'பிரபஞ்சத் தோற்றம்' குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், 'ஏதும் புரியவில்லை' என்பது புரியும். தோற்றுவித்தவர் கடவுள் என்பது வெறும் அனுமானம்தான்!

Friday, May 25, 2012

கடவுளின் ‘பயோ டேட்டா’!!! [தன்விவரக் குறிப்பு]

                   
1] பெயர்: ...........................................கடவுள்.2] சிறப்புப் பெயர்கள்:...................சொல்லி மாளாது!
[பக்தர்கள் சூட்டியவை]              [’ஆதி மூலன்’, ’ஆபத்பாந்தவன்’
,                                                           ‘கருணைக் கடல்’ என்றிவ்வாறான     
                                                             நாமங்களையும், மதம்
                                                             சார்ந்த பெயர்களையும் நினைவு
                                                             கூர்க]


3] பிறந்த தேதி:.............................தான் அவதரித்த அந்தப் புனித
                                                          மான நாளைக் கண்டறிய, யுக      
                                                          யுக யுகங்ளாக ...கோடி கோடி 
                                                          கோடி ஒளி ஆண்டுகளாகச் 
                                                          சிந்தித்துக் கொண்டிருக்கிறார்
                                                          கடவுள்.


4] கல்வித் தகுதி:.........................அனைத்தும் அறிந்தவர்.


5] தொழில்:...................................அளந்தறிய இயலாத, விரிந்து
                                                           பரந்த ‘வெளி’யில் கணக்கில் 
                                                           அடங்காத கோள்களையும் 
                                                           நட்சத்திரங்களையும் பிற
                                                           வற்றையும் படைத்து உலவச்
                                                           செய்து, அவ்வப்போது அவற்றை 
                                                           மோத விட்டு, அவை வெடித்துச் 
                                                           சிதறும் கண்கொள்ளாக் காட்சி
                                                           யைக் கண்டுகண்டு ரசிப்பது.      
                                                     
                                                           மண்ணுலகில், உயிர்கள் ஒன்றோடு
                                                          ஒன்று மோதித் துன்புற்று அழிவதை
                                                          யும், வறுமை, நோய் போன்றவற்றால்                                                                                                                    சித்திரவதைக்கு   உள்ளாவதையும்                                                                                           வேடிக்கை பார்ப்பது.                                 
                                                                 


6] நண்பர்கள்:................................காணிக்கை செலுத்தியும், நேர்த்திக் 
                                                          கடன்களை நிறைவேற்றியும், “இதைக் 
                                                          கொடு...அதைத் தா” என்று தொல்லைக்கு
                                                          உள்ளாக்காதவர்கள்.


7] நல்ல நண்பர்கள்:..................அடுக்கடுக்கான வேதனைகளுக்கு
                                                          உள்ளானாலும் கடவுளை ஏசாமல்
                                                          “எல்லாம் என் தலைவிதி” என்று 
                                                          தன்னைத்தானே நொந்து கொண்டு    
                                                          நடைப் பிணமாய்க் காலம் கழிப்ப
                                                          வர்கள்.


8] எதிரிகள்:..................................கடவுள் இல்லை என்று சொல்லி, 
                                                         மூடநம்பிக்கைகளைச் சாடும்
                                                         நாத்திகர்கள் அல்ல.


                                                         கடவுளைக் காப்பதாகச் சொல்லிக்
                                                         கொண்டு, மாற்று மதத்தவர்களைக்
                                                         கொன்று குவித்து, அவர்களின் 
                                                         சொத்துகளை நாசப்படுத்தி, மிருகங்
                                                         களாய்த் திரியும்  மதவெறியர்கள்.


9] நிரந்தர எதிரிகள்:.................“நானே கடவுள்” என்று சொல்லித்
                                                         தினவெடுத்து அலையும் புதுப்
                                                         புது ‘அவதாரங்கள்’.


10] இப்போதைய கவலை:..... தம் படைப்பில் நேர்ந்த தவறுகளை
                                                        நீக்குவதற்காக, மனிதனுக்குத் தந்த
                                                        ஆறாவது அறிவை, அவன் தன் 
                                                        சுயநலத்துக்காகப் பயன்படுத்துவது.


