கடவுளின் ‘இருப்பு’ குறித்து ஆராய்வதும், மூடநம்பிக்கைகளைச் சாடுவதும், மனித நேயம் போற்றும் படைப்புகளை வெளியிடுவதும் இத்தளத்தின் முதன்மை நோக்கங்கள் ஆகும்.

செவ்வாய், 26 நவம்பர், 2013

இந்தக் காட்டுமிராண்டியா கடவுள்???!!! [ஒரு மீள் பதிவு]

ஒரு காடு.

 ஒரு மான், தான் ஈன்ற குட்டிக்குப் பால் தந்து கொண்டிருக்கிறது. கொடிய விலங்குகளால் ஆபத்து நேருமோ என்ற இயல்பான அச்சத்துடன் பார்வையை அலைய விடுகிறது.

அதைக் குறி வைத்திருந்த ஒரு சிறுத்தை, அசுர வேகத்தில் சீறிப் பாய்கிறது.

எதிர்ப்பட்ட ஆபத்தைக் குட்டிக்கு உணர்த்திவிட்டு, எகிறிப் பாய்கிறது மான்.

மான் தப்பியது. குட்டி சிறுத்தையிடம் சிக்கியது. அகப்பட்ட மான் குட்டியைத்  தன் குட்டிகளிடம் சேர்க்கிறது சிறுத்தை.

ஓடப் பார்க்கும் மான் குட்டியைச் செல்லக் கடி கடித்தும், முன்னங் காலால் இடறிவிட்டுக் கீழே தள்ளியும் அவை விளையாடுகின்றன. தாய்ச் சிறுத்தையும் கூட, அதைக் கொல்லுவது போல் பாசாங்கு செய்து குலை நடுங்க வைக்கிறது. நீண்ட நேரம் இப்படி வதை செய்த பிறகுதான் அதை அவை இரையாக்கிக் கொள்கின்றன.

உயிரைக் காத்துக் கொள்ள நடத்தும் போராட்டத்தில், அந்த மான் குட்டி படும் பாட்டை வார்த்தைகளால் விவரிக்க முடியுமா? அது அனுபவித்த துன்பம் எத்தனை கொடூரமானதாயிருக்கும். அதைவிட, நாம் பட்ட வேதனை குறைந்ததா என்ன?

இந்தக் கொடூரக் காட்சியை நீங்கள் ‘டிஸ்கவரி’ சேனலில் பார்த்திருப்பீர்கள்.

இதற்கான உண்மை நிகழ்வைக் கடவுளும் பார்த்திருப்பார்தானே?

வேடிக்கை பார்த்துக் கொண்டு அவரால் எப்படிச் ’சும்மா’ இருக்க முடிந்தது?

அவர் மனம் என்ன கல்லா?

இம்மாதிரி எத்தனை எத்தனை கொடூரங்கள் அவர் படைப்பில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன?!

இவரையா, “அன்னையும் நீயே அப்பனும் நீயே”என்று புகழ்ந்து போற்றி வழிபடச் சொல்லுகிறார்கள்!!

“இதற்கெல்லாம் கடவுள் காரணமல்ல; பூர்வ ஜென்மத்தில் [கடந்த பிறவிகளில்] உயிர் செய்த பாவம் காரணம்” என்று மனம் கூசாமல் கதைக்கிறார்களே, அவர்கள் எல்லாம் மனிதப் பிறவிகளா?!

இந்தப் பிறவியில் நேரும் துன்பத்திற்குப் போன பிறவியில் செய்த பாவம் காரணம் என்றால், அதைச் செய்ய அந்தப் பிறவியில் தூண்டியது யார்? [உயிர் தானாக எதையும் செய்யாதே. முதல் முறை செய்வதற்குக் கற்றுக் கொடுப்பவர் கடவுள் அல்லவா?]

இது பற்றிச் சிந்திக்கத் தெரிந்தவர்கள் கேள்வி எழுப்பிய போது, “கடவுள் ஒரு போதும் தூண்ட மாட்டார். அவர் கருணையின் வடிவம். உயிர் வேறு ஆன்மா வேறு. வினை உயிரோடு சம்பந்தப்பட்டது. ஆனால், வினையின் பயனை  அனுபவிப்பது ஆன்மா. உயிர் அழியும். ஆன்மா அழியாது. அது இறைவனின் அங்கம்......” இப்படிப் புரியாத தத்துவங்களைச் [?] சொல்லிக் குழம்பி, கேள்வி கேட்பவரின் மூளையையும் குழப்பிச் சமாளித்தார்கள் ஆன்மிகவாதிகள்.

நாம்  கேட்கிறோம்: “இந்த மான் குட்டி கடந்த பிறவிகளில் தானாகவே பாவங்கள் செய்ததா?”

பதில் “ஆம்” என்றால்,  கருணைக் கடலான கடவுள் அச்செயலைத் தடுக்கவில்லையே, ஏன்?’

‘அதைச் செய்; இதைச் செய்யாதேன்னு யாரும் கடவுளுக்கு உத்தரவு போட முடியாது” என்கிறார்கள்.

“கடவுள் தானாகவே தடுத்திருக்க வேண்டும். , ஓர் உயிர் பாவம் செய்தால், அதற்கான தண்டனையை, அடுத்த பிறவியில் அறிவு வளர்ந்து மனமும் பக்குவப்பட்ட நிலையில் அனுபவித்தால் தவறில்லை. பிஞ்சுப் பருவத்திலேயே தண்டிப்பது அநியாயமில்லையா? இந்த அக்கிரமத்தைச் செய்யும் கடவுள், அல்லது அதை வேடிக்கை பார்க்கும் கடவுள் அரக்க குணம் கொண்டவரா? இல்லை, காட்டுமிராண்டியா?”

பதில் தருவார் யார்?

“இன்னும் ஒரே ஒரு கேள்வி. ஒரு பிறவியில் செய்யும் பாவத்திற்கு அந்தப்
பிறவியிலேயே தண்டனை கொடுத்தால், செய்த பாவத்தைப் புரிந்து கொண்டு உயிர்கள் திருந்த வாய்ப்பிருக்கிறது. அடுத்த பிறவியில் என்றால் அது சாத்தியம் இல்லையே. இது கூடவா கடவுளுக்குத் தெரியவில்லை?..........”

என்றெல்லாம் ‘மனித இனம் வாழணும்’ என்று நினக்கிற நாம் கேள்வி கேட்டால், ‘கடவுள் வாழணும்’என்று நினைக்கிற அவர்கள்........

“எதை எப்போது எங்கே செய்வது என்று அவருக்குத் தெரியும். நீ அற்ப மனிதன்; அரைவேக்காடு; கூமுட்டை; அகங்காரன்; ‘ஹிட்ஸ்’ வெறியன்’ என்று வாய் வலிக்க வசை பாடிக்கொண்டே இருக்கிறார்கள். ‘மட்டுறுத்தல்’ செய்தாலும் மனம் போனபடி ஏசி நம் மனம் நோக வைக்கிறார்கள்.

அறிவு பூர்வமான கேள்விகளுக்குப் பதில் தெரியாத போது இப்படிப் பேசிச் சமாளிப்பது ‘அவர்களுக்கு’க் கைவந்த கலை. இன்றும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். செய்யட்டும்.

நாமும் நம் கடமையைச் செய்துகொண்டே இருப்போம்.

****************************************************************************************************************

சனி, 23 நவம்பர், 2013

இப்பதிவைப் படித்தால் மண்டை காயும்; தலைமுடி உதிரும்!!!

[இதுவொரு உண்மைச் சம்பவத்தின் வரிவடிவம்]


கடவுளின் ‘இருப்பு’ குறித்து நான் எழுதியதொரு பதிவைப் படித்த என் உள்ளூர் நண்பர், “என்ன சொல்ல வர்றீங்க, கடவுள் இல்லேன்னுதானே?” என்று கேட்டார்.

“சொல்ல நினைப்பதை இன்னும் சொல்லல. கடவுள் உண்டு என்பதற்குத்
தரப்பட்ட ஆதாரங்களை நான் மறுத்திருக்கிறேன். அவ்வளவுதான்” என்றேன்.

“ஆதாரங்களை மறுக்கிறதுன்னா என்ன அர்த்தம்? இல்லேன்னு சொல்றது தானே?” மடக்கினார்.

“ஆதாரங்களை மறுக்கிறது வேற; கடவுளே இல்லேன்னு சொல்றது வேற”.

“சரியான ஆதாரங்கள் தந்தா நம்புவீங்கதானே?”

“தாராளமா”.

“கடவுள் இருக்கிறார்னு அவரை நம்புறவங்க சொல்றாங்க. நம்பாதவங்க  இல்லேன்னுசொல்றாங்க. ரெண்டு பேருமே கடவுளை முன்நிறுத்தித்தான் விவாதிக்கிறாங்க. இதிலிருந்தே கடவுள் இருக்கார்ங்கிறது உறுதியாகுது. இல்லையா?”

“இன்னும் விளக்கமா சொல்லுங்க”.

“நாம் பயன்படுத்துற ஒவ்வொரு சொல்லும் ஒரு பொருளைக் குறிக்குது. நிலம்கிற சொல் இருக்கு. ‘நிலம்’ கிற பொருளும் இருக்கு. கடவுள்ங்கிற சொல் இருக்கு; கடவுளும் இருக்கார். இப்படி எல்லாமே. இல்லாத எந்தப் பொருளுக்கும் வார்த்தைகளால் வடிவம் கொடுக்க முடியாது. கடவுள்ங்கிற சொல் இருப்பதால் கடவுளும் இருக்கார்னு நம்பணும்”.

சிறிது மவுனத்திற்குப் பிறகு நான் கேட்டேன்: “ஆகாயத் தாமரைன்னு தமிழ்
இலக்கணக்காரங்க ஒரு எடுத்துக்காட்டுத் தருவாங்க. தாமரைன்னு ஒரு பொருள் தண்ணீரில்தான் இருக்க முடியும். ஆகாயத்தில் தாமரை ஏது? இங்கே, இல்லாத ஒரு பொருள்தான் நினைக்கப்படுது. இன்னும், ஆகாயத்தில், ஆயிரம் தலைகளோட அறுபதாயிரம் கால்களால ஒரு யானை நடந்து போச்சுங்கிற மாதிரி நிறையச் சொல்லலாம். அப்படிச் சொன்னால் அது உண்மை ஆயிடாது. கடவுளும் அப்படித் தான்”

நண்பர் லேசாகப் புன்னகைத்துவிட்டுச் சொன்னார்: “இங்கே ஒரு தனிச் சொல்லைத்தான் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளணும். ஆகாயத் தாமரையில் ரெண்டு சொற்கள் இருக்கு. ஆகாயம் ஒரு சொல். அது குறிக்கிற பொருள் ‘வெளி’. வெளின்னு ஒன்னு இருக்கு [இல்லையென்று சொல்கிற மதம் ஒன்று உண்டு]. தாமரை ஒரு சொல். அது குறிக்கிற தாமரைங்கிற பொருளும் இருக்கு. நீங்க ரெண்டு சொற்களை இணைச்சி இல்லாத ஒரு பொருளைக் [ஆகாயத் தாமரை] கற்பனை பண்ணியிருக்கீங்க. இது உண்மை அல்ல. இது மாதிரிதான் யானை உதாரணமும். இம்மாதிரி உதாரணமெல்லாம் இங்கே பொருந்தி வராது.” என்றார் நண்பர்.

நான் கேட்டேன்: “எல்லாத் தனிச் சொல்லுமே ‘நிஜமான’ பொருளை உணர்த்துதா?”

“பொருளை மட்டுமல்ல, உணர்ச்சியைக் குறிக்கலாம்; ஒரு பண்பைக் குறிக்கலாம். ‘வெறுமை’ ‘பொய்’ போல நம்மால் உணரத்தக்க ஒன்றைக் குறிக்கலாம். இன்னும் சொல்ல நிறைய இருக்கு.”- இது நண்பர்.

“நீங்க சொல்றதைப் பார்த்தா, தனிச் சொற்கள் தரும் பொருள்கள்தான்
உண்மை. ரெண்டுக்கும் மேற்பட்ட கூட்டுச் சொற்கள் தர்ற பொருள் எல்லாம் உண்மை இல்லைன்னு ஆகுதே?”- நான்.

“ஆகாயத்தாமரை மாதிரி, திட்டமிட்டுத் தொகுத்த சொற்களும் தொடர்களும்
தான் அப்படி.”

“கடவுளும் அப்படித்தான்னு நான் சொல்றேன். இதுவும் திட்டமிட்டுத் தொகுத்த சொல்தான். அதைப் பிரிச்சா, கட+உள்.

‘கட’ன்னா கடத்தல். ‘உள்’னா உள்ளே. இந்த ரெண்டு சொற்களும் இணைந்து கடவுள்ங்கிற பொருளைத் தந்துவிடா. உள்ளே கடப்பதுன்னா எதனுள்ளே? கடப்பது எது? அது கடவுளானது எப்படி? இப்படி எழும் கேள்விகளுக்கு இந்தச் சொற்கள் மட்டும் விளக்கம் தந்துவிடா. நீண்ட விவாதம் தேவைப்படும். அதிருக்கட்டும், தனிச் சொல்லானது கடவுள்ங்கிற பொருள் தரும்னு சொன்னீங்களே, உதாரணத்துக்கு ஒரு சொல் சொல்லுங்களேன்.”

