'பிரபஞ்சத் தோற்றம்' குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், 'ஏதும் புரியவில்லை' என்பது புரியும். தோற்றுவித்தவர் கடவுள் என்பது வெறும் அனுமானம்தான்!

Tuesday, November 29, 2011

விஞ்ஞானியும் மெய்ஞானியும்.

                     விஞ்ஞானியும் மெய்ஞானியும்.

இந்த இருவர் பற்றியும் அறியாதார் எவருமிலர்.

அறிவு வளர்ச்சிக்கு விஞ்ஞானியும், ஆன்மிக வளர்ச்சிக்கு மெய்ஞ்ஞானி எனப்படுபவரும் பாடுபடுவதாக மனித சமுதாயம் நம்புகிறது.

இந்த இருவரின் குண இயல்புகள் பற்றிப் பலரும் சிந்தித்திருப்பர்.

ஆனால், ஒப்பிட்டு ஆராய்ந்தவர்கள் நம்மில் எத்தனை பேர்?

அவ்வாறு ஆராய்வதில் பலன் ஏதுமுண்டா? வீண் வேலையா?

விடை எதுவாயினும் ஒரு முறை முயன்று பார்ப்பதில் தவறில்லை எனலாம்.

விஞ்ஞானி: ’எந்த ஒன்றையும்’ அறிவியல் சாதனங்களின் துணையுடன் [துணை இல்லாமலும்] அது பற்றிய ‘உண்மைகளை’ ஆராய்ந்து அறிவதில்  நாட்டம் கொண்டவர்.


மெய்ஞ்ஞானி: ’ஆழ்ந்த சிந்தனையின் மூலமே அனைத்து ‘உண்மைகளை’யும் கண்டறிந்துவிட முடியும் என நம்புபவர்.


விஞ்ஞானி: ‘இவ்வாறு இருக்கலாம்’ என்று, தான் ‘அனுமானித்தவற்றை,
ஆய்வு செய்து,‘உண்மை’ எனக் கண்டறிந்த பிறகே அதை உலகுக்கு 
அறிவிப்பவர். அதை உலகம் ஏற்குமா இல்லையா என்பது பற்றிப் பெரிதும் அலட்டிக் கொள்ளாமல் அடுத்த ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்.
தான் அனுமானித்ததை, “இது என் அனுமானம்தான்” என்று ஒப்புக்கொள்பவர்.

மெய்ஞ்ஞானி: தான் அனுமானித்தவற்றோடு, புனைவுகளும் கற்பனைகளூம் 
கலந்து, ‘இதுவே உண்மை’ எனப் பறை சாற்றுபவர்; தொடர் பிரச்சாரங்கள் மூலம் அதை மக்கள் மனங்களில் ஆழப் பதிய வைத்திட முயல்பவர்.
[படிப்பவர்களுக்குப் புரியும் என்பதால் உதாரணங்கள் தரப்படவில்லை]

விஞ்ஞானி: பிறர், தமக்குள் எழும் ஐயங்களை இவர் முன் வைக்கும் போது, உரிய விளக்கங்களைத் தர இயலவில்லை என்றால், “எனக்குத் தெரியாது”, அல்லது, “புரியவில்லை” என, கவுரவம் பார்க்காமல் இயலாமையை ஒத்துக் கொள்வார்.


மெய்ஞ்ஞானி: “தெரியாது”, “புரியவில்லை” போன்ற சொற்களை இவர் ஒருபோதும் உச்சரித்ததில்லை. “நீ அஞ்ஞானி...அற்பஜீவி...” என்றோ, “நாம் சொல்லும் உண்மையை உணரத்தான் முடியும்; உணர்த்த முடியாது” என்றோ சொல்லி வாய்ப்பூட்டு போடுவார்..


விஞ்ஞானி: மிகக் கடுமையாய் உழைத்தும் உண்மைகளைக் கண்டறிய இயலாதபோது, அதற்கொரு முற்றுப்புள்ளி வைத்துவிடாமல், தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பவர்.


மெய்ஞ்ஞானி: ஒன்றும் புரியாத நிலை வரும்போது, தொடர்ந்து சிந்திக்கும் திறன் இழந்து, “எல்லாம் அவன் சித்தம்...அவனின்றி அணுவும் அசையாது...அவனன்றி வேறு யாரறிவார்...” என்று சொல்லிச் சொல்லிச் சொல்லி உண்மைகளை ஆராய்ந்து அறியும் முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைப்பவர்.


