எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 4 மார்ச், 2026

காலாவதியான காங்கிரஸ்! கைகோர்க்க வேண்டாம் ஸ்டாலின்!!

மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் வழங்காமல் இருப்பவற்றையும் பறிப்பதோடு, ‘திணித்தல்’ அடாவடித்தனங்களையும் செய்கிறது மோடி தலைமையிலான ‘பாஜக’ ஒன்றிய அரசு. எதிர்பாராத வகையில் மோடி வீழ்ச்சி கண்டு, அல்லது இப்போதைய ஆட்சிக் காலம் முடிந்து, ராகுல் தலைமையிலான காங்கிரஸ் இந்திய ஒன்றியத்தை ஆள நேரிட்டாலும்[இந்தித் திணிப்பு காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே நிகழ்ந்ததுதான் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது] சர்வாதிகாரப் போக்கு தொடரும் என்பதில் கொஞ்சமும் சந்தேகத்திற்கு இடமில்லை[‘தி.மு.க. & காங்கிரஸ் கூட்டணி’ இழுபறிக்கு ராகுல் காந்தியே காரணம்]. 

இனி, அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒருங்கிணைந்து, திட்டமிட்டு, கட்டுக்கோப்புடன் செயல்பட்டு, அவை ஆதிக்கம் செலுத்துவதைத் தடுத்தால் மட்டுமே ‘இந்தி’யரல்லாத பிற மொழியினரையும், அவர்களின் மொழிகளையும் பாதுகாப்பது சாத்தியம் ஆகும்.

பாதுகாப்பதோடு, ‘மத்தியில் கூட்டாட்சி’[விரிவாக ஆராய்ந்து உரிய நெறிமுறைகளை வகுப்பது அவசியம்] என்னும் அறிஞர் அண்ணா வலியுறுத்திய கொள்கையை நடைமுறைப்படுத்த இயலும்.

எனவே, வலுவிழந்து சிதைந்து கிடக்கிற காங்கிரஸின் வளர்ச்சிக்குத் ‘திமுக’ ஒருபோதும் துணைபோதல் கூடாது.

தமிழ்நாட்டில் 1% வாக்குகள் பெறுவதற்கான தகுதிகூட இல்லாத இந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பதைத் ‘திமுக’ கைவிடுதல் வேண்டும்; மறுபரிசீலனை கூடாது; கூடவே கூடாது. இதற்கு ஒதுக்கும் தொகுதிகளில் ‘திமுக’வே போட்டியிட்டால் கூடுதல் சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிடும் என்பது உறுதி.

ஆகவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நாம் பரிந்துரைப்பது.....

“காங்கிரஸைக் கழற்றிவிடுங்கள்; அதனுடன் எக்காரணத்தை முன்னிட்டும் கைகோர்க்க வேண்டாம்.”