“இறை.”

“பொருள்?”

“தங்கியிருப்பது. அதாவது கடவுள்.”

“இந்தத் தனிச்சொல்லும் நேரடியா கடவுளைக் குறிக்கல. ஒவ்வொரு அணுவிலும்[?] தங்கியிருக்கிற ஒன்னு, அதாவது கடவுள்னு [ஆகுபெயராக] பிற சொற்களையும் சேர்த்து விளக்கம் தரணும். அது எளிதல்ல. கடவுள்ங்கிற வார்த்தை மனிதனால் உருவாக்கப்பட்டது. கடவுள் உண்டுன்னோ இல்லைன்னோ ஆதரிப்பவர், மறுப்பவர் என இரு தரப்பாரும் அதைச் சொல்றதால கடவுள்னு ஒருத்தர் இருப்பதை ஏற்க முடியாது.

*

“இலக்கணம், சொல்லாராய்ச்சின்னு இறங்கினா,  குழப்பம்தான் மிஞ்சும்.” நண்பர் சலித்துக்கொண்டார்.

”நானும் அதைத்தான் சொல்றேன். வார்த்தைகளையும் அவை தர்ற பொருள்களையும் வெச்சி, கடவுளை நிரூபிக்க முடியாது. விரும்பினா இன்னொரு நாள் வாங்க. கடவுளை ரெண்டுல ஒன்னு பார்த்துடுவோம்” என்று சொல்லிச் சிரித்தேன்.

நண்பரும் சிரித்தார், கொஞ்சம் அசடு வழிய!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

முக்கிய குறிப்பு:


ஆதரித்தும் எதிர்த்தும் வாக்களித்த நண்பர்களுக்கு என் நன்றி. [ஒரு வாக்கு என்னுடையது...ஹி...ஹி...ஹி!!!]

மைனஸ் வாக்கு, என்னை மீண்டும் கொஞ்சம் சிந்திக்க வைத்தது.

பதிவில்,  * இட்ட இடத்தில் கீழ்க்காணும் கூடுதல் விளக்கத்தை இணைத்துப் படித்திட வேண்டுகிறேன்.

* அவ்வாறு ஏற்றால், சாத்தான், ஆவி, பூதம், காத்து, கருப்பு, பேய், பிசாசு, சொர்க்கம், நரகம் என்று அத்தனை கற்பனைகளையும் ‘உண்மை’ என  ஏற்றாக வேண்டும்.” என்றேன் நான்.


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

                                                                                                                       


செவ்வாய், 19 நவம்பர், 2013

இன்றும், ‘உடன்கட்டை’ ஏறுவதைப் போற்றும் காஞ்சி காமகோடி பீடம்!!!


இப்போது பலர் ஸதி,ஸஹகமனம், உடன் கட்டையேறுதல் என்ற பெயர்களில் பதியோடு சேர்ந்து பத்தினியையும் உயிரோடேயே தஹனம் செய்வது வலுக்கட்டாயமாக நடத்தப் பட்டுவந்தது என்கிறார்கள். கொடூரமாக ஸ்திரீகளை சிதையிலே தள்ளிக் கொளுத்தினார்கள் என்று வைகிறார்கள். எங்கேயாவது யாராவது இம்மாதிரி கொடூரமும் பண்ணியிருக்கலாமோ என்னவோ?ஆனால் இது பொது விதி இல்லை. இஷ்டப்பட்டவர்கள் மட்டுந்தான் - பரம பதிவிரதைகளாக இருந்தவர்கள்தான் - புருஷன் போனபின் ஜீவனை வைத்துக் கொண்டு இருக்கமுடியாமல் துடித்துத் தாங்களாகப் பிரியப்பட்டு உடன் கட்டை ஏறியிருக்கிறார்கள். என் பால்யத்தில் கூட இப்படிப்பட்ட பதிவிரதைகளைப் பறறிக் கேட்டிருக்கிறேன். 'ஐயோ உயிரோடு இப்படி அக்னியில் பொசுங்குகிறாயே!'என்று பந்துக்கள் கதறிய போது, 'அக்னி பொசுக்கவேயில்லை. புருஷனை ஆலிங்கனம் செய்து கொள்கின்ற ஸுகத்தோடாக்கும் சாகிறேன்'என்று சிரித்துக் கொண்டே சொன்னபடி தஹனமாயிருக்கிறார்களாம்.....

.....தாமாக இப்படி பிராணத்தியாகம் பண்ண முன் வருபவரை ரொம்பவும் மதித்து அப்படிப் பண்ண நம் சாஸ்திரம் அநுமதித்திருக்கிறது. 'பதி போனபின் நாம் உயிரை வைத்துக் கொண்டிருக்க முடியாது'என்று நினைக்கும் உயர்ந்த உணர்ச்சி இன்றைக்கும் யாராவது லட்சத்தில், கோடியில் ஒரு ஸ்திரீக்கு இருக்கத்தான் செய்கிறது. அதனால்தான் எப்போதாவது வருஷத்துக்கு ஒரு தரமாவது, ஏதாவது ஊரில் இப்படி ஒரு vFg உடன்கட்டை ஏறினாள்;சட்டம் இடம் தராத போதிலும், பந்துக்கள் தடுத்த போதிலும் கேட்காமல் இப்படிப் பண்ணினாள் என்று பேப்பரில் பார்க்கிறோம். பழைய காலத்து உடன்கட்டைகளைவிட இதுதான் ரொம்ப விசேஷம் என்று எனக்குத் தோன்றுவதுண்டு.” 


மேற்கண்ட பொன்மொழி, Sri Kanchi Kamakoti Peetham [www.kamakoti.org/tamil/2dk6.1.html] என்னும் வலைத்தளத்தில் வாசித்தது. சற்று முன்னர்வரை இந்த மேற்கோளை உள்ளடக்கிய பதிவு [தெய்வத்தின் குரல்] நீக்கப்படவோ திருத்தப்படவோ இல்லை என்பது அறியத்தக்கது.

பதிவின் எஞ்சிய பகுதியையும் படித்துமுடித்துவிட்டு, காஞ்சி மகானின் அருளுரை குறித்து நான் எழுப்பவிருக்கும் கேள்வி பற்றி நீங்கள் யோசிக்கலாம்.‘உடன்கட்டை ஏறுதல்’ என்னும் நெஞ்சைப் பதற வைக்கும் நிகழ்வுகள் குறித்தும் அவை இந்தப் புண்ணிய பூமியில் [இந்தியா] இடம்பெற்ற காலச் சூழ்நிலை குறித்தும் பலரும் அறிந்திருக்கக்கூடும். அது எத்தனை கொடூரமானது என்பதைப் பற்றித் தத்தம் வலைப்பதிவுகளில் சிலர் எழுதியிருக்கிறார்கள். அவற்றில் ஒரே ஒரு பதிவின் சாரத்தை மட்டும் இங்கு தருகிறேன்..........


//“இறந்துபோன அவளது கணவனின் உடல் சிதையில் வைக்கப்பட்டு, தீ மூட்டப்பட்டது. அந்த இளம்பெண் 'ராம்... ராம்...’ என்று முணு​முணுத்தபடியே சிதையில் படுத்தாள். அடுத்த சில நிமிடங்களில் அவள் உடலில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. அவள் அலறிக்கொண்டே சிதையில் இருந்து எழுந்து ஓடிவந்தாள். அதை அனுமதிக்க மறுத்த ஒருவர், தடியால் அவளை அடித்து மீண்டும் சிதைக்குள் தள்ளிவிட்டார். அவள் ஓலமிட்டபடியே சிதையை​விட்டுத் தாவி, எரியும் உடலோடு கங்கை நதியை நோக்கி ஓடினாள்.

அதைப் பார்க்கவே மிகவும் வேதனையாக இருந்தது. 'அவளைக் கொல்லுங்கள்... கொல்லுங்கள்...’ என்று உறவினர்கள் கூச்சலிட்டனர். அந்தப் பெண் தீயில் இருந்து விடுபட தண்ணீரில் மூழ்கினாள். இரண்டு பேர் துரத்திச் சென்று அவள்  கூந்தலைப் பற்றி இழுத்து வந்தனர். இதைப் பார்த்த நீதிபதி, அவளை விட்டுவிடச் சொல்லி உத்தரவிட்டார்.  அதை, உறவினர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். இனி, அவள் மறுபிறவி கொண்டவள். ஆகவே, அவளைக் கட்டாயப்படுத்திச் சாகடிக்க அனுமதிக்க முடியாது. அவளைப் பராமரிக்க வேண்டிய பணி இனிமேல் கம்பெனிக்கு உரியது என்று நீதிபதி அவளை மீட்டுத் தன்னோடு அழைத்துச் சென்றார். பாதி எரிந்த முகத்துடன் சிதையில் இருந்து ஓர் பெண் உயிரோடு தப்பியது, கிராம மக்களிடையே பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்தப் பெண்ணைக் காப்பாற்றிய ஆங்கிலேய நீதிபதிக்கு எதிராகக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அந்தப் பெண் சில நாட்களில் வேறு ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டாள்'' என்று, பேனி பார்க்கஸ் தனது குறிப்பில் கூறி இருக்கிறார்.....

.....அந்தக் காலங்களில், கால்நடைகளைப் போலவே பெண்ணும் ஆணுக்கான உடைமைப் பொருள். ஆகவே, கால்நடைகளை யாகத்தில் பலி கொடுப்பதுபோல் பெண்ணையும் பலி கொடுத்து இருக்கிறார்கள். இப்படி உயிரோடு கொல்லப்பட்ட பெண்களுக்கு நினைவுக்கல் வைத்து வழிபடுவார்கள். கொஞ்ச காலத்தில் அவள் 'சதி மாதா’ என்ற சிறுதெய்வமாகிவிடுவாள்.........

..........18-ம் நூற்றாண்டு வரை சதிக்கு ஆதரவாகவே பெரும்பான்மை மக்கள் இருந்தனர். அதை, புனிதச் சடங்காகவே கருதினர். தமிழகத்தில் சோழர் காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் அதிகமாக இருந்தது பற்றிச் சான்றுகள் கிடைத்துள்ளன..........
                                     
..........இந்தியாவில் ஆண்டுக்கு 8,125 பெண்கள் சதியில் உயிரை இழந்தனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். [‘மழைக் காகிதம்’ -malaikakitham.blogspot.com]


மூட நம்பிக்கைகளில் ஆழ்ந்து கிடந்த நம் மக்கள் உடன்கட்டை ஏறுதல் சம்பவங்களை எப்படியெல்லாம் ரசித்து மகிழ்ந்தார்கள் என்பதற்கு ஒரு நிகழ்வை எடுத்துக்காட்டாகத்[சம்பவத்தின் ஒரு பகுதி மட்டும்] தருகிறேன்..........

//.....ஊரே மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. அனைவரும் சொல்லொணா ஆனந்தம் அடைந்தனர்.

பரபரவென்று காரியங்களைச் செய்தனர்.

தீப்பாயும் விதவை கமலாதேவி அணிய வேண்டிய பட்டும் நூலும் கலந்த மஷ்ரூ என்ற ஆடை வாங்கிவரப்பட்டது. அவளை அலங்கரித்தார்கள். விதவை ஆனபின் அவள் அணியாத ஆபரணங்கள் அவளுக்கு அணிவிக்கப்பட்டன. வீட்டிலிருந்த நகைகள் தவிர இரவல் வாங்கியும் அணிவித்தார்கள்.

செய்தி ஊர் முழுக்கப் பறையறைந்து அறிவிக்கப்பட்டது.

கமலாதேவியை ஒரு பல்லக்கில் அமர வைத்து கடவுளின் சிலையைத் தூக்கிச் செல்வது போல மெதுவாக நடந்தனர்.

மேளதாளங்கள் முழங்கின. பஜனை கோஷ்டிகள் பாடிக்கொண்டு வந்தன. பெருத்த ஆரவாரத்துடன் கிராமமே ஊர்வலமாகச் சென்றது. வெள்ளைக்காரன் உடன்கட்டை ஏறுவதற்குத் தடை விதித்திருந்ததால், ஊர்வலம் சுடுகாடு செல்லாமல் ஒரு தோட்டத்தை அடைந்தது.

ஒரு உயரமான மரத்தடியில், கட்டாந்தரையில் வறட்டியை அடுக்கிச் சிதையைத் தயார் செய்தார்கள்.

கமலாதேவியின் உடலில் பூட்டப்பட்டிருந்த நகைகள் கழற்றப்பட்டன.; அவள் சிதையில் படுக்க வைக்கப்பட்டாள்.

அப்போதே அவள் உணர்வுகளற்றுச் சிலை போல் கிடந்தாள்.

அவள் முகத்தையும் வலது கையையும் மட்டுமே வெளியே தெரியும்படி வைத்துவிட்டு, அவளை வறட்டியால் மூடினார்கள்.

அவள் கையில் ஒரு பிடி வைக்கோளைக் கொளுத்திக் கொடுத்தார்கள். அது எரிந்து சாம்பலாய் உதிர்ந்ததும் அவள் தன் வாயைத் திறந்து தன் சிதைக்குத் தீ மூட்டுமாறு கூறினாள்[!!!!!].

