வெள்ளி, 31 மார்ச், 2023

காமம் வசீகரமானது! மிக வலிமையானது!!

வெகு சாமானியனான நான்  51 நூல்களை[அச்சு வடிவில் 5 + அமேசான் கிண்டிலில் 46]ப் படைத்துச் சாதனை[???] புரிந்தவன் என்பதை நீங்கள் அறிவீர்கள். சாதனை நிகழ்த்தியது விற்பனையில் அல்ல என்பதை நீங்கள் அறிந்திட வாய்ப்பில்லை. ஹி...ஹி...ஹி!!![மாதந்தோறும் ஒரு சிறு தொகையை அமேசான் என் வங்கிக் கணக்கில் செலுத்துகிறது என்பது ஆறுதல் தரும் நிகழ்வு].

இதைக் குறிப்பிடுவதன் நோக்கம் ‘தற்புகழ்ச்சி’ அல்ல. வேறென்ன?

நான் எழுதியவற்றுள், காம உணர்வைக் கருப்பொருளாகக் கொண்ட நூல்களே[‘காமம் பொல்லாதது!!!’, ‘காமம் கற்பீர்’, ‘யோனிப் பொருத்தம்’, ‘உடலுறவில் உச்சம்...’, ‘சதையும் கதையும்.....’] அதிக அளவில் வாசிக்கப்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டுவதுதான்.

[வாசிக்கப்படும் பக்கங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு எனக்கான பங்குத் தொகை வழங்கப்படுகிறது. விற்பனை மிகக் மிகக் குறைந்த அளவில்தான்].  

இதற்கு, இயற்கையிலேயே காமம் வசீகரமானது என்பது காரணமாக இருக்கலாம்.

பயனுள்ள வேறு பல கருப்பொருள்கள் குறித்து நான் எழுதிய நூல்கள் தரமானவை அல்ல என்பதும் காரணமாக இருக்கக்கூடும்.

இதை நான் எழுதுவது  எனக்கான இந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்வது மட்டுமல்ல, காமம் மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் மிக ஆழமானது என்பதை, மறைந்த[30 ஆண்டுகளுக்கு முன்பு] ‘ஓஷோ’, தம்முடைய நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதை அறிந்திடச் செய்வதுதான்.

//நான் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். உண்மையில் எழுதியதல்ல. என் பேச்சைத் தொகுத்து எழுதியிருக்கிறார்கள். அதன் தலைப்பு, ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’. அதற்குப் பிறகு என்னுடைய நூற்றுக் கணக்கான புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டுவிட்டன. 

ஆனால், என்னை விமர்சிப்பவர்கள் மற்றவற்றைப் படித்தார்களா என்பது சந்தேகம்தான். 


குறிப்பாக, இந்தியாவில் எல்லாரும் படித்தது ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’ என்ற புத்தகத்தைத்தான். வர்கள் எல்லாரும் அதை விமர்சனம் செய்தார்கள்; எதிர்த்தார்கள். இன்னும் அதைப் பற்றிக் கட்டுரைகளும், மறுப்பு நூல்களும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். 


மகாத்மாக்கள் அதை மறுத்துக்கொண்டே வருகிறார்கள். மற்றப் புத்தகங்களைப் பார்க்கவும் இல்லை; குறிப்பிடவும் இல்லை. புரிகிறதா? நான் ஏதோ ஒரே புத்தகத்தைத்தான் எழுதியது போல.


காமத்திலிருந்து அதி பிரக்ஞைக்குச் செல்வது பற்றி நான் பேசப்போய், உலகம் முழுவதிலும் இருந்து விமர்சிக்கப்பட்டேன்; கண்டிக்கப்பட்டேன். ஏன் கண்டிக்கிறார்கள் என்பதற்கான எந்த விளக்கத்தையும் யாரும் கொடுக்கவில்லை. 


என் புத்தகம், முப்பத்து நான்கு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பன்னிரண்டு பதிப்புகள் வெளிவந்துள்ளன. எல்லாச் சன்னியாசிகளும் அதைப் படித்துவிட்டார்கள்//.



====================================================================================

வியாழன், 30 மார்ச், 2023

“ராமன் கற்சிலையோ மரச் சிற்பமோ அல்ல”... ‘ராஜ்நாத் சிங்’ சொன்ன அறிவியல் உண்மை!

‘ராமநவமியை முன்னிட்டு, தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்தரங்கில் ராஜ்நாத் சிங் பேசினார்’ என்பது சற்று முன்னரான செய்தி*.

“அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அவருக்குப் பிரம்மாண்டமான கோவில் கட்டுவதற்கான நிலை உருவானபோது, அந்த இடத்தில் மருத்துவமனை கட்ட வேண்டும் என்றும், பள்ளிக்கூடம் அமைக்கலாம் என்றும் யோசனைகள் சொன்னவர்கள் பலர். சிலரோ அங்கே தொழிற்சாலை அமைக்கலாம் என்றார்கள். இவர்கள் அனைவரும் கடவுள் ராமரைப் புரிந்துகொள்ளாதவர்கள்” என்று பேசிய ‘ராம்[ராஜ்]நாத் சிங்’ அவர்கள்.....


கடவுள் ராமர் கல் அல்லது மரத்தில் உருவான வெறும் சிலை அல்ல” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார்.



அவர் சொன்னது 100% உண்மை.


மண்ணுலகில், ஒரு மன்னனுக்கு மகனாகப் பிறந்து, மன்னனாக வாழ்ந்து மறைந்ததாகச் சொல்லப்படும் ராமன் ஐம்புலன்களுடனும் சிந்திக்கும் அறிவுடனும் வாழ்ந்த ஒரு மனிதன் மட்டுமே.


அவன், மரணத்தைத் தழுவாமல் இன்றளவும் ஒரு மனிதனாக வாழ்ந்துகொண்டிருந்தால், மனிதருள் சிறந்தவன் என்று போற்றி வழிபடுவதில் தவறில்லை.


பொழுது போகாதவர்கள், விழாக்கள் எடுத்து, கொண்டாட்டங்கள் நடத்திக் குதூகலிக்கலாம். தவறே இல்லை. ஆனால்…..


கோயில் கட்டி, உயிருள்ள ஒரு மனிதனை அங்குக் குடியேற்றி, இரவுபகலாய் இருந்த இடத்திலேயே குந்தியிருக்கச் செய்வது நடைமுறை சாத்தியம் இல்லாதது.


அதனால்தான், அவனை[மரணத்திற்குப் பிறகு]ப் போல மரத்தாலும் கல்லாலும் சிலைகள் செய்து நிற்கவோ உட்காரவோ வைத்தார்கள்; படுக்கவும் வைத்தார்கள்.


அது தவறு என்பது, “ராமன் கல்லால் அல்லது மரத்தால் ஆன சிலை அல்ல” என்று அமைச்சர் கூறியிருப்பதிலிருந்து புரிகிறது.


