எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 17 நவம்பர், 2025

ஐயப்பனைப் போற்றி, சாத்தானைப் புறக்கணிக்கும் அப்பாவிப் பக்தர்கள்!!!

//கேரளாவில் மூளையைப் பாதிக்கும் அமீபா தொற்று பரவி வருவதால், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் நீர்நிலைகளில் குளிக்கும்போது மூக்குக்குள் நீர் செல்லாமல் பாதுகாத்துக்கொள்ளுதல் வேண்டும் என கேரளச் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது// -https://tamil.news18.com/photogallery/spiritual/warning-to-sabarimala-devotees-about-amoeba-infection-risk-nw-asg-ws-l-1971548.html

41 நாட்கள் விரதம் இருந்து, முடி திருத்துதல் சவரம் செய்தல் போன்றவற்றத் துறந்து, காலையிலும் மாலையிலும் குளிர்ந்த நீரில் குளித்து, காரம், புளிப்பு போன்றவற்றைக் குறைத்து குறைவான உணவுண்டு, சொகுசுப் பஞ்சணையைப் புறக்கணித்து பாயில் படுத்துறங்கி, பிறர் மீது ஒட்டாமலும் உரசாமலும் ஒதுங்கியிருந்து, காலணி குடை போன்ற பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துத் துளசி, பால், பழங்கள் போன்றவற்றை வைத்து, 108 முறை சரணம்[“சாமியே சரணம் ஐயப்பா”] சொல்லி ஐயப்பக் கடவுளை வழிபடுகிறார்கள் அவருடைய பக்தர்கள்.

இதன் மூலம் அவரிடம் வைக்கும் கோரிக்கைகளை அவர் நிறைவேற்றுவதோடு, நோய்நொடிகளிலிருந்து தங்களை அவர் காப்பாற்றுவதாகப் பக்தர்கள் நம்புகிறார்கள்.

கடந்தக் காலங்களில் எப்படியோ, அண்மைக் காலங்களில், கேரள அரசு எச்சரிக்கும் அளவுக்கு, அதி முக்கிய உறுப்பான மூளையை செயலிழக்கச் செய்கிறது ‘அமீபா’ தொற்று என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்குப் பக்தர்கள் பலர் பலியாகியிருக்கிறார்கள்.

இந்தக் கொடிய அமீபாவின் தாக்குதலைச் சர்வ வல்லமை படைத்த ஐயப்பனால் தடுக்க இயலாமல்போனது ஏன் என்று எழும் கேள்வி தவிர்க்க இயலாதது.

காரணம் என்று நாம் கருதுவது, ஐயப்பனைவிடவும் அதீத ஆற்றல் வாய்க்கப்பெற்ற சாத்தானின் படைப்பான அமீபா கிருமியை ஐயப்பனால் அழிக்க இயலாது[உயிர்கள் அனுபவிக்கும் இன்பங்களைவிடவும் துன்பங்களே அதிகம். அவற்றை வழங்கி உயிர்களைத் துன்புறுத்துபவர் சாத்தான்; கருணைக் கடவுள் அதைச் செய்யமாட்டார் என்பதைக் கருத்தில் கொள்க] என்பதே.

ஆகவே,  சபரிமலை செல்லுகையில் ஐயப்பனை வழிபடும்போதே, ஐயப்பனைவிடவும் அதிக அளவில் சக்தி[அழிக்கும் சக்தி] வாய்ந்த சாத்தானை வழிபட்டுப் புனிதப் பயணம் மேற்கொள்வது தவிர்க்கவே கூடாதது என்பதை ஐயப்பப் பக்தர்கள் அறிந்து செயல்படுவார்களாக!

சாமியே சரணம் ஐயப்பா!

                                         *   *   *   *   *

***ஐயப்பப் பக்தர்களுக்கான இந்தப் பரிந்துரை, பிற கடவுள் பக்தர்களுக்கும் பொருந்தும்.