விஞ்ஞானி: ‘கண்டுபிடித்தே தீருவது’ என்ற தணியாத ஆவேசத்துடன் அலுக்காமல் உழைப்பார்; சேர்த்து வைத்த பொருளை இழப்பார்; ஆய்வுக்குத் தன் உடலையே அர்ப்பணித்து உயிரிழக்கவும் துணிவார்.


மெய்ஞ்ஞானி: உடல் உழைப்பும் மூளை உழைப்பும் இன்றி, ‘சொகுசு’ வாழ்க்கை வாழ்பவர். [தாங்குவதற்குத் தொண்டர்படை உள்ளது. பிறகென்ன.....!]

இந்த ’முன்மாதிரி’  ஒப்பீடு தற்சார்பானதா? நடுநிலை பிறழாத ஒன்றா?

இந்த இருவரில், உண்மையாக மக்கள் நலனுக்கு உழைப்பவர் யார்? நம்பத் தகுந்தவர் யார்? [இவர்களால் விளையும் நன்மை தீமைகள் பற்றிய ஆய்வுக்கு இங்கு இடம் தரப்படவில்லை]

நம் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர் யார்?

முடிவு...?

சிறந்த சிந்தனையாளர்களான உங்கள் கையில்!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
Monday, November 28, 2011

மனித நேயம்

                                                   
.....

                                        மனித நேயம் [சிறுகதை]

அன்றைய அலுவல் முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, கடைவீதியில் நண்பன் வினோதனைச் சந்தித்தேன்.

“காபி குடிச்சிட்டே பேசலாம் வா.” என்று அழைத்தேன்.

”விரதம் இருக்கேன். நீ மட்டும் சாப்பிடு” என்றான்.

எனக்குள் ’குபீர்’ ஆச்சரியம்.

விரதம் பற்றிப் பேச நேர்ந்தால், காக்கா குருவி, ஆடு மாடு விரதம் இருக்கான்னு குதர்க்கம் பேசுவான் வினோதன். இவன் ‘பக்கா’ நாத்திகன் என்பதால் சாமியை வேண்டிட்டு விரதம் இருப்பது சாத்தியம் இல்லை.

மிதமிஞ்சிய ஆர்வத்துடன், “விரதமா! நீ இருக்கியா?” என்றேன்.

“ஆமா. ஒரு நாளைக்கு ஒரு வேளைச் சாப்பாடு மட்டும்” என்றான்.

“எத்தனை நாளா இருக்கே?”

“நாலு நாளா.”

“இன்னும் எத்தனை நாளைக்கு?”

“என் எதிர் வீட்டுக்காரன் சாகிறவரைக்கும்”

எனக்குள் ‘பகீர்’!

“என்னடா உளர்றே?”

“உயிர் கொல்லி நோயால் இம்சைப்பட்ட அவன், இன்னிக்கோ நாளைக்கோன்னு சாவோடு போராடிட்டு இருக்கான். அவனின் கடந்த கால ‘நடத்தை’ பிடிக்காத அவனோட சொந்த பந்தங்கள், எப்போ மண்டையைப் போடுவான்னு எட்ட நின்னு வேடிக்கை பார்க்கிறாங்க. நான் மட்டும், “நீ குணமடையற வரைக்கும் நான் விரதம் இருக்கப் போறேன்னு சொன்னேன்.
வறண்டு சிறுத்துப் போயிருந்த அவன் முகத்தில் சின்னதாய் ஒரு மலர்ச்சி!
’எனக்காக அனுதாபப் படவும் ஒருத்தர் இருக்கார்’கிற அற்ப சந்தோஷத்தோட அவன் வாழ்க்கை முடியட்டுமே”

வினோதன் சொல்லி முடித்த போது, என்னுள் ஒருவித சிலிர்ப்பு பரவுவதை உணர முடிந்தது.

வினோதன் என் கண்களுக்கு விநோதமானவனாகத் தெரிந்தான்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Sunday, November 20, 2011

கொடுத்து வைத்தவன்.                      கொடுத்து வைத்தவன் [சிறுகதை]

“உங்க மகனுக்குக் கணையத்தில் புற்று நோய். எங்களால குணப்படுத்த முடியல. உயிர் பிழைப்பதற்கான சாத்தியம் ரொம்பக் குறைவு............”

மிகுந்த மன வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்த டாக்டர், “மனம் தளர வேண்டாம். உங்க மகனைத் தினமும் லேசான உடற்பயிற்சி செய்யச் சொல்லுங்க. மூச்சுப் பயிற்சி ரொம்ப ரொம்ப முக்கியம். ரத்தக் குழாய்களில் அதிக அளவு பிராண வாயு சேரும்போது ஒட்டு மொத்த உடல் உறுப்பும் பலப்படும்.

