புதன், 26 பிப்ரவரி, 2014

பிறந்த இடத்தைத் தேடுதே பேதைமட நெஞ்சம்!!!

மேற்கண்ட ‘வாசகம்’ பதினெண் சித்தர்களுள் ஒருவரான பட்டினத்தார், மனம் வெறுத்துச் சொன்னது.

மனதில் எவ்வித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் தராமல் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்..........

‘மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மட்டுமல்ல, ஏனைய இயற்கைப் பொருள்களுக்கும் பிறந்த இடத்தை நாடிப் போகும் குணம் உண்டு’ என்று.

தன் மையப் பகுதியிலிருந்து அணு ஆற்றலை உற்பத்தி செய்வதோடு, சுயமாகவே ஒளிவிட்டுப் பிரகாசிக்கிற ‘வெப்ப வாயுக் கோளம்’தான் சூரியன் என்கிறது விஞ்ஞானம்.

ஓய்வு ஒழிச்சலின்றி அயராது உழைத்து ஆற்றலை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் இந்தச் சூரியனில் எரிபொருள் தீர்ந்துவிட்டால் என்ன ஆகும்?

அது சுருங்க ஆரம்பிக்கும். அதிலுள்ள பொருள்கள் ஒன்றன்மீது ஒன்று ஒட்டி நெருக்க, சூரியனின் அடர்த்தி அதிகரிக்கும். அடர்த்தி அதிகமாவது என்றால், சிறிய இடத்தில் அதிகப் பொருள் சேர்ந்துவிடுவது.

இக்கட்டத்தில், நியூட்டனின் ஈர்ப்பு விசை விதிப்படி, சூரியனின் ஈர்ப்புவிசை அதிகமாகி அதன் அருகிலுள்ள புதன் [Mercury], வெள்ளி [Venus] போன்ற கிரகங்கள் சூரியனுக்குள் இழுக்கப்படும்.

இப்போது சூரியனின் எடை மேலும் அதிகமாகும்; ஈர்ப்பு விசையும் கூடும்.

அருகிலுள்ள பூமி போன்ற பிற கோள்களையும் பொருள்களையும் அது இழுத்துக்கொண்டே இருக்கும்.

அதன் ஈர்ப்பு விசை மிக மிக மிக அதிகமாகி ஒளியைவிட வேகமாகப் பயணிக்கும். இந்நிலையில், அது ஒளியைக்கூட விழுங்கிவிடும்!

இப்போது, சூரியன் ஒரு கருந்துளை [Black Hole] போல் காட்சியளிக்கும்.

மேற்கண்ட அதிசயம், சூரியன் தன்னிடமுள்ள எரிபொருளை இழந்துவிடும் நிலையில் நிகழ்வதாகும்.

ஆக, சூரியனிலிருந்து வெளிப்பட்ட பூமி முதலான கோள்களும் பிறவும் மீண்டும் சூரியனுக்குள்ளேயே சங்கமம் ஆகிவிடும்! [பிறந்த இடம் தேடுதல்!]

இது நிகழவிருப்பது எப்போது?

சூரியனிடமுள்ள எரிபொருள் இன்னும் 500 கோடி ஆண்டுகளுக்குத் தாக்குப்பிடிக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்களாம்.

அதனால், மனித இனம் சூரிய நெருப்பில் கரையப் போவது இப்போதைக்கு இல்லை என்றும் ஆற்றுப்படுத்துகிறார்களாம். ஆனாலும்...........

நீங்கள் எப்படியோ, என்னால் கவலைப்படாமல் இருக்க முடியலீங்க.

ஒவ்வொரு மனித உடம்புக்குள்ளும் ஆன்மா இருக்கிறது. அது, அடுத்தடுத்துப் பிறவிகள் எடுத்துக்கொண்டேயிருக்கும் என்று ஆன்மிகவாதிகள் அடித்துச் சொல்கிறார்கள்.