11] நிரந்தரக் கவலை:.............படைத்தல், காத்தல், அழித்தல் 
                                                       ஆகிய தமக்குரிய முத்தொழிலை
                                                        இன்னும் எவ்வளவு காலத்துக்குச்
                                                        செய்வது?


*******************************************************************************************************************************
                                                        


                                                             

Friday, May 18, 2012

அணுக்களா, கடவுளா?

ஆத்திக நண்பர்களே வாருங்கள்...........                              

                                       அணுக்களா, கடவுளா?

 நீங்கள் நம்புகிற கடவுள் என்பவரின் தேவை என்ன? அவர் எப்போது, எங்கே எப்படித் தோன்றினார் என்பன போன்ற கேள்விகளுக்கு நீங்கள் கடவுளுக்குச் சமமாக வைத்துப் போற்றுகிற அவதாரங்களிடமிருந்தோ ஆன்மிகவாதிகளிடமிருந்தோ உங்களிடமிருந்தோ சரியான பதில் இன்றுவரை கிடைக்கப் பெறவில்லை.

//கடவுளுக்குத் தோற்றமோ அழிவோ இல்லை; அவர் எப்போதும் இருந்துகொண்டே இருப்பவர்// என்ற உங்கள் தரப்பிலான அனுமானத்தைத் தகர்க்கும் விதமாக, //என்றும் இருத்தலான நிலை அவருக்கு எப்படி வாய்த்தது? அந்நிலையை உருவாக்கியவர் யார்// என்று சிந்தனையாளர்கள் எழுப்பும் வினாக்களுக்கும் விடை தரப்படவில்லை.


நீங்கள் நம்புகிற கடவுளே அனைத்திற்கும் மூலகாரணமானவர் என்கிறீர்கள். அவ்வாறாயின், நம்மைத் தாக்குகிற அளப்பரிய துன்பங்களுக்கும் அவர்தானே காரணம் என்று கேட்டால், அதைக் குதர்க்க வாதம் எனச் சாடுகிறீர்கள்.

எங்களுடைய இன்னும் பல நியாயமான கேள்விகளையெல்லாம் அலட்சியப் படுத்திவிட்டு, கடவுளைக் காப்பாற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கிறீர்கள்.

//பிரபஞ்ச வெளியில் உலா வரும் கோள்களும், நட்சத்திரங்களும் பிறவும் வடிவமைக்கப்பட்ட விதமும், உயிர்களின் உடலமைப்பும் அவற்றின், ஓர் ஒழுங்குக்கு உட்பட்ட இயக்கமும் எத்தனை அதிசயமானது!. இந்த அதிசயம் தானாக நிகழ்ந்திருக்க முடியாது. இதை நிகழ்த்த ஒருவர் தேவை. அவரே கடவுள்// என்று உங்கள் தரப்பு சொல்லிக் கொண்டே இருக்கிறது.

அந்த ‘அதிசயக் கடவுளை’த் தோற்றுவித்தது யார் என்ற கேள்விக்கு உங்களை வழிப்படுத்துவோரிடமிருந்து எப்போதும் பதில் வந்ததில்லை. ’புரியவில்லை’ என்று ஒப்புக் கொள்ளும் நேர்மையும் இல்லை.


கடவுளோ வேறு எதுவோ, அனைத்திற்கும் மூலகாரணமான ‘ஒன்றின்’ தோற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என்ற வினாவுக்கு விடை காணும் சாத்தியம் இல்லையென்றாலும், இந்த பிரமாண்ட ‘வெளி’யில் வகைவகையான பொருள்களையும் உயிர்களையும் அவற்றின் இயக்கங்களையும் காண முடிகிறது.


இவை எப்படியோ தோன்றிவிட்டன. இவற்றின் ’இருப்பு’ உண்மை.

இந்த உண்மையைக் கடவுள் நம்பிக்கையாளர், மறுப்பாளர் என அனைவரும் ஒப்புக் கொள்வர்.

இதைத் தமக்குச் சாதகமாக்கி, ஏன், எப்படி போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாவிட்டால் என்ன? கோள்களும் உயிர்களும் பிறவும் இருப்பது உண்மை எனின், அவற்றைத் தோற்றுவித்த ஒருவர் இருப்பது சாத்தியம்தானே? அவர்தான் கடவுள் என்று கடவுள் பற்றிய விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட முயல்கின்றனர் கடவுளைப் போற்றுவோர்..

அத்தகையோரிடம் நாம் முன்வைக்கும் வினா இதுதான்.........................


மையப்புள்ளி இல்லாத, நீளம் அகலம் சுற்றளவு விளிம்பு என்று எந்தவொரு அளவுகோலுக்கும் உட்படாத அதிசயிக்கத்தக்க அதிபிரமாண்டமான ‘வெளி’யில் இடம் கொண்டிருக்கும் அத்தனை பொருள்களுக்கும் உயிர்களுக்கும் மூலமாக இருப்பது கடவுள் என்னும் ஒரு ‘நபர்’தான் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?


அனைத்திற்கும் ’ஒன்றே’ அல்லது ‘ஒருவரே’ மூலகாரணம் என்று தீர்மானிப்பதற்கான அடிப்படை என்ன?


பல கடவுளர்கள் இருந்து, அவர்களுக்குள் எழுந்த போட்டியால்...மூண்ட பெரும் போரால் ஏனையோர் அழிந்துவிட ஒருவர் மட்டுமே மிஞ்சினாரா?

இதற்கு மிகச் சரியான பதிலை எவராலும் தர இயலாது. “தெரியாது” என்று பெருந்தன்மையுடன் ஒப்புக் கொள்ளவும் கடவுளை அனுமானித்தவர்களின் ‘அந்தஸ்து’ இடம் தருவதில்லை.

இதற்கு மாறானதொரு அனுமானத்தை நம்மால் முன்வைக்க முடியும்.


எத்தனை எத்தனை யுக காலங்கள் முயன்றாலும், மனித அறிவால் அளந்தறிய முடியாத [கடவுளுக்கு எல்லாம் தெரியும் என்று முணுமுணுக்க வேண்டாம்] ’வெளி’யில் இடம் கொண்டுள்ள அனைத்திற்கும் மூலகாரணம் பேரறிவு சான்ற அணுக்களே என்று ஏன் சொல்லக் கூடாது?

பெரும் எண்ணிக்கையிலான அணுக்களைக் கட்டுப்படுத்த ‘ஒருவர்’ அதாவது, ‘கடவுள்’ தேவையாயிற்றே என்ற ஐயம் எழுவது இயல்பு.

ஒரு கடவுள் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டு ஒரு நியதியின்படி செயல்படுவாரென்றால், அது அணுக்களுக்கும் பொருந்தும்தானே?


ஒவ்வொரு அணுவும் சில நெறிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, பிரபஞ்சப் பொருள்களையும் உயிர்களையும் உருவாக்குவதும் இயக்குவதுமான செயல்களைச் செய்கிறது எனக் கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

படைப்புக்கான அணுக்கள்; உயர் பண்புக்கான அணுக்கள்; பல்வகை உணர்ச்சிகளுக்கான அணுக்கள்; நல்ல எண்ணங்களைத் தோற்றுவிக்கும் அணுக்கள்; தீய உணர்வுகளை உருவாக்கும் அணுக்கள் என்றிப்படி வகை வகையான அணுக்கூட்டங்கள் வெளியில் நிறைந்து கிடக்கின்றன. அவையே அனைத்திற்கும் மூல காரணம்; கடவுள் என்னும் ஒற்றை நபர் அல்ல என்று நாம் அனுமானிக்கிறோம்.


இது வெறும் அனுமானம்தான். கடவுள் என்று ஒருவரை ஆன்மிகவாதிகள் அனுமானம் செய்தது போல.


காலப் போக்கில் எது உண்மை எது பொய் என்பதை அறிவியல்தான் நிரூபிக்க வேண்டும். அதுவரை, புரிந்து கொள்ள முடியாத எதையும், “புரியவில்லை” என்று ஒப்புக்கொள்வது அறிவுடையோர்க்கு அழகு.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இன்னும் சிந்திக்கலாம்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Friday, May 4, 2012

பதிவர்களுக்குப் பத்து பரிந்துரைகள்.

                      பதிவர்களுக்குப் பத்து பரிந்துரைகள்.