அவள் முகத்தை மூடி மண்ணெண்ணையையும் பசு நெய்யையும் சிதையில் ஊற்றித் தீ வைத்தார்கள்.

அங்கே பெருத்த ஆரவாரம் எழுந்தது. மேளதாளங்கள் உரக்க ஒலித்தன [அவளின் அலறல் அமுங்கிப் போகும் வகையில்]. மக்களின் வாழ்த்தொலிகளும் ஏனைய வாத்தியங்களின் ஓசைகளும் விண்ணைப் பிளந்தன.[ஆதார நூல்: ‘கடவுளின் அடிமைகள்’. ஆசிரியர்:  மிஸ் காதரின்மேயோ. தமிழில்: ப.சீனிவாசன். மருதம் பதிப்பகம், 202,கடைவீதி, ஒரத்தநாடு. முதல் பதிப்பு:2000]

இது, மிஸ் காதரின் மேயோவின் இரண்டாவது நூல். 1927 இல் வெளியான அவரின் ‘அன்னை இந்தியா’ என்னும் முதல் நூல் இந்தியாவில் மட்டுமின்றி இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாம்.

இதை, ‘ஒரு சாக்கடை மனிதரின் ஆராய்ச்சி’ என்று கண்டித்தார் காந்தி. வேறு பலரும் கண்டித்தார்கள்; எழுதினார்கள்.

ஆனால், இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள  அவலங்கள் குறித்து விரிவாக எவரும் மறுப்புரை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த காங்கிரஸ் தொண்டரான கோவை அ.அய்யாமுத்து அவர்கள், ’இந்நூலில் குறிப்பிடப்பட்டவற்றுள் பெரும்பாலானவை உண்மையே’ எனப் பாராட்டி ‘மேயோ கூற்று மெய்யா பொய்யா?’ என்று நூல் எழுதினார். பெரியாரும் அதைப் பாராட்டியிருக்கிறார்.

மிஸ் காதரின்மேயோ அயல்நாட்டுக்காரர். என்னவோ எழுதிவிட்டுப் போகட்டும்.

தமிழகத்தில் அவதரித்த ஒரு மகாப் பெரியவர், மனித குலம் பெண்ணினத்துக்கு இழைத்த அநீதியை கண்டிக்காமல், “அவாளை அக்கினி பொசுக்கவேயில்லை; ‘புருஷனை ஆலிங்கனம் செய்கிற சுகத்தோட சாகிறேன்’ என்று சிரித்துக்கொண்டே சொன்னதாகச் சொல்கிறாரே!!! 

எனக்குத் தெரியாது என்பதால் கேட்கிறேன்.........

மகானின் இந்தத் திமிர் வாதத்திற்குத் தமிழ் வழங்கும் நல்லுலகம் சரியான பதிலடி கொடுத்ததா? இல்லையெனில், இனியேனும் கொடுக்குமா?

============================================================================

                               

வெள்ளி, 15 நவம்பர், 2013

‘ஷீரடி சாயிபாபா’ கடவுளுக்கும் மேலானவரா???

மகான்கள் மற்றும் அவதாரங்களின் மகிமைகள் பற்றிச் சொல்லக் கேட்பது மட்டுமல்ல, அவர்களை மனதால் நினைத்தாலே என் உடம்பு முழுக்க ஒருவித ‘தகிப்பு’ பரவும். “அவர்களின் ‘மலம்’ சந்தனமாய் மணக்குமா? சிறுநீர் பன்னீராய்க் கமகமக்குமா? வேர்வைத் துவாரங்களில் ஆவியாய் வெளியேறி அவர்களைச் சுற்றிச் சுகந்தம் பரப்புமா?” என்றெல்லாம் கேள்விகள் எழுப்பிப் பக்தர்களின் மனதைப் புண்படுத்தி அவர்கள் இட்ட சாபத்தை மூட்டை மூட்டையாய்ச் சுமப்பவன் நான்!

ஆனாலும், தனிப்பட்ட முறையில் பெயர் குறிப்பிட்டு எந்தவொரு மகானையும் நான் விமர்சித்ததில்லை.

இந்த வாரக் [18.11.2013] குங்குமம் இதழில் தொடராக வெளிவரும் ஷீரடி சாயிபாபா பற்றிய கட்டுரையைப் படித்ததால் முகிழ்த்த இப்பதிவு மட்டும் விதிவிலக்கானது.

தாஸ்கணு என்பவரும் ’நாநா’ என்பவரும் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

“அண்மையில் பாபா நிகழ்த்திய அற்புத நிகழ்ச்சி ஏதேனும் தெரிய வந்ததா?” என்கிறார் தாஸ்கணு.

“ஆமாம். எனக்குக் கோபால்குண்ட் என்று என்றொரு நண்பர் இருக்கிறார். தலை சிறந்த சாயி பக்தர். அவருக்குக் குழந்தைகள் இல்லை. நிறைய முயற்சிகள் செய்தார். மருத்துவம், பிரார்த்தனை எதுவும் பலிக்கவில்லை. கடைசியில் அவர் சாயிபாபாவைச் சரணடைந்தார். அவரின் அருளால் குழந்தை பிறந்தது” என்கிறார் நாநா.

‘பிரார்த்தனை ஏதும் பலிக்கவில்லை. பாபாவின் அருளால் குழந்தை பிறந்தது’ என்ற வரிகளைப் படித்ததும் வழக்கம் போல என் ‘துஷ்ட புத்தி’ ஒரு கேள்வி எழுப்பியது.

“பிரார்த்தனைன்னா கடவுள் அல்லது கடவுள்களை மனதில் இருத்திச் செய்யப்படுவது. கடவுள் அல்லது கடவுள்களால் சாத்தியப்படாத ஒன்று பாபாவால் எப்படிச் சாத்தியப்பட்டது?

பதிலைத் தேடி மீண்டும் ஆரம்பத்திலிருந்து கட்டுரையைப் படித்தேன்.

விடை கிடைத்தது!

‘யார் என்னிடம் ஆர்வம் உள்ளவர்களாகவும், என்னையே தியானிப்பவர்களாகவும், என்னையே அடையத்தக்க குறிக்கோள் கொண்டிருப்பவர்களாகவும் இருக்கிறார்களோ...அவர்களின் யோக ஷேமங்களை நானே ஏற்றுக் கொள்கிறேன் [பாபா மொழி]’ என்ற குறிப்பு தலைப்பை ஒட்டி அச்சிடப்பட்டிருந்தது.

என்னுள் பல ஆச்சரியக் குறிகளும் வினாக் குறிகளும் அணிவகுத்து நின்றன.

