எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 8 மே, 2018

'மெரினா'வில் பூமி பூஜை! 'கரடி'விடும் 'காலைக்கதிர்' நாளிதழ்!!

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கான 'பூமி பூஜை'யை, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குருக்கள் வெங்கடசுப்பிரமணியன் செய்ததாக, அதுவும் ஒரு நிகழ்வு என்ற முறையில் நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காலைக்கதிர் நாளிதழ் மட்டும், பிரபலமான ஒரு கோயிலின் குருக்கள், ஜெயாவின் சடலம் புதைக்கப்பட்டிருக்கும் சமாதியில் பூமி பூஜை செய்யலாமா[புதுமனை புகுவிழாவிலும் திருமண விழாவிலும் செய்யலாமாம்] என்று கேட்டுப் பிரச்சினையைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

கோவில் நிர்வாகிகள் சொன்னதாக அது முன்வைக்கும் காரணம்.....

சிவபெருமானுக்குப் பூஜை செய்யும் தகுதி பெற்ற குருக்கள், மேற்குறிப்பிட்ட பூமி பூஜையைச் செய்திருக்கக் கூடாதாம். 'கூடாது' என்பது மரபுதானாம்; 'விதிமுறை' என்று எதுவும் கிடையாதாம்.

மரபு என்று  மழுப்பாமல், இது ஆகம விதி என்று காலைக்கதிர் அடித்துவிட்டிருந்தாலும் யாரும் கேட்கப்போவதில்லை.

அது ஆகமவிதியோ விதிமுறையோ மரபோ எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும், பூஜை செய்வது குருக்களின் தொழில். 

பூஜை செய்வதால் பயன் விளைகிறதோ இல்லையோ, அதன்[பூஜை செய்வது] நோக்கம் என்ன?

மேற்கொண்ட காரியம் இடையூறு ஏதுமின்றித் திட்டமிட்டபடி நிறைவு பெறுதல்  வேண்டும் என்பதுதானே?

'நோக்கம்' இதுதான் என்னும்போது கோயிலோ, மணம் நிகழ் இடமோ, சமாதியோ எங்கு செய்தாலும் பூஜை பூஜைதான். குருக்களைக் குறை சொல்வதற்கான முகாந்தரம் ஏதும் இல்லை.

காலைக்கதிர் மட்டும் ஏன் பிரச்சினையைக் கிளப்புகிறது?

''எனக்குப் பூஜை செய்கிற நீ, காத்து, கருப்பு,  பேய், பிசாசு போன்ற தீய சக்திகள் குடியிருக்கும் சமாதிக்கு ஏன் பூஜை செய்தாய்?'' என்று கேட்டுக் கடவுள் கோபித்துக்கொள்வாரா? அல்லது..... 

அந்தத் தீய சக்திகளால் குருக்களுக்குத் தீங்கு விளையக்கூடும் என்று காலைக்கதிர் கவலைப்படுகிறதா?

பரபரப்பூட்டும் செய்திகளை வெளியிட்டுப் பத்திரிகையின் விற்பனையைக் கூட்டுவதையே தொழிலாகக் கொண்ட காலைக்கதிர் இனியேனும், செய்திகளைத் தேர்வு செய்யும்போது அவற்றின் உண்மைத்தன்மை பற்றிக் கொஞ்சமே கொஞ்சமேனும் சிந்திக்க வேண்டும் என்பது நம் அறிவுறுத்தல் ஆகும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------