அதிசயம்! இது பேராச்சரியம்!!
இன்றைய ‘வார மலரில்’ [28’10’12] டாக்டர் கோவிந்தராஜ் [சென்னிமலை] அவர்களின் தொடர் கட்டுரையைப் படிக்க நேர்ந்ததன் விளைவாக, மிதமிஞ்சிய ஆர்வத்துடன், ஒரு மாறுபட்ட இடுகையை உங்களுடன் பகிர்கிறேன்.....
‘நரி, நாய் இனத்தைச் சேர்ந்ததுதான். ஆனால், ஒரு வாலிப ஆண் நரி, ஒரு இளைய பெண் நரியை, ஏதோ ஒரு வகையில் ஈர்த்துப் புணர்ந்துவிட்டால், ஆயுசுக்கும் அவள்தான் அதற்கு ஆதர்ச மனைவி.
இப்படி ஜோடி சேர்ந்த பின்பு ‘மிஸ் யூனிவர்ஸ்’ நரியே வந்தால்கூட, நம் ஆண் நரியார், தடம் பிறழாமல் மனைவியே கதியென்று ஏகபத்தினி விரதனாக வாழ்வார்!’
இப்படி, மனிதன் உட்படப் பிற உயிரினங்கள் பின்பற்ற வேண்டிய நரி இனத்தின் ‘கற்பொழுக்கத்தை’க் கண்டறிந்து சொன்ன டாக்டர், மேலும் ஓர் அதிசயத்தை முன் வைத்து, வியப்பின் எல்லைக்கே நம்மை இட்டுச் செல்கிறார்.
‘இணை சேர்ந்துவிட்ட பெண் நரியைப் பிற ஆண் நரிகள் ஒரு போதும் அணுகா. அப்பப்பா.... ஆச்சரியம்!’[நாயைப் போலவே, புணர்ச்சியின் போதான ‘இழுபறி’ அவஸ்தை நரிக்கும் உண்டு என்பது கொசுறு தகவல்!]
நீண்ட நேர வியப்பிலிருந்து விடுபட்ட பிறகு எனக்குள் எழுந்த கேள்விகள்.....
இணை சேர்ந்த ஜோடியில் ஒன்று, ஏதோ காரணத்தால் இறந்துவிட்டால், தனிமையில் தவிக்கும் மற்றொன்று, ’இணையை இழந்த புறாவைப் போல’ ஒரு புதிய இணையைத் தேடிக் கொள்ளும்தானே?
நரி இனம் போல, இவ்வாறு நல்லொழுக்கத்துடன் வாழும் மற்ற விலங்கினம் எது, அல்லது எவை?[விரும்பினால் / இயன்றால் ஒரு பட்டியல் போடுங்களேன்].
ஒட்டு மொத்த மனிதர்களும் நரிகள் போலவும் புறாக்கள் போலவும் வாழும் நாள் வருமா? எப்போது?