வெள்ளி, 30 நவம்பர், 2018

திருப்பதி ஏழுமலையானின் பக்தர்களுக்கான ஒரு சிறப்பு இடுகை!!

நான் திருப்பதி ஏழுமலையானை இழிவுபடுத்திப் பதிவுகள் எழுதுவதாக, ஏழுமலையானின் பக்தரும் வலைப்பதிவருமான ஒரு நண்பர் மிகவும் வருத்தப்பட்டு[கண்டித்தல்ல]ச் செய்தி அனுப்பியிருந்தார்.

அவர் என்னைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார் என்பது ஒருபுறம் இருப்பினும், அவர் மனம் வருந்துவது என் உள்மனதை உறுத்திக்கொண்டே இருப்பதால்.....

ஏழுமலையான் சாமியானவர், அனுமத் வாகனம், சிம்ம வாகனம், பறவை வாகனம், கல்பவிருஷ வாகனம், சர்வ பூபால வாகனம், குதிரை வாகனம், சூர்யப்பிரபை வாகனம், ஹம்ச வாகனம், முத்துப் பந்தல் வாகனம், பெரிய சேஷ வாகனம், சிறிய சேஷ வாகனம், கஜ வாகனம் என்றிவ்வாறு விதம் விதமான வாகனங்களில் பவனி வந்து பக்தகோடிகளுக்கு அருள்பாலிக்கும் கண்கொள்ளாக் காட்சிகளைப் படம் பிடித்து[கைபேசி சற்றே பழுதடைந்துள்ளதால் படங்கள் இயல்பாக இல்லை] இங்கே பதிவு செய்திருக்கிறேன்.

என் செயலால் மனம் வேதனைப்பட்ட நண்பர் மட்டுமல்லாமல், ஏனைய ஏழுமலையான் பக்தர்களும் படங்களைப் பார்த்து உவகை கொள்ளலாம்; புண்ணியம் பெறலாம்.




கஜ வாகனம்.

ஏழுமலையானின் பக்தர்கள் அல்லாத பிறர்.....
''நாங்க கும்பிடுற சாமிக்கெல்லாம் இத்தனை வாகனங்கள் இல்லை. பல கிராமப்புற சாமிகளுக்கு ஓட்டை உடைசலான பழைய சப்பரம்தான் இருக்கு. சிலதுகளுக்கு அதுவும் இல்லை'' என்று புலம்பாமல்[ஹி...ஹி...ஹி!], மேற்கண்ட ஏழுமலையானின் திருவுலாக் காட்சிகளை மீண்டும் மீண்டும் கண்டு களித்து இன்புறுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

நன்றி.

செவ்வாய், 27 நவம்பர், 2018

காளிதாசனா, காமதாசனா?!

அதோ...வசந்தன் வருகிறான். வற்றாத இளமையின் புகலிடம் அவன். மலர் அம்புகளுடன் கரும்பு வில்லேந்தி அவன் வந்துகொண்டிருக்கிறான். அவனின் வருகை கண்டு.....

மரம், செடி, கொடிகளில் பூக்கள் மலர்ந்தன. ஓடைகளில் தாமரை மலர்கள் குலுங்கின. காற்றில் மனம் கவரும் மணம் கமகமத்தது. பகற்பொழுதுப் பெண்ணை இளவேனில் காதலன் புணர்ந்து இன்புற்றான். மனிதகுலப் பருவக் குமரிகளின் மனங்களில் காமம் முகிழ்த்தது. 
வாவி குடைந்து குதூகலிக்கும் மென்கோங்கக் கொங்கைப் பெண்களின் கூந்தலுக்கு நெய்தல் பூக்கள் கிரீடம் சூட்டி மகிழ்ந்தன. குளித்து முடித்து வெளியேறிய அவர்களின் கன்னங்கரிய கூந்தலுக்கு அசோக மலரும் மல்லிகைப் பூவும் அழகு கூட்டின. நெகிழ்ந்த ஆடைகள் அவர்களின் பூரித்த தனங்களை மறைக்கத் தவறின. 

கன்னியரின் உடம்பெங்கும் காமம் பரவியதால் வெப்பம் கூடியது. அதைத் தணிக்க, அவர்கள் தங்களின் மேலாடைகளை அகற்றிவிட்டு மேனியெங்கும் குளிர்ந்த சந்தனத்தை அப்பினார்கள். அவர்கள் அணிந்திருந்த முத்து மாலைகள் சந்தனக் குழம்புடன் ஒட்டிக்கொண்டு திரண்ட கொங்கைகளை இறுகக் கவ்வின. இடையை வருத்திக்கொண்டிருந்த ஒட்டியாணங்கள் தமக்குரிய வண்ணத்தை இழந்தன.

ஆடை உடுத்த அணங்குகள், தாமாக விரும்பி அவிழ்த்தாலொழியப் பிறரால் அவிழ்க்க முடியாத மார்புக் கச்சுகளின் முடிச்சுகள் நெகிழ்ந்து அவிழ்ந்து நழுவ, அவர்கள் வெளிப்படுத்திய பெருமூச்சால்  முந்தானைகள் இடம்பெயர்ந்து தென்றலுடன் கைகோர்த்து நர்த்தனமாடின.

குமரிகளின் ஒவ்வோர் உறுப்பையும் வசந்தன் தன்  இதழ்களால் வருடி அவர்களை விரகதாபத்துக்கு உள்ளாக்கினான். ஆற்றாமையுடன், கம்மிய குரலில் துயரம் தோய்ந்த சொற்களை உதிர்த்தார்கள் அந்த வாலைக்குமரிகள்.

மெல்லிடை சோர்ந்ததால் கனமான ஆடைகளைக் களைந்து மிக மெல்லிய ஆடைகளை உடுத்தார்கள்.

மாவின் இளம் தளிரைத் தின்று மதம் ஏறிய ஆண் குயில்கள், கட்டுக்கடங்காத காம இச்சையுடன் பெண் குயில்களை முத்தமிட்டுப் புணர்ந்தன. இக்காட்சி, தலைவனைப் பிரிந்திருந்த மலர் நிகர் கோதையரைத் தீராத துயரத்தில் ஆழ்த்தியது..........
========================================================================

மேற்கண்டது, இளவேனில் பருவத்தின்[வசந்தம்] வருகை குறித்த வடமொழிக் கவிஞன் காளிதாசனின் வருணனை ஆகும். 'இது வசந்தம்' என்னும் தலைப்பில், 'கலா மோகினி'[கலைஞன் பதிப்பகம், சென்னை. முதல் பதிப்பு: 2003] என்னும் பழைய இதழ்த் தொகுப்பில் இடம்பெற்ற கட்டுரையிலிருந்து தேர்ந்தெடுத்த வரிகளை இணைத்துத் தொகுக்கப்பட்டது. மொழிநடையும் சற்றே மாற்றி அமைக்கப்பட்டது.

ஞாயிறு, 25 நவம்பர், 2018

ஐயப்பா, இந்த அம்மா சொல்றது பொய்யாப்பா?!

#....ஒரு பயிலரங்கில், ஏழாம் வகுப்புப் படிக்கும் மாணவி கேட்டாள்: ''மாதவிலக்கு வருவதற்கு ஹார்மோன் சுரப்பு காரணம் என்றால், இந்த ஹார்மோன் சுரப்பதைத் தடுக்க வழி இல்லையா?''

மாதாந்திர உதிரப்போக்கை எதிர்கொள்ளும் எந்தப் பெண்ணும் அதை மகிழ்ச்சியாக வரவேற்பதில்லை. பெரும்பாலான பெண்கள் அதை ஒரு வலியாகவும் வேதனைக்குரிய ஒன்றாகவும்தான் பார்க்கிறார்கள். அதற்கு, அந்த நேரத்தில் ஏற்படும் உபாதைகள் மட்டுமே காரணம் அல்ல; சமூக ரீதியாக அவர்கள் எதிர்கொள்கிற 'தீண்டாமை'யும் முக்கிய காரணம்.

தனியாக உட்கார வேண்டும். தினமும் தலைக்குத் தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும். தலை காயாமல் நாள் முழுதும் தலை வலியுடன் அல்லல் படவேண்டும். வீட்டில் யாராவது ஆண்கள் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தால் அவர்களின் கண்ணில் படக்கூடாது.

இப்படிப்பட்ட சட்டதிட்டங்கள் ஆண்கள் மேல் விதிக்கப்பட்டிருந்தால், பெரும் புரட்சி நடத்தி அதை நீக்கியிருப்பார்கள்.

மாதாந்திர உதிரப்போக்கு, கர்ப்பம், குழந்தைப்பேறு போன்ற எந்தப் பிரத்தியேகத் தன்மையும் இல்லாத ஆணுக்குக் கிடைக்கும் மரியாதையும் அந்தஸ்தும் பெண்ணுக்குக் கிடைப்பதில்லையே, ஏன்?

ஆணும் பெண்ணும் இணைவதால் குழந்தை உருவாகிறது. எனவே, ஆணுக்கும் பெண்ணுக்கும் அமைந்த உடற்கூறுகள் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. இதில், ஒரு பாலினம் உயர்ந்தது, மற்றது தாழ்ந்தது என்று சொல்வது என்ன நியாயம்?

'தீட்டு' என்பது மனதில்தான் இருக்கிறது. ஒரு பெண் ஆரோக்கியமாக இருக்கிறாள் என்பதன் வெளிப்பாடுதான் மாதாந்திர உதிரப்போக்கு. ஆணுக்கு விந்தணு உற்பத்தியும் பெண்ணுக்கு மாதாந்திரச் சுழற்சியும் இல்லாவிட்டால் என்ன ஆகும்? குழந்தை பிறக்காது. இருவர் இணைப்பில் உருவாவதுதான் குழந்தைப்பேறு. இதில் ஓரினத்தை மட்டும் ஏன் குட்ட வேண்டும்?

எல்லாம் நம் பண்பாடு என்பது வெறும் பம்மாத்து. மாதவிடாய் நாட்களில் பெண்கள் காய்ச்சும் பால் திரிந்ததை யாராவது பார்த்திருக்கிறீர்களா? செடி வாடுவதைக் கண்டிருக்கிறீர்களா?

நாற்பது வருடங்களுக்கு முன்பு, எங்கள் வீட்டில் மாதாந்திர உதிரப்போக்கு நாட்களில் தனியாக உட்காரச் சொல்வார்கள். ஆனால், பால் வாங்கிவர அனுப்புவார்கள். கேட்டால், பாலுக்குத் தோசம் இல்லை என்பார்கள். இவை எல்லாமே நாமாக உருவாக்கிக்கொண்ட சட்டங்கள்தானே?

அடிநாதமாக இருப்பது ஒன்றுதான். பெண்ணை எங்கெல்லாம் ஒடுக்க முடியுமோ அங்கெல்லாம் ஒடுக்குவது; திட்டுவது. பெண் தன்னிச்சையாகச் சிந்திக்கக் கூடாது; இயங்கக் கூடாது என்பதுதான் இவர்களின் நோக்கம்.

இந்தக் கலாச்சாரம்தான் 12 வயதுச் சிறுமியைத் தனிமைப்படுத்திப் புயலில் சிக்கிச் சாகடிக்கிறது; சபரிமலைக்குப் பெண்கள் சென்றால் அடித்துத் துரத்துகிறது.

எவ்வளவு காலம்தான் பெண்கள் பொறுத்துப்போவார்கள்?

மாதவிலக்கும் வேண்டாம், கர்ப்பமும் வேண்டாம், குழந்தையும் வேண்டாம் என்று ஒரு புரட்சி முழக்கத்தைப் பெண்கள் எழுப்ப ஆரம்பித்தால் என்ன ஆகும்?

உதிரப்போக்கு என்பது சிறுநீர், மலம், விந்து போன்றவற்றைப் போல் உடலிலிருந்து வெளிப்படும் திரவம். இப்படி அணுகப் பழகுங்கள். சிந்தனையிலும் செயலிலும் பார்வை மாறினால் எல்லாம் சரியாகும்.#
=====================================================================
நன்றி: 'தமிழ் இந்து'[25.11.2018]வுக்கும், இக்கட்டுரையின் ஆசிரியர் 'மா' அவர்களுக்கும் நன்றி.




வெள்ளி, 23 நவம்பர், 2018

மகான்களும் மகன்களும் தூதுவர்களும் மறக்கப்படும் நாள்?!

நீளம், அகலம், சுற்றளவு, பரப்பளவு என்று எந்தவொரு அளவுகோலாலும் அளந்தறிய இயலாத அண்டவெளியிலுள்ள அணுக்கள், பொருள்கள், உயிர்கள் போன்றவற்றின் தோற்றத்திற்கான காரணம், தோன்றிய காலம், தோன்றிய முறை ஆகியவை[எதற்கு? எப்போது? எப்படி?] குறித்த 'உண்மை'யை முழுமையாக ஆராய்ந்து அறிவது என்பது எப்போதும் சாத்தியப்படாத ஒன்று என்று உறுதியாகச் சொல்லலாம்[பயன் கிடைக்கிறதோ இல்லையோ, ஆராய்ந்து அறியும் முயற்சியில் மனிதகுலம் தொடர்ந்து ஈடுபடும் என்பதில் சந்தேகமில்லை].
இவ்வுண்மை அறியப்படாத நிலையில், நம் முன்னோர்கள்.....

நமக்குச் சிந்திக்கும் அறிவு வாய்த்திருப்பதால், இதற்கும் மேலான பேரறிவு வாய்க்கப்பெற்ற கடவுள் என்றொருவர் இருப்பதாக நம்பினார்கள். அவருக்கு  மட்டும் அந்தப் பேரறிவு வாய்த்தது எப்படி என்று சிந்திக்கத் தவறியதன் விளைவாக, அனைத்திற்கும் மூலகாரணமானவர் அவரே என்றும் நம்பினார்கள். அந்த நம்பிக்கை ஆழ்ந்த சிந்தனையின் விளைவாக உருவானதல்ல. காரணம்.....

ஐம்புலன்கள் மூலம், அதாவது, கண்டோ கேட்டோ சுவைத்தோ சுவாசித்தோ தொட்டோ கடவுளை அறிந்தவர் எவருமிலர்[அவர் கண்டார், இவர் கண்டார் என்பனவெல்லாம் கலப்படமில்லாத பொய்கள்].

ஐம்புலன்களால் அறிந்தவற்றை மட்டுமே ஆறாவது அறிவால் உணர்வதும் சாத்தியப்படும். எனவே, ஐம்புலன்களின் மூலம் கடவுளை அறிந்தவர் எவருமில்லை என்பதால், ஆறாம் அறிவால் அவரை உணர்ந்தவர் உளர் எனும் கூற்று ஏற்கத்தக்கதல்ல. 

கடவுளை உணர்ந்து அறிந்தவர்கள் இருந்தார்கள்...இருக்கிறார்கள். அவர்களே அவதாரங்கள்; புதல்வர்கள்; தூதுவர்கள் என்றெல்லாம் பரப்புரை செய்து, மக்களை நம்பச் செய்தவர்கள் மதவாதிகளும் ஆன்மிகவாதிகளும் ஆவர்.

பதிவின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டது போல, விடுவிக்கவே இயலாத புதிர்களை உள்ளடக்கியது இந்தப் பிரபஞ்சம் என்பதை மக்கள் அனைவரும் புரிந்துகொள்ளும் காலம் வரும்போது.....

மகான்கள், மகன்கள், தூதுவர்கள், அவதாரங்கள், நடமாடும் கடவுள்கள் எனப்படும் அனைவரும் அவர்களால் மறக்கப்படுவார்கள் என்பது உறுதி.
------------------------------------------------------------------------------------------------------------------

புதன், 21 நவம்பர், 2018

''கடவுள் இல்லை'' என்று மதவாதிகளும் விஞ்ஞானிகளும் அறிவித்தால்...?!

''தர்ம சிந்தனை புதை குழிக்குப் போக, அதர்மம் தலைவிரித்தாடும்.

திருட்டு, கொள்ளை, கொலைச் சம்பவங்கள் பெருகும்.

இளம் பெண்களைக் கடத்துவதும் கற்பழிப்பதும் அதிகரிக்கும்.
நல்லவர்களும் கெட்டவர்களாக மாற, சுய நலம் மேலோங்க, இந்த உலகமே கலவர பூமியாக மாறி, மனித இனம் போரிட்டு அழிந்து போகும்.

ஆகவே, இந்த அறிவிப்பு ஏற்கத்தக்கதல்ல; நம்பத்தக்கதும் அல்ல'' என்பார்கள் கடவுள் நம்பிக்கையாளர்கள்.




''கடவுளுக்குப் பயந்துகொண்டு மனிதன் குற்றம் புரியாமல் இருந்ததில்லை.

ஒருவனுக்கு உரியதைப் பறிக்க, அல்லது திருட இன்னொருவன் அஞ்சுவதற்குக் காரணம், கடவுள் பயமல்ல; பொருளுக்கு உரியவனால் அல்லது அவனைச் சார்ந்தவர்களால் தாக்கப்படுவோம் என்ற முன்னெச்சரிக்கையே காரணம்.

காவலரிடம் பிடிபடுவோம்; நீதிமன்றம் தண்டிக்கும் என்று நம்புவதும் தலையாய காரணம் ஆகும்.

அகப்பட்டுக் கொள்வதற்கான சூழ்நிலை இல்லாதிருந்தும், ஒருவன் குற்றம் புரியாமல் இருப்பானாயின், அதற்கு, ‘பட்டினி கிடந்து மாய்ந்தாலும் இன்னொருவன் உழைப்பில் வந்தது நமக்கு வேண்டாம்’ என்று நினைக்கும் அவனின் மனப்பக்குவமே காரணம்.

இத்தகைய மன உறுதி ஒருவனுக்கு வாய்ப்பது, அவனுடைய சுய சிந்தனையால்; அவனைச் சார்ந்தவர்கள், சான்றோர்கள், அறிஞர்கள் ஆகியோரின் வழிப்படுத்தலால்தான்.

எல்லாம் கடவுளால் என்று சொல்வதும் வலியுறுத்துவதும் மனித இனத்துக்குச் செய்யும் துரோகம் ஆகும்; மனிதனின் சுய சிந்தனையை மழுங்கடிக்கும் முயற்சி ஆகும்.

சிந்திப்பதும் செயல்படுவதும் மனித முயற்சியாலேயே சாத்தியப்படும் போது, கடவுளைத் துணைக்கு அழைக்க வேண்டிய அவசியம் இல்லை; இல்லவே இல்லை.

எனவே, 'கடவுள் இல்லை' என்னும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது'' என்பார்கள் கடவுள் மறுப்பாளர்கள்.



''இவர்களில் எவர் சொல்வது சரி'' என்று யோசித்துச் சிரமப்பட வேண்டாம். காரணம்.....

இத்தகு அறிவிப்பை, என்றேனும் ஒரு நாள் அறிவியல் அறிஞர்கள் செய்யக்கூடும்; மதவாதிகள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள், அவர்கள் பிழைப்பு நடத்துவதே கடவுளை வைத்துத்தான் என்பதால்!!!

எனவே, இருதரப்பாரும் இணைந்து இப்படியொரு அறிவிப்பைச் செய்வது சாத்தியமே இல்லை!
========================================================================

Indiblogger முகப்புப் பக்கத்தில் இப்பதிவு இடம்பெற்றுள்ளது.



திங்கள், 19 நவம்பர், 2018

அன்று அது விரட்டப்பட்ட விஞ்ஞானிகளின் புகலிடம். இன்று...?!

1800களின் இறுதியில், 'ஓவியத்தையோ ஃபோட்டோ படங்களையோ அசையச் செய்திட முடியுமா? அசைந்தால் எப்படியிருக்கும்?' -அறிந்துகொள்ளும் பேரார்வம் அறிவியலில் ஈடுபாடுள்ள சிலருக்கு இருந்தது.

அவர்களில் தாமஸ் ஆல்வா எடிசனும் ஒருவர்.
வட்டவடிவமான தட்டின் நடுவில் துளையிட்டு, துளையை ஓர் ஆணியில் பொருத்தி, அந்தத் தட்டில் ஓர் உருவத்தின் சலன நிலைகளைப் பல ஓவியங்களாக வரைந்து, தட்டை உருளச்செய்து பார்த்தார் எடிசன். முதலில் மெதுவாகவும், பின்னர் வேகமாகவும், தொடர்ந்து அதி வேகமாகவும் உருளச் செய்தார்.

ஓ.....! அந்த உருவம் கைகால்களை அசைத்தது; நடந்தது!

ஓவியங்களுக்குப் பதிலாக, ஃபோட்டோக்களை ஒட்டினார் எடிசன்; உருட்டினார்; ஓட்டினார்; வெகு வேகமாக ஓட்டினார். புகைப்பட மனிதன் நகர்ந்தான்; நடந்தான்...வேகத்துடன். தொடர்ந்து மிகையான வேகத்துடன்!

ஃபோட்டோ படங்களை மேலிருந்து கீழாக உருளையில் பொருத்திச் சுழலச் செய்தார் எடிசன். 'சினிட்டாஸ் கோப்' உருவானது. இது நிகழ்ந்தது 1894இல்.

எட்வர்ட் முப்ரிஜ் என்பவர் சில மாற்றங்களுடன் உருவாக்கியது 'ஜூப்ராக்சோ ஸ்கோப்'.

இங்கிலாந்தின் வில்லியம் ஃப்ரீஸ்கிரீன் செல்லுலாய்ட் ஃபிலிமைக் கண்டுபிடித்து 'சினிமாட்ட கிராஃப்'ஐ அறிமுகப்படுத்தினார்.

ஓடும் படத்தின் ஒளியைத் திரையில் பாய்ச்சி, ஒரே சமயத்தில் பலபேர் பார்த்து ரசிக்கும் அதிசயத்தை 1895இல் ஃபிரான்ஸ் நாட்டின் லூமியர் சகோதரர்கள் கண்டுபிடித்தார்கள்.

இதுதான் சினிமா.

ஆக.....

சினிமாவைக் கண்டுபிடித்த பெருமை தாமஸ் ஆல்வா எடிசனுக்கு மட்டுமல்ல, வேறு பலருக்கும் உண்டு.

எந்தவொரு விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கும் நேரிடும் பழைமையாளர்களின் பயங்கர எதிர்ப்பைச் சினிமாவும் சந்தித்தது.

''பில்லி, சூனியம் போன்று கொடுமையானது இது'' என்று மதவெறியர்களும் பிற்போக்காளர்களும் சினிமாவை எதிர்த்தனர்.

சினிமாவோடு தொடர்புடையவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டனர். ஊரைவிட்டே விரட்டப்பட்டனர்.

அமெரிக்காவின் சினிமாத் தொழில்நுட்ப வல்லுனர்கள் மேற்கண்ட மூடர்களின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி காடுகளை நோக்கி ஓடினார்கள். இவ்வகையில், ஊரைவிட்டு ஓடி ஓடி ஓடிப் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒரு வனாந்தரத்தின் குறிப்பிட்ட ஓரிடத்தில் தங்கி வாழத்தொடங்கினார்கள். அந்த இடம்தான்.....

பின்னர் உலகப் புகழ் பெற்ற 'ஹாலிவுட்' ஆக உருவானதாம்!
========================================================================
'சிறுகதை'[16-31 அக்டோபர், 1993] என்னும் இதழில் அறந்தை நாராயணன் அவர்கள் எழுதிய தொடரிலிருந்து எடுத்தாண்டது.

'ஹாலிவுட்' உருவானது எப்படி?!

1800களின் இறுதியில், 'ஓவியத்தையோ ஃபோட்டோ படங்களையோ அசையச் செய்திட முடியுமா? அசைந்தால் எப்படியிருக்கும்?' -அறிந்துகொள்ளும் பேரார்வம் அறிவியலில் ஈடுபாடுள்ள சிலருக்கு இருந்தது.

அவர்களில் தாமஸ் ஆல்வா எடிசனும் ஒருவர்.
வட்டவடிவமான தட்டின் நடுவில் துளையிட்டு, துளையை ஓர் ஆணியில் பொருத்தி, அந்தத் தட்டில் ஓர் உருவத்தின் சலன நிலைகளைப் பல ஓவியங்களாக வரைந்து, தட்டை உருளச்செய்து பார்த்தார் எடிசன். முதலில் மெதுவாகவும், பின்னர் வேகமாகவும், தொடர்ந்து அதி வேகமாகவும் உருளச் செய்தார்.

ஓ.....! அந்த உருவம் கைகால்களை அசைத்தது; நடந்தது!

ஓவியங்களுக்குப் பதிலாக, ஃபோட்டோக்களை ஒட்டினார் எடிசன்; உருட்டினார்; ஓட்டினார்; வெகு வேகமாக ஓட்டினார். புகைப்பட மனிதன் நகர்ந்தான்; நடந்தான்...வேகத்துடன். தொடர்ந்து மிகையான வேகத்துடன்!

ஃபோட்டோ படங்களை மேலிருந்து கீழாக உருளையில் பொருத்திச் சுழலச் செய்தார் எடிசன். 'சினிட்டாஸ் கோப்' உருவானது. இது நிகழ்ந்தது 1894இல்.

எட்வர்ட் முப்ரிஜ் என்பவர் சில மாற்றங்களுடன் உருவாக்கியது 'ஜூப்ராக்சோ ஸ்கோப்'.

இங்கிலாந்தின் வில்லியம் ஃப்ரீஸ்கிரீன் செல்லுலாய்ட் ஃபிலிமைக் கண்டுபிடித்து 'சினிமாட்ட கிராஃப்'ஐ அறிமுகப்படுத்தினார்.

ஓடும் படத்தின் ஒளியைத் திரையில் பாய்ச்சி, ஒரே சமயத்தில் பலபேர் பார்த்து ரசிக்கும் அதிசயத்தை 1895இல் ஃபிரான்ஸ் நாட்டின் லூமியர் சகோதரர்கள் கண்டுபிடித்தார்கள்.

இதுதான் சினிமா.

ஆக.....

சினிமாவைக் கண்டுபிடித்த பெருமை தாமஸ் ஆல்வா எடிசனுக்கு மட்டுமல்ல, வேறு பலருக்கும் உண்டு.

எந்தவொரு விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கும் நேரிடும் பழைமையாளர்களின் பயங்கர எதிர்ப்பைச் சினிமாவும் சந்தித்தது.

''பில்லி, சூனியம் போன்று கொடுமையானது இது'' என்று மதவெறியர்களும் பிற்போக்காளர்களும் சினிமாவை எதிர்த்தனர்.

சினிமாவோடு தொடர்புடையவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டனர். ஊரைவிட்டே விரட்டப்பட்டனர்.

அமெரிக்காவின் சினிமாத் தொழில்நுட்ப வல்லுனர்கள் மேற்கண்ட மூடர்களின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி காடுகளை நோக்கி ஓடினார்கள். இவ்வகையில், ஊரைவிட்டு ஓடி ஓடி ஓடிப் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒரு வனாந்தரத்தின் குறிப்பிட்ட ஓரிடத்தில் தங்கி வாழத்தொடங்கினார்கள். அந்த இடம்தான்.....

பின்னர் உலகப் புகழ் பெற்ற 'ஹாலிவுட்' ஆக உருவானதாம்!
========================================================================
'சிறுகதை'[16-31 அக்டோபர், 1993] என்னும் இதழில் அறந்தை நாராயணன் அவர்கள் எழுதிய தொடரிலிருந்து எடுத்தாண்டது.

வெள்ளி, 16 நவம்பர், 2018

சாமானியர்களுக்கான சாமானியனின் 'சாதனை'க் கதை!

குமுதம் வார இதழ்[23.09.2009] தரத்தில் 'நம்பர் 1' ஆக இருந்தபோது அதில் வெளியான என் கதை இது. இப்போதெல்லாம் நான் அதற்குக் கதை அனுப்புவதில்லை. மீண்டும் அது தன் தரத்தை உயர்த்திக்கொள்ளுமாயின் அனுப்ப எண்ணியுள்ளேன். ஹி...ஹி...ஹி!

தலைப்பு:                              சாதனை

''என்னோட பள்ளித் தோழர் ஒருத்தருக்குக் கலைமாமணி விருது கிடைச்சிருக்கு'' -நாளிதழ் வாசித்துக்கொண்டிருந்த வாசுதேவன் சொன்னார்.

''அப்படியா? உங்களோடு கல்லூரியில் படிச்ச யாரோ ஒருத்தருக்கு ஏதோவொரு நாவல் போட்டியில் முதல் பரிசு கிடைச்சிருக்கிறதா அன்னிக்கொரு நாள் சொன்னீங்களே?'' என்றார் வாசுதேவனின் மனைவி தேவி.

''அது போன மாசம்.  அதையும் பத்திரிகையில் பார்த்துத்தான் தெரிஞ்சிகிட்டேன். அது மட்டுமில்ல, என்னோடு படிச்ச ஒரு பொண்ணு இந்த ஆண்டு சதுரங்கத்தில் 'கிராண்ட் மாஸ்டர்' பட்டம் வாங்கியிருக்கு. என்னோட படிச்சவங்க எல்லாம் சாதனை நிகழ்த்துறது மகிழ்ச்சியாத்தான் இருக்கு. ஆனா, அவங்களோடு படிச்ச நான்தான் எதுவுமே சாதிக்கல.'' -மிகுந்த வருத்தத்துடன் சொன்னார் வாசுதேவன்.

''வணிகவரித் துறையில் அதிகாரியா இருக்கீங்க. நிறைய வாய்ப்பிருந்தும் பைசா லஞ்சம் வாங்குறதில்ல. இதுவும் சாதனைதான். பாராட்டையும் விருதையும் எதிர்பார்க்காத இந்தச் சாதனைதான் மற்றதுகளைக் காட்டிலும் ரொமப உசத்தியானது'' என்ற தேவியின் குரலில் பெருமிதம் பொங்கி வழிந்தது! 
========================================================================

புதன், 14 நவம்பர், 2018

'பெண் எழுத்தாளர்கள்'...ஜெயகாந்தன் அன்று சொன்னது!

இக்காலத்தில் அனேகமாய் எல்லாருக்கும் எழுதவருகிறது. எழுதும் ஆசை எல்லாருக்கும் இருக்கிறது. பிரசுரம் பண்ண நிறையப் பத்திரிகைகளும் உள்ளன. ஓரளவு சன்மானமும் தரப்படுகிறது. போட்டிகள் நடத்திப் பரிசுகளும் தரப்பட்டு எழுத்தாளர்கள் பிரபலப்படுத்தப்படுகிறார்கள்.

ஓர் ஆய்வு வசதிக்காக, எழுத்தாளர்களை 'ஆண் எழுத்தாளர்கள் - பெண் எழுத்தாளர்கள்' என்று பிரித்துக்கொள்ளலாம். வேறு எந்த முறையில் பிரித்தாலும் அவ்வளவாய்ச் சரிப்பட்டு வராது. 'வர்க்கம்', 'முற்போக்கு-பிற்போக்கு' என்றெல்லாம் பிரித்தால் பிரச்சினைதான் வரும்.

என்னதான் சமத்துவம் அமைந்தாலும் தவிர்க்கவே முடியாதது 'ஆண்-பெண்' பேதமாகும்.

ஆண் எழுத்தாளர்கள் எல்லாம் அன்றாடங்காய்ச்சிகள். அதுவும் என்னைப்போல் முழுநேர எழுத்தாளர்களாக இருப்போர் சமூக அனாதைகள் ஆவர். 
நான் எழுதித்தான் சம்பாதிக்க முடியும். எழுதித்தான் உயர்வோ வீழ்ச்சியோ அடைய நேரிடும்.

ஆனால், நம் பெண் எழுத்தாளர்களைப் பொதுவாகப் பார்க்கும்போது, அவர்களும் அன்றாடங்காய்ச்சிகளாக இருந்தாலும் பர்த்தாவின் பணத்தில் ஊர் மணக்கப் பாயசம் காய்ச்சுபவர்களாக இருக்கிறார்கள். 

அவர்களின் எழுத்தில் சமையலும் ஜாதியும் மணக்கிறது. அதைவிடவும், பிரபலமாய் இருக்கிற பெண் எழுத்தாளர்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட பிரிவினராகவே இருப்பது தற்செயலானதுதானா என்று நான் யோசிப்பதுண்டு. 

இந்தப் பெண் எழுத்தாளர்கள் தம் கதைகளில் எல்லாம் கருப்பைக்கோ இரைப்பைக்கோ தருகிற முக்கியத்துவம் வேறு எதற்கும் இருப்பதில்லை.

மணக்க மணக்கச் சமைப்பது, ருசிக்க ருசிக்கத் தின்பது, மாதவிலக்குத் துணி மாற்றுவது, மசக்கைக்குக் குறி காண்பது, கரு அழிப்பு, சோரம் போவது, குடிபோதைக்கு அடிமை ஆவது, ஆண்-பெண் புணர்வது போன்றவை பற்றித்தான் இவா ரொம்ப நன்னா எழுதுறா.

இந்த எழுத்துக்கலையில் பெண்களுக்குப் பயிற்சியும் மிகுந்த ஊக்கமும் தரப்படுகிறது. அனேகமாக, இந்தப் புதிய பெண் எழுத்தாளர்கள் அனைவரும் பத்திரிகை முதலாளிமார்களோடும் ஆசிரியர்களோடும் நேரடித் தொடர்பு கொண்டவர்களாகவும் சமுதாயத்தில் ஓர் அந்தஸ்தைத் தேடிக்கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

எனவே, பத்திரிகை உலகில் இவர்களுக்கென்று தனியிடமும் நல்ல வரவேற்பும் உள்ளது.

உண்மையில், பெண்களின் எழுத்து 'பெண்மை நலம்' பேணுவதாக இருத்தலே நல்லது. ஆனால், பெண்மை நலம் என்றால் என்னவென்று விவரிக்க வேண்டிய அவலம் இன்று நிலவுகிறது.

பெண் எழுத்தாளர்கள் நம் வாசகர்களை வெகுவாகக் குறைபட்டுக்கொள்கிறார்கள். அவர்கள், 'ஆண் எழுத்தாளர்கள் கண்ட கண்ட வார்த்தைகளைக் கையாண்டாலும் அதை விமர்சிக்காமல் படிக்கிறார்களாம். பெண் எழுத்தாளர்கள் அவ்வாறு எழுதிவிட்டாலோ ''மொலு மொலு'' என்று சண்டைக்கு வருகிறார்களாம்!

இது குறித்து, கையில் சிலம்பில்லாமல் ஒரு பிரபல எழுத்தாளர் கண்களில் கனல் பறக்க என்னிடம் முறையிட்டது ஒரு சுவையான நிகழ்வு.
------------------------------------------------------------------------------------------------------------------
தொடர்புடைய, ஜெயகாந்தனின் கட்டுரை சற்றே சுருக்கிப் பதிவிடப்பட்டுள்ளது[நூல்: 'யோசிக்கும் வேளையில்.....'].  

Indiblogger முகப்புப் பக்கத்தில் இப்பதிவு இடம்பெற்றுள்ளது.

செவ்வாய், 13 நவம்பர், 2018

மகா பெரியவரை மகா 'சிறியவர்' ஆக்கும் குமுதம் இதழ்!!!

தன்னைத் தரிசனம் பண்ண வந்த முன்பின் அறிமுகம் இல்லாத  ஒருவரிடம், அவர் சொல்லாமலே ''சாமியைக் கும்பிடுறதால எந்தப் பிரயோஜனமும் இல்லேன்னு தினசரி பூஜை பண்ணுறதை நிறுத்திட்டு நாத்திகனா மாறிட்டே இல்லையா?''ன்னு கேட்டு வந்தவரை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறார் மகா பெரியவா[இது வழக்கமாக அவர் நிகழ்த்தும் அதிசயமாம்].

''என் குறைகளை எந்தச் சாமியும் தீர்த்து வைக்கல. யார் யாருக்கெல்லாமோ ஓடி ஓடி உதவுற சாமிகள் எனக்கு உதவலையேங்கிற ஆத்திரத்தில் அதுகளைக் கண்டபடி திட்டிடுறேன்; பூஜை பண்ணுறதையும் நிறுத்திட்டேன்'' என்றார் பெரியவாவைத் தரிசனம் பண்ண வந்தவர்.
வதனத்தில் புன்சிரிப்பைப் படரவிட்ட நடமாடும்/நடமாடிய கடவுளான பரமாச்சாரியார், ''தலைவலி, காய்ச்சல்னு ஒரு டாக்டரைப் பார்க்கப் பல நோயாளிகள் காத்திருக்காங்க. அப்போ, பாம்பு கடிச்சிடுச்சின்னு ஒருத்தரைத் தூக்கிட்டு வர்றாங்க. அவருக்குத்தான் முதலில் சிகிச்சை பண்ணுவார் டாக்டர். அதனால, மத்தவங்களைக் கவனிக்காம விட்டுட மாட்டார். அதுமாதிரி, உன்னைவிடக் கஷ்டத்தை அனுபவிக்கிற ஒருத்தருக்கு உதவப் போயிருப்பார் பகவான். அவருடைய கடாட்சம் கொஞ்சம் தாமதமாத்தான் உனக்குக் கிடைக்கும்'' என்றாராம்

காஞ்சி மாமுனிவர் அவர்கள் இப்படிச் சொல்லிண்டிருக்கும்போதே குறைபட்டுக்கொண்டவரின் மனசிலிருந்த, சாமிகளைப் பற்றிய தப்பான அபிப்ராயமெல்லாம் கரைஞ்சி காத்தோடு கலந்திடுச்சாம். அவா கண்களிலிருந்து தாரை தாரையா கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்ததாம். உரத்த குரலில், ''ஜய ஜய சங்கர...ஹரஹர சங்கர''ன்னு அவர் கோஷம் எழுப்பினாராம்[குமுதம், 14.11.2018].

'ஒரு மருத்துவரால் ஒரு நேரத்தில் ஒரு நோயாளியை மட்டும்தான் கவனிக்க முடியும். அது போல, [அனைத்தையும் படைத்து அருள்பாலிப்பவரும், எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவருமான] கடவுளால் ஒரு நேரத்தில் ஒரு பக்தனின் குறையைத்தான்  போக்க முடியும்' என்று பெரியவர் சொன்னதாகக் குறிப்பிடுகிறது குமுதம் கதை.

அதீத சக்தி வாய்ந்த கடவுளால், தான் படைத்த அத்தனை உயிர்களின் துன்பங்களையும் ஒரே நேரத்தில் போக்க முடியுமே. பட்டியலிட்டு, வரிசைப்படிதான் அருள்பாலிப்பார் என்பது பேதைமை அல்லவா?

பேரறிவுப் பெட்டகமான பெரியவா இதை உணராதவரா?

உலகம் போற்றும் 'அவதார புருஷர்' எனப்படும் அவர், தாம் நம்புகிற ஆண்டவனின் கருணைக்கு வரம்பு கட்டமாட்டார்; ஒர் அற்ப மானுடரான மருத்துவருடன் அவரை ஒப்பிடவும் மாட்டார்.

குமுதம் புத்திமான்களுக்கு இது புரியாமல் போனது ஏன்?!

இம்மாதிரிக் கதைகளை எழுதி எழுதி எழுதிப் பெரியவருக்கு இவர்கள் புகழ் சேர்க்கிறார்களா, குமுதத்தின் விற்பனையைப் பெருக்கிப் பணம் பண்ணுகிறார்களா, குலப்பெருமையைப் போற்றி வளர்க்கிறார்களா?!

எது எப்படியோ,

ஆன்மா என்று ஒன்று இருப்பது உண்மையானால்.....

'மகா பெரியவா'வின் ஆன்மா, குமுதம்காரர்களின் இந்த இழிசெயலால் மிக மிக மிக வருந்தும் என்பதில் எள்முனை அளவும் ஐயத்திற்கு இடமில்லை.
========================================================================

திங்கள், 12 நவம்பர், 2018

ஏசுவின் கண்களில் குருதி!...வாங்க...வந்து பாருங்க!!

சேலம், அழகாபுரத்தில் 'தூய மிக்கேல்' ஆலயம் உள்ளது. இங்கு, ஜெபமாலைகளுடன் ஏசுவின் சிலைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளனவாம். ஏசுநாதரின் ஒரு சிலையின் கண்களிலிருந்து குருதி[ரத்தம்] வடிந்துகொண்டிருப்பதாக இன்றைய 'தினகரன்' நாளிதழ் பரபரப்பான ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது[இம்மாதிரிச் செய்திகள் ஏற்கனவே வெளியாகியுள்ளன].

பார்வையாளர்களில் பலரும் இக்காட்சியைக் கண்டு பிரமிக்கிறார்களாம்.

சிலையின் கண்களிலிருந்து குருதி வடிவதற்கான காரணம் மட்டும் யாருக்கும் தெரியவில்லை. ஆலய நிர்வாகிகளும் விளக்கம் தந்தாரில்லை. புகைப்படங்களும் வெளியிடப்படவில்லை.
ஏசுநாதரின் கண்களில் குருதி வடிகிறதென்றால்.....

உலகில் அதர்மத்தின் ஆட்சி நிலைபெற்றுவிட்டதென்று பொருள். அதன் விளைவாக.....

நிலநடுக்கம், சுனாமி போன்றவற்றால் மனிதகுலம் பூண்டற்றுப் போகக்கூடும். இத்தகையதொரு பேரழிவு நிகழ்வதற்கு முன்பே, சேலம் வந்து ஏசுநாதரின் கண்களில் குருதி வடியும் காட்சியைக் காணும் பேற்றினைப் பெற்றிடுங்கள்.

''சிலை சிலைதான். அதன் கண்களில் ரத்தம் வடிவது எப்படிச் சாத்தியம்?'' என்று கேள்வி கேட்காமல் புறப்பட்டு வாருங்கள்.

''கண்ணீர் வடிப்பதுதானே துயரத்தை வெளிப்படுத்துவதற்கான அடையாளம். கண்களில் குருதி வெளியாவது ஏன்?'' என்று மனம் குழம்பாமல் வாருங்கள்.

''ஏசு, கடவுளின் புதல்வன். அவரை மிஞ்சிய சக்தி ஏதுமில்லை. அவரே ரத்தக் கண்ணீர் வடிப்பதா?'' என்று அதி தீவிரமாகச் சிந்திப்பதைத் தவிர்த்துக் கிளம்பி வாருங்கள்.

''இக்காட்சியைக் 'காணொலி'[வீடியோ] ஆக்கி ஊடகங்களில் வெளியிட்டிருந்தால், பயண நேரமும் பணச் செலவும் மிஞ்சியிருக்குமே'' என்று புலம்பாமல் புறப்பட்டு வாருங்கள்.

சேலம் 'தூய மிக்கேல்' ஆலயத்திற்கு வந்து ஏசுநாதரின் விழிகளில் குருதி வடிவதைக் காணுங்கள். இத்தகையதொரு வாய்ப்பு இனி உங்களுக்குக் கிட்டாமல் போகவும்கூடும்.

வாருங்கள்......தவறாமல் வருகை தாருங்கள்.

நன்றி.
------------------------------------------------------------------------------------------------------------------

சனி, 10 நவம்பர், 2018

'அது' விசயத்தில் அரைச் சதம் அடித்த ஆன்மிகச் சாமியார்!!!

'ஆன்மிகத் தலைவர் நான்' என்று தன்னைத்தானே அழைத்துக்கொண்ட தோடு, 'பிரசன்ன வெங்கடாச்சாரியார் சதுர்வேதி' என்று பெயரையும் மாற்றிக்கொண்ட இவரின் இயற்பெயர் வெங்கடசரவணன் என்பதாகும்.

படத்தை மீண்டும் ஒரு முறை உற்றுப்பாருங்கள். தெய்வீகக்கலை சொட்டுகிறதுதானே?

இவர் சாதிக்கப் பிறந்தவர். எதில்?

நாடிவரும் பக்தைகளில் அழகுப் பெண்களைத் தேர்வு செய்து, வசியப்படுத்தி உடலுறவு கொள்வதில் சாதனை படைத்திருக்கிறார்.  ஆம், 48 வயதே ஆன இந்த ஆன்மிகச் சாமியார், 50 பக்த கன்னிகளை[எண்ணிக்கை முழுமை பெறவில்லை] அனுபவித்திருக்கிறார்.

மாந்திரீகம் மூலம், தன்னைத் தேடிவரும் பக்தைகளை வசியம் பண்ணுவதில் இவர் கில்லாடியாம்.

ஆழ்வார்ப்பேட்டை, டி.டி.கே. சாலையைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவியை மட்டுமல்லாது, அவரின்  இரண்டு மகள்களையும் வசியம் பண்ணிப் புணர்ச்சி இன்பம் அனுபவித்தாராம்.

தட்டிக்கேட்ட சுரேஷை வெளியே தள்ளி, கதவை உட்புறமாய்த் தாளிட்டு லீலையைத் தொடர்ந்தார் என்றால் சாமியார் எப்பேர்ப்பட்ட ஆசாமி என்பதும் சுரேஷ் எத்தனை இளிச்சவாயன் என்பதும் புரியும்.

பெண்டாட்டியையும் பெற்ற மகள்களையும் பறிகொடுத்த ஏமாளி சுரேஷ், பல லட்சம் ரூபாயையும் இந்த அலேக் சாமியிடம் கோட்டை விட்டாராம்.

சுரேஷ் அளித்த புகாரின் பேரில் காவல்துறை சதுர்வேதியைக் கைது செய்தது. பிணையில் வெளிவந்த ஆன்மிக வேடதாரி, சுரேஷின் பெண்டாட்டியோடு பெண்களையும் கடத்திக்கொண்டு தலைமறைவானதாக ஊடகங்கள் பரபரப்புச் செய்தி வெளியிட்டன.

மகளிர் நீதிமன்றம், சதுர்வேதியைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. இந்த ஆன்மிகச் சூத்ரதாரி வடமாநிலங்களில் ஆன்மிகச் சொற்பொழிவு ஆற்றி வருவதாகக் கிடைத்த தகவலின் பேரில், மத்திய குற்றப்பிரிவுக் காவல்துறையின் தனிப்படை வட மாநிலங்களுக்கு விரைந்துள்ளது என்பது இப்போதைய செய்தி.

விரைவில் இந்தப் பெண் பொறுக்கி கைது செய்யப்படக்கூடும். நீதி மன்ற விசாரணைக்குப் பிறகு சிறைத்தண்டனை பெறவும்கூடும்.

இவருக்கு முன்பே, மாந்திரீகம் செய்து வசியம் பண்ணிக் கற்பழிப்பில் சாதனை புரிந்த சாமியார்கள் எல்லாம் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலை தொடர்ந்தால்.....

மாந்திரீகக் கலையும் 'வசியம் செய்தல்' கலையும் வளர்த்தெடுக்க ஆளில்லாமல் அழிந்துபோகுமே!

கற்பழிப்பில், அரைச்சதமும் முழுச்சதமும் போடப் போலிச் சாமியார்கள் இல்லாத நிலை[பல சதங்கள் அடித்து உலக சாதனைகள்கூட நிகழ்த்துவார்கள்] உருவாகுமே!

இதைத் தவிர்ப்பதற்கான வழிதான் என்ன?

ஒட்டுமொத்தச் சமுதாயமும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுத்தல் வேண்டும்.

ஹி...ஹி...ஹி!!!

புதன், 7 நவம்பர், 2018

பேடிகள் கோடியில்!!!

இது நடந்து ஆறு மாதம்போல இருக்கலாம்.

அந்தி மயங்கும் நேரத்தில், அந்தப் பேருந்து நிறுத்தத்தின் அருகே அழகிய பருவப் பெண்ணொருத்தி ரவுடிகளால் கடத்தப்பட்டாள். அப்போது அங்கு நிறையவே இளவட்டங்கள் இருந்தார்கள். கடை வாசல்களில் அதிவேக ‘பைக்’குகள் வரிசை கட்டியிருந்தன. அவள் கடத்தப்பட்ட இடத்துக்கு நேர் எதிரே ஒரு ‘வாடகைக் கார் நிறுத்துமிடம்’கூட இருந்தது. எல்லாம் இருந்தும்..........

‘விருட்’டென ஒரு வாகனத்தில் அல்லது, வாகனங்களில் சீறிப் பாய்ந்து ரவுடிகளை விரட்டிப் பிடித்து, கடத்தப்பட்ட பெண்ணை மீட்பதற்குக் கதாநாயகனோ நாயகர்களோ இல்லை என்பது எத்தனை பெரிய அவலம்?

அவள் கடத்தப்பட்ட சில வினாடிகளில் ஒரு மாயாஜாலம் போல நூறுபேர் கூடிவிட்டார்கள். வேறெதற்கு? வேடிக்கை பார்க்கவும் கதை பேசவும்தான்!

“இந்நேரம் ரவுண்டானாவைக்கூடக் கடந்திருக்க மாட்டானுக. பத்து பேர் சேர்ந்து ரெண்டு டாக்ஸி பிடிச்சிச் சேஸ் பண்ணினா அவனுகளை அமுக்கிறலாம்.” யாரோ ஒருவர் யோசனை சொன்னார். சொன்னவர் யாரென்று ஆளாளுக்குக் குரல் வந்த திக்கில் தேடினார்கள். ஆளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

“கார் போற வேகத்தைப் பார்த்தா ரவுண்டானாவைக் கடந்து ரொம்ப தூரம் போயிருப்பாங்க. நாமக்கல், சங்ககிரி, ஓமலூர்னு நாலஞ்சி கிளையா ரோடு பிரியுது. எதுல போனானுகன்னு கண்டுபிடிக்கிறது அவ்வளவு சுலபமா என்ன?” எதார்த்தமாகச் சொன்னார் ஓர் உள்ளூர் ஆசாமி.

