எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

சனி, 11 ஆகஸ்ட், 2018

இறந்தவர் வீட்டில் இசைத்தட்டு நடனம்!!

ஒருவர் இறந்துவிட்டால், அவர் மிகவும் விரும்பிப் பயன்படுத்திய பொருள்களையும் அவரோடு சேர்த்து அடக்கம் செய்வது இன்றளவும் வழக்கத்தில் உள்ள ஒன்று. கைத்தடி, கண்ணாடி, மதுபாட்டில், சிகரெட் பாக்கெட் என்றிப்படிப் பட்டியல் நீளும்.

இவையெல்லாம் மூடநம்பிக்கையின் பாற்பட்டவை எனினும், இவற்றால் விளையும் தீங்குகள் மிகவும் குறைவு என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆனால், 'தைவான்' நாட்டின் கிராம மக்களிடமுள்ள சில மூடநம்பிக்கைகள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன.

வயதான ஆடவர் ஒருவர் இறந்துவிட்டால்.....

சம்பவம் நிகழ்ந்த வீட்டின் முன்னால் ஒரு வேன் நிறுத்தப்படும். அதன் மீது மேடை அமைக்கப்பட்டு, வண்ண விளக்குகளால் அது அலங்கரிக்கப்படும். மேடையில் அழகான இளம் பெண்கள் தோன்றி, பாட்டுப்பாடி நடனம் ஆடுவார்கள்.
நேரம் செல்லச் செல்ல இசைக்கருவிகளின் முழக்கம் அதிகரிக்கும். பெண்கள், இசைக்கப்படும் பாடலுக்கேற்பக் குழைந்து குலுங்கி ஆடிக்கொண்டே தாங்கள் உடுத்திருக்கும் ஆடைகளை ஒவ்வொன்றாகக் கழற்றி வீசுவார்கள். விடியும்வரை இந்த ஆபாசக்கூத்து தொடர்ந்து நடக்கும்.

இது நம் கிராமப்புறக் கோயில் விழாக்களில் அரங்கேறும் இசைத்தட்டு நடனம் போன்றதுதான்.

இம்மாதிரித் 'துகிலுரி' நடனங்களுக்கு தைவான் அரசு தடை விதித்திருக்கிறதாம். இருந்தும் நடைமுறையில் இவற்றைத் தடுத்து நிறுத்துவது சாத்தியப்படவில்லையாம்.

''ஆடவர்களில் பெரும்பாலோர் இம்மாதிரி ஆட்டம்பாட்டங்களைக் கண்டுகளிப்பதில் ஆர்வம் உடையவர்களாகவே இருக்கிறார்கள். இறந்த பிறகு அவர்களின் ஆன்மாவை இந்நடனங்கள் திருப்திபடுத்துகின்றன'' என்பது இந்த நடன நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்வோரின் வாதம் என்கிறார்கள்.

ஆன்மாவின் பெயரால் நடத்தப்படும் கூத்துகளில் இதுவும் ஒன்று. தைவான் மக்கள் நம்மைப்போலவே மகா புத்திசாலிகள்!
------------------------------------------------------------------------------------------------------------------
பழைய வார இதழ் ஒன்றில் வாசித்தறிந்த தகவல் இது.