சனி, 3 ஜூன், 2017

பிஞ்சு மனங்களில் பொய்களை விதைக்காதீர்!

நான் அவ்வப்போது பின்னூட்டப் பெட்டியை இழுத்து மூடிவிட்டு, ‘தனிமையில் இனிமை’ காணும்[இமயகிரியைத் தேடி ஓடும் நடிகர் ரஜினி போல] விசித்திர குணம்[கிறுக்குப் புத்தி] படைத்தவன். ஆண்டவன் சொன்னா பெட்டி தானாகவே திறந்துகொள்ளும்! 

கமுக்கமாய்ச் சிரிக்காதீர்! பதிவைப் படித்திடுவீர்!!
தை சொல்லும்போதோ, நடந்த நிகழ்வுகளை விவரிக்கும்போதோ “அப்புறம்?... அது எப்படி?...” என்பன போன்ற கேள்விகளை அடுக்கிகொண்டே போவது குழந்தைகளின் இயல்பு. எதைப் பற்றியும் ‘அரைகுறை’ என்றில்லாமல் முற்ற முழுக்க அறிந்துகொள்வதில் அவர்கள் கொண்டுள்ள அளவு கடந்த  ஆர்வத்தின் வெளிப்பாடு அது. நாமோ, “அது அவ்வளவுதான். முடிஞ்சிபோச்சி. நீ சும்மா தொணதொணக்காதே” என்று சொல்லி அவர்களின் அறியும் ஆர்வத்துக்குத் ‘தடா’ போட்டுவிடுகிறோம்.

தெரியாதனவற்றைத் ‘தெரியவில்லை’ என்று ஒத்துக்கொள்ளும் பெருந்தன்மை மிகப் பெரும்பாலான பெற்றோர்களுக்கு இல்லை. காரணம்.....

தங்கள் மீது தங்கள் குழந்தைகள் கொண்டிருக்கும் ‘பெருமதிப்பு’[இமேஜ்]க்குப் பங்கம் ஏற்படும் என்ற பயம்தான். அவர்கள் பள்ளி சென்று அறிவார்ந்த ஆசிரியர்களிடம் பாடம் கேட்கக் கேட்க, அந்த இமேஜ் தானாகவே சரிந்துவிடும் என்பது பற்றி அவர்கள் முன்கூட்டியே சிந்திப்பதில்லை.

சிந்திக்காதவர்கள் இனியேனும் சிந்திக்க வேண்டும்.

குழந்தைகளின் கேள்விகளுக்கு விடை தெரியாதபோது, “எனக்குத் தெரியவில்லை. படித்துச் சொல்கிறேன்” என்றோ, “கேட்டுச் சொல்கிறேன்” என்றோ சொல்லுகிற மனப்பக்குவத்தைப் பெற வேண்டும்.

அவர்கள் வளர வளர, “நிறையப்படி; அறிஞர்களின் சொற்பொழிவுகளைக் கேள்” என்றிப்படிச் சொல்லி வழிப்படுத்தலாம்.

குழந்தைப் பருவத்திலிருந்தே பிள்ளைகளின் மூளையில் கடவுள் நம்பிக்கை திணிக்கப்படுகிறது.

ஒரு குழந்தையின் தாத்தா செத்துப் போக.....

“தாத்தா செத்துப் போட்டாரா? செத்துப் போறதுன்னா என்ன?” என்று கேட்கும் குழந்தையிடம், “அதுவா, தாத்தா சாமிகிட்ட போய்ட்டார்” என்று காலங்காலமாக நம்மவர்கள் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஐயமற அறியப்படாத, அல்லது, உணரப்படாத கடவுளைக் குழந்தையின் மனதில் திணித்து, வளரும் அதன் அறிவை  முடமாக்குவது சிறு தவறல்ல; பெரும் குற்றம்.

‘நம்மோட இந்த உடம்பு செயல்பட முடியாம அழியறதுதான் சாவு. செத்தப்புறம் சடலத்திலிருந்து ஏதும் வெளியேறுதான்னு  தெரியல. இனிமேல்தான் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கணும். உன்ன மாதிரி பொண்ணுகளோ பசங்களோ இது சம்பந்தமா மேல் வகுப்புக்குப் போகும்போது படிக்கலாம்; ஆராய்ச்சி பண்ணலாம்; கண்டுபிடிக்கலாம் ” என்றிவ்வாறு எதார்த்தமாகச் சொல்லலாம்.

“அழுகிப் போனா உடம்பு நாறும். புதைக்கிறோம், இல்லேன்னா எரிச்சிடுறோம்” என்றும் சொல்லலாம்.

இம்மாதிரி எதார்த்தமான பதில்கள் குழந்தைகளை அச்சுறுத்தும்; வாழ்வின் மீதான பற்றுதலைக் குறைக்கும் எனின்..........

குழந்தைகள் கேட்கும் சில கேள்விகளுக்கு, “இதைப் பத்தியெல்லாம் பெரியவங்க சொல்லியிருக்காங்க. நீ  வயசு ஆக ஆக இதை எல்லாம் புரிஞ்சிக்கலாம்; நீயே கண்டுபிடிச்சிச் சொல்லலாம்” என்றிப்படிச் சமாளிப்பதே புத்திசாலித்தனம் ஆகும்.

தம் குழந்தை இன்னொரு குழந்தையை அடித்தால்.....

“அடிக்கிறது தப்பு. அது பாவம். சாமி தண்டிக்கும்” என்று பயமுறுத்துவதைத் தவிர்த்து, “நீ அடிச்சா அதுவும் திருப்பி அடிக்கும். தன்னால முடியலேன்னா, பெரியவங்களைக் கூட்டி வந்து அடிக்கும். நீயும் துணைக்கு ஆள் தேட வேண்டி வரும். இரு தரப்பாரும் மாறி மாறி அடிச்சிக்க ஆரம்பிச்சா, யாருமே சந்தோசமா வாழ முடியாது” என்று சொல்லித் திருத்துவதே அறிவுடைமை ஆகும்.

இவ்வாறெல்லாம், எதார்த்த நிலையைப் புரிய வைத்து வளர்க்கப்படும் பிள்ளைகள், கடவுளை நம்பி, மேலும் பல மூட நம்பிக்கைகளுக்கு அடிமை ஆகாமல், சிறந்த சிந்தனையாளர்களாக உருவெடுப்பார்கள்; 

அவர்களின் சீரிய சிந்தனை சமுதாய நலனுக்கு மிகவும் பயனுடையதாக அமையும்.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக