செவ்வாய், 30 ஏப்ரல், 2019

மொழிவாரிக் கணக்கெடுப்பு...இந்தி வெறியர்களின் தில்லுமுல்லு!!!

இந்தியாவில்  தமிழ், தெலுங்கு, இந்தி முதலான இந்திய மொழிகளைப் பேசுவோர் பற்றிய புள்ளிவிவரம் தயாரித்ததில் மிகப் பெரும் தில்லுமுல்லு நிகழ்ந்துள்ளது[இந்தி பேசுவோர் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டுள்ளது].

இதை, உரிய ஆதாரங்களுடன் அறிவித்திருக்கிறார் 'கணேஷ் நாராயண தேவ்' என்னும் அறிஞர். இது குறித்த விவரங்கள் கீழே இடம்பெற்றுள்ளது.

இந்திக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் போக்கை முற்றிலுமாய்த் தவிர்த்து, மற்ற மொழிகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துமாறு நடுவணரசை வலியுறுத்தி இந்தி பேசாத இந்திய மக்கள் போராட வேண்டிய நேரம் இது. 










திங்கள், 29 ஏப்ரல், 2019

சூபி ஞானி மனம் இரங்குவாரா?!

உத்திரப் பிரதேச மாநிலத்தில் 'ஆம்ரோகா' என்னும் ஊரில் ஒரு தர்கா உள்ளது. அங்குள்ளஷா விலாயட்டின் சமாதியான தர்கா வளாகத்தில், பாம்பு, தேள், நட்டுவாக்கிளி, பூரான் போன்ற கொடிய விஷம் கொண்ட  உயிரினங்கள் உள்ளனவாம்.  

மிக மிகப் பல ஆண்டுகளாகவே, இந்த உயிர்கள் அங்கு வருகை புரியும் பக்தகோடிகளில் எவரையும் கடித்ததே இல்லையாம். பக்தர்கள் அவற்றைத் தத்தம் கைகளில் ஏந்தியவண்ணம் செல்ஃபி எடுத்து மகிழ்கிறார்களாம். விரும்புகிறவர்கள், தாம் விரும்பும் விஷ ஜந்துவைத் தம் வீடுகளுக்குகூட எடுத்துச் செல்லலாமாம். [ஆனால், குறிப்பிட்ட சில நாட்களில் திரும்பவும் அவற்றைத் தர்காவில் சேர்த்துவிடவேண்டும் என்பது விதியாம். தவறினால் அவற்றால் தீங்கு நேருமாம்][29.04.2019 தமிழ் நாளிதழ்கள்] அதற்கான காரணம்.....

சூபி ஞானி[13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்] அவர்களின் அருள்பாலிப்புத்தானாம்!
ஞானி அவர்கள் நிகழ்த்தும் இந்த அதிசயம் அனைத்து மக்களின் மனங்களிலும் பேரானந்தத்தை நிரப்ப வல்லதாகும்.

சமாதியான சூபி ஞானி அவர்களின் அருள் உள்ளத்தை மனமாரப் போற்றுவதோடு ஒரு வேண்டுகோளையும் அவர் முன் சமர்ப்பிக்கிறோம். அது.....

''தங்களின் அருள்பாலிப்பால், விஷ ஜந்துக்கள் எல்லாம் சாது ஜந்துக்களாக மாறுவது தர்காவில் நிகழ்வதோடு, விரிந்து பரந்து கிடக்கும் இந்த மண்ணுலகம் முழுதும் நிகழ்தல் வேண்டும்'' என்பதே.
==================================================================================


சனி, 27 ஏப்ரல், 2019

ஜென் கதைகளின் கதை!

பலராலும் மிக விரும்பிப் படிக்கப்படுபவை 'ஜென் கதைகள்'; குட்டிக் குட்டியான இக்கதைகள் உலக அளவில் மிக மிகப் பிரபலம்; பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஜென் கதைகள் எளிதாகப் புரிந்துகொள்ளத் தக்கவை. சுவாரசியமானவை. ஆழமான உள்ளர்த்தம் கொண்டவை. உலக அளவில் இவை பரவலாக வாசிக்கப்படுவதற்கான காரணங்கள் இவை.

இக்கதைகளை, கி.பி.6ஆம் நூற்றாண்டில் சீனாவில் அறிமுகப்படுத்தியவர் இந்தியாவிலிருந்து சீனா சென்ற போதி தர்மர் ஆவார்.

ஜென் என்னும் சொல் தியானம், உணர்தல் போன்ற பொருள்களை உள்ளடக்கியது. இப்பிறப்பை முழுமையாக உணர்ந்து வாழத் தூண்டுபவை இக்கதைகள்.

கி.பி.960 முதல் கி.பி.1141 வரை, சீன நாட்டுச் 'சங்' மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இக்கதைகள் மக்களிடையே வெகு வேகமாகப் பரவின.

ஒரு காலக் கட்டத்தில், சீன தேசத்து ஆட்சியாளர்களின் ஆதரவு வெகுவாகக் குறைந்தபோது, ஜென் பிரிவு ஜப்பானில் தன் சிறகுகளை விரிக்கத் தொடங்கியது.

ஜென் பிரிவு இந்தியாவிலிருந்து சீனாவுக்கும் பின்னர் ஜப்பானுக்கும் சென்றாலும் இன்றளவில் ஜப்பானில் மட்டுமே நிலையானதோர் இடத்தைப் பெற்றுள்ளது.
*சென் புத்தமதம் மகாயான புத்தமதத்தின் ஒரு பிரிவு ஆகும். சீன அரசு மரபுகளில் ஒன்றான தாங் அரசமரபு காலத்தில் சான் புத்தமதம் என்ற பெயரில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. சீன சமயத்தின் தத்துவக்கோட்பாடான தாவோயிசத்தால் வலிமையாகப் பாதிக்கப்பட்டு சீன புத்தமதத்தின் ஒரு தனிப்பிரிவாகச் சான் புத்தமதம் வளர்ந்தது. Wikipedia*
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி: 'சீன மதங்கள்', New Horizon Media Pvt.Ltd., Chennai.

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

இங்கேதாங்க உதைக்குது!!!

'பிரபஞ்சம் கடவுளால் படைக்கப்பட்டது' என்னும் கருத்தாக்கத்தைச் சமண மதம் ஏற்பதில்லை. 

'ஆதியும் அந்தமும் இல்லாதது பிரபஞ்சம். அது இருக்கிறது; இருந்துகொண்டே இருக்கிறது. எப்போதும் அழிவதும் இல்லை' என்று நம்புகிறவர்கள் சமணர்கள்.

இருந்துகொண்டே இருக்கிற இந்த உலகில்[பிரபஞ்சத்தில் இதுவும் அடக்கம்] பழம் வினைப்பயன்களுடன் வந்து பிறந்திருக்கிறோம் நாம். அவற்றைக் களைவதற்கான வாய்ப்பை இங்கு நாம் பெற்றிருக்கிறோம். அதற்கான வழிதான் அகிம்சை.

கொல்லாமை, திருடாமை, புலால் உண்ணாமை போன்றவற்றைக் கடைபிடிப்பதே அகிம்சை நெறியாகும்.

அகிம்சை நெறியில் வாழ்ந்துகாட்டுவதன் மூலம் பிறவிக்குக் காரணமான அனைத்து வினைப்பயன்களிலிலிருந்தும் விடுதலை பெறலாம். பெற்றால்.....

'பிரபஞ்ச ஒளியுடன் இரண்டறக் கலந்து பேரானந்த நிலையை எய்த முடியும்' என்கிறார்கள் சமணர்கள்.

சமணர்களின் நம்பிக்கை மெய்யானதாகவே இருக்கட்டும். ஆனால், 'பிரபஞ்ச ஒளியில் கலப்பது' என்கிறார்களே, அதுதாங்க புரிய மாட்டேங்குது.
பிரபஞ்ச ஒளியில் கலக்குற நாம் எப்படியிருப்போம்?

