'பிரபஞ்சத் தோற்றம்' குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், 'ஏதும் புரியவில்லை' என்பது புரியும். தோற்றுவித்தவர் கடவுள் என்பது வெறும் அனுமானம்தான்!

Tuesday, June 28, 2011

கடவுளிடம் ஒரே ஒரு கேள்வி

                                                 கடவுளிடம் ஒரே ஒரு கேள்வி


கடவுளே,


கடந்த ஒரு வினாடி வரை உம்மை நாம் நம்பியதில்லை.


’நீர் எப்படித் தோன்றினீர்? உம்முடைய தோற்றம் எப்போது, எவ்விடத்தில்,
எவ்வாறு நிகழ்ந்தது என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு, விடை தெரியாத நிலையில்....................................................

ஆன்மிகவாதிகள் தரும் உம்மைப் பற்றிய விளக்கங்கள் வெறும்
அனுமானங்களே தவிர, அறிவு பூர்வமானவை அல்ல என்ற காரணத்தால்..........

நீர் ‘இருப்பதாக’ நாம் ஒப்புக் கொண்டதும் இல்லை. இருப்பினும்.............................

ஆன்மிகவாதிகள் எம் போன்றவர்கள் மீது வீசுகிற சில கேள்விக் கணைகளை எம்மால் புறம் தள்ள முடியவில்லை.

அவை............................

“ஏன், எப்படி.....என்பன போன்ற கேள்விகள் கிடக்கட்டும், உன் கண் முன்னால்
கோள்களும் நட்சத்திரங்களும் எல்லையில்லாத பெரு வெளியில் இறைந்து
கிடப்பதையும் இயங்கிக் கொண்டிருப்பதையும் காண்கிறாய். இவையெல்லாம்
பொய்; மாயை என்கிறாயா? இல்லையே. ‘உண்மை’ என ஒப்புக் கொள்கிறாய்தானே?

நீ இருப்பது; நாம் இருப்பது; நாம் இயங்குவது.............எல்லாம் உண்மைதானே?

உனக்கு ஆறாவது அறிவு இருப்பதை நம்புகிறாய்.

 அந்த அறிவைக் கொண்டுதான் சிந்திக்கிறாய்.

கடவுளைப் பற்றி ஆயிரம் கேள்விகள் கேட்கிறாயே, எல்லாம் அந்த ஆறாவது அறிவு இருப்பதால்தானே?

இந்த அறிவு ‘உண்மையானது’ என்பதை நீ மறுக்க முடியாது.

ஆனால், ஓர் உண்மையையும் நீ மறந்துவிடக் கூடாது.

உனக்கு வாய்த்திருக்கிற இந்த அறிவு நிரந்தரமானது அல்ல; அழியக் கூடியது.

அழியக் கூடிய இந்த அறிவு தானாகத் தோன்றியிருக்க முடியாது; இதைத் 
தோற்றுவிக்க இதைவிட ஆற்றல் வாய்ந்த ஓர் அறிவு தேவை.

 விவரிப்புக்கு அடங்காத அந்தப் ‘பேரறிவைத்தான் ‘கடவுள்’ என்கிறோம்.

அந்த அறிவு எப்படித் தோன்றியது என்ற கேள்வி அவசியமற்றது. ஏனென்றால்...

கோள்கள் இருப்பது போல, நீ இருப்பது போல, நாம் இருப்பது போல, நமக்கு
ஆறாவது அறிவு இருப்பது போல நம் அறிவுக்கும் மேலான ஓர் அறிவு 
இருக்கிறது என்பதை நீ நம்பித்தான் ஆகவேண்டும்”.

கடவுளே,

இவ்வாறாக எழுப்பப்படுகிற கேள்விகளை எம்மால் அலட்சியப் படுத்த
முடியவில்லை என்பது உண்மைதான்.

ஐம்புலன்கள் இல்லாமல் நீர் எப்படிப் பார்க்கிறீர், கேட்கிறீர்......என்பன போன்ற    
எத்தனயோ கேள்விகளை யெல்லாம் புறந்தள்ளிவிட்டு.........................

நீர் ஒருவர் ‘இருக்கிறீர்’ என்று தற்காலிகமாக ஏற்றுக் கொண்டு..........................

உம்மிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறோம்.

இந்தப் பிரபஞ்சம், எந்தவொரு அளவுகோலும் கொண்டு அளந்து அறிய
முடியாதது; நீளம், அகலம்,மேல்,கீழ் மையப்புள்ளி என்று எதுவுமே இல்லாதது; விளிம்பு நிலை அற்றது என்பதை எல்லாம் நாம் ஏற்கனவே விளக்கியிருக்கிறோம்.

இந்தப் பிரமிக்கத் தக்க.......................................................................................

கற்பனக்கு எட்டவே எட்டாத..........................................................................

பிரபஞ்ச வெளிக்கு நீர் ஒரே ஒரு கடவுள்தானா?

நீர் கடவுளாக இருந்தாலும் உம்மாலும் கணிக்கவே இயலாத....அளந்தறியவே இயலாத அனைத்து அண்டங்களுக்கும் நீர் ஒருவர்தான் கடவுள் என்று உம்மால் அறுதியிட்டுச் சொல்ல முடியுமா?

உம்மைப் போல இன்னும் எத்தனை கடவுள் இருந்தால், முழுமை பெறாத பிரபஞ்ச வெளியைக் கட்டி ஆள்வது சாத்தியமாகும்?


கடவுள்கள் பலர் என்றால், உங்களுக்குள் ஆதிக்கப் போட்டி வருமே?

போட்டியை எப்படித் தவிர்த்தீர்கள்?

சமரசமா? இல்லை, சமர் புரிந்து மற்றவர்களை அழித்துவிட்டு நீர் மட்டுமே அனைத்தையும் ஆள்கிறீரா?

பிரபஞ்சப் பரப்பையே அளந்தறிய முடியாத போது கடவுளரின்
எண்ணிக்கையையும் கணக்கிட முடியாதே?

கடவுளே,

கேள்விமேல் கேள்விகளை அடுக்கி உம்மை நோகடிப்பதோ, இழிவு படுத்து
வதோ எம் நோக்கம் அல்ல; அல்லவே அல்ல.


நீர் எமக்குத் தந்த பகுத்தறிவு இவ்வாறு கேள்விகளைக் கேட்கத் தூண்டுகிறது.
அதைத் தடுக்க இயலவில்லையே ஐயா.

கேள்விகள் கேட்பதுகூடக் குற்றமா கடவுளே?

நீர் இருப்பது உண்மையானால், எல்லாம் வல்லவரான உம்மை இந்தக் கேள்விகள் களங்கப் படுத்திவிடுமா!?

ஓ.....கடவுளே,

இன்னும் உம்மிடம் கேட்பதற்குக் கேள்விகள் உள்ளன. அவற்றை இப்போதே முன் வைக்க நாம் விரும்பவில்லை.

இந்த ஒரு கேள்விக்கு நீர் பதில் தந்தால் போதும்.

அற்ப மனிதனான எம்மை மதித்து நீர் எம்முடன் தொடர்பு கொள்ள மாட்டீர்
என்பது எமக்குத் தெரியும்.

சரியான பதிலை உம்முடைய ‘அவதாரங்கள்’ மூலமாக அனைத்து மக்களும் அறியும் வகையில் பகிரங்கப்படுத்தும்.

உமது பதில் எமக்கு முழுத் திருப்தி அளித்தால் உம்மை நாம் நிரந்தரமாகஏற்றுக் கொள்வோம். கிஞ்சித்தும் சந்தேகம் வேண்டாம் எம் ஐயனே.

**********************************************************************************
**********************************************************************************

Monday, June 20, 2011

கடவுளின் ஓர வஞ்சனை

                                          கடவுளின் ஓர வஞ்சனை


மனிதர்களால் நம்பப்படும் விதியில் ’இரண்டு வகை’ உள்ளது.

ஒன்று ’தீய விதி’. இன்னொன்று ’நல்ல விதி’

உயிர்களுக்குத் தீமை பயப்பது தீய விதி; நன்மை பயப்பது நல்ல விதி.

உயிருள்ள.....உயிரற்ற அனைத்தையும் இயக்குவது இந்த விதி[கள்]தான். அதாவது , கடவுளே நல்ல விதி மூலம் உயிர்களுக்கு நன்மையையும், தீய விதி மூலம் தீமையும் செய்கிறார். [பக்தர்கள் முகம் சுழிக்க வேண்டாம்]

இதோடு நில்லாமல் உயிர்களுக்குச் ‘சுய அறிவும்’ கொடுத்திருக்கிறார்.

சுய அறிவு என்பது, உயிர்கள் ‘தன்னிச்சையாய்’ச் செயல்பட உதவுவது.


உயிர்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கடவுள், உயிர்கள் சுயமாகச் செயல்படுவதற்கான அறிவை ஏன் கொடுத்தார்?

தம் விதியையும் உயிர்களின் மதியையும் மோத விடுவதற்குத்தானே?


அந்த மோதலில், உயிர்கள் படும் பாட்டை.....துன்பங்களை.....துயரங்களை.........
அடையும் வேதனைகளைக் கண்டு ரசிக்கத்தானே?

வேறென்ன காரணம்.....காரணங்கள்? சொல்லுங்களேன்.

“இதெல்லாம் கடவுளின் விளையாட்டு. இந்த விளையாட்டில் உயிர்கள் இன்பம் துன்பம் இரண்டுமே அனுபவிக்க நேரிடும். முழு நம்பிக்கையோடு அவனை வழிபட்டால் வீடு பேறு எய்தலாம்”.

இப்படிச் சொல்பவர்கள் யார்?

ஆன்மிக வாதிகள்; மதவாதிகள்.

இப்படிச் சொல்லிச் சொல்லியே மக்களின் ஆறாவது அறிவை மழுங்கடித்து
விட்டார்கள்.

இந்த “ஆறாவது அறிவு’ மனிதர்களுக்கு எப்படி வாய்த்ததோ யாருக்கும்
தெரியாது. [இது கடவுளால் அருளப்பட்டது என்று கதை விடாமல், ‘தெரியவில்லை’ என்று மனப்பூர்வமாய் உண்மையை ஒப்புக் கொள்ள
வலியுறுத்துவது இந்த ஆய்வுரையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.

எதையும் ஏன், எப்படி, எப்போது, எங்கே என்றெல்லாம் மனிதனைக் கேள்விகள் எழுப்பத் தூண்டியது இந்த அறிவுதான்.

அயராது சிந்தித்து, விடைகளைத் தேடிக் கண்டுபிடித்து, அரிய பல
சாதனைகளை நிகழ்த்த அடிப்படையாய் அமைந்தது இந்த அறிவுதான்.

இந்த அறிவில், சராசரி மனிதன் பயன்படுத்துவது மிக மிகக் குறைந்த
அளவுதான் [ஐந்து அல்லது ஆறு சதவீதம்தான். விஞ்ஞானிகள்
பயன்படுத்துவதே13% தான்(?) என்கிறார்கள் அறிஞர்கள்.]

மனிதன், தீர்வு காண முடியாத பிரச்சினைகளுக்கு ஆளாகி, கடும்
துன்பங்களுக்கு உள்ளாகக் காரணம் அவன் தன் அறிவை முழுமையாகப் பயன்படுத்தாததே.

படிப்படியாக, தன் அறிவை அதிக அளவில் பயன்படுத்துவதற்கான பயிற்சி.......
அயராத முயற்சி.....கட்டுக்கடங்காத ஆர்வம் எல்லா மனிதர்களுக்கும் தேவை.


பகுத்தறிவின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க மனிதன் சந்திக்க நேரும் தோல்விகளின் எண்ணிக்கை கண்டிப்பாகக் குறையும்.

துன்பங்களைத் தாங்கும் சக்தி நாளும் வளரும்.

மனிதன் தன் அறிவை முழுமையாக [100%] பயன்படுத்தும் காலம் வந்தால், அப்போது மனித சமுதாயம் எய்தும் இன்ப நிலையை எண்ணிப் பாருங்கள்.

நாம் அனுபவ ரீதியாக அறிந்து வைத்திருக்கும் இந்த ‘அறிவை’ப்
பயன்படுத்துவதைத் தவிர்த்து, நம்மால் கொஞ்சமும் அறியப்படாத, நம்பவே முடியாத விதியை நினைத்து..........................................

”விதி வலியது. அதை நம்மால் வெல்ல முடியாது. விதியால் விளையும் துன்பங்களிலிருந்து விடுபடக் கடவுளைச் சரணடைவதுதான் வழி’ என்று
புலம்புவதால் பயன் இல்லை.

இன்றுவரை பலன் விளைந்ததும் இல்லை. [தற்செயலாக நடந்ததையெல்லாம் கடவுளின் அருட்செயல் என்று சாதிக்க வேண்டாம்]

கடவுள் உருவாக்கிய விதி ’உண்மை’ எனக் கொண்டால்..............................

விதிப்படி எல்லாம் நடந்தே தீரவேண்டும்.

கடவுளை வழிபடுவதால் விதியின் பிடியிலிருந்து தப்பலாம் என்றால்..........

கடவுள், விதியை உருவாக்காமலே இருந்திருக்கலாமே?

ஏன் உருவாக்கினார்?

மனிதர்கள் தன்னை வழிபட வேண்டும் என்ற ஆசை காரணமா?

கோயில்கள் கட்டி, விழாக்கள் எடுத்து, காணிக்கைகள் செலுத்த வேண்டும் என்னும் பேராசை காரணமா?

என்னதான் காரணம்? சொல்லுங்களேன்.

கடவுள் பற்றிய மதவாதிகளின் கருத்துகளையும் அவர்களின் செயல்பாடு களையும் ஆராய்ந்தால் ஒன்று நன்றாகப் புரியும். அது?

கடவுள் ஓர் ஓரவஞ்சனையாளர்!

பகுத்தறிவால் இயற்கையின் நடைமுறைகளை வென்று புதிய 
கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அறிவியல் அறிஞர்கள் [விஞ்ஞானிகள்] பலர், மதவாதிகளால் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட நிகழ்வுகள் வரலாற்றில் 
இடம் பெற்றுள்ளன.


அந்தக் கொலைகாரர்களில் யாரையேனும் கடவுள் தண்டித்தது உண்டா?

எனவே, கடவுள் என்று ஒருவர் இருந்தால்........................................

அவர் வஞ்சக நெஞ்சம் கொண்டவர் என்கிறோம்.

உங்கள் பதில் என்ன?

********************************************************************************Sunday, June 19, 2011

கடவுள் பரப்பிவிட்ட புரளி [சிறுகதை]                                      கடவுள் பரப்பிவிட்ட புரளி [சிறுகதை]

                   இந்த மண்ணுலகைச் சுற்றிப் பார்த்துவிட்டு, இறைவனும் இறைவியும் பிரபஞ்சத்தின் மையத்திலிருந்த தங்களின் இருப்பிடத்தை நோக்கிச் சென்று கொண் டிருந்தார்கள்.

“இன்னும் கொஞ்ச வருசத்தில் பூலோகம் அழியப் போறதா மக்கள்
பேசிட்டாங்களே, கேட்டீங்களா?” என்று கேட்டார் இறைவி.

“கேட்டேன்; எல்லாரும் உயிர் இருந்தும் நடைப் பிணமா அலையறதையும்
கவனிச்சேன்” என்றார் இறைவன்.

“இப்படி ஒரு புரளியைக் கிளப்பிவிட்டது யாராயிருக்கும்?” சந்தேகம்
எழுப்பினார் இறைவி.

“வேறு யார்? ஜோதிடர்கள்தான். அவர்களை உசுப்பிவிட்டதே நான்தான்” என்று
சொன்ன இறைவன், விரிந்து பரந்த ‘வெளி’யே அதிரும்படியாக, ஊழிக்
காலத்தில் சிரிப்பது போன்ற அதி பயங்கரச் சிரிப்பு ஒன்றை வெளிப்படுத்தினார்!

