ஞாயிறு, 30 ஜூன், 2024

‘ஆட்டுத்தாடி’யைத் திட்டி மகிழ ஆசை! வழிதான் இல்லை!!

தமிழ்நாட்டின் ஆளுநராகப் பொறுப்பேற்றதிலிருந்து, ‘திமுக’ ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியாக ஆர்.என்.ரவியின் பேச்சுகளும், பேட்டிகளும் செயல்பாடுகளும் அமைந்திருப்பதை இந்த நாடே அறிந்திருக்கிறது.

தமிழ்நாட்டைத் ‘தமிழகம்’ என்பதே சரி என்று  பேசி, ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாறக் காரணமாக இருந்த அறிஞர் அண்ணா முதற்கொண்டு அத்தனைத் தமிழ்த் தலைவர்களையும் தமிழ் மக்களையும் அவமானப்படுத்தல்.

தமிழர் நலம் பேணிடத் தமிழ்நாடு அரசு வகுக்கும் திட்டங்களுக்கான மசோதாக்களைக் கிடப்பில் போட்டு, தமிழினத்தின் வளர்ச்சியைத் தடுத்தல்.

மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் உருவாகக் காரணமானதும், அவர்களில் பலரும் பல வகைகளிலும் இழிகுலத்தர் ஆவதற்கு மூலகாரணம் ஆனதும் ஆன சனாதனத்தை, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் போற்றிப் புகழ்தல்.

தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தில் தலையிடல்[ஊழல்கள் பல புரிந்த சேலம் பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தருக்குப்[வழக்கு நிலுவையில் உள்ளது] பதவி நீட்டிப்பு வழங்கியது போன்றவை]


உலகப் பொதுமறை தந்த ஒப்பற்ற அறிவுலக மேதை திருவள்ளுவருக்குக் காவி ஆடை உடுத்து இழிவுபடுத்துதல் என்றிப்படியான, இந்தப் பெரிய மனிதரின் அடாவடித்தனங்களுக்கு நீண்டதொரு பட்டியலே போடலாம்.

தமிழ்நாட்டுத் தலைவர்களின் கண்டனங்களையோ மக்களின் எதிர்ப்பையோ இவர் பொருட்படுத்துவதே இல்லை.

இதற்கான துணிவை இவர் பெற்றிடக் காரணமானவர் யார் என்பது யாவரும் அறிந்ததே.

அங்கே அவரின் ஆட்டம் அடங்குவதற்கான நேரம் வரும்போதுதான் இங்கே இவன் அடிக்கும் கொட்டமும் அடங்கும் என்பது கருத்தில் கொள்ளத்தக்கது.

அதுவரை, இவனைத் திட்டி மகிழ வேண்டும் என்னும் ஆசையை உள்மனதில் பூட்டி வைப்பதைத் தவிர வேறு வழியே இல்லை.

                                      *   *   *   *   *

மிக முக்கிய அறிவிப்பு:

வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளும் நிலையில், அவசர அவசரமாக எழுதப்பட்டது இப்பதிவு. திருத்தம் செய்ய நேரமில்லை என்பதால் இதில் மொழிப்பிழைகள் நேர்ந்திட வாய்ப்புள்ளது. பிழை காணின் பொறுத்தருளுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.


சனி, 29 ஜூன், 2024

தெரிந்தால் பேசு! தெரியாவிட்டால் பொத்திகிட்டு.....?

 

ஆன்மிகர்: “கடவுள் இருப்பது உண்மை. சக்தி வடிவமானவர் அவர். அனைத்தையும் படைத்தவர்; அருள்மழை பொழிந்து உயிர்களைக் காப்பவரும் அவரே.....


பாவிகளைத் தண்டிப்பார்; பரம யோக்கியர்களைப் பாதுகாப்பார்.....


அவரைத் தொழுதேத்தினால் துன்பங்களை நீக்கி இன்பங்களை வாரி வழங்குவார்.”


நாம்: “உங்கள் கடவுள் இதையெல்லாம் ஏன் செய்கிறார்?”


ஆன்மிகர்: “..... ..... ..... ..... .....”


நாம்: “பதில் தெரியவில்லைதானே?”


ஆன்மிகர்: “அது முழுமுதல் கடவுளான அவருக்கு மட்டுமே தெரியும்.”


நாம்: “அது அவருக்கு மட்டும்தான் தெரியும் என்றால், மேலே நீர் சொன்னவையெல்லாம் உமக்கு எப்படித் தெரிந்தது?”


ஆன்மிகர்: “..... ..... ..... ..... .....”


நாம்: முடிந்தால் மற்றவர்களுக்கு ஏதாவது நல்லது செய்யும். அதுக்கான நல்ல மனம் இல்லேன்னா கடவுள், ஆன்மா, பேய், பூதம்னு கண்ட கண்ட பொய்க் கதைகளைப் பரப்பி, மக்களுக்கு இருக்கிற கொஞ்சம் அறிவையும் சீரழிக்க வேண்டாம். பொத்திகிட்டுச் சொந்த வேலை இருந்தால் பாரும். வேலை எதுவும் இல்லேன்னா கிடைச்சதைத் தின்னுட்டுச் சும்மா கிடவும்.”

                               *   *   *   *   *

குறிப்பு:

பொத்திகிட்டு > ‘வாய்’ஐ மூடிக்கொண்டு! ஹி... ஹி... ஹி!!!

வெள்ளி, 28 ஜூன், 2024

‘அது’ விசயத்திலுமா புள்ளிவிவரம்! அட[அ]ப்பாவிகளா!!

எழுதுவதற்குக் கைவசம் சுவையான ‘சரக்கு’ ஏதும் இல்லாததால், அதைத் தேடி இணையதளங்களில் நீண்ட நேரம் மேய்ந்தேன். ஏமாற்றமே மிஞ்சியது.

‘யூடியூப்’இல் நுழைந்து அலைந்து திரிந்து தேடிக்கொண்டிருந்தபோது, புருவம் சுருங்கச் செய்யும் ஒரு காணொலி[துல்லியமானது அல்ல] கண்ணில்பட்டது.

எது எதைப் பற்றியெல்லாமோ ஆராய்ச்சிகளும் புள்ளிவிவரக் கணக்கெடுப்புகளும் நிகழ்த்தப்படுகிற காலக்கட்டத்தில், இதற்கெல்லாமா புள்ளிவிவரம் சேகரிப்பார்கள் என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்; இதையெல்லாம் தடுப்பாரில்லையா என்று வெகுவாகக் கோபப்படவும் செய்தேன்.

நீங்களும் கோபப்படுவீர்களோ அல்லவோ கொஞ்ச நேரம் பொழுதுபோகும்[சிலருக்கு மகிழ்ச்சியாக. ஹி... ஹி... ஹி!!!]. பின்னணி இசையை வெகுவாக ரசிக்கலாம்.

இதற்கு, 99800 சந்தாதாரர்கள்; 2.4 லட்சம் பார்வைகள்; 523 கருத்துரைகள்[பதிவுலக ஜாம்பவான்(ஹி... ஹி... ஹி!!!)‘பசி’பரமசிவம் ‘யூடியூப்’இல் வெளியிட்டுள்ள 26 சிந்திக்கத் தூண்டும் சீர்மிகு காணொலிகளுக்கு வெறும் 6 சந்தாதாரர்கள்; 1400க்கும் குறைவான பார்வைகள்; பாராட்டுரை? ஊஹூம். அடிவயிறு எரிகிறது].

வியாழன், 27 ஜூன், 2024

கிரஹங்கள் ஒன்பதல்ல, பத்து[+மோடி]!!!

சுற்றுலா வசதியை மேம்படுத்த நடுவணரசு உருவாக்கிய திட்டம்தான் ‘பிரசாத்’[நடிகர் பிரசாந்த் நினைவுக்கு வருகிறார்!].

இத்திட்டம், சுற்றுலா வசதிகளை மட்டும் மேம்படுத்துவதாயின் வரவேற்கத்தக்கதே.

இத்திட்டத்தின்படி, தமிழ்நாடு மாநிலத்திலும், புதுச்சேரியிலும் உள்ள 9 நவக்கிரஹக் கோயில்கள் இடம்பெற்றுள்ள பகுதிகளின் மேம்பாட்டுக்காக நடுவணரசு ரூ17.53 கோடி ஒதுக்கியுள்ளதாம்[படம்].


அறிவியல் வளர வளர, தாங்கள் சுமந்து திரியும் ஏராள மூடநம்பிக்கைகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகவேனும் மக்கள் விடுபடுவதே விரும்பத்தக்கதாகும்.

சூரியன், சந்திரன், புதன்,  செவ்வாய், வியாழன், சனி, சுக்கிரன், இராகு, கேது என்று சொல்லப்படும் நவக்கிரகங்களை நம்புவது அறிவுடைமையாகுமா? “அல்ல” என்பது அடியேனின் எண்ணம்.

இவற்றை மேம்படுத்துகிறோம் என்று சொல்லிக் கோடிகளில் ரூபாய்களை வீணடிக்கலாமா?[குழு அமைத்து இவற்றை வேறு வகையில் பயன்படுத்துவது பற்றித் திட்டமிடலாம்] “கூடவே கூடாது என்பது நம் பதில்.

“நவக்கிரகங்கள் என்பவை நம்பி வழிபடத்தக்கத் தெய்வங்களே. அவற்றிற்கென்று கோடிகளில் பணம் செலவிடுவது மிகவும் பயன் தருவதே” என்று நம் மக்கள் அனைவரும் நம்புவார்களேயானால்.....

கோயில்களில் நவ[9]க்கிரஹங்களுடன் பத்தாவது[கிரஹங்கள் 10] கிரஹமாக மோடி[கடவுளால் அனுப்பப்பட்ட கிரஹம்]யின் சிலையை இடம்பெறச் செய்யலாம்.

பத்துக் கிரஹங்களையும் வழிபட்டு அவற்றின் அருள் பெற்றுப் பெரும் பயன் அடையலாம்; மரணத்திற்குப் பின்னர் ‘நற்கதி’ பெறலாம்!

போற்றி போற்றி! பத்துக் கிரஹங்கள் போற்றி!!

புதன், 26 ஜூன், 2024

இரட்டை வேடம் வேண்டாம் கோபிநாத்[எம்.பி.] தெலுங்கனே!!!

தமிழ்நாடு எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற மக்களவை, புதிய கட்டடத்தில் பதவியேற்றுக்கொண்டனர். அப்போது, கிருஷ்ணகிரி மக்களவை எம்.பி. கோபிநாத் தெலுங்கில் பதவியேற்றுக்கொண்டார்.

நிறைவாக, ஜெய் தமிழ்நாடு, வணக்கம் எனக் கூறி முடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது[https://tamil.indianexpress.com/] -இது நேற்றையச் செய்தி.

கிருஷ்ணகிரி தொகுதி நா.ம. உறுப்பினரும், கோபிநாத் என்னும் பெயர் கொண்டவருமான தெலுங்கனே,

தமிழ்நாட்டில் அரசியல் செய்யும் தெலுங்கன்களில்[திமுக. கட்சி உட்பட] பலரும் வெகு ஆழமான தெலுங்கு மொழிப் பற்றும், தெலுங்கர் இனப்பற்றும் கொண்டவர்களே என்பது எம்மைப் போன்ற கொஞ்சம் சிந்திக்கும் அறிவு படைத்த தமிழர்களுக்குத் தெரியும்.

பெரும்பான்மைத் தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுப் பதவிகள் பெறுவதற்கும் பணம் சம்பாதிக்கவும் வாயளவில் “தமிழ் வாழ்க” முழக்கம் செய்கிறார்கள் என்பதையும் நாங்கள் அறிவோம்.

அவர்களில் நீரும் ஒருவர்.

