ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

கடவுளாம் கடவுள்...வெங்காயக் கடவுள்!!!

ஒரு காடு.

ஒரு மான் தான் ஈன்ற, சில நாட்களே ஆன குட்டிக்குப் பால் தந்து கொண்டிருக்கிறது. கொடிய விலங்குகளால் ஆபத்து நேருமோ என்ற இயல்பான அச்சத்துடன் பார்வையை அலையவிடுகிறது.

அதைக் குறி வைத்திருந்த ஒரு சிறுத்தை, அசுரப் பாய்ச்சலில் சீறிப் பாய்கிறது.

எதிர்ப்பட்ட ஆபத்தைக் குட்டிக்கு உணர்த்திவிட்டு, எகிறிப் பாய்கிறது மான்.

மான் தப்பியது. குட்டி சிறுத்தையிடம் சிக்கியது. அகப்பட்ட மான் குட்டியைத்  தன் குட்டிகளிடம் சேர்க்கிறது சிறுத்தை.

ஓடப் பார்க்கும் மான் குட்டியைச் செல்லக் கடி கடித்தும், முன்னங் காலால் இடறிவிட்டுக் கீழே தள்ளியும் அவை விளையாடுகின்றன. தாய்ச் சிறுத்தையும் கூட, அதைக் கொல்லுவது போல் பாசாங்கு செய்து குலை நடுங்க வைக்கிறது. நீண்ட நேரம் இப்படி வதை செய்த பிறகுதான் அதை அவை இரையாக்கிக் கொள்கின்றன[டிஸ்கவரி சேனலில் இடம்பெற்ற நிகழ்வு] .

உயிரைக் காத்துக் கொள்ள நடத்தும் போராட்டத்தில், அந்த மான் குட்டி படும் பாட்டை வார்த்தைகளால் விவரிக்க முடியுமா? அது அனுபவித்த துன்பம் எத்தனை கொடூரமானதாயிருக்கும். அதைவிட, நாம் பட்ட வேதனை குறைந்ததா என்ன?

இந்தக் கொடூரக் காட்சியைக் கடவுளும் பார்த்திருப்பார்தானே?

வேடிக்கை பார்த்துக் கொண்டு அவரால் எப்படிச் ’சும்மா’ இருக்க முடிந்தது?

அவர் மனம் என்ன கல்லா?

இம்மாதிரி எத்தனை எத்தனை கொடூரங்கள் அவர் படைப்பில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன?!

இவரையா, “அன்னையும் நீயே அப்பனும் நீயே” என்று புகழ்ந்து போற்றி வழிபடச் சொல்லுகிறார்கள்!!

“இதற்கெல்லாம் கடவுள் காரணமல்ல; பூர்வ ஜென்மத்தில் [கடந்த பிறவிகளில்]
உயிர் செய்த பாவம் காரணம்” என்று மனம் கூசாமல் கதைக்கிறார்களே, அவர்கள் எல்லாம் மனிதப் பிறவிகளா?!

இந்தப் பிறவியில் நேரும் துன்பத்திற்குப் போன பிறவியில் செய்த பாவம்காரணம் என்றால், அதைச் செய்ய அந்தப் பிறவியில் தூண்டியது யார்? உயிர் தானாக எதையும் செய்யாதே. முதல் முறை செய்வதற்குக் கற்றுக் கொடுப்பவர் கடவுள் அல்லவா?

இது பற்றிச் சிந்திக்கத் தெரிந்தவர்கள் கேள்வி எழுப்பிய போது, “கடவுள் ஒரு போதும் தூண்டமாட்டார். அவர் கருணையின் வடிவம். உயிர் வேறு ஆன்மா வேறு. வினை உயிரோடு சம்பந்தப்பட்டது. ஆனால், வினையின் பயனை  அனுபவிப்பது ஆன்மா. உயிர் அழியும் ஆன்மா அழியாது. அது இறைவனின் அங்கம்......” -இப்படிப் புரியாத தத்துவங்களைச் சொல்லிக் குழம்பி, கேள்வி கேட்பவரின் மூளையையும் குழப்பிச் சமாளித்தார்கள்/சமாளிக்கிறார்கள் ஆன்மிகவாதிகள்.

நாம்  கேட்கிறோம்: “இந்த மான் குட்டி கடந்த பிறவியில் தானாகவே பாவங்கள் செய்ததா?”

பதில் “ஆம்” என்றால்,  கருணைக் கடலான கடவுள் அச்செயலைத் தடுக்கவில்லையே, ஏன்?’

‘அதைச் செய்; இதைச் செய்யாதேன்னு யாரும் கடவுளுக்கு உத்தரவு போடமுடியாது” என்கிறார்கள்.

“கடவுள் தானாகவே தடுத்திருக்க வேண்டும்.  ஓர் உயிர் பாவம் செய்தால், அதற்கான தண்டனையை, அடுத்த பிறவியில் அறிவு வளர்ந்து மனமும் பக்குவப்பட்ட நிலையில் அனுபவித்தால் தவறில்லை. பிஞ்சுப் பருவத்திலேயே தண்டிப்பது அநியாயமில்லையா? இந்த அக்கிரமத்தைச் செய்யும் கடவுள், அல்லது அதை வேடிக்கை பார்க்கும் கடவுள் ஓர் அரக்கன் அல்லவா?”

“இன்னும் ஒரே ஒரு கேள்வி. ஒரு பிறவியில் செய்யும் பாவத்திற்கு அந்தப்பிறவியிலேயே தண்டனை கொடுத்தால், செய்த பாவத்தைப் புரிந்து கொண்டு உயிர்கள் திருந்த வாய்ப்பிருக்கிறது. அடுத்த பிறவியில் என்றால் அது சாத்தியம் இல்லையே. இது கூடவா கடவுளுக்குத் தெரியவில்லை?”

அப்புறம் என்ன கடவுள்? வெங்காயக் கடவுள்!

======================================================================================

சனி, 27 பிப்ரவரி, 2021

'மனிதன்-விலங்கு'...கலப்பின உயிர் ஆய்வில் ஜப்பான் விஞ்ஞானிகள்!!!


 //ஆய்விற்காக, 'மனித- விலங்கு' கலப்பினக் கருவை உருவாக்கும் ஜப்பான் ஆய்வாளர்களின் முயற்சிக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

விண்வெளி ஆய்வு உள்ளிட்டவைகளுக்குப் பயன்படுத்தும் நோக்கில், இதுபோன்ற கலப்பினத்தை உருவாக்கும் முயற்சிகள் முன்பு சோவியத் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது[என்ன ஆயிற்று?].

இது சர்ச்சைக்குரிய ஆய்வுகளில் ஒன்றாகக் கருதப்படுவதால். பல நாடுகளில் இதற்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் இந்த ஆய்வின் மூலம் மனிதர்களுக்கு உறுப்பு மாற்றுச் சிகிச்சை செய்யும்போது, தேவையான உறுப்புகளை விலங்குகளின் கருக்கள் மூலமாக வளர்த்தெடுக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த 'மனிதன் – விலங்கு' கலப்பினக் கருவை உருவாக்க வேண்டும் என்ற ஜப்பான் ஆய்வாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அந்நாட்டு அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இதற்குப் பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஆதரவுகளும், எதிர்ப்புகளும் குவிந்து வருகின்றன//[https://www.sathiyam.tv/jeppan-government-approved-human-and-animal-reasearch/ -01/08/2019 9:42]

எதிர்ப்பவர்கள் என்ன காரணத்தால் எதிர்க்கிறார்கள் என்பது பற்றியோ, ஆதரிப்பவர்கள் எதனால் ஆதரிக்கிறார்கள் என்பது பற்றியோ இக்கட்டுரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 

கூரு கெட்ட கடவுள், வதவதன்னு தேவையே இல்லாமல் கோடானு கோடி உயிர்களைப் படைத்து இந்த உலகைப் பெரிய போராட்டக் களமாக ஆக்கி வைத்திருக்கிறார். கோடிகளில் இதுவும் ஒன்றாக இருந்துவிட்டுப் போகட்டுமே என்பதுதான் நம் எண்ணம்.

ஜப்பான் ஆய்வாளர்களின் முயற்சி வெற்றி பெற மனதார வாழ்த்துவோம்!

======================================================================================


வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

'யோனிப் பொருத்தம்'...அமேசான் கிண்டிலில் என் புதிய நூல்!

புதன், 24 பிப்ரவரி, 2021

சில நேரங்களில் சில பெண்டாட்டிகள்![சிரிக்கவும் சிந்திக்கவும்]

நள்ளிரவு.

குடிசையின் தட்டிக் கதவைத் தட்டக் குனிந்தான் பொன்னுச்சாமி.

ஏனோ தயங்கினான்.

மேட்டுத் தெரு சம்பங்கி நினைவுக்கு வந்தாள். அளவான சதை மேடுகளுடன் ‘சிக்’கென்று இருப்பாள். அவள் ‘ரேட்’ அதிகம். ஒரே ஒரு தடவை அவளிடம் போயிருக்கிறான் பொன்னுச்சாமி.

பிள்ளையார் தெரு பிரபா சுமார்தான்; ஆளும் கறுப்பு. ஆனால், ‘ரேட்’ கம்மி. என்றாலும் இவன் கையில் இப்போது பைசா இல்லை. இருந்த கொஞ்சம் பணமும் ‘டாஸ்மாக்’குக்குப் போய்விட்டது.

பொன்னுச்சாமியால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. காந்திநகர் சரசுவைத் தேடிப் போனான்.

”போன வாரம் வந்து ‘இருந்துட்டு’க் கடன் சொல்லிட்டுப் போனே. இன்னிக்கும் கடனா? சீ...போ வெளியே” என்று இவனைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளினாள் அவள்.

’அதே’ நினைப்பாக இருந்த பொன்னுச்சாமி, வாடிய மனதுடன் தன் குடிசைக்குத் திரும்பினான்.

தட்டிக் கதவைத் தட்டியவாறே, “சிவகாமி...” என்று தன் மனைவியை அழைத்தான்.

கதவைத் திறந்துவிட்டுச் சுருண்டு படுத்துவிட்டாள் சிவகாமி.

மூலையில் சிம்னி விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

சிவகாமியின் காலடியில் அமர்ந்து, அவளின் கெண்டைக் காலைச் சுரண்டினான் இவன்.

இவனின் கையைத் தட்டிவிட்டாள் அவள்.

மனம் தளராத பொன்னுச்சாமி, மெல்லத் தன் ஒரு கையை அவள் மார்பின் மீது படரவிட்டான்.

‘விசுக்’கென எழுந்த அவள், “மரியாதையா விலகிப் போயிடு” என்று எச்சரித்தாள்.

“நான் உன் புருசன் சொல்றேன், படுடி” என்று குழறிக்கொண்டே அவளைக் கட்டித் தழுவ முற்பட்டான் இவன்.

எரவாணத்தில் செருகியிருந்த அரிவாளைச் ‘சரக்’கென உருவியெடுத்த சிவகாமி, “கையில் காசு இருந்தா தாசிகளைத் தேடிக்கிறே. பைசா இல்லேன்னா பொண்டாட்டி தேவைப்படுறா. பொண்டாட்டின்னா வெறியைத் தணிக்கிற வெறும் மிஷின்னு நினைச்சிட்டியா? இனி ஒரு தடவை படுடின்னு சொன்னா, கண்டதுண்டமா வெட்டிப் போட்டுடுவேன். ஜாக்கிறதை” என்று கர்ஜித்த சிவகாமி, உயர்த்திப் பிடித்த அரிவாளுடன் பத்ரகாளி போல் நின்றாள்.

குடிசையின் ஒரு மூலையில் சுருண்டு படுத்தான் பொன்னுச்சாமி.


======================================================================================
பழைய ராணி வார இதழில் வெளியான என் கதை

திங்கள், 22 பிப்ரவரி, 2021

திருமணங்களில் புரோகிதர் சொல்லும் மந்திரத்தின் பொருள்!!!!!


திருமணங்களில் புரோகிதர் பல மந்திரங்களைச் சொல்கிறார். அவற்றில் ஒன்று கீழே. 

//தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வயஸ்யாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீயான ஊரு உஷதி விஸ்ரயாதையஸ்யா முஷந்தஹா ப்ஷரே பஷேபம்...//

இது வேதத்தில் சொல்லப்பட்ட மந்திரம்

ஒரு திருமண நிகழ்வில், கல்யாண மேடையில் பெண்ணையும் மாப்பிள்ளையையும் அமரவைத்து, இதைச் சத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தார் புரோகிதர்

இதைக் கேட்ட மணப்பெண்[சமஸ்கிருதம் தெரிந்தவள்; மகா துணிச்சல்காரியும்கூட] புரோகிதரிடம், "மந்திரத்தை நிறுத்துங்க" என்றாள்.

அதிர்ச்சியடைந்த புரோகிதரும் மந்திரம் சொல்வதை நிறுத்தி, "ஏன் நிறுத்தச் சொன்னாய்?" என்பது போல் அவளைப் பார்த்தார்.

"இந்த மந்திரத்தின் பொருள் உங்களுக்குத் தெரியும்தானே?" என்று கேட்டாள் அவள்.

"தெரியும்" என்றார் புரோகிதர்.

"சமஸ்கிருதத்தில் சொல்லும்போது எப்படிச் சத்தமாகச் சொன்னீங்களோ, அதே மாதிரி தமிழிலும் உரத்த குரலில் சொல்வீங்களா?" என்றாள்.

புரோகிதர் திகைத்தார்; சொல்ல மறுத்தார்.

மணமக்களை வாழ்த்த வந்தவர்களும் தமிழில் சொல்லுமாறு வற்புறுத்தினார்கள். புரோகிதர் பிடிவாதமாக மறுத்ததோடு  திருமணத்தை நடத்தி வைக்காமலே அங்கிருந்து புறப்பட்டுப் போனார்.

மந்திரம் ஓதப்படாமல், வயதில் மூத்த ஒரு பெரியவர், பக்திப் பாடலொன்றைப் பாடிக்கொண்டே மணமகனிடம் தாலியைக் கொடுக்க மணமகனும் அதை மணமகள் கழுத்தில் கட்டினான்.

மந்திரத்தின் பொருள்.....

'நான் அவளைக் கட்டிப்பிடிப்பேன்(அவளோடு உறவு கொள்ளும் பொழுது) அப்போது எங்களது அந்தரங்கப் பாகங்கள் சரியாகப் பொருந்துவதற்கு, தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்.'

"இந்த மந்திரத்தின் அர்த்தத்தை இதைவிட நாகரீகமாகச் சொல்ல முடியாது. விளக்கமாக நான் சொல்லியிருப்பேன் என்றால் என் மீதும் என் வயதின் மீதும் உங்களுக்கு இருக்கும் மரியாதை போய்விடும்" எனகிறார் இந்த நிகழ்ச்சியை விவரித்து எழுதிய அக்கினி கோத்திரம் தாதாச்சாரியார் அவர்கள்.

[மூலத்தின் பொருள் சிதையாத வகையில் கொஞ்சம் மாற்றங்கள் செய்து வெளியிடப்பட்டது இப்பதிவு]
======================================================================================

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

பெண்களைப் புறக்கணித்து ஆண்கள் மட்டுமே நடத்தும் திருவிழா!!!


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது மலையாம்பட்டி கிராமம். 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்தக் கிராமத்திலுள்ள ஆலமரத்தடியில் 'பொங்களாயி அம்மன்' கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நள்ளிரவில் திருவிழாவும் நடக்கிறது. ஆண்கள் மட்டுமே கிடாவெட்டி, சமபந்தி விருந்து நடத்துவார்கள்.

பெண்கள் அனுமதிக்கப்படாததற்கு ஒரு கதையும் சொல்கிறார்கள்.

கோயிலுக்கு அருகே உள்ள போதமலையிருந்து ஒரு கர்ப்பிணிப் பெண் கீழே வந்தாளாம். வந்த வேலை முடிந்து மலைக்குத் திரும்பும்போது பிரசவ வலி உண்டானதாம். அக்காலத்தில் தீண்டாமை வேரூன்றியிருந்ததால் பெண்கள் யாரும் உதவ முன்வரவில்லை.

'உதவிக்கு வராத ஊரிலுள்ள பெண்களுக்குக் குழந்தை பிறக்கக்கூடாது; பிணியும் வறுமையும் இவர்களை வாட்டட்டும்' என்று சாபமும் கொடுத்துவிட்டு, இறந்து பிறந்த தன்னுடைய இரு குழந்தைகளை ஓடையில் வீசிவிட்டு உயிர் துறந்தாள்.

அவளின் சாபம் பலித்தது.

மேலும், ஓர் ஆணின் கனவில் தோன்றி, 'ஆலமரத்தடியில் எனக்குச் சிலை வைத்து, மலைவாழ் மக்கள் முன்னின்று பூஜை செய்ய, ஆண்டுதோறும் ஆடுகளைப் பலியிட்டுச் சமபந்தி விருந்து வைத்து விழா நடத்த வேண்டும்' என்றும், 'அந்த விழாவில் எனக்கு உதவாத ஊர்ப் பெண்களை அனுமதிக்கக் கூடாது' என்றும் உத்தரவிட்டாள்.

அவ்வுத்தரவின்படி நூறாண்டுகளுக்கும் மேலாக ஆடி மாதத்து நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று விழவை வெகு சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.

நோய் நொடிகள் அகன்று, பெண்கள் அழகழகான குழந்தைகள் பெற்று மகிழ்ச்சியாக வாழ்கிறார்களாம்!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் யாரோ ஒருவர், அல்லது பல ஆண்கள் சேர்ந்து கட்டிவிட்ட கதையைச் சொல்லி, பெண்களைப் புறக்கணித்து[ஏமாற்றி?] ஒரு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்கள் மட்டுமே கிடா விருந்து சாப்பிடுகிறார்கள் என்பது நம்மைப் பெரும் வியப்பில் ஆழ்த்துகிறது.

பொங்களாயி அம்மனுக்குப் பலி கொடுக்கப்படுவதும் பெண் ஆடுதான் என்பது மிகப் பெரிய சோகம்!

=======================================================







வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

சாமியே சரணம் ஐயப்பா!... 'இது' பொய்யப்பா!!!

சபரிமலையில் பொன்னம்பலமேடு என்னும் இடத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் தானாகத் தோன்றும் ஜோதிதான், மகர ஜோதி என்னும் மகா அற்புதம் என ஒவ்வொரு ஆண்டும் ஒரு பித்தலாட்டம் நிகழ்த்தப்படுகிறது.

ஓர் இடத்தில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாளில் ஒன்று தானாகத் தோன்ற முடியாது; அதற்கு வாய்ப்பே இல்லை. அப்படித் தோன்றுகிறதென்றால் அது நிச்சயம் மனித வேலையாகத்தான் இருக்கமுடியும். இதைக் கேரளப் பகுத்தறிவாளர்கள் முயன்று அம்பலப்படுத்தினார்கள்.

“1925-க்கு முன்பாகப் பொன்னம்பல மேட்டில் மகர விளக்கு எனும் தெய்வீக ஒளி காட்சியளிப்பதாக வயதான பெரியவர்கள் யாரும் சொன்னதில்லை. 1940க்குப் பிறகே இந்தக் கதை பரவியது” என்கிறார் ஜோசப் எடமருகு. இவர் கேரளாவைச் சேர்ந்த இந்தியப் பகுத்தறிவாளர் சங்கத் தலைவர்.

மகரஜோதி எப்போது முதன்முதலில் அம்பலப்படுத்தப்பட்டது என்பதைச் 'சபரிமலை அய்யப்பன் - உண்மையும் கதைப்பும்' என்னும் நூல் எடுத்துக் காட்டுகிறது.

“1940-களுக்குப் பிறகு பரப்பப்பட்ட மகர விளக்கின் தெய்வீகக் கதையை முதன்முதலாக உடைத்துக் காட்டியவர் பகுத்தறிவாளர் சங்கத்தின் தீவிரப் பணியாளரான எம்.ஆர்.எ ஸ். நாதன்தான். 

கேரளப் பகுத்தறிவாளர்கள், மகரஜோதி மடமையைத் தோலுரித்த போதும் அய்யப்ப சேவா சங்கமும் தேவஸ்வம் போர்டும் பொய்ப் பிரச்சாரங்களைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

1990ஆம் ஆண்டு பகுத்தறிவாளர்களின் உண்மை விளக்கப் பேரணி தொடர்பான பிரச்சினையின்போது, அன்றைய கேரள முதலமைச்சர் ஈ.கே. நாயனார், “தேவஸ்வம் போர்டுதான் மகரஜோதியை ஏற்றுகின்றது என்பது தெளிவாகத் தெரிந்த விஷயம்தான், பகுத்தறிவாளர்கள் பொன்னம்பல மேட்டிற்குச் செல்லும் பேரணியை ரத்து செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

கடவுளின் பெயரால், ஒரு புரட்டு காலம் காலமாக நடந்து வருகிறது. அதை ஆதாரபூர்வமாகப் பகுத்தறிவாளர்கள் நிரூபிக்கிறார்கள். இதற்குப் பின்னும் சபரிமலை சாஸ்தாவை நோக்கிச் சென்று தம் பொருளையும், அறிவையும் இழக்கும் பக்தர்களை என்னவென்பது?
Source: Unmaionline

வியாழன், 18 பிப்ரவரி, 2021

கூடிக்களித்தல்[லிவிங் டுகெதர்]!!!

#நடிகை 'ஷமதா அஞ்சன்' ஒரு வருட 'லிவிங் டுகெதர்' முடிந்து காதலரைக்[கவுரவ் ஷர்மா] கரம் பிடித்தார்#[https://tamil.filmibeat.com/news/darbar-actress-shamata-anchan-got-married-080326.html] என்பது செய்தி.

கடந்த ஆண்டு ரஜினியின் தர்பார் படத்தில் ரஜினிக்கு உதவும் பெண்ணாக[போலீஸ் அதிகாரி] 40 நிமிடம் நடித்துள்ளாராம். 

