புதன், 30 ஜூன், 2021

'நாடி ஜோதிடம்' கேடிகளின் புகலிடமா?

18 வகையான ஜோதிடங்கள் இருந்ததாகச் சொல்வார்கள். அவற்றில், ஜாதக ஜோதிடம், ஆருட ஜோதிடம், எண் கணிதம், கைரேகை ஜோதிடம், மனையடி ஜோதிடம், நாடி ஜோதிடம் ஆகியவையே நடைமுறையில் அதிகம் உள்ளன. 

இவற்றில், நாடி ஜோதிடத்தின் பெயரில்தான் மிகப் பெரிய மோசடிகள் நாளும் அரங்கேற்றப்படுகின்றன. 

இந்த நாடி ஜோதிடத்தின் மூலம் பிரபலமானது சீர்காழிக்கு அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோவில் எனும் ஊர். தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் நாடி ஜோதிடம் பார்க்க வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வருகிறார்கள். 

"ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஏற்ற பலன்களை அந்தந்த ஓலைச் சுவடிகளின் மூலம் கூறுகிறோம். இந்த ஓலைச் சுவடிகளைத் தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மகாலில் இருந்து ஏலத்தில் பெறுகிறோம். இந்த ஓலைச் சுவடிகள் 1000 ஆண்டுகள் பழைமையானவை" என்கிறார்கள் இங்கே நாடி ஜோதிடம் பார்ப்பவர்கள்[இவர்கள் சொல்பவை அத்தனையும் பொய்; மக்கிப்போன பழைய சுவடிகளை அடுக்கி வைத்துக்கொண்டு மக்களை நம்ப வைக்கிறார்கள்].

பிரபலமான வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான சு.சோமசுந்தரம், "தஞ்சாவூர் சரஸ்வதி மகாலில் சற்றொப்ப 49,000 ஓலைச் சுவடிகள் உள்ளன. இதில் மருத்துவம், இசை, நாட்டியம் எனப் பல்வேறு துறைகள் தொடர்பான செய்திகள் உள்ளன. தெலுங்கு, வடமொழி, மராத்தி போன்ற மொழிகளிலும் ஓலைச் சுவடிகள் உள்ளன. இந்த ஓலைச் சுவடிகள் 2 அடி நீளத்திலும், 2 அங்குல நீளத்திலும் கூட உள்ளன. இவற்றிலுள்ள எழுத்துகள் எல்லாம் பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தவை. இவை எழுதப்பட்டது வட்டெழுத்துகளில். இந்த எழுத்துகளை இப்பொழுது யாரும் படிக்க முடியாது" என்கிறார் .

ஆனால், இந்த ஜோதிடர்களோ,  ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் இந்த ஓலைச் சுவடியில் பலன்கள் உண்டு எனப் பொய் சொல்லுகிறார்கள்.

உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கு ஒரே மாதிரியான கைரேகை இல்லை என்கிறது விஞ்ஞானம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி.

ஆனால் இவர்களோ, 40, 50 ஓலைச் சுவடிகளை வைத்துக்கொண்டு ஆயிரக்கணக்கான மக்களுக்கு, அவர்களின் கைரேகைகளைக் கொண்டு சுவடிகளைத் தேடி எடுத்துப் பலன் சொல்வதாகச் சொல்லி அவர்களிடம் பணம் பறிக்கிறார்கள்.

ஒருவருக்கு ஒரு ஓலைச் சுவடியை ஒரு தடவைப் பார்த்தவுடன் அதைக் காவிரி அல்லது வேறு புனித நீரில் கலந்துவிட வேண்டுமாம். அதாவது ஒரு ஓலை ஒருவருக்குத்தான் பயன்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் நடைமுறையில் இலட்சக்கணக்கான மக்களுக்குப் பார்க்கிறார்களே அது எப்படிச் சாத்தியமாகிறது?

ஓலைச் சுவடியை வெறுமனே கையில் வைத்துக் கொண்டு, ஜாதகத்தைப் பொதுவாகச் சொல்கிறார்கள். இவர்கள் ஓலைச் சுவடியை யாரிடமும் கொடுப்பதுமில்லை, காட்டுவதுமில்லை.

வைத்தீஸ்வரன் கோவிலில் மட்டும் 50 இடங்களுக்கு மேல் நாடி ஜோதிட நிலையங்கள்  உள்ளன. இந்த ஜோதிடர்களுக்கென்று முகவர்கள் உள்ளனர். எதிர்காலத்தைத் தெரிந்து சாதிக்க போகும்(?) மனிதர்களை இந்த முகவர்கள்தான் அழைத்துக்கொண்டு வருவார்கள்; அதற்கான வரும்படியையும் பெற்றுக்கொள்வார்கள்.

ஜோதிடர்களைத் தேடிச் செல்லும் மக்களுக்குத் தங்கும் வசதியும் (லாட்ஜ்) செய்து தரப்படும். தங்கும் விடுதியில் பெயர், முகவரி, விவரங்கள் சேகரிக்கப்படும். அவ்விவரங்கள் அடுத்த நாள் ஜோதிடருக்குச் சென்றுவிடும். இதில் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கும் ஒரு பங்குண்டு.

சரஸ்வதி மகாலில் இருந்து ஓலைச் சுவடிகளை ஏலத்தில் பெறுவதாக இவர்கள் சொல்வதும் சுத்தப் பித்தலாட்டம். அப்படியொரு ஏலம் சரஸ்வதி மகாலில் என்றும் நடைபெற்றதே இல்லை.

ஆஸ்திரேலியாவிலிருந்து ரோனி என்றொரு அம்மையார் வைத்தீஸ்வரன் கோவில் வந்துள்ளார். அவர் ஓலைச் சுவடியை வைத்து ஜோதிடம் பார்த்துள்ளார். இந்நிலையில் அந்த அம்மையார் எப்படியோ ஒரு ஓலைச் சுவடியைப் பெற்று, நேராக சரஸ்வதி மகால் சென்றுள்ளார். அங்கு இந்த ஓலையைக் காட்டி விவரத்தைக் கேட்டபோது, அவ்வளவும் மோசடி என்பது தெரிந்திருக்கிறது.

"ஓலைச் சுவடியைப் படித்துப் பலன் சொல்வதாகக் கூறுவது ஏமாற்று வேலை. அது மட்டுமின்றி ஓலைச் சுவடிகளில் ஜோதிடம் தொடர்பான எந்த விசயமும் இல்லை. பனை ஓலையில் தேயிலைச் சாற்றை ஏற்றி, இவர்களாகவே சுவடி தயாரிக்கிறார்கள். இதில் கீறல் இருக்குமே தவிர எழுத்துகள் இருக்காது. இந்த ஜோதிடர்கள் சரஸ்வதி மகால் பெயரைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்" என்று அந்த அம்மையார் கூறியுள்ளார்.

உலகத் தமிழாராய்ச்சி மையத்தின் பேராசிரியரான மஹாலட்சுமி, "ஜோதிடவியல் எனும் ஆராய்ச்சி நூலை 1996இல் நான் வெளியிட்டுள்ளேன். அதில் ஜோதிடத்தின் தோற்றம், வளர்ச்சி வகைகள், மேல் நாட்டிற்கும், இங்குமுள்ள வேறுபாடு என்று அனைத்தையும் குறிப்பிட்டுள்ளேன். அதேபோல, ஓலைச்சுவடிகளில் நாடி ஜோதிடம் என்கிற மோசடியையும் அம்பலப்படுத்தியுள்ளேன்" என்கிறார்.

மாந்திரீகம் என்னும் பெயரில் மக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பவர்களுக்கும், இல்லாத சுவடிகளின் பெயரால், அறியாமையில் உழலும் மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் இந்தக் கும்பலுக்கும் வேறுபாடு சிறிதுமில்லை.

நம் அரசு கண்டும் காணாமலும் இருப்பது நம்மை வியக்க வைக்கிறது; வேதனைக்கு உள்ளாக்குகிறது.

ஓலைச்சுவடி குறித்த ஆய்வில் நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள நாடி ஜோதிட ஓலைச் சுவடிகள் முழுவதையும் கைப்பற்றி, இவர்கள் செய்துவரும் மோசடிகளை மக்களுக்கு அறிவிப்பதோடு, அனைத்து நாடி ஜோதிட நிலையங்களுக்கும் அரசு தடை விதிக்க வேண்டும்.

செய்யுமா தமிழ்நாடு அரசு? 

==========================================================================================================

ஆதாரம்:   http://www.unmaionline.com/     

திங்கள், 28 ஜூன், 2021

'டெல்டா பிளஸ்', வைரஸ்களின் 'தாதா'... உ.சு.அ.['WHO'] கடும் எச்சரிக்கை!!!

*'மக்களிடையே இதுவரை பரவிய கொரோனா வைரஸ் வகைகளில் 'டெல்டா' வகை உருமாறிய கொரோனாதான் அதிக வேகமும் ஆபத்தும் கொண்டது என உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.'

*'ஏனையத் தொற்றுகளைவிடவும் மோசமான இந்தத் தொற்றால். தடுப்பூசி போடாதவர்களுக்கு ஆபத்து அதிகம்! என்பதாகவும் அது எச்சரித்துள்ளது.' 

*கொரோனா வைரஸ், பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்துள்ளது; இங்கிலாந்து, பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உருமாற்றம் அடைந்து இருக்கிறது. இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசுக்கு 'டெல்டா' என்று பெயரிடப்பட்டுள்ளது.' 

*இந்தியாவில் உருமாறிய 'டெல்டா' கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து 'டெல்டா பிளஸ்' வைரஸாக உருவெடுத்தது. இந்த டெல்டா வகை வைரஸ் 85 நாடுகளில் பரவி உள்ளது.'

*'உலக அளவில் சீனா, போலந்து, ஸ்விட்சர்லாந்து, ரஷ்யா, பிரிட்டன், போர்ச்சுகல், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் டெல்டா ப்ளஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.'

*'இந்தியாவில் இதுவரை சுமார் 40 பேருக்கு[இந்த எண்ணிக்கை இப்போது அதிகரித்திருக்கக்கூடும்] இந்தப் பிரச்னை கண்டறியப்பட்டுள்ளது. கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பாதிப்பு உள்ளது. கேரளாவில் 4 வயதுச் சிறுவன் உட்பட சில பேருக்குப் பாதிப்புக் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பாதிப்பு உறுதியாகியுள்ளது.' 

ஆக, தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களை 'டெல்டா பிளஸ்' கடுமையாப் பாதிக்கும் என்பது அறியத்தக்கதாகும். 

====================================================================================

***மேற்கண்ட கொரோனா தொடர்பான அண்மைச் செய்திகளை நீங்கள் அறிந்தே இருப்பீர்கள். எனினும், 'நினைவூட்டல்' பொருட்டு இங்குத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

ஞாயிறு, 27 ஜூன், 2021

எஸ்.ஆர்.சேகர்['பாஜக' பொருளாளர்] 'விஸ்கி' சேகர் ஆகிறார்!!!

மேதகு பாஜக பிரமுகர் எஸ்.ஆர். சேகர் அவர்கள், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களுக்கு எதற்காக ஒரு பெட்டி 'விஸ்கி' அனுப்பியிருக்கிறார் என்பது, இது தொடர்பான நேற்றையச் செய்தியை அறிந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்[https://www.toptamilnews.com/278228a-box-of-whiskey-is-sent-to-sehgar-babu-for-this-research/].
"ஊரடங்குத் தளர்வுகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டும் ஏன் கோயில்களை மட்டும் திறக்கவில்லை?" என்றெழுப்பப்பட்ட கேள்விக்கு, "டாஸ்மாக் கடைகள் பொது வெளியில் இருப்பதால் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, கூட்டத்தைக் கட்டுப்படுத்தகூடும். ஆனால், கோயில்களைத் திறந்தால் பொதுமக்களைக் கட்டுப்படுத்துவது சுலபம் இல்லை’’ என்று பதில் அளித்தாராம்  இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.

