ஓர் ஆய்வு நூலிலிருந்து சுட்டது இந்தப் பதிவு. நடுநடுவே 'கொட்டாவி' விடுவதைத் தவிர்க்கச் சுடச்சுடத் தேனீர் பருகுங்கள். ஹி...ஹி...ஹி! 'கதை இலக்கியத்தைப் பொருத்தவரை, கருப்பொருளுக்குத் தரப்படும் முக்கியத்துவம், அதை வெளிப்படுத்துகிற வடிவத்திற்கும் தரப்படுதல் அவசியத் தேவையாகும்.
வாசகனைத் தொடர்ந்து படிக்கத் தூண்டும் வகையில் கதை தொடங்கப்படுதல் வேண்டும். கருப்பொருள் முழுமையாக உணரப்படும் வகையில் கதையின் ‘வடிவம்’ அமைவது முக்கியம். கதைக்குத் தொடர்பில்லாத உரையாடல்களோ, சம்பவங்களோ, வர்ணனை போன்ற பிற அம்சங்களோ இடம்பெறுதல் கூடாது.
விறிவிறுப்பான நடையில் காட்சிகளையும் நிகழ்வுகளையும் வாசகனின் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் வல்லமை கதாசிரியனுக்குத் தேவை.
கதையை எழுதுவதற்கு முன்னரே, அக்கதை எழுதப்படுவதன் நோக்கம் என்ன என்பதை ஆசிரியன் தெள்ளத் தெளிவாகப் புரிந்து வைத்திருத்தல் இன்றியமையாத் தேவையாகும்.
முனைவர் ‘பசி’பரமசிவத்தைப் பொருத்தவரை, மேற்கண்ட நெறிமுறைகளை மனதில் அழுத்தமாகப் பதிவு செய்தவர் என்பதற்கு அவரின் படைப்புகள் அனைத்துமே சான்று பகர்கின்றன.
தொடக்கம்:
‘வடித்தெடுத்த ஒரே கல்லால் ஆன அந்தச் சிறிய மலையின் ஒரு பக்கத்துச் சரிவில், மதி முகம் வாட, மாந்தளிர் மேனி துவள தாவி ஏறிக்கொண்டிருக்கிறது ஒரு பெண்ணுருவம்!’ -இது, பரமசிவத்தின் ‘சாவைத் தேடி ஒரு பாவை’ என்னும் கதையில் இடம்பெற்றுள்ளது.
“தூ...நீங்களும் ஒரு ஆண்பிள்ளையா? நான் ஊரிலிருந்து வந்ததும் வராததுமா என்கிட்ட இதைச் சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்ல?”
-சிக்கல் நிறைந்த ஒரு குடும்பக் கதையின் முன்னோட்டமாக, சூடானதொரு இந்த உரையாடலைத் தொடக்கமாகக் கொண்ட கதை, ‘தம்பிக்குப் பிள்ளை பிறந்தால்....’ [‘பசியோ பசி’-சிறுகதைத் தொகுப்பு] என்பதாகும்.
“நீ இந்த ஊரைவிட்டே ஓடிப் போகணும். அப்போதுதான் மழை பெய்யும்னு மாரியாத்தாவே சொல்லிட்டா. உம்...உம்...புறப்படு. திரும்பிப் பார்க்காம போ. ஊர் எல்லையைத் தாண்டிப் போயிடு.”
மேற்கண்ட உரையாடல், 'அவன் மனிதன்’ என்னும் சிறுகதையின் தொடக்கமாகும்.
“என்ன சொன்னீங்க, போலீஸ் ஸ்டேசனிலிருந்து ஃபோன் வந்ததா? நம்ம சுதாவைக் கண்டுபிடிச்சிட்டாங்களா?” -சோகம் வேரோடியிருந்த விழிகளில் உற்சாகம் பீறிட வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள் சுகுணா. அவள் முகமெங்கும் சந்தோசக் கீற்றுகள். [‘சுகுணா தூங்குகிறாள், பாக்யா, ’பிப் 14-20;1997, ப.62-65]
ஆழ்ந்த மன வருத்தத்தின் வெளிப்பாடாக அமைந்த இந்தத் தொடக்கம், மறக்க இயலாதது.
‘மூத்த மகள் ரமா பற்ற வைத்த நெருப்பு, அலுவலகம் வந்து, கிளை மேலாளர் இருக்கையில் அமர்ந்த பின்னரும் சுப்பராமன் நெஞ்சில் கனன்றுகொண்டிருந்தது. இப்படித் தொடங்குகிறது,’முத்தாயி மொபட்டில் போகிறாள்’ [ராணி வார இதழ், 20.04.1986, ப.25-26]என்னும் சிறுகதை.
‘மூடப்பட்ட டிக்கெட்டு கவுண்டரை முறைத்துப் பார்த்துவிட்டு, பிறந்த மேனியாய்ப் பளபளக்கும் பல வண்ணச் சுவரொட்டுகளை ஏக்கத்தோடு வெறித்தபடி அந்தக் குளுகுளு திரயரங்கத்திடம் விடை பெற்றுக்கொண்டிருந்த என்னை அந்தக் காட்சி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.' இது ‘அவன் ஒரு.....’ [ஓடிப்போனவள் - சிறுகதைத் தொகுப்பு] என்ற கதையின் சுவாரசியமான தொடக்கமாகும்.
கீழ்வருவது, ‘பரிசு விழுந்த சீட்டு’ என்ற கதையின் ஆரம்பமாகும்.
'மாலைப் பத்திரிகையைப் பார்த்துவிட்டு இன்ப அதிர்ச்சிக்கு ஆளானான் சுருளி. அன்றைய குலுக்கலில் அவனிடம் இருந்த சீட்டுக்கு லட்சம் ரூபாய் பரிசு விழுந்திருந்தது.
முதல் வேலையாகச் செண்பகத்தைப் பார்த்து அவள் கையில் அடித்துச் சத்தியம் செய்து, திருட்டுத் தொழிலுக்குத் தலை முழுகுவது என்று அவன் முடிவெடுத்தான்.'
பரிசுப் பணத்தை அவன் பெற்றானா, திருட்டுத் தொழிலைக் கைவிட்டானா என்று அறியும் ஆவலைத் தூண்டுகிறது இந்தத் தொடக்கம்.
‘பார்வதிக்கு நாளை கல்யாணம். இந்த ஊமைச்சியைக் கை பிடிக்க எங்கிருந்தோ ஒரு மாப்பிள்ளை வந்து குதித்திருக்கிறான். அவளை அனுபவிக்கக் கன்னி வைத்துக் காத்திருந்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது’
இப்படி வாசகனுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஆரம்பமாகிறது ‘ஊமைச்சியின் எச்சில்’ [சேலம் மாலை முரசு] என்னும் சிறுகதை.
“வேசி...வேசி...வேசி... நீ நூத்துக்கு நூறு ஒரு வேசிதான். இதை எத்தனை தடவை வேணுன்னாலும் எந்தக் கோயிலில் வைத்தும் சத்தியம் செய்வேன்” என்றிப்படித் தாலி கட்டிய ஓர் ஆடவன் தன் மனைவியை அச்சுறுத்துவதாகத் தொடங்குகிறது ‘முடிந்த கதை தொடர்ந்ததம்மா!’ [சேலம் மாலை முரசு] என்னும் கதை.
இப்படி, இன்னும் பல சுவையான தொடக்கத்திற்கான எடுத்துக்காட்டுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இவை போன்ற பல தொடக்கங்களைப் ‘பசி’பரமசிவத்தின்[குமுதம், குங்குமம், ராணி, ஓம்சக்தி, வாரமலர், தினகரன் மலர், பாக்யா என்று பல முன்னணி இதழ்களில் இவரின் படைப்புகள் வெளியாகியுள்ளன] படைப்புகளில் காண முடிகிறது..