அப்புறம் எதற்கு கல் அல்லாத, மரம் அல்லாத ராமனுக்கு அயோத்தியில் பிரமாண்டமான கோயில் கட்டவேண்டும் என்கிறார் அவர்?


கற்களையும் மரங்களையும் தவிர்த்துவிட்டு, ஒரு கடவுளாக மட்டும்[உருவிலி] அவனைக் காட்டவோ, உணர்த்தவோ முடியாது[அனுமானிக்கலாம். அனைத்து அனுமானங்களும் உண்மை ஆகிவிடா] என்பதால்தான்.


அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு மட்டுமல்ல, அவரனைய பிற ராம பக்தர்களுக்கு நாம் பணிவுடன் சொல்லிக்கொள்ள விரும்புவது…..


கல்லைக் கல்லாக மட்டுமே பாருங்கள். மரத்தை மரமாகப் பாருங்கள். அவற்றை நுண்ணறிவு கொண்டு ஆராயுங்கள்[இதைச் செய்வதால்தான் அறிவியல் வளர்கிறது]. அவற்றுள் கடவுளைத் திணிக்காதீர்கள்.


ஆராய்ச்சி தொடரத் தொடர அறிவு வளரும். அறிவு வளர்ச்சியால் மனித இனத்துக்கு ஏராள நன்மைகள்[மனதைப் பண்படுத்துவது உட்பட] விளையும்.


மாறாக, கல்லிலும் மண்ணிலும் மரத்திலும், அவற்றால் செய்யப்பட்ட சிலைகளிலும் ராமன் போன்ற கடவுளைத் திணித்துக் கும்பிடுவதை வழக்கமாக்கினால் மனிதனுக்கு மட்டுமே வாய்த்த சிந்திக்கும் அறிவு சீரழியும்; முடங்கும்.


உண்மையில் கடவுள் என்று ஒருவர் இருந்தால், உண்டு உறங்கி, கழிவுகளை வெளியேற்றி வாழ்ந்த மனிதர்களை கடவுளாக்கி[தம்மைத்தாமே கடவுளாக்கிக்கொள்வோரும் உளர்... ஜக்கி வாசுதேவ் போல]ப் பிழைப்பு நடத்துவதை அவர் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்!

=========================================================================


*https://m.dinamalar.com/detail.php?id=3280155&utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAQuobhuNPRmrOTARj4l5Dm0vWyvKIBKhAIACoHCAowkZmPCzDyo6ED&utm_content=rundown


கண்ணகி, மார்பகம் அறுத்தது மதுரையை எரிக்க! ‘நங்கிலி’ அறுத்தது?!?!


அன்றையத் திருவாங்கூர் ராஜ்யத்தில் ‘முலக்கரம்’ என்று மலையாளத்தில் அழைக்கப்பட்ட ‘முலைவரி’ பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்படுத்தப்பட்டவர்களுமான பெண்களுக்கு விதிக்கப்பட்டதென்பது நாம் அறிந்ததே.

திருவாங்கூர், கொச்சி சமஸ்தானங்களில், சாதியில் தாழ்த்தப்பட்ட பெண்கள் மேல் சாதிக்கார ஆண்கள் அல்லது அரசு அதிகாரிகள் முன்னிலையில் தங்களின் மார்பை மறைக்கும் சேலைத் தும்பை[முந்தானை] அகற்றி, மார்பகங்களைக் காட்டி மரியாதையை வெளிப்படுத்தும் முறையும் கட்டாயமாக்கப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே.

நம்மில் பலரும் அறியாத பேரவல நிகழ்வு ஒன்று உண்டு.

‘முலை வரி’ வசூலிக்க வந்த அரசு அதிகாரிகளின் முன்னிலையில், திறந்த மார்பகங்களுடன் நின்ற ‘நங்கிலி’ என்னும் பெண், வரி செலுத்த இயலாத பரிதாப நிலையை எடுத்துரைத்தும், அதிகாரிகள் வரி வசூலிப்பதில் கண்டிப்புக் காட்டியபோது.....


அந்தப் பெண் செய்த செயல் பெண்ணினத்தைக் காலமெல்லாம் கண்ணீர் சிந்த வைப்பது மட்டுமல்ல, ஆண் இனத்தவரை, வெட்கித் தலைகுனிய வைப்பதும் ஆகும்.


நங்கிலி, தான் செலுத்த வேண்டிய வரிக்குப் பதிலாக, வரிவிதிப்புக்குள்ளான தன் மார்பகம் ஒன்றை அறுத்து அதிகாரிகளிடம் கொடுத்தாள்; மரணத்தைத் தழுவினாள்.


பூமி, ஆறு என்று எதையெதையெல்லாமோ பெண்ணாக்கி, தெய்வ நிலைக்கு உயர்த்தி, அவளைத் தாங்கோ தாங்கென்று தாங்கிய அதே ஆடவர்கள்தான், உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த பெண்களுக்கு இம்மாதிரியான[முலை காட்டல்; வரி செலுத்துதல்] கொடுமைகளை இழைத்து ஆனந்தப் பரவசத்தில் திளைத்திருக்கிறார்கள்.


இவையெல்லாம் வரலாற்றில் இடம்பெற்றவை.


உயர் சாதி ஆடவர் முன்னிலையில், முலை காட்டி நிற்பதோடு, அம்மணமாக முழு உடலையும் காட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும் நிகழ்ந்திருக்கலாம். இது வரலாற்றில் இடம்பெறாதது.


வரலாற்றைத் தோண்டித் துருவி ஆராய்ந்தால் ஆதாரங்கள் கிடைக்கக்கூடும்!

* * * * *

{‘இந்து’ பத்திரிகையில் கட்டுரையின் சாரம் இது. இக்கொடுமை, ஆங்கில அரசின் முயற்சியால் பிற்காலத்தில்[19 ஆம் நூற்றாண்டின் இறுதி] தடை செய்யப்பட்டது}.

==================================================================================

<tamil-personalized-digest@quora.com>

==================================================================================

***ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் படிக்கத்தக்க அதி சுவாரசியக் கதை இது. முகவரியைக் கிளிக்கி வாசியுங்கள்

https://kadavulinkadavul.blogspot.com/2019/01/blog-post_17.html


புதன், 29 மார்ச், 2023

‘பாட்னா’வில் ஒரு பகுத்தறிவுப் பெண் சிங்கம்!!!



வள் பருவப்பெண்.

பருவப் பெண்களுக்கே உரிய உல்லாசக் கனவுகளிலும்  கற்பனைகளிலும் மிதப்பது,  சலனங்கள், சஞ்சலங்கள் என்று இனம் புரியாத உணர்ச்சிகளில் சிக்குண்டு விடுபட முடியாமல் தவிப்பது போன்ற பலவீனங்கள் இவளிடம் இல்லை.

இல்லாததால்தான், வகைதொகையில்லாமல், விதம்விதமான மூடநம்பிக்கைகளில் சிக்குண்டு இந்தச் சமுதாயம் சீரழிவது பற்றி இவளால் சிந்திக்க முடிந்திருக்கிறது.