எனவே, நானொருவன் செத்துச் செத்துப் பிறந்துகொண்டிருப்பதும் சாசுவதம்தான்.

நான் மோட்சலோகம் போவதெல்லாம் சாத்தியமே இல்லை; பூமி சூரியனில் கரையப்போகும் அந்தக் காலக்கட்டத்தில்,  மனிதனாக இல்லையென்றாலும் ஒரு நாயாகவோ நரியாகவோ பன்றியாகவோ கழுதையாகவோ பிறந்துதானிருப்பேன். பூமியோடு சேர்ந்து சூரிய நெருப்பில் சிக்கி வெந்து புழுங்கிச் சாம்பலாகப் போவதை நினைத்தால்..........

 இப்போதே ஈரக்குலையெல்லாம் நடுங்குதுங்க!!!

[இப்பதிவில், வேறு ‘எதையோ’ எதிர்பார்த்து வந்திருந்தால், என்னை மன்னித்துவிடுங்கள்!]

*************************************************************************************

எனக்கு விஞ்ஞானமெல்லாம் தெரியாது என்றாலும், அதுபற்றிப் பதிவு எழுத ரொம்பவே ஆசை! 

‘பூஜ்யத்திலிருந்து பூலோகம்’ [உலக இயற்கை ஆராய்ச்சி மையம், பாப்பாரப்பட்டி-636809; தர்மபுரி மாவட்டம். முதல் பதிப்பு: 2007] என்ற நூலிலிருந்து தகவல்களைச் சுட்டுக் கொஞ்சமே கொஞ்சம் சுவையும் சேர்த்திருக்கிறேன்!!

*************************************************************************************













திங்கள், 24 பிப்ரவரி, 2014

இறையன்பு, I.A.S., அவர்களுக்கு ‘இறை வெறுப்பு’ காமக்கிழத்தனின் வேண்டுகோள்!

பிரபல எழுத்தாளர் இறையன்பு அவர்களுக்கு என் அன்பும் வணக்கமும்.

முப்பதுக்கும் மேற்பட்ட தரமான நூல்களைப் படைத்திருப்பதோடு, தமிழில் உள்ள அத்தனை முன்னணிப் பருவ இதழ்களிலும் எழுதியவர்; எழுதிக்கொண்டிருப்பவர் என்ற காரணத்தால், ஆட்சித்துறையின் உயர் அலுவலரான தங்களுக்குப் ‘பிரபல எழுத்தாளர்’ என்று அடைமொழி கொடுத்திருக்கிறேன்.

தாய்மொழியாம் தமிழ் மீது அளவற்ற பற்றும், இன உணர்வும், இளைஞர்கள் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறையும் கொண்ட தங்களை மனப்பூர்வமாய் மதித்துப் போற்றுபவன் நான் என்பதைப் இப்பதிவின் தொடக்கத்திலேயே தங்களுக்கு உணர்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன். காரணம்..........

நான் முன்வைக்கவிருக்கும் ‘வேண்டுகோள்’ தங்களைச் சற்றேனும் மனம் வருந்தச் செய்யும் என்பதே.

தினத்தந்தி நாளிதழின் இணைப்பாய் வெளிவரும் ஞாயிறு மலரில், ‘உலகை உலுக்கிய வாசகங்கள்’ என்னும் தலைப்பில் தொடர்ந்து எழுதுகிறீர்கள்.

23.02.2014 ஞாயிறு மலரில், இந்திய மெய்ஞான மரபில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியவராகச் சொல்லப்படும் ‘ஆதிசங்கரர்’ பற்றிக் கட்டுரை படைத்திருக்கிறீர்கள்.

தாங்கள் இறைப்பற்று மிக்கவர். தாங்கள் நம்புகிற இறைவன் பற்றியோ, அவரின் அடியார்கள் பற்றியோ, இறைவனின் அவதாரங்கள் எனப் போற்றப்படும் மகான்கள் பற்றியோ தாங்கள் எழுதுவதை நான் எவ்வகையிலும் ஆட்சேபிக்க முடியாது; கூடாது. அது தங்களுக்குள்ள உரிமை.