சிறந்ததொரு ஆராய்ச்சியின் மூலம் அமைச்சர் இப்படியொரு கண்டுபிடிப்பை நிகழ்த்தியதாகக் கருதி, அதைப் பாராட்டும் வகையில் ஒரு பெட்டி 'விஸ்கி' அனுப்பப்படுவதாக அறிவித்துள்ளார் தமிழ்நாடு  'பாஜக' பொருளாளர் S.R.SEKHAR.

உலக அளவில், வகை வகையான எத்தனையோ ஆராய்ச்சிகளுக்கு, விருதுகளும், பட்டங்களும், பண முடிப்புகளும் பரிசுகளாக வழங்கப்பட்டுள்ளன. ஆனால், எந்தவொரு ஆய்வுக்கும் 'விஸ்கி' பரிசாக அளிக்கப்பட்டதில்லை.

அரியதொரு சாதனையாக, பாஜக பொருளாளர் அறநிலையத்துறை அமைச்சருக்கு இதைப் பரிசாக வழங்கியுள்ள செயல் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

இவருடைய பெருந்தன்மையைப் போற்றிப் பாராட்டுவதற்கு, பெரிய பல பெட்டிகள் நிறைய 'விஸ்கி' வாங்கி அவருக்கு அனுப்பிடவே என்னுள்ளம் அவாவுகிறது. ஆனால்,  அதற்கான பொருளாதார வசதி இல்லாததால், இப்போதைக்கு, 'முதுபெரும் பதிவர்' என்னும் தகுதியுடன், 'விஸ்கி' என்னும் அடைமொழியை அவருக்குப் பரிசாக வழங்குகிறேன்.

இனி, பாஜக தொண்டர்கள் மட்டுமல்லாமல், தமிழகமும், ஏன்... ஒட்டுமொத்த இந்த உலகமும் அவரை 'விஸ்கி' சேகர் என்று அழைக்கக் கடவதாக.

வாழ்க 'விஸ்கி' சேகர்'! வளர்க அவர்தம் புகழ்!!


====================================================================================

.

சனி, 26 ஜூன், 2021

'காக்கை-நரி'க் கதை... புதுசோ புதுசு!!!

'காக்கை - நரி'க் கதை மிகப் பழையது. கால மாறுதலுக்கேற்ப 'முடிவு' மாற்றியமைக்கப்பட்ட கதைகளும் உள்ளன. இது புதியது; இன்றையச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டது. உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!

                                                    *  *   *

பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்தாள்.

எச்சில் துப்புவதற்குப் பக்கவாட்டில் அவள் திரும்பிபோது,  தட்டிலிருந்த வடைகளில் ஒன்றை 'லபக்'கிய காக்கை, அருகிலிருந்த காட்டுக்குப் பறந்து சென்று ஒரு மரக்கிளையில் அமர்ந்தது.

அங்கே வந்த ஒரு நரி வடையைக் கவரும் எண்ணத்துடன், "காக்கா... காக்கா, உன் குரல் ரொம்ப இனிமையானதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். எனக்காக ஒரு பாட்டுப் பாடு" என்றது.

நரியின் புகழ்ச்சிக்கு மயங்கிய காக்கையும் வாயில் வடை இருப்பதை மறந்து பாட ஆரம்பித்தது. அதன் வாயிலிருந்த வடை நழுவித் தரையில் விழுந்தது.

நரி புருவம் சுருக்கியது.

"எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத, நெஞ்சில் தேன் சிந்தும் தமிழ்ப் பாடல்கள் எவ்வளவோ இருக்க, 'கர்...கர்...கர்'னு இந்தியில் பாடுறே நீ. சகிக்கல" என்றது நரி, கடும் கோபத்துடன்.

அதைக் காதில் போட்டுக்கொள்ளாத காக்கை தொடர்ந்து இந்திப் பாட்டைப் பாடிக்கொண்டே இருந்தது.

கடுப்பாகிப் போன நரி, "உன் இந்திப் பாட்டு வேண்டாம். உன் ஊத்தை வாயால் தொட்டு எடுத்த வடையும் வேண்டாம்"னு சத்தம் போட்டுச் சொல்லிவிட்டு அங்கிருந்து ஓட்டமாய் ஓடி மறைந்தது!

====================================================================================


வெள்ளி, 25 ஜூன், 2021

நாட்டை ஆளுவோரின் அலட்சியமும் நீதியரசர்களின் அறி[ற]வுரையும்!!

'ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் கிருஷ்ணாப்பட்டினம் அடுத்த மூலக்கூறு கிராமத்தில் வசிக்கும் ஆனந்தய்யா, கொரோனா நோயாளிகளுக்குப் பயன்தரத்தக்க நாட்டு மருந்து கண்டுபிடித்தது முதல், அதை மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு அனுப்பி ஆய்வு மேற்கொண்டதில், அந்த மருந்தில்[லேகியம்]  தீங்கு விளைவிக்கும் பொருள் ஏதும் இல்லை என்று அறிவிக்கப்ப்பட்டது வரையிலான செய்திகள் நாம் அறிந்தவையே. 

'ஐசிஎம்ஆர்' குழு இந்த லேகியத்தை ஆய்வு செய்ய உள்ளது' என்பதும் நாம் அறிந்த செய்திகளுள் அடங்கும். நாம் அறியாதது.....

'ஆனந்தய்யாவின் கண்டுபிடிப்பான கொரோனா மருந்து குறித்த முடிவை 'ஐசிஎம்ஆர்' அறிவிக்காமல் தாமதப்படுத்துவது ஏன்?' என்பதே.

இது பற்றிய கேள்வியை நடுவணரசிடம் நம் போன்றவர் எவரும் கேட்பதில்லை. காரணம், அதனால் பயனேதும் விளையப்போவதில்லை என்பதுதான்.

நாம் கேட்கத் தயங்குகிற கேள்வியை சென்னை உயர் நீதிமன்றம் கேட்டிருக்கிறது[25.06.2021 நண்பகல் 12.35 மணி, 'news7 tamil' செய்தி]. அது.....

"இலவசமாகக் கொரோனாவுக்கு மருந்து வழங்கும் 'ஆனந்தய்யா', வாழும் ஒரு மனிதக் கடவுள். அவரை நேரில் அழைத்துப் பேசி உரிய அங்கீகாரத்தை வழங்கியிருந்தால் உலக அளவில் அவர் புகழ் பெற்றிருப்பார். ஏன் செய்யவில்லை?" என்பதே.

நீதியரசர்கள் எழுப்பிய கேள்வியில், சர்வதேச அளவில் கொரோனா மருந்து விற்பனை செய்யும் மாஃபியாக்கள் இதற்குத் தடையாக இருக்கிறார்களோ என்னும் சந்தேகமும் உள்ளடங்கியிருக்கிறது.

நீதியரசர்கள் கேள்வி எழுப்பிய பின்னராவது நடுவணரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?

மாநில உரிமைகளைப் பறிப்பதிலும், நாட்டில் 30% எண்ணிக்கை[?]யிலான மக்களுக்கு மட்டுமே தாய்மொழியாக உள்ள இந்தியை வளர்ப்பதிலும், சில ஆயிரம்பேர் மட்டுமே பேசுகிற சமஸ்கிருதத்தைப் பரப்புவதிலும், பகுத்தறிவுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கைகளை மக்கள் மீது திணிப்பதிலும் காட்டுகிற வேகத்தை ஆனந்தய்யாவின் மருந்தை அங்கீகரிப்பதோடு, அதிகபட்சம் அவரைக் கொரோனா ஒழிப்புக்குப் பயன்படுத்திக்கொள்வதிலும் நடுவணரசு வெளிப்படுத்துமா?

வெளிப்படுத்த வேண்டும் என்பது நம் போன்ற உண்மைக் குடிமக்களின் மிகு விருப்பம் ஆகும்.

====================================================================================

 

வியாழன், 24 ஜூன், 2021

'குடிமகன்' ஆக 'இது'வும் காரணமா?! அடக் கடவுளே!!!

#“அவர் செத்துட்டார். செக்ஸ் மட்டும்தான் வாழ்வுன்னு நம்பி வாழ்றவங்களுக்கு இதுதான் முடிவு. அவருக்கு இந்த லோகத்தில் சந்தோசப்பட வேற ஒன்னும் இல்ல” என்றான் நெல்லையப்பன்.

“உன் சித்தப்பாவைப் பத்திச் சொல்லுறே. அவருக்குக் கல்யாணம் ஆகலையா?” என்றான் இவன்.

“கல்யாணமாகி அஞ்சு குழந்தைகள் இருக்கு.”

“அப்புறம் ஏன் இந்த செக்ஸ் வெறி?”

“படிக்கும் நாளிலிருந்தே அதில் அவருக்கு ஈடுபாடு அதிகம். வயசு ஆக ஆக வெறி அதிகம் ஆயிடிச்சி. ஆனா, அதுக்கான வாய்ப்புகள் ரொம்பவே குறைஞ்சி போச்சி. ஏக்கத்தைத் தவிர்க்கக் குடிச்சார். குடிச்சிக் குடிச்சி நுரையீரலில் ஓட்டைகள் விழுந்துடிச்சி. ஆனாலும், அதனால அவர் சாகல; விஷம் குடிச்சிச் செத்தார்.”

“அவர் சாவு உன்னை ரொம்ப பாதிச்சதோ?”

“இல்ல. மனுசனாப் பொறந்த எல்லாருமே என்னிக்காவது ஒரு நாள் செத்துத்தானே ஆகணும். இவர் சாவை மட்டுமல்ல, என்னுடைய சாவை நினைச்சிக்கூட நான் பயந்ததே இல்ல. சொல்லப்போனா, சாவை நேரடியாவே சந்திச்சவன் நான்.....”

குறுக்கிட்டான் இவன். “ரொம்ப சுவாராசியமா இருக்கும்போல. சொல்லேன்” என்றான்.

நெல்லயப்பன் சொல்லத் தொடங்கினான்.....#

[நெல்லையப்பன் சொன்ன கதை அப்படியொன்றும் சுவையாக இல்லை என்பதால் இடுகைக்கு முற்றுப்புள்ளி!]


====================================================================================
நன்றி:
பிரபல எழுத்தாளர் நீல. பத்மநாபனின்.‘[அ]லட்சியம்’ சிறுகதையின் ஒரு பகுதி இது. நூல்:‘சேரநாட்டுச் சிறுகதைகள்’; ஐந்திணைப் பதிப்பகம், சென்னை; முதல் பதிப்பு: டிசம்பர், 2004.
====================================================================================

புதன், 23 ஜூன், 2021

எங்கே அந்த 'அவதாரங்கள்'? எங்கே...எங்கே...?!?!




றறிவு வாய்த்ததால் மனிதனுக்கு நேர்ந்த தீய விளைவுகளுள் தலையாயது மரண பயம். இது இவனின் தனி உடைமை!

உயிருக்கு ஆபத்து நேரும் சமயங்களில் மட்டுமே பிற உயிர்கள் மரணத்தை உணர்ந்து அஞ்சுகின்றன. மற்ற நேரங்களில் அது பற்றிய சிந்தனை அவற்றிற்கு இல்லை.

மரணம் பற்றிய இடையறாத சிந்தனையால் ஒரு முறை சாவதற்குப் பதிலாகப் பல முறை செத்துச் செத்துப் பிழைப்பவன் மனிதன் மட்டுமே[மன நிலை பாதிக்கப்பட்ட மனிதர்கள் இதற்கு விதிவிலக்கானவர்கள்].

மிகக் குறைந்த அளவில் சிந்திக்கும் அறிவு பெற்ற சாமானியர் முதல் மிகப் பெரிய ஞானிகள் என்று சொல்லப் படுகிறவர்கள் வரை மரணத்தை எண்ணி அஞ்சாதவர் எவரும் இலர்.

“கடவுளைச் சரணடைந்தால்... அவன் கருணைக்கு ஆளானால் ‘மரணமில்லாப் பெரு வாழ்வு’ வாய்க்கும் என்று சொல்லப் படுவதெல்லாம் நிரூபணம் ஆகாத... சாத்தியப் படாத வெறும் நம்பிக்கைகளே.

