வெள்ளி, 15 நவம்பர், 2013

‘ஷீரடி சாயிபாபா’ கடவுளுக்கும் மேலானவரா???

மகான்கள் மற்றும் அவதாரங்களின் மகிமைகள் பற்றிச் சொல்லக் கேட்பது மட்டுமல்ல, அவர்களை மனதால் நினைத்தாலே என் உடம்பு முழுக்க ஒருவித ‘தகிப்பு’ பரவும். “அவர்களின் ‘மலம்’ சந்தனமாய் மணக்குமா? சிறுநீர் பன்னீராய்க் கமகமக்குமா? வேர்வைத் துவாரங்களில் ஆவியாய் வெளியேறி அவர்களைச் சுற்றிச் சுகந்தம் பரப்புமா?” என்றெல்லாம் கேள்விகள் எழுப்பிப் பக்தர்களின் மனதைப் புண்படுத்தி அவர்கள் இட்ட சாபத்தை மூட்டை மூட்டையாய்ச் சுமப்பவன் நான்!

ஆனாலும், தனிப்பட்ட முறையில் பெயர் குறிப்பிட்டு எந்தவொரு மகானையும் நான் விமர்சித்ததில்லை.

இந்த வாரக் [18.11.2013] குங்குமம் இதழில் தொடராக வெளிவரும் ஷீரடி சாயிபாபா பற்றிய கட்டுரையைப் படித்ததால் முகிழ்த்த இப்பதிவு மட்டும் விதிவிலக்கானது.

தாஸ்கணு என்பவரும் ’நாநா’ என்பவரும் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

“அண்மையில் பாபா நிகழ்த்திய அற்புத நிகழ்ச்சி ஏதேனும் தெரிய வந்ததா?” என்கிறார் தாஸ்கணு.

“ஆமாம். எனக்குக் கோபால்குண்ட் என்று என்றொரு நண்பர் இருக்கிறார். தலை சிறந்த சாயி பக்தர். அவருக்குக் குழந்தைகள் இல்லை. நிறைய முயற்சிகள் செய்தார். மருத்துவம், பிரார்த்தனை எதுவும் பலிக்கவில்லை. கடைசியில் அவர் சாயிபாபாவைச் சரணடைந்தார். அவரின் அருளால் குழந்தை பிறந்தது” என்கிறார் நாநா.

‘பிரார்த்தனை ஏதும் பலிக்கவில்லை. பாபாவின் அருளால் குழந்தை பிறந்தது’ என்ற வரிகளைப் படித்ததும் வழக்கம் போல என் ‘துஷ்ட புத்தி’ ஒரு கேள்வி எழுப்பியது.

“பிரார்த்தனைன்னா கடவுள் அல்லது கடவுள்களை மனதில் இருத்திச் செய்யப்படுவது. கடவுள் அல்லது கடவுள்களால் சாத்தியப்படாத ஒன்று பாபாவால் எப்படிச் சாத்தியப்பட்டது?

பதிலைத் தேடி மீண்டும் ஆரம்பத்திலிருந்து கட்டுரையைப் படித்தேன்.

விடை கிடைத்தது!

‘யார் என்னிடம் ஆர்வம் உள்ளவர்களாகவும், என்னையே தியானிப்பவர்களாகவும், என்னையே அடையத்தக்க குறிக்கோள் கொண்டிருப்பவர்களாகவும் இருக்கிறார்களோ...அவர்களின் யோக ஷேமங்களை நானே ஏற்றுக் கொள்கிறேன் [பாபா மொழி]’ என்ற குறிப்பு தலைப்பை ஒட்டி அச்சிடப்பட்டிருந்தது.

என்னுள் பல ஆச்சரியக் குறிகளும் வினாக் குறிகளும் அணிவகுத்து நின்றன.

பாபாவைக் கடவுளின் அவதாரம் என்கிறார்களே அது எத்தனை பெரிய தப்பு. அவர் கடவுள்...இல்லையில்லை, கடவுளுக்கும் மேலானவர் என்பது புரிந்தது!

‘பாபாவின் உண்மையான இருப்பிடம் சொர்க்கமே. இந்த உலகில் ஒவ்வொரு கணமும் மனிதனின் வாழ்க்கையை உன்னத நிலைக்கு உய்விக்கவே அவர் பாடுபடுகிறார்’ என்று பாபாவின் படத்தைப் போட்டு அதையொட்டி இப்படியொரு குறிப்பையும் கொடுத்திருக்கிறார்கள்.

என் அற்பப் புத்தி மீண்டும் தலை உயர்த்தி ஒரு கேள்வியை உதிர்த்தது...........

“மனித வாழ்வை உன்னதமாக்க, சொர்க்கத்திலிருந்து இறங்கிவந்து இம்மண்ணில் மனித உருவில் நடமாடிய பாபா, தான் ஏற்று வந்த கடமையை முழுமையாக நிறைவேற்றாமல் சொர்க்கத்துக்குத் திரும்பிவிட்டாரே, அது ஏன்?”

‘கடவுளுக்கும் மேலானவர் பற்றி இப்படியொரு கேள்வி கேட்கலாமா?’ -எனக்குள் உறைத்தது.

”பாபா இங்கே இருந்தவரை கோடானுகோடி மக்கள் அவரை நாடிப் போய்ச் சரணடைந்து சகல துன்பங்களும் நீங்கிப் பேரின்ப வாழ்வு வாழ்ந்தார்கள்; வாழ்கிறார்கள்; இன்றளவும் அவரை வானளாவப் புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவரைக் குறை சொல்ல உனக்கென்ன யோக்கியதை இருக்கிறது?” என்று என் ‘நாசகார’ப் புத்திக்கு ‘நறுக்’ என்று நாலு குட்டு வைத்தேன்.

கடவுள், ஆன்மா, சொர்க்கம் நரகம் பற்றியெல்லாம் எடக்குமடக்காகக் கேள்வி கேட்டே பழக்கப்பட்ட நான், இன்று ஒரு நாளாவது பாபாவின் பரிசுத்த பக்தனாக மாறிப் பாபாவின் அருளைப் பெறுவதென்று முடிவெடுத்தேன்.

என் பெரியம்மா மருமகளுக்குத் திருமணமாகி நான்கைந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லை. எத்தனையோ முயற்சிகள் செய்தும், மகாப் பெரிய மருத்துவ நிபுணர்களையெல்லாம் பார்த்தும், சக்தி வாய்ந்த  கடவுள்களையெல்லாம் பிரார்த்தனை செய்தும் பலன் கிட்டவில்லை.

அவர்களின் தீராத துயரம் தீர்வதற்கு, சொர்க்கத்திலிருக்கும் பாபாவை நெஞ்சில் நிறுத்தி, இன்று இரவு முழுக்கப் பிரார்த்தனை செய்வது என்று முடிவெடுத்திருக்கிறேன். பெரியம்மா வீட்டாரும் செய்வார்கள். விரும்பினால் நீங்களும் செய்யலாம்.

பாபா அருள்பாலிப்பார் என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை.

பெரியம்மாவுக்குப் பேத்தியோ பேரனோ பிறந்ததும் பாபாவை வாழ்த்தி மரபுக்கவிதையில் ஒரு பதிவிடவும் உத்தேசித்திருக்கிறேன்.

அடுத்த ஆண்டு இதே ஐப்பசித் திங்களில் அதை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

#####################################################################################