தேர்தல் பரப்புரைகளின்போது, தமிழர்களிடம்[வீடு வீடாகச் சென்று தெலுங்கர்களிடம் தெலுங்கில் பேசி வாக்குக் கேட்டீர்] தமிழில் வாக்குக் கேட்டு, தமிழர்களில் ஒருவனாக நடித்த நீர்.....

நாடாளுமன்றத்தில் தெலுங்கில் உறுதிமொழி ஏற்றதன் மூலம், நீர் ‘ஒரிஜினல் தெலுங்கன்’ என்பதைக் காட்டிக்கொண்டுள்ளீர்.

உம்முடைய மொழி&இனப் பற்றுக்காகத் தெலுங்கனான உம்மை ஒரு தமிழனாகப் பாராட்டுகிறோம்.

ஆனால்.....

உம்மை வாழ வைப்பதால் தமிழில் நன்றியும் வணக்கமும் ‘ஜெய் தமிழ்நாடு’ம் சொல்லிப் பொய் வேடம் தரித்திருக்க வேண்டாம் என்பது நம் எண்ணம்.

கிருஷ்ணகிரி என்னும் பெரியதொரு நாடாளுமன்றத் தொகுதியில் தெலுங்கர்களே பெரும்பான்மையினர் என்பதாகக் காட்டிக்கொள்ளும் முயற்சியே உம்முடைய மேற்கண்ட செயல்.

இந்த அயோக்கியத்தனத்தை நீர் செய்ததுதான் கண்டிக்கத்தக்கதாக உள்ளது.

ஆனாலும், உண்மையில் கண்டிக்கத்தக்கவர் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்தான்.

தமிழ்நாடு காங்கிரஸ்காரர்கள் என்றாலே மற்றவர்கள் முதுகில்[திமுக] சவாரி செய்தே காரியம் சாதிப்பவர்கள் என்பது தெரிந்திருந்தும், கிஞ்சித்தும் தமிழ் மொழி&இன உணர்வில்லாத இவர்களுடன்[தனித்து நின்றால் 05% வாக்குகள்கூடக் கிடைக்காது] சுய லாபத்திற்காகக் கூட்டணி அமைக்கும் மு.க. ஸ்டாலின்தான் நம் கண்டனத்துக்குரியவர்.

இருப்பினும், உம்மைப் போன்ற, தமிழை அவமானப்படுத்தும் தெலுங்கன்களையோ, அவர்களின் உயிர்த் தோழரான ஸ்டாலினையோ கண்டிப்பதால் பயனேதும் இல்லை என்பதும் அறியத்தக்கது.

கண்டிக்கத்தக்கவர்கள் 'இளிச்சவாயர்'களான தமிழர்கள் மட்டுமே!



செவ்வாய், 25 ஜூன், 2024

அரசியல் தலைவர்களில் ‘நம்பர் 1’ புத்திசாலி மோடி!!!

2024 தேர்தலில், மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களில் பலரும் அவரவர் தாய்மொழியில் உறுதிமொழியை வாசித்துப் பதவி ஏற்றார்கள் என்பது செய்தி[நகல் பதிவு கீழே].

விதிவிலக்காக, நாட்டின் பிரதமர் மோடி, தன் தாய்மொழியான குஜராத்தியைப் புறக்கணித்து, ‘இந்தி’ மொழியைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பது நம்மைப் புருவம் உயர்த்த வைக்கிறது.

பெற்ற தாயைத் தெய்வத்திற்கு நிகராக மதித்து வாழ்ந்ததாக நம்பப்படும் மோடிக்கு, குஜராத் மொழி தன் தாய்க்கு நிகரானது என்பது தெரியாதா?

தெரிந்திருந்தும் இந்தியைப் பயன்படுத்தினார் என்றால், குஜராத்தியைவிட இந்தி தரம் வாய்ந்ததும் பயனுள்ளதுமான மொழி என்று கருதுகிறாரா?

‘ஒரே நாடு ஒரே மொழி[இந்தி]’ என்று பேசிப் பேசி இந்தியை மட்டும் இந்தியாவின் ஆட்சி மொழி’ என்னும் அரியணையில் அமர்த்தி அழகு பார்க்க ஆசைப்படுகிறாரா?

இப்படி ஆசைப்படுவது இந்தியின் மீதானா அளவிறந்த பற்றின் காரணமாகவா?

அல்ல, அல்ல, அல்லவே அல்ல.

இந்தியை, அவரும் அமித்ஷா முதலான அவரின் சகாக்களும் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதற்கான ஒரே காரணம்.....

பதவி ஆசை ஐயா... பதவி ஆசை!

இந்தியில் பதவியேற்றதன்[பதவிப்பிரமாணம்] மூலம் இங்கு அதிக எண்ணிக்கையில்[எந்தவொரு ‘தனி’ மொழியைக் காட்டிலும்] உள்ள இந்தி மொழி பேசுவோரின் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார் மோடி!

மோடி இப்போதுள்ள இந்திய அரசியல் தலைவர்களில் வேறு எவரையும்விட மகா புத்திசாலியாக்கும்!!


திங்கள், 24 ஜூன், 2024

2007இல் இதயமாற்று அறுவை! இன்றளவில் மன உறுதியுடன் வாழும் பெண்!!

இங்கிலாந்து நாட்டில், பல்கலைக்கழக மாணவியாக இருந்த ஜெனிஃபருக்கு[22 வயது] இதயநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதய மாற்று அறுவைச் சிகிச்சையின்றி இவர் உயிர் வாழ இயலாதை நிலை.

பொருத்தமான நன்கொடையாளர் கிடைக்கவே, ஜூன் 2007இல் இவருக்கு அறுவைச் சிகிச்சை(heart transplant/cardiac transplant) செய்யப்பட்டது.

இம்மாதிரி அறுவையால் ஏற்படும் சிரமங்களை மன உறுதியுடன் எதிர்கொண்டார் ஜெனிஃபர். அதன் பயன்.....

38 வயது நிறைவடைந்த நிலையில், உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்[2023 செய்தியின்படி. இனியும் வாழ்க வளமுடன்!].

