எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 14 ஜூன், 2025

அகமதாபாத் விமான விபத்து... இறந்த 270 பேரின் சிதறிய ரத்தம் உறைவதற்குள்.....

'மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டடத்தின் மீது அந்த விமானம் விழுந்து வெடித்துச் சிதறித் தீப்பிடித்தது[அகமதாபாத்தில்]. இந்த விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்பட 270 பேர் பலியாகியுள்ளனர்' -இது செய்தி.

'படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி' -இதுவும் விபத்து தொடர்பாகப் பின்னர் வெளியான தகவல்.

மோடியின் ஆறுதல் மொழிகளால், பாதிப்புக்கு உள்ளான குடும்பத்தார்களின் துயர் முற்றிலுமாய்த் துடைக்கப்பட்டது எனலாம்.

இந்நிலையில்.....

மோடி, இந்தச் சோக நிகழ்வில் ஒரு பிரதமருக்கான கடமையைச் செவ்வனே செய்து முடித்த கையோடு, வழக்கமான தன் உலகச் சுற்றுலாவை நாளை தொடங்குகிறார் என்பது அண்மைச் செய்தி[பிரதமர் மோடி நாளை(ஜூன் 15) முதல் 4 நாள் அரசு முறைப் பயணமாகக் கனடா, சைப்ரஸ் நாடுகளுக்குச் செல்கிறார். கனடாவில் ஜூன் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்> ஊடகங்கள்].

இதற்கு முன்பு, மோடி உலகெங்கும் சுற்றுலாச் சென்று உலக நாடுகளுடனான நட்பைப் பலப்படுத்தியதன் விளைவுதான், பாகிஸ்தானுடன் நடந்த போரில் மிகப் பல நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்தன என்பது அறிந்து மகிழத்தக்கது.

இடையில் நின்றுபோன பயணத்தைத் தொடர்வதன் மூலம், மேலும் பல நாடுகளுடனான நட்பை மோடி உறுதிப்படுத்துவார் என்பதில் சந்தேகமே இல்லை.

“விமான விபத்தில் உயிரிழந்த 274 பேரின் சிதறிய ரத்தம் உறைவதற்குள்ளாக மோடி தன் சுற்றுலாவைத் தொடர வேண்டுமா?” என்று எவரும் கேள்வி எழுப்ப வேண்டாம்.

கேள்வி கேட்டவர்கள் பிரதமரை அவமதித்ததோடு தேசத்துக்குத் துரோகம் இழைத்த குற்றவாளிகளாகவும் கருதப்படுவார்கள். 

அளப்பரிய துயரமும் மனப் பயிற்சியும் கடவுள் துதியும்!!!

வாழ்க்கை என்பது வெகு அற்பமான ஆயுளைக் கொண்டது.

இன்பமும் துன்பமும்[இதுவே அதிகம் என்பது மறுக்க இயலாத உண்மை] இரண்டறக் கலந்தது.

இன்பங்கள் துய்த்து மகிழ்வுடன் வாழ்ந்தால்தான் மன நலத்துடன் உடல்நலமும் வாய்க்கும். இதுவே இயற்கை நெறி.

இயன்றவரை மகிழ்வுடன் வாழ்வதற்கு, பெருமளவில் தாக்குகிற துன்பங்களைத் தாங்கும் மனப் பக்குவம் தேவை.

அந்தப் பக்குவத்தை உரிய பயிற்சி[வாழும் முறைகளையும், இயற்கை நெறிகளைப் புறக்கணிப்பதால் விளையும் நன்மை தீமைகளையும் ஆராய்ந்து தெளிதல்]யால் மட்டுமே பெற்றிட முடியும். 

ஓய்வு வாய்க்கும்போதெல்லாம் இந்தவொரு பயிற்சியை மேற்கொள்ளுதல் அவசியம். இதை அலட்சியப்படுத்தி, கோயில் கோயிலாக அலைவதாலும், துயரங்களைப் பட்டியலிட்டுக் கண்ட கண்ட கடவுள்களிடம் அழுது புலம்புவதாலும் மனம் பலவீனப்படுமே அல்லாமல், அது பக்குவம் அடையாது.

சிந்திப்பீர்! மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடுவீர்!!
                                      
                                      *   *   *   *   *
***எவ்வளவுதான் பயிற்சி மூலம் மனதைப் பக்குவப்படுத்தினாலும் துன்பமே இல்லாத வாழ்க்கை சாதியமில்லை என்பது அறிந்துணரத்தக்கது. கடவுளை வழிபடுவதாலும் பயன் இல்லை.

அன்றிலிருந்து இன்றுவரை, மனிதர்கள் கடவுளை நம்பி வழிபட்டதால் இந்த இனம் அனுபவிக்கும் துன்பங்களின் அளவு குறையவே இல்லை; அதிகரித்துள்ளது என்பதே உண்மை. இதில் மதங்களின் பங்களிப்பு மிக அதிகம்.