அப்படி வாழ்ந்தவர்கள்... வாழ்பவர்கள் எத்தனை பேர்?

எத்தனை நூறு பேர்?

எத்தனை ஆயிரம் பேர்?

லட்சக் கணக்கிலா? கோடிக் கணக்கிலா?

எண்ணிக்கை கடந்தவர்களா?

அவர்களின் உறைவிடம்... வாழ்விடம் எங்கே?

நீண்ட நெடுங்காலமாக..... யுகம் யுகமாக..... காலம் கடந்து கடவுளைப் போலவே[?] அவர்களும் ‘இருந்து’ கொண்டிருக்கிறார்களா?

இவற்றையெல்லாம் அறிந்து சொன்னவர் யார்?..... சொன்னவர்கள் யாரெல்லாம்?

எவரும் இல்லை... இல்லை... இல்லை... இல்லவே இல்லை.

பகைமை, வறுமை, நோய்மை... என்று எதை எதையோ நினைந்து அஞ்சுவது மனித இயல்பு. எனினும், எந்த வகையான அச்சத்திலிருந்தும் அவனால் விடுபட முடியும்... மன வலிமையால்... இடைவிடா முயற்சியால்.

ஆனால், மரண பயத்திலிருந்து விடுபடுவது மட்டும் அவனுக்குச் சாத்தியமே இல்லாத ஒன்று.

இந்தச் சாவைப் பற்றிய அச்சம்தான் மனிதன் கடவுளை நம்புவதற்கான தலையாய காரணம்.

கடவுளை நம்பியதால் அந்த அச்சத்திலிருந்து அவன் விடுபட்டுவிட்டானா?

இல்லையே!

கடவுளை நம்புகிற... பிறரையும் நம்பும்படி வற்புறுத்துகிற ’அவதாரங்கள்’ இந்தச் சாவைப் பற்றிய அச்சத்திற்கு ஆளாவதில்லையா?

“ஆம்” என்றால், எள்ளளவும் மரண பயத்திற்கு ஆளாகாமல், எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்தவாறே மரணத்தைத் தழுவியவர்கள் எத்தனை பேர்?

“அவர் அருட்பெரும் ஜோதியில் கலந்தார்!”... "இவர் செத்துப் பிழைத்தார்!”... “இவர் பூத உடலோடு சொர்க்கத்தில் புகுந்தார்!”... என்பன போன்ற கட்டுக் கதைகள் வேண்டாம்.

’உண்மை அறியும்’ நடு நிலை நெஞ்சம் நம் அனைவருக்கும் தேவை.

கடவுளின் பெருமைகளை..... அவதாரங்களின் மகிமைகளை வாய் கிழியப் பேசிக்கொண்டிருப்பது வெட்டி வேலை.

நம்மை நிரந்தரமாக அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ‘மரணம்’ பற்றி ஆராய்ந்து உண்மை’களைக் கண்டறிந்து, மரண பயத்தைப் போக்க... அல்லது..... குறைக்க முயல்வது அறிவுடைமையாகும்; இன்றியமையாத் தேவையும்கூட.

இந்த அச்சத்தைப் போக்க ‘என்றும் இருப்பவர்’ என்று சொல்லப்படுபவரான கடவுளாலும் முடியாது.

எனவே, நமக்கிருக்கும் ஆறாவது அறிவை நம்பிச் செயல்படுவதால் மட்டுமே பயன் விளையும்.

அந்த அறிவின் துணையுடன் மரணம் பற்றி ஆராய்வதும், அது பற்றிய அச்சத்தைப் போக்குவதற்கு, அல்லது, குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிந்து சொல்வதும் மனிதருள் சிந்திக்கத் தெரிந்தவர்களின் கடமையாகும்.

====================================================================================


செவ்வாய், 22 ஜூன், 2021

அறுபதிலும் ஆசைப்படலாம்!!![கண்களைக் குளமாக்கும் குடும்பக் கதை!]

சற்றே பெரிய சிறுகதை. ஒரே மூச்சில் படித்து முடிக்கலாம். உணர்வு சலித்தால், என்னைத் திட்டாமல் விடுபடுவதில் தவறேதும் இல்லை!

                                                 *  *  *

சக்காளிபாளையம் கிராமத்தின் வடக்குத் திசையில், அரை ஏக்கர் மானாவாரி விவசாய நிலத்தில் இருந்தது கிழக்குப் பார்த்த அந்த  வீடு; பனை ஓலை வேய்ந்தது; பல தலைமுறை கண்டது. செம்மண் குழைத்து எழுப்பப்பட்டிருந்த சுற்றுச் சுவர் ஆங்காங்கே சிதைந்திருந்தது.

வீட்டின் வலப்புறம் இருந்த வாதநாராயண மரத்தடியில் கன்று ஈன்ற பசு மாடு ஒன்று அசைபோட்டுப் படுத்திருக்க, இடப்பக்கம் இருந்த வேம்பின் நிழலில் வெறும் கயிற்றுக் கட்டிலில் அசைவின்றி மல்லாந்து கிடந்தார் நாச்சியப்பன்.

தாட்டிகமான கறுத்த தேகம் நாச்சியப்பனுக்கு. முக்கால் பங்கு நரைத்த தலைமுடியும், சற்றே உலர்ந்து சுருங்கிய சருமமும்தான் அவர் அறுபதைக் கடந்தவர் என்பதற்குச் சாட்சியம் அளித்தன.

ஒரு முழுநாள் பட்டினி. இரவெல்லாம் கண் விழித்திருந்த சோர்வு. தீராத மன உளைச்சல். இவற்றின் ஒருங்கிணைந்த தாக்கம் காரணமாக அன்றாடக் கடமைகளை மறந்து உயிரற்ற சவம் போல நீட்டிப் படுத்திருந்தார் நாச்சியப்பன். மூடியிருந்த இமைகளுக்குள் தெரிந்த கருமணிகளின் பிறழ்வும், அவ்வப்போது இழுத்து விடப்பட்ட பெருமூச்சு காரணமாக எழுந்து தாழ்ந்த நெஞ்சுக்கூடும் அவர் உறங்கவில்லை என்பதற்குக் கட்டியம் கூறின.

“ஐயா, நேத்துப் பூரா எதுவும் சாப்பிடல. இப்பவும் பொழுது சாஞ்சிடிச்சி. ஒரு டீத்தண்ணிகூடக் குடிக்கல. ஒடம்பு தாங்குமா?” -கட்டிலை ஒட்டிக் கட்டாந்தரையில் உட்கார்ந்திருந்த மாரியம்மா கேட்டாள்.

நாச்சியப்பனிடமிருந்து பதில் இல்லை. அதிகபட்சக் கோபத்திலோ மிகையான வருத்தத்திலோ இருக்கும்போது கேட்ட கேள்விக்கு அவரிடமிருந்து சற்றுத் தாமதமாகத்தான் பதில் வரும் என்பது மாரியம்மாவுக்குத் தெரிந்திருந்ததால் அவர் பதிலுக்காகக் காத்திருந்தாள்.

ஒரு நிமிடம் போல மௌனத்தில் கரைத்துவிட்டு வாய் திறந்தார் நாச்சியப்பன். “நான் என்ன வீம்புக்கா சாப்பிடாம இருக்கேன். பசி எடுக்கல புள்ள. அவன் பேசின பேச்செல்லாம் நீ கேட்டுட்டுத்தானே இருந்தே. நீயெல்லாம் ஒரு அப்பனான்னு கேட்டானே, என் உசுரு போறவரைக்கும் அது மறக்குமா? இருந்த நிலத்தையெல்லாம் உங்களுக்குப் பிரிச்சிக் கொடுத்தேன். வெளியூர்ல இருக்கிற நீங்க அதையெல்லாம் வித்துக் காசு பண்ணிட்டீங்க. எனக்குன்னு அரை ஏக்கர் நிலமும், அஞ்சு லட்சம் பணமும் மட்டும்தான் இருக்கு. அதுவும் நான் செத்தப்புறம் உங்களுக்குத்தானேன்னு நான் சொன்னதுக்கு, நீ எப்பச் சாகுறது, நாங்க எப்பப் பணத்தைக் கண்ணால பார்க்குறதுன்னு கேட்டானே, அதுக்கு என்ன அர்த்தம்? சீக்கிரம் செத்துத் தொலையடா கிழவாங்கிறதுதானே? இப்படியே பட்டினி கிடந்து செத்துடலாம்னு தோணுது.” -நனைந்த துணிப் பந்தாய்த் துக்கம் தொண்டையை அடைக்க, பார்வையை உயர்த்தி மரக் கிளைகளை வெறித்துப் பார்த்தார் நாச்சியப்பன். அப்போதைய மன நிலையில், தன் முகம் பார்த்துப் பேசினால் அவர் பொங்கி அழுதுவிடுவார் என்பது மாரியம்மாவுக்குத் தெரிந்தே இருந்தது.

“காலம் மாறிப்போச்சி ஐயா. இந்தக் காலத்துப் புள்ளைகளுக்குப் பெத்தவங்களை மதிக்கத் தெரியல. பணம் காசுக்காக அடிச்சி ஒதைக்குறாங்க. கொலைகூடப் பண்ணிடறாங்க. நம்ம புள்ளைக எவ்வளவோ தேவலாம். மனசைத் தேத்திக்கோங்க” என்றாள்.

“அடிச்சி ஒதைச்சிக் கொன்னு போட்டுட்டாக்கூடப் பரவாயில்லை. ஒரேயடியாப் போய்ச் சேர்ந்துடலாம். வார்த்தையால வதைக்கிறாங்களே, அதைத் தாங்கிக்க முடியல புள்ள. போன வாரம் வந்துட்டுப் போன பெரியவனும் நேத்து வந்த சின்னவன் சொன்னதையேதான் சொன்னான். அதோட நிக்கல. காலம் போன கடைசியில் உனக்குக் காசுப்பித்து தலைக்கேறிடிச்சி. என்கிட்ட இருக்கிற பணம் என் சொந்தச் சம்பாத்தியம்னு சொல்லிட்டுத் திரியறே. நீ சம்பாதிச்ச பணத்தை நாளைக்குப் பாடையில் போறப்ப ஒரு கோணிச்சாக்கில் கட்டிக் கையோட எடுத்துட்டுப் போயிடுன்னு நக்கல் பண்ணினானே. என் மனசு என்ன பாடு படுது தெரியுமா? உனக்கு நல்ல சாவு வராது. செத்தா நரகத்துக்குத்தான் போவேன்னு சாபம் வேற கொடுத்தான். அப்பனுக்கு மவன் சாபம் குடுத்தா அது பலிக்குமா மாரியம்மா? கேட்டுவிட்டு ஒரு குழந்தை போலத் தேம்பி அழுதார் நாச்சியப்பன்.

துடித்துப்போன மாரியம்மா, எழுந்து நின்று முந்தானையால் அவர் கன்னங்களில் வடிந்த கண்ணீரைத் துடைத்தாள். அவரது இரு கரங்களையும் பற்றி எடுத்துத் தன் கரங்களுடன் பிணைத்துக்கொண்டு சொன்னாள்: “தைரியமா இருங்க. உங்க நல்ல மனசுக்கு எப்பவும் நல்லதே நடக்கும். எல்லார்த்தையும் நாம கும்புடுற சாமி பார்த்துக்கும். மோர் குடிங்க. கொஞ்ச நேரத்தில் 'களி'ச்சோறு கிளறிக் கடுப்பான் அரைச்சுடுறேன்” என்று சொல்லி ஒரு பித்தளைத் தம்ளர் நிறைய மோர் கொண்டுவந்து கொடுத்தாள்.

மாரியம்மாவின் குடும்பம், விவசாயத் தொழில் செய்து வயிறு வளர்த்த பரம்பரையைச் சார்ந்தது.

பத்தாவது ஃபெயில் ஆனதும் அம்மாக்காரியுடன் தோட்ட வேலைகளுக்குச் சென்றாள் அவள். கல்யாணம் ஆன பிறகும் அது நீடித்தது.