செத்துப்போனா, உடம்பு உருவாகக் காரணமாயிருந்த அத்தனை அணுக்களும் அழிஞ்சுடுது; அல்லது, காணாமல் போயிடுது. அப்புறம், 'நான்' அல்லது 'நாம்' என்பவை எப்படியிருக்கும்?

ஏதோ ஆவி போல, புகை போல என்று கொண்டாலும், அந்த ஆவி வடிவிலோ புகை வடிவிலோ பிரபஞ்ச ஒளியுடன் கலந்துவிடுவதன் மூலம் நாம் அடையும் பலன் என்ன?

'பேரானந்தம்' என்கிறார்கள். அதென்ன பேரானந்தம்? அந்தப் பேரானந்தத்தில் எவ்வளவு காலத்துக்குத் திளைத்திருப்போம்?

எல்லையே இல்லையா? உண்டுன்னா, அந்த எல்லையைக் கடந்தப்புறம் என்ன ஆவோம்?

சமணர்கள்னு இல்லை, மத்த மதவாதிகளும் இப்படித்தான். ஆன்மா, கடவுள், சொர்க்கம், நரகம்னு எதையெதையோ சொல்லியிருக்காங்க. நம்ம மரமண்டைக்குத்தான் எதுவுமே புரியமாட்டேங்குது!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------




புதன், 24 ஏப்ரல், 2019

புதிய உயிரினங்களின் தோற்றத்திற்கான 'காலவரம்பு' என்ன?

பரிணாம வளர்ச்சி காரணமாகவே உயிரினங்கள் பல்கிப் பெருகின என்றார் அறிவியல் அறிஞர் டார்வின்.

''இந்தப் பரிணாம வளர்ச்சி என்பது ஒரு தொடர் நிகழ்வு எனில், இதனால் புதிய புதிய உயிரினங்கள் தினம் தினம் தோன்றிக்கொண்டே இருக்கின்றனவா?'' -இப்படியொரு சந்தேகம் நம் போன்றவர்களுக்கு எழுவது இயல்பு. விஞ்ஞானிகளின் பதில்.....

''இல்லை'' என்பதே.

''பரிணாம வளர்ச்சி என்பது குறைவான கால அளவில் நிகழ்வதில்லை. அதாவது, சில ஆண்டுகளிலோ சில நூறு ஆண்டுகளிலோ நடைபெறுவதல்ல; மிகப் பல ஆயிரம் ஆண்டுகளிலான படிப்படியான வளர்ச்சிக்குப் பின்னரே புதிய உயிர்கள் தோன்றுகின்றன. ஆகவே....

நாம் வாழும் காலத்தில் ஒரு புத்தம் புதிய உயிரினம் தோன்றியிருப்பதைக் கண்டறிவது அத்தனை எளிதல்ல'' என்கிறார்கள், அனைத்தும் கடவுளின் படைப்பே என்பதை மறுத்துரைக்கும் அறிவியல் பேரறிஞர்கள்.
=================================================================================
நன்றி: 'உயிர்கள்', New Horizon Media Pvt. Ltd, Alwarpet, chennai, 600 018.

செவ்வாய், 23 ஏப்ரல், 2019

நாத்திகர்கள் தீண்டத் தகாதவர்களா?!

பகுத்தறிவாளர்கள் இணைந்து, சேலம் மாவட்டம் மேட்டூரில்  இம்மாதம் 27ஆம் நாளில் 'நாத்திகர் மாநாடு' நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். உள்ளூர்க் காவல் துறையிடம் அனுமதி கேட்டபோது, அவர்கள் தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியரை அணுகும்படி அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

ஆட்சியரோ, ஏற்பாட்டாளர்களின் மனுவுக்குப் பதில் தராமல் காலம் தாழ்த்திக்கொண்டிருக்கிறார்[ஆட்சியாளர்களின் வழிகாட்டுதலின் பேரிலேயே அவர் செயல்படுவார் என்பது நாம் அறிந்ததே]. 

வேறு வழியின்றி, நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள் மாநாடு நடத்துவோர். நீதிமன்றம், சட்டப்படியான முடிவினை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு வழங்கியிருக்கிறது என்பது இன்றைய செய்தி.
ஆன்மிகம் என்னும் பெயரில், நாளிதழ்கள் உட்பட இங்குள்ள அத்தனை ஊடகங்களும் டன் கணக்கில் மூடநம்பிக்கைகளைத் திணித்து மக்களின் மனங்களைப் பாழடித்துக்கொண்டிருக்கின்றன.

கோயில்களில் தினம் தினம் விதம் விதமாய் அபிஷேக ஆராதனைகள், திருவிழாக்கள், சாமிகளின் வீதி உலாக்கள், திருக்கல்யாணங்கள் என்று மக்களின் பொன்னான நேரத்தையும் பொருளையும் வீணடிப்பதோடு சிந்திக்கும் அறிவை முடமாக்கும்  காரியங்களும் தடையேதுமின்றித் தொடர்கின்றன.

தத்தமக்குரிய அரசுப்பணிகளை மேற்கொள்ளும்போது சாதி மதச் சார்பற்றவர்களாய்க் கடமையைச் செய்யவேண்டிய ஆட்சியாளர்களில் பலரும் வாய்ப்பு நேரும்போதெல்லாம் பக்திமான்களாய்த் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ளத் தவறுவதே இல்லை. காரணம்.....

'கடவுள் பக்தி உள்ளவனே யோக்கியன்' என்னும் நம்பிக்கையைப் பல்லாண்டுக் காலப் பரப்புரையின் மூலம் மக்கள் மனங்களில் ஆழமாகப் பதிய வைத்துவிட்டார்கள் ஆன்மிகவாதிகள். இதன் காரணமாகத்தான் நம்மில் மிக மிக மிகப் பெரும்பாலோர் தம்மைப் கடவுள் பக்தராகக் காட்டிக் கொள்வதில் முனைப்புக் காட்டுகிறார்கள்.

இது ஒருவகை மனநோய் ஆகும்.

இந்நோய் தீர, ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டும் பணியைப் பகுத்தறிவாளர்கள் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இப்பணியின் அவசியத் தேவையை உடனடியாக உணரச் செய்வதே இந்த நாத்திகர் மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

எனவே, உடனடியாக இதற்கான அனுமதியை நம் மாநில அரசு வழங்கிட வேண்டும் என்பது நம் வேண்டுகோள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

திங்கள், 22 ஏப்ரல், 2019

''கடவுள் உண்டு... உண்டு... உண்டு'' என்போர் கவனத்திற்கு.....

நேற்றைய தினம்[21.04.2019], மத வெறியர்களின் மனிதாபமற்ற கொடூரத் தாக்குதலால், இலங்கை வாழ் மக்களில் 225 பேர் தம் இன்னுயிரைப் பறி கொடுத்ததும், 500க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதும் மனிதாபம் உள்ள எவரையும் மனம் பதற வைக்கும் நிகழ்வாகும்.

உலகெங்கிலும் உள்ள மக்கள் நலம் போற்றும் தலைவர்கள் பலரும் தத்தம் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.
நாமும் நம் கண்டனங்களைத் தெரிவிப்பதோடு, கண்ணீர் மல்க மக்கள் முன் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறோம்.

'சிரச்சேதம் செய்யப்பட்டவர்கள், வெடிவைத்துச் சிதறடிக்கப்பட்டவர்கள், உயிரோடு தீயிட்டு எரிக்கப்பட்டவர்கள், மண்ணில் புதைக்கப்பட்டவர்கள், சித்திரவதை செய்து கொல்லப்பட்டவர்கள், ஆட்டு மந்தைகளாய்க் கடலுக்குள் கொட்டப்பட்டவர்கள் என்றிப்படி மத வெறியர்களால் உயிர் பறிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை வரலாற்று ரீதியாகக் கணக்கெடுத்தால், லட்சக்கணக்கில், அல்ல...அல்ல...கோடிக்கணக்கில் தேறும். இந்தப் பாதகச் செயலை எந்தவொரு கடவுளும்[குறிப்பிட்டுச் சொல்வது தவறான புரிதலுக்கு வழிவகுக்கும்] தடுத்திடவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

ஒரு நூறு ஆண்டுகளுக்கேனும்.....

மதம் வேண்டாம்; அவை உருவாகக் காரணமான கடவுள்களும் வேண்டாம்[தவிர்க்க இயலாதவர்கள் தத்தம் வீட்டுக்குள்ளேயே வழிபாடு நிகழ்த்தலாம்]. மனிதாபிமானத்திற்கு மட்டுமே முதலிடம் கொடுத்து வாழ்ந்திடப் பழகுவோம்; அவ்வாறே பிறரையும் வாழ்ந்திடத் தூண்டுவோம்; வாரிசுகளுக்குக் கற்பிப்போம்.'

ஆம். மனிதாபிமானம் மட்டுமே மனிதகுலத்தின் 'உயிர்மூச்சு' ஆகும்!
==================================================================================




ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

''நாத்திகனுக்கு வைத்தியம் செய்யாதீர்''...மகா மகா பெரியவா அருளுரை!!!

"ஆயுர் வேதத்தில் 'நாஸ்திகனுக்கு வைத்யம் செய் யாதே' என்று சொல்லியிருக்கிறது. அது இந்த[?] உள்ளார்த்தத்தில்தான். கேட்கிறபோது, "இதென்ன? கருணையில்லாமல் இப்படிச் சொல்லியிருக்கே!" என்று தோன்றலாம். ஆனால் உண்மையில் இப்படிச் சொன்னதே கருணையில்தான்." (தெய்வத்தின் குரல் பாகம் 3 - பக்கம் 734).[நன்றி: 'உண்மை']


மேற்கண்ட புத்திமதியை மருத்துவர் சமுதாயத்திற்கு வழங்கியவரான, முன்னாள் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சந்திரசேகரேந்திர சுவாமியைத்தான் குமுதம், தினமலர், காலைக்கதிர், தினமணி, கல்கி, இந்து தமிழ் 'காமதேனு' போன்ற தமிழ்ப் பருவ இதழ்கள் இன்றளவும் 'நடமாடிய/நடமாடும் கடவுள்' என்று போற்றிப் புகழ்ந்து பரப்புரை செய்கின்றன!

நாத்திகன் மட்டும் இவர்கள் போற்றும் கடவுளால்/கடவுள்களால் படைக்கப்படவில்லையா? படைத்தது யார்?

மகா மகா பெரிய மகானின் புகழ் பரப்புவோர் பதில் சொல்வார்களா?!

சனி, 20 ஏப்ரல், 2019

பொய்யுரைக்கும் ஜோதிடர்களுக்கு ஒரு மெய்யியல் அறிஞர் விட்ட சவால்!!!

ஜோதிடமும் கைரேகையும் அறிவியல்துறை சார்ந்தவை என்று புருடா விட்டு ஏமாந்த சோணகிரிகளை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் ஜோதிடர்களுக்கும் கைரேகை வல்லுநர்களுக்கும் கீழ்க்காணும் வகையில் சவால் விட்டார் ஓர் அறிஞர். 

சவாலை ஏற்றுச் சாதித்துக் காட்டுபவர்களுக்கு நூறாயிரம் ரூபாய்[இக்கால மதிப்பு ஒரு கோடியைத் தாண்டக்கூடும்] பரிசளிப்பதாகவும் அறிவித்தார்.

அவர் மரணம் எய்தும்வரை சவாலை ஏற்க எவரும் முன்வரவில்லை. சவால்.....

'மிகச் சரியாக, அர்சதீர்க்காம்சங்களுக்கு இணங்க, துல்லியமான பிறந்த நேரம், பிறந்த இடம் ஆகியவற்றோடு கணிக்கப்பட்டுத் தரப்படும் 10 ஜாதகங்கள் அல்லது கைரேகைப் பதிவுகளிலிருந்து எவை எவை ஆண்களுடையவை, எவையெவை பெண்களுடையவை, எவையெல்லாம் செத்துப்போனவர்களுக்கு உரியது என்பதை மிகச் சரியாகச் சொல்ல வேண்டும். 05% வரை பிழை நேர்ந்தால் ஏற்கப்படும்.'

இந்த அறிஞரின்  சவாலை, அவர் மரணம் எய்தும்வரை எவருமே ஏற்க முன்வரவில்லை. அறிஞர்.....

ஈழத்துப் பெரியார் என்று போற்றப்பட்ட டாக்டர் கோவூர்.

==================================================================================

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

மஹா...பெரியவா நிகழ்த்தும்[!] மகா...மகா... பெரிய அற்புதங்கள்!!!

ஒரு சமயம் காஞ்சி மடத்துப் பசு ஒன்று நிறை மாதக் கர்ப்பமாக இருந்ததாம்; கன்றைப் பிரசவிக்க முடியாமல் கண்ணீர் விட்டுக் கதறியதாம். கால்நடை மருத்துவர்கள் வந்து பரிசோதித்து, பசுவின் கருப்பையிலிருந்த கன்று இறந்துவிட்டதாக அறிவித்தார்களாம்.

இதை அறிந்த மகா பெரியவா கண்களை மூடிக் கண நேரம் தியானம் செய்தாராம். பசுவைச் சற்று நேரம் உற்றுப்பார்த்தாராம். சிறிது நேரத்தில், பசுவின் வயிற்றிலிருந்து கன்று வெளியே விழுந்ததோடு துள்ளிக் குதித்துத் தாய் மடி தேடி முட்டி முட்டிப் பால் குடித்ததாம்[குமுதம் 24.04.2019]. [பெய்ய இருந்த மழையை ஒரு விரல் உயர்த்தித் தடுத்து நிறுத்தியதோடு, மீண்டும் பெய்யப் பணித்தார் இவர் என்பது கடந்த வாரக் குமுதம் கதை].
தொடர்ந்து இம்மாதிரியான அதிசயங்களை மகா மகா பெரியவா நிகழ்த்தியதாக வாரா வாரம் கதை அளந்துகொண்டிருக்கிறது குமுதம் வார இதழ்[இதன் மூலம் இஸ்லாம், கிறித்தவ மதங்களின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துகிறார்களாம்].

இந்தப் பொய்ப்பிரச்சாரப் பணியை ஏற்கனவே தினமலர் நாளிதழ் செய்துகொண்டிருக்கிறது. 'தமிழால் இணைவோம்' என்று சொல்லி ஓரளவு நல்ல தமிழில் செய்திகளை வழங்குகிற 'இந்து தமிழ்' காமதேனு இதழும் இவர்களுடன் கூட்டணி அமைத்து, மகா மகா பெரியவாளைக் கடவுள் என்று நம்ப வைக்கும் முயற்சியில்  ஈடுபட்டிருக்கிறது.

காலம் சென்ற இந்த மிக நல்ல மனிதரைக்[திருக்குறளை இழித்துப் பேசியவர் என்றாலும், நல்லொழுக்கத்துடனும் அடக்கத்துடனும் உண்மையான இறைப் பற்றுடனும் வாழ்ந்தவர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை] கடவுள் ஆக்குவதில் ஒரு கும்பல்[சாதியைக் குறிப்பிட நான் விரும்பவில்லை] அதிதீவிரமாகச் செயல்படுவதன் உள்நோக்கம்தான் என்ன?

ஒன்று: தங்களைக் கடவுளின் பரம்பரையில் வந்தவர்கள் என்று மக்களை நம்பச் செய்வது[மகா...பெரியவருக்கு[அமரர் ஆகிவிட்டதால்] எந்தவிதப் பயனும் இல்லை]. 

இரண்டு: மூடப் பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட்டுவிடாமல் தமிழ்மக்களைத் தடுத்துக்கொண்டே இருப்பது. இதன் மூலம், தமிழ் மன்னர்களின் ஆதரவிலும், தமிழ் மக்களின் உழைப்பிலும் உருவான கோயில்களில் தங்களுக்கான செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்வது.

திட்டமிட்டு இந்தக் கும்பல் செய்யும் தொடர் பரப்புரையைக் கண்டித்து எழுதவோ பேசவோ சீரிய சிந்தனையாளர்கள் இன்று இல்லாமல் போனது பரிதாபத்துக்குரியது.

இவர்களின் இந்தக் கூட்டுச் சதி குறித்துச்  சாமானியனான நான் அவ்வப்போது எழுதுகிறேன். என் கண்டனம் வாசகர் பலரையும் சென்றடைவதைத் தடுப்பதற்கு இவர்கள் செய்த சூழ்ச்சியால்தான் தமிழ்மணம் என் பதிவுகளை நிராகரிக்கிறது என்பது என் நம்பிக்கை.

இதனாலெல்லாம் நான் மனம் தளர்ந்துவிடப் போவதில்லை. இனியும் தொடர்ந்து எழுதுவேன். ஒரு நாளில் பத்துப்பேர் என் தளத்திற்கு வருகை புரிந்தாலும் சரியே.
==================================================================================





புதன், 17 ஏப்ரல், 2019

புதிரான தமிழ்மணத்தின் போக்கு!!!




கடந்த பல மாதங்களாக, தமிழ்மணம் என் பதிவுகளை நிராகரித்து வருகிறது. பலமுறை முயன்றும்கூட இணைப்பு சாத்தியம் ஆகவில்லை.

நிராகரிப்புக்கான காரணத்தை அறிவிக்கும் பழக்கம் தமிழ்மணத்துக்கு இல்லை.

தமிழுக்கு 'விளம்பரம்' வழங்கப்பட்ட பிறகு, ஏதேதோ பெயர்களில் எதையெதையோ எழுதிச்[சிறப்பாக எழுதுபவர்கள் உண்டு] சிலர் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். தமிழ் எழுதத் தெரியாதவர்கள்[பிழைகள் நேர்வது இயல்பு. பிழையுடன் எழுதுபவர்களை நான் குறை சொல்லவில்லை] எல்லாம் எதைஎதையோ கிறுக்குகிறார்கள். தமிழ்மணம் இணைத்துக்கொள்கிறது.

முற்றிலும் ஆங்கிலத்திலேயே(?) ஒருவர் தொடர்ந்து பதிவுகள் எழுதித் தமிழ்மணத்தில் இணைக்கிறார்.

நான் எழுதிய...எழுதும் பதிவுகளில் கணிசமானவை மூடநம்பிக்கைகளைச் சாடுபவை; பல மனிதாபிமானம் போற்றுபவை; பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தத் தூண்டுபவை; தனிப்பட்ட எவருடைய மனதையும் நோகடிப்பவை அல்ல. இருந்தும்.....

தமிழ்மணம் என் பதிவுகளை அலட்சியப்படுத்துகிறது. இயன்றவரை தமிழைச் சிறப்பிக்கும் வகையில் பதிவுகள் எழுதிய/எழுதும் என்னை அவமானப்படுத்துகிறது[பின்னணியில், தமிழுக்கும் தமிழருக்கும் எதிராகச் செயல்படுபவர்கள் இல்லாமலிருந்தால் மகிழ்ச்சி].

எத்தனை சிந்தித்தும் இதற்கான காரணத்தை/காரணங்களை என்னால் கண்டறிய இயலவில்லை.

கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ்மணம் தந்த ஆதரவை நன்றியுடன் நினைவுகூரும் நான் தன்மானம் உள்ளவன். இனியேனும் என் பதிவுகளைத் தமிழ்மணம் ஏற்கவேண்டும் என்பதற்காக இந்தக் கருத்துரையைப் பதிவு செய்யவில்லை.

தமிழ்மணத்தின் 'போக்கு' குறித்துத் தமிழ்ப் பதிவர்கள்[இந்த என் தளத்திற்கு வருகை புரிபவர்கள் தினசரி 40 - 50 மட்டும்] சிந்திக்க வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாகும்.

நன்றி.
==================================================================================

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

இதைச் சொன்னது நான்தானா?!

'மனிதர்கள், விலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் என அனைத்து உயிரினங்களுமே சில நுண்ணுயிரிகளிலிருந்துதான் தோன்றின' என்று சொல்லிச் சென்றார் டார்வின். இது பலரும் அறிந்ததே.
'அல்ல...அல்ல. ஏற்கனவே இருந்துகொண்டிருக்கும் உயிரினங்களிலிருந்து இம்மாதிரியான உயிரினங்கள் தோன்றின என்று சொல்வது கடவுளை அவமதிப்பதாகும். அவர்தான் தன்னுடைய சாயலில் மனிதனையும்[இதை வைத்துத்தான் மனிதர்களில் சிலர் தங்களைத் தாங்களே கடவுளின் அவதாரம் என்றும் நடமாடும் தெய்வம் என்றும் பீற்றிக்கொண்டு அலைந்தார்கள்; அலைகிறார்கள்] பிற உயிர்களையும் படைத்தார்' என்று அலறினார்கள் சில மதவாதிகள். இன்றளவும் உளறிக்கொண்டிருக்கிறார்கள்.

'அனைத்து உயிரினங்களுமே தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்துவருகின்றன. எனவே, இனியும் புதிய புதிய உயிர்கள் தோன்றுவது சாத்தியம்தான்' என்றார் அறிஞர் டார்வின். அவர் இன்னொரு அரிய கருத்தையும் முன்வைத்துச் சென்றிருக்கிறார். அது.....

'காலப்போக்கில், இன்றைய மனிதனைக் காட்டிலும் அதீத சக்தி வாய்ந்த மூளையுள்ள மனிதர்கள் தோன்றுவார்கள். இது 100% உறுதி'

'இதைச் சொன்னவர் டார்வின்தானா?' எனும் சந்தேகம் உங்களுக்கு எழுமாயின்,  சொன்னவர் 'பசி'பரமசிவம் என்று சொல்லுங்களேன்!

ஹி...ஹி...ஹி!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------




திங்கள், 15 ஏப்ரல், 2019

பக்தர்கள் கேட்டுக்கொண்டால்...டால்...என்னங்கடா டால்?!?!?!



கீழ்வருவது இன்றைய 'இந்து தமிழ்'[1504.2019]ச் செய்தி. மேம்போக்காகப் படித்தால், ''ஆகா, தமிழில் அர்ச்சனையா!'' என்று மனம் குதூகலிக்கும். கொஞ்சம் ஆழ்ந்து படித்து முடித்தால், கடைசியில் இடம்பெற்றுள்ள ஒரு வரியில் நீங்கள் முட்டாள் ஆக்கப்படுவதை உணர்வீர்கள்.








#சென்னை வடபழனி முருகன் கோயிலில் சுவாமிக்குத் தமிழில் அர்ச்சனை செய்வது தொடங்கப் பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. கோயில்களில் தமிழிலும் அர்ச்சனை செய்யலாம் என்று இந்து சமய அறநிலையத் துறை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும், பெரும்பாலான கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதில்லை. சமஸ்கிருதத்தில் மட்டுமே அர்ச்சனை செய்து வருகின்றனர். எனவே, அனைத்துக் கோயில்களில் தமிழிலும் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், சென்னை வடபழனி முருகன் கோயிலில் நேற்று முதல் சாமிக்கு தமிழில் அர்ச்சனை செய்வது தொடங்கப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதேபோல், அனைத்துக் கோயில்களிலும் தமிழில் அர்ச்னை செய்யப்படுமா என்று எதிர்பார்க்கின்றனர்.
இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சித்திரைத் திருநாளின் முதல்நாளான நேற்றுமுதல் வடபழனி முருகன் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடங்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் கோயில் நடை திறக்கப்பட்டவுடன் முதல் அர்ச்சனை தமிழில் மேற்கொள்ளப்படும்[மகிழ்ச்சி]. பிற நேரங்களில் பக்தர்கள் கேட்டு கொண்டால் தமிழில் அர்ச்சனை செய்வோம்’’ என்றார்#
//அனைத்து கோயில்களில் தமிழிலும் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர்//
யாரந்தப் பல்வேறு தரப்பினர்? ''தமிழில் அர்ச்சனை செய்'' என்று சொல்ல வேண்டியதுதானே? 'உம்' எதற்கு?
பல்வேறு தரப்பினரின் கோரிக்கைப்படிதானே தமிழில் அர்ச்சனை தொடங்கப்படுகிறது.  அப்புறம் என்ன 'கேட்டுக்கொண்டால்'?!
இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படி 'டால்...' போட்டுப் போட்டு தமிழுணர்வு உள்ளவர்களை நோகடிக்கப் போகிறார்கள்?
நமக்கொரு சந்தேகம்.....
''எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்'' என்று ஊருக்கு இரண்டொரு கிறுக்கர்கள் சொல்லிக்கொண்டு அலைகிறார்களே, அவர்களின் வாக்கை[ஓட்டு]ப் பெறுவதற்காகத்தான் இந்த அறிவிப்பா?!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


நான் 'ஆவி' ஆன கதை!!!

நான் 'ஆவி' ஆன கதை!!!

முதலில், கீழ்வரும் ஒரு பக்கச் 'சுடுகாட்டுக் கதை'[கதையின் தலைப்பும் இதுதான்] படியுங்கள். அதையடுத்து நான் ஆவியான கதை!
ஆவி க்கான பட முடிவு
#நான் குப்புசாமி. இப்போது நான்  இருக்குமிடம் எங்கள் ஊர்ச் சுடுகாடு.

செத்துப்போன ஒரு கிழவரை எரிப்பதற்கான ஏற்பாடுகளைச்  சிலர் செய்துகொண்டிருக்க, எஞ்சியிருப்பவர்கள் சிறு சிறு குழுக்களாக நின்று தத்தம் சொந்தக் கதைகளையோ சொந்தம் அல்லாதவர் கதைகளையோ பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

ஒதுங்கி நின்று, தகன மேடையையும் சொர்க்க ரதத்தில் சயனித்துப் பிடி சாம்பலாகக் காத்திருக்கும் பெரியவரையும் இனம் புரியாத பய உணர்வுடன் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்த எனக்குள் ஒரு விபரீதக் கேள்வியின் முகிழ்ப்பு.

'இங்கே கூடியிருப்பவர்களில் அடுத்துச் சாகப்போகிறவர் எவர்?'

வயது குறைந்தவர்களையும், ஆரோக்கியமான உடலமைப்புக் கொண்டவர்களையும் விடுவித்துக்கொன்டே வந்ததில், மூன்று பேர் மட்டும் மிஞ்சுகிறார்கள்..

ஒருவர் என்பதுக்குக் குறையாத வயதுக்காரர். அடுத்தவருக்கு என்புருக்கி நோயாளி போல எலும்பும் தோலுமான தேகம். மூன்றாமவர் பானை வயிற்றுடன் ஒரு மாமிச மலையாகவே காட்சியளிக்கிறார்..

இந்த மூன்று பேரில் முதலில் சாகப்போகிறவர் யார்?

இன்றளவும் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்பவர்கள் உண்டு என்பதால், என்பதைத் தாண்டியவரைப் பட்டியலிலிருந்து நீக்குகிறேன். அடுத்த கேள்வி.....

எஞ்சியிருக்கும் இருவரில் முந்திக்கொள்பவர் யார்?

விடை கண்டறியும் முயற்சியில் நான் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, என் சட்டைப்பையிலிருந்த பேசி சிணுங்குகிறது.

''அலோ...'' -குரல் கொடுக்கிறேன்.

''குப்பு, உன் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடிச்சதில் சமையலறை, கதவு, ஜன்னல் எல்லாம் நொறுங்கிடிச்சி. வீட்டிலிருந்த உன் அம்மா, பெண்டாட்டி, குழந்தைங்க எல்லாருமே செத்துட்டாங்க'' என்ற அதிர்ச்சித் தகவலை யாரோ சொல்ல, ''ஐயோ'' என்று அலறுகிறேன்; கொஞ்சம் கொஞ்மாய் நினைவிழக்கிறேன்.''#

இனி, நான் ஆவியான கதை.....

டந்த வாரம் சென்னை செல்ல நேர்ந்தபோது, மேற்கண்ட கதையும் உடன் பயணித்தது. பிரபல வார இதழ் ஆசிரியரிடம் அதைப் பரிசீலனைக்குச் சமர்ப்பிப்பது என் திட்டம்.

இதழ் அலுவலகம் சென்றேன். அங்குள்ள வரவேற்பறையில் காத்திருக்கச் சொன்னார்கள். சில நிமிடக் காத்திருப்பிலேயே அழைப்பு வந்தது.

மெலிதாகப் புன்னகைத்து என்னை வரவேற்றார் இதழாசிரியர், கதை கை மாறியது.

சுடுகாட்டுக் கதையை, ஆரம்ப வரி முதல் இறுதி வரிவரை விரல் நுனியில் அடிக்கோடிட்டதன் மூலம் அதை அவர் முழுமையாக வாசித்துவிட்டார் என்பது புரிந்தது.

''கற்பனைக் கதையா?'' என்றார் ஆசிரியர்.

''ஊஹூம்...100% உண்மைக் கதை'' என்றேன்.

''குப்புசாமி என்பவர் கதை சொல்வதாக எழுதியிருக்கீங்க. கதாசிரியர் பேரையும் குப்புசாமின்னு குறிப்பிட்டிருக்கீங்க. செத்துப்போன குப்புசாமி எப்படிக் கதை எழுதி உங்களுக்கு அனுப்பினார்னு வாசகன் கேட்பான். அதனால.....''

கதை நிராகரிக்கப்படுகிறது என்பதை அனுமானித்ததால் என் முகத்தில் வாட்டம் பரவியது.

அதைக் கவனித்த ஆசிரியர், ''கவலைப்படாதீங்க. கதை வடிவம் அற்புதமா அமைஞ்சிருக்கு. ஒரு பக்கக் கதைக்கு சாகித்திய அகாடமி விருது கொடுக்கிற காலம் வந்தா தேர்வாகிற முதல் கதை இதுவாகத்தான் இருக்கும்.  செத்துப்போன குப்புசாமி உங்க கனவில் வந்து இந்தக் கதையைச் சொன்னதா திருத்திடுங்க. உங்களைக் கதாசிரியர்னு குறிப்பிட்டுப் பிரசுரம் பண்ணிடலாம்'' என்றார்.

வாட்டம் விடை பெற என் முகத்தில் மகிழ்ச்சி குடியேறியது.

''திருத்திடுறேங்க. குப்புசாமி கனவில் வந்து சொன்னார்ங்கிறதைவிட, நான் தியானத்தில் மூழ்கியிருந்தபோது ஆவியா வந்து சொல்லிட்டுப் போனார்னு எழுதிடுறேன். அதைவிடவும், அவரே தன் அனுபவத்தைக் கதையா எழுதி ஆவி உருவில் வந்து உங்ககிட்டே கொடுத்துட்டுப் போனார்னு எழுதினா கதை படிக்கிற வாசகர்கள் அசந்துடுவாங்க" என்றேன் நான்.

''இப்படியெல்லாம் எழுதினா இன்னிக்கி வாசகர்கள் நம்புவாங்களா?'' என்று சந்தேகம் கிளப்பினார் ஆசிரியர்.

''கண்டிப்பா நம்புவாங்க. 'முன்னைவிட ஆவிகள் மீதான நம்பிக்கை அதிகரிச்சிருக்கு. எப்படிச் சொல்றேன்னா, எங்க பத்திரிகையில் அப்பப்போ நாங்க வெளியிடுற ஆவி சம்பந்தமான கதைகளைப் பாராட்டி வாசகர்கள் நிறையக் கடிதம் எழுதுறாங்க'ன்னு நீங்களே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கீங்க'' என்றேன் நான்.

''ஆமாமா. உங்க அபிப்ராயத்தைத் தெரிஞ்சிக்கத்தான் இப்படிக் கேட்டேன்'' என்ற அவர், உங்களைப் பத்தி ஏதும் சொல்லலையே'' என்றார் விடைகொடுக்கும் வகையில் எழுந்து நின்று.

''நான் குப்புசாமி...'' என்று சொல்ல ஆரம்பித்தபோதே, விழி பிதுங்க, வெளிறிய முகத்துடன், ''கு...கு...குப்புசாமியா?...சுடுகாட்டுக் கதை சொன்ன குப்புசாமி ஆவியா....'' -கேட்க நினைத்ததை முழுமையாகக் கேட்காமலே மயக்கமுற்று இருக்கையில் சரிந்தார் பிரபல வார இதழ் ஆசிரியர்!

''இப்படி மயக்கம் போடுவார்னு தெரிஞ்சிருந்தா, உண்மைக் கதைன்னா முன்னுரிமை தந்து பிரசுரம் பண்ணுவார்னு நினைச்சிப் பொய் சொல்லியிருக்க மாட்டேன்; இது 100% நான் எழுதின கற்பனைக் கதைதான்னு சொல்லியிருப்பேன். இத்தனை கோழையா இருப்பார்னு எனக்குத் தெரியாம போச்சு.''

-அடங்கிய குரலில் முணுமுணுத்துக்கொண்டே அங்கிருந்து நடையைக் கட்டினேன்.
==================================================================================

ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

''ரெட்டை எலைக்கு ஓட்டு! சூரியனுக்கு வேட்டு!!

அடைப்பில் இடம்பெற்றுள்ள எடக்குமடக்கான குறிப்புகள் என்னால் பதிவு செய்யப்பட்டவை! நகல் பதிவுக்கு[copy paste]க் கீழே இடம்பெற்றுள்ள கருத்தாக்கமும் அடியேனுடையதுதான்!!
[நன்றி: 'தமிழ் இந்து' நாளிதழ்[14.04.2019]
#இந்து மதத்தையும், இந்துமத[த்] தெய்வங்களையும் தரக்குறைவாக விமர்சிப்பவர்களை[தரக்குறைவா யாரெல்லாம் விமர்சிக்கிறாங்க?] மக்கள் அடையாளம் கண்டு[உங்களுக்கு அடையாளம் காட்டப் பயமா?!], இத்தேர்தலில் அவர்களுக்கு[ப்] பாடம் புகட்ட வேண்டும். இத்தேர்தல் மூலமாக இந்துக்களின் ஒற்றுமையை உலகுக்கு[க்] காட்ட வேண்டும் என்று இந்துமத[த்] துறவிகள் கேட்டுக்கொண்டனர்.
பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், திருவலம் சர்வமங்களாபீடம் ஸ்ரீஸ்ரீ சாந்தா சுவாமிகள் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
உலகின் அனைத்து நாடுகளிலும், பெரும்பான்மையாக வாழும் சமூகங்கள்[சமூகங்களும் மதங்களும் வேறு வேறு] பெரிதும் மதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தியாவில் தொன்மையான இந்து மதம், அதன் தெய்வங்கள், வழிபாட்டு முறைகள், திருமணச் சடங்குகள், இந்து சமய நூல்கள் ஆகியவை கேலியும், கிண்டலும் செய்யப்படுகின்றன[மனுசன் லீலை பண்ணினாத் தப்பு; கடவுள் பண்ணினாத் தப்பில்லையான்னு தி.க.தலைவர் கி. வீரமணிதான் கேள்வி எழுப்பினார்[கிண்டல் பண்ணல] வேறே யாரும் கிண்டல் பண்ணல. நீங்கபாட்டுக்கு அடிச்சிவிட்டா எப்படி?!].  இந்து சமய அருளாளர்கள்  தரக்குறைவாக விமர்சனம் செய்யப்படுகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்து[க்] கடவுள்கள் மிக மோசமாக விமர்சிக்கப்படுகின்றனர். ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக, இந்து சமயத்தை மட்டுமே அவர்கள் விமர்சிக்கின்றனர்[பெரியார் ஓட்டு வாங்கவா விமர்சனம் பண்ணினார்?]. எனவே, அதை எதிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
நாங்கள் எந்த அரசியல் கட்சிகளுக்கும், கூட்டணிகளுக்கும் ஆதரவானவர்களோ, எதிரானவர்களோ இல்லை. இந்து மதத்துக்கு எதிராக[த்] தொடர்ந்து பேசிவரும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்[இத்தனை மடாதிபதிகள் இருக்கீங்க. இதுவரை நீங்கெல்லாம் புள்ளி வைக்கப் பாடுபட்டதாத் தெரியல. தேர்தல் நேரத்தில்தான் உறக்கத்திலிருந்து விடுபட்டீங்களா?] என்றே வலியுறுத்துகிறோம். அதற்கு இந்துக்கள் ஒற்றுமையுடன் எழுச்சி பெற வேண்டும். இந்து மதத்தைப் பாதுகாப்பவர்கள், இந்துக்களின் தெய்வமான பசுவைப் போற்றுபவர்கள்[நாய், நரி, பன்றி எல்லாம் சாத்தான்களா?], மரங்கள், நதிகள் போன்ற இயற்கை[ச்] சக்திகளைப் போற்றுபவர்கள், பாரதத்தின் பண்பாடு, கலாச்சாரத்தை மதிப்பவர்களுக்கு மட்டுமே மக்கள் வாக்களிக்க வேண்டும். பிற மதங்களின் தெய்வங்கள், வழிபாட்டு முறைகளை உயர்வாகப் பேசுவதும்[பட்டியல் போடுங்கய்யா], இந்து தெய்வங்கள், இந்துமதச் சடங்கு, சம்பிரதாயங்களை மட்டும் அவமதிப்பதுமான இந்து விரோத சக்திகளை[டன் கணக்கில் மூடநம்பிக்கைகளை வளர்த்து வெச்சிருக்கீங்களே, அதுகளை முதலில் ஒழிங்க. அப்புறம் இந்து மதத்தை யாரும் அவமதிக்க மாட்டாங்க] இந்துக்கள் ஒருமித்த கருத்தோடு எதிர்க்க வேண்டும். வெறுமனே அரசியல் லாபத்துக்காக[மத்தவங்க கோயிலுக்குப் போறது நஷ்டப்படுறதுக்கா?] மறைமுகமாக[க்] கோயிலுக்கு[ச்] செல்பவர்களை ஆதரிக்கக் கூடாது.
இந்து மதத்தையும், இந்துமத[த்] தெய்வங்களையும் விமர்சிப்பவர்களை மக்கள் அடையாளம் கண்டு, இத்தேர்தலில் அவர்களுக்கு[ப்] பாடம் புகட்ட வேண்டும். இந்த[த்] தேர்தல் மூலமாக இந்துக்களின் ஒற்றுமையை உலகுக்கு நாம் காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்#
ஆன்மிகப் பெரியோர்களே, 
நீங்கெல்லாம் நல்ல இருக்கணும். இனிமேலும் இப்படியெல்லாம் தலைக்கு மேலே அண்டசராசரமே கிறுகிறுன்னு சுத்துற அளவுக்குச் சுத்தி வளைச்சி அறிக்கை விடாதீங்க. நீங்க சொல்ல நினைக்கிறதை மிகச் சில வார்த்தைகளில் 'பளிச்'னு கீழ்க்காணும் வகையில் சொல்லிடுங்க.....
''தி.மு.க.வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டுப் போடாதீர்!''
===========================================================================================


சனி, 13 ஏப்ரல், 2019

தமிழனாம் தமிழன்...நல்லா வருது வாயில!

நைட்டும்பான், ஃபைட்டும்பான்;

எப்பப் புறப்படுறீங்கன்னா 'ஏர்லிமார்னிங்'பான்;

மசுரு வெட்டிக்கிறத 'ஹேர் கட்டிங்' ஆக்கினவன் இவன்;

'பை த பை', 'ஆன் தி வே', 'வொய்ஃபு', 'நைஸ்', 'சைஸ்'னு இங்கிலீசு கலக்காம இவனால பேசவே முடியாது.

பெத்த புள்ளகளுக்குத் தமிழில் பேரு வைக்கிறதை தகுதிக் குறைவா நினைக்கிறவன்.

அன்றாடக் கைச்செலவுக்குக் காசில்லேன்னாலும் கடன்பட்டாவது புள்ளைகளைக் கான்வெண்ட்டுலதான் படிக்க வைப்பான்.

இவன் நடத்துற கடைக்கெல்லாம் இங்கிலீசில்தான் பெயர்ப்பலகை. தமிழுக்குப் போனாப்போகுதுன்னு பலகையின் ஓர் ஓரத்தில் கொஞ்சுண்டு இடம்.

தமிழ் நீச பாஷைன்னு எவனோ நீசப்பயலுக சொன்னதை வேதவாக்கா நம்புறவன். கோயிலுக்குப் போனா, தமிழில் அர்ச்சனை பண்ணுன்னு அர்ச்சகர்கிட்டே இவன் ஒருபோதும் சொன்னதில்லை. 

''தமிழ் வாழ்க! வளர்க!! வெல்க!! என்றெல்லாம் நம் அரசியல்வாதிகள் மேடையில் முழங்கும்போது தவறாம கை தட்டுவான்.

மோடி தாடின்னு தமிழ் தெரியாத பெரிய பெரிய தலைவர்கள் வந்து, ''வணக்கம்''னும் ''நன்றி''ன்னும் ஒப்புக்கு நாலு தமிழ் வார்த்தைகளை ஒப்பிச்சாப் போதும், ''ஆஹா...ஓஹோ''ன்னு ஆனந்தக் கூச்சல் எழுப்பி ஆர்ப்பரிப்பான்.

இவன்தான் தமிழன்! 

தமிழனாம் தமிழன்...வாயில வரக்கூடாத வார்த்தையெல்லாம் வருது; மனசு கொதிக்குது!
தொடர்புடைய படம்
==================================================================================


வெள்ளி, 12 ஏப்ரல், 2019

பிரேமலதா அம்மையாருக்கு ஒரு விண்ணப்பம்!

''கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு ஓட்டுப் போட்டுவிட்டு ''ஐயோ கடவுளே'ன்னு அப்புறம் புலம்பாதீர்கள்'' என்று விசயகாந்தின் மனைவி மதிப்பிற்குரிய பிரேமலதா பேசியதாக 'News 7' தொலைக்காட்சி இன்றிரவு[12.04.2018] 08.45 மணி அளவில் செய்தி வெளியிட்டது.

பாவம் பிரேமலதா. தமிழக வாக்காளர்கள் அத்தனை பேரும் கடவுள் பக்தி உள்ளவர்கள் என்ற நினைப்பில் இவ்வாறு பேசியிருக்கிறார். கொஞ்சமே கொஞ்சம் யோசித்திருந்தால்.....

கடவுள் பக்தி இல்லாதவர்களும் இம்மண்ணில் பரவலாக இருக்கிறார்கள் என்பது தெரிந்திருக்கும். 

நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டியிடும் கடவுள் பக்தி இல்லாத வேட்பாளர்களுக்கான பட்டியலை ஊடகங்கள் வாயிலாக அவர் அறிவித்தால், அது கடவுள் பக்தி இல்லாத வாக்காளப் பெருமக்களுக்குப் பெரிதும் உதவிகரமாக அமையும் என்பது என் எண்ணம்.

அறிவிப்பாரா தமிழர் தலைவி பிரேமலதா?
பிரேமலதா பேச்சு சற்று முன்னர் க்கான பட முடிவு
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------




பெண்ணின் உடம்பில் 'தொடக்கூடாத' இடம் எது?!

பெங்களூருவில், நடிகையும் அரசியல்வாதியுமான 'குஷ்பு' தேர்தல் பரப்புரை செய்துவிட்டுத் தன் வாகனத்துக்குத் திரும்பியபோது, நெரிசலைப் பயன்படுத்தித் தவறான எண்ணத்துடன் ஒரு நபர் அவரைத் தீண்ட, அவரின் கன்னத்தில் குஷ்பு அறைந்ததாக இன்றைய 'இந்து தமிழ்'[12.04.2019] செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய பெங்களூரு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் ஹர்ஷத்தை ஆதரித்து நடிகை குஷ்பு பிரசாரம்
''அந்த நபர் முதல் முறை என்னைத் தவறாகத் தீண்டினார். தெரியாமல் செய்திருப்பார் என்று கண்டுகொள்ளவில்லை. இரண்டாம் முறையும் அவ்வாறு செய்ததால் கோபத்தில் அவரை அறைந்தேன்'' என்று குஷ்பு சொன்னதையும் பதிவு செய்துள்ளது இந்த நாளிதழ்.

இதே செய்தியை வேறு சில நாளிதழ்கள், 'தொடக்கூடாத இடத்தில்' தொட்டதாகக் குறிப்பிட்டு வாசகரைக் 'கிளுகிளு'ப்பில் ஆழ்த்தியுள்ளன.

பெண்ணைப் பொருத்தவரை, ஒட்டுமொத்த உடம்புமே அந்நியரால் தொடக்கூடாத ஒன்றுதான். அங்கே தொடலாம்; இங்கே தொடக்கூடாது என்னும் வரன்முறைக்கு இடமே இல்லை.

இந்தவொரு ஊடக நாகரிகம் 'இந்து தமிழ்' நாளிதழுக்குத் தெரிந்திருக்கிறது. மற்ற நாளிதழ்களும் அறிந்து செயல்படுவது வரவேற்கத்தக்கதாகும்.

https://tamil.samayam.com/news-video/news/actress-kushboo-has-slapped-a-man-one-who-misbehaved-with-her-in-the-bangalore-election-campaign/videoshow/68830631.cms
==================================================================================

வியாழன், 11 ஏப்ரல், 2019

'இது' அவசியம்! 'அது'வும்தான்!!

 “கவின், உன்     பள்ளி  உடற்கல்வி ஆசிரியரைப் பார்த்தேன். ஆண்டுவிழாவுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடக்க இருப்பதாகச் சொன்னார்.  போட்டிகள்ல நீயும் கலந்துக்கிறேதானே?” என்று மகனிடம் கேட்டார் துரைசாமி.

“இல்லப்பா.” -சலிப்புடன் சொன்னான் கவின்.

“ஏன் கவின்?”

“விளையாட்டுப் போட்டி எதிலும் என்னால் ஜெயிக்க முடியறதில்ல; ஆர்வமும் இல்ல.”

“அப்படிச் சொல்லக்கூடாது. வெற்றியோ தோல்வியோ இன்னிக்கே பேர் கொடுத்துடு.”   

தலையசைத்துவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டான் கவின்.

துரைசாமியின் மனைவி சரிதா கேட்டாள்: “கவின் ரொம்ப நல்லாப் படிக்கிறான். தினசரி உடற்பயிற்சியும் செய்யுறான். விளையாட்டில் அவனுக்குப் பிரியம் இல்ல. வேண்டான்னா விட்டுடலாமே. ஏன் கட்டாயப்படுத்துறீங்க?”

“நாட்டில் மக்கள் தொகை பெருகிட்டே போகுது. எல்லார்த்திலேயும் போட்டி அதிகமாயிட்டு வருது. பிரியப்படுற வேலை கிடக்கும்கிறது நிச்சயமில்ல. பிடிக்காத வேலையைச் செய்தாத்தான் பிழைக்க முடியும்கிற நிலை வரலாம். அதுக்கான மனப் பக்குவத்தை இப்போதிருந்தே வளர்த்துக்கிறது நல்லதில்லையா?” என்றார் துரைசாமி.

கணவன் சொல்வது சரியே எனப்பட்டது சரிதாவுக்கு.
==================================================================================


புதன், 10 ஏப்ரல், 2019

இவர்கள் செத்துப் பிழைக்கிறார்கள்?!?!

ஓரிரு நாட்களுக்கு முன்பு செய்தித்தாளொன்றில் பார்த்த இந்தப் படக்காட்சி என்னைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 

ஒருவரின் நோய் குணமானால், உயிர் இருந்தும் அவரைப் பிணமாகக் கிடத்தி, பிணத்திற்குச் செய்ய வேண்டிய அத்தனை சடங்குகளையும் செய்வதாக நேர்ந்துகொள்ளும் பழக்கம் சேலம் மாவட்டத்தில் சில பகுதிகளில் நிலவுகிறதாம்.

நோய் குணமான பின்பு நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.

சடங்கின் இறுதியில் சேவல் பலிகொடுக்கப்படுகிறது[அது கடந்த பிறவியில் மனிதனாகப் பிறந்து இப்படி நேர்ந்துகொண்டு ஒரு சேவலைப் பலி கொடுத்திருக்குமோ?!].

உண்மையில் இந்த நேர்த்திக்கடனால் நோய் குணமாவது நம்பத்தக்கது அல்ல என்றாலும், உயிரோடு நடமாடும் ஒருவன், தன்னை உயிரற்ற பிணமாகச் சில மணி நேரங்கள் கருதிக்கொள்வதால், அகம்பாவம் அகன்று தன்னடக்க உணர்வு மேலோங்குமோ?!

சிரிக்க வேண்டாம்; சிந்தியுங்கள்!



செவ்வாய், 9 ஏப்ரல், 2019

தேவை...தேவை...இந்துக் கடவுள்களுக்கு ஒரு பட்டியல்!!!

''இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தும் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம்'' என்று, சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நேற்று முன்தினம், இந்து அமைப்புகள் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் உறுதிமொழி ஏற்றதாக இன்றைய 'தமிழ் இந்து'[09.04.2019] செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்களின் மதநம்பிக்கையைப் பாராட்டுகிறோம்.

இது தொடர்பாக, இந்த அமைப்பைச் சேர்ந்த வக்கீல் ஒருவர், ''நாங்கள் எந்தவொரு அரசியல் கட்சியையும் அமைப்பையும் சார்ந்தவர்கள் அல்ல. இந்து மதத்தையும் அதன் கடவுள்களையும் அரசியல்வாதிகள் இழிவுபடுத்திப் பேசிவருகிறார்கள்[திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியைத் தவிர வேறு யாரும் பேசுவதாகத் தெரியவில்லை. தி.மு.க. தலைவர் ஸ்டாலின்கூட இந்து மதத்திற்குத் தான் எதிரியல்ல என்று உறுதி மொழிந்திருக்கிறார்]. இதை ஏற்க முடியாது. எனவேதான் இவ்வாறு உறுதிமொழி ஏற்றிருக்கிறோம் என்று அறிவித்திருக்கிறார்.

மகிழ்ச்சி.

இந்துக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் பேசக்கூடாது என்று அறிவிப்புச் செய்யும் இந்து அமைப்பினருக்கு ஒரு வேண்டுகோள்......

இந்நாள்வரை , இந்துமதக் கடவுள்களின் எண்ணிக்கையை அறிந்தவர் எவருமில்லை. எனவே.....

அதற்கான  பட்டியலை உடனடியாக வெளியிடுங்கள்[பட்டியலைப் பார்ப்பவர்கள், மறந்தும்கூட இந்துக் கடவுள்களை விமர்சிக்க மாட்டார்கள்]. பட்டியல் தயாரிக்க ஆறு மாதங்கள் ஆகுமா?

ஆறு மாதம் என்ன, ஆறு ஆண்டுகள் ஆனாலும் சரியே. இக்கணமே தயாரிப்பில் ஈடுபடுங்கள். ஒரு குட்டிக் கடவுள்கூட விடுபட்டுவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்துங்கள்.

வாழ்க இந்துமதக் கடவுள்கள்!
ஜீயர் பேச்சு க்கான பட முடிவு
===============================================================================





திங்கள், 8 ஏப்ரல், 2019

நெல்லுக்கும் கள்ளிப்பாலுக்கும் தப்பிப் 'பிரபலம்' ஆன சில பெண்கள்!!!

ஆண் குழந்தை பிறந்தால் ஆனந்தம்; பெண் என்றால் அழுகை. முன்பெல்லாம் நெல்லையோ கள்ளிப்பாலையோ புகட்டிப் பிறந்த பெண் சிசுக்களைக் கொன்றார்கள். இன்று விலைபோகும் மருத்துவர்களின் உதவியோடு கருவிலேயே  அழித்துவிடுகிறார்கள்.

இந்தக் கொடூரக் கொலைபாதகத்திலிருந்து தப்பிப் பிழைத்து, உழைத்து முன்னேறிய மூன்று பெண்ணினப் பிரபலங்களின் கருத்தறிந்திட மேலே தொடருங்கள்['அவள் விகடன்' இதழுக்கு நம் நன்றி].



ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எச்சரிக்கை!!!


பதிவு செய்த நாள்

06ஏப்
2019 
22:40
சென்னை: தி.க., தலைவர், வீரமணியை கைது செய்ய வலியுறுத்தி, ஹிந்துக்கள் பாதுகாப்பு படை நடத்தும் பொதுக்கூட்டம், மயிலாப்பூரில் இன்று நடைபெற உள்ளது.ஹிந்துக்களை புண்படுத்தும் வகையில் பேசி வரும், தி.க., தலைவர் வீரமணியை கைது செய்ய வலியுறுத்தியும், ஹிந்துக்களுக்கு விரோதமாக செயல்படும், தி.மு.க., கூட்டணிக்கு, இனி எந்த தேர்தலிலும் ஓட்டு போட மாட்டோம் என, உறுதி ஏற்கும் வகையிலும், ஹிந்துக்கள் பாதுகாப்பு படை சார்பில், மயிலாப்பூர், மாங்கொல்லையில், இன்று மாலை, 4:30 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.இதில், சமூக ஆர்வலர்கள், ஆன்மிக அன்பர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று பேச உள்ளனர். அனந்த பத்மநாப சுவாமி, 'ஸ்ரீகிருஷ்ணர்' குறித்து சொற்பொழிவாற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை, ஹிந்துக்கள் பாதுகாப்பு படை செய்துள்ளது.
-இது, இன்றைய 'தினமலர்[07.04.2018]' நாளிதழில் வெளியான செய்தி.

இதன் மூலம், இந்துமதத்திற்கு விரோதமாகச் செயல்படும் தி.மு.க.வுக்கு[கைகோர்த்துள்ள அப்பாவிக் கட்சிகளுக்கும்தான்] இனி எந்தவொரு தேர்தலிலும் ஓட்டளிப்பதில்லை என்று மயிலாப்பூரில் வாழும் பொதுமக்கள் முடிவெடுக்க இருக்கிறார்கள் என்பதை அறிகிறோம்.

இங்கே, 'இனி' என்னும் சொல் ஊன்றிக் கவனிக்கத்தக்கது. இனி என்று சொன்னதன் மூலம் இதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் மயிலாப்பூர் வாசிகள் தி.மு.க.வுக்கே தங்களின் பொன்னான ஓட்டுகளைப் போட்டு அதை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள் என்பது உய்த்துணரத்தக்கது.

எனவே, இக்கணமே, ஸ்டாலின் அவர்களுக்கு இந்தச் செய்தியைச் சமர்ப்பணம் செய்வதோடு, அவரை எச்சரிக்கை செய்திடவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். அவ்வெச்சரிக்கை.....

'நன்றி மறப்பது நன்றல்ல' என்பது சான்றோர் வாக்கு.

கடந்த தேர்தல்களில் நீங்கள் வெற்றிக் கனிகளைப் பறிப்பதற்குத் தோள் கொடுத்து உதவிய மயிலாப்பூர் நன் மக்களை நன்றியுடன் நினைவுகூருங்கள். 

'ஒரிஜினல்' இந்துக்களான அவர்களுக்கு எதிராகச் செயல்பட்டுவரும் நீங்கள், உங்களின் தவற்றை உணர்ந்து உடனடியாக அவர்களிடம் மன்னிப்புக் கோருங்கள். கோரினால்.....

பெருந்தன்மையுடன் அதனை ஏற்றுக்கொண்டு, நடைபெறவுள்ள தேர்தலில் மட்டுமல்லாமல், இனி வரவிருக்கும் தேர்தல்களிலும் உங்கள் கட்சிக்கே[கூட்டுச் சேரும் கட்சிகளுக்கும்தான்] ஓட்டளித்து வெற்றிமாலை சூட்டுவார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------