மதம் சார்ந்த பதிவுகளை எழுதும் பதிவர்களிடையே கருத்து மாறுபாடுகள் எழுவதால் கடும் விவாதத்தில் ஈடுபடுகிறார்கள்.

விவாதம் தேவைதான்.

மதம் சார்ந்த கொள்கைகளில், எது சரியானது அல்லது சிறந்தது என்று கண்டறிய அது உதவுகிறது.

விவாதம் புரிவோர்க்கென சில கட்டுப்பாடுகள் உள்ளன. அவர்கள் அவற்றை ஏற்க மறுத்து, எதிரியை வீழ்த்தும் ஒரே நோக்கோடு...வெறி உணர்ச்சியோடு களத்தில் இறங்கும்போது, எதிர்பார்க்கும் நற்பலன்களுக்குப் பதிலாகப் பாதகங்கள் விளைகின்றன.

மதம் சார்ந்த பதிவர்கள், மற்றும் மதச்சார்பு இல்லாமலே விவாதத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் பிற பதிவர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இப்பதிவை எழுதுகிறேன்..

பதிவர்கள் விரும்பினால், என் பெயர் சேர்த்து இப்பதிவை எடுத்தாளலாம்; ’காப்பி பேஸ்ட்’  செய்தும் பிற திரட்டிகளில் வெளியிடலாம்.

                                                    பதிவு
                            
                          பதிவர்களுக்குப் பத்து பரிந்துரைகள்.


1] விவாதத்திற்குரிய கருத்துகள் இடம்பெற்ற பதிவை அல்லது அது சம்பந்தப்பட்ட அத்தனை பதிவுகளையும் முழுமையாகப் படியுங்கள்.


2] சிறிது நேரமாவது, மனதில் பதிய வைத்த அக்கருத்துகள் பற்றி ஆழ்ந்து சிந்தியுங்கள்.


3] அவற்றில் போற்றுதலுக்கு உரியவை எவை, மறுக்கப்பட வேண்டியவை எவை என்று முடிவெடுங்கள்.


4]எழுப்ப விரும்பும் கேள்விகளைப் பட்டியலிடுங்கள். பொறுமை இழக்காமல், மாற்றுக் கருத்துகளை அல்லது எழும் ஐயங்களை முன் வையுங்கள்.


5] விவாதத்தில் தரக் குறைவான சொற்களைப் பயன்படுத்த வேண்டாம். [யார் முதலில் இதைக் கடைபிடிப்பது என்ற போட்டி கூடாது]. மனதைப் புண்படுத்தும் வகையிலான தனிப்பட்ட தாக்குதல் தவிர்க்கப்பட வேண்டும்.


6] வெற்றி பெற வேண்டும் என்று மூர்க்கத்தனமாகச் செயல்படாமல், உண்மை அறியும் நல்லெண்ணத்துடன் விவாதம் புரிவது மிகுந்த நன்மை பயக்கும்.


7] விவாதம் முடியும்வரை, நடுநிலை பிறழாமலும் உணர்ச்சி வசப்படாமலும் இருக்க முயலுதல் நன்று.


8]ஒருவர் முன்வைத்த கருத்து சரியெனப் பட்டால், மற்றவர் அதை ஏற்றுக் கொண்டு பாராட்டுவது உயர் பண்பு என்பதை மறத்தல் கூடாது.


9] ஒரு கொள்கை அல்லது கருத்துக்கான விவாதம் முற்றுப் பெறுவதற்குள் அடுத்த கருத்துக்குத் தாவுதல் விவாதத்தின் சுமுகமான போக்கைச் சீர்குலைக்கும் என்பதை நினைவில் பதித்தல் இன்றியமையாத் தேவை.


10] விவாதத்தின் போக்கைத் திசை மாற்றி, தோல்வியைத் தவிர்க்க நினைப்பது கண்டிக்கத் தக்கது.


இம்மாதிரியான கட்டுப்பாடுகளை விரும்பாத பதிவர், விவாதத்தில் பங்கு கொள்வதைத் தவிர்த்துவிட்டு, தமக்குரிய வலைத்தளத்தில் மாற்றுக் கருத்துகளை வெளியிட்டுக் கொள்ளலாம்.


இதுவே மனித நாகரிகம் ஆகும்.


********************************************************************************