“அப்படியே கண்டுபிடிச்சாலும் நாம வெறுங் கையோட போயி அவனுகளை மடக்குறது அவ்வளவு சுலபமில்லீங்க. அவங்க கையில்  ஆயுதம் இருக்கும். போட்டுத் தள்ளிட்டானுகன்னா நம்ம புள்ள குட்டிகளை யார் காப்பாத்துறதாம்?” சொன்னவர் கடமை உணர்வுள்ள ஒரு குடும்பஸ்தர்.

”பிக்பாக்கெட், வழிப்பறி மாதிரி பொண்ணுகளைக் கடத்துறதும் சர்வ சாதாரணம் ஆயிடிச்சி.”

“கடத்திட்டுப் போயிக் கற்பழிக்கிறது மட்டுமில்ல, துண்டு துண்டா வெட்டிப் போட்டுடறானுக.”

“கிழவிகளைக்கூடத் தூக்கிட்டுப் போயிக் கற்பழிக்கிறாங்க.” சொல்லி முடித்த ஒரு வழுக்கைத் தலையர் சுற்றுமுற்றும் பார்த்தார். யாரும் சிரிக்காததால் சீரியஸான முகபாவம் காட்டினார்.

இம்மாதிரியான வீண் பேச்சுகள் தொடர்ந்தபோது அதற்கு முட்டுக்கட்டை போட்டார் ஒரு ஜோல்னா பையர். “ஆளாளுக்கு வெட்டிக் கதை பேசிட்டிருந்தா எப்படி? செல்ஃபோன் வச்சிருக்கிறவங்க போலீஸுக்கு ஒரு ஃபோன் போடுங்கப்பா” என்றார் உரத்த குரலில். அவரிடம் செல்ஃபோன் இல்லையாம்!

“ஃபோன் பண்றது பெரிய காரியம் இல்ல. ‘நீ யாரு? எங்கிருந்து பேசற? பொண்ணுக்கும் உனக்கும் என்ன உறவு? இப்படிக் கேள்வி மேல கேள்வி கேப்பான் போலீஸ்காரன். கேஸ்ல நம்மை முக்கிய சாட்சியா போட்டுடுவான். சொந்த வேலையை விட்டுட்டுக் கோர்ட்டுக்கு நடையா நடக்கணும். ரவுடிங்களும் நம்மைப் பழி வாங்காம விடமாட்டாங்க. நமக்கு எதுக்கய்யா இந்த வம்பு தும்பெல்லாம்” என்று பேசிவிட்டு இடத்தைக் காலி செய்துகொண்டிருந்தார் ஒரு புத்திசாலி.

அவருடைய எதார்த்தமான பேச்சு எல்லோரையும் பாதித்திருக்க வேண்டும்.

கும்பல் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைய ஆரம்பித்தது.

நான் நெஞ்சுக்குள் குமுறினேன்.

‘சே, என்ன மனிதர்கள்!’

ஓர் இளம் பெண் பட்டப்பகலில் கடத்தப்படுகிறாள். நூறு ஆண்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்!

ஆண்களா இவர்கள்?

ஆண்மை உள்ளவர்களே ஆண்கள். பெண்ணை அனுபவிப்பதற்கு மட்டுமல்ல, உரிய தருணங்களில் அவளின் ‘மானம்’ காப்பதுதான் உண்மையான ஆண்மை.

இந்த மண்ணில் ஆண்மையுள்ள ஆண்களின் எண்ணிக்கை அருகிவிட்டதா?

லட்சத்திற்கு பத்துபேர் தேறுவார்களா?

கோபிக்காதீர்கள்..........அந்தப் பத்தில் நீங்களும் ஒருவரா?

யோசிக்கிறீர்கள்?

ஏதோ கேட்க நினைக்கிறீர்கள் போலிருக்கிறதே.

“இந்த அசம்பாவிதம் எப்போது நடந்தது?” என்கிறீர்களா?

ஆறு மாசம் முந்தி.

“எங்கே?”

சேலத்தில்.

“உனக்கு எப்படித் தெரியும்? செய்தித்தாள்ல படிச்சியா?””

இல்லீங்க. நானே நேரில் பார்த்தேன்.

“அட!...வேடிக்கை பார்த்த நூறு பேரில் நீயும் ஒருத்தன்! இல்லையா?”

அது வந்து.......

“என்னய்யா வந்து போயி, பத்தோட பதினொன்னா நீயும் வேடிக்கைதான் பார்த்திருக்கே. அந்தப் பொண்ணைக் காப்பாத்த நினைக்கலே. அப்போ, நீயும் ஒரு பேடிதான். அதாவது, ஆண்மையில்லாதவன். சரிதானே?”

அது வந்து.....அது வந்து.....வந்து.....

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
02.03.2015 ஆம் நாளில் சிறியேன் கிறுக்கியது!!!











செவ்வாய், 6 நவம்பர், 2018

100% பெண்ணையும் புகழையும் வெறுத்த அதிசய அறிஞர்!!

பருவ வயதிலிருந்தே பெண்ணையும் பொன்னையும் பொருளையும் வெறுத்தவர் இவர். ஆனாலும், ஒரு துறவியாக ஆவதை விரும்பாமல் விஞ்ஞானி ஆக விரும்பினார் இவர்.

அறிவியல் அறிஞர்கள் குறித்தும், அவர்களின் கண்டுபிடிப்புகள் குறித்தும் இவர் கற்றவை ஏராளம். ஆராய்ச்சியாளராக மாறி மிகக் கடினமாக உழைத்தார். கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்.

வாயுக்கள் அமிலத்திலிருந்து வெளிவருவதில்லை; உலோகங்களிலிருந்து அவை வெளியாகின்றன என்று கண்டறிந்தவர் இவர்தான். காற்று, உயிர்வாயு, ஹைட்ரிஜன் ஆகியவை குறித்தும் ஆராய்ந்தார்.

இரண்டு பங்கு ஹைட்ரிஜனும் ஒரு பங்கு ஆக்சிஜனும் இணையும்போது நீர் உண்டாகிறது என்பன போன்ற பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்திப் பெரும் புகழ் ஈட்டியவர் இவர். இவர்தான் ஹென்றி காவெண்டிஷ். 
இவரைப் பற்றி நிறையவே அறிந்திருப்பீர்கள். 

இந்தப் பதிவின் நோக்கம் இவரைப் பற்றி விவரிப்பதல்ல; இந்த அறிவியல் அறிஞர் உலகம் கண்டறியாத விசித்திர குணம் படைத்தவர் என்பதைப் பதிவு செய்வதுதான்.


70 வயதுவரை வாழ்ந்த இவருக்கு இளம் வயதிலிருந்தே பெண்களை[எத்தனை சிறந்த அழகியாயினும்] அறவே பிடிக்காதாம்.

பெண்கள் குழுமியிருக்கும் இடங்களில் இவரைப் பார்க்கவே முடியாது. இவரை அடைவதற்கு அரும்பாடுபட்டுத் தோற்ற பேரழகிகள் கணக்கிலடங்கார். தமக்கு வரும் மடல்களில் உள்ள எழுத்து ஒரு பெண்ணினுடையது என்பது தெரிந்தாலே அதைக் குப்பைத்தொட்டியில் வீசிவிடுவாராம்.

பணியாட்கள் மட்டுமே இவரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டார்கள். தப்பித் தவறியும்கூட, பணிப்பெண்கள் இவரின் எதிரே வருதல் கூடாது. அப்படி வந்தவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள்.

தேடிவந்த புகழையும் வெறுத்த வேடிக்கை மனிதர் இவர்.

ஒரு சமயம் ஒரு நண்பரின் வீட்டு விருந்துக்குச் சென்றிருந்தார் ஹென்றி காவெண்டிஷ்.

விருந்துக்கு வந்திருந்த அயல்நாட்டைச் சேர்ந்த ஒரு பிரபலம், இவர் சிறந்த விஞ்ஞானி என்பதை அறிந்து, இவருடன் உரையாட விரும்பினார். விருந்தளித்த நண்பர் தடுத்தும்கூட ஆர்வ மிகுதியால் இவரை எதிர்கொண்டு புகழ ஆரம்பித்தபோது.....

எதையோ நினைவுபடுத்திக் கொண்டவர் போல் நடித்து, அவசர வேலை இருப்பதாகச் சொல்லி, புகழ்மொழியைத் தவிர்த்து, விருந்தையும் புறக்கணித்து அங்கிருந்து அகன்றார் இந்தப் புதிர் மனிதர்.

