‘பெருமாள் முருகன் பாணி’ என்பதைத் தவறாக அர்த்தம் பண்ணிக்கொண்டால் கதை முடிவில் ஏமாற்றத்திற்கு உள்ளாவீர்கள். நன்கு யோசித்து வாசிப்பைத் தொடருங்கள்!
அடகு
தலைச் சுமையாய்க் கொண்டுபோன தக்காளியை நகரத்துத் தெருக்களில் கூவி விற்றுவிட்டு, வெற்றுக் கூடையைக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு, ஓட்டமும் நடையுமாய்க் கருப்பாயி வீடு வந்து சேர்ந்தபோது நேரம் நண்பகலை நெருங்கிவிட்டிருந்தது.
“மாடு கன்னெல்லாம் கட்டிக் கெடக்குது. பண்ணயக்காரன் எங்க போய்த் தொலைஞ்சுது?” என்ற அங்கலாய்ப்புடன் வாய்க்கால் வரப்பில் நடந்த கருப்பாயி, “தாக்கோலிக்குத் தண்ணி கட்டுன்னு சொல்லிபுட்டுப் போனன். செய்யல. இந்தக் கவண்டனுக்குச் சுத்தமா கூரு கெட்டுப் போச்சு” என்று முணுமுணுத்தவாறே தாய்மை உணர்வு சுரக்க, வாடிக் கிடந்த செடிகளை வருடிக் கொடுத்தாள்.
கூடையை ஒரு புறம் கடாசிவிட்டு, மம்மட்டி எடுத்து வாய்க்கால் சீவி, மோட்டார் போட்டு நிமிர்ந்த போது, பத்துப் பதினைந்து பேர் அடங்கிய சேரிக் கும்பல், குடமும் கையுமாய்த் தண்ணீர் பிடிக்கக் காத்திருப்பது கண்டு கடுங் கோபத்துக்கு ஆளானாள் கருப்பாயி.
“தண்ணிக்கி வராதீங்கன்னு எத்தனை வாட்டி சொல்றது? உங்களுக்குச் சூடு சொரணையே இல்லியா? எனக்குக் கெட்ட கோவம் வருது. மருவாதையாப் போயிருங்க” என்றாள்.
“பண்ணயக்காரன் சொல்லித்தான் வந்தோம்” -கும்பலில் ஒரு குரல்.
“நல்ல பண்ணயக்காரன். பொளைக்கத் தெரியாத பண்ணாடி. மாட்டுக்கு ஒரு கட்டுத் தீவனம் இல்ல. பன ஓலையைக் கிழிச்சிப் போடுறம். நட்ட பயிரெல்லாம் சருவா காயுது. இருக்கிற கொஞ்சம் தண்ணியில தாக்கோலி நாலு செரவு நனையுது. இது பொறுக்கிலியா உங்களுக்கு. எங்க பொழப்புல மண்ணைப் போடுறீங்களே, நீங்கெல்லாம் உருப்படுவீங்களா?.......”
குறுக்கிட்டது ஒரு குரல். “விசயம் தெரியாம அவங்களைக் கரிச்சிக் கொட்டாத. தம்பான் பொண்டாட்டி பொடவையில் தீப் புடிச்சிக் கருகிச் செத்துப் போய்ட்டா. பொணத்தைக் குளிப்பாட்டக்கூடத் தண்ணி இல்ல. நாந்தான் அவங்கள வரச் சொன்னேன்.” குரலுக்குரியவன் கருப்பாயியின் புருஷன் மாரப்பன். “என்ன நடந்துதுன்னு வெசாரிக்கத்தான் சேரிக்குப் போயிருந்தேன்.”
சினம் தலைக்கேறிய கருப்பாயி சிரமப்பட்டுத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டாள்.
சேரிவாசிகள் தண்ணீர்க் குடங்களுடன் நகர்ந்ததும் அவள் வெடித்தாள். “நீயெல்லாம் ஒரு குடியானவனா? செரீத்த பங்காளி டவுனுக்கு வண்டி வண்டியா தண்ணி வித்தே அம்பது அறுவதாயிரம் சம்பாதிச்சிபுட்டான். சேரிக்காரங்களுக்குத் தண்ணி உடுறதை நிறுத்தினா நாம்பளும் நாலு காசு பார்க்கலாம். தாக்கோலி இப்பப் பவுன் வெல விக்குது. பெரிய பொன்னான் நாலு வயலு நட்டுது. நல்ல காசு. அதும் பொண்டாட்டி ஆறு பவுன்ல செயினு பண்ணிப் போட்டுகிட்டு மினுக்குறா. நீ மட்டுந்தான் துப்பத்த பொளப்பு பொளைக்கிறே.”