சிந்தித்ததன் விளைவு…..


பெண் அடிமைத்தனம், சாதி வேறுபாடுகள், பிராமண ஆதிக்கம் போன்றவை வேரூன்றக் காரணமான மனுநூல்[மனுஸ்மிருதி]  புத்தகத்தை எரித்து, எரிந்த தீயில் சிகரெட் பற்ற வைத்த அசாத்தியத் துணிச்சகாரியாகத் தலைநிமிர்ந்து நிற்கிறாள் ‘பாட்னா’ பெண்ணான இவள்.


நேற்றுவரை இந்த இந்திய மண் கண்டறியாத புரட்சிப் பெண் இவள்.


இவள், மனுநீதி நூலுக்குத் தீயிட்டு, எரியும் தீச்சுவாலையில் சிகரெட் பற்றவைத்த நிகழ்வு சமூகவலைதளங்களில் பரபரப்பூட்டியுள்ளது.

“மனு ஸ்மிருதி புத்தகம் எங்குமே இல்லை என்கிற நிலைமை உருவாகும்வரை போராடுவேன்” எனக் கூறியுள்ள இவளைப் போன்ற பகுத்தறிவுப் பெண் சிங்கங்கள் நம்மிடையே இல்லை என்பது வருத்தமளிக்கிறது. எனினும், இவளைப் போன்ற அசாத்தியத் துணிச்சல்காரிகள் இனியேனும் இங்குத் தோன்றுவார்கள் என்பது நம் திடமான நம்பிக்கை.

வாழ்க பெண்ணினம்! வளர்க பகுத்தறிவு!!

===============================================================================


https://tamil.oneindia.com/news/patna/woman-lit-cigarette-with-burning-manusmriti-book/articlecontent-pf874974-501853.html


செவ்வாய், 28 மார்ச், 2023

“ஜெய் ஸ்ரீராம்”... சொல்லுங்க, சொல்லிடுங்க... சொல்லலேன்னா?!?!?

மகாராஷ்டிராவின் அன்வா கிராமத்தில் உள்ள ஒரு மசூதியில், 7.30 மணியளவில் ‘குர்ஆன்’ படித்துக்கொண்டிருந்தார் ‘இமாம்’.

அப்போது, அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் முகத்தில் துணியுடன் மசூதிக்குள் நுழைந்து, 'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷமிடுமாறு அவரை மிரட்டினார்கள்.

இமாம் மறுத்ததால், அவர்கள் மசூதிக்கு வெளியே அவரை இழுத்துச்சென்று தாக்கியதோடு, ரசாயனம் கலந்த துணியைப் பயன்படுத்தி அவரை மயக்கமடையச் செய்தனர். 

இரவு 8 மணியளவில் தொழுகைக்காக மசூதிக்கு வந்தவர்கள், ​இமாம் மயங்கிய நிலையில் வெளியே கிடப்பதைக் கண்டனர். அவர்கள் அவரைச் ‘சில்லோட்’ அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் அவுரங்காபாத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு(ஜிஎம்சிஎச்) மாற்றப்பட்டார், அங்கு அவர் தற்போது சிகிச்சை பெற்றுவருகிறார்.

காவல்துறை, வழக்கம்போல வழக்குப் பதிவு செய்தல் என்னும் கடமையை நிறைவேற்றியுள்ளது[‘இந்தியா டுடே’ செய்தி].

* * * * *

இந்தியாவின் வேறு வேறு மாநிலங்களிலும் நடந்தது/நடப்பதுதான் இந்த அதிர்ச்சிச் சம்பவம். இப்போது மகாராஷ்ட்ராவில் நடந்திருக்கிறது.

அனைத்து மாநிலங்களிலும் நடபெறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

அங்கெல்லாம் உள்ள முஸ்லீம்களை மிரட்டி, ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லக் கற்றுக்கொடுத்த பிறகு, முஸ்லீம் அல்ல என்றாலும், தங்களும் இந்துமதத்தவரே என்று சொல்ல மறுப்பவர்களையும் ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்ல வைக்கும் படலம் வெகு விரைவில் தொடங்கும் என்பது உறுதி.

இந்து மதத்தவர் அல்லாத, அல்லது எம்மதமும் சாராத நம்மைப் போன்றவர்களால், வலிமை வாய்ந்த பின்புலம் கொண்ட அவர்களை எதிர்த்துச் செயல்படுவதென்பது சாத்தியமே இல்லை.

போராடினாலும் வெற்றி பெறுவதென்பது கானல்நீர்தான்.

எனவேதான்.....

எப்போது வேண்டுமானாலும் அந்த வெறிக் கும்பலின் வருகை இங்கும் நிகழலாம் என்பதால், இப்போதிருந்தே நாம் அனைவரும் “ஜெய் ஸ்ரீராம்” சொல்லிச் சொல்லி நமக்கு நாமே பழக்கப்படுத்துதல் மிக நல்லது என்பது நம் எண்ணம்!

“ஜெய் ஸ்ரீராம்!!!”

=========================================================================


திங்கள், 27 மார்ச், 2023

அன்றொரு நாள்[மட்டும்?] நான் ஆண்மகனாக இல்லை!!![உண்மை நிகழ்வு + 10% மெருகூட்டல்]

 

து நடந்து ஆறு மாதம்போல இருக்கலாம்.

அந்தி மயங்கும் நேரத்தில், அந்தப் பேருந்து நிறுத்தத்தின் அருகே அழகிய பருவப் பெண்ணொருத்தி ரவுடிகளால் கடத்தப்பட்டாள். அப்போது அங்கு நிறையவே இளவட்டங்கள் இருந்தார்கள். கடை வாசல்களில் அதிவேக ‘பைக்’குகள் வரிசை கட்டியிருந்தன. அவள் கடத்தப்பட்ட இடத்துக்கு நேர் எதிரே ஒரு ‘வாடகைக் கார் நிறுத்துமிடம்’கூட இருந்தது. எல்லாம் இருந்தும்.....

‘விருட்’டென ஒரு வாகனத்தில் அல்லது, வாகனங்களில் சீறிப் பாய்ந்து ரவுடிகளை விரட்டிப் பிடித்து, கடத்தப்பட்ட பெண்ணை மீட்பதற்குக் கதாநாயகனோ நாயகர்களோ இல்லை என்பது கொடுமை; கொடுமையிலும் கொடுமை.

அவள் கடத்தப்பட்டபோது ஒரு மாயாஜாலம் போல் நூற்றுக்கணக்கானோர் கூடிவிட்டார்கள். 

வேறெதற்கு? வேடிக்கை பார்க்கவும், பார்த்ததைச் சுவையான கதையாக்கிக் காண்போரிடமெல்லாம் சொல்லிச் சொல்லிக் குதூகலிக்கவும்தான்!

