செவ்வாய், 10 மார்ச், 2026

கடவுளின் ‘இருப்பு’ நிரூபிக்கப்படுவது எப்போது? எப்படி?

ரு நாத்திகன் கடவுளைப் போற்றும் ஓர் ஆன்மிக ஞானி[சத்துக்குரு ஜக்கி சாயலில்]யைச் சந்தித்தான்; “கடவுளை உம்மால் காட்டமுடியுமா?” என்றான்.

“முடியும்” என்ற ஞானி, சற்றும் எதிர்பாராத வகையில் நாத்திகனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
“ஐயோ அம்மா” என்று அலறினான் நாத்திகன்.

“ஏன் அலறினாய்?” என்றார் ஞானி.

“வலித்தது” என்றான் நாத்திகன்.

“வலியா? அதை எனக்குக் காட்டு” -அவர்.

வேதனையிலும் சிரித்தான் நாத்திகன். “வலியை எப்படிக் காட்ட முடியும்?” -என்று கேட்டான்.

“காட்ட முடியாது. உணரத்தான் முடியும். அது மாதிரி கடவுளை உணரலாமே தவிரக் காட்ட முடியாது” -ஞானி.

சற்று நேரம் மௌனமாக இருந்த நாத்திகன், “இப்போ நான் கேள்வி கேட்கிறேன். நீங்க பதில் சொல்லணும்” என்றான்.

“சரி” என்றார் ஞானி.

கேட்டான் நாத்திகன்: “கடவுளைக் காட்ட முடியுமா?” 

“காட்ட முடியாது.”

அடுத்த வினாடியே அவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் நாத்திகன்.

“ஐயோ கடவுளே!” என்று அலறினார் அவர்.

“ஏன் அலறினீர்கள்?” என்றான் நாத்திகன்.

”வலித்தது.”

“அதைக் காட்ட முடியுமா?”

“காட்ட முடியாது. உணரத்தான் முடியும்” -அவரின் குரலில் கடுகடுப்பு.

“உணர்ந்தது எப்படித் தெரியுமா? என் கை அடித்ததால். அதாவது, ‘தொடுதல்’ என்னும் செயலால். இப்படி, தொடுதல், காணுதல், கேட்டல், சுவைத்தல், சுவாசித்தல் என்று ஐம்புல நுகர்ச்சியின் மூலம் உம்மால் அவரை உணர்த்த முடியாது. ஆறாவது அறிவால்கூட அனுமானிக்க முடியுமே தவிர, கடவுளின் இருப்பை உணரச் செய்து உறுதிப்படுத்தல் இயலாது” என்றான் நாத்திகன்.

தொடர்ந்து, “கடவுள் உண்டா இல்லையான்னு காலங்காலமாய் மனிதர்கள் வாதப்பிரதிவாதங்கள் நிகழ்த்தியும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அண்டவெளியில் காட்சியளித்து, ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் கேட்கும்படியாக, “கடவுளாகிய நான் இருப்பது உண்மை” என்று அவர்கள் நம்பும் வகையில் சொல்லும்படி[சாத்தியமா?> கடவுள் நினைத்தால் இதுவும் எதுவும் சாத்தியம் ஆகலாம். ஹி... ஹி... ஹி!!!], உங்களைப் போன்ற ஞானிகளும் அவதாரங்களும் இணைந்து கடவுளிடம் கோரிக்கை வைக்கலாமே,  செய்வீர்களா?”  என்று நக்கலாகக் கேட்டான் நாத்திகன்.

மௌனம் சுமந்து இடம்பெயர்ந்தார் சத்துக்குருவின் சாயலில் காட்சியளித்த ஆன்மிக ஞானி.