“இப்ப என்னய என்னதான் பண்ணச் சொல்றே?” பொறுமை இழந்ததாகக் காட்டிக் கொண்டான் மாரப்பன்.
“கர்ண மகாராசாங்கிற நெனப்ப வுட்டுத் தொலை. வழக்கமா சேரிக்காரங்களுக்குத் தண்ணியைத் தானம் பண்றதை நிறுத்து.”
”மத்த தோட்டத்துக்காரங்க அவங்களுக்குத் தண்ணி தர்றதில்ல. அரசாங்கம் அவங்களுக்காக ரெண்டு மூனு போர் போட்டுக் குடுத்துது. காய்ச்சகாலம்கிறதால எல்லாமே வறண்டு போச்சு. ஏழைப்பட்ட ஜனங்க. நாமளும் விரட்டியடிச்சா அவங்களுக்குக் குடிக்கக்கூடத் தண்ணி இல்ல.”
“உனக்கு ரொம்பத்தான் கூரு கெட்டுப் போச்சி. நாளைக்கு மழை பேஞ்சா ஏர் பூட்டக்கூட எருது இல்ல. விதை, நடவுக் கூலி, உரம், உப்புன்னு எத்தனை செலவு இருக்குது. கெணறு அடிவெட்டுக்காவ, இருந்த ரெண்டு நகையையும் அடமானம் வெச்சாச்சு. என்னதான் பண்ணப் போறமோ.” இறக்கி வைக்க முடியாத மன பாரத்துடன், பனங்கருக்கில் கட்டியிருந்த பசு மாட்டை நோக்கி நடந்தாள் கருப்பாயி.
அது மழைக்காலம்.
போதும் போதும் என்று சொல்லுமளவுக்கு, சொக்கன்பட்டியைக் குளிப்பாட்டிவிட்டான் வருணபகவான்.
உழவர்கள் புத்துணர்ச்சி பெற்று உழவுப் பணியில் ஈடுபட்டார்கள். பத்தோடு பதினொன்றாக மாரப்பன்.
அறுவடைக் காலம்.
அறுவடையை ஆரம்பித்திருந்த சொக்கன்பட்டி விவசாயிகளை வானிலை அறிக்கை கலக்கமடையச் செய்தது. வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த புயல், கடலூரில் கரை கடந்து, வட மாவட்டங்களில் கடும் சேதம் விளைவிக்கும் என்பது அந்த அறிக்கை தந்த எச்சரிக்கை.
பண்ணைக்காரர்கள், சேரிக்குப் படை எடுத்தார்கள். அறுவடைக்கு ஆள் பிடிப்பதில் கடுமையான போட்டி.
மாமூல் கூலிக்கு மேல் ஐம்பது சேர்த்துத் தருவதாகச் சொன்னார் பெரிய தோட்டத்துப் பெரியண்ணன்.
கூலியை இரண்டு மடங்கு ஆக்குவதாக அறிவித்தார் பச்சக்காட்டுக் கொமரசாமி.
அவர்களோடு போட்டி போட்டு ஜெயிக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட மாரப்பன் சோகம் சுமந்து வீடு திரும்பினான்.
“நீ ரொம்பத்தான் ஏழைபாழைன்னு பாகா உருகினே. அந்த ஏழைபாழைங்க நீ செஞ்ச உதவியை நினைச்சிப் பார்த்தாங்களா? கூலி அதிகம் தர்றவங்க பின்னாடிதானே போயிருக்காங்க.” கருக்கரிவாளுடன் நெல் அறுவடையில் ஈடுபட்டிருந்த கருப்பாயி மாரப்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். மாரப்பன் வாய் திறக்கவில்லை.
காலடி ஓசை கேட்டு இருவரும் நிமிர்ந்து திரும்பிப் பார்த்தார்கள்.
ஆண்களும் பெண்களும் பெரியவர்களும் சிறியவர்களுமாக நூறு பேருக்கும் குறையாத சேரிவாசிகள் , அரிவாளும் கையுமாக அவர்களை நெருங்கினார்கள்.
அவர்களில் வயதில் மூத்த முனியப்பன் சொன்னார்: “உங்ககிட்ட நாங்க கூலி பேச விரும்பல. முடிஞ்சதைக் குடுங்க. அதுவும் முடியலேன்னா, மதியம் பசியாறக் கொஞ்சம் கஞ்சி ஊத்துங்க போதும்.” என்றார்.
அவர் சொல்லி முடித்த மறு வினாடியே, அந்த ஏழைப்பட்ட மக்கள், முழு அர்ப்பணிப்புடன், மும்முரமாய் அறுவடைப் பணியில் தம்மை ஈடுபடுத்தலானார்கள்.
*****************************************************************************************************************************************************