மக்களுக்கு உறுப்புத்தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, அகற்றப்பட்ட இவரின் இதயம்[பழுதடைந்த பழைய இதயம்] அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப்பட்டிருப்பது கண்டு அகமகிழ்ந்திருக்கிறார்.

பேட்டி ஒன்றில் இதைத் தெரிவித்து, காட்சியகத்தில் தன் பழைய இதயத்தை இடம்பெறச் செய்த மருத்துவர்களைப் பாராட்டியதோடு, உலக அளவில் மக்களனைவரும் ‘உறுப்புத் தானம்’ குறித்த விழிப்புணர்வைப் பெறுதல் மிக அவசியம் என்றும் கூறியிருக்கிறார்.

குறிப்பு:

2023ஆம் ஆண்டில் கணிசமான ஊடகங்களில் வெளியான செய்தி இது. எனினும், இதைப்[இதயமாற்று அறுவைக்குப் பின் பெண்ணொருத்தி 16 ஆண்டுகளுக்கும் மேலாக நலமுடன் வாழ்வது] பலரும் அறிந்திருப்பது மிக அவசியம் என்பதால் இங்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

* * * * *

https://www.hindutamil.in/news/world/994103-transplant-patient-sees-own-heart-go-on-display-at-museum.html

ஞாயிறு, 23 ஜூன், 2024

வேண்டாம் வயாகரா... வேண்டவே வேண்டாம்!!![இது பொழுதுபோக்குப் பதிவல்ல]

ஐந்து நிமிடம்... பத்து நிமிடம்... அதிகபட்சம் அரை மணிநேரம்தான் தாக்குப் பிடிக்கலாம் ‘அந்தரங்க உறவு’[பல நேரங்களில் பரிதாபமாகச் சில மணித்துளிகளில் முடிந்துபோவதும் உண்டு] விசயத்தில் என்பது நம்மவர்க்குத் தெரிந்திருந்தும், கடத்தல், கூட்டுப் பலாத்காரம், காதல் என்னும் பெயரில் காமம் தணித்துக் கைவிடுதல், கள்ளக் காமம், கழுத்தறுத்தல், அடிதடி, வெட்டுக்குத்து, கொலை என்று குலை நடுங்கச் செய்யும் பயங்கரங்கள் அதிகரித்தவாறு உள்ளன.

அந்தரங்கச் சுகத்துக்கான நேரத்தை அதிகப்படுத்தும் வயாகரா போன்ற, விந்து முந்துதலைப் பெரிதும் பின் தங்கச் செய்யும் மாத்திரைகள் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் வீரியமும் அதிகரிக்கப்பட்டால்.....
உழைப்பதற்கும், ஓய்வெடுப்பதற்கும், உண்பதற்கும்  உறங்குவதற்குமான நேரங்கள் வெகுவாகக் குறைந்து, அதிக நேரம் ‘அந்த’ ஒரு சுகத்திற்கு ஒதுக்கும் ஆபத்தான நிலை உருவானால், பல்வேறு ‘பின்விளைவுகள்’ நேர்வதோடு, ‘அது’க்கான போட்டியில் ஆடவர்கள் வெறித்தனமாய் ஒருவரோடு ஒருவர் அடித்துக்கொண்டு சாகும் அவலம் உருவாகும்.

உலகம் ‘காமப்போர்’ நிகழும் களமாக மாறும்.

மூன்றாம் உலக யுத்தம் என்று ஒன்று இல்லாமலே   மனித இனம் அழிந்துபோகும்.

ஆகவே, வெகு சாமானியனான நாம் செய்யும் எச்சரிக்கை.....

“உடலுறவை மேம்படுத்த முறையானதும், மிக அவசியமானதுமான மனப்பயிற்சியே போதும்; வயாகரா நயாகரா போன்ற கருமாந்தரங்கள் எல்லாம் வேண்டாம்” என்று முடிவெடுத்து அவற்றின் உற்பத்திக்குத் தடை விதித்தல் வேண்டும்.

அது சாத்தியமே இல்லை என்றால்.....

அதிகபட்சம் கால் மணிநேரம்போல்[கலவிக்கு] தாக்குப்பிடிக்க உதவும் மாத்திரைகளை மட்டுமே உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம்: விற்பனை செய்ய மருத்துவரின் பரிந்துரை தேவை என்று விற்பனையாளர்களுக்கு ஆணை பிறப்பிக்கலாம். 

உலகின் அனைத்து நாடுகளின் ஆட்சியாளர்களும், சமூக நலன் பேணுவோரும், அறிவியலாளரும் இது குறித்துச் சிந்தித்து விரைந்து செயல்படுதல் வேண்டும் என்பது நம் வேண்டுகோள்!

சனி, 22 ஜூன், 2024

அடுக்குமாடிப் பொய்யன் எடப்பாடிப் பழனிசாமி!!!

//கள்ளக்குறிச்சி உயிரிழப்புகள் காரணமாகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது. ‘அதிமுக’ சட்டமன்ற உறுப்பினர்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டார்கள்! 

இந்த வேளையில் சட்டசபைக்கு வெளியே அதிமுக உறுப்பினர்களுக்கும் காவல்துறையினருக்கும்  இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதாவது, எம்எல்ஏக்களைப் போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி, காவல்  அதிகாரிகளை நோக்கி ‛‛ஏய்.. ஏய்'' என்று கூச்சலிட்டு,  ஆள்காட்டி விரலை உயர்த்தி, ‛‛ஏன் எங்களை அடிக்கிறீங்க… பாரு ஆட்சி மாறும்'' என்று கொந்தளித்தார். இதுதொடர்பான காணொலி இணையதளங்களில் வெளியாகிப் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது// என்பது ஊடகச் செய்தி.


***அரசியல்வாதிகள் காலால் இடும் கட்டளைகளைத் தலையில் சுமந்து நிறைவேற்றக் கடமைப்பட்டவர்கள்தான் காவல்துறையினர்.

இம்மாதிரியான சூழ்நிலைகளில் அரசியல்வாதிகளைக் காவலர்கள் தாக்கியதற்கான வரலாறு இங்கு இல்லை[ஆங்கிலேயர் ஆட்சியில் நிகழ்ந்திருக்கலாம்].


அடித்து உதைத்து வெளியேற்றுவது வேறு, குண்டுக்கட்டாகத் தூக்கிப்போய் அப்புறப்படுத்துவது வேறு. தூக்கிப்போய் அப்புறப்படுத்தியதற்காக.....


“ஏய்... ஏய்...” என்று கூச்சலிட்டு மிரட்டுவதற்குக் காவல்காரர்கள் என்ன எடப்பாடியைப் போன்ற வடவரின் கொத்தடிமைகளா?


அவர்களை அவமானப்படுத்தியதோடு[கள்ளச் சாராயச் சாவுகளுக்காகத் ‘திமுக’ அரசைக் கண்டித்துக் குரல் எழுப்பியது வரவேற்கத்தக்கதே], அவர்கள் அடிப்பதாகப் பொய் சொல்லிப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் பொம்மணாட்டியின் காலில் விழுந்து பதவி பெற்ற இந்தப் பேராண்மையாளன்.


ஒரு வேளை அடித்திருந்தாலும்[வாய்ப்பே இல்லை. இவ்வாறான செய்தி எந்தவொரு ஊடகத்திலும் வெளியாகவில்லை], நான்காண்டுக் காலம் ‘இந்தி’யன்களுக்குச் சேவகம் செய்தார்களே அதைவிடவும் மோசமானதா இந்த அவமானம்?


‘சாபக்கேடு’ என்பார்களே, சாபம் உண்மையோ பொய்யோ, அதனால் விளையும் அத்தனைத் தீங்குகளும் இந்தப் எடப்பாடிகளால் தமிழ்நாட்டிற்கு விளையும் என்பது மட்டும் உண்மை!


* * * * *

https://tamil.oneindia.com/news/chennai/why-you-are-slapping-government-will-change-edppadi-palaniswami-warns-police-who-elminates-admk-ml-615881.html


வெள்ளி, 21 ஜூன், 2024

நாட்டுப்பண் ‘ஜனகணமன...’ பாடலுக்குத் தமிழாக்கம் தேவை!

இந்தியா சுதந்திரம் பெற்றுக் குடியரசு நாடான நிலையில் இந்த நம் நாட்டுக்கான தேசியக் கீதம் ரவீந்திரநாத் தாகூரால் வங்க மொழியில் உருவாக்கப்பட்டது. 

அது ‘ஜனகணமன...’ என்று தொடங்கி முடியும் பாடல் என்பது அனைவரும் அறிந்ததே.

இன்றளவும் நாட்டுப்பண்ணாக அரசு விழாக்கள் நிறைவடையும்போது இது பாடப்படுகிறது.

நாம் அனைவரும் இந்தியர்தான். ஆனாலும், புரியாத வங்க மொழியில் நாட்டுப்பண் இசைப்பதைத் தவிர்த்து அவரவர் தாய்மொழியில் அதைச் செய்வதே ஏற்புடையதாகும்[‘இந்தியா ஒரே நாடு; ஒரே மொழியில் நாட்டுப்பண்’ என்னும் நடைமுறை தேவையில்லை].

இது வேறு வேறு மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட அனைத்து இந்திய மாநில மக்களுக்கான உரிமையும் ஆகும்.

நாடு சுதந்திரம் பெற்ற சூட்டோடு இந்த உரிமையை அனைத்து மாநிலத்தவரும் போராடியேனும் பெற்றிருந்தால்.....

“இந்தியா ஒரே நாடு. இதற்கான ஒரே மொழி இந்தி” என்று முழக்கமிட்டு, 35%[?] ‘இந்தி’யர் இந்தியைத் திணிப்பதும் திணித்துக்கொண்டிருப்பதும், நீட், வரி விதிப்பு[ஜிஎஸ்டி] போன்ற மாநிலங்களுக்கான உரிமைப் பறிப்புகளும் நிகழ்ந்திரா.

இனியேனும் விழிப்புணர்வு பெற்று, நாட்டுப்பண்ணைத் தாய்மொழியில் பாடுதல் தொடங்கி, இழந்த உரிமைகளை, கடும் போராட்டம் நடத்தியேனும் திரும்பப் பெறும் முயற்சியைச் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மேற்கொள்ளுதல் வேண்டும்.

இதுவே அதற்கான தக்கத் தருணமும் ஆகும்.

வியாழன், 20 ஜூன், 2024

இல்லாத பனிலிங்கமும் அறிவில்லாத அமர்நாத் யாத்திரிகர்களும் ஆட்சியாளர்களும்!!!

 

பத்தியில் இடம்பெற்றுள்ள தொடரில், ‘பனிலிங்கத்தைத் தரிசன செய்ய ஏராளமான பக்தர்கள்’ என்பதில் உள்ள, ‘பக்தர்கள்’ என்பதற்குப் பதிலாக ‘மூடர்கள்’ என்னும் சொல்லைச் சேர்த்து வாசியுங்கள்.

அனைத்திற்கும் மேலான சக்தி படைத்த சிவபெருமானின் மறு வடிவமான சிவலிங்கத்தைத் தரிசிக்கச் செல்லும்போது, துப்பாக்கி ஏந்திய படைப் பாதுகாப்பு எதற்கு?[பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட கட்டடங்களுக்குள் சாமிகளை அடைத்துப் பூட்டி வைத்துக் காவல் காப்பது போல].

தரிசனம் செய்யச் செல்லும்போதுகூடப் பாதுகாப்புத் தராத கடவுள் அப்புறம் எப்படிக் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்?

அமர்நாத் போகிற அறிவிலிகள் மட்டுமல்ல, அவர்களுக்குப் பாதுகாப்புத் தருகிற ஆட்சியாளர்களும் இணைந்து மக்களை மடைமையிலிருந்து விடுபடாமல் தடுக்கிற அயோக்கியத்தனம் இதுவாகும்.