நடை:
வாசிப்பின்போது, கதைப் போக்கில் தொய்வு ஏற்படாமல் தடுப்பதில், ‘மொழிநடை’ முக்கியப் பங்கு வகிக்கிறது. எழுத்தாளர் பரமசிவத்தின் மொழிநடை தூய தமிழில் அமைந்துள்ளது; உணர்ச்சி மயமான சொல்லடுக்குகளை உள்ளடக்கியது. வினா, வியப்புக் குறியீடுகளை தன்னகத்தே கொண்டது. சில எடுத்துக்காட்டுகள்:
‘பிறந்த அன்றும் அவன் அழுதான். அவனின் பதினொரு வயதில் குடிகாரத் தந்தையை உதறிவிட்டுத் தாய் ஓடிப்போன அன்றும் அழுதான்; இன்று இருபது வயதுக் காளை ஆகிவிட்ட நிலையிலும் அழுதுகொண்டிருக்கிறான். பட்டைச் சாராயத்துக்கும், பரத்தையர் சுகத்துக்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட அப்பனை நினைத்தும் அழுதுகொண்டிருக்கிறான்....’ [ஓடிப்போனவள், சிறுகதைத் தொகுப்பு, ப.63]
‘எவ்வளவு மனிதர்கள்! எத்தனை தெய்வங்கள்! அபயம் கேட்டுச் சோர்ந்து போய், “ஐயோ” என்று அலறியவாறு மீண்டும் பாலத்தை நெருங்கி, பக்கப் பாதையில் சரிந்து, நீர் வற்றிக் கிடந்த ஆற்றுக்குள் இறங்கி மணலில் ஓடினான் அவன்.’
‘மணல் மேடுகளில் தடுக்கி விழுந்து உருண்டான். காலிகள் அடித்ததால் மண்டையிலிருந்து வடிந்து உறைந்துபோயிருந்த குருதித் தாரைகளில் மணல் துகள்கள் ஒட்டிக்கொண்டு நறநறத்தன.’
‘வெட்டி எடுக்கலாம் போன்ற மையிருட்டில் அவன் இலக்கின்றி ஓடினான். “மல்லீ” என்று பயங்கரமாக அவன் எழுப்பிய கூக்குரல், பரந்த ஆற்றுப் பரப்பில் தங்குதடை ஏதுமின்றிக் காற்றில் பரவி அடங்கிக்கொண்டிருந்தது.’
‘தோல்வி அவனை நெஞ்சில் அறைந்தது. ஆற்றங்கரைப் புதர் மறைவிலோ மணல் மேடுகளின் சரிவிலோ, வல்லூறுகளின் பிடியில் அந்த மென் புறா படும் மரண வேதனையை மனம் கற்பனை செய்து செய்து அவனின் நாடி நரம்புகள் ஒடுங்கிப் போயின.’
‘அவன் நிலைகுலைந்து போனான். அதர்மம் கொக்கரிக்கும் அந்தகாரத்தில், ஓடியோடி பாலத்தடியில் தேடினான். தூண்களில் மோதிச் சோர்ந்தான்.’
ஓடிப்போனவள் சிறுகதையில் சிறந்த நடைக்கு எடுத்துக்காட்டாக இப்படிப் பல இடங்களைக் காட்டலாம்.
அழகிய நடைக்கு, அவன் மனிதன்’ என்னும் கதையிலிருந்து ஓரிடம்:
‘மழை வலுத்தது. வருணனுடன் வாயு பகவானும் களத்தில் இறங்கினான்.
”சளேர்...சளேர்” எனத் தரையில் அறைந்து மழை கொட்டியது. கோயில் கூரை மீதும், அதை ஒட்டியிருந்த தகரக் கொட்டகை மீதும் தாளமிட்டு அட்டகாசம் புரிந்தது.
பேயாட்டம் ஆடும் மரமட்டைகளை உசுப்பிவிட்டு விசிலடித்தது சூறாவளி. இடித்து முழக்கி டமாரம் தட்டியது மேகக் கூட்டம்.'
’பரம்பரைச் சொத்து’ கதையில் இடம்பெற்றவை கீழ்வரும் வரிகள்:
‘இரண்டு பங்காளிகளும் பூமி விளைந்தபோதும் அடித்துக்கொண்டார்கள்; காய்ந்தபோதும் கட்டிப்புரண்டு மண்டையைப் பிளந்துகொண்டு வக்கீல் வீட்டுத் திண்ணைகளிலும் நீதிமன்ற வாசல் படிகளிலும் தவம் கிடந்தார்கள்...’
‘தன் எதிரியான சுப்பண்ணன் நிலத்தில் சாணம் போட்டதற்காக, தன் சொந்த மாட்டையே கல்லால் அடித்துக் காலை முறித்தவர் கருப்பண்ணன். இவருடைய பட்டி நாய்க்கு வால் துண்டிக்கப்பட்டிருக்கும். பங்காளியின் பெட்டை நாயைப் பார்த்து வாலாட்டியதற்குக் கிடைத்த தண்டனை அது! இப்படி எத்தனையோ...’
‘கட்டின கோவணத்தோடு கூலி வேலை செஞ்சாலும் இந்தப் போலி கௌரவம் உங்களைவிட்டுப் போகாது. இது உங்களுக்குப் பரம்பரைச் சொத்து. பாடையில் போகும்போதுகூட, கௌரவத்தோடு போகணும்னு நினைக்கிற ஜாதி உங்க ஜாதி. ஒரு சாண் வரப்புக்கும், வெட்டிக் காயப்போட்டா அடுப்பு எரிக்கக்கூட உதவாத தூர்ந்து போன மரத்துக்கும் அடிச்சிகிட்டு ஆயிரக் கணக்கில் நீங்க செலவு பண்ணக் காரணமே இந்த வறட்டுக் கௌரவம்தான், இதைக் கட்டிகிட்டு அழற வரைக்கும் நீங்க உருப்பட மாட்டீங்க.....’
இவ்வாறாக, மிகப் பல எடுத்துக்காட்டுகள் இவர்தம் படைப்புகளில் காணக்கிடக்கின்றன.
வர்ணனை:
கதைகளில், தேவையான இடங்களில் மட்டும் வர்ணனைகளைக் கையாண்டுள்ளார் ஆசிரியர். மனதில் நீங்காத நினைவுகளாகப் பதிந்துவிடுபவை அவை. கதை நிகழ்வுகளுக்கு உரம் சேர்ப்பவையாகவும் அவை அமைந்துள்ளன.
எடுத்துக்காட்டாகச் சில:
‘அந்தப் பெரிய அண்டாவைத் தலையில் சுமந்தவாறு, கரும்பு வயல்களுக்கிடையே ‘மெத்’ என்ற பசிய வரப்பின் மீது விரைந்து நடந்தாள் வேலம்மா. குலைகளைச் சுமந்து கோணலாய் வளைந்து எங்கோ எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த தென்னைகளின் கூட்டமோ, வெற்றிடமின்றி விளை பொருள்களைத் தாங்கிக் கிடந்த பச்சை வயல்களோ அவள் பார்வையை நிறைக்கவில்லை; பதிலுக்கு, மனதுக்கு இதம் தரும் மருத மலையும், இயற்கை அழகின் சேமிப்புக் கிடங்கான ஊட்டியும்தான் அவள் சிந்தனையில் போட்டியிட்டுச் சுழன்றன. நல்லப்பன் கண் சிமிட்டிவிட்டுப் போன காட்சி, மீண்டும் ஒருமுறை நினைவை முத்தமிட, செழித்துக் கனிந்த கன்னங்கள் குங்குமமாய்ச் சிவந்து ஜொலித்தன. கன்றுக் குட்டியாய் அவள் வரப்புக்கு வரப்பு எம்பிக் குதித்துத் தாவிச் சென்ற காட்சி நெஞ்சை அள்ளியது’ [ஒரு விதவையின் முதலிரவு[சிறுகதை].
இங்கு மனமொன்றித் தான் உள்வாங்கிய ஓர் அழகுக் காட்சியைப் படம் பிடித்துள்ளார் பரமசிவம்.
‘பேயாட்டம் ஆடும் நெடிதுயர்ந்த தென்னைகளின் சலசலப்பு. ஆந்தைகளின் அலறல். திட நெஞ்சிலும் திகிலூட்ட வல்ல கோட்டானின் குரல். நடுநிசியின் பிடியிலிருந்து மெல்ல நழுவிக்கொண்டிருக்கிறது நேரம். தோப்பின் நடுவில் தென்னங் கீற்றால் வேயப்பட்டுத் தரையோடு தரையாய்க் கூனிக் குறுகிக் கிடக்கிறது ஒரு குடிசை.’ [’என்னைத் தழுவிக்கொள்’[சிறுகதை]
இவ்வருணனை, ‘என்னைத் தழுவிக்கொள்’ என்னும் சிறுகதையின் தொடக்கமாகும்.
இப்படி, இன்னும் பல எடுத்துக்காட்டுகள் இவர்தம் படைப்புகளில் இடம்பெற்றுள்ளன.
முடிவு:
கதையின் முடிவு, படித்து முடித்த பின்னரும் சிறியதொரு கால அளவிலேனும் அக்கதை பற்றி வாசகன் சிந்திக்கும் வகையில் அமைதல் விரும்பத்தக்கதாகும்.
‘மௌனமாய்க் கிழவியை அழைத்துப் போய் உள்ளே கட்டிலில் கிடத்தினான்; வாய் திறந்தான். “காடு வா வாங்குது. வீடு போ போங்குது. இந்த வேலைக்கெல்லாம் போகச் சொல்லி உன்னை யார் அடிச்சது? வெறும் சிராய்ப்போடு போச்சு. எசகு பிசகா விழுந்து காரில் அடிபட்டுச் செத்தா யார் இம்சை படுறது? கருமாதிச் செலவுக்குக்கூட இப்போ கையில் காசு இல்ல. கடன் கேட்டு யார்கிட்டே போய்க் கை நீட்டுவேன்?. வேளா வேளைக்குக் கொட்டிகிட்டுச் சும்மா கிடந்து தொலையேன்.”
பெற்ற மகன் தன் பங்குக்குப் பேசி முடித்துவிட்டுப் போனான். அதோ...மருமகள் வந்துகொண்டிருக்கிறாள்! [‘சுமை’ சிறுகதை]
இந்த ‘முடிவு’ மட்டுமே, தள்ளாத வயதில் தன் வயதுக்கு ஒவ்வாத காரியத்தில் இறங்கி விபத்துக்குள்ளாகியிருக்கிறாள் கிழவி என்பதையும், பெற்ற மகனே அவளைச் சுமையாகக் கருதி வெறுக்கிறான் என்பதையும், மருமகளும் தன் பங்குக்கு அவளைத் திட்டித் தீர்க்கப்போகிறாள் என்பதையும் உணர வைக்கிறது. இவளைப் போல இன்னும் எத்தனையோ கிழவிகள் வாரிசுகளால் வெறுக்கப்படும் அவலம் பற்றிச் சிந்திக்கவும் வைக்கிறது.
