[பிரதமர், கைகட்டிக்கொண்டு கவனிக்கும் அளவுக்குத் தகுதியுள்ளவரா ஜக்கி?!]
மனம்போன போக்கில் புரியாத தத்துவங்கள் பேசிப் பிரபலமாகித் தன்னைச் 'சத்குரு' என்று அறிவித்துக்கொண்ட, கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்த ஜகதீஷ் வாசுதேவ் பற்றிப் பல பதிவுகள் எழுதியுள்ளேன்.
வயதான நிலையிலும்[75?] ஆடம்பரமாக ஆடைகள் உடுத்து, ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம் என்று அமர்க்களப்படுத்தும் இந்தப் போலிச் சாமியாரின் கவர்ச்சிகரமான தோற்றத்திலும், தத்துவம் என்னும் பெயரில் சளைக்காமல் இவர் நிகழ்த்தும் பொய்யுரைகளிலும் மக்களில் பெரும்பகுதியினர் மயங்கிக்கிடப்பது நமக்கு வியப்பை உண்டுபண்ணவில்லை. காரணம், எப்போதுமே உண்மையைக் காட்டிலும் போலிகளின் மீது நம் மக்களுக்குத் தனி மதிப்பு உண்டு.
நம்மைப் பெரும் வியப்பில் ஆழ்த்துவது, நடுவணரசு இந்த நபருக்கு விருதுகள் அளித்துக் கவுரவிப்பதும், இவர் செய்யும் ஏமாற்று வித்தைகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும்தான்.
இவரைப் பற்றி எழுத்தாளர்கள் நிறையவே எழுதியிருக்கிறார்கள். அவர்களுள் மதன் அறிவழகனும் ஒருவர்[https://www.meiarivu.com].
'மெய்யறிவு'த் தளத்தில் ஜக்கி குறித்து மிக விரிவாக எழுதியுள்ளார் இவர்[இவருக்கு நம் நன்றி].
அந்தக் கட்டுரையிலிருந்து, ஜக்கி மிகப் பெரும் பணக்காரர் ஆன விதம் தொடர்பான தகவல்களை மட்டும் திரட்டிப் பதிவாக்கினேன் உங்களின் வாசிப்பிற்காக.
* * * * *
கட்டுரைத் தலைப்பு: 'யாரிந்த ஜக்கி வாசுதேவ்?'
கோவையில் ‘சஹஜ ஸ்திதி யோகா’ என்று அப்போது அழைக்கப்பட்ட தன் வகுப்புகளில் ஆசனங்கள், பிராணயாமக் கிரியாக்கள் மற்றும் தியானம் போன்றவற்றைக் கற்றுக் கொடுத்தார். அதன் மூலம் படிப்படியாகப் பிரபலமானார். ஜக்கியிடம் பணம் குவியத்தொடங்குகிறது. அதுவரை ‘ஜாவா’ மோட்டார் பைக்கில் ஜாவா வாசுதேவாக இருந்தவர் மாருதி காரில் ஜக்கி வாசுதேவாக வலம் வரத்தொடங்கினார்[பின்னர் 'ஹெலிகாப்டர் வாங்கினார்].
1994இல் அந்த இடத்தைப் பதிவு செய்து ஈஷா யோக மையத்தை நிறுவினார் ஜக்கி. அங்கு நிலைகொண்டபின் மேலும் பல ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்தார். தற்போதைய நிலவரப்படி ஏறத்தாழ 400 ஏக்கர் நிலம் நேரடியாகவும் பினாமி பெயரிலும் ஜக்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறுகிறார்கள். ஆசிரமம் நிறுவியதற்குப் பின், இயற்கை எழில் கொஞ்சும் சூழல் மக்கள் மனங்களைக் கவர, யோகா வியாபாரம் செழிக்கிறது.
‘யோக’ மார்க்கத்தைவிடவும் ‘பக்தி’ மார்க்கம் ரொம்பவே லாபகரமாக இருந்தது. வியாபாரச் சூச்சமத்தைக் கண்டடைந்தவர் அத்தோடு விடுவாரா என்ன?
