வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

'லஞ்சம்'... சரி. அதென்ன 'லாவண்யம்'?

'லாவண்யம்'னா அழகு என்று பொருள்; கவர்ச்சி என்றும் சொல்லலாம். வேறு பொருத்தமான பொருள்கள் அகராதிகளில் தரப்படவில்லை. 

'லாவண்யா'... அழகானவள்; கவர்ச்சி மிக்க அழகி என்றும் கொள்ளலாம். 

தலைப்புக்கு வருவோம்.

'லஞ்ச லாவண்யம்'கிற சொல் வழக்கு நம்மவரிடையே இருக்கிறது. 

லஞ்சம் > கையூட்டு; லாவண்யம் > அழகு. இரண்டையும் இணைத்தால், 'லஞ்சம் அழகு' என்றாகிறது. லஞ்சத்தில் என்ன அழகோ, கவர்ச்சியோ வேண்டியிருக்கு?

இப்படி நேரிடையாகப் பொருள் கொள்ளாமல், 'லஞ்சமும் கவர்ச்சியான பிறவும்' என்று பொருள் கொள்வது சற்றே பொருந்தி வருவதாகத் தெரிகிறது.

எடுத்துக்காட்டாக ஒரு தொடர்[வாக்கியம்]:

"அலுவலக மேலாளருக்குப் பத்தாயிரம் பணமும், குட்டியும் புட்டியும்[கவர்ச்சி] கொடுத்துக் காரியம் சாதித்தேன்."

'லஞ்ச லாவண்யம்' என்னும் சொல் வழக்கு உருவானது எப்படி என்பது இப்போது புரிந்திருக்கும்[இதற்கு மேலும் விளக்கம் தருவது சாத்தியப்படவில்லை].

அடுத்து, இந்த வழக்குக்குப் பொருத்தமாக ஒரு குட்டிக் கதை.

                                       *  *  *

"மாரிமுத்து, ஆபீசர் இருக்காரா?" -சற்றே உயரமான அந்த நடுத்தர வயது மனிதர் கேட்டார்.

"நீங்க யாரு? என்ன வேணும்?" -அலட்சியமாக எதிர்க்கேள்வி எழுப்பினான் அலுவலக உதவியாளன் மாரிமுத்து.

"நான் ஒப்பந்ததாரர் ஆரோக்கியசாமி. எத்தனை தடவை வந்திருக்கேன். தெரியலேங்குறியே" என்றவாறு அவன் கையில் சிலபல பத்து ரூபாய்களைத் திணித்தார் ஆரோக்கியசாமி.

மாரிமுத்து மரியாதைமுத்து ஆனான். நீங்க யாரோன்னு இருந்துட்டேன். ஆபீசரைப் பார்க்கணுங்களா?" என்றான் மிகு மரியாதையுடன்.

"பார்க்கத்தான் வந்தேன். இவர் புது ஆபீசர். ஆள் எப்படி?" என்றார் ஒப்பந்ததாரர்.

"ஓப்பன் மைண்டட். எதிலும் ஒளிவு மறைவு கிடையாது. உண்டானதைக் கேட்டு வாங்கிடுவார். 

"பழக்க வழக்கம்?"

"எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. ஒரு வெத்தலை பாக்குக்கூடப் போட மாட்டார்."

"ளேடீஸ் சமாச்சாரம்?"

"மூச்... நீங்க இவருக்கு முந்தி இருந்த ஆபீசரை நினச்சிட்டுப் பேசுறீங்க. அது விசயத்தில் ஐயா ஏகபத்தினி விரதர்."

"ஸ்டார் ஓட்டலில் ரூம் போட்டுப் பழைய ஆபீசரைக் குஷிப்படுத்தின வகையில் பேசின ரேட்டுக்கு மேல ரொம்பவே செலவு பண்ணிட்டேன்" என்றார் ஆரோக்கியம்.

"ரேட் விசயத்தில் ஐயா ரொம்பக் கறார் பேர்வழி. அன்பளிப்பு அது இதெல்லாம் ஆபீசில் வைச்சுக்கிட மாட்டார். அவர் வீட்டுக்கே போயிடுங்க" என்றான் மாரிமுத்து.

"சரி" சொல்லிக் கிளம்பினார் ஆரோக்கியசாமி.

அன்றைய தினமே முன்னிரவு நேரத்தில் ஆபீசரை அவர் வீட்டில் சந்தித்தார் அவர்.

அனாவசியச் சம்பிரதாயப் பேச்சுகளை விரும்பாதவர் போல, நேரே விசயத்துக்கு வந்தார் ஆபீசர்.  ஒரு துண்டுச் சீட்டில் தொகையொன்றைக் குறித்து நீட்டினார். 

"ஐயா சொன்னாச் சரி" என்று அவர் குறிப்பிட்ட தொகையை ஒரு காகித உறையில் திணித்தார் ஆரோக்கியசாமி.

"கவரில் எவ்வளவு இருக்கு" என்றார் ஆபீசர்.

"நீங்க குறிப்பிட்ட தொகைங்க."

"நீர் இன்னும் தரவேண்டியது இருக்கு."

புரியாமல் விழித்தார் இவர்.

"என்னய்யா முழிக்கிறீர். ஸ்டார் ஓட்டலில் ரூம் போட்டுக் குட்டி, புட்டியெல்லாம் சப்ளை பண்ணிப் பழைய ஆபீசரைக் குளிப்பாட்டினீரே மறந்துபோச்சா? அவன் என் ஃபிரண்டுதான். எல்லாம் ஃபோனில் சொன்னான்" என்று சிரித்தார் ஆபீசர்.

அதிர்ச்சிக்குள்ளான ஆரோக்கியம், "ஐயா உங்களுக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு....."

இடைமறித்தார் ஆபீசர், "இதெல்லாம் எனக்குப் பிடிக்காதுதான். ஆனா, இதுக்கெல்லாமும் சேர்த்து ஒரு தொகையை வசூலிச்சிடுறது என் வழக்கம்" என்றார்.

மயக்கம் வரும்போலிருந்தது ஆரோக்கியசாமிக்கு. சுதாரித்துக்கொண்டு கூடுதல் தொகைக்கான ரூபாய் நோட்டுகளை எண்ணத் தொடங்கினார்.

=================================================================================

அமேசானில் 'என் பக்கம்['பசி'பரமசிவம்] செல்ல.....

https://www.amazon.com/author/haipasi