வெள்ளி, 28 அக்டோபர், 2011

ஆன்மாவும் மறுபிறப்பும்

 பிரபஞ்சப் பொருள்கள் உருவாகக் காரணமான மூலக்கூறுகளைப் பஞ்ச பூதங்கள் என்கிறார்கள்.

இவற்றில், நிலம் ,நீர், நெருப்பு, காற்று ஆகிய நான்கு மட்டுமே மனித அறிவால் விளக்கிச் சொல்லப்பட்டவை.

ஐந்தாவது பூதமான ‘வெளி’யை, தாம் விளங்கிக் கொண்டு, பிறர் அறிய விளக்கிச் சொன்னவர் எவருமிலர்.

நான்கு மூலக் கூறுகளும் இயங்கும் இடமாக ‘வெளி’ அமைந்துள்ளது என்று சொல்வதன் மூலம் ஐந்தில் ஒன்றாக அதை ஏற்கலாம்.

வெளியைத் தவிர்த்து, ஏனைய நான்கு மூலக் கூறுகளின் சேர்க்கையால் உருவானவையே அனைத்துப் பொருள்களும் எனக் கொள்வதே அறிவுடைமை.

உடம்பு மட்டுமல்ல, அதனை இயக்குகிற மூளையும் மூலக்கூறுகளால் உருவானதே.

உடம்பானது மூளையால் இயக்கப் படும்போதுதான், அந்த இயக்கத்தை வைத்து, உடம்பில் உயிர் இருப்பதாக நம்புகிறோம்.

மூளை இல்லையேல் இயக்கம் இல்லை; உயிரும் இல்லை.

அதாவது............

‘உடம்பு’ என்பது உண்மை. அதை மூளை இயக்குகிறது என்பது உண்மை. 
மற்றபடி, ‘உயிர்’ என்று ஒன்று இருப்பதாகச் சொல்வதும், உடம்பு அழியும் போது அது வெளி யேறுவதாகச் [ஆவி அல்லது ஆன்மா வடிவில்]  சொல்வதும் பொய்.

மூளையை உள்ளடக்கிய இந்த உடம்பு அழியும் போது நாம் இல்லாமல்
போகிறோம்.

‘நான்’ என்று உணருவதெல்லாம் இந்த மூளையின் செயல்தான்.

மரணத்தைத் தழுவியதும் நம் வாழ்வு முடிந்து போகிறது. அதற்கப்புறம் நாம் எப்போதும் எக்காலத்தும் திரும்பி வரப்போவதில்லை என்று எண்ணும் போது நம் மனதில் தோன்றும் அளவிறந்த அச்சமே, செத்த பிறகும் ஏதோவொரு உருவில் வாழ்கிறோம் என்னும் நம்பிக்கைக்கு அடிப்படையாக அமைந்தது.

இந்த நம்பிக்கையின் விளைவாகவே, ஆவி, பேய், பிசாசு, ஆன்மா போன்றவை
ஆறறிவு கொண்ட மனிதனால் கற்பனை செய்யப்பட்டன.

மூலக்கூறுகளின் இணைப்பு இன்றி, தனித்து இயங்கும் எந்த ‘ஒன்றும்’ இந்நாள் வரை அறிவியலாளரால் கண்டறியப் படவில்லை; ‘கடவுள்’ உட்பட.

உடம்பு அழியும் போது, அதிலிருந்து ‘ஆவி’ [சமைக்கப்படும் உணவிலிருந்து
ஆவி வெளியேறுவதைப் பார்த்ததன் விளைவு இது] வெளியேறி வான வெளியில் அலைவதாகச் சொல்வது கலப்படமில்லாத கற்பனை.

அதைப் பார்த்ததாகச் சொல்வதும் பொய்யே.

நமக்குள்ள புலன்களால் பருப்பொருளைத்தான் பார்க்க முடியும். ஆவி ஒரு பருப்பொருளன்று. அதுபற்றி உறுதிபட எவரும் விளக்கிச் சொன்னது இல்லை.

ஏதோ சில நிழல் உருவங்களைப் [அறிவியல் மூலம் அவற்றை விளக்குவது, முயன்றால் சாத்தியப்படும்] புகைப்படம் எடுத்து, அவற்றை ஆவி என்று கதைப்பது குற்றச் செயல் ஆகும்.

மீடியேட்டர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, தரையில் குறித்து வைக்கப்பட்ட எழுத்துகளை நோக்கி அவர்களின் கைகளை நகர்த்தி ஆவிகள் பதில் சொல்வதாகக் கதை விடுவது தண்டிக்கப்பட வேண்டிய பெரும் குற்றம்.

மூலக் கூறுகளால் உருவாகாத ஒன்று மூலக் கூறுகளால் ஆன ஒன்றை நகர்த்துவது எவ்வாறு சாத்தியம்?

ஆவியால் ஒரு பொருளை நகர்த்த முடியும் என்றால்...அதே ஆவியால், தான் உயிர் வாழும்போது தனக்குக் கேடு செய்தவரை அடித்துத் துன்புறுத்த முடியுமே? ஒரு ஆவி இன்னொன்றைத் தாக்க முடியுமே? 

ஆவி ஆணாக இருந்தால், ஆவியாக உலவும் பெண்ணை மட்டுமல்ல, உயிர் வாழும் ஒரு பெண்ணைக் கூடக் கற்பழிக்க முடியும்!!

பேய், பிசாசு, பூதம் என்பனவெல்லாம் ஆவியின் வேறு பெயர்களா? அவை இதனின்றும் வேறுபட்டவையா?

இதை ஆராய்வது வீண் வேலை.

ஆவி போன்றவற்றை நம்பாதவர்கள் கூட ஆன்மாவை நம்புகிறார்கள்.

ஆன்மா, கடவுளின் ஒரு கூறு என்னும் ஆன்மிகவாதிகளும் உளர்.

இறைவனிலிருந்து பிரிந்த ஆன்மாக்கள், விண்ணில் அலைந்து திரிந்து, ஏதோ ஒரு நிலையில் பெண்ணின் கருப்பையில்... உயிர் உருவாகும் போது... அதனுள் புகுந்து வாழ்ந்து, உடல் அழியும்போது அதிலிருந்து வெளியேறி, மீண்டும் விண்ணில் அலைந்து திரிந்து.....மீண்டும் கருவில் நுழைந்து பிறந்து.............................

இப்படியாக, கருவில் நுழைந்து நுழைந்து ஆன்மா பல பிறவிகள் எடுப்பதாகச் சொல்கிறார்கள்.

கடவுளிடமிருந்து பிரிந்து அல்லது என்றென்றும் கடவுளைப் போல்
தோற்றமும் அழிவும் இல்லாத ஆன்மாக்களின் எண்ணிக்கை என்ன?

லட்ச லட்சமா? கோடிகோடியா? கணக்கில் அடங்காதவையா?

இவை விண்ணில் அலைவது பல்லாண்டு பல்லாண்டுகளா? அலையும் கால அளவு என்ன?

கருவில் நுழைகையில், நான் நீ என்று கடும் போட்டி நிலவுமே? முறை வைப்பா? முன்னுரிமையா? மிகக் கடுமையான போர் நிகழுமா!?

எப்படி நுழைகின்றன?

பெண்ணுறுப்பில் பாயும் கோடிக் கணக்கான உயிரணுக்களுடன் தானும் ஒன்றாக ஆன்மா நீந்திச் செல்லுமா?

ஒன்றுக்கும் மேற்பட்ட ஆன்மாக்களும் நீந்திச் செல்வதும் சாத்தியமா?

ஆற்றல் மிக்க , ஆணின் ஓர் உயிரணு பெண்ணின் கருமுட்டையில் பிரவே சிக்கும் போது, வெற்றி வீரனான ஓர் ஆன்மாவும் உள் நுழையுமா?

ஆன்மா ஓர் உடம்புக்குள் நுழைவது, விதிப்படியா, இல்லை, தன் இச்சைப்படியா?

தன் விருப்பப்படி என்றால், உடம்பு துன்பத்துக்கு உள்ளாகும் போதோ, அதன்மீது சலிப்பு ஏற்படும்போதோ அது வெளியேறிவிடலாமே? உடம்பு அழியும்வரை காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?

உடம்பை இயக்குவது முழுக்க முழுக்க மூளையின் வேலைதானே?

அவ்வாறாயின், ஆன்மாவுக்கு எந்தவொரு வேலையும் இல்லையா?

உடம்புக்கு நேரும் இன்ப துன்பங்களை அனுபவிப்பது மட்டுமே அதன் கடமையா?

ஆன்மாக்களுக்குள்ளேயும் பால் வேறுபாடு உண்டா?

ஓர் உடம்புக்குள் நுழைந்த பின்னரே அது நிர்ணயிக்கப் படுகிறதா?

பக்த கோடிகளே! ஆன்மிகவாதிகளே! இவ்வினாக்களை...இம்மாதிரி இன்னும் பல வினாக்களை எழுப்பி விடை காண நீங்கள் முயன்றது உண்டா?

இல்லைதானே?

அப்புறம் ஏன் யாரோ சிலர்..... ஆன்மா, ஆவி, பேய், பிசாசு என்று கட்டிவிட்ட கதைகளை நம்பி, அளவற்ற மூட நம்பிக்கைகளுக்குப் பலியாகி, மகிழ்ச்சியாக வாழ வேண்டிய கொஞ்ச நாட்களையும் வீணடிக்கிறீர்கள்?!

இனியேனும் சிந்திப்பீர்களா?

***************************************************************************************************************