ஆயினும், மேற்குறித்த ஆதிசங்கரர் பற்றிய கட்டுரையைப் படித்தபோது எனக்குள் எழுந்த சில ஐயப்பாடுகளைத் தங்கள் முன் வைப்பதே இப்பதிவின் நோக்கமாகும்.

அதில்...........

காசி சென்ற சங்கராச்சாரியார், அங்கிருந்த வித்வான்களையெல்லாம் வாதத்தில் வென்று அத்வைதக் கொள்கையை நிலைநாட்டியதை மிகவும் சுவைபடச் சொல்லியிருக்கிறீர்கள்.

காசியிலிருந்து மிதிலைக்குச் சென்று, அங்கிருந்த மண்டன மிச்சிரர் என்பாருடன் பல நாட்கள் வாதம் புரிந்து வென்ற கதையையும் அழகாகப் படம் பிடித்துள்ளீர்கள்.

பாராட்டுகள்.

வாதத்தில் தோற்ற மண்டன மிச்சிரரின் மனைவி பாரதி, ஆதிசங்கரருடன் வாதம் புரிந்து வெற்றி பெற அவாவுகிறார்.

வாதம் தொடங்குகிறது.

தன் தோல்வியை முன்கூட்டியே உணர்ந்த பாரதி, சங்கரர் சன்னியாசி ஆனதால், காமக்கலை குறித்து விவாதித்தால் அவர் தோற்றுவிடுவார் என நம்பி, தன் விருப்பத்தை வெளியிடுகிறார்.

அதற்கு ஒப்புதல் தந்த சங்கரர், சில நாள் அவகாசம் பெற்று, இறந்துபோன ஓர் அரசனின் உடம்பில் புகுந்து, அவனின் மனைவியுடன் புணர்ச்சி செய்து, காமக்கலையில் தேர்ச்சி பெற்று, வாதத்தில் பாரதியை வென்றதாகக் கதை செல்கிறது.

இறையன்பு அவர்களே, இந்த நிகழ்வை விவரித்து எழுதுகிற போது தங்களின் மனதில் எந்தவித உறுத்தலும் இடம்பெறவில்லையா என்பதே எனக்கு ஏற்பட்ட முதல் சந்தேகம்.

கூடுவிட்டுக் கூடு பாய்தல் என்பது புராதனக் கதைகளில் மட்டும்தானே சாத்தியம்?

ஆதிசங்கரர் வாழ்விலும் இது நடந்தது என்று அறிவுஜீவியான தங்களால் எப்படி நம்ப முடிந்தது?

இந்த இருபதாம் நூற்றாண்டிலும் இம்மாதிரி அபத்தக் கதைகளையெல்லாம் ஆதியோடந்தமாய் எழுதிப் பல லட்சம் வாசகர்களுக்குப் ‘படையல்’ செய்கிறீர்களே, இது ஏன்?

வாசகர்கள் இதையெல்லாம் நம்ப வேண்டும். இதன் மூலம் அவர்களின் பகுத்தறிவு வளர்ச்சி தடைபட வேண்டும் என்று நினைக்கிறீர்களே, இது அடுக்குமா?

மாண்டு போனவனின் சடலத்தில் புகுந்து அவன் மனைவியைப் புணர்ந்தது சன்னியாசியான ஆதிசங்கரரின் கயமைக் குணத்துக்கு எடுத்துக்காட்டு என்பதைத் தாங்கள் உணரத் தவறியது ஏன்?

காமக்கலை குறித்த விவாதத்திற்குப் பதிலாக, ‘கொலை புரியும் கலை’ குறித்து விவாதிக்கப் பாரதி அழைத்திருந்தால், யாரையேனும் கொலை செய்துவிட்டு வந்திருப்பாரா சங்கரர்?

