எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 14 அக்டோபர், 2019

அழிக்கிறோம்! அழிகிறோம்!!

பிறப்பெடுத்ததன் விளைவாகப் பிற உயிர்களை வதைத்துச் சிதைத்து உணவாக்கி உயிர் வாழ்கிறோம்.

ஆசைப்பட்டபடியெல்லாம் வாழ்ந்து முடிப்பதற்குள், வகை வகையான கண்ணுக்குத் தெரிந்த, தெரியாத பிற உயிரினங்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, அவற்றிற்கு உணவும் ஆகி அழிந்துபோகிறோம்.

பிறப்புக்கும் இறப்புக்குமான இடைப்பட்ட காலத்தில் ஆணும் பெண்ணுமாய்ச்  சதையோடு சதை தேய்த்து உறுப்பினுள் உறுப்பு சேர்த்துப் புணர்ந்து சந்ததிகளை உருவாக்குகிறோம். இதன் காரணமாக நாம் எதிர்கொள்ளும் போராட்டங்களும் படும் துன்பங்களும் எண்ணிலடங்காதவை.
ஆழ்ந்து சிந்தித்தால்.....

மிக மிக மிக இழிந்ததொரு உயிரினமாக நாம் இருந்துகொண்டிருப்பது புரியும்.

கடவுள் எனப்படுபவர் கருணை வடிவானவர் என்று பரப்புரை செய்பவர்களிடமும், அதை நம்பி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் நிகழ்த்தி வழிபடுகிறவர்களிடமும் நாம் முன்வைக்கும் கேள்வி.....

மேற்குறிப்பிட்டவாறும், அற்ப ஆயுளுடனும், காலமெல்லாம் அளவிறந்த துயரங்களைச் சுமந்து அலைந்து திரிந்து சோர்ந்து மடியும் வகையிலும் நம்மைப் படைத்த ஒரு நபரையா கருணை வடிவானவன் என்கிறீர்கள்? வேண்டாம். இனியேனும் அவரைப் புறக்கணியுங்கள். மதவாதிகள் திணித்த பொய்க் கதைகளையும் ஒதுக்குங்கள்.

கணக்கில் அடங்காத வகை வகையான பொருள்களையும் உயிர்களையும் உள்ளடக்கிய பிரபஞ்சம் எப்போதும் இருந்துகொண்டே இருப்பதா, படைக்கப்பட்டதா? நேர்ந்தது எதுவாயினும் அது சாத்தியமானது எப்படி? உயிர்களின் தோற்றம் ஏன்? அவற்றிடையேயான போராட்டங்கள் ஏன்?  என்றெல்லாம் கேளுங்கள். கேட்போம்.

விடை கிடைக்கிறதோ கேட்டுக்கொண்டே இருப்போம். நம் சந்ததிகளும் கேட்கட்டும். விடை கிடைக்கும்போது கிடைக்கட்டும். 
===========================================================================

நடிகர் ரஜினியை வைத்துப் பணம் பண்ணும் பத்திரிகையாளர்களுக்கு.....

‘சூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை சென்றார்’, ‘ரஜினி குடும்பத்துடன் 10 நாள் இமயமலைப் பயணம்’; ‘பாபாஜி குகையில் ரஜினி தியானம்’ என்றிவ்வாறான தலைப்புகளில், தமிழின் அனைத்து நாளிதழ்களுமே இன்று[14.10.2019]  செய்தி வெளியிட்டுள்ளன.
ரஜினி ஒரு நடிகர்; சிறந்ததொரு நடிகர் என்று சொல்வதிலும் தயக்கம் தேவையில்லை. ஒரு பிரபல நடிகர் என்ற வகையில் அவருடைய இமயப் பயணம் குறித்த செய்தி நாளிதழ்களில் வெளியாவதிலும் தவறு இல்லை. ஆனால்.....

மிக முக்கியச் செய்திகளில் ஒன்றாக, தடிமனான தலைப்புகள் கொடுத்து வெளியிடுவது தேவையா என்று யாரேனும் கேள்வி எழுப்புனால், அதற்கு உரித்தான பதிலை எந்தவொரு பத்திரிகையாளராலும் தர இயலாது.

இதற்கு முன்பு மிகப் பலமுறை இவர் இமயத்திற்கு ஆன்மிகப்பயணம் மேற்கொண்டதையும் இந்தப் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்துச் செய்தி வெளியிட்டன. இதனால் மக்களுக்கு விளைந்த பயன் என்ன?

கேதார்நாத் போவாராம்; பத்ரிநாத்துக்குப் பயணம் செய்வாராம்; பாபாஜி குகையில்  தியானத்தில் திளைப்பாராம்.

[இவர், நாட்கணக்கிலோ மாதக் கணக்கிலோ வெளியே தலைகாட்டாமல் தன் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாலும் இவரைப் பற்றிச் செய்தி வெளியிடாவிட்டால் இந்தப் பத்திரிகைக்கார்களில் ஒருவர் மிச்சமில்லாமல் அத்தனை பேருடைய தலைகளும் வெடித்துவிடும்.

‘பாபாஜி குகையில், ரஜினி தன்னை மறந்த நிலையில் தியானத்தில் மூழ்கிக் கிடக்கிறார். தியானத்தின்போது சூக்கும தேகத்துடன் கைலாயக் கடவுளையும் வைகுண்ட சாமியையும் தரிசனம் செய்தார்; சொர்க்கத்துக்கு ஒரு விசிட் அடித்துத் திரும்பினார்’ என்றிவ்வாறாகப் பொய்யான பரபரப்புச் செய்திகளை வெளியிட்டேனும் தங்களைத் திருப்திபடுத்திக் கொள்வார்கள் இவர்கள்].

சப்பணம் போட்டு உட்கார்ந்து, “ராகவா...ராகவா...” என்றோ, “பகவானே...பகவானே” என்றோ கண்ணை இறுக மூடிக்கொண்டு முணுமுணுப்பதால் இந்த மண்ணில் விளையும் மாற்றங்கள் என்ன?

இவரென்ன, ஒரு புரட்சிகரச் சிந்தனையாளரா? சமூகச் சீர்திருத்தவாதியா? பொதுத் தொண்டு புரிவதற்காகத் தன் வாழ்நாளில் கணிசமான நேரத்தைச் செலவிடுபவரா?

ஒரு நடிகனாக ‘பஞ்ச்’ வசனங்கள் பேசி ரசிகனை அற்பச் சந்தோசத்துக்கு உள்ளாக்கியதைத் தவிர, “சிஸ்டம் சரியில்லை. அதைச் சரி செய்யக் கட்சி தொடங்குகிறேன்”; “நான் நடத்தவிருப்பது ஆன்மிக அரசியல்” என்பன போல் புரியாத வசனங்கள் பேசித் தமிழர்களின் நேரத்தை வீணடித்ததைத் தவிர  இந்தத் தமிழ் மண்ணுக்கு இவர் செய்த சேவைகள்தான் என்ன?

தேவையே இல்லாமல் இவரின் அன்றாட நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செய்தி வெளியிடும் பத்திரிகையாளர்களை என்ன சொல்லிச் சாடினால் நம் ஆத்திரம் தணியும்? மனம் ஆறுதல் பெறும்?
===========================================================================