க! தமிழ் வெல்க!!” என்பன போன்ற வெற்றுக் கூச்சல்களால் இனியும் தமிழ் வளராது; அறிவியல் துறையில் தமிழ் வளரவில்லையேல் வெகு விரைவில் நம் ‘தெய்வத்தமிழ்’ அழிந்துபோகும்! அதை அழியாமல் காப்பதற்குக் கடுமையாக உழைத்த ஓர் ‘அறிவியல் தமிழ் அறிஞர்’ பற்றிய பதிவு இது.
கூகுளில் பயன்படுத்தப்படும் கணினித் தமிழ்ச் சொற்களைத் தந்த பெருந்தகை இவர்தான். தம் வாழ்நாளில் 8.5 லட்சம் தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்கினார்!

‘மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்’, ‘அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி’ ஆகியன இவர்தம் ஆக்கங்கள்.

பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியத்தைத் தமிழில் கொண்டுவந்த குழுவுக்குத் தலைமை ஏற்றவர்; ‘யுனெஸ்கோ கூரியர்’ இதழைத் தமிழில் வெளியிடுவதில் தீவிர முயற்சி செய்து, 35 ஆண்டுகள் அதன் ஆசிரியராகச் செயல்பட்டவர் இவர்.

‘அறிவியல் தமிழ் அறக்கட்டளை’ என்னும் நிறுவனத்தைத் தொடங்கி இவர் ஆற்றிய தமிழ்ப்பணி  என்றென்றும் மறக்க இயலாதது. தமிழ்நாடு அரசு உயர்கல்வி - தமிழ் ஆக்கப்பணிக்குழு உறுப்பினராகச் செயல்பட்டுத் தமிழ் வளர்த்தவர்.

‘கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி’ இவர் உருவாக்கியதே.

தமிழ் அறிவியல் கருத்தரங்கை 1986இல் முதன்முதலில் சென்னையில் நடத்திய சாதனையாளர். அறிவியல், தொழில்நுட்பம், கணினித்துறை ஆகியன சார்ந்த 8 கலைச்சொல் அகராதிகளை வெளியிட்ட அறிவியல் அறிஞர்.

பாண்டிச்சேரி வானொலி நிலைய அறிவியல் நிகழ்ச்சி ஆலோசகராகப் பணியாற்றிப் பாராட்டுப் பெற்றவர்.

இவர் ஆற்றிய அளப்பரிய அறிவியல் தமிழ்ப்பணிக்காக, கலைமாமணி, வளர்தமிழ்ச் செல்வர், ‘அறிவியல் தமிழ் வித்தகர்’ போன்ற பல விருதுகளைப் பெற்ற இந்தத் தமிழ்தொண்டர், ‘அறிவியல் தந்தை’ என்றும் போற்றப்படுபவர்.

இத்தனை, இன்னும் எத்தனையோ சாதனைகளை நிகழ்த்தி, தம் 82 ஆம் அகவையில்  காலமானவர் அறிவியல் தமிழ் அறிஞர் ‘மணவை முஸ்தபா’ அவர்கள்.

இன்று அவரின் பிறந்த தினம். அதை நினைவுகூரும் வகையில், அவரைப் பற்றிய அரிய பத்து முத்தான தகவல்களை வழங்கியுள்ளார் ‘நாகலட்சுமி சிவலிங்கம்’ அவர்கள்[தி இந்து 15.06.2017]. அவருக்கும் தி இந்துவுக்கும் நம் நன்றி.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++