ஒரு வேன் பயணத்தின்போது ஏற்பட்ட விபத்தில் பெத்தவங்களையும் கட்டிய புருஷனை இழந்தாள் மாரியம்மா. அவளுடைய ஒரு கால் ஊனமானது. மற்றவர்களுக்கு ஈடு கொடுத்து வேலை செய்ய முடியாததால் பண்ணையாளர்களால் அவள் புறக்கணிக்கப்பட்டாள். பிழைப்புக்கு வேறு வழியில்லாமல் அவள் தவித்தபோது, “தோட்ட வேலையோ வீட்டு வேலையோ சொல்லுறதைச் செஞ்சிட்டுப்போ. மாசச் சம்பளம் தர்றேன். தினமும் வந்துடு” என்று ஆதரவுக்கரம் நீட்டினார் நாச்சியப்பன்.

அவர் மனைவி இறந்த பிறகு அவர் வீட்டு முழுநேர வேலைக்காரி ஆனாள் மாரியம்மா. நாள் முழுக்க அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து முடித்தே தன் வீடு திரும்புவாள்.

சுத்தமான பாலுக்காக ஒரு பசு மாட்டைத் தன் பொறுப்பில் பராமரித்து வந்தார் நாச்சியப்பன்.

அன்று வழக்கம்போல, பசுவை மேயவிட்டு வீடு திரும்பியபோது, அவரின் மகள் சாந்தி மாரியம்மாவுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டார்.

“வாம்மா, ஊரில் எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என்றார்.

“நாங்க எல்லாம் நல்லாவே இருக்கோம். நீங்கதான் ரொம்ப மன வருத்தத்தில் இருக்கீங்க போல” என்றாள் சாந்தி.

பதில் பேசாமல், மாட்டுக்குத் ‘தாழித் தண்ணி’ காட்டி, மரத்தில் கட்டிவிட்டு வந்தார் நாச்சியப்பன்.

“தம்பிமாருங்க வந்தாங்களா?” என்றாள் சாந்தி.

"வந்தாங்க.”

"வீட்டடோடு இந்த நிலத்தையும் வித்துட்டு அவங்களோட இருந்துடச் சொன்னாங்களாமே?”

“நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்,”

“ஏம்ப்பா?”

“ஆறுபது வருசத்தை இங்கே கழிச்சுட்டேன். இன்னும் கொஞ்ச காலம்... ஓட்டமா ஓடிடும். என் அப்பாவையும் தாத்தாவையும் குளிப்பாட்டின இந்த மண்ணு வாசல்லியே என்னையும் குளிப்பாட்டணும். அவங்கள எரிச்ச சுடுகாட்டிலேயே என்னையும் சுட்டுச் சாம்பலாக்கணும். இதெல்லாம் என் அந்திமக்கால ஆசை. அதோட, பட்டணத்துப் பொழப்பு எனக்குச் சரிப்பட்டு வராது. தினமும் ரெண்டு வேளை சாப்பிடுறேன். மத்தியானம் கம்மஞ்சோறோ ராகிக் களியோ சாப்பிடுறேன். இந்தக் கம்மஞ்சோத்தையையும் களியையும் என் ரெண்டு மருமகளும் கண்ணில் பார்த்திருக்கவே மாட்டாங்க.....”

சிக்கனமாய்க் கொஞ்சம் சிரித்துவிட்டுத் தொடர்ந்தார். “வெய்யக் காலத்துல, கட்டுன கோமணத்துணியோட வேப்ப மரத்தடியில் கட்டில் போட்டுப் படுத்திருப்பேன். ஒரு பக்கம் குளுகுளுன்னு வீசுற காத்து. இன்னொரு பக்கம் கமகமன்னு மாட்டுச் சாணத்தோட வாசம். இதெல்லாம் பட்டணத்துக்குப் போனா கிடைக்காதும்மா. சாகறமுட்டும் இந்தப் பட்டிக்காட்டை விட்டு நகர மாட்டேன்னு அவனுங்ககிட்டே அடிச்சிச் சொல்லிட்டேன்.”

“உங்க பேங்க் பணத்தைக் கேட்டாங்களாம். தரமாட்டேன்னு சொல்லிட்டீங்களாம். அது தப்பில்ல. ஏன்னா, அதில் மூனில் ஒரு பங்கு எனக்குச் சேர வேண்டியது.”

மௌனம் பாவித்தார் நாச்சியப்பன்.

“அப்பா, நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும். செய்வீங்களா?”

“சொல்லு. சொன்னாத்தானே முடியுமா இல்லையான்னு சொல்ல முடியும்.”

“உங்களால முடியும்ப்பா. நாங்க எங்க வீட்டுக்கு அடுத்து இருக்குற வீட்டு மனையை விலை பேசி முடிச்சுட்டோம். அடுத்த மாசம் கிரையம். கொஞ்சம் பணம் பத்தல. அஞ்சோ ஆறோ உங்க பணம் பேங்குல இருக்கில்லையா? அதை இப்போ கடனாக் குடுங்க. வட்டி போட்டு அடுத்த வருசமே திருப்பித் தந்துடறேன்” என்றாள் சாந்தி.

“வூட்டுச் செலவு, மருந்து மாத்திரைச் செலவு, மாரியம்மாவுக்குச் சம்பளம்... இப்படியான செலவையெல்லாம் மாசாமாசம் வர்ற வட்டியை வாங்கித்தான் சமாளிக்கிறேன். இருக்கிற பணத்தைக் கொடுத்துட்டு யார்கிட்டே கையேந்தி நிப்பேன்? பணத்துக்கு வேற ஏற்பாடு பண்ணும்மா” என்றார் நாச்சியப்பன்.

சிறிது நேரம் அப்பனையே வைத்த கண் வாங்காமல் பார்த்த சாந்தி, “பெத்த புள்ளைங்க மேல உங்களுக்குப் பாசம் இல்ல. பணம் இன்னிக்கி வரும்; நாளைக்குப் போகும். நீங்க செத்தப்புறம் உங்க பணம் உங்களைச் சுடுகாட்டுக்குத் தூக்கிட்டுப் போகாது. உங்க புள்ளைகதான் பாடை சுமக்கணும். ஞாபகம் வெச்சுக்குங்க.” -சொல்லிவிட்டு, விடுவிடென கேட்டைத் தள்ளிக்கொண்டு வெளியேறினாள்.

"மாமா, எழவுக்கு வர்றியா?” -பொளியில் எருதுகளை மேயவிட்டு, மம்மட்டியால் வாய்க்காலைச் சுத்தம் செய்துகொண்டிருந்த தங்கமுத்து குரல் வந்த திக்கில் பார்வையை ஓட்டினார்.

பத்தடி தள்ளி, ஒத்தையடிப் பாதையில் பாழிக்காட்டு வேலுச்சாமி நின்றுகொண்டிருந்தான்.

“எழவா? யாருடா மாப்ள?” என்றார் தங்கமுத்து.

“நம்ம நாச்சியப்பன்.”

“பெரிய பண்ணாடி நாச்சியப்பனா? நல்லாத்தானே இருந்தாரு. முந்தா நாளு டவுனுல பார்த்தனே.”

“நெறயத் தூக்க மாத்திரை முழுங்கியிருக்காரு. மிச்சம் மீதி தரையில் சிதறிக் கிடந்துச்சாம்.”

“ஏன் இப்படிப் பண்ணினாரு. ரொம்பத் தெகிரியசாலியாச்சே.” 

“போற நேரம் வந்தா தெகிரியமும் போயிடும். நாலு நாள் முந்தி, மவளும் மவனுகளும் வந்து பேங்க் பணத்தைக் குடுக்கச் சொல்லி தகராறு பண்ணியிருக்காங்க." 

“இவங்க மூனு பேரும்தானே வாரிசு. இவரு பணம் எங்கே போயிடப் போகுது?”

“அதுவல்ல விசயம். நாச்சியப்பன் சம்சாரம் பவளாயி செத்ததுக்கப்புறம், ரெண்டு மூனு வருசமா மாரியம்மாதான் வீட்டு வேலையெல்லாம் செய்துட்டிருக்கிறா. அவள் மேல இவங்களுக்கு ஏற்கனவே சந்தேகம் இருந்திருக்கு. அவள அப்பன்கிட்ட இருந்து பிரிக்கத் திட்டம் போட்டாங்க. நாச்சியப்பன் கண் முன்னாலயே, ‘எங்கப்பனைக் கைக்குள்ள போட்டுகிட்டுப் பணத்தையெல்லாம் நீ சுருட்டப் பார்க்கிறே’ன்னு பழி சுமத்துனாங்களாம். ஆளாளுக்குத் திட்டித் தீர்த்துட்டுப் போனாங்களாம்."

"அப்புறம்?" -ஆவல் பொங்கக் கேட்டார் தங்கமுத்து.

"உன் மேல வீண் பழி சுமத்திட்டாங்க. இனியும் இங்க இருக்க வேண்டாம். ரெண்டு லட்சம் மட்டும் வெச்சிகிட்டு மூனு லட்சத்தை உனக்குத் தர்றேன். கடை கண்ணி வெச்சிப் பிழைச்சிக்கோ. நான் கிழவன். தனியாவே காலத்தைக் கழிச்சிடுறேன்னு சொல்லியிருக்கார் நாச்சியப்பன்....."

சற்றே இடைவெளி கொடுத்துத் தொடர்ந்தான் வேலுச்சாமி, "சொந்தபந்தம்னு யாருமே எனக்கு உதவாதபோது நீங்கதான் எனக்கு அடைக்கலம் கொடுத்தீங்க. உங்க ஆயுசு முடியறவரைக்கும் உங்களைப் பிரிய மாட்டேன். இது சத்தியம். நீங்க சம்மதிச்சா, முழு நேரமும் உங்களோடவே இருந்துடுறேன்னு சொல்லியிருக்கா மாரியம்மா....."

இடைமறித்தார் தங்கமுத்து, "இதெல்லாம் உனக்கு எப்படித் தெரிஞ்சுது?"

"எனக்கு மட்டுமில்ல, இந்த ஊருக்கே தெரியும். 'நான் பெத்த பிள்ளைகளே, நான் மாரியம்மாவை வெச்சிருக்கேன்னு பழி சுமத்திட்டாங்க. யார் என்ன சொன்னாலும் உங்களைப் பிரிஞ்சி போக மாட்டேன்னு மாரியம்மா சொல்லிட்டா. அதனால, கோயிலுக்குக் கூட்டிட்டுப் போயி அவளைக் கல்யாணம் கட்டிகிட்டேன்'னு நெருக்கமானவங்ககிட்டே நாச்சியப்பனே சொல்லியிருக்கார்."

"அவர் அவளைக் கட்டிகிட்டார்னு நானும் கேள்விப்பட்டேன். அது இருக்கட்டும், நாச்சியப்பன் எப்படிச் செத்தார்? அதை முதலில் சொல்லுடா."

"கல்யாணம் ஆகி ஆறு மாசம் போல நாச்சியப்பனும் மாரியம்மாவும் சந்தோசமாகத்தான் குடும்பம் நடத்துனாங்க. நேத்திக்கு அதிகாலை நேரத்துல, தங்கச்சி புருசனோடு வந்த ரெண்டு மகன்களும் கண்மண் தெரியாம இவங்க ரெண்டுபேரையும் அடிச்சி உதைச்சிருக்காங்க; 'ரெண்டு நாள் கழிச்சி வருவோம்.  இங்க உன்னைப் பார்த்தா வெட்டிப் போட்டுடுவோம்'னு மாரியம்மாளை மிரட்டிட்டுப் போயிருக்காங்க. அவங்க புறப்பட்டுப் போன கொஞ்ச நேரத்துலயே, நாச்சியப்பனும் மாரியம்மாவும் தூக்க மாத்திரைகளை முழுங்கிட்டுத் தற்கொலை பண்ணிட்டாங்க. நாச்சியப்பனுக்குப் பக்கத்து நிலத்துக்காரர் எனக்குக் கொஞ்சம் முன்னால போன் பண்ணினார்."

"ரொம்ப நல்ல மனுசன். போய்ச் சேர்ந்துட்டார்" என்றார் தங்கமுத்து.