‘தினம் தினம் தனிமையில் கிடந்து அழுகிறேன். மலராய், மருக்கொழுந்தாய், இளம் மானாய் எங்களை மகிழ்வித்த என் செல்ல மகள், கயவர்களின் பிடியில் என்ன பாடு படுகிறாளோ என்று எண்ணி எண்ணி மனம் பேதலித்துக்கொண்டிருக்கிறேன். இடது காலில் ஆறு விரலுடன் ஓர் அனாதைப் பெண் பிணம் இருப்பதாக உறவுக்கார டாக்டரிடமிருந்து தகவல் கிடைத்து, ஒரு ஒப்பனைக்காரரைக் கொண்டு அதன் மணிக்கட்டில் தழும்பும் ஈடுப்பில் மச்சமும் உருவாக்கி டாக்டரின் உதவியோடு அருமையாய் ஒரு நாடகம் நடத்தி என் சுகுணாவை நம்ப வைத்துத் தேற்றினேனே, அது போல என்னைத் தேற்ற யாரிருக்கிறார்கள்?’ [’சுகுணா தூங்குகிறாள்’ சிறுகதை, பாக்யா, பிப்.14-20,1997]
“சுந்தரமூர்த்தி சொன்னார்: “பசி பட்டினின்னு பரிதவிச்சுக் கிடப்பவன் முன்னால, வகை வகையா உணவுப் பண்டங்களைக் குவிச்சி வைச்சா அவன் கவனமெல்லாம் பண்டங்கள் மேல்தான் இருக்குமே தவிர, அவற்றை வழங்கியவர் மேல் இருக்காது. நன்றி, விசுவாசம், பாராட்டு எல்லாம் பசி தணிஞ்சதுக்கு அப்புறம்தான்.” இந்த அரிய கருத்தை முடிவாகக் கொண்ட கதை, ‘வயிறார்ந்த நன்றி’[’ஓம் சக்தி’ மாத இதழ், மார்ச்1997, பக்.52]
‘வித்தியாசமான ஒருவித உணர்ச்சிக்கு ஆளானார் சுப்பராமன். தமது பத்தாண்டுக் கால வங்கிக் கிளை மேலாளர் அனுபவத்தில், கடன் கேட்டு வரும் எத்தனையோ அனுதாபத்திற்கு உரியவர்களைச் சந்தித்திருக்கிறார். இப்படியொரு முத்தாயி அவர் கண்களில் பட்டதே இல்லை...’ [முத்தாயி மொபெட்டில் போகிறாள்].
‘மீனாட்சி சொன்னாள்: “ஆன மாதம் ஆகாத மாதம், கெட்ட நேரம் நல்ல நேரம், வேண்டிய நாள், வேண்டாத நாள் இதெல்லாம் உழைச்சிச் சாப்பிடுற நமக்கு ஏதய்யா. நேரம் காலம் பார்த்தா உழைக்கிறோம், சாப்பிடுறோம்?.....
.....வேலை கிடைச்சா தட்டிக் கழிச்சுடக் கூடாது.செஞ்சி முடிச்சி நாலு காசு பார்த்துக்கணும். சந்தோசம் தேடி வரும்போது அதை நழுவ விடாம அனுபவிச்சிடணும்.’ இப்படி மிகவும் வித்தியாசமாக, உழைக்கும் வர்க்கத்துப் பெண்ணொருத்தி பேசுவதாக முடிகிறது ‘முதலிரவில் ஒரு தாலாட்டு’ என்னும் கதை.
“ஏம்ப்பா, ஏதோ வயசுப் புள்ள...பிழைச்சுட்டுப் போகட்டுமேன்னு இல்லாம, வாங்கிப் போட்ட கொலுசைப் பிடுங்கிட்டியே, இதை வைச்சிக் கோட்டையா கட்டிடப் போறே?” என்று செல்லப்பனைப் பார்த்து ஒரு பெரியவர் கேட்டார்.
“கோட்டை கட்டப் போறதில்ல. நாளைக்கி இன்னொருத்தியைக் கூட்டியாறதுக்கு ஆகுமில்லீங்களா?” என்றான் செல்லப்பன்.
இப்படியொரு நெஞ்சை நெருடும் உரையாடலுடன் முடிகிறது ‘தொடுப்பு’ என்னும் சிறுகதை.
இவை போலவே, பேராசிரியர் பரமசிவத்தின் பெரும்பாலான கதை முடிவுகள் வாசகரின் நெஞ்சைவிட்டு அகலாத தன்மை கொண்டவை ஆகும்.
======================================================================================
இந்தப் பதிவு நான் எழுதியது அல்ல[எனக்குத் தற்புகழ்ச்சி அறவே பிடிக்காது என்பது நீங்கள் அறிந்ததுதானே. ஹி...ஹி...ஹி!].
டாக்டர் சி. சுப்பிரமணியன் என்னும் என் மாணவர் எழுதிய, 'எழுத்தாளர் பசி.ப.பரமசிவம்' என்னும் நூலிலிருந்து எடுத்தாண்ட ஒரு சிறு பகுதி இது.