இறையன்பு அவர்களே, எத்தனை உயர்ந்த சிந்தனையாளர் தாங்கள்! ஏனிப்படிச் சறுக்கி விழுந்தீர்கள்?!

எட்டு வயதாகியிருந்த ஆதிசங்கரர் ஒரு குளத்தில் குளித்துக்கொண்டிருந்த போது, அவரின் காலை ஒரு முதலை பற்றிக்கொள்ள, “அம்மா, என் கடைசிக் கட்டத்திலாவது நான் சந்நியாசியாக அருள் புரி” [அந்த நிமிடம் வரை தாயின் அனுமதி கிடைக்கவில்லையாம்] என்று தன் தாயிடம் மன்றாட, அவரும் அனுமதியளிக்க, முதலை சங்கரரை விடுவித்து அகன்றதாகவும் கதை பின்னியிருக்கிறீர்கள்.

மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் இறையன்பு, இவையெல்லாம் நடந்த நிகழ்வுகள் என்று நம்பித்தான் எழுதினீர்களா?

“ஆம்” என்றால், வாசகனின் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கும் தீய செயலை நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்று நான் குற்றம் சாட்டினால் அதை எவ்வகையில் மறுத்துரைக்கப் போகிறீர்கள்?

அன்புகொண்டு மறுமொழி தாருங்கள் இறையன்பு.

தங்கள் அன்புள்ள,                                                                                   காமக்கிழத்தன்      


%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%








சனி, 15 பிப்ரவரி, 2014

இவரா பாரதியாரின் பிரதான குரு?!

‘எச்சில் இலைகளுக்கு நாய்களுடன் சண்டையிடுபவர் குள்ளச்சாமி!!! கள் குடிப்பார்; கஞ்சா தின்பார்; மண்ணிலே புரள்வார். இவரைக் கண்டால் பெண்கள் அதிகம் மரியாதை செலுத்துவார்கள்! பாயசம் முதலியவை தந்து உபசரிப்பார்கள்!!’

‘இத்தனைக்கும், நாலடி உயரம் கொண்ட குள்ள மனிதர்; கரிய உருவம்; குண்டுச் சட்டியைப் போல் முகம்; அரையில் கந்தல்; தோளில் அழுக்கு மூட்டை. இவர் திக்கித் திக்கிப் பேசுவது போல் வித்தியாசமான ஒலிகளை எழுப்புவார்; அதிகம் பேசுவது கிடையாது; பசிக்கும் போது கிடைத்ததைத் தின்பார்.’

இவர்தான் நம் மகாகவி பாரதியாருக்குப் பிரதான குருவாக விளங்கினாராம்!

பாரதியார் தம் கட்டுரைகள் பலவற்றில் குள்ளச் சாமியாரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் [ஆதாரம்: ‘பாரதியாரின் கடிதங்கள், தொகுப்பும் பதிப்பும்:ரா. அ. பத்மநாபன், காலச்சுவடு பதிப்பகம்.ஐந்தாம் பதிப்பு, ஜூலை 2007].

குள்ளச்சாமி, பல அதிசயங்களை நிகழ்த்தியவர் என்கிறார் பாரதியார்.

சாமியைப் பழித்த வேணு முதலிக்கு அவர் ஆறடி உயரமுள்ளவராகக் காட்சி தந்து முதலியை மிரள வைத்தாராம்!

ஒரு கண்ணில் சூரியன் போலவும், ஒரு கண்ணில் சந்திரன் போலவும், ஒரு புறம் பார்த்தால் சிவபிரான் போலவும் இன்னொரு புறம் பார்த்தால் விநாயகர் போலவும் காட்சியளித்து பிரமிக்க வைத்தாராம்!

“என் தொழில் வண்ணான் தொழில்; ஐம்புலன்களாகிய கழுதை மேய்க்கிறேன்; அந்தக்கரணமான துணிகளை வெளுக்கிறேன். நான் புறத்தே சுமக்கிறேன். நீ அகத்தே பெருங்குப்பை சுமக்கிறாய்” என்று பாரதியிடம் சொல்வாராம்.

