புதன், 7 ஜனவரி, 2015

குமுதத்தில்[12.01.2015] வைரமுத்துவின் ‘பூனை வளர்த்த’ ஒரு கிழவியின் கதை!

ஒரு கதையைப் படிக்க வைப்பதில் அதன் தலைப்புக்கு முக்கிய பங்குண்டு என்பார்கள். கவிஞரின் ‘மனிதர்களால் ஆனது வாழ்வு’ என்ற, எளிதில் புரியாததொரு தத்துவத்தை உள்ளடக்கிய தலைப்பு கதையைப் படிக்கவிடாமல் நம்மை விரட்டியடிக்கிறது!

கதைத் தலைப்பு:         மனிதர்களால் ஆனது வாழ்வு

‘மரியா’ என்னும் பெயர் கொண்ட ஆஸ்திரேலிய நாட்டுக் கிழவிதான் இந்தச் சிறுகதையின் நாயகி.

‘ஏதோ அற்ப காரணத்துக்காக இவளைத் துரத்திவிடுகிறான் முதல் கணவன். பத்தொன்பது வயது மகளோடு தனித்து விடப்பட்டவள், நாற்பது வயதில் இன்னொருவனை மணக்கிறாள். அவன், இவளின் மகளோடு சிட்னிக்கு ஓடிப்போனது இவளின் இதயத் தசையைக் கிழித்துப் போட்டது; மனிதர்களை வெறுக்கச் செய்தது’ என்கிறார் வைரமுத்து.

அனாதரவான நிலையில், பிரிஸ்பன் நகருக்குச் சற்றுத் தொலைவில் இருந்த, மூத்த குடிமக்கள் வாழ்ந்த ‘ஏரிவனம்’ என்னும் குடியிருப்புக்கு இடம் பெயர்கிறாள் மரியா.

தனிமையைப் போக்க ஒரு பூனை வளர்க்கிறாள்; அதை மிகவும் நேசிக்கிறாள்.

‘என்னுடையது பெர்ஷியன் ஜாதிப் பூனை. உடம்பெங்கும் பொன்னை இழைத்த ரோமம். என்னுடைய பால்ய காலத் தொடையைவிட அது மென்மையானது. நிறையவே செலவழிக்கிறேன். என் படுக்கையில் என் கணவர்களைவிட அதிகம் படுத்தது இந்தப் பூனைதான்” என்று சொல்லிச் சுருங்கிய தோல்களில் வெட்கம் தேக்குவாள் மரியா’..... அவள் நேசிப்பின் ஆழத்தை இப்படிப் புரிய வைக்கிறார் வைரமுத்து.

பூனையுடன் இவள் வாழ்ந்த வாழ்க்கை மகிழ்ச்சியானதாகவே அமைகிறது.

‘அழகிய வீடு மரியாவுடையது. அவள் வீடும் அவளும் ஒப்பனை கலைந்ததில்லை; தேவாலய மணியோசை போன்றவள்; பேச்சில் உற்சாகம் குறைய மாட்டாள். அவள் தோல் சுருங்கியதுண்டு; மகிழ்ச்சி சுருங்கியதில்லை’ என்கிறார் கவிஞர்.

இப்படியாக, 13 ஆண்டுகள் கழிந்த நிலையில் அவளின் செல்லப் பூனை செத்துப் போகிறது.


உண்மை நிகழ்வை[பூனை இறந்தது] மூடி மறைத்து, கிழவிக்கு மிகவும் வேண்டப்பட்ட யாரோ மரணமடைந்தது போல, கதையைத் தொடங்குகிறார் கவிஞர். சில நிமிட வாசிப்பிற்குப் பிறகு உண்மை வெளிப்படுகிறது[இது, தரமான கதைக் கருவோ, செறிவான உள்ளடக்கமோ இல்லாத கதைகளில் கதையில் விறுவிறுப்பைக் கூட்டுவதற்காகக் கதாசிரியர்கள் கையாளுகிற ஒரு தந்திர உத்தி]

“அய்யோ...கிழவி தாங்க மாட்டாளே!”, “மூதாட்டிக்கிருந்த ஒரே துணையும் போய்விட்டதா?” என்று ஏரிவனவாசிகள் அனுதாபப்படுகிறார்கள். பெரும் எண்ணிக்கையில் கிழவியின் வீடு தேடி வருவதாகக் குறிப்பிடுகிறார் கவிப்பேரரசு.

இந்த நிகழ்ச்சி நடைமுறை சாத்தியமானதா?

ஒரு பூனையின் சாவுக்கு ஆஸ்திரேலிய மக்கள் இத்தனை மரியாதை செலுத்துகிறார்களா? [இங்குள்ள கிராமங்களில், மாடுகள் இறந்து போனால் இழவு காணச் செல்வது வழக்கத்தில் இருந்தது. இப்போது இல்லை என்றே சொல்லலாம்]].

‘பூனையின் சடலம் ஒரு தொட்டிலில் கிடந்தது. அதன் மீது ஒரு செர்ரி வெல்வெட் போர்த்தப்பட்டிருந்தது. அந்தத் தொட்டில், ஒரு கண்ணாடிப் பேழையிட்டுக் காற்றுப் புகாவண்ணம் கட்டமைக்கப்பட்டிருந்தது. மரியா பிறந்தபோது அவளை அவள் தாய் இட்ட தொட்டிலாம் அது...... பின்னர் தொட்டிலோடு அது அடக்கம் செய்யப்படுகிறது.’

இதெல்லாம் சரி. செல்லப் பிராணிகள் மீது பாசத்தைப் பொழிவதும், அவை இறந்தால் ஒரு குடும்ப உறுப்பினரை இழந்தது போல் துக்கம் அனுசரிப்பதும் எங்கோ சில குடும்பங்களில் நடப்பதுதான்.

இதற்கும் மேலாக, ஊரே திரண்டு வந்து அனுதாபம் தெரிவிப்பது; ஈமச் சடங்கில் கலந்துகொள்வது என்பதாகச் சித்திரிப்பது எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல.

கவிஞர் தொடர்ந்து எழுதுவதைக் கவனியுங்கள்.

‘சற்று நேரத்தில், பூக்களும் பூங்கொத்துகளுமாய் அந்த அறை நிறைந்தது.

சிலர் அவள்[மரியா] தலைமீது கை வைத்தார்கள். சிலர் அவள் கரம் பற்றி அழுத்தினார்கள்.........

........புல்வெளியில் நிற்பதற்கு இடமில்லை; அத்துணை கூட்டம்.’

இப்படிக் கற்பனையாக, மிகைப்படுத்தப்பட்ட சம்பவங்களை இணைத்துக் கதை பின்ன வேண்டிய அவசியம் ஏன் நேர்ந்தது?

கதாசிரியர் வைரமுத்து எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டார்.

கதை இத்துடன் முடியவில்லை. நீளுகிறது.

‘குளிர்காலத் தொடக்கம்.........

.....சில நாட்களாகவே மரியாவின் வீடு திறக்கப்படவே இல்லை. அவள் தனிமை விரும்பி என்பதால், அண்டை அயலார் அவளின் நிலை அறிய முயலவில்லை’ என்கிறார் கதாசிரியர்.

பழுதடைந்த அவளின் வீட்டுக் கதவைப் பழுது பார்க்க, பதிவு செய்யப்பட்ட  தச்சன் மரியாவின் வீடு தேடி வருகிறார், உள்ளேயிருந்து துர்நாற்றம் வருவதை உணர்ந்து வீதிக்கு ஓடி வருகிறார்.

போலீஸ் வந்து மரியாவின் சவத்தை எடுத்துச் செல்கிறது.

ஏரிவனம் எங்கும் தெரிந்துபோயிற்று மரியாவின் மரணம். யாரும் வரவில்லை; மருத்துவமனைக்குச் செல்ல நாதியில்லை. எங்கே சென்று அஞ்சலி செலுத்துவது? எவரிடம் துக்கம் கேட்பது?.......

..........பூனையின் மரணம் கொண்டாடப் படுகிறது; மனிதரின் மரணம் அனாதையாகிறது’ என்று தத்துவார்த்தமாகக் கதையை முடிக்கிறார் வைரமுத்து.

கிழவியின் வீட்டுக்குள்ளிருந்து துர்நாற்றம் வருவதை அறிந்து  மூச்சிறைக்க ஓடி வந்த தச்சர், அப்பகுதி மக்களிடம் சொன்னதாகவும், மக்கள் மரியா வீட்டின் முன்பு திரண்டதாகவும் நிகழ்ச்சியை அமைப்பதுதானே எதார்த்தம்? 

மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர், ஊர் மக்கள் சவத்தைப் பெற்று, நல்லடக்கம் செய்து, விரும்பினால் பிரார்த்தனை செய்வதற்கான வாய்ப்பும் உள்ளதுதானே?

இவ்வாறு, இயல்பான நிகழ்வுகளைப் பற்றிச் சிந்திக்காமல், போலீஸ்காரர்கள் ஆம்புலன்ஸோடு மரியாவின் வீட்டை முற்றுகையிட்டு, சவத்தை மருத்துவப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்வதாகச் சொல்லியிருக்கிறார் கவிஞர்; ‘பூனையின் மரணம் கொண்டாடப்படுகிறது; மனிதரின் மரணம் அனாதையாகிறது’ என்று முடிக்கிறார், 

வைரமுத்து, மிகச் சிறந்த படைப்பாளர் என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை. என்ன காரணத்தாலோ இந்தச் சிறுகதையை மனம் ஒன்றாமல் படைத்திருக்கிறார்.

இவரின் அடுத்த சிறுகதை ஒரு முழுமையான படைப்பாக  அமைய எமது வாழ்த்துகள்.

==========================================================================================










17 கருத்துகள்:

  1. வணக்கம் நண்பரே கதையை தெளிவாக அலசி இருக்கிறீர்கள் எழுதியது யாரென்று பார்க்காமல் எழுதியது என்ன ? என்று பார்த்த தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
    பிரபலமானவர்கள் எப்படி ? வேண்டுமானாலும் எழுதலாம் 80 எழுதப்படாத சட்டமாகி விட்டது
    இதுவும் விற்றுத் தீர்ந்து விட்டதல்லவா ? இதுதான் இன்றைய குருட்டு சமூகம் இதையே நான் எழுதியிருந்தால் ? இவண் கதை எழுதச்சொன்னால் ? கதை விடுறானே... எனச்சொல்லும் இந்த சமூகம் காரணம் நான் இன்னும் அங்கீகரிக்கப்படாதவன்.

    இருப்பவன் பேண்ட்டை கிழித்துப்போட்டால் ஃபேஷன்.
    இல்லாதவன் கிழிந்த்தைப்போட்டால் பிச்சைக்காரன்
    80தைப் போல...

    இப்படி வெளிப்படையாக உண்மையை எழுதிய தங்களுக்கு எமது ராயல் சஸ்யூட் ஒன்றும், தமிழ் மண வாக்கு ஒன்றும் நண்பா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ’இருப்பவன் பேண்டைக் கிழித்துப் போட்டால்....’

      மிகப் பொருத்தமான எடுத்துக்காட்டைக் கையாண்டிருக்கிறீர்கள்.

      உணர்ச்சிபூர்வமாகக் கருத்துச் சொன்னதோடு மனப்பூர்வமாகப் பாராட்டியிருக்கிறீர்கள்.

      மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
    2. நண்பரே நான் எப்பொழுதுமே உண்மையை பேசுபவன், உண்மையை எழுதுபவன் ஆகவே எவனுக்கும் அஞ்சிப்போக வேண்டிய அவசியமில்லை 80தையும் இங்கு பதிவு செய்கிறேன், அதே நேரம் தங்களது கருத்தில் எனது சிற்றறிவுக்கு எட்டி தவறென்றாலும் கண்டிப்பாக எழுதுவேன் 80தையும் பதிவு செய்கிறேன் அதே நேரம் தங்களது அனைத்து பதிவுகளையுமே நான் நேசித்து படித்துக்கொண்டே.............. இருக்கிறேன்.

      நீக்கு
  2. என் கை பரபரக்கிறது.

    ஆனால் என் மனதுக்குப் பட்டதை எழுதிவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது.
    த.ம. 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தயக்கம் ஏன் அருணா?

      மனதில் பட்டதை எழுதலாமே. எழுதுங்கள்.

      மிக்க நன்றி.

