“ஹரித்வார், ரிஷிகேஷில் இருந்து தூய்மையான கங்கை நீரை இ-காமர்ஸ் தளம் மூலம் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி அஞ்சல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியிருக்கிறார் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்[தி இந்து, 31.05.2016].
‘மதச்சார்பற்றது’ என்று சொல்லப்படும் ஓர் அரசு, குறிப்பிட்ட ஒரு மதத்தின் ஏஜண்டாகச் செயல்படுவது தவறு என்பதை நடுவணரசு இன்றளவும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
‘மதச்சார்பற்றது’ என்று சொல்லப்படும் ஓர் அரசு, குறிப்பிட்ட ஒரு மதத்தின் ஏஜண்டாகச் செயல்படுவது தவறு என்பதை நடுவணரசு இன்றளவும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
சிவபெருமான் தன் தலையில் சுமந்திருப்பதால் கங்கையே புனிதமானது என்று நம்பியது பழைய நம்பிக்கை. அது மூடநம்பிக்கையும்கூட என்பதை நடப்பு அறிவியல் யுகத்திலும் இந்த அரசு உணரத் தவறிவிட்டது. அரசின் இச்செயல், மக்களிடமுள்ள மூடநம்பிக்கைகளை அடியோடு களைவதற்குப் பதிலாக, நீர் வார்த்து வளர்த்தெடுக்கவே செய்யும். இது பற்றியும் நடுவணரசு சிந்தித்ததாகத் தெரியவில்லை.
அனைத்துப் பொருள்களுக்கும் ஆதாரமாக உள்ள பஞ்சபூதம் எனப்படும் மண், நீர், காற்று, நெருப்பு, வெளி ஆகிய ஐந்துமே ஆண்டவனால் படைக்கப்பட்டவைதாம் என்றால் மற்ற நான்கிற்கும் இல்லாத அத்தனை புனிதம் நீருக்கு, குறிப்பாகக் கங்கை நீருக்கு மட்டும் வாய்ப்பது சாத்தியமே இல்லை என்பதை ஆளும் வர்க்கம் அறியாமலிருப்பது விந்தையிலும் விந்தை!
புனிதமான ஆறுகளிலும் குளங்களிலும் நீராடுகிற பக்த கோடிகளில் எவரும், புனிதமானது என்று கருதிக் கடவுளின் படைப்பான நெருப்பில் குளிக்காமலிருக்கும் ‘இரகசியம்’ இவர்கள் அறியாததன்று.
தூய்மையான கங்கை நீரைத் தலையில் தெளித்துக்கொண்டால் செய்த பாவங்களிலிருந்து விடுபடலாம் என்பது மக்கள் பலரின் நம்பிக்கை. இவர்கள் அத்தனைபேரும் ஹரித்வாருக்கும் ரிஷிகேஷத்திற்கு சென்று கங்கையில் மூழ்கிப் பாவம் தொலைப்பது சாத்தியமற்றது என்பதால், தபாலில் ‘புனித நீர்’ அனுப்பும் பணியை மேற்கொள்ள நடுவணரசு முன்வந்துள்ளது போலும்.
எது எப்படியோ, புனிதத்தை விற்பனை செய்வது ஒரு தப்பான காரியம் மட்டுமல்ல, திட்டத்தை நிறைவேற்றக் காலதாமதமும் ஆகும் என்பதையேனும் இந்த அரசு புரிந்துகொள்ள வேண்டும்; தபால் மூலம் காசுக்குக் கங்கை நீரை விற்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
“இது சாத்தியமே இல்லை” என்று அது பிடிவாதம் பிடிக்குமேயானால், இந்த அரசுக்கு நாம் முன்வைக்கும் ஒரு நல்லெண்ணப் பரிந்துரை.....
புனித கங்கை நீரை விமானங்களில் எடுத்துச் சென்று இந்தப் புண்ணிய பூமியெங்கும் தெளிக்கலாம்[சில நாட்களில் இந்தப் பணி முடிந்துவிடும்]. இங்கு வாழும் அனைத்து மக்களும் புண்ணியவான்களாக ஆவார்கள்!!!
எம் பரிந்துரையை ஏற்குமா நம் நடுவணரசு?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++