இவரை மகான் என்றும் அஷ்டமா சித்திகள் பெற்ற பரம யோகி என்றும் புகழ்கிறார் பாரதியார்.

இவற்றையெல்லாம் நம்ப முடியவில்லைதானே?

நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.

‘பாரதி அறுபத்தாறு’வில் இத்தகவல்கள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார் ‘பாரதியின் கடிதங்கள்’ நூலாசிரியர் ரா.அ. பத்மனாபன் அவர்கள்.

புதுவையிலிருந்த குள்ளச்சாமியைச் சென்னைக்கு அனுப்பி வைக்குமாறு புதுவைச் சீடர் [பாரதியின் சீடர்] ஒருவருக்கு 1920இல் பாரதி எழுதிய கடிதத்தையும் வெளியிட்டிருக்கிறார் ஆசிரியர்.

கடிதத்தில், நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய கருத்து ஏதும் இல்லையெனினும், பாரதி தன் கைப்பட எழுதிய கடிதத்தைப் படித்த திருப்தியைப் பெறலாம். படியுங்கள்.

#சீமான் கனகராஜாவுக்கு நமஸ்காரம்.

தயவு செய்து இந்தக் கடிதம் கண்டவுடன் குள்ளச்சாமி அவர்களைக் கோவிந்தன் அல்லது வேணு ஸகிதமாக மேலே காட்டிய விலாஸத்தில் எஸ்.துரைசாமி அய்யர், எம்.ஏ., பி.எல்., ஹைகோர்ட் வக்கீல் [Professor of Law College] அவர்களின் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். செலவுக்குப் பணம் முதலிய சகல ஸௌகரியங்களும் இங்கே நடக்கும். புதுச்சேரியிலிருந்து இங்கு வர நீ பணம் கொடுதனுப்பு. மிகவும் முக்கியமான கார்யம். உன் கையில் பணம் இல்லாவிட்டால் யாரிடமேனும் வாங்கிக் கொடுத்தனுப்பு. இங்கு வேணு வந்து சேர்ந்தவுடன் உனக்குத் தந்தி மணியார்டர் மூலமாக அந்தத் தொகையை அனுப்பிவிடுகிறோம். மிகவும்.....#

கடிதத்தின் மறுபக்கம் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார் ஆசிரியர்.

இதைப் படித்ததிலிருந்து மகாகவி பாரதியார் மீது நான் கொண்டிருந்த பெருமதிப்பில் ஒரு சிறு கரும்புள்ளி விழுந்திருப்பது போல் உணர்கிறேன்.

நீங்கள்?

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&










புதன், 5 பிப்ரவரி, 2014

அனுபவிக்க ஆண்கள்! அழுவதற்குப் பெண்களா?

ஒரு கடவுள், தன் ‘தூதரை’ ஓர் ஆண் வடிவில்தான்[முகம்மது நபி] இந்த மண்ணுலகுக்கு அனுப்பி வைத்தார். இன்னொரு கடவுள், தன் ‘புதல்வரை’ [இயேசு] அதே உருவில்தான் இங்கே பிறப்பித்தார். மற்றுமொரு கடவுள், ஆண் உருவத்தில் பல ‘அவதாரங்கள்’ எடுத்தார். ஆமைகளும்[கூர்மாவதாரம்] பன்றிகளும்[வராக அவதாரம்]கூட கௌரவிக்கப்பட்டன. பெண்ணை மட்டும் எந்தவொரு கடவுளும் கண்டுகொள்ளவில்லை!