"மாரியம்மாவை அவர் கல்யாணம் பண்ணியிருக்கக் கூடாது. வயசான காலத்துல புத்தி கெட்டுப்போச்சு" என்றான் வேலுச்சாமி.

"புத்தி கெடுல. நல்ல புத்தியோடுதான் கல்யாணம் கட்டியிருக்கார். அவரோட மனநிலையில் நான் இருந்திருந்தாலும் அதைத்தான் செய்திருப்பேன். அவர் செய்த ஒரு தப்பு, பெத்த புள்ளைகளால ஆபத்து நேரும்னு எதிர்பார்த்துப் போதுமான பாதுகாப்போடு இருந்திருக்கணும்; அடி உதை பட்ட பிறகாவது போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ணியிருக்கணும். தற்கொலை பண்ணிகிட்டதுதான் அவர் செஞ்ச தப்பு. அந்த நல்ல மனுசனைக் கடைசியா ஒரு தடவை பார்க்கத்தான் வர்றேன். அந்த நாய்கள் இருந்தா  அவனுங்ககிட்ட துக்கம் விசாரிக்க மாட்டேன்” என்று சொல்லி தங்கமுத்து நடந்தார். வேலுச்சாமி அவரைப் பின்தொடர்ந்தான்.

====================================================================================

திங்கள், 21 ஜூன், 2021

'நீட்'..... "கல்வித்துறையில் இங்கு நிபுணர்களே இல்லையா?!?!"

*மாணவர்களுக்குத் தரமான கல்வியை அளிக்கவும், மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான 'தரம்' மிகுந்த தேர்வு முறையைக் கையாள்வதற்கும் உரிய பரிந்துரைகளை மாநில அரசிடம் வழங்குவதற்கு, கற்றுத் தேர்ந்த சிறந்த கல்வியாளர்கள் இந்த மாநிலத்தில்[தமிழ்நாடு] இல்லையா?

**இருக்கிறார்கள். உண்மை இதுவாக இருக்க, நடுவணரசு உருவாக்கிய, 'நீட்' என்னும் 'வெறும் மூன்று மணி' நேரத் தேர்வின் மூலம் மாணவர்களின் தகுதியை எடைபோடுவது அறிவுடைமை அல்ல.


*+2 மதிப்பெண் மூலம் தமிழ்நாடு அரசு மாணவர்களைத் தேர்வு செய்ததில்['நீட்' திணிப்புக்கு முன்பு] என்ன குறை நடுவணரசால் கண்டறியப்பட்டது?

**எதுவும் இல்லை. அப்புறம் எதற்கு இந்த 'நீட்' தேர்வு? 


*மாநிலங்களின் எந்தவொரு எதிர்ப்பையும் அடக்கி ஒடுக்கிவிடும் பலம் தன்னிடம் இருப்பதால், குறைந்த அளவிலான மாநிலங்களின் அதிகாரங்களை ஒவ்வொன்றாகப் பறித்துக்கொண்டிருக்கும் மத்திய அரசின் 'உள்நோக்கம்' என்ன?

**மாநில அரசுகளை வெறும் 'பொம்மை' அரசுகளாக ஆக்குவதும், இந்தி, சமஸ்கிருதம், பகுத்தறிவுக்குப் புறம்பான மூடநம்பிக்கைகள் போன்றவற்றைத் திணிப்பதும்தான்.


*'அதிகாரப் பறிப்பு' இனியும் தொடர்ந்தால்.....

**இந்தியத் தேசிய 'ஒருமைப்பாடு' கேள்விக்குரிய ஒன்றாக ஆகிவிடக்கூடும் என்று எச்சரிப்பது, இந்த நாட்டிலுள்ள  ஒவ்வொரு உண்மைக் குடிமகனின் கடமையாகும்!

நாமக்கல்,                                                                                          உண்மைக் குடிமகன்

21.06.2021.                                                                                         முனைவர்ப.பரமசிவம்,

                                                                                                  கல்லூரிப் பேராசிரியர்[ஓய்வு]

                                                                  * * *

[இந்தப் பதிவு, என் முகவரியும் 'பேசி' எண்ணும் இணைக்கப்பட்டு, மின்னஞ்சல் மூலம்  'நீட்' குறித்த ஆய்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது ]

====================================================================================

'நீட்' குறித்துக் கருத்து அனுப்புதற்குரிய முகவரி:

 neetimpact2021@gmail.com 

ஞாயிறு, 20 ஜூன், 2021

'நீட்' தேர்வை நிரந்தரமாய்த் தடுத்து நிறுத்த.....

#மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஒருபுறம் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளும், மறுபுறம் பார்ப்பன வருணாசிரமக் கட்டுமானத்தை அமல்படுத்தும் இந்து ராஷ்டிரக் கொள்கைகளும் ஒன்றாக இணைந்து 'கார்ப்பரேட் – காவிப் பாசிசம்' அமல்படுத்தப்படுகிறது.

அதன் அங்கம்தான் ஆன்லைன் கல்வி, நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை போன்றவை எல்லாம். ஆகையால், இதனை['நீட்'] ஒருபோதும் ரத்து செய்யப் பாஜக அனுமதிக்காது. அதன் ஊதுகுழலாக இருக்கும் நீதித் துறையும் வழக்கைக் காயப் போட்டு, மாணவர்களின் கழுத்தைக் கச்சிதமாக அறுக்கும் சூட்சுமம் தெரிந்து செயல்படும்.

எனவே, தற்போதைய தமிழக அரசு, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலும், அவசரச் சட்டம் கொண்டு வந்தாலும் மத்திய அரசின் ஒப்புதல், கவர்னர் ஒப்புதல்,  ஜனாதிபதி ஒப்புதல் என இழுத்தடித்து அதனை இன்னும் பல பத்தாண்டுகளுக்குச் சாத்தியமற்றதாகப் பாஜக மாற்றிவிடும் என்பது உறுதி.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் போல தமிழகம் தழுவிய அளவில் மாணவர்களின் எழுச்சி நடந்தால் மட்டுமே மக்கள் போராட்டத்தின் நெருக்கடியில் மத்திய அரசும், நீதிமன்றமும் பணிந்து வர வாய்ப்புள்ளது.

அப்படி இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் போல, தமிழகத்தை மாணவர்களின் போராட்டக் களமாக மாற மு.க.ஸ்டாலின் அனுமதித்து, தமிழ்நாடு மாநிலத்தின் கல்வி உரிமையை மீட்டுத் தருவார் என்று எண்ணுவதெல்லாம் பகல்கனவுதான்.

ஸ்டெர்லைட், ஜல்லிக்கட்டு போன்ற பிரச்சனைகளில் மக்களின் போராட்டங்களுக்கு மத்திய அரசு எப்படி அடிபணிந்ததோ, அப்படிப்பட்ட மக்கள் போராட்டங்களைத் தட்டியெழுப்புவதன் மூலம்தான் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும். மாநில உரிமையையும் மீட்க முடியும். அது மாணவர்கள், இளைஞர்களின் எழுச்சியால்தான் சாத்தியமாகும்!#

====================================================================================

நன்றி: 'வினவு' https://www.vinavu.com/2021/06/01/neet-exam-relying-tn-government-not-the-solution-struggle-the-solution/


சனி, 19 ஜூன், 2021

'உறவு'க்கு முன் ஆணுக்குத் தேர்வு நடத்தும் பெண் கழுகு!!!

றவை இனத்திலேயே கழுகு மட்டும்தான் 70 ஆண்டுகள் வாழக்கூடியது; பறவை இனத்தில் அதிக உயரம் பறப்பதுவும்கூட. பெண் கழுகு, ஆண் கழுகைவிடச் சற்றுப் பெரிதாக இருக்கும். தான் நடத்தும் சோதனையில் வென்றால் மட்டுமே ஒரு பெண் கழுகு ஆண் கழுகுடன் இணை சேரச் சம்மதிக்கும்!

ஆண் கழுகு உறவு கொள்ளும் இச்சையுடன் பெண் கழுகை நெருங்கினால், அந்த ஆண் கழுகுடன் தரையில் கிடக்கும் சிறு தடி போன்ற குச்சியை எடுத்துக்கொண்டு, உயரப் பறந்து சென்று அந்தக் குச்சியினைக் கீழே போட்டுவிட்டுக் காத்து கொண்டிருக்கும் பெண் கழுகு. 

நிலத்தை நோக்கி வீழ்ந்துகொண்டிருக்கும் குச்சியை ஆண் கழுகு விரட்டிச் சென்று, அது நிலத்தில் விழுவதற்கு முன்பே பிடித்து, உயரப் பறக்கும் பெண் கழுகிடம் சேர்க்கும். பெண் கழுகு மீண்டும் குச்சியைக் கீழே போட்டுவிடும். ஆண் கழுகு பிடிப்பதற்காகக் கீழே செல்லும். இவ்வாறு, பெண் கழுகு ஒரு குச்சியைக் கீழே போடுவதும், அதை ஆண் எடுத்து வருவதுமாகப் பல மணி நேரத் தேர்வு நடைபெறும். இதன் மூலம் பெண் கழுகு, ஆண் கழுகுக்குள்ள பொறுமைக் குணத்தையும், உடல் வலிமையையும் உறுதிப்படுத்திக்கொள்கிறது. 

இவ்வாறான ஒரு சோதனையில் ஆண் கழுகு வென்ற பின்னரே அதனுடன் உடலுறவு கொள்ளப் பெண் கழுகு சம்மதிக்குமாம்![மனித இனத்துப் பெண்கள் இது போன்ற சோதனைகளை நடத்தினால், கணக்கிலடங்காத ஆண்கள் கட்டைப் பிரமச்சாரிகளாகவே காலந்தள்ள வேண்டியிருக்கும்!].

கழுகு மிக உயரமான முட்களை உடைய மரக்கிளைகள், மலைச்சரிவுகளில் உள்ள பாறைப் பிளவுகள் என்று மற்ற உயிரினங்கள் எளிதில் நெருங்க முடியாத இடத்தில் கூடு கட்டும். இடம் தேர்வானதும் ஆண் கழுகு முள், குச்சி, புல், வேர்கள், சிறு கற்கள், வைக்கோல் போன்றவற்றை வைத்துக் கூடுகட்டும். பெண் கழுகு முட்டையிட்டு அடைகாத்துக் குஞ்சு பொறிக்கும். ஒருமுறை இரண்டு முட்டைகளை இடும். முதலில் பொரித்து வெளிவரும் பெரிய குஞ்சு தன் இளவலைக் கொத்திக் கொன்றுவிடும். 

இதைச் செய்யும் குஞ்சு பொதுவாகப் பெண்ணாகவே இருக்கும். ஏனெனில், பெண் குஞ்சு, ஆண் குஞ்சைவிடப் பெரியது. இந்தப் படுகொலையைத் தடுக்க அவற்றின் பெற்றோர் கழுகுகள் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. 

எதிரிகளைத் தாக்கவும், தன்னுடைய முட்டைகளைப் பாதுகாக்கவும் ஆபத்து நேரங்களில் உடலில் இருக்கிற கந்தக அமிலத்தைக் கழுகுகள் உமிழ்கின்றன. கந்தக அமிலம் எந்த ஓர் உயிரினத்தின் மீது பட்டாலும் அது கருகிவிடும்.

கழுகுக் குஞ்சுகள் ஒரு குறிப்பிட்ட காலம்வரை கூட்டில் வைக்கப்பட்டு, தாய்ப் பறவை உணவு ஊட்டும். பிறகு மென்மையான கூட்டினை நீக்கிவிட்டு முட்களையும் குச்சுகளையும் குத்துவது போல வைக்கும். இதனால் கூட்டின் ஓரத்திற்கு வரும் குஞ்சுகளைக் கீழே தள்ளிவிடும். 

குஞ்சுகள் நிலைதடுமாறி விழும்போது, இறக்கைகளை விரித்துப் பறக்கமுயலும். ஆனால் பறக்க முடியாது. குஞ்சுகள் கீழே விழுந்து அடிபடாமல் தடுக்க, ஆண் கழுகு பறந்து சென்று, தன் முதுகில் தாங்கி, அதை மீண்டும் கூட்டிற்குக் கொண்டுவந்து சேர்க்கும். இது போல் தொடர்ந்து பயிற்சியளிக்கப்பட்ட பின்னரே குஞ்சுகள் பறக்க ஆரம்பிக்கும்; சுயமாக இரை தேடிக்கொள்ளும். 

கழுகுகள் புயலை விரும்புகின்றன. புயல் காற்றின் மூலம் அவை மேகங்களுக்கு மேலாக எளிதில் பறக்க முடிகிறது. கழுகுகள் மணிக்கு 32 கிலோமீட்டர் வேகம் பறக்கும் திறன் உடையவை. 

கழுகுகளின் இறக்கைகள் ஓர் ஆகாய விமானத்தின் இறக்கைகளைவிட வலிமை வாய்ந்தவை என்கிறார்கள் பறவையின ஆராய்ச்சியாளர்கள். 

குதிரைகள் நின்றுகொண்டு தூங்குவது போல, கழுகுகள் மரக்கிளையில் உட்கார்நதுகொண்டே தூங்கும் திறன் கொண்டவை. 

கழுகுகள் மிகவும் புத்திசாலித்தனம் கொண்டவையும்கூட. ஆமை, நத்தை போன்றவற்றை உண்ணும்போது அவற்றின் ஓடுகள் உடையும் வண்ணம், அவைகளை மலை உச்சியில் இருந்து பாறை மேல் வீசி எறிந்து, அவை உடைந்த பின்னர் உண்ணும். 

உலகின் மிகப்பெரிய கழுகான பிலிப்பைன்ஸ் நாட்டுக் கழுகுகளின் இறக்கை எட்டு அடி நீளம் உள்ளவை. அவை ஓர் ஆட்டையோ, ஒரு மானையோ தூக்கி செல்லும் திறன் கொண்டவையாம்!

====================================================================================

நன்றி:

https://www.dailythanthi.com/


வெள்ளி, 18 ஜூன், 2021

மதனும் 'மதன்'களும் !!!

'யூடியூபர்' என்று ஊடகங்களால் அடைமொழி கொடுத்து அழைக்கப்படுகிற 'பப்ஜி மதன்' குறித்த பரபரப்பான செய்திகளை அறிந்திருப்போருக்கு, இவன் கைது செய்யப்பட்டதும் தெரிந்தே இருக்கும்.

இவன் யூடியூபில் ஆபாசமாகப் பேசியது, இவன் மனைவியும் இவனுக்கு உறுதுணையாக இருந்ததோடு அவரும் ஆபாசமாக உரையாடியது, இவர்களைக் காவல்துறை கைது செய்தது போன்ற தகவல்களைவிடவும், நம்மை விடுபட இயலாத பிரமிப்பில் ஆழ்த்துவது, ஆபாசப் பேச்சின் மூலம் மாதம் 10 லட்சத்துக்கு மேல் இவன் வருமானம் பண்ணியதும், கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள கார்கள், சொகுசு பங்களாக்கள், வங்கி முதலீடுகள் என்று பெரும் சொத்துக்கு அதிபதி ஆனதும்தான். 

யூடியூப் சேனல் மூலமாக மட்டும் மாதம் 10 லட்சத்திற்கும் மேல் வருமானம் பார்துள்ளான் இவன். அது மட்டும் இல்லாமல் பிற யூடியூப் சேனல்களுக்குத் தனது ஆபாச வீடியோக்களை விற்பது மூலமாகவும் நிறையச் சம்பாதித்துள்ளான் என்கின்றன ஊடகங்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக முகத்தைக் காட்டாமல், தான் யார் என்ற அடையாளத்தையும் வெளிகாட்டாமல் ஆரவாரமாகவும் ஆபாசமாகவும் தனது யூடியூப் பக்கத்தில் பேசியவன் இவன். இவனது பேச்சால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் கண்மூடித்தனமாக இவனது ரசிகர்களாக[ரசிகர்களா, அடிமைகளா?] ஆனார்களாம்.

இவனுடைய யூடியூப் பக்கத்திற்கான வருகையாளர்[சந்தாதாரர்] எண்ணிக்கை 7.8 லட்சம்

இவனுடைய யூடியூப் சேனலைப் பின்தொடர்வோரில் பதின் பருவத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அதிகம். குறிப்பாக 13 முதல் 20 வயதுக்குட்பட்டவர்களே பெரிதும் பின்தொடர்ந்தனர்.

மதனின் ஆபாச பேச்சுக்கான 'யூடியூப் பக்கம்', இவனின் தோழியும் மனைவியுமான கீர்த்திகா பெயரில்தான் இருந்துள்ளது. மேலும், மதனின் யூடியூப் சேனலுக்கு நிர்வாகியாகவும் அவர் இருந்துள்ளார். மதன் யூடியூப் சேனலில், மதனின் நேரலை வரும்போது கீர்த்திகாவும் நேரலையில் வந்து ஆபாசமாகப் பேசியுள்ளாராம்.

'பப்ஜி'யை யூடியூபில் ஸ்டீரிம் செய்து பெண்களுடன் ஆபாசமாகப் பேசியதுடன், மதன் அவர்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு வரச்செய்து, [தன் முகம் காட்டாமல்]நிர்வாணப் புகைப்படங்களைப் பார்க்கச் செய்திருக்கிறான்; வீடியோ கால்களையும் செய்து பலரின் வாழ்க்கையைச் சீரழித்துள்ளதாகவும் கூறப்படுகிறது[இச்சைகளைத் தூண்டுவதன் மூலம் ஆண்களும் சீரழிக்கப்பட்டிருக்கலாம்].

நம்மைத் திகைக்க வைக்கிற விடை தெரியாத கேள்வி என்னவென்றால்.....

நம்ம ஊர் இளசுகளும் பழசுகளுமான ஆண்களும் பெண்களும் இத்தனை பலவீனமானவர்களா? இப்படியான பலவீனங்களுக்கு மனதில் இடமளிப்பதும் தவறுதானே?

"ஆம்" என்று சொல்ல வைத்திருக்கிறது இந்தச் சம்பவம். 

உலக அளவில், ஆபாசமாக எழுதியும், பாலுறவு நிகழ்வுகளை அப்பட்டமாகப் படம்பிடித்தும் கோடி கோடியாய்ச் சம்பாதிக்கும் தொழில் அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதை[சில நாடுகளில் அரசாங்கத்தின் அனுமதியோடும் நடக்கிறது] நம்மில் பலரும் அறிந்திருக்கக்கூடும்.

ஆபாசமாகப் பேசி மட்டுமே கோடி கோடியாய்ச் சம்பாதிக்க முடியும் என்பதை[இவன் சேலத்துக்காரன். என் பக்கத்து ஊர்க்காரனாக்கும்!] மதன் சாதித்துக் காட்டியிருக்கிறான்.

உலக அளவில் எப்படியோ, இந்த நாட்டில் இப்படி ஆபாசமாகப் பேசிப் பேசியே கோடிகளுக்கு அதிபதி ஆனவன் இவன் மட்டும்தானா? இன்னும் பல மதன்கள் இருக்கிறார்களா?[தேடிக் கண்டறிய வேண்டியது காவல்துறையின் கடமை],

இவனுக்கு முன்னோடிகள் உண்டா?

உண்டோ இல்லையோ, 13 வயது முதல் 20 வயதுக்கு உட்பட்ட பதின் பருவத்தினர் மனங்களில் பாலுணர்வைத் தூண்டிய இவனே இன்னும் பல மதன்களுக்கு 'முன்னோடி'யாக அமையக்கூடும்!

இவன் விசயத்தில் அரசாங்கம் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டிய நேரம் இது!

====================================================================================

***தகவல்கள் ஊடகச் செய்திகளிலிருந்து சேகரிக்கப்பட்டவை. 

வியாழன், 17 ஜூன், 2021

6000 அழகிகளும் சீன அரசனின் 'சாகாவரம்' பெறும் ஆசையும்!!!

கி.மு.209இல் 'சின்' வம்சத்தைச் சேர்ந்த 'சின் சி ஹுவாங்' என்பவர்  'சீனா'வை ஆண்டுகொண்டிருந்தார்['சின்'இல் இருந்துதான் 'சீனா' என்னும் பெயர் உருவானது].

சீனாவில், சிறப்பான சட்டங்களை உருவாக்கி, மிகச் சிறப்பாக ஆட்சி செய்தவர் என்று வரலாற்று ஆசிரியர்களால் புகழப்பட்டவர் இவர். இவருக்கிருந்ததாகச் சொல்லப்படும் ஒரே பலவீனம் 'மரணபயம்'.

அள்ளக் குறையாத ஆசைகளையும், அனுபவிப்பதற்கான அளவிறந்த வசதிகளையும் பெற்றிருந்த  பேரரசர் 'சின் சி ஹூவாங்' சாகாவரம் பெற்றிட ஆசைப்பட்டார்.

அதற்கான 'மந்திர பானம்' ஒன்றைத் தேடிக் கொண்டுவரத் தன் அமைச்சர்களுள் ஒருவரான 'ஷூஃபூவை அயல்நாட்டுக்கு அனுப்பினார் மன்னர். அவர் நாடு திரும்பவே இல்லையாம்[மந்திர பானம் இல்லாமல் வந்தால் உடம்பில் உயிர் தங்காது என்பது அவருக்குத் தெரியாதா என்ன?].

மரணம் இல்லாமல் வாழ்வதற்கான மருந்தைக் கண்டுபிடிக்குமாறு மருத்துவர்களுக்கு உத்தரவு போட்டார் மன்னர். பெரும்பாலான மருத்துவர்கள் அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள். ஆய்வைத் தொடங்காமலிருந்த மருத்துவர்கள் உயிருடன் புதைக்கப்பட்டார்கள். மன்னரின் உத்தரவை எதிர்த்த தத்துவவாதிகளும் கொல்லப்பட்டார்கள்.

புரட்சி எதுவும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக, மக்கள் தலைவர்கள் பலரின் தலைகள் துண்டிக்கப்பட்டன.

மரணத்திற்கு எதிரான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால் தான் கடவுள் ஆகிவிடலாம் என்றும் கனவு கண்டார் 'சின் சி ஹூவாங்'. மக்கள் சிந்திக்கத் தொடங்கினால் தனக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வார்கள் என்றஞ்சி, நூலகங்களில் இருந்த வரலாற்று நூல்களையும் தத்துவ நூல்களையும் எரித்துவிடச் செய்தார்.

நாட்கள் கழிந்தனவே தவிர, தான் எதிர்பார்த்த மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், மாந்திரீகம், பில்லி சூனியம் என்பவற்றைச் செய்வோரின் உதவியையும் நாடினார் மன்னர். அவற்றாலும் பயன் கிட்டவில்லை.

வெகுவாக மனம் சலித்த நிலையில், தென்சீனக் கடலில் 'திஃபூ' தீவில் வசிக்கும் 'சூபு' என்னும் துறவியால் இதற்கான மருந்தைக் கண்டுபிடிக்க முடியும் என்று யாரோ ஓதி வைக்க, அவரைத் தேடிப்போய்ச் சந்தித்தார் மன்னர்.

'டாங்க்லாங்' மலையில் மரணத்தை வெல்வதற்கான மருந்து இருப்பதாகவும், அதை ஆண்கள் தொடக் கூடாது என்பதால், அதைத் தொட்டு எடுக்க 6000 கன்னிப் பெண்கள் தேவை" என்றும் துறவி சொன்னார்.

தன்னுடைய நாட்டிலிருந்த, 6000 அழகிய கன்னிப் பெண்களைத் தேடிக் கண்டுபிடித்து பிரமாண்டமானதொரு கப்பல் மூலம் தீவுக்கு அனுப்பி வைத்தார் மன்னர்.