அதிர்ச்சிக்குள்ளான இறைவி,”ஏன் அப்படிச் செய்தீங்க?” என்றார்.

“நான் படைச்ச மத்த உயிரினங்கள் எல்லாம் குணம் மாறாம அப்படியே இருக்க,
மனிதன் மட்டும் ரொம்பவே மாறிட்டான். வக்கிற புத்தி அதிகமாயிடிச்சி.
எதிரியை உயிரோட தீயிட்டுக் கொளுத்தி, அவன் துடிதுடிச்சிச் சாகிறதைப் பார்த்துக் குதூகளிக்கிறான். சின்னஞ் சிறுசுகளை முடமாக்கிப் பிச்சை எடுக்க வைக்கி றான். பருவத்துக்கு வராத பச்சைப் புள்ளைகளைக் கற்பழிச்சி, சித்திரவதை செஞ்சி கொல்றான். இன்னும் இவன் செய்யற அட்டூழியங்களுக்கு அளவே இல்லை..................................”

நீர் வழிந்த கண்களைத் துடைத்துக் கொண்ட இறைவன், “இவன் செய்யற அக்கிறமங்களை என்னால் பார்த்துட்டுச் சும்மா இருக்க முடியல. மண்ணுலகத்தையே அழிச்சிடறதா முடிவு பண்ணிட்டேன்.” என்றார்.

“உடனே அழிச்சிட வேண்டியதுதானே. எதுக்காகப் புரளியைக் கிளப்பி விட்டீங்க?”

“எல்லோரும் ஒட்டு மொத்தமா அழியப் போறாங்கன்னு தெரிஞ்ச அப்புறமாவது மனுசன் திருந்துறானா பார்ப்போம்”.

“எனக்கு நம்பிக்கை இல்லீங்க”.

இறைவனின் கரம் பற்றித் தன் பயணத்தைத் தொடர்ந்தார் இறைவி.

*********************************************************************************
Wednesday, June 15, 2011

கடவுளின் அவதாரங்களிடம் ஆறு கேள்விகள்.                            கடவுளின் அவதாரங்களிடம் ஆறு கேள்விகள்.


ஒன்று:
மனிதராகப் பிறந்த அனைவருமே, அன்றாட வாழ்க்கையில், பசி வந்தால்
உண்ணுகிறார்கள்; தாகமெடுத்தால் நீர் அருந்துகிறார்கள்; உறங்குகிறார்கள்; விழிக்கிறார்கள்; காலைக் கடன் கழிக்கிறார்கள்; குளிக்கிறார்கள்.நோய் வந்தால் மருத்துவரிடம் போகிறார்கள்.

நீங்களும் வாய்க்கு ருசியாக உண்ணுகிறீர்கள்; சொகுசுப் படுக்கையில்
உறங்குகிறீர்கள்; விழிக்கிறீர்கள்; மலம் கழிக்கிறீர்கள்; சிறுநீரை வெளியேற்றுகிறீர்கள்; உடம்புக்கு ஒரு கேடு வந்தால் மருத்துவரைத் தேடுகிறீர்கள்.

ஒரு சந்தேகம்......................................................

உடல் அளவில், சாதாரண மனிதரிடமிருந்து கடவுளின் அவதாரமான தாங்கள் எவ்வாறு வேறுபடுகிறீர்கள்?


இரண்டு:
பிரச்சினைகளும் போராட்டங்களும் நிறைந்த இந்த நிலவுலகில், அற்பப்
பிறவிகளான நாங்கள், கோபம், தாபம், சூதுவாது, போட்டி, பொறாமை போன்ற பல கெட்ட உணர்ச்சிகளுக்கும், சில நல்ல உணர்ச்சிகளுக்கும் ஆட்பட்டுத் தவிப்பது மறுக்க முடியாத உண்மை.

கடவுளின் இன்னொரு வடிவமான தாங்கள், மக்களைச் சந்திக்கும்
போதெல்லாம், முகத்தில் புன்னகை தவழ, விழிகளில் அருள் வெள்ளம் பொங்க நிஜக் கடவுளாகவே காட்சி தருகிறீர்கள்.


கடவுள் விருப்பு வெறுப்பு அற்றவர் என்கிறீர்கள். நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள், நீங்கள் உண்மையில் விருப்பு வெறுப்பு அற்றவரா? எதற்கும் ஆசைப் பட்டதில்லையா? எவர் மீதும் கோபப் பட்டதில்லையா?


எதற்காக இந்தக் கடவுள் வேடம்?


காசுக்காகவா? காம சுகத்துக்காகவா?

மூன்று:
காமம் பொல்லாதது!


வயிற்றுப் பசியை வெல்லலாம். [உண்ணா நோன்பிருந்து மரணத்தை தழுவி யவர்களை நினைவு கூர்க]. காமப் பசியை வெல்வது இயலாது; கட்டுப் 
படுத்தத்தான் முடியும்.


மதுவைக் குடித்தால்தான் போதை வரும் . அழகு மங்கையரை நினைத்தாலே
காமம் என்னும் போதை தலைக்கேறும்.


கடவுளின் அவதாரம் என்று சொல்லிக் கொண்டாலும், தாங்களும் ஒரு மனிதர்தான்.