      நீக்கு
  3. இந்தக் கதையின் தலைப்பே ஒரு சிறுகதையின் தலைப்பு போல் இல்லை. தொடக்கமும் ஆர்வத்தை தூண்டும் வகையில் இல்லை. மூன்று நாட்களாக கையில் வைத்திருந்தேன். அனைத்தையும் படித்தேன்.ஆனால் இதை முழுமையாக படிக்க தோன்றவில்லை.இப்போதுதான் கதையை அறிந்தேன்.
    நீங்கள் கூறியதைப் பார்க்கும்போது கதையின் கரு நன்றாகத் தான் இருக்கிறது. இதற்கு வெளிநாட்டு களம் எதற்கு என்று தெரியவில்லை. நம்மூர் நடிகை ஒருவரின் கதையாக எழுதி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனாதரவான ஒரு பெண், மனிதர்கள் மீது ஏற்பட்ட வெறுப்பில், ஒரு ஐந்தறிவு ஜீவன்மீது அளவிறந்த பாசத்தைப் பொழிவதும், அது மரணமடைந்த துயரத்தில் அவளுடைய வாழ்வும் அஸ்தமிப்பதும் மனதை உருக்குகிற கதைதான். நிகழ்ச்சிப் பின்னலில் சொதப்பிவிட்டார் கவிப்பேரரசு.

      மிக்க நன்றி முரளி

      நீக்கு
  4. ஒரு மனிதரின் மரணத்தை அவர் அனாதையாக விட்டு விட்டார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த கதைக்கான நிகழ்ச்சிகளைச் சரியாகத் திட்டமிட்டு அமைப்பார் என்று நம்புவோம்.

      மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. வெளிநாடுகளில் அங்கங்கே வளர்ப்புச் செல்லங்களுக்கு (ம்யாவ், ம்யாவ் லொள் லொள்) சொத்தையே எழுதி வைப்பதெல்லாம் உண்டு!

    என் செல்லங்களின் அஸ்தியை ரிஷிகேஷ் கங்கையில் கரைத்தவள் நான்.

    ஆனால்..... மனிதனின் மரணம் அதுவும் போலீஸ் கொண்டு போகும் அநாதைகளின் மரணத்துக்கு ஊர் கூடுவதில்லை. இங்கே ஃப்யூனரல் செலவு மிகவும் அதிகம்.
    செலவு வாங்கிக்க ஆகும் செலவுன்னு ஒரு பதிவு 2008 இல் எழுதி இருந்தேன். அதன் சுட்டி இது.

    நேரம் கிடைக்கும்போது பாருங்கள்.

    http://thulasidhalam.blogspot.com/2008/11/blog-post_12.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் 2008 இல் வெளியிட்ட பதிவைப் படித்து, அயல்நாடுகளில் இறுதிச் சடங்கிற்கு ஆகும் செலவு அதிகம் என்பதைப் புரிந்துகொண்டேன்.

      அனாதைகளின் மரணத்திற்கு ஊர் கூடுவதில்லை என்பது இருக்கட்டும், கிழவி செத்துக் கிடக்கிறாள் எனப்தை அறிந்து உள்ளூர்க்காரர்கள் எவரும் அவளுடைய வீட்டு வாசல் படியைக்கூட மிதிக்கவில்லையே! ஆஸ்திரேலியர்களுக்கு அத்தனை கல் மனமா?

      வெளி நாட்டில் கதையை நடத்திய கவிஞர், அங்கு மக்கள் வாழும் சூழல், அவர்களின் மனப்போக்கு பற்றிக் கதையில் கொஞ்சமேனும் கோடி காட்டியிருக்கலாம்.

      ஒரு கதையைப் புரிந்துகொள்வதற்குக் கதை நிகழும் சூழல் புரிவது மிகவும் அவசியம்.

      மிக்க நன்றி துளசி கோபால்.

      நீக்கு
  6. நீங்க ஒன்னு புரிஞ்சுக்கணும். இங்கே (நான் வசிப்பது நியூஸிலாந்து) எல்லாம் இப்படி வீட்டில் யாராவது இறந்து கிடப்பது சகஜமாப் போச்சு. வயசானவங்க தனியாத்தான் வாழ்கிறார்கள். பிள்ளைகளுடன் இருப்பதில்லை. இப்பக் கொஞ்சம் நிலமை மாறிவருது. அவுங்க முதியோர்கள் இல்லத்துக்குப் போயிடறாங்க. அதிலும் பலர் போக விருப்பமில்லாமல் தனி ஃப்ளாட்டில் வசிப்பதும் அதிகம்தான்.

