எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 11 டிசம்பர், 2022

இவர்கள் ஐயப்பன் பக்தர்களா, செம்மறி ஆட்டு மந்தைகளா?!?!?

கீழே ஒரு காணொலி. 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அங்குச் செல்லும் பக்தர்கள் எத்தனைக் கேவலமாகக் கையாளப்படுகிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. 

இதில் இடம்பெற்றுள்ள நிகழ்வு “இவர்கள் ஆறறிவு மனிதர்களா செம்மறியாட்டு மந்தைகளா” என்று கேட்கத் தூண்டுகிறது.

தூண்களில் கயிறு கட்டி, காவலர்களால் முரட்டுத்தனமாய்த் தாங்கள் தடுத்து நிறுத்தப்படுவது எத்தனைக் கேவலம் என்பதை உணராமல், முட்டி மோதியும், தள்ளியும் தள்ளப்பட்டும் விடாப்பிடியாய் முன்னே செல்ல முயலுவது, இவர்கள் 100% ஐந்தறிவு ஜீவன்களே என்பதை உறுதிப்படுத்துகிறது.

கடவுள்களில் ஒருவராகக் கருதப்படும், ஐயப்பன், அன்று காணத் தவறினால் அப்புறம் அங்கிருந்து காணாமல் போய்விடுவாரா?

பிறிதொரு நாளில் அவரைச் சேவிக்கப் போனால், “ஏன் தாமதமாக வந்தாய்?” என்று கோபித்துக்கொள்வாரா?

இவரை விட்டால், இவர்களின் குறை தீர்க்க வேறு கடவுள்களே இல்லையா?

ஐயப்பனைப் பற்றிச் சொல்லப்படும் கதைகள் எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியமானவை என்று எப்போதுமே சிந்தித்தது கிடையாதா?

பக்தியின் பெயரால் தாங்கள் இழிவுபடுத்தப்படுவதை உணராத இவர்கள் பக்தர்கள் அல்ல; குணப்படுத்த முடியாத பித்தர்கள்.

இந்தப் பித்தர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பெருகிக்கொண்டிருக்கிறது என்பதை இந்தக் காணொலியும் உறுதிப்படுத்துகிறது.

காணொலியில், காட்சி வர்ணனையும் இடம்பெற்றுள்ளது. அதையெல்லாம் காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. கண்ணுக்குத் தென்படும் நிகழ்ச்சிகளை மட்டும் ஊன்றிக் கவனியுங்கள்.

கவனித்தால்.....

கடவுள் பக்தி மனிதர்களை எந்த அளவுக்கு அறிவிலிகளாக ஆக்கிக்கொண்டிருக்கிறது என்பது புரியும்!

  

இது இன்று வெளியிடப்பட்ட[தந்தி tv, 9 மணி நேரம் முன்பு] காணொலி என்பதால், காலம் தாழ்த்தாமல் இன்றே உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

வருகைக்கு நன்றி!

சறுக்கிய முதல்வரும் சாதித்த மேயரும்!!!!!!

//தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, நிவாரணப் பொருட்களையும் வழங்கிய பின்னர், ‘கன்வே’ காரில் பயணத்தைத் தொடர்ந்தார்.

அந்தக் காரின் ‘கன்வே’யில் சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா தொங்கியபடி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குப் பின் ஐஏஎஸ் அதிகாரியான சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் அவர்களும் கான்வே வாகனத்தில் தொங்கியபடி சென்றார்.

முதல்வரின் பாதுகாப்புக்காக, பாதுகாப்புப் படை வீரர்கள் மட்டுமே தொங்கிவருவது வழக்கம் என்ற நிலையில் சென்னை மேயரே தொங்கிக்கொண்டு சென்றது அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது; பலரின் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.//

இந்தச் செய்தி தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி ஊடகங்களிலும் வெளியாகி, பெரும் அதிர்வலைகளை உண்டுபண்ணியிருக்கிறது.

செய்திக்கு எதிர்வினை[பின்னூட்டம்] ஆற்றியவர்களும், வலைப்பதிவர்களும், சமூக ஊடகக்காரர்களும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களைக் கடுமையாகவே விமர்சனம் செய்திருக்கிறார்கள்; விமர்சனங்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

சிலரிடமிருந்து கடும் கண்டனங்களும் வெளியாகியுள்ளன.

முதல்வர் என்ற முறையில் ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகள், அனைத்துத் தரப்பினராலும், “ஆகா! ஓஹோ!!” என்று சிலாகிக்கும் அளவுக்கு இல்லையென்றாலும், “பரவாயில்லை” என்று சொல்லும் அளவுக்கு உள்ளன என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

மக்கள் நலனுக்காக ஓய்விலாமல் உழைத்துக்கொண்டிருப்பவர் ஸ்டாலின் அவர்கள்.

உண்மையில், அவருக்குச் சிறிது ஓய்வைத் தருபவை இம்மாதிரிக் கார்ப் பயணங்கள் மட்டுமே. நாள் முழுக்க மேற்கொண்ட அயராத பணிகள் காரணமாகச் சோர்வுற்றிருந்த அவர் சற்றே கண்ணயர்ந்திருப்பார். அந்த நேரத்தில், மேயர் பிரியா காரில் தொற்றிக்கொண்டதை அவர் கவனிக்காமல் இருந்திருக்கலாம்.

தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, சிறிது கண்ணயரக்கூட நேரமில்லாமல், ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டும் இருந்திருக்கலாம்.

எனவே, ஊருலகம் எப்படியோ, அடியேனுக்கு, ஸ்டாலின் அவர்கள் அறிந்து செய்த தவறு இது என்று எண்ணத் தோன்றவில்லை.

மேலும்.....

பிரியா ஒரு மாநகரத்தின் மேயர் என்றாலும், பொதுப்பணி ஆற்றும் நேரங்களில் தான் ஒரு மேயர் என்பதையே மறந்தவராக இருந்திருக்கலாம்; இந்நாள்வரை ஆண்கள் மட்டுமே ‘கன்வே’யில் பயணித்திருக்கிறார்கள் என்னும் நிலையை மாற்றிச் சாதனை நிகழ்த்தும் உத்வேகம் காரணமாக முதல்வர் பயணித்த காரில் தொற்றிக்கொண்டிருக்கலாம்.

வயதிலும் சிறியவர் என்பதால் இந்தச் செயலை அவர் மிக விரும்பிச் செய்திருக்கவும்கூடும்.

கிடைத்த அரியதொரு வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொண்டார் என்றுகூடச் சொல்லலாம்.

ஆக, முதல்வர் தனக்குரிய கடமையிலிருந்து[காரை நிறுத்தி மேயரை வேறு காரில் பயணிக்கச் செய்தல்] சறுக்கினார் என்று கொண்டாலும், ஒரு பெண்ணாக ஓடும் காரின் ‘கன்வே’யில் மேயர் பிரியா தொற்றிப் பயணித்தது ஒரு வரலாற்றுச் சாதனை என்றே கூறலாம்.

===========================================================================https://tamilminutes.com/maor-priya-in-cm-convey-car/