"ஒன்றாக ஒரு வருடம் கழித்த[கூடிக்களித்தல்!] பிறகு வாழ்நாள் முழுவதையும் ஒருவருக்கொருவர் செலவிட விரும்புகிறோம் என்பது எங்களுக்குப் புரிந்தது. புதிய ஆண்டு அழகாகத் தொடங்கியுள்ளது" என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் இந்த நடிகை.

'வாழ்நாள் முழுவதும் இருவரும் ஒன்றாகச் செலவிட விரும்புகிறோம் என்பது புரிந்தது" என்கிறார். இப்படிச் சுற்றிவளைக்காமல், 'கல்யாணம் பண்ணிக்கப் போறோம்'னு இரண்டு மூன்று  வார்த்தைகளில் முடித்திருக்கலாம்.

'சேர்ந்து வாழ்ந்த ஒரு வருடத்தில் அந்தரங்க சுகானுபவம் திருப்தியாக இருந்தது' என்கிறார். அந்த ஒரு வருடத்தில் திருப்தி கிடைக்காமல் போயிருந்தால் என்ன நடந்திருக்கும்?

இருவரும் பிரிந்திருப்பார்கள். அப்புறம்..... 

திருமணம் இல்லாமலே காலம் கடத்துவதா? அல்லது, இன்னொருவருடன் சேர்ந்து இன்னொரு வருடம் 'கூடிக்களித்து'க் கழிப்பதா? அப்படிக் கழித்தும் திருப்தி கிடைக்காவிட்டால்..... 

வேறொரு ஆளைத் தேடிக்கொள்ளலாம்தானே?

ஒருவேளை, திருப்தி கிடைக்காமல் போவது தொடருமேயானால்.....

'லிவிங் டுகெதர்' என்ற பெயரில் எத்தனை பேருடனும் கூடிக் களிக்கலாமா?

இதற்கு வரம்பே கிடையாதா?

எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் இப்படிக் கூடிக் கும்மாளம் போடும் வாழ்க்கை முறையை அறிமுகம் செய்த உலகமகா புத்திசாலி யார்?!

அவர் யாராயினும், 'கல்யாணம்' என்னும் ஆயுள் சிறையில் சிக்கிக்கொள்ள விரும்பாத  இன்றைய இளசுகள் அவரைப்  பாராட்டி மகிழவே செய்வார்கள்.

நம் போன்ற கிழடுகளின் மனதில்தான் புகைச்சல்!!!

=================================================================================




செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

சிற்றின்பம் பெறுதலில் சில விநோதங்கள்!!!


பத்திரிகைகளிலும் பருவ இதழ்களிலும் பாலுறவு குறித்து நிறையப் பேர் கேள்விகள் கேட்கிறார்கள்; பாலியல் நிபுணர்கள் பதில்கள் அளிக்கின்றனர். மஹிந்தர் வத்ஸா என்பவர் அதுபோன்ற ஒரு நிபுணர். சமீபத்தில் அவர் காலமாகிவிட்டாராம்.

ஒரு முறை B.B.C.க்குப் பேட்டியளித்த அவர்....

"என் மனைவி என்னைத் துடைப்பத்தால் அடித்தால் தவிர, எனக்குப் பாலுறவு விருப்பம் தூண்டப்படுவதில்லை. ஆனால், சமீபத்தில் என் மனைவி இறந்துவிட்டார். எனவே, துடைப்பத்தால் என்னை அடித்து, பாலுறவு விருப்பத்தைத் தூண்டக்கூடிய ஒரு மனைவியை நான் எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஒருவர் கேட்டார்" என்று சொல்லிச் சிரித்தாராம்.

துடைப்பத்தால் அடி வாங்கினால்தான் 'அது'க்கான 'மூடு' வரும்னு சொன்ன அந்த ஆள், நல்ல வேளை 'அங்கே' அடித்தால்தான் 'மூடு' வரும்னு சொல்லல!

இப்படித் துன்பத்திற்கு ஆளாகிச் சிற்றின்பம்[பேரின்பமய்யா!] அனுபவிப்பதை மேற்கத்தியச் சமுதாயத்தில் பி.டி.எஸ்.எம்.(BDSM) என்கிறார்களாம். ஆனால், பல நாடுகளில் இது கேள்விப்படாத வார்த்தையாக இருக்கிறது. 

இதுபோன்ற நிகழ்வுகளில் யாரையாவது துன்புறுத்துதல் அல்லது தனக்குத் தானே துன்புறுத்திக்கொள்ளுதல் மூலம் பாலுறவு விருப்பத்துக்கான தூண்டுதல் பெறுகிறார்கள். 

இதில் துன்புறுத்துபவர் ஆதிக்கம் செலுத்துபவர் என்றும், துன்புறுத்தல்களை ஏற்பவர் அடங்கிச் செல்பவர் என்றும் கருதப்படுகிறார்கள். துன்புறுத்தல் செயல்களைச் செய்பவரும், அதை ஏற்பவரும் இந்தச் செயலால் பாலுறவுக்கான தூண்டுதலைப் பெறுகிறார்கள். ஒருவரை அடிமை போல நடத்துதல் அல்லது தானே அடிமை போல நடந்துகொள்ளுதல் என்ற பாணியும் இதில் இருக்கிறதாம்.

இப்படியெல்லாம் பாலுறவு! இதில் இன்பசுகம் காணும் கிறுக்கர்கள்!! நல்லாப் படைச்சாரய்யா கடவுள்!!!

=================================================================================

https://www.bbc.com/tamil/global-55940851

திங்கள், 15 பிப்ரவரி, 2021

'கன்னித்தன்மை'யைப் புதுப்பித்தலும் தரகர்கள் பேரமும்!!!

கன்னித்தன்மையை இழக்காத அழகுப் பெண்களை ரஷ்யா நாட்டிலுள்ள பெரிய பணக்காரர்கள் மிகவும் விரும்புகிறார்களாம்.

இது தொடர்பான தொழிலில் ஈடுபட்டுள்ள தரகர்கள் பணக்காரர்களின் இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தி நிறையவே சம்பாதிக்கிறார்கள் என்பதான செய்தியைச் சில ஆண்டுகளுக்கு முன்பு இணையதளம் ஒன்று  வெளியிட்டிருந்தது[asianetnews.com தளத்தில் வாசித்தது].

இளம் வயது விலைமகளிரை[வயது 17 - 20] மருத்துவரிடம் அழைத்துச் சென்று, கன்னித்தன்மைக்கான சான்றிதழை, அதற்குரிய கட்டணத்தைச் செலுத்திப் பெறுவார்கள் தரகர்கள்.

பெண்ணைச் சான்றிதழுடன் பணக்காரர்களுக்கு அறிமுகப்படுத்துவார்கள்.

பேரம் படிந்தால்....

ஓர் இரவுக்கு ஒருத்திக்கு ரூபாய் 3 லட்சம் முதல் 17 லட்சம்வரை  செல்வந்தர்கள் கொடுப்பார்களாம்.

அதில் பெருந்தொகையைத் தாங்களே வைத்துக்கொண்டு, சிறு தொகையை மட்டும் சம்பந்தப்பட்ட பெண்களுக்குத் தரகர்கள் தருவது வழக்கமாகிப்போன ஒன்றாம்..

குடும்பப் பெண்களோ விலைபோகும் பெண்களோ, பெண்களைப் பலவீனமானவர்களாகவும், ஆண்களை அவர்களை அடக்கி ஆளும் பலசாலிகளாகவும் படைத்த ஓரவஞ்சனைக் கடவுளைப் பெண்கள்தான் அதிக அளவில் போற்றி வழிபடுகிறார்கள் என்பது அதிர்ச்சிதரும் உண்மையாகும்!


=================================================================================

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

'ஆன்மா' உண்மையெனின், அது உடம்புக்குள் புகுவது எப்படி?!


ஆணிடமிருந்து வெளிப்படும் விந்துவில் உள்ள பல கோடி உயிரணுக்களில் [ஒரு மி.லிட்டர் விந்துவில் 12 கோடிவரை உயிரணுக்கள் இருக்குமாம்] ஒன்று பெண்ணின் கருப்பையிலுள்ள சினை முட்டையுடன் இணைந்து வளர்வதன் மூலம் குழந்தை உருவாகிறது என்கிறது அறிவியல்.

குழந்தை பிறந்து, வளர்ச்சி பெற்று வாழ்ந்து மடிகிறது.

அந்த உடம்புக்குள்தான் ஆன்மா புகுந்து உடம்பு அழியும்வரை அதை ஆண்டு, அது அழியும்போது வெளியேறுவதாகச் சொல்கிறார்கள்.

அந்த ஆன்மா, உடம்புக்குள் புகுவது எவ்வாறு?

காது, மூக்கு, வாய், மலத்துவாரம், மர்ம உறுப்பு ஆகிய முக்கிய துவாரங்கள் வழியாகவா, இல்லை, வேர்வைத் துவாரங்கள் மூலமாகவா?

ஒவ்வொரு துவாரத்திலும்  கணக்கற்றவை நுழைய முடியும். ஒன்றுக்குத்தான் அனுமதி என்பது கடவுள் வகுத்த விதியா? ஒன்றுக்கும் மேற்பட்டவை போட்டியிட்டு, வென்ற ஒன்று உட்புகுகிறதா?

உடம்புக்குள் புகுகிற அந்த ஒன்று, துவாரம் இல்லாத சினை முட்டையைத் துளைத்தது எவ்வாறு?

கருப்பையில் இருக்கும் சினை முட்டையை அடைவதற்கான வழி, பெண்ணுறுப்புப் புழைதான்.

எனவே, ஆண், தன் விந்துவைப் பெண்ணுறுப்பில் தெளிக்கும்போதே, அதன் ஒவ்வொரு துளியிலும் கோடானுகோடி ஆன்மாக்கள் கோடிக்கணக்கான உயிரணுக்களுடன் பயணித்தல் வேண்டும். உயிரணுக்களுக்கான ஓட்டப் போட்டியில் வென்று, சினை முட்டையைத் துளைத்து உட்புகும் ஒற்றை உயிரணுவுடன் ஒட்டிக் கொண்டு வீரியமுள்ள ஓர் ஆன்மா மட்டும் சினை முட்டைக்குள் நுழைதல் வேண்டும்; மூளை உருவாகக் காரணமான செல்களில் அது நிரந்தரமாகத் தங்கிவிட வேண்டும். 

இவ்வாறுதான் ஓர் ஆன்மா சினை முட்டைக்குள் நுழைகிறதா?

மேலும்.....

ஒவ்வொரு ஆன்மாவுக்கும், தனக்குரிய உடம்பைத் தேர்ந்தெடுப்பதில் சுதந்திரம் உண்டா?

புகுந்த உடம்பின் மீது வெறுப்பு ஏற்பட்டால், அதிலிருந்து எப்போது வேண்டுமானாலும் ஆன்மா வெளியேறலாமே! ஏன் அவ்வாறு செய்வதில்லை? கடவுள் கட்டுப்படுத்துகிறாரா? நிபந்தனைகள் விதித்திருக்கிறாரா?

இன்றுவரை இவ்வினாக்களுக்கு விடை ஏதும் இல்லை.

ஆன்மாதான் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்துகிறது என்றால், மூளை இல்லாமலே மனித உடம்பு இயங்க வேண்டும்; சிந்திக்கவும் வேண்டும். இவையெல்லாம் சாத்தியமா என்றால் நகைப்புதான் மிஞ்சுகிறது.

'உடலின் இயக்கத்துக்கு மூளைதான் காரணம்; ஆன்மாவின் பணி, இந்த மண்ணில் மனிதன் பெறும் அனுபவங்களையும் செய்யும் பாவ புண்ணியங்களையும் மரணத்துக்குப் பின்னர் சுமந்து செல்வது மட்டுமே' என்றால், அடுத்த பிறவியில், இப்போது பெற்ற அனுபவங்கள் நினைவுக்கு வருதல் வேண்டும். அதுவும் சாத்தியப்பட்டதாகத் தெரியவில்லை.

‘ஆன்மா இருப்பதும், பிறவிதோறும் வேறு வேறு உடல்களில் புகுந்து புகுந்து இருந்து இருந்து வெளியேறுவதும் உண்மையாயின், ஒரு பிறவியில் மருத்துவராக இருந்து அனுபவம் பெற்ற ஓர் ஆன்மா அடுத்த பிறவியில் மருத்துவக் கல்லூரியில் கற்காமலே அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்’ என்று பதிவர் ‘வவ்வால்’ அவர்கள், பதிவர் ‘சார்வாகன்’ அவர்களின் ஒரு பதிவுக்கான பின்னூட்டமாகப் பதிவு செய்த கருத்து இங்கு நினைவுகூரத் தக்கதாகும்.
=================================================================================

2014ஆம் ஆண்டில் நான் வெளியிட்ட ஒரு பதிவின் சிறு பகுதி இது.

சனி, 13 பிப்ரவரி, 2021

'மகா... பெரியவா'வும் மகாப் பெரிய சூனியக்காரியும்!!!

'மகா பெரியவா' திருச்சிக்கு அருகே முகாமிட்டிருந்தாராம்.

அவரைத் தரிசிக்கச் சுற்றுவட்டார மக்கள் வந்தார்களாம். அவர்களுள் 60 வயது மதிக்கத்தக்க ஒரு சூனியக்காரியும் இருந்தாளாம். அவள் பணத்துக்காகப் பணம் தர்றவங்களோட எதிரிகள் மேல, எலுமிச்சம்பழத்தை மந்திரிச்சி ஏவல், சூனியம் எல்லாம் செய்யுறவளாம்.

அவள் சூனியக்காரிங்கிறது அங்கிருந்த மத்தவாளுக்குத் தெரியலையாம்.

ஆனா, நம்ம பெரியவா பெரிய மாகானல்லவோ, அவள் சூனியக்காரிங்கிறதையும், தனக்கே சூனியம் வைக்க வந்தவள்ங்கிறதையும் 'ஞானக் கண்'ணால் தெரிஞ்சுண்டாராம். ஆனா, தெரிஞ்ச மாதிரி காட்டிக்கலையாம்.

"பெரியவா, நான் இப்போதான் முதன் முதலா உங்களைத் தரிசிக்க வந்தேன்"னு சூனியக்காரி சொன்னாள். அதுக்குப் பெரியவா, "நீ வர்றேங்குறது தெரியும்; எதுக்கு வந்திருக்கேங்குறதும் தெரியும்"னு சொன்னதோட, அவளுக்கு நூறு எலுமிச்சம் பழமும் கொடுத்தார்.

தான் வந்த நோக்கத்தை யாரும் சொல்லாமலே[வழக்கமா, தரிசணம் பண்ண வர்றவங்களோட குறையை அவங்க சொல்லாமலே தெரிஞ்சி, அதை நிவர்த்தி செய்வது பெரியவா வழக்கம். இது எப்படிச் சாதியமாச்சுன்னு கேட்டுடாதீங்க. மகானை நிந்திச்ச பாவம் உங்களைச் சேரும். ஜாக்கிறதை!] பெரியவா கண்டுபிடிச்சதை நினைச்சிப் பயந்துபோனாள் அந்தச் சூனியக்காரி.

கதறி அழுது, மகாப் பெரியவாகிட்டே மன்னிப்புக் கேட்டாள். பெரியவாவும் அவளை மன்னிச்சி ஆசீர்வாதம் பண்ணி அனுப்பினார்.

"ரொம்ப நல்லவரான பெரியவாவுக்குச் சூனியம் வைக்கத் தூண்டினது யாரு? ஏன் தூண்டினாங்க? இவரைப் பத்திச் சூனியக்காரிக்குத் தெரியாதா?" என்கிற மாதிரியெல்லாம் கேள்வி கேட்டுடாதீங்க. 

மறைந்த பெரியவாவுக்குப் பெருமை சேர்க்கிறதா நினைச்சுண்டு இப்படியான 'ஓட்டை உடைசல்' கதைகளை வாராவாரம் 'குமுதம்' வார இதழ்க்காரங்க எழுதிட்டு வர்றாங்க.

தவறாம படிங்க. உங்களுக்குப் புண்ணியம் சேரும். ஏடாகூடமா கேள்வியெல்லாம் கேட்டா நரகத்துக்குப் போவீங்க! உஷார்!!

=================================================================================

https://www.kumudam.com/magazines/open_magazine/547


வியாழன், 11 பிப்ரவரி, 2021

போடாதே போடாதே! கோயில் உண்டியலில் பணம் போடாதே!!


தேவைக்கு மேல் சேர்த்து வைத்திருக்கும் பணத்தையோ, வருமானவரிக் கணக்கில் காட்டாத கறுப்புப் பணத்தையோ, சாமிகளுக்கான உண்டியலில் போடாமல் வேறு என்ன செய்வது என்று சம்பந்தப்பட்டவர்கள் கேட்கக்கூடும். அவர்களுக்காகத்தான் பதிவு.

