'பிரபஞ்சத் தோற்றம்' குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், 'ஏதும் புரியவில்லை' என்பது புரியும். தோற்றுவித்தவர் கடவுள் என்பது வெறும் அனுமானம்தான்!

Sunday, February 26, 2012

கடவுள் கண்ணுச்சாமி
                கடவுள் கண்ணுச்சாமி [சிறுகதை]

கண்ணுச்சாமி ரொம்பவும் இளகிய மனசுக்காரன்.

காலை நேரத்தில், வழக்கம்போல வேலைக்குப் போய்க் கொண்டிருந்தபோது, அவனுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த எழுபது வயது மதிக்கத் தக்க ஒரு முதியவர் மயங்கி விழுந்ததைப் பார்த்தான்.

யாரும் உதவ முன்வராத நிலையில், ஆட்டோ பிடித்து அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தான்.

நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பிறகு, சிகிச்சை தரப்பட்ட அவரைப் பார்க்க அவன் அனுமதிக்கப் பட்டான்.

முதியவருக்குச் சுயநினைவு திரும்பியிருந்தது.

அவரை நெருங்கி, “நல்லா இருக்கியா பெரியவரே?” என்று குரலில் கனிவு பொங்கக் கேட்டான் கண்ணுச்சாமி.

அவனை உற்றுப் பார்த்த அவர், “நல்லா இருக்கேன்பா. நீ.....நீதான் என்னை இங்கே கொண்டுவந்து சேர்த்தியா?” என்றார்.

“ஆமா. நடைபாதையில் மயங்கி விழுந்துட்டே. உன்கிட்டே செல்ஃபோன் இல்ல. ஒரு அடையாள அட்டைகூட இல்ல. உன் குடும்பத்தார்க்குத் தகவல் தர முடியல. உனக்கு மயக்கம் தெளியட்டும்னு காத்திருந்தேன்” என்றான்.

“நீ கடவுள் மாதிரி வந்து என்னைக் காப்பாத்தினே. நீ நல்லா இருக்கணும்ப்பா”. குரல் தழுதழுக்கச் சொன்னார் முதியவர்.

“பெரியவரே, நான் கடவுள் மாதிரியெல்லாம் வரல. சாதாரண மனுசனாத்தான் வந்தேன். நான் ஒரு கட்டட மேஸ்திரிகிட்ட சித்தாளா வேலை செய்யுறவன்.
உனக்கு உதவி பண்ணினதில் இன்னிக்கி வேலை கெட்டுது. இருந்த அம்பது ரூபாயை ஆட்டோவுக்குக் கொடுத்துட்டேன். வெறும் கையோட வீட்டுக்குப் போனா, ராத்திரிக்கு அடுப்பு எரியாது. உனக்கு உதவுறதுக்காக என்னை அனுப்பி வெச்ச கடவுள் என் குடும்பத்துக்கு ஒரு வேளைச் சோத்துக்கு வழி
பண்ணுவாரா என்ன?” என்று கேட்டுச் சிரித்தான் கண்ணுச்சாமி.

"எனக்கு ஒரே புள்ள. ஒன்னுக்கும் உபயோகம் இல்லாத இந்தக் கிழவனை வீட்டோட இருக்க வெச்சி ஒரு வேளைச் சோறு போடுறான். நெனப்பு வந்தா அஞ்சோ பத்தோ தருவான்.” என்று சொல்லிவிட்டு, சட்டைப் பையைத் துழாவிய முதியவர் கொஞ்சம் சில்லரையை எடுத்துக் காட்டினார்.

அதில் ஒரு ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்ட கண்ணுச்சாமி, “காயின் ஃபோனில் உன் மகனுக்குத் தகவல் தந்துட்டுப் போறேன். நம்பர் சொல்லு” என்றான்.

#################################################################################


Thursday, February 2, 2012

எத்தனை மதங்கள்! எத்தனை பொய்கள்!!

                        எத்தனை மதங்கள்! எத்தனை பொய்கள்!!

இம்மண்ணில் தோன்றிய மதங்களை எண்ணி விடலாம். மதவாதிகள் பரப்பிய புனை கதைகளையும், கற்பித்த பொய்ச் சம்பவங்களையும் எண்ணி முடிப்பது சாத்தியமே இல்லாத ஒன்று!

“தீய சக்திகளை நிர்மூலம் செய்து நல்லவர்களை வாழ வைக்கப் பல அவதாரங்கள் எடுத்தார் கடவுள்; இன்னும் எடுக்க இருக்கிறார்” என்கிறது ஒரு மதம்.

"பாவிகளின் பாவங்களைச் சுமப்பதற்காகவே தேவன் இங்கே மனிதனாகப் பிறக்கிறார். செத்துப் பிழைத்து அதிசயங்கள் நிகழ்த்துகிறார்” என்கிறது மற்றொன்று.

‘நாங்கள் தொழுகின்ற கடவுளே உண்மையானவர். வாருங்கள். வந்து முறையிடுங்கள். நீங்கள் கேட்பதெல்லாம் அவர் தருவார்” -இது இன்னொன்று.


இப்படி, இந்த மதவாதிகள் போட்டி போட்டுக் கொண்டு சொன்ன...சொல்லும் பொய்களுக்கு வரன்முறையே இல்லை! [இவர்களில் சிலர் மக்களுக்குச் செய்யும் நற்பணிகளை நாம் பழிக்கவில்லை; பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறோம். கடவுள் பற்றிய ஆய்வில் அதைத் தொடர்பு படுத்துவது தவறு].

பல நூறு ஆண்டுகளாக, கோடி கோடி கோடியாய்ப் பணத்தைச் செலவழித்து, கோயில்கள் கட்டி, விழாக்கள் நடத்தி, ஊடகங்களில் எழுதி எழுதி, பேசிப் பேசி
கடவுள் நம்பிக்கையை, மக்கள் மனங்களில் மிக அழுத்தமாய், ஆழமாய்ப் பதிய வைத்து விட்டார்கள்.


தமக்கு நேர்ந்த துன்பம் அகன்றது, இயற்கை நிகழ்வா, தற்செயலானதா, கடவுளின் அருளினாலா எனப் பகுத்து ஆராய்ந்து முடிவெடுக்க விடாமல் மக்களின் மூளையை மழுங்கடித்து விட்டார்கள்.

‘கடவுள்...கடவுள்” என்று இவர்கள் போட்ட கூச்சலில்...செய்யும் ஆர்ப்பாட்டத்தில், எது? ஏன்? எப்படி? என்று, இன்றுவரை விடை கிடைக்காத வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியைக் கைவிட்டு, ‘கடவுளே எல்லாம்” என்று முடிவு கட்டி, அரியதொரு ஆய்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள் பெரும்பாலான மனிதர்கள்.

எதிர்பாராமல் நிகழும் எல்லா நன்மைகளையும் கடவுளின் அருளால் நிகழ்ந்தது என்று சொல்லும் அளவுக்கு அவர்களின் சிந்திக்கும் திறன் முடக்கப் பட்டு விட்டது.

[”கடவுள், மக்களுக்காக {ஏழைகளுக்காகத்} தன்னுடைய ஒரு மயிரைக் கூடப் பிடுங்கிப் போட்டதில்லை” என்று சினந்து சீறுகிறார் ஒரு கவிஞர். பல ஆண்டுகளுக்கு முன்பு இதை ஒரு தமிழ் வார இதழில் படித்தோம். அவர் பெயரை நினைவில் பதிக்கத் தவறியது எம் குற்றம்]

மனிதர்களாகப் பிறந்த சிலரையே இவர்கள் மகான்களாகவும் ஞானிகளாகவும் ஆக்கி வைத்திருக்கிறார்கள். அபூர்வப் பிறவிகள் என அவர்களைப் போற்றுகிறார்கள்.


இந்த அபூர்வப் பிறவிகள் அபயக்கரம் உயர்த்தினால் தீராத நோயெல்லாம் தீர்ந்து விடுமாம்.


இவர்கள் செத்தவர்களைப் பிழைக்க வைப்பார்களாம்.


பார்வை இழந்தவர்களுக்குப் பார்வை தருவார்களாம்.

இவர்களின் தரிசனம் கிடைத்தால் போதும், செய்த பாவங்கள் விலக, கூடை கூடையாய்ப் புண்ணியம் குவியுமாம்.

இந்த மகான்களின் நல்லாசியால், ஏழை பணக்காரன் ஆவான்; மனநிலை பாதிக்கப் பட்டவன் அறிவாளியாவான். பகை விலகும். நினைத்ததெல்லாம் கைகூடும்.

இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ பொய்கள்!


“கடவுள் கருணை வடிவானவன். நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்குக் காரணம் கடவுள் அல்ல என்கிறீர்கள். நமக்கு நேரும் துன்பங்களுக்கு அவன் காரணம் இல்லை என்கிற போது, இன்பங்களுக்கு மட்டும் அவனைக் காரணமாக்கி அவனை ஏன் போற்றிப் புகழ வேண்டும்? ஏதோ காரணங்களால், தானாக நம்மைத் தேடி வருகிற துன்பம் சில நேரங்களில் [மட்டும்] தானாகவே ஓடி ஒளிகிறது. அதற்கு ஏன் கடவுளைக் காரணம் ஆக்க வேண்டும்? ஏன் வழிபட வேண்டும்?”