பாபாவைக் கடவுளின் அவதாரம் என்கிறார்களே அது எத்தனை பெரிய தப்பு. அவர் கடவுள்...இல்லையில்லை, கடவுளுக்கும் மேலானவர் என்பது புரிந்தது!

‘பாபாவின் உண்மையான இருப்பிடம் சொர்க்கமே. இந்த உலகில் ஒவ்வொரு கணமும் மனிதனின் வாழ்க்கையை உன்னத நிலைக்கு உய்விக்கவே அவர் பாடுபடுகிறார்’ என்று பாபாவின் படத்தைப் போட்டு அதையொட்டி இப்படியொரு குறிப்பையும் கொடுத்திருக்கிறார்கள்.

என் அற்பப் புத்தி மீண்டும் தலை உயர்த்தி ஒரு கேள்வியை உதிர்த்தது...........

“மனித வாழ்வை உன்னதமாக்க, சொர்க்கத்திலிருந்து இறங்கிவந்து இம்மண்ணில் மனித உருவில் நடமாடிய பாபா, தான் ஏற்று வந்த கடமையை முழுமையாக நிறைவேற்றாமல் சொர்க்கத்துக்குத் திரும்பிவிட்டாரே, அது ஏன்?”

‘கடவுளுக்கும் மேலானவர் பற்றி இப்படியொரு கேள்வி கேட்கலாமா?’ -எனக்குள் உறைத்தது.

”பாபா இங்கே இருந்தவரை கோடானுகோடி மக்கள் அவரை நாடிப் போய்ச் சரணடைந்து சகல துன்பங்களும் நீங்கிப் பேரின்ப வாழ்வு வாழ்ந்தார்கள்; வாழ்கிறார்கள்; இன்றளவும் அவரை வானளாவப் புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவரைக் குறை சொல்ல உனக்கென்ன யோக்கியதை இருக்கிறது?” என்று என் ‘நாசகார’ப் புத்திக்கு ‘நறுக்’ என்று நாலு குட்டு வைத்தேன்.

கடவுள், ஆன்மா, சொர்க்கம் நரகம் பற்றியெல்லாம் எடக்குமடக்காகக் கேள்வி கேட்டே பழக்கப்பட்ட நான், இன்று ஒரு நாளாவது பாபாவின் பரிசுத்த பக்தனாக மாறிப் பாபாவின் அருளைப் பெறுவதென்று முடிவெடுத்தேன்.

என் பெரியம்மா மருமகளுக்குத் திருமணமாகி நான்கைந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லை. எத்தனையோ முயற்சிகள் செய்தும், மகாப் பெரிய மருத்துவ நிபுணர்களையெல்லாம் பார்த்தும், சக்தி வாய்ந்த  கடவுள்களையெல்லாம் பிரார்த்தனை செய்தும் பலன் கிட்டவில்லை.

அவர்களின் தீராத துயரம் தீர்வதற்கு, சொர்க்கத்திலிருக்கும் பாபாவை நெஞ்சில் நிறுத்தி, இன்று இரவு முழுக்கப் பிரார்த்தனை செய்வது என்று முடிவெடுத்திருக்கிறேன். பெரியம்மா வீட்டாரும் செய்வார்கள். விரும்பினால் நீங்களும் செய்யலாம்.

பாபா அருள்பாலிப்பார் என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை.

பெரியம்மாவுக்குப் பேத்தியோ பேரனோ பிறந்ததும் பாபாவை வாழ்த்தி மரபுக்கவிதையில் ஒரு பதிவிடவும் உத்தேசித்திருக்கிறேன்.

அடுத்த ஆண்டு இதே ஐப்பசித் திங்களில் அதை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

#####################################################################################சனி, 9 நவம்பர், 2013

நீங்கள் முட்டாளா என்பதைச் சோதிக்க... ஒரே ஒரு கேள்வி!!!

நாத்திகர்கள் வேண்டாம். “கடவுள் இருக்கார்னு நம்பவும் முடியல; நம்பாம இருக்கவும் முடியல” என்று பூசி மெழுகுகிற ‘ரெண்டும் கெட்டான்கள்’ எட்டி நின்று வேடிக்கை பார்க்கலாம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமேயான கேள்வி இது.

மகான்களையும் அவதாரங்களையும் ஆன்மீகங்களையும் மகா மகா பெரியவர்களையும் துணைக்கு அழைக்காமல் உங்கள் சுய அறிவுகொண்டு பதில் சொல்லுங்கள்.

கடவுளை 100% நம்புகிறவரா நீங்கள்?

“ஆம்” என்றால் மேலே தொடருங்கள்.

அனைத்து உலகங்களையும் உயிர்களையும் படைத்தவர் கடவுள்.

கணக்கிட இயலாத கோடானுகோடி உயிர்களில் ஆறறிவு படைத்த நீங்களும் ஒருவர். எனவே, நீங்களும் கடவுளால் படைக்கப்பட்டவர் என்றாகிறது.

நீங்கள் வேண்டிக்கொண்டதால் கடவுள் உங்களை மனிதனாகத் தோற்றுவிக்கவில்லை. அதாவது, உங்கள் சம்மதம் இல்லாமலே இவ்வுலகில் பிறந்து  இன்பதுன்பங்களை அனுபவிக்கச் சபித்திருக்கிறார் என்று நான் சொன்னால் அதை உங்களால் மறுக்க முடியாது.

அவர் படைத்துவிட்டார்.

வேறு வழியின்றி நாம் வாழ்கிறோம்.

வயது முதிர்ந்த நிலையிலோ அதற்கு முன்னதாகவோ நாம் செத்தொழிவது  100% உறுதி.

இது தெரிந்திருந்தும் நம்மில் எவரும் செத்து மடியத் தயாராயில்லை.

ஆசை...‘இன்னும் வாழ வேண்டும்’ என்னும் பேராசைதான் காரணம். [ஆசைப்பட வைத்தவரும் அந்தப் பேரருளாளன்தான்!]

இந்த ஆசை காரணமாக, சாவை நினைத்து அஞ்சுகிறோம்; மனம் கலங்குகிறோம்; மரணமில்லாப் பெருவாழ்வை எண்ணி நாளும் ஏங்குகிறோம். ஆனாலும், சாவு நம்மை விட்டு வைப்பதில்லை; ஓட ஓட விரட்டி ஒரு நாள் ‘காவு’ கொள்ளத் தவறுவதே இல்லை.

இந்தச் சாவுக்கான காரணக் கர்த்தா யார்?

நீங்கள் நம்புகிற...நாள்தோறும் போற்றித் துதி பாடுகிற கடவுள்தானே?

