தளபதி அவர்களே,
தாங்கள் நாத்திகரா, ஆத்திகரா என்பதை நான் அறியேன். அது குறித்தான கவலையும் எனக்கில்லை. கடவுள் குறித்த தங்களின் நம்பிக்கை எதுவாகவும் இருக்கலாம். எனினும், தாங்கள் தவிர்க்க இயலாத அரசியல்வாதி என்பதால், தங்களின் அன்றாட நடவடிக்கை களை அறிவதில் எனக்கு நாட்டம் உண்டு.
நேற்றைய[23.06.2018] நாளிதழ்கள் மூலம் தங்களைக் குறித்ததொரு பரபரப்பான செய்தியை அறிய நேரிட்டது.
#ஸ்டாலின் காலை 8 மணியளவில் திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீராமனுஜர் மடத்தில் இருக்கும் பத்மசாலி திருமண மண்டபத்துக்குச் சென்றார். வரும் வழியில் திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீஅரங்கநாதர் சுவாமி திருக்கோயில் எதிரில் உள்ள ரெங்கா கோபுரம் அருகே திருக்கோயில் சார்பில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையில் பூரணகும்ப மரியாதை அவருக்கு அளிக்கப்பட்டது.
பின்னர், ஸ்டாலினை யானை ஆசீர்வதித்து மாலை அணிவித்தது.
பின்னர், வெள்ளைக் கோபுரம் அருகே அகோபிலம் மடத்தைச் சேர்ந்த தேசிய ஆச்சாரியார் தலைமையில் பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது. இதையடுத்து ஶ்ரீரங்கம் வந்த ஸ்டாலினுக்கு சுந்தர் பட்டர் தலைமையில் ராஜகோபுரம் அருகே, யானை மாலை அணிவிக்க, பூரண கும்ப மரியாதை அளித்தனர்#
என்றிவ்வாறான செய்திகளோடு,
'பெருமாள் பிரசாதமான மஞ்சள் பொட்டை அர்ச்சகர் ஸ்டாலின் நெற்றியில் வைத்தார். அவர் முதல்வராக வேண்டி ஸ்ரீரங்கத்தில் உள்ள வேணுகோபாலன் சன்னதியில் நேற்று முன்தினம் இரவு சுக்ர ப்ரீத்தி யாகம் நடத்தப்பட்டது. 60 பிராமணர்களுக்குப் புத்தாடைகளும், யானைகளுக்குத் தலா 60 கிலோ வெல்லம், கரும்பு ஆகியவையும் வழங்கப்பட்டன' என்பன போன்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
தங்களின் நெற்றியில் வைக்கப்பட்ட மஞ்சள் பொட்டை உடனடியாக நீங்கள் அழித்துவிட்டதாகவும் நாளிதழ்கள் குறிப்பிட்டுள்ளன,
இவ்வாறான செய்திகள்தான், மேலே நான் குறிப்பிட்டதுபோல, நீங்கள் நாத்திகரா ஆத்திகரா எனும் ஐயத்தைத் தோற்றுவித்தன.
நீங்கள் ஆத்திகர் என்றால் பூரண கும்ப மரியாதையை ஏற்றுக்கொண்டதில் தவறேதுமில்லை. நாத்திகராயின் மரியாதையை ஏற்றுக்கொண்டது தவறு என்றாகிறது.
மரியாதையை ஏற்பதானது, கடவுள் மறுப்புக் கொள்கை மீது நீங்கள் கொண்ட உறுதியைக் குலைக்கும் என்று கருதியிருந்தால், வாயார நன்றி சொல்லி, கும்ப மரியாதையைத் தவிர்த்திருக்கலாம்.
ஆத்திகமோ நாத்திகமோ மதிக்கப்படவேண்டியது மனிதப் பண்பாடுதான். நமக்கு மரியாதை செய்ய நினைப்போரை நோகடித்தல் கூடாது என்று எண்ணும் இரக்க குணம் கொண்டவர் நீங்கள் எனின், அர்ச்சகர் வைத்த திலகத்தை அழித்திருக்கக் கூடாது. விரும்பியிருந்தால், நிகழ்வுகள் முடிந்த பிறகு அந்த அழிப்பு வேலையைச் செய்திருக்கலாம்.
மேற்கண்டவற்றில் எந்தவொரு நெறிமுறையையும் பின்பற்றாமல் மனம் தடுமாறியிருக்கிறீர்கள்; தள்ளாடியிருக்கிறீர்கள்.
கடவுள் மீது கொண்ட நம்பிக்கையாலோ, மக்களைக் கவர வேண்டும் என்னும் எண்ணத்தாலோ, பூரண கும்ப மரியாதையை ஏற்றுக்கொண்டு, நெற்றியில் மஞ்சள் பொட்டு வைக்கவும் அனுமதித்த நீங்கள்.....
'ஸ்டாலின் ஒரு நாத்திகன்' என்று பகுத்தறிவாளர்களால் குத்தப்பட்ட முத்திரைக்குப் பங்கம் வந்துவிடக் கூடாது என்று கலக்கமுற்று அதை அழித்திருக்கிறீர்கள்.
ஆக,
இதற்கு முன்னர் எப்படியோ, இந்த நிகழ்வின்போது மனம் தடுமாறியிருக்கிறீர்கள் என்பது தெளிவாகப் புரிகிறது.
நம் மக்களைப் பொருத்தவரை, நல்லாட்சி தருபவரையே தம் தலைவராக ஏற்பார்கள்; முதல்வராகவும் ஆக்குவார்கள். அவர் ஆத்திகரா நாத்திகரா என்பது குறித்தெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. எனவே.....
தளபதி அவர்களே,
தாங்கள் ஆத்திகரா நாத்திகரா என்பதை வெளிப்படுத்துவதில் இனியும் கவனம் செலுத்தாமல், மக்களைக் கவருவதற்கான பணிகளை மேற்கொள்ளுதல் வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
நன்றி.
------------------------------------------------------------------------------------------------------------------