எதிர்க்கட்சிகளில் இருக்கும் பகுத்தறிவாளர்களும், பிற சமூகச் சீர்திருத்தவாதிகளும்கூட, ஆண்டுதோறும் நடைபெறும் இந்தக் கூத்தடிப்பைக் கண்டிப்பதாகத் தெரியவில்லை.

அமர்நாத் கோயிலில் பனிலிங்கம் உருவாவதாகச் சொல்வதே 100% பித்தலாட்டம் என்பது அவர்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். இருந்தும் மௌனம் சாதிக்கிறார்கள்.

அது தொடர்பான பதிவு கீழே:

மயமலையில், கடல் மட்டத்திலிருந்து 12 ஆயிரத்து 756 அடி உயரத்தில்  பல மலை முகடுகள் உள்ளன.

அவைகளில் ஒரு முகட்டில் 130 அடி உயரத்துக்குப் பெரிய குகை ஒன்று உள்ளது.

குகையின் ஒரு பகுதியில் நீர்க்கசிவு ஏற்பட்டுக் கீழ்நோக்கித் தண்ணீர் சொட்டிக்கொண்டிருக்கும்.

சொட்டுகிற இந்த நீர், பனிப்பருவத்தில் தரைப்பகுதியில் பனித்திட்டாக உறைகிறது. தொடர்ந்து சொட்டிக்கொண்டிருக்கிற நீர்த்துளிகள் அதன் மீது விழுந்து பனிக்கட்டிகளாக மாறிக்கொண்டிருப்பதால், திட்டின் உயரம் படிப்படியாக உயர்ந்து, ஒரு கட்டத்தில் ஒரு தடிமனான தூண் போல் காட்சியளிக்கிறது.

பனிக்கட்டியாலான சிறு தூண் போல் இது தென்படுகிறதே தவிர, வழக்கமாகக் கோயில்களில் நாம் பார்க்கிற முழுமையான சிவலிங்க வடிவை இது பெற்றிருக்கவில்லை[கீழே படத்தில் உள்ளது போல] என்பது அறியத்தக்கது.

இதனை ஒட்டி, மேலிருந்து சிதறுகிற நீர்த்துளிகள் உறைந்து, இதன் இடப்பக்கதில் ஒரு பனி வடிவமும், வலப்பக்கத்தில் இரண்டு பனி வடிவங்களும் உருவாகிக் காட்சியளிக்கின்றன[உதவி:https://kkrwhatsapp.blogspot.com/2019/02/amarnath-temple.html#.YsuGMHbP23A ]

நம் பக்திப் பித்தர்கள் நடுவில் சிறு தூண் போல் நிற்கும் பனிக்கட்டிக்குச் சிவலிங்கம் என்றும், இடப்புறம் உள்ள பனிக்கட்டிக்கு 'வினாயகர்' என்றும், வலப்பக்கம் உள்ள இரண்டினில் ஒன்றுக்குப் பார்வதி' என்றும், மற்றொன்றுக்குப் 'பைரவர்' என்றும் பெயர் சூட்டித் தொழுது பரவசப்படுவதை வழக்கமாக்கிவிட்டார்கள்[மேலும் ஒரு பனித்திட்டு உருவாகியிருந்தால் அதற்குச் 'சுப்ரமணியன்' என்று பெயர் வைத்திருப்பார்கள்].

மே மாதம் முதல் ஆகஸ்டுவரை உருவாகும் இவ்வாறான பனித் திட்டுகள் அதன் பிறகு படிப்படியாயக் கரைந்து மறைந்துவிடுகின்றன.

இது இயற்கையான ஒரு நிகழ்வு மட்டுமே.

சிவபெருமான்தான் தன்னைச் சிவலிங்கம் ஆக்கிகொள்கிற அதிசயத்தை நிகழ்த்துகிறார் என்றால், அதற்கு அந்தக் குறிப்பிட்ட நான்கு மாதங்களை மட்டுமே அவர் ஏன் தேர்ந்தெடுத்தார்?

பனிக்காலம் முடிந்த பின்னரான வெப்பம் கூடுகிற பருவங்களிலும் அதிசயம் நிகழ்த்திப் பக்தர்களை மெய் சிலிர்க்கச் செய்யாதது ஏன்?

இந்த அதிசயத்தைப் பனி சூழும் இமயமலையின் முகடுகளில் மட்டும் நிகழ்த்தாமல்.....

கோடைக் காலத்தில் கடும் வெப்பம் நிறைந்த பிற பகுதிகளிலும் பனி வடிவ லிங்கமாக வடிவெடுத்துப் பக்தர்களுக்கு அருள்பாலிக்கலாமே? இதைச் செய்தால் பகுத்தறிவாளர் என்று சொல்லிக்கொள்கிற நாத்திகவாதிகள்கூட பரமசிவனின் பரம பக்தர்களாக மாறுவார்களே!

மனப்பக்குவம் இல்லாத சாமானியரான பக்தர்களுக்கு மேற்கண்டவாறெல்லாம் சிந்திக்கத் தெரியாது. கடவுள் மீதான பக்தியை வளர்ப்பதாகச் சொல்லி மக்களிடம் வாக்குகள் பெற்று நாட்டை ஆளுகிறவர்களுக்கு அவசியம் தெரிந்திருக்கும்.

தெரிந்திருந்தும், 'பனிலிங்கம் என்பது பனிக்காலத்தில் உருவாகிற ஒரு வடிவமே தவிர, சிவபெருமானின் இன்னொரு வடிவமான சிவலிங்கம் அல்ல' என்று விவரித்துச் சொல்லி, ஆண்டாண்டுதோறும் பனிலிங்கத்தைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்களைத் தடுத்து[இமயமலையின் இயற்கை அழகை ரசிக்க நினைத்தால், பனிப்பருவம் நீங்கலாகப் பிற பருவங்களில் செல்லலாம்] கடும் மழைக்கும் பெரு வெள்ளத்திற்கும் பலர் பலியாவதைத் தவிர்க்கலாம்.

ஏன் செய்யவில்லை?