அழகிய பெண்ணுக்கு மயங்காதவரோ புகழுக்குக் கிறங்காதவரோ எவருமில்லை என்னும் நிலையில், நாடிவந்த கவர்ச்சிப் பெண்களையும் தேடிவந்த புகழையும் அறவே வெறுத்து, முழுக்க முழுக்க அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இவரைப் போன்ற ஓர் அதிசய மனிதரை இவ்வுலகம் கண்டதே இல்லை; இனி, காணப்போவதும் இல்லை.
------------------------------------------------------------------------------------------------------------------
உதவிய நூல்:
மணிமேகலைப் பிரசுரத்தின் 'விஞ்ஞானிகளின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்'; முதல் பதிப்பு: 1990.
------------------------------------------------------------------------------------------------------------------

சனி, 3 நவம்பர், 2018

எல்லாம் வல்ல 'அல்லா' கருணை காட்டுவாரா?

மதங்கள் பல. கடவுள் நம்பிக்கை கொண்ட மதம் சார்ந்த மக்கள், வேறு வேறு கடவுள்களை வணங்குகிறார்கள். இஸ்லாமியருக்கு 'அல்லா' கடவுளாவார். 

பாகிஸ்தானில் லாகூர் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் ஆசியா பீபிக்கும் [கிறித்தவர்]அண்டை வீட்டுப் பெண்களுக்கும்[இஸ்லாம் மதத்தவர்] ஏற்பட்ட தகராறின்போது இறைத் தூதர் முகம்மது நபியை ஆசியா பீபி இழித்துப் பேசியதாக வழக்குத் தொடுக்கப்பட்டு, விசாரணை நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. உயர் நீதிமன்றம் அதை உறுதி செய்தது. ஆசியா பீபி தரப்பில் மேல்முறையீடு செய்ததில், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அடங்கிய குழு தண்டனையை ரத்து செய்தது. இது ஊடகங்கள் வாயிலாக நாம் அறிந்த செய்தி.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரிப் பாகிஸ்தானின் பெரு நகரங்களில் போராட்டங்கள் வெடித்திருப்பதாக, ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. பயங்கரவாதிகளால் ஆசியா பீபியின் உயிருக்கு ஆபத்து நேரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
#அல்லா, எல்லாம் வல்ல கடவுள்; கருணை வடிவானவர்.

பிரபஞ்சப் பொருள்கள் மட்டுமல்ல, அனைத்து உயிர்கள் மட்டுமல்ல, ஆறறிவு மனிதர்களும் அவரால்  படைக்கப்பட்டவர்களே. தாம் படைத்த தம் பிள்ளைகளைக் காப்பவரும் அவரே# -பிற மதங்கள் போலவே, இறைவன் குறித்த இஸ்லாத்தின் நம்பிக்கையும் இதுவே என்பது நம் நம்பிக்கை.

இறைவன் கருணை வடிவானவன் என்பதால், மனிதர்கள் அறிந்தோ அறியாமலோ அவனைப் பழித்துப் பேசினாலும், அவ்வுரைகளால் எவ்வகையிலும் அவனுக்குப் பங்கம் நேராது என்பது அறியத்தக்க உண்மை. இவ்வுண்மையை மறந்துவிட்டதன் விளைவோ என்னவோ, 'ஆசியா பீபி' தூக்கிலிடப்பட வேண்டும் என்று பாகிஸ்தானின் அதீத மதப்பற்றுள்ளவர்கள் போராடுகிறார்கள்.

காரணம் எதுவாக இருப்பினும், சிறுபான்மை இனத்தவரான ஆசியா பீபிக்கு ஆதரவாகப் பாகிஸ்தான் மக்களில் மிகச் சிலர்கூடக் குரல் கொடுப்பதாக அறியப்படவில்லை. இந்நிலையில்.....

'அல்லா' மட்டுமே அவரைக் காப்பாற்ற இயலும் என்று தோன்றுகிறது.

அவர் காப்பாற்றுவாரா?
=======================================================================
Indiblogger இன் முகப்புப் பக்கத்தில் இப்பதிவு இடம்பெற்றுள்ளது.




வியாழன், 1 நவம்பர், 2018

'மண முறிவு'[Divorce] வரவேற்பு விழா!!

இது நடந்த கதையல்ல; 'நடந்தால் நல்லது' என்னும் நல்ல எண்ணத்தால் உருவான கதை. படியுங்கள். முற்றிலும் மாறுபட்டதொரு படைப்பை வாசித்த அனுபவத்தைப் பெறுவீர்கள்!

“சரண்யா, அசோக் வீட்டுப் பிரிவு உபச்சார விழாவுக்குப் போகணுமே. நேரமாச்சு. கிளம்பு.”

“நீங்க மட்டும் போனால் போதாதா?”

”சேச்சே...அசோக், சுனிதா ரெண்டு பேரும் வீடு தேடி வந்து அழைச்சாங்க. நாம ரெண்டு பேரும் போகணும்.”

“சரிங்க.”

அடுத்த அரை மணி நேரத்தில், சரண்யாவும் அவள் கணவன் கார்த்திக்கும் 'கரூர்-திண்டுக்கல்' சாலையிலிருந்த ஒரு விழா மண்டபத்தில் நுழைந்தார்கள்.

அசோக், சுனிதா ஜோடிக்கு ஓர் ஆண்டு முன்பு திருமணம் நடந்த அதே மண்டபம். அதே கிழமை. அதே முதல் தேதி. நேரம் மட்டும் மாறியிருந்தது. கல்யாணம் நடந்தது காலை நேர சுபமுகூர்த்தம். இப்போதைய நிகழ்வு இருள் சூழும் ஒரு மாலைப் பொழுதில்.

கெட்டி மேளம்; மங்களப் பொருட்கள்; இன்னிசைக் கச்சேரி; வீடியோ; ஃபோட்டோ; மேடை அலங்காரம்.....என்று அப்போது மண்டபம் களை கட்டியிருந்தது. இன்று மெல்லிசை ஒலிபரப்பு மட்டும்.

மேடையில் ஒரு மேசை. அதன் மீது ஒரு மைக்.

மண்டப முகப்பில் அசோக்கும் சுனிதாவும்; புன்னகை தவழும் முகங்களுடன் எல்லாரையும் வரவேற்று விருந்துண்ண அனுப்பி வைத்தார்கள்.

விருந்துக்குப் பிறகு விழா ஆரம்பமானது.

மேடையில் அசோக்கும் சுனிதாவும் மட்டும்.

அசோக்கின் தந்தை, மேடையேறி வரவேற்புரை ஆற்றிவிட்டு இறங்கினார்.

அசோக் எழுந்தான்.

“விடைபெறு விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். இதே மண்டபத்தில் ஓராண்டுக்கு முன்பு எங்கள் திருமணம் நடந்தது. நீங்கள் எல்லோரும் வந்திருந்து நாங்களமெங்களை வாழ்த்தினீர்கள். அதை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.....

எடுத்துக்காட்டான தம்பதியராய் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று எங்களிடம் வேண்டுகோள் வைத்தீர்கள். அதை நிறைவேற்ற இயலாமைக்கு வருந்துகிறேன்;  வருந்துகிறோம்.

எதிர்பாராத விதமாக, எங்களிடையே சிக்கல்கள் முளைத்துவிட்டன. எவ்வளவோ முயன்றும் அவற்றைச் சரி செய்ய இயலவில்லை.

எங்களுக்குள் கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் ஏற்பட்ட போதும் ஒருவரையொருவர் அநாகரிகமாகத் தூற்றிக் கொள்ளவில்லை. ஆரோக்கியமான முறையில் கலந்து பேசி, பிரிவது என்று முடிவெடுத்தோம்.  பிரிகிறோம்.

சேரும்போது அழைத்தோம். பிரியும்போதும் அழைப்பதுதானே நாகரிகம். அழைத்தோம் வருகை புரிந்தீர்கள். அனைவருக்கும் மனப்பூர்வ நன்றி.”

பேசி முடித்தான் அசோக்.

சுனிதா எழுந்தாள்.

“அசோக் மிகவும் நல்லவர். வாழ்க்கைப் பாதையில் இவருடன் இணைந்து செல்ல இயலாமைக்கு வருந்துகிறேன். இவர் உயரிய பண்பாளர். ஆடவர்களுக்கு முன்னுதாரணம்.

அனைவருக்கும் நன்றி.”

இருவர் கண்களிலும் நீர்த்துளிகள் அரும்பியிருந்தன. வலிந்து செய்த புன்னகையுடன் கையசைத்தார்கள்.

மண்டப முகப்பிற்கு வந்து நின்று, கரம் கூப்பி அனைவரையும் வழியனுப்பி வைத்தார்கள்!
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000