எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 10 ஜனவரி, 2024

அடேங்கப்பா!..... கோயில் மணிக்கு ரூ25 லட்சம்! கதவுகளுக்கு 100 கிலோ தங்கம்!!

அயோத்தி ராமர் கோயில்: ரூ.25 லட்சத்தில் மணி; 100 கிலோ தங்கத்தில் 42 கதவுகள்![https://www.vikatan.com/spiritual/temples/42-golden-doors-are-to-be-installed-in-the-ram-temple-in-ayodhya]

ராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ.900 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வங்கி இருப்பு ரூ.3 ஆயிரம் கோடியாக உள்ளது என ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைச் செயலாளர் சம்பத்ராய் தெரிவித்தார்[https://m.dinamalar.com/detail.php?id=3452223].

“ஒரு கற்பனைக் கதையின்[ராமாயணம்] கதாநாயகனுக்குக் கோயில் கட்ட கோடி கோடி ரூபாய் செலவா?” என்று மனம் கொந்தளித்து கூக்குரல் எழுப்பவில்லை நாம்.

இந்தியா ‘வளரும் நாடுகள்’ பட்டியலில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த மிக மிக மிகப் பெரும் தொகையை, இந்த நாட்டை ‘வளர்ந்த நாடுகள்’ பட்டியலில் சேர்க்கச் செலவழிக்கலாமே என்று அறிவுரை வழங்கவில்லை; அதற்கான தகுதியும் நமக்கு இல்லை.

ஆனாலும்,

இது தொடர்பாகக் கேள்வி எழுப்பும் தகுதியும் உரிமையும் நமக்கு உண்டு என்பது நம் அசைக்க இயலாத நம்பிக்கை.

கேள்விகள்.....

கோடி கோடி என்ன, மில்லியன் கணக்கிலோ பில்லியன் கணக்கிலோ ரூபாய் செலவு செய்தேனும் ராமபிரானுக்குக் கட்டப்படும் ஆடம்பரக் கோயிலை மெய் மறந்து, நேரமும் காலமும் மறந்து கண்டு கண்டு கண்டு ரசிக்கலாம்.

உலகம் வியக்கும் இந்த அதி ஆடம்பரக் கோயிலின் கட்டுமானத்தை எண்ணி எண்ணிப் பெருமிதத்தில் மிதக்கலாம்.

இவற்றாலெல்லாம்.....

பக்தி வளருமா? மக்களின் வாழ்க்கைத்தரம் உயருமா?!

பத்திரிகை நடத்தும் ‘படித்த’ முட்டாள்கள்!!!

'திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே இருக்கும் பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் திருவள்ளுவர் அவென்யூவில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் உள்ள பழைமையான வேப்ப மரத்திலிருந்து பால் வடிகிறது.

2 நாட்களாக வடிந்துகொண்டே இருதுக்கிறதாம்.

இப்பகுதியைச் சேர்ந்த பெண்களும் ஆண்களும் அந்த வேப்ப மரத்தைச் சுற்றிலும் மஞ்சள் போன்றவற்றைத் தெளித்து, மரம் முழுவதும் சந்தனத்தைப் பூசி, குங்குமமும் வைத்து, ஊதுபத்தி, கற்பூரம் எல்லாம் ஏற்றி அதீதப் பக்தியுடன் வழிபடுகிறார்கள்.'

இது செய்தி.

செய்தி வெளியான இதழ் ‘தமிழ்[ச்] சமயம்’[https://tamil.samayam.com/].
மக்களில் பலர் பால் வடியும் மரத்தைச் சாமியாக்கிக் கும்பிடுகிறார்கள் என்றால், அப்படிக் கும்பிடுபவர்கள் படிக்காதவர்களாகவோ, படித்த முட்டாள்களாகவோ இருப்பதுதான் காரணம்.

இதற்கான அறிவியல் விளக்கம், ‘வேப்பமரத்திற்கு அருகில் நீர்ப்பகுதி அதிகம் இருப்பின், மரத்திலுள்ள தண்ணீரின் அளவு அதிகமாகி வேப்பமரப் பட்டையின் அடியிலுள்ள திசு(புளோயம்) பாதிக்கப்படும்.  அவ்வாறு பாதிக்கப்படும்போது, மரத்திலுள்ள மாவுச்சத்து பட்டை வழியே(அதைப் பிளந்துகொண்டு) பால் போல வடியும்’என்பதுதான்.

பத்திரிகை அலுவலகங்களில் பணி செய்யும் அனைவருமே[நிருபர்கள், துணையாசிரியர்கள், ஆசிரியர்] மெத்தப் படித்தவர்கள்தான்; ஓரளவுக்கேனும் அறிவியல் அறிவு வாய்க்கப்பெற்றவர்கள்தான்.

மேற்கண்டதும், இவர்கள் அறிந்திருக்க வேண்டிய சாதாரணத் தகவல்தான். ‘தமிழ்ச் சமயம்’ பத்திரிகைக்காரர்களுக்கு[இது விசயத்தில் எல்லாப் பத்திரிகைகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்]த் தெரியாமலிருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துவதாக உள்ளது.

“வெறுமனே செய்தியை மட்டும் வெளியிடாமல்[இது, அவ்வப்போது வெளியாகிற செய்தி], மரத்தில் பால் வடிவதற்கான காரணத்தையும் செய்தியுடன் சேர்க்கலாம். ஏன் செய்வதில்லை?” என்று வினவினால்.....

“நாங்களும் படித்த முட்டாள்களே” என்பதுதான் இவர்களின் பதிலாக இருக்குமோ?
*   *   *   * *