“ஞானத்தின் பிரம்மாண்டம்” என்ற தலைப்பில் லிங்க பைரவி குறித்துக் கட்டுரை எழுதத் தொடங்கினார். அதாவது அடுத்த புராஜக்டைத் தொடங்கினார். லிங்க பைரவியின் அருமை பெருமைகளை அவிழ்த்துவிட்டார். லிங்க பைரவி வீட்டில் இருந்தால் செல்வமும் ஆனந்தமும் பெருகும் என்றார். பக்தர்களுக்கு ஆவலைத் தூண்டிய பிறகு லிங்க பைரவிக்குக் கோவில் கட்டப் போகிறேன் நிதி வேண்டும் என்றார். வழக்கம் போலப் பக்தர்கள் பணத்தைக் கொட்டிக் கொடுத்தனர். 4.5 கோடி செலவில் லிங்கபைரவிக்குக் கோவில் கட்டும் திட்டத்தை அறிவித்தார் ஜக்கி. ஆனால் வசூல் ஆனதோ 20 கோடி.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்தத் தொகையையும் ஜக்கி கோவில் கட்டச் செலவு செய்யவில்லை. கோவில் கட்டுமானப் பொருட்கள் அனைத்தையும் தனியே நன்கொடை பெற்றுக் கட்டி முடித்துவிட்டார். லிங்க பைரவிக்கு என்று வசூலித்த 80 லட்சம் தனி வருவாய்.
லிங்க பைரவிக்கு ஒட்டியானம் செய்ய வேண்டும் என்று தங்கமாக வசூலித்த நன்கொடை என்ன ஆனது என்று கேட்பதற்கு நாதியில்லை.
ஜக்கி, கடவுள் உருவாவதைக் காண வாருங்கள் என்று விளம்பரம் செய்தார். பிரம்மாண்டமாக விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
கடவுள் உருவாவதைக்[!!!!!] காணவரும் பக்தர்களுக்குக் கட்டணமாக ரூபாய் 7 ஆயிரம், 10 ஆயிரம், 50 ஆயிரம் என்று ஆரம்பித்து 10 லட்சம்வரை வசூலித்தார். 50 ஆயிரத்தில் கட்டணம் செலுத்துபவர்கள் ஜக்கியின் அருகில் இருந்து கடவுள் உருவாவதைக்[!!!!!] காணலாம். 10 லட்சம் செலுத்துபவர்கள் பிரகாரத்தின் உள்ளேயே அதாவது, லிங்கபைரவி அருகில் இருந்தே கடவுள் உருவாவதைக் காணலாம்.
இந்த நேரத்தில் பாஜக அரசு ஜக்கிக்கு விருது கொடுத்தது. இதுவரை யோகா மாஸ்டராக இருந்தவர் ஆன்மீகத் தலைவரானார்; இப்போது, இந்து மதத்தின் ஈடுஇணையற்ற தலைவராகவும் ஆகிவிட்டார்.
ஜக்கியின் ஈஸா யோகா மையப் பகுதி யானைகள் வழித்தடத்தை மறித்துக் கட்டப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் 133 யானைகள் இதன் காரணமாக இறந்துள்ளன. மனிதர்களுக்கும் யானைகளுக்குமான மோதல்கள் சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. ஈஸா யோகா மையம் முழுவதும் மலைகளில் இருந்து தகர்க்கப்பட்ட பாறைகளைக் கொண்டு நிறையக் கட்டமைப்புகளும் அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் ஜக்கியின் பசுமைப் பணிகளைப் பாராட்டி மத்திய அரசின் சுற்றுச் சூழல் துறை 'இந்திரா காந்தி பர்யவரன் புரஸ்கார்' விருதை வழங்கிக் கவிரவித்தது. ஆனால், சோகமான செய்தி என்னவென்றால் ஜக்கி நட்ட மரங்களைத்தான் காணவில்லை.
இயற்கை, பசுமை, மரங்கள் என்று இயங்கினாலும் தன் மஹா சிவராத்திரி வருமானத்தை அதற்காக ஒருபோதும் தியாகம் செய்வதில்லை ஜக்கி. தியானங்கள், மந்திர உச்சாடனைகள், இந்தியக் கலாச்சாரத்தைப் பறை சாற்றும் கலை நிகழ்ச்சிகள் என இவ்விழா, பக்தர்களை உற்சாகக் கிளுகிளுப்பின் உச்சத்தைத் தொடவைக்கும். இப்போதெல்லாம் கட்டணங்கள் பல மடங்கு கூடிவிட்டது. 50 ஆயிரம், 1 லட்சம், 1.25 லட்சம் என்று அள்ளுகிறார். அதுமட்டுமின்றி ஜக்கி படங்கள், ஜக்கி படம்போட்ட ‘T’ சர்ட்கள், புத்தகங்கள், நகைகள், ருத்ராட்சம், லிங்கம், லிங்க பைரவி சிலைகள், படிக லிங்கம், வேட்டிகள், மாலைகள், ஊறுகாய், மூலிகை தேயிலை, பிஸ்கட் என்று பெரும் வருமானம் வேறு. இவை எதற்கும் ரசீது கிடையாது. அப்படியே நீங்கள் ரசீது கேட்டால் நன்கொடை ரசீதுதான் வழங்கப்படும்.
பக்தர்களின் வாரிசுகளை அறிவில் சிறந்த மாணவர்களாக உருவாக்கப் போவதாக அறிவித்துப் பள்ளிக்கூடங்கள் நடத்துகிறார் ஜக்கி. தமிழகத்தில் எட்டு ஈஷா வித்யா பள்ளிகளும், ஆந்திராவில் ஒன்றும் என மொத்தம் ஒன்பது பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன. இவற்றில் 8,132 மாணவர்கள் பயில்கின்றனர். ஒவ்வொரு மாணவனுக்கும் லட்சங்களில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
ஜக்கியின் சீடர்கள் இன்று ஆண்களும் பெண்களுமாக 4000 பேர் இருக்கின்றனர். இவர்களில் பலர் தங்கள் சொத்துகளை ஜக்கியிடம் ஒப்படைத்துவிட்டுத் துறவிகளாகவும் ஜக்கியின் சேவகர்களாகவும் வாழ்கின்றனர்.
மத்திய அரசு (2017ஆம் ஆண்டு) நாட்டின் உயர்ந்த விருதான `பத்ம விபூஷண்` வழங்கிக் கவுரவித்தது. அதோடு பிரம்மாண்டமான ஆதி யோகி சிலையைத் திறந்து வைக்க நாட்டின் பிரதமர் மோடி நேரில் வருவதாக அறிவித்தார்[வந்து திறந்துவைத்தார்].
பிரதமர் மோடி நேரில் வருகை தந்து திறந்துவைத்த ஆதியோகி சிலை அமைக்கப்பட்ட இடம் மொத்தம் 44 ஏக்கர் அளவைக் கொண்டது. இந்த நிலம் அச்சு சாமிக் கவுண்டர் என்பவர் வினோபாவேயின் பூமிதான இயக்கத்திடம் ஒப்படைத்து, அது அச்சுசாமிக் கவுண்டரிடம் பண்ணை ஆட்களாக இருந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த 13 குடும்பங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. இன்று அந்த நிலங்கள் அபகரிக்கப்பட்டு ஜக்கியிடம் இருக்கின்றன. அங்குதான் ஆதியோகி சிலை தியான நிலையில் அமர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலத்தை மீட்டுத் தர ராஜ்குமார் என்ற இளைஞர் முயன்றார். அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த செல்வி. ஜெயலலிதாவை(21-1-2008) நேரில் சந்தித்துப் புகார் அளித்து உதவுமாறு கோரினார். புகார் கொடுத்த ஐந்து நாட்களில் (26-1-2008) ராஜ்குமார் கொலை செய்யப்பட்டார்!
பாலியல் குற்றத்தின் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டதாகக் காவல் துறை வழக்குப் பதிவு செய்து பிரச்சனையைத் திசை மாற்றியதாகவும், ராஜ்குமார் அங்குள்ள பழங்குடி மக்களுக்கு உதவி வந்தவர் என்றும், அவர் பழங்குடிகளுக்குப் பஸ் வசதி, பள்ளிக்கூடங்கள் ஏற்பாடு செய்ய உழைத்தவர் என்றும், அதனால் அவருக்கு நீதி வேண்டி ஒத்திசாமி என்ற விவசாயிகள் சங்கத் தலைவர் நீதிமன்றம் சென்று மறுவிசாரணைக்கு முயற்சித்தார். ஹைகோர்ட்டில் மறு விசாரணைக்கான உத்தரவும் வந்தது. ஆனால், சில நாட்களில் ஒத்திசாமி சென்னை லாட்ஜ் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
==========================================================================https://www.meiarivu.com/2020/02/22/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D/