அழகழகான பெண்களைப் பணிவிடை செய்ய ‘வைத்து’க் கொண்டு,நாடி
வரும் இளம் பக்தைகளைத் தொட்டுத் தடவியும் கட்டி அணைத்தும்,புதுப் புதுச்
சுகங்களை அனுபவித்துக் கொண்டு, “நான் துறவறம் காப்பவன்” என்று 
உலகறியச் சொல்லித் திரிகிறீர்களே, உங்களுக்கெல்லாம் மனசாட்சி இல்லையா? வெட்கம், மானம், சூடு, சொரணை என்று எதுவுமே இல்லையா?

உங்களைத் தவிர உலகில் உள்ள அத்தனை பேரையும் ‘அறிவிலிகள்’ என்று நினைக்கிறீர்களா?

நான்கு:
பிரபஞ்சத்தைப் பரிபாலனம் செய்வதற்கு, உயிரினங்களைக் காப்பதற்குக் கடவுள் என்று ஒருவர் இருப்பதாகச் சொல்கிறீர்கள். அவர் எங்கும் இருப்பவர்;
தூசு, தும்பு, அணு, அணுவுக்குள் அணு என்று அனைத்திலும்
ஊடுருவியிருப்பவர்.


அந்தக் கடவுள் இருக்கும் போது இன்னொரு கடவுளாகத் தாங்கள் எதற்கு?


ஐந்து:
தாங்கள் கடவுளின் அவதாரம்.

இந்தப் பிரபஞ்சம் எப்போதிருந்து இருக்கிறதோ அப்போதிருந்து எத்தனை முறை கடவுளின் மறு வடிவமாக அவதரித்திருக்கிறீர்கள்? இனியும்
அவதரிப்பீர்களா? எத்தனை முறை?


ஆறு:
மண்ணில் தோன்றிய அனைத்து உயிர்களும் மண்ணோடு மண்ணாவது,
அல்லது, எரித்தால் சாம்பல் ஆவது நிச்சயம்.

தங்களுக்கும் அதுதான் கதி என்றாலும்..................................................................


கடவுளின் அவதாரமான தாங்கள், ’வாழ்ந்தது போதும், அனுபவித்தது போதும், உயிர்களுக்கு அருள்பாலித்தது போதும்’ என்று நினைக்கிற போது, மண்ணில் கலப்பதையோ, பிடி சாம்பல் ஆவதையோ தவிர்த்து, மக்கள் காணும் வகையில்
இந்தப் பூத உடலோடு விண்ணில் மறைந்து ஓர் அதிசயத்தை நிகழ்த்துவீர்களா?


இன்னும் கேள்விகள் உள்ளன. தங்கள் பதில் கிடைத்த பிறகு கேட்போம்.

அருள் உள்ளம் கொண்டு பதில் தருவீர்களா?

எப்போது?.............................எப்போது?.........................................எப்போது?

**************************************************************************************************************************************************


                                               Tuesday, June 14, 2011

தலை மயிரின் ‘தலை விதி’
                         20] தலை மயிரின் ‘தலை விதி’

 துன்பத்திற்குள்ளாகி, அதைத் தீர்க்கும் வழி அறியாத போதும், துன்பங்களைத் தோற்றுவிக்கும் நிகழ்வுகளுக்கான காரணங்கள் புரியாத போதும் மனிதர்கள், விதியை...தலை விதியைத் துணைக்கு அழைக்கிறார்கள்.

கொஞ்சம் சிந்தித்தாலே, தமக்கு நேரும் பெரும்பாலான துன்பங்களுக்குத் தாமே காரணம் என்பது புரியும். ஆனால், பிறர் மீதோ சமுதாயத்தின் மீதோ குற்றம் சுமத்திவிட்டுத் தம்மை நிரபராதியாகக் காட்டிக் கொள்வதிலேயே
மிகப் பலர் முனைப்புக் காட்டுகிறார்கள்.

நடந்து செல்கிற ஒருவனை, வாகன ஓட்டி இடித்துத் தள்ளுகிறான். நடந்த
விபத்திற்கு நடந்து சென்றவனும் காரணமாக இருக்கலாம். ஆனாலும், அவன் தன் தவறை மறைத்து, வாகன ஓட்டிமீது குற்றம் சாட்டுவதுதான்
நடைமுறையாக உள்ளது.

காரியம் சாதிப்பதற்காக ‘லஞ்சம்’ கொடுக்கிற ஒருவன், குற்றத்தில் தனக்குரிய பங்கை மறைத்து, சமுதாயத்தைச் சாடுகிறான்.

எனினும், எல்லா நேரங்களிலும், இப்படிப் பிறரையும் சமுதாயத்தையும்
குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிட முடியாது.

இடி மின்னலுடன் மழை பொழிகிறது.

தன் இருப்பிடத்திலிருந்து ஒருவன் வெளியே வருகிறான்.  சக்தி வாய்ந்த மின்னல் பளீரிட, அவன் பார்வை பறி போகிறது.

 பேய் மழையின் போது, மிதி வண்டியில் செல்கிற ஒருவன், வேரோடு சாய்ந்த ஒரு மரத்தடியில் சிக்கி உயிரிழக்கிறான்.

இம்மாதிரி அசம்பாவிதங்களின் போது, தனி மனிதரையோ, குழுவினரையோ,
சமுதாயத்தையோ குற்றம் சொல்ல முடிவதில்லை.

[சிறிதும் எதிர்பாராத சம்பவங்களின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய முடியாது .....விழிப்புணர்வுடன் செயல்பட முடியாது.....பகுத்தறிவை முழுமையாகப் பயன்படுத்த முடியாது என்பதால், பாதிக்கப் பட்டவர்கள் மீதும் குறை சொல்ல இயலாது]

இம்மாதிரியான சூழ்நிலையில்தான் ’இல்லாத’ விதியை வம்புக்கிழுத்து, அதை அசம்பாவிதத்தின் ‘காரணக்கர்த்தா’ஆக்கிவிட்டார்கள் யாரோ சில 
புத்திசாலிகள்!

மின்னல் அடிக்கும் போது ஆறறிவுள்ள ஒரு மனிதன் , தன்
இருப்பிடத்திலிருந்து ஏன் வெளியே வரவேண்டும்?

மின்னலால் ஏற்படும் அபாயத்தை அவன் அறியாதவனா?

அறிந்திருந்தும் அவன் தவறிழைத்துத் தன் பார்வையைப் பறி கொடுத்தான் என்றால், அதற்குக் காரணம்.....................................................................................................

’ விதி.....அவன் தலை விதி....அவன் தலை எழுத்து’ என்றார்கள்.

பருவ காலங்களில் மழை பெய்வதும், இடிப்பதும், மின்னுவதும் இயற்கை.

இடம் விட்டு இடம் பெயர்வது மனிதனுக்குள்ள செயல்பாடுகளில் ஒன்று

அது இயற்கையாக நிகழ்வது. இது மனித மூளையால் செயல்படுத்தப்படுவது

மின்னலடித்ததும், ஒருவன் இருப்பிடத்திலிருந்து வெளியே வந்ததும் இரு வேறு நிகழ்ச்சிகள்.

இரண்டும் ஒரே நேரத்தில் நடந்தது. அவ்வளவுதான்.

இவ்விபத்து ஏற்கனவே திட்டமிடப்பட்டது . அதுதான் ‘விதி’ என்று சொல்வது அறிவீனம்.

பிரபஞ்ச வெளியில் உலா வரும் கணக்கிட இயலாத கோடானு கோடி
கோள்களில் மழை பொழிதல் போன்ற இயற்கை நிகழ்வுளையும் உயிர்களின் இயக்கங்களையும் கணக்கிட்டுச் சொல்வது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. உண்மை இவ்வாறு இருக்கையில்.............


ஒரே நேரத்தில் இடம்பெற்ற இருவேறு நிகழ்வுகளால் நேர்ந்த ஒரு விபத்தை,  அதில் பாதிக்கப் பட்டவனின் விதியால்...தலைவிதியால்தான் நேர்ந்தது எனச் 
சொல்வது முட்டாள்தனம்.

அதை நம்புவதும்.............................................................................

நம்பவைப்பதும்..................................................................

சமுதாயத்தைச் சீரழிக்கும் குற்றங்கள்.

மின்னலடித்தபோது ஒருவன் வெளியில் வந்ததோ அல்லது, அவன் வெளியே வந்த அதே கணங்களில் மின்னல் பளிச்சிட்டதோ முழுக்க முழுக்கத்
தற்செயல் நிகழ்ச்சிகள். இங்கே விதி எப்படி நுழைந்தது?

யார் நுழைத்தது?

கடவுளா?

ஒருவன் செய்த பாவங்களுக்குத் தண்டனையாக அவன் பார்வையைப்
பறிப்பதற்குக் கடவுள் மின்னலைத் தோற்றுவித்தாரா?

ஒரு தனி மனிதனைத் தண்டிப்பதற்காக ஒரு மின்னலா?  அல்லது,
மின்னலடிக்கும் போது அவன் வெளியே வந்தது கடவுளின் செயலா?

சரியாக மரம் சாய்கிற நேரத்தில் மிதி வண்டிக்காரனை அங்கே கொண்டு
சேர்த்ததும் அவர்தானா?

பிரபஞ்ச வெளியில் கோள்கள் ஒன்றோடொன்று மோதி வெடித்துச்
சிதறுவது.....எண்ணற்ற கடல் கொந்தளிப்புகளால் அவற்றில் இடம் பெற்ற பொருள்களும் உயிர்களும் தம்முள் மோதிக் கொள்வது....காற்று, நெருப்பு போன்றவற்றின் அசுரத்தனமான செயல்பாடுகளால் பொருள்களும் உயிர்களும் அலைக்கழிக்கப் பட்டுத் தம்முள் இடிபடுவது என்றிப்படி
’வெளி’யில் இடம்பெறும் விபத்துகள் எண்ணில் அடங்காதவை.

இவை எல்லாமே கடவுளின் ஆணையால் நடை பெறுகின்றனவா?

எல்லாம் வெறும் அனுமானங்களே தவிர வேறென்ன?

இது இப்படி நடக்க வேண்டும் என்று விபத்துக்கு உள்ளாகிறவன் தலையில் எழுதி அவனை மண்ணுலகுக்கு அனுப்பி வைக்கிறாரா கடவுள்?

கடவுளால் எழுதப்பட்டதுதான் தலை விதியா? தலை எழுத்தா?


ஒரு மரம் எப்போது எப்படி, எங்கே முளைக்க வேண்டும்? எவ்வளவு 
காலத்துக்கு, எவ்வாறெல்லாம் பராமரிக்கப்பட்டு வளர வேண்டும். எம்முறையில் அழிய வேண்டும் என அந்த மரம் சம்பந்தப்பட்ட விதிமுறைகள் அந்த மரத்திலேயே எழுதி வைக்கப் படுகிறதா?

அத்தனை மரங்களுக்குமா? புல், பூண்டு, தூசு, தும்பு , அணு, அணுப்புள்ளி என்று
எல்லாவற்றுக்குமா?


ஏதேனும் ஒரு விலங்கின் தலையில் உருக்கொண்டு, தோன்றி, வளர்ந்து, உதிர்கின்ற ’மயிருக்கும்’கூட தலை எழுத்து உண்டா?

இவ்வாறாக எழுப்பப் படும் எண்ணற்ற கேள்விகளுக்கு எவரேனும் பதில்
சொன்னதுண்டா?


அனுமானங்களைப் பதில் ஆக்குவதும், அவற்றை ‘உண்மை’ என 
நம்ப வைப்பதும் மன்னிக்க முடியாத குற்றங்கள்.

எதுவும் புரியாத நிலையில், “புரியவில்லை” என்று ஒத்துக் கொள்வது 
பெருந்தன்மை.

ஆறாவது அறிவு எதற்கு?

வாழ்க்கையில்..........................................................................

மனிதனுக்கும் பிற உயிர்களுக்கும், நோய், பகைமை, வறுமை, நிலையாமை
போன்றவற்றால் விளையும் துன்பங்கள் அளவிடற்கரியவை.

அத்துன்பங்களைப் போக்கி, அமைதியாக.....இன்பமாக வாழ்வதற்கான வழி வகைகளைக் கண்டறிய இந்த அறிவு பயன்பட வேண்டும்.

கடவுள், விதி, தலை எழுத்து என்று விதம் விதமான கற்பனைக் கதைகளைச் சொல்லி,  பொய்களைப் பரப்பி இருக்கிற கொஞ்சம் வாழ்நாளை வீணடிப்பதற்கு அல்ல.

இது நம் மக்களுக்கான அறிவுறுத்தல் மட்டுமல்ல; கடவுளின் அவதாரம் என சொல்லித் திரியும் கயவர்களுக்கான எச்சரிக்கையும்கூட!

**********************************************************************************
                                                          எழுதுவோம்.
**********************************************************************************
Thursday, June 9, 2011

'ஏதோ'வும் கடவுளும்!

உயிர்களுக்குப் ‘புலன்கள்’ உள்ளன.

பொருள்களையும் அவற்றின் இயக்கங்களையும் பார்ப்பதற்குக் கண்களும், அவற்றால் உருவாக்கப்படும் ஒலிகளை உள் வாங்குவதற்குச் செவிகளும், சுவைப்பதற்கு நாவும், நுகர்வதற்கு நாசியும், தொட்டு அறிவதற்கு உடம்பும்[மெய்] உதவு கின்றன.

ஐம்புலன்களால் ஈர்த்து அனுப்பப்படும் காட்சி முதலானவற்றை உணர்ந்து அறிவதற்குப் பயன்படுவது மூளை.

மனிதனோ விலங்கோ பறவையோ வேறு எதுவோ ஓர் உயிரினத்தைப் பொறுத் தவரை மூளைதான் எல்லாமே.

உணர்தல், அறிதல், அனுபவித்தல் என உயிரினங்களின் அனைத்துச் செயல் களுக்கும்  மூளையே ஆதாரம்.

மனிதன் தன் ஆறாவது அறிவின் துணை கொண்டு புதியனவற்றைப் படைப் பதற்குப் பயன்படுவதும் இந்த மூளையே.

ஆக, அறிவதற்கும் உணர்வதற்கும் படைப்பதற்கும் மூளை ஓர் இன்றியமையா தேவை ஆகிறது.

அனைத்தையும் அறிந்து வைத்து, படைத்தல், காத்தல், அழித்தல் தொழிலைச் செய்கின்ற தீராத விளையாட்டுப் பிள்ளையான கடவுளுக்கும் இந்த மூளை இருக்கும்தானே?

இம்மாதிரி, அடிப்படைக் கேள்விகளுக்கு விடை தெரியாமல் பொத்தாம் பொதுவாகக் கடவுளை நம்புவது அறிவீனம்.

கடவுளின் மூளை எத்தன்மையது?

உயிர்களின் மூளையைவிட, ஆறாவது அறிவு படைத்த மனிதனின் அபார மூளையைக் காட்டிலும் அவருடைய மூளை மிக மிக மிக.......................................
நுட்பமான, அதி அற்புதமான, அளவிட முடியாத சக்தி படைத்ததாகத்தானே இருக்கும்!

மூளை என்று ஒன்று இல்லாமல்,அதைவிட சக்தி வாய்ந்த நுட்பம் மிகுந்த
'ஏதோ' ஒன்றைப் பயன்படுத்துகிறாரா அவர்?

அந்த 'ஏதோ' எப்படி இருக்கும்?
----------------------------------------------------------------------------------------------------------------------                                                                             
                                                                                 


Monday, June 6, 2011

தலை விதியும் தடுமாறும் மனித அறிவும்


                               தலை விதியும் தடுமாறும் மனித அறிவும்      


கடவுளை நம்பியதால் மனித குலத்துக்கு உண்டான தீமைகளில் 
மூடநம்பிக்கையும் ஒன்று.


மனிதனின் அறிவு வளர்ச்சிக்குத் தடையாக இருந்த பல மூட நம்பிக்கைகளில்
தலையாயது ‘விதி’யை நம்புவது.

விதிக்கப்பட்டது விதி.

ஒட்டு மொத்த பிரபஞ்சத்தின் உள்ளடக்கமான அத்தனை கோள்களும்
உயிர்களும் பிறவும் இப்படித்தான் இயங்க வேண்டும்; அவற்றின் இயக்கங்களால் இன்னின்ன மாறுதல்கள் நிகழ வேண்டும் என கட்டளையிடப்பட்டது.....நிர்ண யிக்கப் பட்டது.....கட்டுப்படுத்தப் பட்டதற்குப் பெயர்தான் விதியா?

விதித்தது யார்?

வேறு யார்?.....கடவுள்தானே?

விதி!

இது ஏன்? எதற்கு?

கடவுள் என்ன நோக்கத்தில்.....எந்த ஆசையில்[?] இந்தப் பிரபஞ்சத்தைப்
[அடிக்கடி இந்தச் சொல் வருகிறதே என சலிப்புற வேண்டாம். வேறு வழியில்லை] படைத்தாரோ அந்த நோக்கம் ......அந்த ஆசை நிறைவேறுவதற்காக ‘விதி’யை உருவாக்கினாரா?

பிரபஞ்சம் விரிவது; சுருங்குவது; கோள்கள் சுழல்வது; உயிர்கள் தோன்றி வாழ்ந்து; அழிவது என ’வெளி’யில் இடம் பெறும் அத்தனை நிகழ்வுகளுக்கும்
இந்த விதியே காரணம் என்கிறார்கள்.

கோள்கள் ஒன்றோடொன்று மோதிக் கொள்வது; உடைந்து சிதறுவது; எரி மலைகள் வெடிப்பது; நிலம் நடுங்குவது; கடல் பொங்குவது........என எல்லாமே
விதிப்படிதான் என்றாகிறது.


ஒட்டு மொத்த பிரபஞ்சத்துக்கும் ஒரே விதியா?இல்லை.........................
கோள்களுக்குத் தனி. பிற உயிர்களுக்குத்தனி. மனிதர்களுக்குத் தனி.  வெட்ட வெளியில் அலையும் ஆவிகளுக்குத் தனி. பேய்களுக்குத் தனி..............................
என்றிப்படி, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி விதியா?

ஒவ்வொன்றுக்குள்ளேயும் உட்பிரிவு விதிகள் உண்டுதானே?

பஞ்ச பூதங்களில் நிலம், நீர், காற்று, நெருப்பு, வெளி என ஒவ்வொன்றுக்கும்
தனித் தனி விதி இருக்கும்தானே?

காற்று என்று கொண்டால்,தென்றல்,வாடை ,சூறாவளி என்று பல வகை உண்டே, ஒவ்வொன்றுக்கும் ஒரு விதியா?

ஒவ்வொன்றும் எத்திசையில், எவ்வளவு வேகத்தில் வீசவேண்டும் என்பதற்குக் கூட விதிகள் இருந்தாக வேண்டும்.

இந்த மண்ணில் மட்டும் எத்தனை கோடி கோடி உயிர்கள்!

அத்தனைக்கும் வேறு வேறு விதிகள் இருந்தாக வேண்டும்.

நாம் நிற்பது; நடப்பது; கை அசைப்பது; கால் நீட்டுவது;  மூச்சு விடுவது; வளைவது; நெளிவது; கண் இமை திறப்பது; மூடுவது; தலைமுடி உதிர்வது...............இப்படி ,அனைத்து இயக்கங்களுமே விதிப்படிதானா?

கடவுளைக் கற்பித்தவர்கள்...விதியை நம்புகிறவர்கள் நம்முடைய இந்தக் கேள்விகளுக்குப் பதில் தருவார்களா?

 வாழ்வில் இடம்பெறும் அத்தனை நல்லது கெட்டதற்கும் இந்த விதியே காரணம் என்கிறார்கள்.

எத்தனை நில நடுக்கங்கள்! எத்தனை எரிமலைக் குமுறல்கள்! எத்தனை எத்தனை சுனாமிகள்! இவற்றால் ஏற்பட்ட உயிர்ப்பலிகளுக்குக் கணக்குண்டா?
அனுபவித்த துன்பங்களுக்கு வரம்புண்டா?


கடவுள் அன்பு வடிவானவர்; பேரருளாளன்; நற்குணங்களின் உறைவிடம். அவரா இப்படியொரு பொல்லாத விதியை உருவாக்கினார்?

யாரிடம் முறையிடுவது?

அறிவு கெட்ட மனிதர்கள் அவரிடமே முறையிடுகிறார்கள்!

இயற்கையின் சீற்றங்களால் பேரழிவுகள் நிகழும்போதெல்லாம் உலகம் முழுதும் திரள் திரளாகக் கூடி நின்று ‘கூட்டுப் பிரார்த்தனை செய்கிறார்கள்!

இவர்களின் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்து, கடவுள் ஒரு முறையாவது கண் திறந்திருக்கிறாரா? கருணை மழை பொழிந்திருக்கிறாரா?

தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

**********************************************************************************
                                           இன்னும் கேட்போம்
**********************************************************************************