இப்படியெல்லாம் மக்கள் மதவாதிகளிடம் கேள்வி கேட்க அஞ்சுவதால், ஆளாளுக்குக் கதைகள் திரித்து உலவவிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

இவர்களுக்கெல்லாம் உறைக்கும்படியாக ஒன்று சொல்ல விரும்புகிறோம்.......

நீங்கள் கட்டிவிட்ட பொய்க்கதைகளில்...புனைந்துரைத்த சம்பவங்களில் மிக மிக மிக மிக மிக.............மிக................ சிலவற்றையேனும் நிரூபிக்கத் தயாரா?

நாம் கேட்பது கடவுளைப் போற்றுகிற அனைத்து மதவாதிகளையும்தான்.

இது அறிவியல் உலகம்.

உலகில் ஏதோ ஓரிடத்தில் நிகழும் ஒரு சம்பவத்தை, ஒரே நேரத்தில் ஒட்டு மொத்த உலகமும் காண முடியும்.

அனைத்து மதத் தலைவர்களும் [கடவுளைப் போற்றுகிறவர்கள்] ஒன்றுகூடிக் கலந்துரையாடுங்கள்.

உங்களுக்குப் பிடித்த ஓரிடத்தைத் தேர்ந்தெடுங்கள்.

மிகச் சிறந்த விஞ்ஞானிகளையும், மருத்துவர்களையும் சிந்தனையாளர்களையும் அழைத்து நடுநிலையாளர்களாக இருக்கச் செய்யுங்கள்.

“ இவருக்குத் தீராத நோய். மிகச்சில நாட்களில் இறந்துவிடுவார்” என்று மருத்துவர் குழு உறுதி செய்த ஒருவரை....................

இந்த நிகழ்வை, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் ஒளி, ஒலி பரப்பிக் கொண்டிருக்கும் நிலையில், உலக மக்கள் அனைவரும் பேராவலுடன் கவனித்துக் கொண்டிருக்கும் நிலையில்...............


மதம் சார்ந்த மகான்களே, உங்களில் சிலரோ அல்லது பலரும் ஒருங்கிணைந்தோ, மரணத்தைத் தழுவவிருக்கும் அந்த நோயாளியைக் குணப்படுத்திக் காட்டுங்கள்.

அல்லது.....

செத்துப்போய்ச் சில மணி நேரம் ஆன ஒருவரை பிழைக்க வைக்க நீங்கள் முடிவெடுத்தால் அதுவும் வரவேற்கத் தக்கதே.


முற்றிலும் பார்வை இழந்த ஒருவருக்குப் பார்வையை மீட்டுத் தருவது உங்கள் விருப்பமாயின் அதையும் நாம் ஏற்கிறோம்.

இவற்றில் ஏதாவது ஒன்றை நீங்கள் செய்து காட்டினால் போதும்.

கடவுள் உண்டா இல்லையா என்று எவ்வளவு காலத்துக்கு விவாதிப்பது?

விரும்பத் தகாத விளைவுகளை உண்டு பண்ணும் அந்த விவாதம் ஒரு முடிவுக்கு வரட்டுமே.

இதுவரை இப்படியொரு சாதனை முயற்சியில் எவரும் ஈடுபட்டதில்லை.

இன்று உயிர் வாழும் மகான்களாகிய நீங்கள் இப்படியொரு சாதனையை ஒரே ஒரே ஒரே ஒரு முறை நிகழ்த்திக் காட்டினால்.............................

இந்த உலகம் உள்ளளவும் மனித இனம் உங்களைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே இருக்கும்.


’கடவுள் உண்டு’ என்பது 100% உறுதி செய்யப்பட்டுவிடும்.


நாத்திக்கக் கும்பல் பூண்டோடு அழிக்கப்...இல்லை, அழிந்துவிடும்!

உலகின் மூலைமுடுக்கெல்லாம் கடவுள் நம்பிக்கை பரவும். வழிபாடு பெருகும்.

கடவுளின் கருணை இம்மண்ணில் கரைபுரண்டு ஓடும்.

அனைத்துத் துன்பங்களும் நீங்கி மக்கள் ஆனந்த வாழ்வு வாழ்வார்கள்!

நீங்கள் நிகழ்த்தப் போகும் அற்புதத்தைக் காண உலகம் காத்துக் கிடக்கிறது மகான்களே!

நாமும்தான்!

********************************************************************************