“இந்நேரம் ரவுண்டானாவைக்கூடக் கடந்திருக்கமாட்டானுக. பத்து பேர் சேர்ந்து ரெண்டு டாக்ஸி பிடிச்சிச் சேஸ் பண்ணினா அவனுகளை அமுக்கிறலாம்.” -யாரோ ஒருவர் யோசனை சொன்னார். சொன்னவர் யாரென்று ஆளாளுக்குக் குரல் வந்த திக்கில் தேடினார்கள். கணப்பொழுதில் அவர் காணாமல்போயிருந்தார்.

“கார் போற வேகத்தைப் பார்த்தா ரவுண்டானாவைக் கடந்து ரொம்ப தூரம் போயிருப்பாங்க. நாமக்கல், சங்ககிரி, ஓமலூர்னு அங்கே நாலஞ்சி கிளையா ரோடு பிரியுது. எதுல போனானுங்கன்னு கண்டுபிடிக்கிறது அவ்வளவு சுலபமா என்ன?” -எதார்த்தத்தை எடுத்தியம்பினார் ஓர் உள்ளூர் ஆசாமி.

“அப்படியே கண்டுபிடிச்சாலும் நாம வெறுங்கையோட போயி அவனுகளை மடக்குறது அவ்வளவு சுலபமில்லீங்க. அவங்க கையில்  ஆயுதம் இருக்கும். போட்டுத் தள்ளிட்டானுகன்னா நம்ம புள்ள குட்டிகளை யார் காப்பாத்துறதாம்?” -சொன்னவர் கடமை உணர்வுள்ள ஒரு குடும்பஸ்தர்.

”பிக்பாக்கெட், வழிப்பறி மாதிரி பொண்ணுகளைக் கடத்துறதும் சர்வ சாதாரணம் ஆயிடிச்சி.”

“கடத்திட்டுப் போயிக் கற்பழிக்கிறது மட்டுமில்ல, துண்டு துண்டா வெட்டிப் போட்டுடறானுக.”

“கிழவிகளைக்கூடத் தூக்கிட்டுப் போயிக் கற்பழிக்கிறாங்க.” -சொல்லி முடித்த ஒரு வழுக்கைத் தலையர் சுற்றுமுற்றும் பார்த்தார். யாரும் சிரிக்காததால் சீரியஸான முகபாவம் காட்டினார்.

இம்மாதிரியான வீண் பேச்சுகள் தொடர்ந்தபோது அதற்கு முட்டுக்கட்டை போட்டார் ஒரு ஜோல்னா பையர்; “ஆளாளுக்கு வெட்டிக் கதை பேசிட்டிருந்தா எப்படி? செல்ஃபோன் வச்சிருக்கிறவங்க போலீஸுக்கு ஒரு ஃபோன் போடுங்கப்பா” என்றார் உரத்த குரலில். அவரிடம் செல்ஃபோன் இல்லையாம்!

“ஃபோன் பண்றது பெரிய காரியம் இல்ல. ‘நீ யாரு? எங்கிருந்து பேசற? பொண்ணுக்கும் உனக்கும் என்ன உறவு? இப்படிக் கேள்வி மேல கேள்வி கேப்பான் போலீஸ்காரன். கேஸ்ல நம்மை முக்கிய சாட்சியா போட்டுடுவான். சொந்த வேலையை விட்டுட்டுக் கோர்ட்டுக்கு நடையா நடக்கணும். ரவுடிங்களும் நம்மைப் பழி வாங்காம விடமாட்டாங்க. நமக்கு எதுக்கய்யா இந்த வம்பு தும்பெல்லாம்” என்று பேசிவிட்டு இடத்தைக் காலி செய்துகொண்டிருந்தார் ஒரு புத்திசாலி.

அவருடைய எதார்த்தமான பேச்சு எல்லோரையும் பாதித்திருக்க வேண்டும்.

கும்பல் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்தது.

நான் நெஞ்சுக்குள் குமுறினேன்.

சே, என்ன மனிதர்கள்!

ஓர் இளம் பெண் பட்டப்பகலில் கடத்தப்படுகிறாள். நூற்றுக்கணக்கான ஆண்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்!

ஆண்களா இவர்கள்?

ஆண்களின் மிக முக்கிய அடையாளம் ஆண்மை. அது பெண்ணை அனுபவிப்பதற்கு மட்டுமானதல்ல, ஆபத்துக் காலங்களில் அவளின் ‘மானம்’ காக்கவும் பயன்பட வேண்டும். அதுவே உண்மையான ஆண்மை.

ஆண்மையுள்ள ஆண்கள் லட்சத்திற்குப் பத்துப்பேர் தேறுவார்களா?” -மெலிதான தொனியில் நான் முணுமுணுத்தபோது, “இங்கே பத்தோடு பதினொன்றாக நடந்ததை வேடிக்கை பார்த்த நீ அந்தப் பத்தில் ஒருவன் அல்ல. ஆகவே, நீ ஆண்மை இல்லாதவன்தானே?” என்று எனக்கு மிக அருகிலிருந்து யாரோ கேட்பதுபோலிருந்தது.

சுற்றுமுற்றும் பார்வையை ஓட்டினேன்.

யாருமே இல்லை. அது மனசாட்சியின் குரல் என்பது புரிந்தது.

நாம் தப்புச் செய்யும்போது மட்டும் தவறாம கேள்வி கேட்டு இது மிரட்டும். இதுக்குப் பயந்தா நாம் நினைக்கிறபடியெல்லாம் வாழ முடியாதுன்னு நான் சொல்லுறேன். சரிதானுங்களே?

ஹி... ஹி... ஹி!!!
===========================================================================================

ஞாயிறு, 26 மார்ச், 2023

படு படு படு அப்பாவி ‘ஃபரூக் அப்துல்லா’!!!

“பாரதிய ஜனதா கட்சியினருக்கு ராமர் மீது உண்மையான அன்பு இல்லை; சாமானிய மக்களைக் கவர்வதற்காகவே புதிது புதிதாக ராமர் கோயில்களைத் திறக்கிறார்கள்; தேர்தல் வரும்போதெல்லாம் ‘இந்துக்களுக்கு முஸ்லிம்களால் ஆபத்து நேரவுள்ளது’ என்று பரப்புரை செய்கிறார்கள். அதிகாரத்துக்காக அவர்கள் அவரைத் தங்களுக்கு மட்டுமேயான கடவுளாகச் சொல்லிக்கொள்கிறார்கள்” என்று ‘ஜம்மு-காஷ்மீர்’ முன்னாள் முதல்வர்  ‘ஃபரூக் அப்துல்லா’ பேசியிருக்கிறார்[காணொலி உரை -நியூஸ்18].

இஸ்லாமியரைச் சீண்டித் தங்களின் கட்சியை வளர்ப்பவர்கள் ‘பாஜக’வினர் என்பதால், ஃபரூக் அப்துல்லா இப்படிப் பேசியதில் தவறே இல்லை.