//மதங்கள் அனைத்திலும் தலைமைக் கடவுள்கள் ஆண்கள்தான். கடவுள்கள் மட்டுமல்ல, தலைமைப் புரோகிதர்களும்கூட ஆண்களே. விவேகானந்தர் தன் சிகாகோ சொற்பொழிவில், “இந்து மதத்தின் ரிஷிகள் பெண்களாக இருந்தார்கள்” என்று சொல்லியிருக்கிறார் [இதை அவர்தான் நிரூபிக்க வேண்டும்]. அவர் கூறுவதைப் போல் ஆதிகால இந்து ரிஷிகள் பெண்களாக இருந்திருப்பார்களேயானால் இந்து மதத்தின் தலைமைக் கடவுளைப் பெண்ணாக உருவகித்திருப்பார்கள்// -https://groups.google.com/d/msg/truetamil2friends/.../96hRKWDxeDQJ.

மதங்கள் கற்பித்த கடவுளர் உலகிலும் ஆணாதிக்கமே மீதூர்ந்திருப்பதை ஆராய்வது இப்பதிவின் நோக்கமல்ல; எனினும், பெண்ணினத்துக்கு ஆணினம் இழைத்த கொடுமைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள மேற்சொன்ன கருத்துகள் தேவை.

நம் மக்களில் பெரும்பாலோர் பின்பற்றுகிற முக்கிய மூன்று மதங்களின், பெண்கள் பற்றிய மதிப்பீட்டை அறிந்துகொள்வதும்கூட  இப்பதிவிற்கான அடிப்படைத் தேவைதான்.

 ‘உங்கள் மனைவியர் உங்களுக்குரிய பண்ணைகள் [விளை நிலம்] ஆவர். உங்கள் பண்ணைக்கு நீங்கள் விரும்பியவாறு சென்று சந்ததிகளைத் தேடிக்கொள்ளுங்கள்’ என்கிறது குர்ஆன். [அத்தியாயம் 2, பாகம் 2, பிரிவு 223. [மேற்கோள்: ‘மிதிபடும் மானுடம் மீட்பின் மனவலி, முதல் பதிப்பு: மே, 2008. ஆசிரியர்: இராசேந்திர சோழன்].


‘பெண்கள், எப்போதும் ஆண்களுக்குப் பணி செய்யக் கடமைப்பட்டவர்கள்’ என்கிறது Bible. [Christian Bible: Paul to the Ephesians in the New Testament. "The women shall be servants to their men who are their masters."].

இந்து மதம், பெண்களை ஈனப்பிறவிகள்; திருமணத்திற்கு முன்பே கடவுள்களால் புணரப்பட்டவர்கள்; சுதந்திரமற்றவர்கள் என்கிறது [--பெரியார்]

“இது கடவுளின் கட்டளை” என்பதாக மதங்கள் வாரி இறைத்த பொய்களே, இந்தச் சமுதாயம் காலங்காலமாய்ப் பெண்களை அடிமைகளாய் நடத்துவதற்கு அடித் தளமாய் அமைந்தன எனலாம்.

மனிதன் காட்டுமிராண்டியாய் வாழ்ந்த காலத்திலிருந்து, பிற குழுவினர் பெண்களை அபகரிக்க முயன்ற போதெல்லாம் பலசாலிகளான ஆண்களே அவர்களுக்குப் பாதுகாப்பளித்தனர்; எனவே, அவர்களை ஆளவும் செய்தனர்.

ஆறறிவு பெற்று, கடவுள் சிந்தனையும் காலப்போக்கில் மதங்களும் தோன்ற, அவற்றில் ஆதிக்கம் செலுத்திய ஆண் வர்க்கம் பெண்களைப் பிறவி அடிமைகளாய் ஆக்கிவிட்டது.

இதன் விளைவாக, இன்றளவும் பெண்ணினத்துக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன. குறிப்பாக, பாலியல் பலாத்காரங்களின் எண்ணிக்கை ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது.

இதற்குச் சான்றளிக்கும் அசம்பாவிதங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன என்பது நாம் யாவரும் அறிந்ததே.

மறந்த, அல்லது உங்களில் கணிசமானவர்கள் அறிந்திராத ஒரு சம்பவத்தை நினைவுபடுத்தவே இந்தப் பதிவு.