மனசுக்குப் பிடிச்ச பாடல்களைக் கேட்கணும்; படங்கள் பார்க்கணும்; இயற்கை அழகை ரசிக்கணும்.

பயத்துக்கு இடம் தரவே கூடாது. இருக்கிற கொஞ்சம் வாழ்நாளையும் அது விழுங்கிடும். அளவு கடந்த தன்னம்பிக்கை வேணும்.  ‘நான் வாழ்வேன். நீண்ட நாள் வாழ்வேன்’னு மனசுக்குள்ள சொல்லிட்டே இருக்கணும். அப்படிச் சொல்லிட்டு ஆக்ரோஷத்தோட சத்தம் போட்டுக் கத்தினாலும் தப்பில்ல. மன இயல் ரீதியா இந்த முயற்சியில் ஜெயிச்சு உயிர் பிழைச்சவங்க இருக்காங்க.” என்று ஆணித்தரமான குரலில் வலியுறுத்தினார் செல்வராசுவிடம்.

டாக்டர், தன்னைத் தேற்றுவதற்காகவே இப்படிச் சொல்கிறார் என்று நினைத்தார் செல்வராசு. அவரின் அறிவுரையைப் புறக்கணித்தார்.

மகனின் உடல்நிலையை விசாரிக்க வந்த சொந்தபந்தங்களிடம், மனம் உடைந்து போய், “எல்லாம் நான் செய்த பாவம்...என் தலைவிதி...என்று ஏதேதோ புலம்பித் தீர்த்தார்.

நண்பர் ஒருவர், கடவுளின் அவதாரம் என்று சொல்லித் திரியும் உலகறிந்த’
ஓர் ஆன்மிகப் பிரச்சாரகரின் பெயரைச் சொல்லி, “அவரின் அருட்பார்வை பட்டால் தீராத நோய்கூடத் தீர்ந்து போகும். அவர் கரம் பட்டால் போன உயிரும் திரும்பி வரும். உன் மகனை அந்த மகானிடம் அழைச்சிட்டுப் போ” என்றார்.

“அவருடைய ஆசிரமம் ரொம்பத் தொலைவில் இருக்கு. டாக்ஸி பிடிச்சித்தான் போகணும். ரொம்பச் செலவாகும். இருந்த பணமெல்லாம் எற்கனவே செலவு பண்ணிட்டேன்.” குரலில் கனத்த சோகம் பொங்கச் சொன்னார் செல்வராசு.

“கடன் வாங்கு” என்றார் நண்பர்.

கடனுக்கு அலைந்து, கணிசமான தொகை சேர்ந்ததும், மகனை அழத்துக் கொண்டு புறப்பட்டார் செல்வராசு.

உரிய கட்டணம் செலுத்தி, சில நாட்கள் காத்திருந்த பிறகு, அந்த ’அவதாரி’யைத் தரிசிக்கும் ‘பேறு’ கிடைத்தது.

எட்ட இருந்தே தன் அருட்பார்வையால் அவருக்கும் அவர் மகனுக்கும் அந்த மகான் ஆசி வழங்க, அவரது சீடர் ஒருவர், “ இங்கேயே தங்கியிருந்து
தியான வகுப்புகளில் கலந்துக்கணும். சுவாமிகளின் ஆன்மிகச் சொற்பொழிவுகளைத் தவறாம கேட்கணும்.” என்று நெறிப்படுத்தினார்.

அவர் சொன்னபடியெல்லாம் செய்தார் செல்வராசு. பலன் இல்லை. மகனின் உடல் நலத்தில் முன்னேற்றம் இல்லை. பின் இறக்கமே தென்பட்டது.

ஒரு சீடரை அணுகி, “சாமி, என் மகனைத் ’தொட்டு’ ஆசீர்வாதம் பண்ணுவாரா?” என்று தயங்கித் தயங்கிக் கேட்டார்.

”அதுக்குத் தனியா பணம் கட்டணும்”

கட்டினார் செல்வராசு.

மகனின் முன்னந்தலையைத் தொட்டு, “கடவுள் கருணை காட்டுவார். கவலைப் படாதே” என்று அவதாரம் அருள் வாக்கு நல்கிய போது செல்வராசு மெய்சிலிர்த்துப் போனார். அவர் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் ஆறாகப் பெருகியது!

ஆயினும் என்ன, அடுத்த சில நாட்களிலேயே அவர் மகன் மரணத்தைத் தழுவினான்.

கதறி அழுதவாறு, மகானிடம் சொன்னார்: “என் மகன் என்னைத் தவிக்க விட்டுப் போய்ட்டான் சாமி”

“வருத்தப் படாதே. நல்லதே நடந்திருக்கு. உன் மகனின் பொய்யுடம்புக்குத்தான் அழிவு. அவனுடைய மெய்யுடம்பு ஆன்மாவைச் சுமந்து ஆண்டவனின்
திருவடியைச் சென்றடையும். இது எம் தரிசனத்தால் நேர்வது. அவன் கொடுத்துவைத்தவன்.” என்றார் அந்த ஆன்மிகச் செம்மல்.

மகனின் சடலத்துடன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார் செல்வராசு.

மகனை இழந்த வருத்தத்தோடு, புதிதாகப் பட்ட கடன் சுமையும் சேர்ந்து பெரும் பாரமாய் அவர் நெஞ்சை அழுத்தலாயிற்று.

இதற்கிடையே...............

“டாக்டர் சொன்னபடி நடந்திருந்தா என் மகன் பிழைச்சிருப்பானோ?" என்ற சந்தேகம் அவரின் உள் மனதில் விட்டு விட்டு ஒலித்துக் கொண்டே இருந்தது.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


Wednesday, November 16, 2011

ஆன்மாவுடன் ஓர் உரையாடல்.

ன்பமோ துன்பமோ அனுபவிப்பது எதுவாக இருந்தாலும், என்றென்றும்... எக்காலத்தும் ஏதேனும் ஒரு வடிவில் உயிர் வாழவே மனிதன் ஆசைப் படுகிறான்.

மனித உருவில் வாழும் எவரும் இதற்கு விதிவிலக்கல்லர்.

மரணத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிய...அதை எதிர் கொள்ளும் மன திடம் அறவே இல்லாத ...ஆயினும் சிந்திக்கத் தெரிந்த... சில புத்திசாலிகளின்  அனுமானமே இந்த ஆன்மா. [கடவுளைக் கற்பித்தவர்களும் அவர்களே]

சிந்திக்கும் திறன் குறைந்த...அதற்கான சூழல் அமையாத மக்கள், இவர்கள் கட்டிவிட்ட கதைகளில் மயங்கி இவர்களுக்கு அடிமைகளாகவும் ஆனார்கள்!

அறிவியல் வளர்ந்து, ஒவ்வொரு மனிதனும் நல்ல சிந்தனையாளனாக உருமாறும் சூழல் அமைந்த நிலையிலும், ஆன்மா பற்றிய பழங்கதைகளை நம்புவது நீடிக்கிறது!

கடவுளின் ஒரு கூறு ஆன்மா என்று சொல்லும் ஆன்மிகவாதிகள், தாங்கள் நம்பும் கடவுள் பற்றி ஒரு தெளிவான விளக்கத்தை ஒருபோதும் தந்ததில்லை.[இவ்வலைப்பதிவின் ஆரம்பப் பதிவுகளில் இது பற்றி விரிவாக எழுதியிருக்கிறோம்]

ஒவ்வொரு உடம்பிலும் ஓர் ஆன்மா பயணிக்கிறது என்கிறார்கள். அது உடம்பில் புகுந்தது எவ்வாறு என்பது பற்றி எவரும் அறிவு பூர்வமாக விளக்கிச் சொன்னதில்லை.

உடம்பில் தங்கியிருந்து, அதன் மூலம் இன்ப துன்பங்களை அனுபவிக்கிற அது....

உடம்பு உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் போது, தான் உறையும் உடம்பிலிருந்து வெளியேறி, அலைந்து திரிகிறது என்கிறார்கள்.

என்ன ஆதாரம்?

பெண் உறுப்பு வழியாக உள் நுழைந்த அது [இதைச் சொன்னதும் அவர்கள்தான்] பின்னர் எந்த உறுப்பு வழியாய் வெளியேறியது?

மீண்டும் எப்படி உடம்புக்குள் நுழைந்தது?

கட்டுப்பாடு ஏதும் இல்லையா? [ ஆன்மாக்களைத் தன்னிலிருந்து பிரித்து, பிரபஞ்சத்தில் உலவவிட்டதோடு கடவுளின் கடமை முடிந்துவிட்டதா?]

இது வெளியேறிய தருணத்தில் வேறொரு ஆன்மா இவ்வுடலில் நுழைந்து விடலாமே? அது நிகழ்ந்தால், இது வேறொரு உடலைத் தேடி அலையுமா? இல்லை, அதை எதிர்த்துப் போராடுமா?

ஓர் உடலுக்காக இரண்டோ, அதற்கும் மேற்பட்ட ஆன்மாக்களோ மோதிக் கொள்வதும் உண்டா?

வெளியேறுகிற ஆன்மா ஊர் சுற்றிவிட்டு, தன்னை மறந்த நிலையில் தங்கியிருந்த உடம்பை மறந்து விடுவது அல்லது புறக்கணித்து விடுவதும் சாத்தியமா?

ஆன்மாவைப் பொருத்தவரை, ஐம்புலன் நுகர்ச்சி என்பது இல்லை என்கிறார்கள். அது ஓர் உடம்புக்குள் புகுந்துதான் ஒரு காட்சியைப் பார்க்கவோ ஓர் ஒலியைக் கேட்கவோ முடியும் என்கிறார்கள். உடம்பிலிருந்து வெளியேறி, ஊர் சுற்றிப் ’பார்ப்பது’ என்பது எவ்வாறு சாத்தியம்?

உடம்பின் ஒட்டுறவின்றி, பார்ப்பதும் கேட்பதும், தொட்டு உணர்வதும், நுகர்வதும், சுவைப்பதும் அதற்கு இயலாது என்று சொன்னவர்களும் இவர்கள்தானே?

கதை அளப்பதற்கு ஓர் எல்லை இல்லையா?

உடம்பின் செயல்பாடுகளால் விளையும் நன்மை தீமைகளை இந்த ஆன்மா நேரிடையாக ப் பெறுகிறதா, இல்லை மூளை வழியாகவா?

இது பற்றியெல்லாம் ஆன்மிகங்கள் சிந்தித்திருக்கிறார்களா?

அனுபவிப்பது உடல் மூலமாக என்றால்.....

சிந்திப்பது?

ஆன்மாவுக்குச் சிந்திக்கத் தெரியுமா?

சிந்திக்கும் திறன் இருந்தால், தான் பயணிக்கும் உடம்பை நற்செயல்களில் மட்டும் ஈடுபடுத்தலாமே? தீச்செயலும் செய்ய அனுமதிப்பது ஏன்?

உடம்பு, மூளையின் ஆணையை ஏற்றுக் குற்றங்கள் புரிய, அதனால் விளையும் பாவங்களை ஆன்மா சுமந்து திரியும் பரிதாபம் ஏன்?

கொஞ்சமும் சிந்திக்கும் திறனற்ற ஓர் அஃறிணைப் பொருளைக் கடவுளின் ஒரு கூறு என்று சொல்வது எவ்வாறு?

இப்படி, இன்னும் பல வினாக்களுக்கு அவர்களால் ஒரு போதும் விளக்கம் தர இயலாது என்பது தெரிந்திருந்தும்.......

நண்பர்களே, உங்களில் எவரேனும் ஆன்மா இருப்பதை நம்புகிறீர்களா?

”ஆம்” எனின், அத்தகு நம்பிக்கை கொண்ட என் இனிய ஆன்மா நண்பரே..........

உங்களுடன் பேச எம்மை அனுமதியுங்கள்.

‘நீங்கள்’ என்று நாம் சொன்னால், அது உங்கள் ஆன்மாவையே குறிக்கும்.

நீங்கள் வேறு உங்கள் ஆன்மா வேறு அல்ல.

ஆன்மிகங்கள், ஆன்மாவை ஒருமையில்தான் ...’அது, இது’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள். நாமும் அவர்களைப் பின்பற்றுகிறோம்.

எம் நண்பராம் ஆன்மாவே,

ஓர் உடம்புக்குள் ஒளிந்து கொண்டுதான் உன்னால் இன்ப துன்பங்களை அனுபவிக்க முடிகிறது. நீ உறையும் உடம்பு உன்னால் இயக்கப்படுவதில்லை.
அது மூளையின் ஆளுமைக்கு உட்பட்டது. பாவ புண்ணியங்களைச் சுமக்க மட்டுமே உன்னால் முடியும். அவற்றில் ஒன்றைக் கூட்டவோ குறைக்கவோ உன்னால் முடியாது. ஆக, ஆறறிவு என்றில்லை, ஓரறிவு கூட இல்லாத ஒரு ஜடப் பொருள் என்று உன்னைச் சந்தேகிக்கத் தோன்றுகிறது. என் சந்தேகம் நியாயமானதுதானா?

எது எப்படியோ, உன்னிடம் சில கேள்விகள்.

கடந்த பிறவிகளில் எத்தனை முறை ஆண் உடம்பிலும் எத்தனை முறை பெண் உடம்பிலும் சுக துக்கங்களை அனுபவித்தாய்? ‘அலி’களின் தேகத்திலும் நீ விரும்பிப் பயணித்ததுண்டா? அழகான பெண் கருவில் [உடம்பில்] நீ விரும்பிப் புகுவது உண்டா?

எந்தவொரு உடம்பிலும் புகாமல், வெறுமனே விண்ணில் அலைந்து திரிகிற போது உன் நிலை என்ன? உன்னைப் புரிந்து கொள்வது எப்படி? பிறருக்குப் புரிய வைப்பது எப்படி?

கடவுளைப் போலவே உன்னையும் உணரத்தான் முடியுமா? உணரும் சக்தியைக் கடவுள் எமக்கு வழங்குவாரா? அவரை மசிய வைப்பது எப்படி?

ஒரு பிறவியில் வாழ்ந்து முடித்த அனுபவம் அடுத்த அடுத்த பிறவிகளிலும்
உன் நினைவில் தங்கியிருக்குமா?

எம்மைப் பொறுத்தவரை, எம் ஆன்மா பற்றிய எந்தவொரு பதிவும் எம்மிடம் இல்லை. முற்பிறவி பிற்பிறவி என்று எப்பிறவி பற்றியும் எமக்கு எதுவுமே நினைவில் இல்லை. அப்புறம், பாவம் புண்ணியம் என்றெல்லாம் அலட்டிக் கொள்வது முட்டாள்தனம் அல்லவா?

ஒரு பிறவியில் இனியன் உடம்பிலும், இன்னொன்றில் அமுதாவின் உடம்பிலும், அடுத்த ஒன்றில் சூர்யாவின் உடம்பிலும்...இப்படி ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொருவர் உடம்பில் புகுந்து வெளியேறுவது உன் வழக்கமாக இருந்திருக்கிறது. உண்மையில், மேற்சொன்னவர்களில் எவருக்குச் சொந்தமான ஆன்மா நீ?

தன்னின் ஒரு கூறான உன்னை, வெறும் ‘ஜடப்பொருள்’ ஆக்கி, கூடு விட்டுக் கூடு பாயப் பணித்து, பல பிறவிகள் எடுக்கச் செய்து, அலையவிட்டு , சொல்லொணாத துன்பங்களுக்கு உட்படுத்திக் கடவுள் தண்டிப்பது ஏன்?

இதுவும் அவருடைய திருவிளையாடல்களில் ஒன்றா?

இன்னும் பல கேள்விகள் இருந்தாலும் இவற்றிற்கு மட்டும் இப்போது அவசியம் பதில் தேவை.

’ஆன்மாவுடன் பேச முடியாது’ என்று சொல்லி நழுவ வேண்டாம். நீ பயணிக்கும் உடம்புக்கு ஒரு மழலை முத்தமிட்டால், அந்தப் பேரின்பத்தைத் தொடு உணர்ச்சி மூலம் உன்னால் அனுபவிக்க முடிகிறது. அவ்வாறே எதிர் நின்று ஒருவர் பேசுவதையும் உன்னால் கேட்க முடிகிறது. பார்க்க முடிகிறது; சுவைக்க முடிகிறது. ஆக, ஐம்புல நுகர்ச்சி உனக்கு உண்டு. ஆதலால், ஐயத்திற்கு இடமின்றி உன்னால் நீ குடி கொண்டிருக்கும் உடம்பின் வாய் மூலம் எம்முடன் பேச இயலும்.

பேசு...எம் கேள்விகளுக்குப் பதில் சொல்.

'ஆன்மா என்பது வெறும் கற்பனை; அப்பட்டமான பொய்” என்று சொல்லப் படுவதைப் பொய்ப்பிக்க நீ பேசு........................

பேசு ஆன்மாவே பேசு................பேசு......................பேசு...................................

நீ பேசுவதைக் கேட்க நாம் மட்டுமல்ல, இந்த மண்ணுலக மக்கள் அனைவரும்
ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Sunday, November 6, 2011

நீங்களும் கடவுள்தான்!


                                             நீங்களும் கடவுள்தான்!


இப்பதிவைப் படிக்கும் நண்பர்களே, உங்களிடம் சில வினாக்கள். உங்களின் பதில்களையும் நாமே அனுமானிக்கிறோம். [’நாம்’எனக் குறிப்பிடுவது பத்திரிகையாளர்கள் பின்பற்றும் மரபு. வேறு காரணம் இல்லை]


உங்கள் கையைத் தொட்டு நாம்: “ இந்தக் கை யாருடையது?”


நீங்கள்: “என்னய்யா கேள்வி? என்னுடையதுதான்.”


நாம்: “ இந்தக் கால்கள்?”


நீங்கள்: “என்னுடையதே.”


“தலை உங்களூடையது. உள்ளே இருக்கும் மூளை?”


 சலிப்புடன்,” அதுவும் என்னுடையதுதான்.” என்கிறீர்கள்.


“ஒட்டு மொத்த இந்த உடம்பு...?”


“சந்தேகம் வேண்டாம். என்னுடையதே.”


“எமக்கு எதிரே இருக்கிற இந்த உருவம்?”


“நான்தான்...நானேதான்”


“’நான்’ என்று உங்களைச் சுட்டுகிற நீங்கள், ‘என் கை...என் கால்கள்...என் மூளை... என் உடம்பு... என்று சொன்னதன் மூலம், பல உறுப்புகளை உள்ளடக்கிய உங்கள் உடம்பு வேறு...நீங்கள் வேறு என்றாகிறது. சரிதானே?”


உங்கள் முகத்தில் சினம் பரவுகிறது.  “ முட்டாள்தனமான கேள்வி இது. என் எழுதுகோள்னு சொன்னா, என் எழுதுகோள் வேறு நான் வேறுன்னு ஆகும். என் உடம்புன்னு சொல்லும்போது, நான் வேறு; என் உடம்பு வேறுன்னு அர்த்தம் பண்ணக் கூடாது. [தற்கிழமை, பிறிதின் கிழமைன்னு இலக்கண நூல்கள் சொல்லும்]. ’நான்’னு நான் குறிப்பிடறது, மூளையையும் மற்ற உறுப்புகளையும் உள்ளடக்கிய ஒட்டு மொத்த உடம்பைத்தான். ”


“தவறு. நீங்கள் ‘நான்’ என்று சுட்டியது உங்கள் உடம்புக்குள் ஊடுருவியிருக்கிற 
’ஆன்மா’வை.”


“புரியும்படி சொல்லுங்க.”


“உங்கள் உடம்புக்குள் ஓர் ’ஆன்மா’ ஊடுருவியிருக்கு. நீங்க ‘நான்’ என்றது
அந்த ஆன்மாவைத்தான்.”


“நான் ‘நான்’னு சொன்னது என் ஒட்டு மொத்த உடம்பைத்தான். அப்படிச் சொன்னது என் வாய். சொல்ல வைத்தது என் மூளை. ‘நான் உங்களுடன் வருகிறேன்னு சொன்னா என் உடம்பு வருதுன்னுதான் அர்த்தம். ஒரு ஆன்மா வருதுன்னு அர்த்தம் பண்ணக் கூடாது.”


”நீங்க சொல்றது தப்பு. நீங்க ‘நான்’ என்றது 100% அந்த ஆன்மாவைத்தான்.”


”அப்படீன்னு நீங்க சொல்றீங்களா?”


“இல்ல. ஆன்மிகவாதிகளும் கடவுளின் அவதாரங்களும் சொல்றாங்க.”


“இன்னும் என்னவெல்லாம் சொல்றாங்க?”


”ஆன்மா அழிவில்லாதது; என்றும் இருந்தது; இனி என்றும் இருப்பது; அது கடவுளின் ஒரு கூறு. கடவுளின் கட்டளைப்படி, கரு உருவாகும் போதே அதில்
ஐக்கியமாகி, உடம்பு அழியும்வரை அதில் தங்கியிருந்து, இன்ப துன்பங்களை அனுபவித்து, பாவ புண்ணியங்களைச் சுமந்து...உடல் அழியும் போது வெளியேறிவிடும் தன்மை கொண்டது; பல பிறவிகள் எடுத்து, என்றேனும் ஒரு பொழுதில் கடவுளுடன் ஐக்கியமாவது. இப்படி இன்னும் நிறையச் சொல்லலாம்.”

“ கடவுளே ஆன்மா வடிவத்தில் இன்ப துன்பங்களை அனுபவிக்கிறாரா?”

“ஆமா.”

“இன்ப துன்பங்கிறது...?”

உடம்பின் இயக்கத்தால்...செயல்பாடுகளால் விளைவது”

“பாவ புண்ணியங்கள்?”

“அவற்றின் விளைவுக்கும் உடம்பே காரணம்.”

“உடம்பை இயக்குவது மூளைதானே?”

“ஆமா”

“மூளையைக் கட்டுப்படுத்தவும், துன்பங்களும் பாவங்களும் சேராமல் தடுக்கவும் ஆன்மாவால் முடியுமே?”

”முடியாது. இன்ப துன்பங்களை ஏற்பதும் பாவ புண்ணியங்களைச் சுமப்பதும் மட்டுமே ஆன்மாவுக்குக் கடவுள் இட்ட கட்டளை. மறுபிறவி எடுக்கும் போது நல்ல உயிரின் [?] உடம்பில் புகுவதும் தீய உயிரின் உடம்பில் நுழைவதும் ஆன்மா சுமக்கும் பாவ புண்ணியங்களின் அளவைப் பொறுத்தது.”

“ஓர் உடம்பு [உயிரும் ஆன்மாவும் ஒன்று என்று சொல்லிக் குழப்புகிறார்கள் அதனால்தான், ‘உயிர்’ என்று குறிப்பிடாமல் மூளையால் இயக்கப்படும் உடம்பு என்கிறோம்] செய்யும் பாவத்தை ,உடம்பில் வெறுமனே தங்கியிருக்கிற ஆன்மாக்கள் சுமந்து தண்டனைக்குள்ளாவது என்ன நியாயம்? கடவுளின் கூறுகளான ஆன்மாக்கள் தண்டிக்கப்படுவது கடவுள் தன்னைத்தானே தண்டித்துக் கொள்வது போல் அல்லவா? இது ஏன்?”

“எல்லாம் அவனின் திருவிளையாடல்.”


ஆம் நண்பர்களே, இப்படிச் சொல்பவர்கள் நம் ஆன்மிகவாதிகளும் அவதாரங்களும்தான். கடவுள் திருவிளையாடல் நிகழ்த்துவதாகச் சொல்லி, நீண்ட நெடுங்காலமாக, இம்மண்ணுலகக் கடவுள்களான இவர்களும் மக்களிடையே விதம் விதமான திருவிளையாடல்களை நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்!

இவர்கள் சொல்வதெல்லாம் உண்மை எனக் கொண்டால்........................


இப்போது உரையாடிக் கொண்டிருக்கிற நாமெல்லாம் சாதாரண மனிதர்கள் அல்ல; என்றும் அழிவில்லாத ஆன்மாக்கள்! ஆன்மாக்களாகிய நாம் அனைவரும் கடவுளின் அவதாரங்கள். ஆக, நாம் எல்லோருமே கடவுள்தான்!!

பல பிறவிகள் எடுத்து, வறுமைத் துன்பம், நோய்த் துன்பம், பகைத் துன்பம் என்று எத்தனை துன்பங்களை அனுபவித்தாலும் நமக்கு மரணம் என்பது எப்போதும் இல்லை; கோடிகோடி கோடியோ கோடி யுகங்களுக்குப் பிறகேனும்
 கடவுளுடன் ஐக்கியமாகப் போகிறோம் என்பதை நினைத்து ஆனந்தக் கூத்தாடலாம்!

ஆயினும், சில சந்தேகங்கள்................................................

இக்கணம் வரை நாம் [நான் ஆகிய பரமசிவம்] எத்தனை பிறவிகள் எடுத்திருக்கிறோம்?

இனி எடுக்கப் போகும் பிறவிகளைக் கணக்கிட இயலுமா?

ஒவ்வொரு பிறவியிலும் நாம் சுமந்த பாவங்கள் அதிகமா,புண்ணியங்களா?

பாவங்களின் அளவு அதிகரித்துக் கொண்டே போனால் கடவுளுடன் ஐக்கியமாவது ஒரு போதும் முடியாமல் போகும்தானே?


பாவங்கள் குறைந்து புண்ணியங்கள் அதிகரிக்க அவர் கருணை காட்டுவாரா?


ஒரு வேளை, கடவுளுடன் ஐக்கியமானால், அதன் பிறகு ஆன்மாவின் செயல்பாடுகள் என்னவாயிருக்கும்? அப்புறம் எப்போதும்... வரையரையற்ற நீ...........ண்..........ட....
நெடு...நெடு...நெடு...நெடுங்காலத்துக்கும் சும்மா இருப்பதுதானா? அதுவே
பேரானந்தமா?

 இவ்வினாக்களுக்கெல்லாம் விடை காண்பதற்கு நம் அவதாரங்கள் உதவி செய்ய வேண்டும்.

செய்வார்களா?

எப்போது?

அவர்களின் பதிலுக்காகப் பேரார்வத்துடன் காத்திருப்போம்!

**********************************************************************************

இப்பதிவைப் படிக்கத் தொடங்கும் நண்பர்களுக்கு ஓர் அன்பான