ஆனால் அவர் தொடர்ந்து பேசுகையில், “ராமர் ஒரு இந்துக் கடவுள் மட்டுமல்ல. இந்த எண்ணத்தை ஒவ்வொருவரும் மனதில் இருந்து அகற்ற வேண்டும். முஸ்லீமாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவராக இருந்தாலும் சரி, அமெரிக்கராக இருந்தாலும் சரி, ரஷ்யராக இருந்தாலும் சரி, பகவான் ராமர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர்[‘அல்லாவும் எல்லா மதத்தவருக்கும் பொதுவானவரே’]” என்று குறிப்பிட்டது மட்டுமல்லாமல்.....

“அல்லாஹ்வால் அனுப்பப்பட்டவர் ராமர்” என்றும் உதம்பூரில் பாந்தர்ஸ் கட்சி ஏற்பாடு செய்த பேரணியில் அவர் கூறியுள்ளார்.

கடவுள் என்றொருவர் ‘இருப்பது’ உறுதிப்படுத்தப்படாத நிலையில், “அல்லாதான் ராமரை அனுப்பினார்” என்ற ஃபரூக் அப்துல்லா, மண்ணுலக மனிதர்களால் கணக்குவழக்கில்லாமல் கற்பனை செய்யப்பட்ட அத்தனைக் கடவுள்களையும் அவரே அனுப்பினார் என்று சொல்லியிருந்தால் அதை வெகுவாக ரசித்து மகிழ்ந்திருக்கலாம்.

‘அனைத்து மதத்தவருக்கும்[இஸ்லாமியர் உட்பட] ராமன் பொதுவான கடவுள் என்று பாகிஸ்தான் எழுத்தாளரை மேற்கோள்காட்டி அவர் சொல்லியிருப்பது அனைத்து இஸ்லாமியர்களையும் சினம்கொள்ளத் தூண்டும் என்பது உறுதி.

இப்படிப் பேசியதற்காக இந்துத்துவாக்கள் அவரைச் சாடுவதோடு சாபமும் கொடுப்பார்கள் என்பதை அவர் அறியாமல்போனது பரிதாபத்திற்குரியது. 

முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா மிகவும் நல்லவர் என்பதை அறிய முடிகிறது. அதே வேளையில், இத்தனை அப்பாவியா அவர் என்று பரிதாபபப்படவும் தோன்றுகிறது.


பாவம் ஃபருக் அப்துல்லா!

====================================================================================

சனி, 25 மார்ச், 2023

‘வன்புணர்ச்சி’... அரபு நாடுகளைப் பின்பற்றுதல் அவசரத் தேவை!!!

ர் அரசு மருத்துவமனையின் பெண் ஊழியர் ஒருவர், அந்த மருத்துவமனையின் ஊழியன் ஒருவனாலேயே கொடூரமாக வன்புணர்வு செய்யப்பட்டார்[வன்புணர்வு செய்த அந்த 55 வயதான விலங்கு மனிதன், தாக்குதல், வன்புணர்ச்சி என்று பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மார்ச் 20ஆம் தேதி கைது செய்யப்பட்டான்].

உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் அந்தப் பேதைப் பெண்.

இப்படியொரு மாபாதகத்துக்கு  அவள் உள்ளான நிலையில், அதே அரசு மருத்துவமனையின் ஐந்து ஊழியர்கள் இணைந்து[பாதிக்கப்பட்ட பெண் தங்களின் சக ஊழியர் என்பதையும் மறந்து], அவரை இணங்க வைத்துப் புணரும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

இந்த அவல நிகழ்வு குறித்து அறிந்த கேரள அரசு அந்த ஐந்து கயவர்களையும் பணியிலிருந்து ‘இடைநீக்கம்’ செய்துள்ளது.

மருத்துவக் கல்வி இயக்குநர்(டிஎம்இ) தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார் என்பது செய்தி[© இந்தியா டுடே]

முறையான தீவிர விசாரணைக்குப் பின்னரே மருத்துவக் கல்வி இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்திருப்பார் என்பது உறுதி.

அப்புறம் எதற்குக் கைது, நீதிமன்ற விசாரணை, தீர்ப்பு எல்லாம்?[பிற குற்றச் செயல்களுக்கு வழக்கமான நெறிமுறைகளைப் பின்பற்றுதல் அவசியம்].

தப்பி ஓட முயன்றதாகவும், காவலர்களைக் கடுமையாகத் தாக்கியதாகவும் ஓர் அறிக்கையைத் தயார் செய்து வைத்துக்கொண்டு அவர்களைச் சுட்டுத்தள்ளுதல் வன்புணர்வு செய்வதற்கும், அதற்கான முயற்சியில் ஈடுபடுவதற்கும்  வழங்கப்பட வேண்டிய மிக அவசியமான தண்டனையாகும்.

குழந்தைகள் & பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரிக்கும் நிலையில், சில அரபு நாடுகளைப் போல, நாற்சந்தியில் வைத்துக் கல்லால் அடித்துக் கொல்லுதல், அந்தரங்க உறுப்புகளைத் துண்டித்தல் போன்றவையே ஏற்ற தண்டனைகள் ஆகும்.

நடுவணரசு உடனடியாக, இது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உடனடித் தேவை ஆகும். 

https://www.msn.com/en-in/money/topstories/kerala-govt-suspends-five-employees-for-trying-to-influence-sexual-assault-survivor/ar-AA190m4F?ocid=msedgdhp&pc=U531&cvid=7d6616e8dadc4cfd82ae0bcae30e6515&ei=33

=======================================================================================

!!!இன்னுமொரு வன்புணர்வு நிகழ்வு. கீழேயுள்ள முகவரியைக் கிளிக்கி வாசிக்கலாம்[இது இன்றையச் செய்தி]:

https://tamil.news18.com/national/young-girl-gang-raped-by-tying-her-boyfriend-2-youths-arrested-918429.html


வியாழன், 23 மார்ச், 2023

அவர்களுக்குச் ‘சாவர்க்கர்! இவர்களுக்குக் ‘காந்தி’!!


’ரூபாய் நோட்டிலுள்ள காந்தியடிகளின் பெயரை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக, 'சவார்க்கர்' மற்றும் இதர சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவங்களைப் பொறிக்க வேண்டும்’ என்று இந்து மகாசபை நடுவணரசுக்கு வைத்துள்ள கோரிக்கை நாடெங்கும் கடும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சாவர்க்கர் சிறையில் இருக்கும்போது ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்துச் சிறையிலிருந்து விடுதலை பெற்றார் என ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி ராகுல் காந்தி பேசியுள்ளார். இது மகாராஷ்டிரா அரசியலில் மட்டுமல்ல, தேசிய அரசியலிலும் கடும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

இவர் ஆங்கிலேயருக்குப் பலவகையிலும் உதவிகள் செய்ததோடு,  காந்தியைக் கொலை செய்த கோட்சேவுக்குத் துப்பாக்கியை ஏற்பாடு செய்ததும் சாவர்க்கர்தான் என்று சொல்லப்படுவதோடு, அந்தக் குற்றச்சாட்டைச் சுமந்துகொண்டுதான் தன் வாழ்நாளைக் கழித்தார் என்றும் சொல்லப்படுகிறது.

இவர் ஆகச்சிறந்த சுதந்திரப் போராட்டவீரர் என்று சொல்லுகிற இந்துத்துவாக்கள், ‘பாஜக’ ஆட்சியில் சவார்க்கர் பெயரை ரூபாய் நோட்டுகளில் பொறிப்பது சாத்தியமே. ஆனால்,

காந்தியடிகளின் படம் நீக்கப்படுதல் வேண்டும்[முஸ்லீம்களுக்குச் சாதகமாக நடந்துகொண்டார் காந்தி என்பது இவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. முஸ்லீம்களைச் சகோதரர்களாக நினைத்துச் செயல்பட்டாரே தவிர, இவர்கள் சொல்லுவதில் முழு உண்மை இல்லை என்பது நினைவுகூரத்தக்கது] என்று இவர்கள் கோரிக்கை வைப்பது அடாவடித்தனத்தின் உச்சம் ஆகும்.

தன்னைத்தானே வருத்திக்கொண்டு, பகைவனைப் பணிய வைத்திடும் அதிசயமான போராட்ட முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் காந்தி. 

தமிழ்நாட்டில் கோவணத்தடன் அலைந்த மனிதர்களைப் பார்த்ததிலிருந்து இடுப்பில் வேட்டி, மேலே போர்த்துக்கொள்ள சிறு வேட்டி என்று வாழ்ந்துமுடித்த பெருந்தகை அவர்.

இவரோடு ஒப்பிட்டால், சாவர்க்கர் என்னும் அந்த இந்துமதப் பற்றாளர்[வெறியர்?] வெகு அற்பம்.

சாவர்க்கருக்காக, ரூபாய் நோட்டிலிருந்து காந்தி பெயர் நீக்கப்பட்டால், அது கடும் எதிர்ப்புக்கு உள்ளாகும் என்பதோடு, நாடெங்கும் பெரும் கலவரங்களை உருவாக்கும் என்பது உறுதி.

இந்த இந்துமத வெறியர்கள், ரூபாய் நோட்டுகளில் சாவர்க்கரின் படத்தைச் சேர்ப்பதோடு நிற்கமாட்டார்கள்; இந்தியத் தேசியக் கொடியிலும், சின்னத்திலும்கூட சாவர்க்கர் படத்தைச் சேர்ப்பார்கள் என்பது உறுதி. ஒரு கட்டத்தில், ‘இந்தியத் தேசம்’ என்னும் பெயரைக்கூட, ‘சாவர்க்கர் தேசம்’ என்று மாற்ற முனைவார்கள்.

இந்துத்துவாக்களின் இந்த வெறித்தனமான செயல்களை எதிர்ப்பவர்கள்.....

சவார்க்கருக்காக, ரூபாய் நோட்டில் காந்தியடிகள் பெயர் நீக்கப்படுமேயானால், இந்திய அரசு வெளியிடும் சவார்க்கர் படம் பொறித்த ரூபாய் நோட்டை நாங்கள் கையால் தொடமாட்டோம். காந்தி படத்துடனான ரூபாய் நோட்டுகளை அச்சிட்டுப் பயன்படுத்தும் உரிமை எங்களுக்குத் தேவை என்று பல மாநில அரசுகள் சொல்லும் நிலை உருவாகலாம்.

ஒரு வேளை.....

‘ஒரு வேளை...’தான்[100% அவ்வாறெல்லாம் நடக்காது என்று நம்புவோம்]. இந்தியா சாவர்க்கர் தேசம் என்று மாற்றப்படுமானால், அதை விரும்பாத மாநிலங்கள் ஒருங்கிணைந்து, 'காந்தி தேசம்' என்றொரு புதிய தேசத்தை உருவாக்க முயற்சி செய்யவும்கூடும்.

இது ஒரு முன்னெச்சரிக்கை மட்டுமே.

நடுவணரசு மிக மிக மிக விழிப்புணர்வுடன் செயல்படவேண்டிய நெருக்கடியான காலக்கட்டம் இதுவாகும்!
===============================================================================

செவ்வாய், 21 மார்ச், 2023

நல்ல நாய்களும் பொல்லாத மனிதர்களும்! “சீச்ச்ச்ச்சீ...ய்ய்ய்”ப் பதிவு!!

//மார்ச் 8ஆம் தேதி[2023] ஹோலி தினத்தன்று புல்வாரி ஷெரீப்பின்[பாட்னா] பைசல் காலனியில் நடந்த ஒரு நிகழ்வு மக்களைக் கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நாயுடன் இயற்கைக்கு மாறாக உடலுறவில் ஈடுபட்டது ‘சிசிடிவி’ காட்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது[ஐம்பதுக்கும் நூறுக்கும் கால்கடுக்கக் காத்திருக்கும் தெருவோரத் தொழில்காரிகள் இவன் கண்களில் படவே இல்லையா?! இதுவும் ஓர் உலக அதிசயம்தான்].


[இவனுக்கு 12 ஆண்டுச் சிறைத்தண்டனை -பழைய செய்தி]

இதைத் தொடர்ந்து, புல்வாரி ஷெரீப் காவல் நிலையத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று இந்த விவகாரம் தொடர்பாகப் புகார் அளிக்க,  பாட்னா காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகிறார்கள்[The Statesman  [-7h ago] என்றொரு அருவெறுப்பூட்டும் செய்தி வெளியாகியுள்ளது.

உதவிக் காவல் கண்காணிப்பாளர், புல்வாரி ஷெரீப் மணீஷ் குமார் கூறுகையில், “இந்நிகழ்வு குறித்துப் புகார் வந்துள்ளது. ஐபிசி & விலங்குகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்த  விசாரணை தொடர்கிறது” என்றார்//https://www.msn.com/en-in/news/other/bihar-man-rapes-dog-in-patna-probe-underway/ar-AA18PEK6?ocid=msedgdhp&pc=U531&cvid=44e33a8f22cb42e093ed1ebcbcede7b9&ei=23

இச்செய்தியை வாசித்தபோது, வடநாட்டைச் சேர்ந்த இரு அறிவுஜீவிக் குடும்பத்தார், தாங்கள் வளர்த்த இரண்டு செல்ல நாய்களுக்கு[ஒரு கடுவனும் ஒரு பெட்டையும்தான்] கோலாகலமாகத் திருமணம் செய்துவைத்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது[https://kadavulinkadavul.blogspot.com/2023/03/blog-post_13.html].

இதன் விளைவாக, அடியேனின் அடிமனதில் அரியதொரு யோசனையும் உதித்தது[அனுமானம் செய்திருப்பீர்கள்]. அது…..

தெரு நாய்க்கும் அதைத் தன் ஆசைநாயகி ஆக்கி ஆனந்தப் பரவசத்தில் திளைத்த அந்த மனித நாய்க்கும் கோலாகலமாகத் திருமணம் செய்துவைத்து, தனி வீட்டில் கணவன் மனைவியாகக் ‘குடித்தனம்’ நடத்த வழிவகுக்கலாம் என்பதே.

