எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

புதன், 7 ஆகஸ்ட், 2024

அன்புத் தம்பி அண்ணாமலை ‘தனிக்கட்சி’ தொடங்குவாரா?!

ம்பி அண்ணாமலை,

நான் தமிழன். கொஞ்சமும் ‘தமிழின உணர்வு’ இல்லையாயினும், நீ தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்தால் ‘தம்பி’ என்று உன்னை அழைக்கத்தோன்றியது.

பறிக்கப்படவுள்ள தமிழ்நாடு ‘பாஜக’ தலைவர் பதவியைக் காப்பாற்றிட நீ படும்பாடு வார்த்தைகளால் விவரிக்க இயலாததாக உள்ளது.

பாஜக மேலிடம்[கூட்டணி இல்லாமல் ஒரு நகராட்சி உறுப்பினர் பதவியைக்கூடப் பெற முடியாத கட்சி], தலைவர் பதவியை உன் தலையில் சுமத்தியதற்குக் காரணமே, நீ சார்ந்த சாதிக்காரர்களின்[பெரும்பான்மையராக உள்ள ஜாதிகளுள் ஒன்று] ஆதரவையேனும் பெற்றுத் தங்கள் கட்சியை வளர்ப்பதற்குத்தான் என்பதை அப்போதே புரிந்துகொள்ளத் தவறிவிட்டாய் நீ. அதனால், காவல்துறை அதிகாரி என்னும் கௌரவமான பதவியை இழந்தாய்.

2024 தேர்தலில் முற்றிலுமாய் அவர்களின்[‘பாஜக’ தலைமை] எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது. ஒரு வேளை, நீயும் மேலும் சில வேட்பாளர்களும் வெற்றி பெற்றிருந்தால், இணை துணை என்று நீ ஒரு பொம்மை அமைச்சராக ஆக்கப்பட்டிருப்பாய், ஜெய்சங்கரையும் நிர்மலா அம்மையாரையும் போல.

அந்தப் பதவியை வைத்துத் தனிப்பட்ட முறையில் மக்களின் மதிப்பைப் பெற உன்னை அனுமதிக்கமாட்டார்கள்; ஏன், சம்பாதிக்கவும்கூட முடியாது. ஆகவே, முழுக்க முழுக்க ஒன்றிய அமைச்சர் என்பது உனக்குக் ‘கௌரவ’ப் பதவியாக மட்டுமே இருந்திருக்கும்.

தங்கத் தம்பி அண்ணாமலை, 

கடந்த காலங்களில் ஒன்றிய அரசில் அமைச்சர் பதவி வகித்த டாக்டர் பி. சுப்பராயன், சி. சுப்பிரமணியம், ப. சிதம்பரம், ரங்கராஜன் குமாரமங்கலம் போன்றவர்கள் எத்தனைச் சுதந்திரமாகச் செயல்பட்டார்கள் என்பது பற்றியும், மக்களுக்கு அவர்கள் மீதிருந்த மரியாதை பற்றியும் உனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை, அரசியலுக்கு நீ ‘புதுமுகம்’ என்பதால்.

தெரிந்திருந்தால், நீ ஒன்றிய[‘இந்தி’யர்களுக்கானது] அமைச்சரவையில் பொம்மை அமைச்சராவதற்கு ஆசைப்பட்டு, தமிழ்நாடு ‘பாஜக’ தலைவர் பதவியை ஏற்றிருக்கமாட்டாய்.

தவறு மேல் தவறு செய்துவிட்டாய் தம்பி.

உன் பதவி பறிக்கப்படவிருப்பதை அனுமானித்து, மேல்படிப்புக்காக லண்டனுக்குப் போகிறேன்; பாரீஸ் போகிறேன் என்றெல்லாம் நீ உளறுவதைப் பார்த்து நம் மக்கள் கமுக்கமாய் நகைக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்.

கௌரமான காவல்துறை அதிகாரி பதவியை இழந்ததோடு, ‘பாஜக’ தலைமையின் பசப்பு வார்த்தைகளால் மோசம்போன நிலையில் உன் மனம் படும் வேதனை எனக்குப் புரிகிறது.

அதிலிருந்து விடுபட வேண்டுமானால், “100% தமிழர்களுக்காகப் பாடுபடுவதே என் லட்சியம்” என்று அறிவித்துப் புதிய கட்சி ஒன்றை நீ தொடங்கலாம்[கட்சியின் வாழ்நாள் தலைவர் நீ!]; இதனால், தகுதி இல்லாதவன்களுக்கெல்லாம் தலை வணங்கிச் சேவகம் செய்யும் அசிங்கத்திலிருந்து நீ விடுபடலாம்.

தொடங்கு தமிழா! உடனே ஒரு கட்சி தொடங்கு!!