பல ஆண்டுகளுக்கு முன்பு மராட்டிய மாநிலத்தில் நடந்தது இது.

ஏழு ஆண்டுகள் நடந்த இந்த வழக்கின் இறுதியில், ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி, நமது சட்டங்களின் ஓட்டை உடைசல்களுக்கும், நீதி வழங்குபவர்கள் உள்ளிட்ட ஆண்களின் ஆணாதிக்க மனோபாவத்துக்கும் ஓர் அரிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது!

‘மதுரா’ என்பவள் பழங்குடி இனத்தைச் சார்ந்த 16 வயது இளம் பெண்.

பருவம் எய்தாத நிலையிலேயே தன் காதலனுடன் ஓடிப் போகத் திட்டமிட்டிருந்தாள் என்று அவளின் சகோதரர்களாலேயே காவல் நிலையம் அழைத்துச் செல்லப்படுகிறாள்.

அவளை விசாரிப்பதாகச் சொல்லி, சகோதரர்களை வெளியே நிறுத்திவிட்டு அவளைத் தங்கள் காம வெறிக்குப் பலியாக்குகிறார்கள் காவலர்கள்.

அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட, விசாரணை நடத்திய அமர்வு நீதி மன்றம், அவள் ஓடிப்போகத் திட்டமிட்டிருந்ததால் உடலுறவுக்குப்  பழக்கப்பட்டவளாக இருத்தல் வேண்டும். காவலர்களின் செயல்பாடு வன்புணர்ச்சியின் கீழ் வராது என அரியதோர் கண்டுபிடிப்பைச் செய்து குற்றவாளிகளை விடுதலை செய்கிறது!

மேல் முறையீடு செய்யப்படுகிறது. உயர் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஆறு ஆண்டு சிறைத் தண்டனை வழங்குகிறது.

குற்றவாளிகள் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்கிறார்கள்.

“சம்பவத்தின் போது மதுரா கூச்சல் போட்டுத் தன் எதிர்ப்பைக் காட்டியதாகத் தெரியவில்லை. அவள் உடலில் காயங்கள் ஏதுமில்லை. எனவே, அவளின் விருப்பத்தோடுதான் உடலுறவு நிகழ்ந்திருக்க வேண்டும்” என்று சொல்லி காவலர்களை விடுதலை செய்கிறார் நீதிபதி!

‘பெண்களுக்கு எதிரான குற்றவியல் சட்டங்களில் எத்தனையோ ஓட்டை உடைசல்கள் இருப்பது மட்டும் குற்றவாளிகள் தப்பித்துவிடுவதற்குக் காரணமாக இல்லை. இன்னும் ஆணாதிக்க மனப்பான்மையிலிருந்து விடுபடாத நீதிபதிகளும் அரசு அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்பதையே இது போன்ற வழக்குகள் எடுத்துக் காட்டுகின்றன. இவர்களெல்லாம் திருந்தாதவரை இது போன்ற வன்முறைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்’ என்று இச்சம்பவத்தைப் படம் பிடித்துக் காட்டுகிற நூலின்[’மிதிபடும் மானுடம்  மீட்பின் மனவலி’, மங்கை பதிப்பகம், வேளச்சேரி, சென்னை. முதல் பதிப்பு: மே, 2008] ஆசிரியரான இராசேந்திர சோழன் சொல்கிறார்.

நானும் இதை வழிமொழிகிறேன்.

*************************************************************************************
முக்கிய குறிப்பு:

‘தங்களுக்கான பாதுகாப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி, ஆண்களைப் பெண்கள் பழிவாங்குகிறார்கள்’ என்று சொல்லப்படுவதில் உண்மையும் இருக்கலாம் என்ற போதிலும், அதைக் காரணம் காட்டி, தொடரும் ஆணாதிக்கப் போக்கை நியாயப்படுத்த முடியாது.

*************************************************************************************