    இதுபோல் யாராவது இறந்துகிடந்த சேதி போலீஸுக்குப் போனதும் அவுங்க வந்து வீட்டு முன்னால் ஆம்புலன்ஸ் சகிதம் நின்னுருவாங்க. இயற்கை மரணமா இல்லை வேறுவிதமான்னு தெளிவாகும் வரை அந்த வீட்டு வாசலுக்குக் கூட யாரும் போக அனுமதி இல்லை. தடயம் அழிஞ்சு போயிறக்கூடாது பாருங்க. இதைக் கண்டுபிடிக்கணுமுன்னா போஸ்ட்மார்ட்டம் செஞ்சாத்தானே விவரம் கிடைக்கும். அதுதான் ப்ரைவஸி ஆக்ட்ன்னு ஒரு சட்டம் இங்கே இருக்கு.

    இயற்கை மரணமுன்னா அப்படியே மார்ச்சுவரிக்குப் போயிரும். கொலை போன்ற செயற்கை மரணமுன்னா அதுக்குத் தனியான மார்ச்சுவரி உண்டு. கேஸ் க்ளியர் ஆகும்வரை வச்சுருப்பாங்க.

    வைரமுத்துவின் மகன் அஸ்ட்ராலியாவில் படிச்சுக்கிட்டு இருந்தப்ப, மகனைப் பார்க்க வந்தபோது இப்படி எதாவது மரண சம்பவம் காணக்கிடைச்சதோ என்னவோ. அதான் கதையா எழுதிட்டார் போல. வெளிநாடுன்னு உறுதிப்படுத்த அங்கத்து ஊர்கள் பெயர் எல்லாம் எழுதி இருக்காரே:-)

    நியூஸி அண்ட் ஆஸி ரெண்டும் அல்மோஸ்ட் ஒரே வகை வாழ்க்கை, சட்டம் என்றெல்லாம் இருக்கும் நாடுகள், நாங்கள் இங்கே 27 வருடங்களாக வசிக்கின்றோம்.

    அதனால் வாழ்க்கை முறை ஓரளவு தெரியும். நியூஸிலாந்து என்று ஒரு புத்தகம் சந்தியா பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளது. அது நம்மதுதான்.

    http://thulasidhalam.blogspot.com/2010/06/blog-post_12.html

    பதிலளிநீக்கு
  7. நன்றி...நன்றி துளசி கோபால்.

    எனக்கிருந்த சந்தேகங்களும் குழப்பங்களும் உங்களுடைய விளக்கத்தால் விலகியுள்ளன.

    கதை நிகழும் நாடும் ஊர்ப் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அங்குள்ள சூழலை இங்குள்ள வாசகர்கள் புரிந்துகொள்ளும் வகையில் கதை படைக்கப்படவில்லை என்பதே என் கருத்து.

    கவிஞர் இன்னும் யோசித்துச் செயல்பட்டிருக்கலாம்.

    உங்கள் நல்ல மனதுக்கு மீண்டும் நன்றி. நீங்கள் நூலாசிரியர் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரா !

    இன்று தான் தங்களின் தளத்தினை அறிந்து கொண்டேன் வாழ்த்துக்கள் சகோதரா !
    சிறப்பான பகிர்வுகளைத் தொடர்ந்தும் தாருங்கள் தங்களின் ஆக்கங்களை
    நானும் கண்டு மகிழ்வேன் .இன்றைய ஆக்கத்தினைப் பொறுமையாகப்
    படித்துக் கருத்தினைத் தெரிவிக்கின்றேன் மீண்டும் மீண்டும் உங்களுக்கு
    என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .த .ம.7

    பதிலளிநீக்கு
  9. என் தளத்தைப் பார்வையிட்டதோடு, வாக்களித்து எண்ணிக்கையை 7 ஆக்கியதற்கு நன்றியும் மகிழ்ச்சியும்.

    மனதில் தோன்றும் கருத்துகளைச் சொல்லுங்கள். அவை எனக்கு மட்டுமல்ல, மற்ற நண்பர்களுக்கும் பயன்படும்.

    மிக்க நன்றி சகோதரி.

    பதிலளிநீக்கு
  10. படைப்பாளனைக் குறைக் கூற வேண்டியதில்லை ,அவர் கோணம் அது :)
    த ம 8

    பதிலளிநீக்கு
  11. இது என்னுடைய கோணம் பகவான்ஜி.

    படைப்பில் தனக்குத் தோன்றும் குறைகளை ஒரு விமர்சகன் பண்பாடு பிறழாமல் சுட்டிக் காட்டுவதில் தவறில்லை.

    நன்றி பகவான்ஜி.

    பதிலளிநீக்கு