'டாங்லாங்' மலை என்று ஒன்று இருப்பதாகத் துறவி 'சூபு' சொன்னது பொய் என்பது பின்னர் தெரிந்தது. அத்துடன், பொய்யுரைத்த துறவியும் 6000 அழகிகளும் காணாமல் போயிருந்தது மன்னரைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது[அவர்கள் யார் யாருக்கோ விற்கப்பட்டார்கள் என்பது வரலாற்றுச் செய்தி. துறவி தன்னை ஏமாற்றப்போவது தெரிந்திருந்தால் அந்த 6000 அழகுப் பதுமைகளையும் தன் அந்தப்புரத்திலேயே தங்கவைத்து, அதைச் சல்லாபபுரியாக இவர் ஆக்கியிருப்பாரோ என்னவோ ?!].

இவ்வாறான அனுபவங்களுக்குப் பிறகும் இவர் மனம் திருந்தாத நிலையில்.....

மருந்தைக் கண்டுபிடித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்த மருத்துவர்கள், ஒரு நாள் அதிகாலையில் மன்னரைச் சந்தித்தார்கள்; மரணத்தைத் தவிர்க்க மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும் சொன்னார்கள்; அதை இவருக்குக் கொடுக்கவும் செய்தார்கள். வாங்கிக் குடித்த மன்னர்  'சின் சி ஹூவாங்' பரலோகம் போய்ச் சேர்ந்தார்.

மருத்துவர்கள், மருந்தில் பாதரசம் கலந்திருந்தது மன்னருக்குத் தெரிந்திட வாய்ப்பே இல்லாமல் போனது!

                                                       ...............

*** இது கதை அல்ல; வரலாறு என்கிறது இந்தக் கட்டுரையை வெளியிட்ட இணையத்தளம். இந்தப் பதிவு அதிலிருந்து சுடப்பட்ட சிறு பகுதி மட்டுமே; சற்றே மாற்றியமைக்கப்பட்டதும்கூட.

===========================================================================

https://www.neotamil.com/history/imsai-arasargal-series-most-breathtaking-life-history-of-china-first-emperor-qin-shi-huang/


புதன், 16 ஜூன், 2021

புதிய அறிவியல் செய்தியும் பழைய இதிகாசப் புளுகும்!![2 பதிவுகள்]


பதிவு ஒன்று:       புதிய   அறிவியல் செய்தி

ப்பானில் உள்ள நாரா மகளிர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், சாகோக்ளோசான் என்ற கடல் அட்டை குறித்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர். ஒரு நாள்.....

தங்கள் ஆய்வுக்கூடத்தில் இருந்த கண்ணாடி மீன் தொட்டியில், இருந்த ஒரு கடல் அட்டையின் தலை மட்டும் தனியே நீந்தியபடி இருந்தது. அதன் உடல் தனியே மிதந்து சில மணி நேரத்தில் இறந்துவிட்டது. அடுத்து நடந்த நிகழ்வு அவர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியது.

உடல் அழிந்துவிட்டாலும், அழியாமல் இருந்த தலை,  மெல்ல மெல்ல, தனது உடலை வளர்த்துக்கொண்டே வந்தது. அடுத்த சில நாட்களில், அந்த அட்டைக்கு, இதயம் உள்பட உடலின் அனைத்து உள் அங்கங்களும் கொண்ட புதிய உடல் உருவாகிவிட்டது. 

அட்டைகளுக்கு இப்படி ஒரு சக்தி இருப்பதை முன்முதலாக அறிந்த விஞ்ஞானிகள் இவர்களே. அட்டைகள் உலகில் இப்படி ஒரு நிகழ்வு பதிவாவதும் இதுவே முதல் முறை என நாரா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.

நன்றி: https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=665191

===========================================================================


பதிவு இரண்டு:                             பழைய இதிகாசப் புளுகு

மகாபாரதக் கதையில் வரும் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் கொள்ளுப்பாட்டி ஆவார் 'சத்தியவதி' . இவர் உபரிசரன் என்ற மன்னனின் மகள்; பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் கொள்ளுப்பாட்டனான 'சாந்தனு'வின் இரண்டாவது மனைவி; முன்னதாக, 'பராசரன்' என்னும் முனிவருடன் 'கூடி'[இது வேறு கதை] வேதங்களையும் மகாபாரதத்தையும் தொகுத்தவரான வியாசரை இளவயதில் பெற்றெடுத்தத் தாய்; மிகப் பெரிய குரு வம்சத்தின் இராஜமாதா ஆவார்[விக்கிப்பீடியா].

இந்த ராஜமாதா பிறந்த கதை மிக மிக மிகவும் சுவையானது. கற்பனையின் எல்லையைத் தொட்டுவிட்ட கதை. இதற்கு இணையானதொரு கற்பனைக் கதை[புளுகுக் கதை] இன்றளவும் படைக்கப்படவில்லை என்றே சொல்லலாம்.

வாசித்து இன்புறுக! அவ்வப்போது நினைவுகூர்ந்து கழிபேருவகை எய்துக!!

பரிசரன், ஒரு நாள் வேட்டை முடிந்து ஒரு மரத்தின் அடியில் ஓய்வு எடுத்த போது, தன் மனைவியோடு இன்பமாக இருப்பது போல் நினைக்க, அந்தக் கணமே அவரிடமிருந்து விந்து வெளிபட்டுவிட்டது[அடப் பாவமே!]. அதை வீணாக்க மனம் இன்றி ஓர் இலையில் விட்டு ஒரு கிளியிடம் கொடுத்துத் தன் மனைவியிடம் சேர்க்கும்படி வேண்டிக்கொண்டார்[அதை என்ன செய்யணும்னும் சொல்லியிருக்கலாம்].

அதை எடுத்துக் கொண்டு பறந்த  கிளியை ஒரு பருந்து தாக்கிவிட, இலையிலிருந்த விந்து கடலில் விழுந்தது.

கடல் நீரில் விழுந்த அந்த விந்துத் துளியை ஒரு மீன் விழுங்கியது. அந்த மீன், பிரம்மாவின் சாபத்தால் உருவம் மாறியிருந்த தேவ கன்னிகையாவாள்[மனிதக் குழந்தையைப் பெற்ற பின்னர் சாபம் நீங்கி மீண்டும் தேவ கன்னிகை ஆகிறாள்].

சில நாட்களுக்குப் பின் மீனவர்கள் அந்த மீனைப் பிடித்தபோது அதன் வயிற்றில் ஆணும், பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் இருக்கக் கண்டு மன்னன் உபரிசரனிடம் அவற்றைக் கொடுத்தனர். ஆண் குழந்தையை எற்றுக்கொண்டு, பெண் குழந்தையை மீனவர் தலைவனிடம் கொடுத்து[நல்ல வேளை, எருக்கம்பால், நெல்மணின்னு எதையும் தேடிக்கொள்ளவில்லை!] வளர்க்குமாறு கூறிவிட்டார் அவர்[இதன் பின்னரான கதையெல்லாம் முன்பே தொலைக்காட்சித் தொடர்களில் பார்த்திருப்பீர்கள்]. இதுதான் சத்தியவதியின் பிறப்பு ரகசியம். 

தங்களின் வருகைக்கும் வாசித்து மகிழ்ந்தமைக்கும் நன்றி! 

===========================================================================

                

செவ்வாய், 15 ஜூன், 2021

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு 'நினைவூட்டல்' மடல்!




தமிழர்களின் இனவுணச்சியை மழுங்கடிப்பதில் முனைப்புடன் செயல்படும் 'தினமலர்' இணைய இதழில் பின்வரும் செய்தி இடம்பெற்றுள்ளது. 

'உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான், நாடு முழுதும் மருத்துவக் கல்வியில் சேர, நீட் தேர்வுக்கான சட்டம் இயற்றப்பட்டு, அது மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. எனவே, இதில் எதுவும் செய்ய முடியாது என, எல்லா மாநில அரசுகளும், நீட் தேர்வை ஏற்றுக் கொண்டு விட்டன.....' 

தீர்ப்புக்கு முன்னரே 'நீட்' தேர்வுக்கான ஏற்பாடுகளை நடுவணரசு செய்து முடித்துவிட்டது  என்பதை இருட்டடிப்புச் செய்துவிட்டது இந்த இதழ்.

//நடுவணரசு நீட் தேர்வை நடத்த முற்பட்டபோதுதான்  பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், புதுச்சேரி, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் 'நீட்'ஐ எதிர்த்து வழக்குத் தொடுத்தன என்பது ஊடகச் செய்தி//['ஆதாரம்:  'நீட் தேர்வுக்கு எதிராகப் பொங்கி எழுந்த 7 மாநில முதலமைச்சர்கள்:' https://tamil.asianetnews.com/politics/7-state-chief-ministers-who-raged-against-neet-exam-vck-party-suggests-that-eps-should-join-it--qftbqv].

'நீட்'டுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகுதான் அதை, வழக்குத் தொடுத்த மாநிலங்கள் ஏற்றுக்கொண்டன என்பதே உண்மை. தமிழ்நாட்டை ஆண்ட அப்போதைய அ.தி.மு.க. அரசு மௌனம் சுமந்திருந்தது.

தி.மு.க., ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், முதல்வர் மு.க. ஸ்டாலின், 'நீட்' தேர்வின் பாதிப்புகளை ஆராய அறிஞர் குழுவை அமைத்துள்ளார்.

குழுவின் ஆய்வுரை கிடைக்கப்பெற்றவுடன், அதைச் சார்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ள அவர், 'நீட்'ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த ஏழு மாநில முதல்வர்களுக்கும் குழுவின் ஆய்வுரைகளை  அனுப்பி வைத்திடல் வேண்டும் என்பது நம்மவர்  கோரிக்கை ஆகும்.. 

அது, தமிழ்நாடு அரசுடன் அவர்களும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பாக அமையும்.

ஏனைய மாநில முதல்வர்களுக்கும் அனுப்பினால், அவர்களும் 'நீட்' குறித்த அவர்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்வார்கள் என நம்பலாம்.

இச்செயல்பாடு குறித்து, முதல்வர் அவர்கள் ஏற்கனவே சிந்தித்திருக்கக்கூடும். எனவே, இது ஒரு 'நினைவூட்டல்' மடல் மட்டுமே.

===============================================================================================


திங்கள், 14 ஜூன், 2021

இப்படியும் ஓர் 'அப்பாவி'ப் பெண்ணா!?!?!

கீழ்க்காணும் படத்தை வெகுவாக ரசித்தேனே தவிர, விமர்சிக்கத் தோன்றவில்லை. நீங்கள் எப்படியோ?!


                                       *    *    * 

நன்றி:



ஞாயிறு, 13 ஜூன், 2021

அவதாரங்களைத் துதிபாடி 'அபயக் குரல்' எழுப்புவோம்!!!

உலக நாடுகள் அனைத்துமே 'கொரோனா கொடுந்தொற்றை அழித்தொழிக்க அயராமல் முயன்றுகொண்டிருக்கின்றன. இதற்கிடையே.....

'மூன்றாவது அலை வரும். நான்காவதும் வரும்' என்றெல்லாம் ஆய்வாளர்கள் எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள். நான்காவதற்குப் பின்னரும் 'கொரோனா' அலை சுனாமியாக மாறி மனிதகுலத்தை நிலைகுலைய வைத்தலும் சாத்தியமாகக்கூடும்.

உலக நாடுகள் தம்மாலான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில், மக்கள், அரசுகளின் வழிகாட்டுதல்களின்படி முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்றவற்றைச் செயல்படுத்துவதோடு, அவர்கள் ஆற்றிட வேண்டிய மிக மிக மிக முக்கியக் கடமை ஒன்றும் உள்ளது.

நம்மினும் மேலான சக்தியாகக் கருதப்படும் கடவுளை நினைந்து அபயக்குரல் எழுப்பி மனித இனத்தைக் காப்பாற்றுமாறு வேண்டிக்கொள்வதே அந்தக் கடமையாகும். அவ்வாறு வேண்டிக்கொள்வதில் ஓர் இடர்ப்பாடும் உள்ளது. அது.....

கடவுளைப் பொருத்தவரை, வேண்டுதல் வைப்பவர்களின் பாவபுண்ணியங்களைக் கணக்கிட்டுப் பார்த்துத்தான் முடிவெடுப்பார்["கடவுளுக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கு" -ஜக்கி] என்பதால் நம் கோரிக்கை நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். அதற்குள் கொரோனா, தன் கோரதாண்டவத்தை ஆடி முடித்துவிடும்.

அதைத் தடுத்து நிறுத்திட வழியே இல்லையா எனின், உண்டு.

அது எது?

'கடவுளின் மறு பிரதிகளான 'சத்குரு ஜக்கி வாசுதேவ்' சுவாமிகள்['சத்' -பரம்பொருள்; கடவுள்களுக்கெல்லாம் குரு]  'இராமகிருஷ்ண நித்தியானந்தா சுவாமிகள்', 'ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சுவாமிகள்', 'பால் தினகரன்'[சுவாமிகள்னு சொல்லலாமா?], 'சிவசங்கர் பாபா சுவாமிகள்' போன்ற 'அவதாரங்கள்' நம் கண் முன்னே நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள்[கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் கடவுள்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை], கொரோனா அரக்கனை நிர்மூலமாக்கி மனித இனத்தைக் காப்பாற்றுவார்கள் என்று மனதார நம்பலாம். 

ஆகவே மக்களே, 

நீங்கள் வழக்கமாக, உங்களின் மனம் என்னும் கோயிலில் குடியேற்றி வழிபடும் அவதாரங்களைத் தியானித்து, "ஓ... நடமாடும் கடவுள்களே, நாடுதோறும் சென்று, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அத்தனை பேரையும், முகக் கவசம் அணியாமல்[கவசம் அணிந்தால், கொரோனா அவர்களை அடையாளம் காண்பது சாத்தியம் ஆகாமல் போகலாம்]  சந்தித்து, அவர்கள் நீடூழி வாழ ஆசி வழங்குவீர்" என்று வேண்டிக்கொள்ளுங்கள்.

வேண்டுதல் 100000000000% நிறைவேறும் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகத்திற்கு இடமில்லை!

====================================================================================


சனி, 12 ஜூன், 2021

'இது'வும் வேண்டாம் 'அது'வும் வேண்டாம்... எனில், 'எது' வேண்டும்?

                                  'படிப்பினை'க் கதை! வாசிக்கத் தவறாதீர்!!                                                                               

                                       


                                                     
 துருவங்கள்[கதை]                                                  

ராண்டுக்கும் மேலாகக் காதலித்து மணந்துகொண்டவர்கள் அனிதாவும் அன்பரசுவும். ஒரு குழந்தை பிறந்த ஆறேழு ஆண்டுகளிலேயே இருவரும் மணவிலக்குக் கோரி நீதிமன்றம் சென்றது சொந்தபந்தங்களுக்கும் அண்டை அயல் வீட்டாருக்கும் புரியாத புதிராக இருந்தது.

அது புதிரல்ல; இருவரும் கட்டிக்காத்த ரகசியம் என்பது வழக்கு விசாரணை தொடங்கியபோது அம்பலமானது.

அனிதா பக்திப் பரம்பரையில் வந்தவள்; வளர்ந்தவள். அன்பரசு பக்கா நாத்திகன்.

காதலுக்குத்தான் கண் தெரியாதே. காதலித்துக் கல்யாணம் ஆகும்வரை இருவருக்குமே இது விசயத்தில் தாங்கள் இருவேறு துருவங்கள் என்பது தெரியாமல் போனதில் ஆச்சரியம் இல்லை.

ஆனால், திருமணம் முடிந்து இருவரும் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட நேர்ந்தபோதெல்லாம், அவன் சாமியை வழிபடாமல் கைகட்டி நின்ற கோலம் அவள் மனதில் சந்தேகத்தைத் தோற்றுவித்தது; பின்னர் விசாரிக்கலாம் என்று அமைதி காத்தாள்.

காதல் மனைவியுடன் சுற்றுலாச் செல்வதில் காட்டிய ஆர்வத்தை, அவளுடன் கோயில் குளங்களுக்குச் செல்வதில் அன்பரசு காட்டவில்லை. அவளுக்கு ஒரு துணையாக உடன் சென்றானே தவிர பக்தி உணர்வை வெளிப்படுத்தியதில்லை. 

"மனசுக்குள்ள மட்டுமே சாமி கும்பிடுவீங்களா?" என்று அனிதா தன் சந்தேகத்தை ஒரு இணக்கமான சூழ்நிலையில் வெளிப்படுத்தியபோது, தான் நாத்திகன் என்பதை அன்பரசு ஒப்புக்கொண்டான். "இதைப் பத்தி நாம் விவாதிக்க வேண்டாமே" என்று அவன் கேட்டுக்கொண்டபோது அவள் மௌனம் சுமந்திருந்தாள். அவளின் மௌனம் சம்மதத்தின் அடையாளமா என்பதை அவனால் அறிய இயலவில்லை.

நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன. பக்தி விசயத்தில் இருவருக்கும் சமரசம் ஏற்படவில்லை. இருந்தும், கலைச்செல்வி பிறந்து சில ஆண்டுகள்வரை குடும்பத்தில் அமைதியே நிலவியது.  தன் மகள் தன் கணவனைப் போலவே நாத்திகவாதியாக ஆகிவிடக்கூடாது என்ற எண்ணத்தில், அடிக்கடி அவளைக் கோயில்களுக்கு அழைத்துப் போனாள் அனிதா. அவள் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்ததும் ஒரு பேழை நிறையப் பக்தி நூல்களை வாங்கிவந்து அடுக்கினாள். ஒரு நல்ல நாள் பார்த்துப் பஜனை வகுப்புக்கு அனுப்பினாள்.

இது அன்பரசுவை உசுப்பிவிட்டது. "இவளை நீ கோயில்களுக்குக் கூட்டிட்டுப் போறே. படிக்கிறதுக்குப் பக்திப் புத்தகங்கள் கொடுக்கிறே. அதையெல்லாம் நான் தடுத்ததில்ல. பஜனைக்கு அனுப்புறது அதிகபட்ச முட்டாள்தனம். நான் அனுமதிக்க மாட்டேன். என் கிட்ட கடவுள் மறுப்புத் தொடர்பான புத்தகங்கள் இருக்கு. அதுகளையும் இனி இவள் படிக்கணும். எதையும் கட்டாயப்படுத்தித் திணிக்க வேண்டாம். அவள் போக்கில் வளரட்டும். சுயமா சிந்திக்க ஆரம்பிச்சா, எது தப்பு, எது சரின்னு அவளுக்குத் தெரிஞ்சுடும்" என்றான் அன்பரசு.

"பக்திதான் மனசைப் பண்படுத்தும். நாத்திகம் மனுசனை மிருகமாக்கும்" என்றாள் அனிதா.

“மூடநம்பிக்கையின் ஆணிவேரே பக்திதான்" என்று பதிலடி தந்தான் அன்பரசு. வாக்குவாதம் தொடர்ந்தது. இருவருமே அவரவர் பின்பற்றும் கொள்கையில் பிடிவாதம் காட்டினார்கள். ஒரு கட்டத்தில், அவன் வைத்திருந்த நூல்களை அவள் தீயிட்டுக் கொளுத்தினாள். பதிலுக்கு அவனும், அவள் சேமித்து வைத்திருந்த பக்தி நூல்களை அள்ளி எடுத்துப்போய் ஆற்று வெள்ளத்தில் வீசிவிட்டு வந்தான்.

நிலைமையின் விபரீதம் புரிந்ததால் மணவிலக்குக் கோரி இருவருமே நீதிமன்றத்தை அணுகினார்கள்.

ஒருமித்த மனநிலையில் மணவிலக்குக் கோரியதால், உரிய காலக்கெடுவுக்குப் பிறகு பிரிந்து வாழ அனுமதி அளித்தார் நீதிபதி; தன் விருப்பம்போல் தாய்தந்தையர் இருவருடனும் கலைச்செல்வி இருந்துகொள்ளலாம் என்றும் உத்தரவிட்டார்; தன்னுடைய அறைக்குச் சென்றார்.

சற்று நேரம் கழித்து, "உங்க ரெண்டு பேர்கிட்டேயும் தனிப்பட்ட முறையில் பேச நினைக்கிறார் நீதிபதி. விருப்பம் இருந்தா நீங்க அவரை அவர் வீட்டில் நாளைக் காலையில் சந்திக்கலாம்" என்று சொல்லி, அன்பரசுவிடமும் அனிதாவிடமும் நீதிபதியின் இல்ல முகவரியைக் கொடுத்துவிட்டுப் போனார் நீதிமன்ற அலுவலர் ஒருவர்.

மறு நாள் காலையில் அனிதாவும் அன்பரசுவும் தீர்ப்பு வழங்கிய நீதிபதியை அவருடைய வீட்டில் சந்தித்தார்கள்.

தனக்கு எதிரே அமர்ந்திருந்த அவர்களைப் பார்த்து நீதிபதி பேசினார்.

"நேற்று நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன்" என்றவர், இருவர் மீதும் பரிவு செறிந்த பார்வையைப் படரவிட்டவாறு சொன்னார். "உங்களுக்குச் சொன்னதுதான் என்னுடைய கடைசித் தீர்ப்பு. பக்தி விசயத்தைத் தவிர மற்ற வகையில் மனம் ஒத்து வாழ்ந்த உங்களைப் பிரிச்சதில் எனக்கு ரொம்பவே வருத்தம். உங்களில் ஒருத்தர் ஆத்திகவாதி. இன்னொருத்தர் நாத்திகவாதி. அவங்கவங்க கொள்கையில் பிடிவாதமா இருக்கீங்க. நல்லது. ஆனா....."

சற்றே தாமதித்துப் பேசலானார் நீதிபதி. "இதுவரை கடவுள் உண்டுன்னு சொன்ன யாரும் அதுக்கான ஆதாரங்களை வெளியிட்டதில்லை. எல்லாம் அனுமானம்தான். கடவுள் இல்லேன்னு சொல்லுறவங்களும் கடவுளை நம்ப முடியாதுன்னு சொல்லுறாங்களே தவிர, கடவுள் இல்லேன்னு ஆதாரத்தோடு நிரூபிச்சதில்ல. இது முற்றுப் பெறாத விவாதம். இப்போ இது நமக்கு வேண்டாம். நான் உங்களுக்குச் சொல்ல நினைக்கிறதைச் சொல்லிடுறேன்.....

பிறந்து வாழுற அத்தனை பேரும் செத்துப்போறது உறுதி. செத்ததுக்கப்புறம் என்ன ஆகிறோம் என்பது யாருக்கும் தெரியாது. இப்படி ஆவோம் அப்படி ஆவோம்னு நம்பிக்கை அடிப்படையில் சொல்லப்படுறதையெல்லாம் நம்பி, நிகழ்கால வாழ்க்கையை வீணடிக்கிறது பைத்தியக்காரத்தனம்.....

ஆத்திகமோ நாத்திகமோ, வாழுற கொஞ்சம் நாட்களையும் அமைதியாகவும் சந்தோசமாகவும் கழிக்க அது உதவணும். கடவுள், பக்தி, பகுத்தறிவுன்னு எல்லாமே நமக்காகத்தான். மக்கள் இணைஞ்சு வாழ இதுகளெல்லாம் உறுதுணையா இருக்கணுமே தவிர பிரிக்கிறதுக்காக அல்ல.

சட்டப்படி, பிரிஞ்சி வாழ உங்களை அனுமதிச்சேனே தவிர உங்களைப் பிரிக்கிறது என் விருப்பம் அல்ல. உங்களைச் சேர்த்து வைக்கத்தான் இங்கே வரவழைச்சேன். நல்ல முடிவோடு மறுபடியும் இங்கே வருவீங்கன்னு நம்புறேன்" என்று சொல்லி வழியனுப்புவது போல் எழுந்து நின்றார் நீதிபதி.

"நாங்க சேர்ந்து வாழ்வோம். நம்புங்க" என்று சொல்லி, அன்பரசுவும் அனிதாவும் இணைந்து  நீதிபதியை வணங்கினார்கள்; எழுந்து நின்று மனம் நெகிழ்ந்து தழுதழுத்த குரலில் நன்றி சொன்னார்கள்.

============================================================================================