வாழ்ந்தால்.....

‘மனித நாய்’ என்னும் புதிய உயிரினம் உருவாகக்கூடும்!

கலிகாலம்டா சாமி!!

===============================================================================

ஞாயிறு, 19 மார்ச், 2023

அம்மா தெய்வம்! அப்பா?![ஒரு நெடுங்கதையின் ‘கரு’ இங்கே குறுங்கதையாக]


வனுக்கு நினைவு தெரிந்த வயதிலிருந்து அவனுடைய அப்பாவும் அம்மாவும் பாசத்தைப் பகிர்ந்துகொண்டதையோ, நேசத்துடன் உறவாடியதையோ அவன் பார்த்ததில்லை.

அவர்களுக்கு அவன் மட்டுமே வாரிசு; செல்லப்பிள்ளைதான். ஆனால், சொல்லிக்கொள்ளும்படியான சந்தோசங்களை அவன் அநுபவித்ததில்லை.

இருவரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள், ஒரு கட்டத்தில் அது மோதலில் முடியும்.

தாக்குதல் நடத்துபவர் அப்பாதான். அம்மா நடத்தியது வெறும் தற்காப்பு யுத்தம் மட்டுமே.

அப்பா அம்மாவின் கன்னத்தில் அறைவார். அம்மா அரண்டுபோய் அடுத்த அறையை எதிர்கொள்ளத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்வார்.

அவர் ஒரு கையோங்கிக் குத்தவரும்போது, இவர் தன் முதுகைக் கேடயம் ஆக்குவார்.

அவர் எட்டி உதைத்தால் இவர் தட்டுத்தடுமாறி மல்லாக்க விழுவார். மார்பில் ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டு, “குடிகார நாயே, அடிடா, அடிச்சி என்னைக் கொல்லுடா” என்று ஏகவசனத்தில் திட்டித் தீர்ப்பார்; அழுவார். அப்புறம் அரைமணி நேரம்போல ஒப்பாரிவைத்து ஓய்ந்துபோய்க் கட்டாந்தரையில் கண்மூடிக் கிடப்பார்.

‘குடிகார நாயே’ என்று அம்மா சொன்னது உண்மைதான். அப்பா ஒரு குடிகாரன்தான். எப்போதிருந்து அவர் குடிக்க ஆரம்பித்தார் என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது. 

மற்ற நேரங்களில் அவர் குடித்திருப்பதே தெரியாது. ஆனால், அம்மாவை அடி, உதை என்று புரட்டி எடுத்தபிறகு அவர் தவறாமல் குடிப்பதை அவன் பார்த்திருக்கிறான். 

குடித்துக் குடித்துப் போதை தலைக்கேறி, தரையில் சரிந்து விழுவார்.

குடிப்பதற்கு முன் சிறிது நேரம் தன் நாட்குறிப்பில் ஏதோ எழுதுவதையும், எழுதி முடித்து அதைத் தனக்கேயான ஒரு பெட்டிக்குள் வைத்துப் பூட்டுவதையும் அவன் கவனித்திருக்கிறான். அம்மாவைப் பற்றி அந்த நாட்குறிப்பில் எழுதியிருப்பாரோ என்று சந்தேகப்பட்டதுண்டு. வாய்ப்புக் கிடைத்தால் அதில் எழுதியிருப்பதை வாசித்துப்பார்க்க அவன் ஆசைப்பட்டதும் உண்டு. அதற்கான வாய்ப்பு மட்டும் கிட்டவே இல்லை.

சண்டை முடிந்து, ஒருபுறம் அம்மா மயங்கிக்கிடப்பதையும். இன்னொரு பக்கம் அப்பா உருண்டு புரள்வதையும் பார்க்கும்போதெல்லாம் அவனுக்குள் இனம்புரியாத கவலை சூழும். அதைப் போக்கிக்கொள்ள வழியே இல்லையா என்று ஏங்குவான்.

அவன் அழுவான். அந்த அழுகை அம்மாவுக்காகவா, அப்பாவுக்காகவா, தனக்காகவா என்றெல்லாம் அவன் யோசித்துப் பார்த்ததில்லை.

அவன் சிறுவனாக இருந்தபோது, “ஏன்ப்பா அம்மாவை அடிக்கிறீங்க?” என்று கேட்க நினைத்ததுண்டு. ஆனால், அவரின் ஆஜானுபாவான தோற்றம் கேட்கவிட்டதில்லை.

“அப்பா ஏன்மா உன்னை அடிக்கிறார்?” என்று அம்மாவிடம் அவன் கேட்டதுண்டு. 

“உன் அப்பன் என்னைத் தேவடியாள்கிறான். அவுசேரிங்கிறான். கல்யாணத்துக்கு முந்தியே அண்டை வீட்டுக்காரனோடு கள்ள உறவு வெச்சிருந்தேன்கிறான்...” என்றிப்படி ஏதேதோ சொல்லுவாள் அம்மா. சொல்லி அவனைக் கட்டிப்பிடித்து அழுவாள்.

அவன் ஆளாகிப் பள்ளிப்படிப்பு முடித்துக் கல்லூரியில் காலடி வைத்தபோது, அம்மா சொன்ன அந்த உறவுகள் தகாத உறவுகள் என்பது அவனுக்குப் புரிந்தது. ஆனால், அவளிடம் அப்பா சொன்ன தவறான உறவெல்லாம் அவளுக்கு இருந்ததா என்று கேட்டதில்லை.

படக்கூடாத வேதனைகள் எல்லாம் பட்டுப் பத்து மாதம் சுமந்து பெற்றவளிடம் அப்படிக் கேட்பதற்கு மகனின் மனம் இடம்தருமா?

அப்பாவுடன் சண்டை நடந்து இரவுபகலாய்த் தான் பட்டினி கிடந்தபோதும், மறவாமல் பெத்த மகனுக்குச் சோறூட்டிச் சீராட்டி வளர்த்தவளை, அவன் உடம்புக்கு ஒன்று என்றால், தன் உயிரைப் பணயம் வைக்கத் தயாராக இருந்தவளைச் சந்தேகப்பட முடியமா? கேள்வி கேட்க முடியுமா?

முடியவே முடியாது. 

ஆனால், அப்பாவிடம் இதே கேள்விகளைக் கேட்டிருக்கிறான்.

அப்போதெல்லாம், “உன் அம்மா உனக்கு எப்போதும் நல்ல அம்மாதான். இனியும் அவளைப் பத்தி ஏதும் கேட்காதே. நல்லாப் படிச்சி நல்ல உத்தியோகம் தேடிக்கப்பாரு” என்று சொல்வதோடு பேச்சை முடித்துக்கொள்வார்.

அவ்வப்போது இல்லையென்றாலும், எப்போதாவது, “எப்படிப் படிக்கிறாய்? எஞ்ஜினீயரா டாக்டரா என்னவாக விருப்பம்?” என்று கேட்பதோடு சரி. எவ்வளவு நேரம் படிக்கிறான், எவ்வளவு மதிப்பெண் வாங்குகிறான் என்பது பற்றியெல்லாம் அவனிடம் விசாரித்ததேயில்லை.

+2வில் குறைந்த மதிப்பெண் வாங்கியதற்காகக்  கோபப்படவில்லை; ஓசைப்படாமல் ஒரு தனியார் கல்லூரியில் நன்கொடை கொடுத்துக் கணினிப் பட்டப்படிப்பில் அவனைச் சேர்த்துவிட்டார்.

நல்ல அம்மாவும் நல்ல அப்பாவும் வாய்த்ததில் அவன் ரொம்பவே பெருமைப்பட்டான்.

ஆனால், அவர்கள் இருவரும் நல்ல கணவனாகவும் நல்ல மனைவியாகவும் இல்லையே என்பதுதான் அவனின் நீங்காத கவலையாக இருந்தது.

ஆயிற்று, கால ஓட்டத்தில் அப்பாவுக்கு இப்போது அறுபது வயது. திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, “இனி கடவுள் கருணை காட்டினால்தான் உண்டு” என்று மருத்துவர்கள் கைவிரித்த நிலையில், அப்பா வீட்டில்  படுத்தபடுக்கையாக இருந்தார்.

நினைவு வருவதும் போவதுமாக இருந்தது. அவ்வப்போது கண் திறந்து பார்த்தார். ஏதோ சொல்ல முயல்வது போல் தெரியும். முடியாமல் கண்மூடிவிடுவார்.

அவன் எந்நேரமும் அவர் அருகிலேயே இருந்தான். அம்மாவும்தான்.

அன்று மாலை மயங்கும் நேரம்.

அப்பா கண்விழித்தார். நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு அவரின் உதடுகள் அசைந்தன. “பெட்டியைத் திறந்து டைரியை எடுத்து வா” என்று சொன்னதோடு, சாவி இருக்கும் இடத்தையும்  விவரித்தார்.

அவன் நாட்குறிப்பை எடுத்துவந்து அவரிடம் காட்டினான்.

அவர் தீப்பெட்டியை உரசுவதுபோல் சைகை காட்டி, நாட்குறிப்பை எரித்துவிடும்படிச் சொன்னார்.

அவரின் கண் முன்னாலேயே, அதை எரித்துச் சாம்பலாக்கினான் அவன்

அவர் கண்மூடினார். முகம் முழுக்க மரண அமைதி படர்வது தெரிந்தது.

அம்மா அவனின் தெய்வம். அப்பா தெய்வமோ அல்லவோ, அவர் ஓர் உன்னதமான மனிதர் என்பதை மட்டும் அவனால் உணர முடிந்தது.

===========================================================================================

சனி, 18 மார்ச், 2023

தண்ணீரில் தோன்றிய தெய்வம்!... உலகில் இதுவரை நிகழாத அதிசயம்!?!?!


‘தண்ணீரில் தோன்றிய தெய்வம்’ என்னும் தலைப்பில் செய்தி வெளியிட்டு[காணொலியும் வெளியாகியுள்ளது] பக்திமான்களை ஆனந்தக் கண்ணீரில் மிதக்கச் செய்துள்ளது ‘தினத்தந்தி’ நாளிதழ்.

கடவுள் நம்பிக்கை இல்லாத ‘நாத்திகப் பதர்’ ஆகிய நான் தலைப்பை வாசித்ததும் மனம் திருந்தி, “ஆகா, தண்ணீரிலிருந்தொரு தெய்வம் வெளிப்பட்டதா?” என்று மெய்சிலிர்த்தேன்[தினத்தந்திச் செய்தி உண்மையாக இருக்கும் என்னும் நம்பிக்கையில்].

அது ஆணா, பெண்ணா?

யாமறிந்த பல்லாயிரம் தெய்வங்களில் அது எதுவாக இருக்கும்?

எம்பெருமான் சிவபெருமானா, காக்கும் கடவுள் கண்ணபிரானா, முருகனா, அண்ணாமலையானா, உண்ணாமுலையம்மனா, இலக்குமியா, கலைவாணியா, கடவுள்களின் கடவுளான அதியோகி சிவனா என்றிப்படிக் கேட்டுக் கேட்டு[அடிமனதில் அல்லாவும் கர்த்தரும்கூடத் தோன்றி மறைந்தார்கள். ஹி... ஹி... ஹி!!!] உடனடியாக விடை அறியும் ஆர்வத்துடன் விரிவான செய்தியை வாசிக்கத் தொடங்கினேன்.

வாசிப்புக்கிடையே மேற்கண்டவர்களில் எவரும் இல்லை; அதிசயம் நிகழ்த்திய அந்த அகில உலகப் பிரபலம் ‘விநாயகப் பெருமான்’ என்பது தெரியவந்தது.

தண்ணீரில் தோன்றிய, அந்த அழுக்குப் பிள்ளையாரை[அம்மையின் அழுக்கில் அவதரித்தவர்] முதலில் காணும் பேறு பெற்றவர்கள் பற்றி அறியும் ஆர்வத்துடன் வாசிப்பைத் தொடர்ந்ததில், கீழ்க்காணும் தகவல்களை அறிய முடிந்தது.

//கடலூர் அருகே ஆதிவராகநல்லூரைச் சேர்ந்த கல்யாணசுந்தரமும் சுபாஷ் என்பவரும் அங்குள்ள வாய்க்காலில் மீன்பிடிப்பதற்காகத் தண்ணீரை இறைத்துள்ளனர். 

அப்போது அங்கு புதைந்த நிலையில் இருந்த பிரமாண்டக் கருங்கல் விநாயகர்[சிலை என்று குறிப்பிடவில்லை தினத்தந்தி] அவர்களுக்குக் காட்சி அளித்துள்ளார். 

இந்தச் செய்தி, சுற்றுவட்டார மக்களிடையே பரவ, அவர்கள் விநாயகரைச் சுத்தம் செய்து சூடம் ஏற்றி வழிபாடு நடத்தியுள்ளனர். 


இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் விநாயகர் சிலையை மீட்டு ஆய்வு செய்துவருகின்றனர்[‘ஆய்வு நிகழ்த்தியபோது விநாயகப்பெருமான் மாயமாய் மறைந்துவிட்டார்’ என்னும் செய்தி சில நாட்களில் வெளிவரும். காத்திருங்கள் பக்தர்களே]//


காலங்காலமாய் இங்கு இருக்கிற முட்டாள்கள் போதாதென்று, புத்தம்புதிய முட்டாள்களை உருவாக்குவதில் தினத்தந்தி[தினமலரை மிஞ்சும் வகையில்]ஆற்றியுள்ள பணி மகத்தானது!



https://www.thanthitv.com/latest-news/cuddalore-vinayagar-in-water-173991

===========================================================================================