எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 2 ஆகஸ்ட், 2025

ஈசலும் மனிதனும் வேடிக்கை பார்த்தலும்!

ராணிக் கரையான் இடும் முட்டையிலிருந்து இறக்கையுடன் வெளியேறிப் பறக்கத்தொடங்கும் ஈசல்களில் 80% தவளை, பல்லி, ஓணான், உடும்பு போன்றவற்றுக்கு இரையாகிவிடுகின்றன. எஞ்சியவை, மண்ணில் ஈரப்பதம் இருந்தால்[மட்டுமே] உள்ளே சென்று உரிய வகையில் இனவிருத்தி செய்ய இயலும். அது இயலாதபோது அவற்றிலும் மிகப் பெரும்பாலானவை மரணத்தைத் தழுவுகின்றன.

இக்காரணத்தால்தான், ஈசலின் ஆயுட்காலம் ஒரு நாள் மட்டுமே என்கிறார்கள்.

அந்த ஒரே ஒரு நாளில் அது சாதிப்பது கண்களுக்குத் தென்படுவனவற்றை வேடிக்கை பார்ப்பது மட்டுமே.

ஈசலோடு ஒப்பிடும்போது மனிதனின் ஆயுள் மிக நீண்டதுதான்.

ஆண்டவன் தனக்கு  அருளியது அது என்றெண்ணி, துன்பங்களுக்கிடையே இன்பங்களைத் துய்க்கிறான் அவன்; சுகபோகங்களில் மிதக்கிறான்.

வயது ஆக ஆக, அந்த அனுபவங்களுக்கான கால அளவும் குறைந்துவருகிறது.

வயது அறுபதைத் தாண்டினால்[அதுவரை பிரச்சினைகள் & போராட்டங்கள் காரணமாக வயதாவது பற்றிய நினைப்பு அதிக அளவில் வருவதில்லை] வயதாவது குறித்து வருந்துகிறான்.

மேலும் அது அதிகரிக்கும்போது, குத்துமதிப்பாகக் கணக்குகள் போட்டு, இன்னும் அனுபவிக்க ஓரளவு ஆயுள் இருக்கிறது என்று அவனால் ஆறுதல் பெற இயலுகிறது.

அதற்கு மேலும் வயது கூடக்கூட, அனுபவிப்பதற்கான ஆற்றல் குறையக் குறைய, “இருக்கும்வரை அனுபவித்தால் போதும்” என்று தன்னைத்தானே தேற்றிக்கொள்கிறான்.

தனக்குள்ள அதிகபட்ச[100+] வயதை நெருங்கும்போது, மரணம் எப்போதும் சம்பவிக்கலாம் என்று நம்புகிறான்; மனம் கலங்குகிறான்.

மிச்சம் சொச்சம் என்றிருந்த கொஞ்சம் ஆசைகளையும் முடக்கிப்போட்டுவிட்டு, “இருக்கும்வரை ருப்பவற்றையும் நடப்பவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால் போதும்” என்னும் முடிவுக்குத் தள்ளப்படுகிறான்.

ஆக, ஏறத்தாழ முதுமைப் பருவம் என்பது ‘வேடிக்கை’ பார்ப்பதற்கானது மட்டுமே. அது.....

பிறந்து இருந்து எதிரே இருப்பவற்றையும் நிகழ்வனவற்றையும் வேடிக்கை பார்த்துச் செத்துப்போகிறதே ஈசல் அதன் ஒரு நாள்  வாழ்க்கைக்கு ஒப்பானது.

ஆக.....

“ஒரே ஒரு நாள் வாழ்ந்து சாகும் ஈசலைவிடவும் மனிதன் நூறு ஆண்டுகள் வாழ்ந்து சாதிப்பது ஏதுமில்லை.” 

இதை உணரும் வாய்ப்பு அனைவருக்கும் வாய்த்தால், உலகில் சூதுவாது, வஞ்சகம், மோதல், அடிதடி, குத்துவெட்டு, கொலை என்றிவை தவிர்த்து மக்கள் மன அமைதியுடன் வாழ்வது சாத்தியம் ஆகும்.

                                                         *   *   *   *   *

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D