எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 22 டிசம்பர், 2014

இன்றைய என் பதிவில் நேர்ந்தது பெரும் பிழை...மன்னியுங்கள்.

இன்று நண்பகல்[22.12.2014] நான் வெளியிட்ட, ‘ஆஞ்சநேயருக்கு அபிஷேகமும் என் அடிவயிற்று எரிச்சலும்’ என்னும் பதிவில் மிகப் பெரிய ஒரு பிழை நேர்ந்துவிட்டது.[என் துணைவியார் சுட்டிக் காட்டியதால்  திருத்தப்பட்டுவிட்டது].

நாமக்கல்லில், 21.12.1914 இல் ஆஞ்சநேயருக்குப் ‘பாலாபிஷேகம்’ நடைபெற்றதாகக் குறிப்பிட்டிருந்தேன். இது தவறான தகவல் ஆகும். 21.12.2014 என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

ஏற்கனவே இந்த இடுகையை http://kadavulinkadavul.blogspot.com/2014/12/blog- post_22.html[‘கிளிக்’ செய்க] வாசித்தவர்கள் என்னை அன்புகொண்டு மன்னித்திடுமாறு மிக்க பணிவுடன் வேண்டுகிறேன்.

நேர்ந்த பிழைக்கு மிகவும் வருந்துகிறேன்.

கீழ்த்தரமான கண்டனக் கருத்துகளுக்கு அஞ்சி, கருத்துப் பெட்டியை மூடி வைக்காமல் இருந்திருந்தால் நண்பர்கள் இந்தப் பிழையைச் சுட்டிக் காட்டியிருப்பார்கள். 

இனி என்றும்[பதிவு எழுதுவதை நிறுத்தும்வரை] ‘கருத்துப் பெட்டி’ திறந்தே இருக்கும்[தேவைப்பட்டால் மட்டுமே மட்டுறுத்தல்...] என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கவனக்குறைவால் நேர்ந்த பிழை இதுவாகும். 'ஹிட்ஸ்’ஸுக்காக நான் கையாண்ட உத்தியோ இது என்று தயவுசெய்து சந்தேகப்பட வேண்டாம்.

அனைவருக்கும் என் நன்றி.

===========================================================================================

ஆஞ்சநேயருக்கு அபிஷேகமும் என் அடிவயிற்று எரிச்சலும்!!!

நம் நாட்டு அரசியல் சட்டப்படி, அத்தியாவசிய உணவுப் பொருளான பாலை அதிக விலைக்கு விற்பது குற்றம்; அதில் தண்ணீர் கலப்பது குற்றம்; தரையில் கொட்டுவது [விவசாயிகளின் போராட்டத்தில்...] குற்றம். உண்மை இதுவாயிருக்க, ஒரே நேரத்தில் பத்தாயிரம் லிட்டர் பாலை ஒரு கற்சிலையின் மீது கொட்டியிருக்கிறார்களே, இது குற்றமில்லையா?

ஐந்தறிவு ஜீவன்களில் ஒன்றான குரங்கின் ரூபத்தில் இருந்தாலும், ராமாயணக் கதையில் முக்கிய பங்கு பெற்றதால் பன்னெடுங் காலமாக, அதையும் ஒரு தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள் நம் மக்கள்.

காசு பணம் கொடுத்து ஏழைகளின் துன்பம் போக்குதல்; உடல் உழைப்பை ஈந்து உரியவர்களுக்கு உதவுதல் என்றிப்படிப் பிறருக்கு உதவுவதன் மூலம் மனச் சாந்தி பெறுவதற்கான வழிகள் எத்தனையோ இருக்கக் கடவுளை வழிபடுவதன் மூலமாகத்தான் அதை முழுமையாகப் பெற முடியும் என்று நம்புகிறவர்கள் நம்மில் மிகப் பலர்.

கடவுளை நம்பட்டும்; வழிபடட்டும். அதை ஆட்சேபிக்க எவருக்கும் உரிமையில்லை.

வழிபாடு என்னும் பெயரால் எத்தனையோ மூடத்தனமான செயல்களில் நம்மவர்கள் ஈடுபடுகிறார்கள். படட்டும். அவற்றைத் தடுக்கவும் பிறருக்கு உரிமையில்லை.

ஆனால்.....

பாலாபிஷேகம், பழ அபிஷேகம், சந்தன அபிஷேகம், மஞ்சள் அபிஷேகம் என்பன போன்ற படு மூடத்தனமான செயல்களில் ஈடுபட்டு, அனைத்து மக்களின் அடிப்படைத் தேவைகளான மேல் குறிப்பிட்டவை போன்ற பொருள்களைக் கணக்கு வழக்கில்லாமல் அழித்தொழிக்கிறார்களே, இது என்ன நியாயம்?

இந்த அழிப்பு வேலை தினசரி எண்ணற்ற கோயில்களில் நடைபெற்று வருவது யாவரும் அறிந்ததே.

வறுமை தாண்டவமாடும் ஏழைகள் பெரும்பான்மையாக உள்ள இந்த இந்தியத் திருநாட்டில் இது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும்.

இது குற்றம் என்பதை அறிந்தவர்கள்கூட கண்டிப்பதில்லை. அரசுகளும் கண்டுகொள்வதில்லை. காரணம்.....

இது கடவுளின் பெயராலும், பக்தியின் பெயராலும் நடைபெறுவதால்தான்.

இம்மாதிரிக் குற்றங்கள் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டுக் கோயில்களில் அரங்கேறிக்கொண்டிருக் கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று..........

21.12.2014 இல் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்றிருக்கிறது.

அதை என் வாயால் சொல்ல வேண்டாம். ஒரு தினசரி அதைச் செய்தியாக வெளியிட்டிருக்கிறது. படியுங்கள்.

செய்தித் தலைப்பு:  

            நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 10ஆயிரம் லிட்டர் பாலாபிஷேகம்
செய்தி:

‘அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயருக்குப் பத்தாயிரம் லிட்டர் பாலில் அபிஷேகம் செய்யப்பட்டது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தார்கள்....’ என்று தொடர்கிறது செய்தி.

ஆக, காலங்காலமாகச் சிலர்[ஜாதிப் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை] பக்தியின் பெயரால் ஆரம்பித்து வைத்த இந்தக் குற்றச் செயலுக்கு 21.12.2014இல் நாமக்கல்லிலும் ஆயிரக்கணக்கான நம் பக்தர்கள் அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்கள்.

இந்தக் குற்றச் செயல், இதே நாளில் இன்னும் ஏராளமான கோயில்களில் நடைபெற்றிருக்கிறது.

பத்திரிகைச் செய்தியைப் படித்ததிலிருந்து [ஐயோ...பத்தாயிரம் லிட்டர் பால் வீணானதே!!!]என்று  என் அடிவயிறு பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.

இந்த எரிச்சல் மருந்துகளால் தீராதது. காலம் காலமாக மக்களின் துயர் போக்கி அருள்பாலிக்கிற ஆஞ்சநேயக் கடவுள்தான் இந்த எரிச்சலையும் போக்கியருள வேண்டும்.

ஜெய் ஆஞ்சநேயா!

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx