எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

திங்கள், 8 நவம்பர், 2021

ஆயிரம் ரூபாயும் ஓர் அப்பாவிக் கடவுள் பக்தனும்!


முத்தரசு என் அறைத் தோழன். மூன்று நாள் அவனின் அலுவலக நண்பர்களுடனான சுற்றுலா முடிந்து அன்று அதிகாலையில் ஊர் திரும்பியிருந்தான். 

வந்ததிலிருந்து மிகவும் சோர்வாகக் காணப்பட்டான்.

"முகத்தில் பயணக் களைப்பையும் மீறி ரொம்பவே வருத்தம் தெரியுதே, என்ன ஆச்சு?" என்றேன்.

"சுற்றுலாப் போன இடத்தில் ஆயிரம் ரூபாயைத் தொலைச்சுட்டேன். ஆனவரைக்கும் தேடிட்டேன். கிடைக்கல" என்றான் முத்தரசு.

"கவலைப்பட்டா போன பணம் கிடைச்சுடுமா?" 

"நான் கவலைப்படுறது எனக்காக அல்ல; அந்த ஆயிரம் ரூபா எவனோ ஒரு அயோக்கியன் கையில் கிடைச்சுடக் கூடாது என்பதுதான் என் கவலை. அதை ஒரு நல்லவன்கிட்டே சேர்க்கணும்னு அப்பவே கடவுளை வேண்டிகிட்டேன்; இப்பவும் வேண்டிகிட்டிருக்கேன். நீயும் வேண்டிக்கோ."

"கடவுள் நம் வேண்டுதலை நிறைவேற்ற மாட்டார். ஏன் தெரியுமா?"

"சொன்னாத்தானே தெரியும்."

"சொந்தப் பணத்தைத் தொலைச்சுட்டு, அது ஒரு நல்லவனுக்குக் கிடைக்கணும்னு வேண்டிக்கிற உன்னைவிடவும் ஒரு நல்லவன் இந்த உலகத்தில் இருக்க முடியாது. கடவுள் நல்லவராகவும் புத்திசாலியாகவும் இருந்தா உன்னுடைய ஆயிரம் ரூபாயைத் தொலையாம காப்பாத்தியிருப்பார். ஏன் செய்யல? இன்னிக்கி அலுவலகம் போகணும்தானே? போடா. ஆக வேண்டிய வேலையைப் பாரு."

உதட்டளவில் முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தான் முத்தரசு. "என்னடா முணுமுணுக்குறே?"ன்னு நான் கேட்கவில்லை. கேள்விக்குச் சரியான பதில் தெரியாதபோது  முணுமுணுப்பது அவன் குணம்!


==========================================================================