கோயில் உண்டியலில் நீங்கள் போடுகிற பணமோ தங்க நகைகளோ 100%  நல்ல வழிகளில்தான் செலவிடப்படுகிறது என்பது குறித்து நீங்கள் யோசித்ததுண்டா? "இல்லை" என்பதே உங்களில் பெரும்பாலோரின் பதிலாக இருக்கும்.

"கடவுளுக்கான காணிக்கை அது. இவ்வாறெல்லாம் யோசிப்பது பாவ காரியம்; கடவுள் தண்டிப்பார்" என்று பலரும் அஞ்சுவதே அதற்கான முக்கியக் காரணம்.

'அனைத்தையும் படைத்தவர் கடவுள்; மனிதன் பணத்தைக் கண்டறியக் காரணமானவரும் அவரே. அவருக்கெதற்குப் பணமும் நகை நட்டுகளும்?' என்று கொஞ்ச நேரம் சிந்தித்திருந்தால் செய்யக்கூடாத இந்தத் தவற்றைச் செய்திருக்க மாட்டீர்கள்.

நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனியேனும் உங்களைத் திருத்திக்கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்டது போல், தேவைக்கு மேல் உங்களிடம் பணமோ விலைமதிப்புள்ள பொருள்களோ இருந்து, அவற்றை நல்ல வழிகளில் செலவிட விரும்பும் நல்ல மனமும் உங்களுக்கு இருந்தால்.....

கீழ்வருவது 'பி.பி.சி.' என்னும் இணைய ஊடகத்தில் வெளியான செய்தி[https://www.bbc.com/tamil/india-55930408]. முதலில் இதைப் படியுங்கள்.

#கோவை நகரின் ரெட்பில்ட்ஸ் சாலையில் அமைந்துள்ள இருபது ரூபாய்ப் பிரியாணிக் கடை சமீபத்தில் பிரபலமாகி வருகிறது. இதற்குக் காரணம் இருபது ரூபாய்க்குப் பிரியாணி வழங்குவது மட்டுமல்ல, 'பசிக்கின்றதா..எடுத்துக்கோங்க...' என எழுதிவைத்து இலவசமாகப் பிரியாணிப் பொட்டலங்களை அள்ளிக்கொடுக்கும் ஷப்ரினாவின் மனிதநேயம்தான்.

மதிய வேளையில், சாலையோரத்தில் இரு குடைகளுக்குக் கீழ் அமைந்திருந்த பிரியாணிக் கடையில் பரபரப்பாக இயங்கி வந்த ஷப்ரினாவை நேரில் சந்தித்தோம்.

சூடான பிரியாணியை ஷப்ரினா தட்டில் எடுத்து வைக்க, அவரது கணவர் வாழை இலையில் பார்சல் கட்டிக்கொண்டே இருந்தார். இருபது ரூபாய்ப் பிரியாணியை ருசிக்க வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருந்தது.

ஒருபுறம் வாடிக்கையாளர்கள் பார்சலை வாங்கிக்கொண்டு அதற்கான பணத்தைக் கொடுத்துச் செல்கின்றனர். மற்றொருபுறம் 'பசிக்கின்றதா.. எடுத்துக்கோங்க' என எழுதப்பட்டிருந்த பெட்டியில் வைக்கப்பட்ட பிரியாணிப் பொட்டலங்களைப் பலர் எடுத்துச் செல்கின்றனர். இலவசப் பெட்டியில் பொட்டலங்கள் தீர்ந்ததைக் கவனித்த ஷப்ரினா, விறுவிறுவென்று சில பொட்டலங்களைக் கட்டி மீண்டும் பெட்டியில் வைத்துச் செல்கிறார்#

மீண்டும் தலைப்புக்கு வருவோம்.

உங்களிடம் உங்களின் தேவையை மிஞ்சிய பணம் இருந்தால், கோயில்களைத் தேடி ஓடாதீர்கள்; உண்டியலில் பணம் போடாதீர்கள். 

அந்தப் பணத்தை ஷப்ரினாவிடம் கொடுங்கள். அன்றாடம் ஒரு வேளைச் சோற்றுக்குக்கூட வழியில்லாத மேலும் பலரின் பசிக்கு அவர் உணவு கொடுப்பார்.

இலவசப் பிரியாணிப் பொட்டலம் வழங்குவதை அவர் விளம்பரத்திற்காகச் செய்கிறார் என்று சந்தேகப்பட்டால், அவரின் செயல்பாட்டைச் சில வாரங்களோ, சில மாதங்களோ கண்காணியுங்கள். அவர் செய்யும் சேவைக்கு மனிதாபிமானமே காரணம் என்பது உறுதியான பிறகு அவருக்கு நீங்கள் துணை நிற்கலாம்.

கோவையில் மட்டுமல்லாமல் ஊரூருக்கு ஷப்ரினாக்கள் இருப்பார்கள்; தேடினால் கிடைப்பார்கள். நீங்கள் விரும்பும்போது விரும்புகிற ஒருவருக்கு உதவிக்கரம் நீட்டலாம். 

வெறும் அனுமானக் கடவுள்களையும், அவர்களை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களையும் நம்பி முட்டாள் ஆகாதீர்கள்; மனிதாபிமானமுள்ள மனிதர்களை நம்புங்கள். பலரும் நம்பினால்.....

'தர்மம் தலைகாக்கும்' என்பார்கள். தலை காக்கிறதோ இல்லையோ, பல உயிர்களைக் காக்கும்!

=================================================================================