நம் சம்மதம் இல்லாமலே நம்மைப் பிறப்பித்த உங்கள் கருணை வடிவான  கடவுள், நம் சம்மதம் இல்லாமலே சாகடிக்கவும் செய்கிறார்.

இவர் மட்டும் ஆதியும் அந்தமும் இல்லாதவர்; என்றும் இருப்பவர். எந்தவொரு கெடுதியும் இவரை அணுகாது; அணுகவும் முடியாது, அணு முதல் அண்டம்வரை அனைத்தையும் ஆள்பவர் இவரே என்பதால்.

ஆனால், மானுடப் பதர்களான நமக்கு மட்டும் அற்ப ஆயுள். அதிலும் அடுக்கடுக்கான துன்பங்களின் தாக்குதல். இனி என்ன ஆவோம் என்று தொடர்ந்து சிந்திக்கவே இடம் தராத கொடூரச் சாவு.

இப்படிப்பட்ட பரிதாபத்திற்குரிய ஜீவன்களாகக் கடவுள் ஏன் நம்மைப் படைக்க வேண்டும்?

படைப்புத் தொழிலைக் கைவிட்டு, வெறும் சூன்யத்தில் கலந்து மோனத் தவத்தில் ஆழ்ந்து கிடக்கலாமே?

உயிர்களைப் பரிதவிக்கச் செய்யும் பாவச் செயலை ஏன் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்?

தனக்கொரு நீதி; தன்னால் படைக்கப்படும் உயிர்களுக்கு ஒரு நீதி என்றிருக்கும் இந்த வஞ்சகரையா நீங்கள் இத்தனை காலமும் வழிபட்டீர்கள்? இனியும் வழிபடப் போகிறீர்கள்?

இதுதான் நான் உங்கள் முன் வைக்கும் ஒரே ஒரு கேள்வி.

இதற்கான பதிலில்தான் உங்கள் ஒட்டு மொத்த புத்திசாலித்தனம் அடங்கியிருக்கிறது!

oooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
வெள்ளி, 8 நவம்பர், 2013

‘ஆகாயக் குறிப்பேடு’ அல்லது ‘பிரபஞ்ச அறிவு’?

நமக்கு ஆகாயம் தெரியும்; குறிப்பேடும் தெரியும். அதென்ன ‘ஆகாயக் குறிப்பேடு?! 


விஞ்ஞானிகள் புதிது புதிதாக எதையெல்லாமோ கண்டுபிடிக்கிறார்கள். அந்த ‘உண்மைகளை’ [கண்டுபிடிப்புகளை]யெல்லாம் அவர்கள் எங்கிருந்து பெறுகிறார்கள்?

இந்த நூற்றாண்டின் மகத்தான கேள்வி இது.

இந்தக் கேள்வியைப் புரிந்துகொள்வதே கடினம். இதற்கான விளக்கம் என் போன்ற சராசரி மனித அறிவு படைத்தவர்களுக்குப் புரியுமா என்ன?

முயற்சி செய்வோம்.

விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்படுகிற ‘உண்மைகள்’ இந்தப் பிரபஞ்சத்திற்கு முற்றிலும் புதியவை அல்ல; அவை ஏற்கனவே பிரபஞ்ச வெளியின் எங்கோ ஓரிடத்தில் இருந்தவை; இருப்பவை. மனம் ஒன்றி, தீவிர சிந்தனையில் ஈடுபடும்போது விஞ்ஞானிகளால் அந்த உண்மைகளைக் கிரகித்துக்கொள்ள முடிகிறது” என்கிறார் ஓப்பன்ஹீமா என்கிற அணுசக்தி விஞ்ஞானி.

இதைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணம்..........

அமெரிக்காவில் எட்கார் கேசி என்று ஒரு ஃபோட்டோகிராஃபர் 1920 இல் வாழ்ந்தார். ஒரு சமயம் அவருக்குத் திடீரென்று பேசவராமல் போகவே, ஒரு மருத்துவர் அவரை ‘ஹிப்னாடைஸ்’ செய்து குணப்படுத்தினார்.

சில நாள் கழித்து அவருக்கு மீண்டும் பேசவராமல் போனது. அவரை மீண்டும் ஹிப்னாடைஸ் செய்தார் மருத்துவர். ஹிப்னாடைஸ் நிலையிலிருந்த எட்கார் கேசி, தாமே தம் குரல் நிலையை எடுத்துக் கூறி அதற்கான சிறந்த...மருத்துவர் அறியாத சிகிச்சை முறையையும் கூறினாராம்.

அதற்புறம், தாமே சுயமாக ஹிப்னாடைஸ் நிலைக்குச் சென்று, தம்மை நாடி வந்த நோயாளிகள் குணமடவதற்கான வழிகளைக் கூறினாராம். இப்பணியை முப்பதாண்டுகள் தொடர்ந்து செய்தாராம்!

எதிர்கால அரசியல், வருங்கால உலகம், தனிமனித எதிர்பார்ப்புகள் போன்றவை பற்றியெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்ட போது, சுய ஹிப்னாடிசத்தின் மூலம் பதில்கள் சொன்னாராம். அவர் சொன்னவாறே எல்லாம் நடந்ததாம்.

“இந்தத் தகவல்களையெல்லாம் எங்கிருந்து பெறுகிறீர்கள்?” என்று கேட்கப்பட்ட போது, “ஆகாயக் குறிப்பேடுகளிலிருந்து...பிரபஞ்ச வெளியில் தேங்கிக் கிடக்கும் பிரபஞ்ச அறிவுத் தொகுப்பிலிருந்து ” என்றாராம்!

‘பிரபஞ்ச வெளியில் ஊடுருவியிருக்கும் மாபெரும் சக்தியின்பால் முனைப்புடன்  நம் மனதைச் செலுத்துவதன் மூலம் இதை நிகழ்த்துவது சாத்தியம் ஆகலாம்’என்கிறார்களாம் அறிவியல் அறிஞர்கள்.

எட்கார் பேசியின் வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படும் இந்நிகழ்வை என்னால் முழுமையாய் நம்ப முடியவில்லை என்றாலும், தகவல் புதிதாகவும் படிக்கச் சுவையாக இருந்ததால் இங்கே பதிவு செய்தேன்.

தங்களின் வருகைக்கு நன்றி.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி எழுதிய ‘எண்ணங்கள்’ என்ற நூலிலிருந்து திருடி...அல்ல, திரட்டியது.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

திங்கள், 4 நவம்பர், 2013

எழுத்தாளர் சுஜாதாவும் தமிழும்!

சுஜாதா, எளிய தமிழில் சலிப்புத் தட்டாத  நடையில் அறிவியல் செய்திகளைத் தமிழில் தந்து தமிழ் வளர்ச்சிக்குப் பங்காற்றியவர் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ் மீது மிகுந்த பற்றும் தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த புலமையும் கொண்டவர் அவர் என்பதை அறியாதவர்கள் இருக்கக்கூடும். அவர்களுக்காக இப்பதிவு.

'உயிர்மை பதிப்பகம்’ வெளியிட்ட, ‘சுஜாதாவின் பதில்கள்’ என்னும் நூலிலிருந்து சில கேள்விகளும் அவற்றிற்கான சுஜாதாவின் பதில்களும்:


வெ.வாசுதேவன், சேலம்.

தமிழன் என நினைத்து நீங்கள் கர்வப்பட்டது எப்போது?

சங்க இலக்கியங்களைப் படிக்கும்போது.


ந.ச.மணிமாறன், திருவண்ணாமலை.

தேவாரப் பாடல்களைப் பாடி நம்முடைய துன்பத்தில் இருந்தும் நோயில் இருந்தும் விடுபடலாம் என்று முனைவர் சாரதா நம்பி ஆரூரன் கூறியிருப்பது பற்றி?

திருமதி நம்பி ஆரூரன் கூறுவது நம்பிக்கையின் பாற்பட்டது. விடுபட முடிகிறதோ இல்லையோ, துன்பத்தையும் நோயையும் மறக்கச் செய்யும் ‘இனிமை’ பழந்தமிழ்ப் பாடல்களில் உண்டு. பெரியாழ்வாரின் ‘நெய்க்குடத்தை’ என்று தொடங்கும் பத்து பாசுரங்கள் பலர் வியாதிகளையும் துன்பங்களையும் தடுத்திருக்கின்றன.


எஸ்.அகிலா, தென்கடப்பந்தாங்கல்.

ஔவை, திருவள்ளுவர், கபிலர் என்போர் உடன் பிறந்தவர்களா?

அப்படியும் ஒரு கதை. உண்மையில் அவர்கள் தமிழுடன் பிறந்தவர்கள்.


கே.எல்.சுபாகனி, மதுரை.

உலக இலக்கியங்களில் தலை சிறந்தது எதுங்க?

எனக்குத் தெரிந்தவரை திருக்குறளுங்க.


ரெவீ, சென்னை.

கம்ப்யூட்டர் சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் தமிழ்படுத்துவது தமிழரை ஒரு வட்டத்திற்குள் சுருக்கும் முயற்சியாகத் தெரியவில்லையா உங்களுக்கு? எனில், உலக அரங்கில் நம்மால் எவ்விதம் முன்னேற முடியும்?

இதே கேள்வியை ஜப்பானியரும் சைனாக்காரரும் கேட்பதில்லை. அவர்கள் கம்ப்யூட்டர் படிப்பதெல்லாம் அவரவர் தாய்மொழியில்தான். இன்று ‘சிலிக்கன் வேலி’யில் இந்தியர்களைவிடச் சைனாக்காரர்கள் அதிகம். உலக அரங்கில் முன்னேறுவதையும் தாய்மொழியில் கற்பதையும் போட்டுக் குழப்பாதீர்கள். நம் தாய்மொழியில் முறையாகக் கற்றுச் சாதனைகள் புரிந்தால், வெள்ளைக்காரர்கள் அதைப் புரிந்து கொள்ளத் தமிழ் கற்றுக்கொள்வார்கள்.


ஜெயாசரண், இராமநாதபுரம்.

கம்ப்யூட்டருக்கு ஏற்ற மொழி தமிழ் என்கிறார்களே, அது எப்படி?

எழுத்துகள் குறைவு. ஒத்தாட்சரம், சம்யுக்தாட்சரம் என்று கூட்டெழுத்துகள் இல்லாமல் நேராக எழுதப்படும் மொழி. வரிவடிவ எளிமை. வட்டங்களும் சதுரங்களும் கொண்டது. குழப்பங்கள் அதிகம் இல்லை. இதனால், கணிப்பொறியால் பிழை திருத்துவதும் அடையாளம் காண்பதும், அதனுள் தமிழை உள்ளிடுவதும் சுலபம்.


சி.எஸ். சரவணகுமார், வேம்படிதாளம்.

வங்காள, மலையாள இலக்கியங்கள் வளர்ந்தது போல் தமிழ் இலக்கியங்கள் வளராதது ஏன்?

படிக்காமல் சொல்கிறீர்கள்.


அய்யை சி.முருகேசன், கடவூர்.

ஆயிரத்து முன்னூற்று முப்பது திருக்குறள்களில் எந்த ஒரு குறளிலும் “தமிழ்” என்ற வார்த்தையைத் திருவள்ளுவர் பயன்படுத்தாதது ஏன்?

தமிழ் வார்த்தைகளையே பயன்படுத்தினாலும் தமிழ் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாத காரணம், திருக்குறள் தமிழ் பேசும் தமிழர்களுக்கான நீதிகளை மட்டும் சொல்வதல்ல என்பதுதான். உலகப் பொதுமறை அது. அனைத்து மொழியினருக்குமான பொதுச் சொத்து. மொழி கடந்த மனித நீதி.


சுஜாதாவின், ‘கடவுள்’ என்னும் நூலிலிருந்து...........

‘செத்த பின் என்ன என்று தெரிந்துகொள்வதால் என்ன லாபம்? நான் செத்த பிறகு நானாக இருந்தால்தான் எனக்குப் பிரயோசனம். என் மூளை, என் புத்தகங்கள், என் லேசான முதுகெரிச்சல் எல்லாம் இருந்தால்தான் நான் நானாக இருக்க முடியும். செத்தாலும், ஆத்மா தொடர்ந்து பாஸ்னியாவிலோ இந்தோனேசியாவிலோ அல்லது வெனிஸ் நகரத்தில் ஒரு படகோட்டியாகவோ பிறப்பதில் அர்த்தமில்லை.

நான் நானாகத் தொடர வேண்டும். அதற்கு என்னை அறிந்தவர்கள் வேண்டும். உறவினர்கள், என் வாசகர்கள் வேண்டும். முத்தாரம் வேண்டும். கட்டுரை அனுப்பினால் அதை விமர்சிப்பவர்கள் வேண்டும். தமிழ் வேண்டும். அதெல்லாம் இல்லாவிடில் உயிர் என்பது தொடர்ந்தால் என்ன, முடிந்தால் என்ன? எனவே சாவு என்பது கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நம் நினைவுகளின் அழிவு.........”

“சாம்போதும் தமிழ்படித்துச் சாக வேண்டும்...” என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.

“செத்த பிறகும் தமிழ் வேண்டும்” என்றார் சுஜாதா.

தமிழைப் போற்றுவதில் எவருக்கும் சளைத்தவரல்ல எழுத்தாளர் சுஜாதா.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>