மக்களில் பெரும்பாலோர் இம்மாதிரி மூடத்தனங்களிலிருந்து விடுபடாமல் இருப்பதே தங்களுக்குச் சாதகமானது என்று நினைக்கிறார்களா?

புதன், 19 ஜூன், 2024

‘அந்தம்’[அழிவு... முடிவு] இல்லாத அவதாரங்கள்!!!

இந்துக்களால் வழிபடப்படும் சில அவதாரப் புருஷர்கள் [https://hinduismwayoflife.com/hinduism-avatar-saints-3/] பற்றியப் பட்டியல் ஒன்று இன்று நம் கவனத்தை ஈர்த்தது.

//ஸ்ரீ சங்கராச்சாரியார் சிவபெருமானின் அவதாரமாகப் போற்றப்படுகிறார்.

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ராதையின் அவதாரம்.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு தெய்வீக அவதாரமாகக் கருதப்படுகிறார்.

ஷீரடி சாய்பாபா கடவுளின் அவதாரம் ஆவார். அவருடைய வேண்டுகோள் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையிலான தடைகளை உடைத்தது.

ஸ்ரீ சத்ய சாய்பாபா சிவன்-சக்தியின் அவதாரமாக வழிபடப்படுகிறார்.

சுவாமி விவேகானந்தர் சிவனின் அவதாரம் என்று அவரது சில குரு பாய்ஸ்[???] மற்றும் பக்தர்களால் போற்றப்படுகிறார்.

பகவான் ரமண மகரிஷி - அவர் ஒரு பூர்ண ஞானி. அவரைச் சுப்பிரமணிய பகவானின் அவதாரமாகக் கருதும் பக்தர்கள் உள்ளனர்.

மாதா அமிர்தானந்தமயி(அம்மா) தேவி பராசக்தியின் அவதாரமாகக் கருதப்படுகிறார்//

மேற்கண்டவர்களில், அவதாரப் புருஷி மாதா அமிர்தானந்தமயி நீங்கலாக ஏனையப் புருஷர்கள் இன்று நம்மோடு இல்லை.

இவர்கள் கடவுள்களின் மறு பிரதி என்பதால் இவர்களுக்கு மரண என்பது இல்லை என்பார்கள் ஆன்மஜீவிகள். ஆகையினால், பூத உடலைத் துறந்து இவர்களெல்லாம் எங்கே போனார்கள் என்னும் கேள்வி நம் உள்மனதைத் துளைத்தெடுக்கிறது.

சொர்க்கம், கடவுள்களின் திருவடிகள் என்று எங்கே சென்றிருந்தாலும், அங்கே இவர்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள்? காலநேரம் கருதாமல், தத்தம் கடவுள்களைத் துதிபாடிக் களித்திருப்பார்களா?

“ஆம்” என்றால் அதற்கொரு முடிவு அல்லது வரம்பு உண்டா? யுக யுக யுக யுகாந்தரங்களுக்கும் துதி பாடுதல் தொடருமா?

அங்கெல்லாம் செல்லாமல், அந்தரத்தில்[பூமிக்கு மேலே] உலாவிக்கொண்டு, அபயக்கரம் உயர்த்தித் தத்தம் பக்தக்கோடிகளுக்கு அருள்பாலிக்கிறார்களா?

அதற்கான கால அளவு என்ன?

அது ஏதோ ஓர் அளவுக்கு உட்பட்டது என்றால், அப்புறம் இவர்கள் எங்கே போவார்கள? என்ன செய்வார்கள்?

இப்படி இன்னும் பல கேள்விகள் கேட்கலாம்.

நம்மைப் போல அற்பப் பிறவிகளாயின், செத்தொழிந்து மண்ணோடு மண் ஆன பிறகு, அல்லது எரிந்து சாம்பலான பிறகு மிச்சம் எச்சம் என்று எதுவும் மிஞ்சாது.

மாறாக, இவர்களை என்றென்றும் அழியாத கடவுள்களின் அவதாரங்கள் என்பதால்தான் மேற்கண்ட வகையில் கேள்விகள் எழுகின்றன.

கேள்விகள் கேட்பது, நம்மைப் போலவே உண்டு, தின்று, மலம் கழித்து, உடம்பு நாறிப் புழுத்துச் சிதைந்து அழிகிற இவர்களை அவதாரங்கள் என்று போற்றித் துதிபாடி அலைகிற அறிவீனர்களைச் சிந்திக்க வைப்பதற்காகத்தான்.

மனிதராய்ப் பிறந்தவர் எவராயினும், நல்ல மனதுடன் மக்களுக்கு[பிற உயிரினங்களுக்கும்தான்] தொண்டு செய்கிறவர்களைப் பாராட்டுவோம்; போற்றுவோம்.

மகான், ஞானி, அவதாரம் என்பதோடு, இன்றளவில் அவதாரப் புருஷர்களாகவும், கண் கண்ட கடவுள்களாகவும் நம்மிடையே நடமாடுவதாக நம்மப்படும் சத்துக்குரு ஜக்கி, மோடி போன்றோரைப் புகழ்ந்து போற்றுவதைத் தவிர்ப்போம்; அகராதிகளிலிருந்து இம்மாதிரிப் புகழ் மொழிகளை அகற்றுவதும்கூட வரவேற்கத்தக்கதே!

திங்கள், 17 ஜூன், 2024

அடடா!..... ஆஹா!! இதுவல்லவோ ஸ்ரீராம் பக்தி!!!

கீழ்க்காணும் பழைய நகல் செய்தி[அனைத்து ஊடகங்களிலும் வெளியானது]யின்படி, நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்பதற்கு முன்பு ‘ராம்மோகன்’ ‘ஓம் ஸ்ரீராம்’ என்று 21 முறை எழுதிப் புளகாங்கிதப்பட்டது, நாடாளுமன்றத்தில் உள்ளவர்கள் உட்பட  உலகிலுள்ள அத்தனை ராமபிரான் பக்தர்களையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

ஸ்ரீராமப் பக்தரான பிரதமர் மோடியிடம் தான் பதவி ஏற்பதற்கு முன்னரே இது பற்றி ராம்மோகன் சொல்லியிருந்தால்.....

எதிர்க் கட்சியினர் உட்பட அனைத்து உறுப்பினர்களையும்[பிற மதத்தவர் நீங்கலாக?] பதவி ஏற்பதற்கு முன்பே ‘ஓம் ஸ்ரீராம்’ எழுத வைத்திருப்பார் பிரதமர் மோடி.

‘ஓம் ஸ்ரீராம்’ என்பதைவிடவும், ‘ஓம் ஜெய் ஸ்ரீராம்’ என்று எழுதுவது சிறப்பு என்று அறிவிப்பதோடு, ‘21’தடவைக்கு மாறாக, 108[‘108’ அல்லது 1008 தடவை எழுதுவது உடனடியாக ஸ்ரீராமனின் கவனத்தை ஈர்க்கவல்லது] தடவை எழுதப் பணித்திருப்பார் என்பது உறுதி.

பதவி ஏற்பின்போது மட்டுமல்லாமல், அடுத்தடுத்து இடம்பெறவுள்ள அத்தனை நாடாளுமன்றக் கூட்டங்களும், அனைத்து உறுப்பினர்களும் 1008 முறை[பெரிதும் பலனளிப்பது] ‘ஓம் ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய பின்னரே தொடங்கப்படுதல் வேண்டும் என்று சட்டம் இயற்றிடவும் வாய்ப்புள்ளது.

மோடியின் இந்தப் பணி.....

ஜெய் ஸ்ரீராம் பக்தர்கள் தம் அன்றாடப் பணிகளை[உண்ணுதல், உறங்குதல், அந்தரங்க உறவு மேற்கொள்ளுதல், ஊர் சுற்றுதல், சுற்றுலா செல்லுதல் போன்றவை] மேற்கொள்ளுவதற்கு முன்னர் தவறாமல் 1008 தடவை ‘ஓம் ஜெய் ஸ்ரீராம்’ எழுதுவது பெரிதும் நன்மை தருவதாக அமையும் என்பதை உணர்ந்தறியச் செய்யும் என்பது உறுதி.

வாழ்க தெ.தே.கட்சிக்காரரும், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சருமான ராம்மோகன்! வளர்க அவரின் ‘ஓம் ஜெய் ஸ்ரீராம்’ பக்தி!!

ஞாயிறு, 16 ஜூன், 2024

மாமிசம் ருசியோ ருசி? தின்று தொலைப்பீர்! பாவம் கடவுள்கள்!!

மனிதர்கள் விலங்குகளைக் கடவுள்களுக்குப் பலியிட்டு உண்பது குறித்து,  https://www.bbc.comஇல் வெளியானதொரு கட்டுரையை இன்று படித்ததால் உருவான பதிவு இது.

***விலங்குகளைப் பலியிடுவதற்குக் கடவுள்களே அனுமதி வழங்கியிருப்பதாக மதவாதிகள் கட்டிவிட்ட கதைகள் மிகப் பல[இணையத்தில் மிக எளிதாக தேடிக் கண்டறிந்து வாசிக்க முடியும் என்பதால் அவற்றை  இங்கு மீள்பதிவு செய்வது தவிர்க்கப்படுகிறது].

இந்த அறிவியல் யுகத்தில், எத்தனை எத்தனைக் கோணங்களில் சிந்தித்தாலும், இந்தக் கதைகளை நியாயப்படுத்திட முடியாத நிலையில், கடவுள் பெயரைச் சொல்லி, மாமிச உணவுகளை விரும்பி உண்போர்க்கு நாம் அறிவுறுத்த நினைப்பது ஒன்று உண்டு.


அது…..


நீங்கள் எம்மதம் சார்ந்தவராயினும், மாமிசம் உண்ணாமல் வாழ முடியாது என்றால்.....


ஆடோ, மாடோ, பன்றியோ, பாம்போ,  நண்டோ,  நரியோ நீங்கள் விரும்பிய ஓர் உயிரைக் கொன்று, ருசியாய்ச் சமைத்து வயிராறத் தின்று செரியுங்கள். ஆனால், எக்காரணத்தை முன்னிட்டும்  கருணை மிகு கடவுள்களைத்[இருக்கிறார்களோ அல்லவோ] துணைக்கு அழைக்காதீர்கள்!!


உயிர் வதை பற்றிய முன்னணி மதங்கள் கட்டும் சப்பைக்கட்டுகள்:


இஸ்லாம்:

இறைத் தூதர் இப்ராஹிம் ஒரு கனவு கண்டதாகவும், அதை அல்லாஹ்விடமிருந்து வந்த செய்தியாகக் கருதி, கீழ்ப்படிதலுக்காகத் தன் மகன் இஸ்மாயிலைப் பலியிடுமாறு சொன்னதாகவும் நம்பப்படுகிறது. இதனை அவர் தன் மகனிடம் கூறியபோது அதை இஸ்மாயில் ஏற்றுக்கொண்டார். இப்ராஹிம் தன் மகனைக் கொல்லச் சென்றபோது அல்லாஹ் அவரைத் தடுத்து நிறுத்தி, மகனுக்குப் பதிலாகப் பலியிடுவதற்குச் செம்மறியாட்டை வழங்கியதாக நம்பப்படுகிறது.


யூத மதம்:

பலியிடுதலின் நோக்கத்தைப் பொருத்து யூதச் சடங்குகளில் விலங்குகளைப் பலியிடுவது பல விதங்களில் நடைபெறுகிறது.


கிறித்தவம்:

"பழைய ஏற்பாட்டில் குறிப்பாக லேவியஸ் 17, இணைச்சட்டம்(Deuteronomy) ஆகியவை, எப்படி விலங்குகள் பலியிடப்பட வேண்டும் என்பதை விவரிக்கின்றன.


இந்து மதம்:

"ரிக் வேதத்தில் பண்டைய இந்து மதம் குறித்த பகுதிகளில், பலியிடப்படும் விலங்குகள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது". 


https://www.bbc.com/tamil/articles/c0kkxe1yz5lo