எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 4 மே, 2024

பெரும் பேரழிவு காத்திருக்கிறது! அடங்கி அரவணைத்து வாழ்வீர்!!!

பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணினி உருவகப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் மூலம் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டனர். ஆய்வில், 250 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு பூமியில் பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கண்டுபிடித்துள்ளனர்.

ஆய்வுக் குழுவின் தலைவர் அலெக்சாண்டர் ஃபார்ன்ஸ்வொர்த் கூறுகையில்.....

//அப்போது பூமியின் வெப்பநிலை 70 டிகிரி செல்ஸியஸை எட்டும். உலகில் கார்பன் டை ஆக்சைடின் அளவு இப்போது இருப்பதைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.

பூமி முதலில் சூடாகவும், பின்னர் வறண்டதாகவும், இறுதியாக வாழத் தகுதியற்றதாகவும் மாறும். வெப்பம் தாங்காமல் எரிமலைகள் வெடித்துச் சிதறும். பூமியின் பெரும் பகுதி எரிமலைக் குழம்புகளால் மூடப்படும்.

மிக மிகக் கடும் வெப்பம் காரணமாக. பூமியில் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் அழிந்துவிடும்.

66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புகூட இதேபோல ஒரு பெரும் பேரழிவு நிகழ்ந்திருக்கலாம்[டைனோசர்கள் அந்தக் காலக்கட்டத்தில்தான் அழிந்திருக்கக்கூடும்]// என்கிறார்.

கடும் எச்சரிக்கை!

250 மில்லியன் ஆண்டுகளுக்கு அப்புறம்தானே இந்தப் பேரழிவு நிகழப்போகிறது. இப்போது இருப்பவர்களில் எவரும் அப்போதுவரை வாழப்போவதில்லை. இது குறித்து நாம் கவலைப்பட ஏதுமில்லை” என்றெண்ணி இச்செய்தியை எவரும் அலட்சியப்படுத்த வேண்டாம்.

காரணம்:

நம் புற உடம்புதான் அழிகிறதே தவிர, அக உடம்பிலுள்ள ஆன்மா அழிவதில்லை. எத்தனை எத்தனை எத்தனையோ மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னரும் அது அப்போது வாழ்கிற மனித உடம்புக்குள் இருந்துகொண்டுதான் இருக்கும்.

மிகை வெப்பத்தால் ஒட்டுமொத்த உலகமும் பற்றி எரியும்போது, அதில் சிக்கி நம் உடம்பு அழிவதோடு ஆன்மாவும் அளப்பரிய வேதனையை அனுபவிக்கும் என்பது உறுதி.

ஆகவே மனிதர்களே[வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்] மனமறியத் தப்புத்தண்டாவில் ஈடுபடாமல் பரம யோக்கியராய் வாழ்ந்திடுவீர்.

அப்படி வாழ்ந்தால்.....

அடுத்தடுத்தப் பிறவிகளை ஒட்டுமொத்தமாய் அறுத்தெறிந்து, முழு முதல் கடவுளின் திருவடிகளில் அடைக்கலம் ஆவோம்[ஹி... ஹி... ஹி!!!]. 250 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பூமியில் பிறக்கும் அவல நிலை அறவே இல்லாமல்போவதால், பூமியோடு சேர்த்து ஊழித் தீயில் சிக்கித் துடிதுடித்துச் சாகும் பரிதாபத்திற்கு நாம் ஆளாகமாட்டோம் என்பதை மனதின் அடிஆழத்தில் பதிய வைப்பீர்!

நல்லவராக வாழ்வீர்! அனைவரையும் அரவணைத்து வாழ்வீர்!!

ஒரு உயிரினம் கூட மிச்சமிருக்காது; பூமியே மொத்தமா அழிஞ்சிரும் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை! | Earth Will Be Destroyed Due To Carbon Dioxide

https://ibctamilnadu.com/article/earth-will-be-destroyed-due-to-carbon-dioxide-1714724476

அட, சே... வலைப்பக்கம்! ஐயகோ ‘யூடியூப்’!!

ன்னை நானே உச்சி முகந்து[படத்தில்], வியந்து பாராட்டி, மகிழத் தூண்டும் என் படைப்புகளில்[ஹி... ஹி... ஹி!!!] கீழ்வருவதும்* ஒன்று. இந்த என் தளத்தில் இது வெளியானபோது[6 ஆண்டுகளுக்கு முன்பு] பெற்ற ‘பார்வை’ எண்ணிக்கை 363.

‘யூடியூப்’இல் வெளியிட்டால் அதிக அளவில் ‘பார்வை’களைப் பெறலாம் என்னும் நப்பாசையுடன் எனக்கான தளத்தில், [ஆறறிவன்@user-hu4jj1dt5g  >copy&paste] பதிவு செய்தேன்.

இதற்கான வருகையாளர் எண்ணிக்கை ‘07’[பல ‘குப்பை’[?]க் காணொலிகளுக்கு ஆயிரக் கணக்கிலும் லட்சக்கணக்கிலும் பதிவாகிறது! மனம் பொறாமையில் வெந்து புழுங்கியது; புழுங்குகிறது!!] மட்டுமே.

[“இனி வலைப்பக்கமும் வேண்டாம், ‘யூடியூப்’ம் வேண்டாம்” என்று உறுதி பூண்டேன். இது வெறும் பிரசவ வைராக்கியம் போன்றதுதான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!?]

                        * நான் விஞ்ஞானி அல்ல;
                         ஞானியும் அல்லேன்.
                        'என் கடன் பணி செய்து கிடப்பதே' 
                         என்று 
                         காலமெல்லாம் களப்பணி ஆற்றும்
                         கருணாமூர்த்தியும் அல்லேன்.
                         ஓவியம் படைத்தோ காவியம்
                         இயற்றியோ 
                         
                         ஆடலும் பாடலும் நிகழ்த்தியோ
                         மாந்தரை மகிழ்விக்கும் நல்ல
                         கலைஞனும் அல்லேன்.
                       
                         'நான்' வெகு சாமானியன்;
                          சாதிக்கும் திறன் இல்லாதவன்
                          என்பதை அறிந்திருந்தும்
                          
                          கோடானுகோடி உயிர்கள் தன்
                          கைவசம் இருக்க
                          இம்மண்ணில் 
                         ''நீயும் இனவிருத்தி செய்;
                          உன்னால் சாதிக்க முடிந்தது
                          அது மட்டுமே'' என்று
                          இங்கு  என்னை அனுப்பிவைத்த 
                          அவன்.....
                          ஓர் 'அரைக் கிறுக்கன்'.

                          நான் கேட்கும் 
                          எந்தவொரு கேள்விக்கும் விடையில்லை
                          என்பது தெரிந்திருந்தும்.....

                           ''யாரவன்?
                           அவன் எப்படி இருப்பான்?
                           என்னைப் படைத்து வழிநடத்தும்
                           அதிகாரத்தை
                           அவன் எங்கே பெற்றான்?
                           எப்படிப் பெற்றான்?
                           பெற்றுத் தந்தவர் யார்?''
                           என்றெல்லாம் கேள்வி எழுப்பித்                                                                                  திரியும் நான்.....
                           ஒரு முழுக் 'கிறுக்கன்!

                 
*   *   *   *   *
'யூடியூப்’ காணொலி: