ஞாயிறு, 19 ஜூன், 2011

கடவுள் பரப்பிவிட்ட புரளி [சிறுகதை]



                                      கடவுள் பரப்பிவிட்ட புரளி [சிறுகதை]

                   இந்த மண்ணுலகைச் சுற்றிப் பார்த்துவிட்டு, இறைவனும் இறைவியும் பிரபஞ்சத்தின் மையத்திலிருந்த தங்களின் இருப்பிடத்தை நோக்கிச் சென்று கொண் டிருந்தார்கள்.

“இன்னும் கொஞ்ச வருசத்தில் பூலோகம் அழியப் போறதா மக்கள்
பேசிட்டாங்களே, கேட்டீங்களா?” என்று கேட்டார் இறைவி.

“கேட்டேன்; எல்லாரும் உயிர் இருந்தும் நடைப் பிணமா அலையறதையும்
கவனிச்சேன்” என்றார் இறைவன்.

“இப்படி ஒரு புரளியைக் கிளப்பிவிட்டது யாராயிருக்கும்?” சந்தேகம்
எழுப்பினார் இறைவி.

“வேறு யார்? ஜோதிடர்கள்தான். அவர்களை உசுப்பிவிட்டதே நான்தான்” என்று
சொன்ன இறைவன், விரிந்து பரந்த ‘வெளி’யே அதிரும்படியாக, ஊழிக்
காலத்தில் சிரிப்பது போன்ற அதி பயங்கரச் சிரிப்பு ஒன்றை வெளிப்படுத்தினார்!

அதிர்ச்சிக்குள்ளான இறைவி,”ஏன் அப்படிச் செய்தீங்க?” என்றார்.

“நான் படைச்ச மத்த உயிரினங்கள் எல்லாம் குணம் மாறாம அப்படியே இருக்க,
மனிதன் மட்டும் ரொம்பவே மாறிட்டான். வக்கிற புத்தி அதிகமாயிடிச்சி.
எதிரியை உயிரோட தீயிட்டுக் கொளுத்தி, அவன் துடிதுடிச்சிச் சாகிறதைப் பார்த்துக் குதூகளிக்கிறான். சின்னஞ் சிறுசுகளை முடமாக்கிப் பிச்சை எடுக்க வைக்கி றான். பருவத்துக்கு வராத பச்சைப் புள்ளைகளைக் கற்பழிச்சி, சித்திரவதை செஞ்சி கொல்றான். இன்னும் இவன் செய்யற அட்டூழியங்களுக்கு அளவே இல்லை..................................”

நீர் வழிந்த கண்களைத் துடைத்துக் கொண்ட இறைவன், “இவன் செய்யற அக்கிறமங்களை என்னால் பார்த்துட்டுச் சும்மா இருக்க முடியல. மண்ணுலகத்தையே அழிச்சிடறதா முடிவு பண்ணிட்டேன்.” என்றார்.

“உடனே அழிச்சிட வேண்டியதுதானே. எதுக்காகப் புரளியைக் கிளப்பி விட்டீங்க?”

“எல்லோரும் ஒட்டு மொத்தமா அழியப் போறாங்கன்னு தெரிஞ்ச அப்புறமாவது மனுசன் திருந்துறானா பார்ப்போம்”.

“எனக்கு நம்பிக்கை இல்லீங்க”.

இறைவனின் கரம் பற்றித் தன் பயணத்தைத் தொடர்ந்தார் இறைவி.

*********************************************************************************




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக