திங்கள், 31 ஜூலை, 2023

’திருநீறு வைத்தவர்களுக்கு மட்டுமே இனி இந்துக் கோயில்களுக்குள் அனுமதி’?!?!


ழனி முருகன் கோயிலில் அகற்றப்பட்ட ‘இந்து அல்லாதவர் நுழையத் தடை’ என்ற பதாகையை மீண்டும் பழைய இடத்தில் வைக்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது[செய்தி].

இந்து அல்லாதவர்கள் இந்துமதம் சார்ந்த கோயில்களுக்குள் நுழையக் கூடாது என்று முன்பு தடை விதிக்கப்பட்டிருந்தது. அது குறித்த அறிவிப்புப் பலகையும் கோயிலின் வாயிலில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தப் பலகை பின்னர் அகற்றப்பட்டது[தி.மு.க. ஆட்சியில்?].

அது கண்டு மனம் கொதித்த ஆன்மிகச் செம்மல் ஒருவர், ‘இந்து அல்லாத சமயத்தவர் இந்துக் கோயில்களுக்குள் நுழைவதை இந்து அறநிலையத் துறை ஆலய நுழைவு விதி 1947 தடுப்பதாலும், மாற்று மதத்தவரும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் இந்துக் கோயில்களுக்குள் நுழைய வேண்டிய தேவை இல்லை என்பதாலும் மாற்றார் நுழையக் கூடாது என்பதான அறிவிப்புப் பலகையை மீண்டும் வைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, பதாகை அகற்றப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியதோடு, அதை மீண்டும் வைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார் என்பது அண்மைச் செய்தி. வழக்கையும் ஒத்தி வைத்திருக்கிறாராம்.

இந்து மதம் சார்ந்த ஒருவர் இப்படியொரு மனுவைத் தாக்கல் செய்திருப்பது வியப்பூட்டும் நிகழ்வாகும்.

இந்து அல்லாதவர் உள்ளே நுழைந்தால் சாமிகளுக்குத் தீட்டுப்பட்டுவிடாது.

அவர்களால் கற்களால் ஆன கோயில்களுக்கோ, சிலைகளுக்கோ சேதம் ஏற்பட்டுவிடாது.

இவை நிகழா என்பதோடு, பிறரை அனுமதிப்பதால் கணிசமான அளவில் நன்மைகள் விளையவும் வாய்ப்பு உள்ளது.

பிற மதத்தவன் இந்துவாக மதம் மாறுவதும், நாத்திகன் ஆத்திகனாக மாறுவதும் நிகழலாம்.

கோயிலுக்குச் சென்றால் மனதுக்கு அமைதி கிட்டும் என்கிறார்கள். மன நிம்மதி தேடி அலைபவர்கள் அனைவரையும் உள்ளே அனுமதித்தால் அது இந்து மதத்தவரின் பெருந்தன்மையை உலகறியச் செய்யும்.

ஆக, நுழைவுக்கு அனுமதி தருவதால், இந்து மதம் வளர்வதற்கு[கொஞ்சமேனும்] வாய்ப்புள்ளதே தவிர பாதிப்பு ஏதும் உண்டாக வாய்ப்பே இல்லை.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லையாம். அப்படிப்பட்ட ஒருவரை இவர்கள் எப்படி அடையாளப்படுத்துவார்கள்? கிறித்தவர்களும் பெரும்பாலும் அடையாளச் சின்னம் தரிப்பதில்லையே.

தடை இல்லாத காலக்கட்டத்தில், புத்த மதத்தவர், சமண மதத்தவர்கள் என்று எத்தனை பேர் கோயிலுக்குள் நுழைந்தார்கள் என்று கேள்வி எழுவதையும் தவிர்க்க இயலாது.

மதச் சின்னங்களுடன் பொது வெளியில் நடமாடுபவர்கள் இஸ்லாமியர் மட்டுமே[பஞ்சாபிகள் இங்கு அரிதாகவே தென்படுகிறார்கள்].

சுருங்கச் சொன்னால், இஸ்லாமியரைக் கருத்தில் கொண்டுதான் மனுதாரர் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார் எனலாம். ஆனால், இரு கரம் கூப்பி அழைத்தாலும் அவர்கள் இந்துக் கோயில்களுக்குள் நுழையமாட்டார்கள் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது..

எனவே,

மீண்டும் வைக்க இருக்கிற பலகையில், ‘நெற்றியில் திருநீறு வைத்தவர்களுக்கு மட்டுமே அனுமதி’ என்று எழுதிவிடுவது உத்தமம்.

ஒத்தி வைத்த விசாரணை முடிவுறும்போது, நீதிபதி அவர்கள் இந்தத் தீர்ப்புக்கு மாற்றாக நல்லதொரு தீர்ப்பை வழங்கினால் அது பெரிதும் வரவேற்கத்தக்கதாக அமையும்.

* * * * *

https://tamil.indianexpress.com/tamilnadu/court-says-keep-non-hindu-people-not-allowed-banner-again-in-palani-murugar-kovil-732410/


இது நடந்த கதை அல்ல! நடக்கக் கூடாததும் அல்ல!![100% பொழுதுபோக்கு]


“என் கணவர் ஆபீஸிலிருந்து வரும்போதே அலுத்துக் களைத்துப் போய் வருகிறார்..... எதைக் கண்டாலும் எரிச்சல் கொள்கிறார்..... இதற்கு என்ன செய்யலாம் என்று தயவு செய்து வழி சொல்லுங்க” என்று மனோதத்துவ நிபுணரிடம் கேட்டாள் அந்த இளம் பெண்.

நிபுணர் சிரித்தார்; சொன்னார்:

“நிறையப் பேர் செய்யுற தப்பை நீங்களும் செய்யுறீங்கன்னு நினைக்கிறேன். புருஷனுக்கு நாள் பூரா ஆபீஸில் டென்ஷனா இருக்கும். அதைக் குறைத்து அவரைக் குஷிப்படுத்த வேண்டும். அது மனைவியின் கடமை” என்று கூறி, சில வழிமுறைகளைச் சொல்லிக்கொடுத்து அனுப்பினார்.

மறு நாளே அதைக் கடைபிடிக்க முடிவு செய்தாள் அந்தப் பெண்.

றுநாள் மாலை.

கணவன் அலுவலகத்திலிருந்து வந்தான்.

முக மலர்ச்சியுடன் வரவேற்றாள் அவள்.

அவன் நாற்காலியில் உட்கார்ந்தான். அவள் எழுந்து சென்று கதவைத் தாளிட்டுவிட்டு வந்தாள்.

கணவனின் ஷூவைக் கழட்டினாள்; டையைத் தளர்த்தினாள். அவன் மடியில் ‘மெத்’தென்று உட்கார்ந்தாள்; ஆசையுடன் அவன் கன்னங்களை வருடினாள்.

இதழோடு இதழ் பதித்தாள்.

இன்னும் ஏதேதோ செய்து, ‘கடுகடு’ என்றிருந்த அவன் முகத்தில் கலகலப்பை வரவழைக்க முயன்றாள்.

தோல்வியே மிஞ்சியது.

“ஏன் இப்படி இருக்கீங்க? என் கொஞ்சல் குலாவலெல்லாம் உங்களுக்குக் கொஞ்சமும் பிடிக்கலையா?” என்று அழாக்குறையாகக் கேட்டாள் அவள்.

“நாசமாப் போச்சு. ஆபீஸில்தான் அந்த ஸ்டெனோ பாடாய்ப்  படுத்தறான்னா வீட்டுக்கு வந்தா  நீயும்...” என்று அலுத்துக்கொண்டான் கணவன்.

“ஐயோ...” என்று தலையில் அடித்துக்கொண்டு தரையில் சரிந்தாள் அந்த அப்பாவிப் பெண்!

                                       *   *   *   *   *
*** எவரோ எப்போதோ ஏதோவொரு இதழில் எழுதிய கதையின் கருவுக்கு இங்கே உயிர் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் வாழ்க!

ஞாயிறு, 30 ஜூலை, 2023

காம வெறிக் காட்டுமிராண்டி ஆண்கள்! கதறி அழும் கன்னியரும் சிறுமியரும்!!

லக அளவில் எண்ணிலடங்காத கன்னிப்பெண்களும் சிறுமியர்களும் பெண்சிசுக்களும் சித்ரவதை செய்து சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள்; பிறந்ததன் பயனை அனுபவிக்கவிடாமல், முளைவிடும்போதே வேரோடு பிடுங்கி அழிக்கப்பட்டிருக்கிறார்கள்.



இதற்கு ஏராள உதாரணங்கள் காட்டலாம்.


*பிறந்து 9 மாதங்களே ஆன ஒரு பச்சிளம் சிசுவை 24-66 வயதுக்கு இடைப்பட்ட ஆறுபேர் கற்பழித்துக் கொலை செய்திருக்கிறார்கள். இச்செய்தியை வெளியிட்டது, ஆப்பிரிக்காவின் ஓர் இணைய இதழாகும்


*2002ஆம் ஆண்டில், அதே நாட்டில் 8 மாதக் குழந்தையை நான்கு பேர் சேர்ந்து வன்புணர்ச்சி செய்து கொன்றிருக்கிறார்கள்.


*நைஜீரியாவில், இடைப்பட்ட வயதினரும்[70-85] இம்மாதிரிக் குற்றங்களைப் புரிந்திருக்கிறார்கள்.


*சீனாவில், இரண்டு ஆசிரியர்கள் 23 கன்னிகளுடன் வெறிப் புணர்ச்சி செய்ததோடு அவர்களை விபச்சாரத் தொழிலிலும் ஈடுபடுத்தியதால் நீதிமன்றம் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்தது.


*ஆறேழு மாதக் குழந்தையிலிருந்து பதினாறு பதினேழு வயது வரையிலான கன்னியருமே பெருமளவில் சீரழிக்கப்படுகிறார்கள்.


*சில ஆண்டுகளுக்கு முன்பு, சீனாவைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வரக் கிழவன், இழந்த வாலிபத்தைத் திரும்பப் பெறுவதற்காக, ஒரு ஜோதிடனின் ஆலோசனைப்படி, 100 கைபடாத கன்னியரைப் வன்புணர்ச்சி செய்து பரவசப்பட்டிருக்கிறான்.


மேலும் பல கன்னியரை வேட்டையாடிப் புணர்ந்து, இழந்த வாலிபத்தை மீட்டுவிடும் முயற்சியில் அவன் தொடர்ந்து ஈடுபட்டிருந்தபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான். நீதிமன்றம் அவனுக்குத் தூக்குத் தண்டனை விதித்தது.


எகிப்தைச் சேர்ந்தவன் ஹஜாத்காடி(33). குவைத்தில் தங்கியிருந்தபோது, அங்கு 10 வயதுக்குட்பட்ட 17 சிறுவர் மற்றும் சிறுமிகளை கடத்திக் கற்பழித்தான் என்று குற்றம்சாற்றப்பட்டது; மக்கள் முன்னிலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.


இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 336 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகத் தேசியக் குற்றப்பிரிவு மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டுவரை 48,338 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


2001ஆம் ஆண்டில் 2,113 ஆக இருந்த குழந்தைக் கற்பழிப்பு எண்ணிக்கை, 2011 ஆம் ஆண்டு 7,112 ஆக அதிகரித்துள்ளது.


2001 - 2011ஆம் ஆண்டுவரை குழந்தைக் கற்பழிப்புச் சம்பவங்களால் அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 9,465 வழக்குகளும், மகராஷ்டிராவில் 6,868 வழக்குகளும், உத்தரப் பிரதேசத்தில் 5,949 வழக்குகளும் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 


குழந்தைகளையும் பெண்களையும் தெய்வங்களாகப் போற்றி வாழ்ந்த நாடு இது என்கிறார்கள். இந்தப் ‘புண்ணிய பூமி’[???], ‘பாவ பூமி’யாக மாறி நெடுங்காலம் ஆகிவிட்டது.


கூகிளில் தேடினால், மனதை வாட்டிவதைக்கும் இம்மாதிரியான கொடூரச் சம்பவங்கள் பல்வேறு நாடுகளிலும் நடந்துவருவதை அறிய முடிகிறது. அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தபோதிலும் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றன.


ஏதுமறியாக் குழந்தைகளையும் பேதைப் பெண்களையும் கடவுள்[?!]தான் காப்பாற்ற வேண்டும்.

* * * * *

***இத்தகவல்கள், Yahoo, Google Search ஆகிய தேடுபொறிகள் மூலம் திரட்டியவை.



சனி, 29 ஜூலை, 2023

முத்துமாரி அம்மனும் முட்டாள் தமிழனும்!!!

‘முத்துமாரியம்மன்’ கல்யாணம் ஆகியும் ‘கன்னி கழியாத’ ஒரு பெண் சாமி. 

அதன் நான்கு கைகளில் திரிசூலம், மண்டை ஓடு, டமரு[சிறிய டிரம்] எல்லாம் இருக்கும். காளியம்மனாகச் சிங்க வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பதும் உண்டு.

இதைப் பலரும் கண்டு களித்திருக்கலாம்.

ஆனால், அவர் ‘புல்லட் பைக்கில் அமர்ந்து அருள்மழை பொழியும் கண்கொள்ளா அழகுக் காட்சியை எவரும் கண்டதில்லை.

நம் ‘தேனி’ மாவட்டத்துத் தமிழர்கள் அப்படியானதொரு கோலத்தில் முத்துமாரியம்மனைத் தரிசித்து இறும்பூது எய்தியிருக்கிறார்கள்.

அதி நவீன ‘புல்லட்’ வாகனத்தில் அவரை ஆரோகணிக்கச் செய்து, மலர் மாலைகள் சூட்டி, அவற்றில் ரூபாய் நோட்டுகளும் செருகி அலங்கரித்து, ஆராதித்து மெய்சிலிர்த்திருக்கிறார்கள் அவர்கள். 

இந்தக் கோலத்தில் முத்துமாரியம்மனத் தரிசிப்பவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்வார்கள் என்பது அந்தச் சகோதரர்களின் நம்பிக்கை.

முத்துமாரி அம்மனைச் சுப்ரமணியரின் தெய்வீக மனைவி என்று சொல்லி மனம் பூரிப்பதோடு, அந்த அன்னையைக் கன்னித் தெய்வமாகவும் வழிபடுகிறார்களாம் அவர்கள்[“மனைவியில் தெய்வீக மனைவி வேறா? மனைவி ஆன பிறகும் கன்னி கழியாயது ஏன்?” என்று எவரும் முணுமுணுக்க வேண்டாம்].


அம்மனைப் ‘புல்லட்’ வாகனத்தில் ஏற்றி அழகு பார்க்கும்  தேனி மாவட்டத்து அதிபுத்திசாலிகளிடம் நாம் வைக்கும் கோரிக்கை ஒன்று உண்டு.

அது.....

“அம்மனைப் பைக்கில் ஏற்றிய நீங்கள், அவரைச் செயற்கைக் கோள்களில் ஏற்றிச் சந்திரன்,  செவ்வாய் போன்ற கோள்களுக்கும் அனுப்பி வைத்திட வேண்டும். அப்படிச் செய்தால், இந்த மண்ணுலக மனிதர்களுக்கு மட்டுமல்ல, அங்கெல்லாம் வாழும் ஜீவராசிகளுக்கும் அவர் அருள்பாலிப்பார் என்பது உறுதி.

அம்மனை மட்டுமல்ல, உலகில் உள்ள அத்தனை அம்மா சாமிகளையும் அப்பாசாமிகளையும்கூட அங்கெல்லாம் அனுப்பிவைக்கலாம்.

“இங்கே சாமிகளே இல்லாத நிலை உருவாகுமே. நாத்திகர்கள் எண்ணிக்கை அதிகரிக்குமே” என்று கவலைப்படுதல் வேண்டாம். அண்டவெளியிலிருந்தே அத்தனைச் சாமிகளும் இங்குள்ளவர்களுக்கு அருள்பாலிப்பார்கள் என்று நம்புங்கள்.

நம் கோரிக்கையை நீங்கள் நிறைவேற்றினால்.....

ஒட்டுமொத்தத் தமிழினத்தின் பெருமை உலகெங்கும் பரவும் என்பது உறுதி!

                                       *   *   *   *   *

At THIS temple in Tamil Nadu, a touch of modernity places Goddess Muthumari on a bike (msn.com)

                                          

                                  


வெள்ளி, 28 ஜூலை, 2023

எதை எழுதினால் ‘எளிதில்’ புகழ் பெறலாம்?[எச்சரிக்கை: இது மீள்பதிவு!]

[மறைந்த{2017} எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி]

தை எழுதினாலும் வாசகரின் மனம் கவரும் வகையிலும் அவர்களுக்குப் பயன்படும் வகையிலும் எழுதினால் புகழ் பெறலாம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

‘எதையும்’ என்பதில் பாலுணர்வுக் கதைகளைச் சேர்க்க வேண்டாம்.

இவ்வகைக் கதைகளைத் தனிமையில் படித்து மனதுக்குள் சிலாகித்தாலும், பொது இடங்களில் பழித்துப் பேசுவதே நம்மவரில் மிகப் பெரும்பாலோர் வழக்கம். அது பற்றி இங்கு விவாதிப்பது தேவையற்றது.

விறுவிறு நடையில் மண் மணம் கமகமகமக்கும் அற்புதமான புனைகதைகளைப் படைத்தளித்த, கரிசல் காட்டு எழுத்தாளர்  கி. ராஜநாராயணன், கொஞ்சம் பாலுணர்வுக் கதைகளையும் எழுதியதற்காகக்[’தாய்’ என்னும் வார இதழில் வெளி வந்தன; நூல் வடிவமும் பெற்றது] கடும் கண்டனங்களுக்கு ஆளானது யாவரும் அறிந்ததே.

சிறந்த நாவல்களும் சிறுகதைகளும் ஆய்வுக் கட்டுரைகளும் வழங்கிய, எழுத்தாளரும் பேராசிரியருமான பெருமாள் முருகன், ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ தொகுத்ததற்காக எழுந்த எதிர்ப்பலையில் எதிர்நீச்சல் போட்டதையும் நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.

எனவே, எக்காரணத்தை முன்னிட்டும் ‘செக்ஸ்’ எழுதிப் புகழீட்டும் எண்ணம் வேண்டவே வேண்டாம்.

வேறு எதை எழுதுவதாம்?

குடும்பக் கதைகளும் மர்மக் கதைகளும் எழுத நம்மில் ஏராள எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஒரு சிலர் சரித்திரக் கதைகளும் படைக்கிறார்கள். அறிவியல் கதைகளுக்கும் நகைச்சுவைக் கதைகளுக்கும்தான் கடும் பஞ்சம் நிலவுகிறது.

அறிவியல் அறிவு உள்ளவர்களுக்குத் தமிழில் எழுதத் தெரிவதில்லை. எழுதத் தெரிந்தவர்களுக்குப் போதிய அறிவியல் அறிவு இல்லை. எனவே, தமிழில் அறிவியல் கதைகள் உதிப்பதற்கான தருணம் எப்போது மலருமோ தெரியாது[சுஜாதா, இத்துறையில் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை]

கல்கி, தேவன், துமிலன், சாவி போன்றோருக்குப் பிறகு, நகைச்சுவைக் கதைகளை எழுதிக் குவித்தவர் ‘அப்புசாமி-சீத்தாப்பாட்டி புகழ்’ பாக்கியம் ராமசாமி மட்டுமே.

வயது முதிர்ந்த நிலையிலும் எழுதிக் கொண்டிருந்தார்.

இவரையடுத்து.....

ஒரு வெற்றிடமே தென்படுகிறது.

நீங்கள் ஒரு எழுத்தாளராக இருந்தால், அந்த வெற்றிடத்தை நிரப்பலாமே? 

.000001 வெற்றிடத்தை நான் நிரப்பியிருக்கிறேன் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!!! ஹி... ஹி... ஹி!!!

வியாழன், 27 ஜூலை, 2023

‘கதைசொல்லி’கள் கையாளும் சில தந்திர உத்திகள்!


“கதை எழுதுதல் ஒரு கலை” என்பார்கள்.

ஒரே ‘தம்’மில் வாசகர் கதையைப் படித்து முடிக்க வேண்டுமென்றால், கதையில் புதிய புதிய ‘உத்தி’[techniques]களும் கலையம்சம் சார்ந்த சரளமான ‘நடை’[style]யும் கையாளப்பட்டிருத்தல் வேண்டும்.

‘அழகான அந்தப் பெண்ணை அவன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்’ என்று எழுதுவது, ஒரு நிகழ்வை உள்ளது உள்ளபடியே எடுத்துரைப்பதாகும். அதில் வாசகரை ஈர்க்கும் அம்சம் ஏதும் இல்லை.

அதையே கொஞ்சம் மெருகூட்டி, ‘அந்த அழகுத் தேவதையை அவன் கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தான்’ என்றோ, ‘பார்வையால் மேய்ந்து கொண்டிருந்தான்’ என்றோ எழுதினால் அது தொடர்ந்து வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைகிறது.

‘எனக்குச் சதைப் பற்றில்லாத ஒட்டி உலர்ந்த உடம்பு’ என்று எழுதும்போது, அது உடம்பு பற்றிய வெறும் விவரிப்பு மட்டுமே.

அதையே, ‘நான் வீதிக்கு வந்தால் வானத்தில் கழுகுகள் வட்டமிடத் தொடங்கிவிடும்’ என்று எழுதினால், அது வாசகரைப் புன்சிரிக்க வைக்கிறது.

நடை மட்டுமல்லாமல்.....

‘அப்பாவித் தனமானது உன் அழகு முகம். உன் விழிகளில்தான் எத்தனைக் குளிர்ச்சி! அடடா மருட்சி!! உனக்கு நீண்ட கூந்தல்; மணக்கும் சந்தன மேனி; காதோரத்தில் பூனை முடி; கழுத்தோரம் செம்பட்டைக் கேசம்.........!’

இது போன்ற குட்டிக் குட்டி வருணைகளும் ஒரு சிறுகதையைச் சிறந்த படைப்பாக்குகின்றன.

தொய்வில்லாமல் ஒரு கதையைக் கொண்டு செல்ல இவை மட்டும் போதா. புதிய புதிய ‘உத்தி’களைக் கையாளும் திறனும் ஒரு கதாசிரியனுக்குத் தேவை.

நீங்கள் பலவீனமான மனசுக்காரரா? இந்தக் கதையைப் படிக்காதீர்கள்!’

‘கவிதாவின் கதை எப்படி முடியுமோ தெரியாது. சுபமாகவே தொடங்குவோம்’

இவ்வாறெல்லாம், வாசகரைப் படிக்கத் தூண்டும் வகையில், கதையைத் தொடங்குவது நம் எழுத்தாளர்களுக்குக் கைவந்த கலை.

கதையை முடிக்கும் போதும் இத்தகைய உத்திகளைக் கையாள்வது அவர்களின் வழக்கம்தான்.

உதாரணத்திற்கு ஒன்று மட்டும்.....

இளம் மனைவியுடன் தனிமையில் நடந்து செல்கிறான் ஓர் இளைஞன்.

எதிர்ப்பட்ட சில ரவுடிகள் அவனை அடித்து வீழ்த்துகிறார்கள்.

சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த வாலிபன், அவர்கள் தன் மனைவியைக் கற்பழிக்கும் முயற்சியில் முனைப்புடன் இருப்பதைக் காண்கிறான். எழுந்து நிற்க முடியாத,  கயவர்களுடன் போராட முடியாத நிலையில் தன்னுடையவளை மானபங்கத்துள்ளாகாமல் தடுப்பது எப்படி என்று துடிப்புடன் யோசிக்கிறான்.

அருகில் கிடந்த, கைக்கு அடக்கமான ஒரு கல்லை எடுத்துக் குறி பார்த்துத் தன் முழு பலத்தையும் பயன்படுத்தி வீசுகிறான்.

அவன் குறி தப்பவில்லை.

அவன் எதிர்பார்த்தது போலவே, அது அவன் மனைவியின் நெற்றிப் பொட்டைத் தாக்க, அவள் சுருண்டு விழுந்து செத்துப் போகிறாள்.

வாலிபன், வாசகரைப் பார்த்து இப்படிக் கேட்பதாகக் கதை முடிகிறது.....

“என்னவள் மானபங்கப்படுத்தப் படுவதைத் தடுக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை. என்னுடைய இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?”

அடடா! எத்தனை அருமையான உத்தியைக் கதாசிரியர் கையாண்டிருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறதுதானே?!

அவரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர் பெயரும் நினைவில் இல்லை.

இவ்வாறெல்லாம் கதையின் வடிவத்தில் கருத்துச் செலுத்துகிற கதாசிரியன், தான் கதை படைப்பதன் நோக்கம் என்ன என்பதிலும் தெளிந்த அறிவுடையவனாக இருத்தல் அவசியம்.

வாசகரைச் சிரிக்க வைப்பதா? சிந்திக்கச் செய்வதா? இன்புறுத்துவதா? துன்புறுத்துவதா? அனுதாபப்பட வைப்பதா? ஆர்ப்பரித்துப் பொங்கி எழச் செய்வதா? இவை எதுவுமே இல்லை என்றால், வெறும் பொழுது போக்கிற்காகவா?

எதற்காக எழுதுகிறோம் என்பதை எழுத்தாளன் நன்கு சிந்தித்துத் திட்டமிடுதல் இன்றியமையாத் தேவை.

திட்டமிடல் இல்லையெனின், அவன் உருவாக்கும் படைப்பு ஒரு ’வெற்று’ப் படைப்பாக[எதற்கும் பயனற்றதாக] அமைந்துவிடும்.

                    *   *   *   *   *
***ஒரு கலைக்கல்லூரியின் இலக்கிய மன்றச் சொற்பொழிவின் ஒரு பகுதி இது.

பொழிந்தவர்? நான்தான்[ஓய்வுக்கு முன்பு]! ஹி... ஹி... ஹி!!! 

புதன், 26 ஜூலை, 2023

உளறிக்கொட்டி மாட்டிக்கொண்ட கேரள சபாநாயகருக்கு ஒரு சீரிய பரிந்துரை!!!

கேரளாவின் சட்டப் பேரவைச் சபை நாயகர் ‘ஏஎன் ஷம்சீர்’ அவர்களுக்கு ஒரு கெட்ட நேரமோ என்னவோ, இந்துக்களின் மிகு பிரியத்திற்குரியவரும், பிரபலக் கடவுளும் ஆன ‘விநாயகப் பெருமான்’ பற்றிச் சர்ச்சைக்குரிய வகையில் பேசித் தொலைத்து, ‘பாஜக’விடமும் அதன் அல்லக்கைகளான ‘விஷ்வஹிந்து பரிசத்’, ‘இந்து ஐக்கிய வேதி’ ஆகிய கட்சிக்காரர்களிடமும் வசமாகச் சிக்கிகொண்டுள்ளார்.


“விநாயகப் பெருமான் ஒரு கட்டுக் கதை” என்பதுதான் ஷம்சீரின் சர்ச்சைக்குரிய பேச்சு.

‘ஷம்சீர்’[A. N. Shamseer was born to Shri Usman Komath and Smt. A. N. Sareena] அவர்களுக்கு எதிராக ‘பாஜக’  உடனடி நடவடிக்கை எடுக்கும்படிக் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.

சபாநாயகரைப் பதவி நீக்கம் செய்தல் வேண்டும் என்று ‘விஷ்வ ஹிந்து பரிஷத்’ குடியரசுத் தலைவருக்கும் மாநில ஆளுநருக்கும் மனு அனுப்பவுள்ளது.

‘இந்து ஐக்கிய வேதி’[இப்படியொரு கட்சி இருக்கிறதா?] போன்ற இந்து அமைப்புகள் சபைத் தலைவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

எதிர்பாராத இந்தச் சிக்கலிலிருந்து விடுபட ஷம்சீருக்கு வழியே இல்லை என்று தோன்றுகிறது.

மன்னிப்புக் கேட்பது அல்லது பதவியை ராஜினாமா செய்வது என்றிவை தவிர வேறு வழியே இல்லாத நிலையில்.....

சாமானியனான அடியேனின் சிற்றறிவுக்குள் உதித்த ஒரு வழியைச் சபாநாயகருக்குப் பரிந்துரைத்திட விரும்புகிறேன். இதைவிடவும் ஆகச் சிறந்த வழி வேறு எதுவுமில்லை என்பது உறுதி.

பரிந்துரை:

“விநாயகப் பெருமான் மட்டுமல்ல, அல்லா, கர்த்தர் என்று மக்களால் வழிபடப்படுகிற அத்தனைக் கடவுள்களுமே கற்பனைதான் என்று சொல்ல நினைத்திருந்தேன். விநாயகர் ஒரு கட்டுக்கதை என்று தொடங்கி எஞ்சிய கருத்துகளையும் சொல்லி முடிப்பதற்குள் கூடியிருந்த இந்து அபிமானிகள் இடைவிடாது எழுப்பிய கூச்சலில் அது இயலாமல்போனது” என்று அவசர அறிக்கை ஒன்றைச் சபாநாயகர் வெளியிடுவாரேயானால்.....

”கற்பனைக் கதையில் அல்லாவையும் சேர்த்துட்டார்தானே” என்று சமாதானம் ஆகி, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரும் அத்தனைக் கட்சிகளும் ‘கப்சிப்’ ஆகிவிடும் என்று உறுதிபடச் சொல்லலாம்.

என் பரிந்துரைக்கு ஏஎன் சம்சீர் அவர்கள் செவிமடுப்பார் என்பது அடியேனின் அசைக்க இயலாத நம்பிக்கை!

                                   *   *   *   *   *

Kerala Speaker A N Shamseer in trouble for ridiculing Lord Ganesha and Hindu faith (msn.com)

'அஞ்சு’ என்னும் பெயரில் ஒரு ‘நஞ்சு’ மனத்தவள்; அடங்காத காமவெறியள்!!!

த்தரப்பிரதேசத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த அவள் பெயர் மஞ்சு; அழகான பெயர். ஆனால், அவள் உடம்பெங்கும் நஞ்சு.

அடங்காத காம வெறி கொண்ட ஒரு பெண் மிருகம் அவள்.

அந்த வெறிதான், திருமணமாகி 15 வயதில் மகளும் 6 வயதில் ஒரு மகனும் இருக்க, முகநூல் வழி அறிமுகமான ஒரு பாகிஸ்தான் தறுதலையை[நஸ்ருல்லா]க் காதலிக்கத் தூண்டியது.

காதல் என்பதே பொய். அது உண்மை என்றாலும், ஆணுக்கோ பெண்ணுக்கோ ஒரு முறைதான் அது அரும்பும் என்பார்கள்.

எனவே.....

இவள் அவனைக் காதலித்தாள் என்பது பொய். ஒருவருக்கொருவர் இணையவழி, காட்டக்கூடாததையெல்லாம் காட்டி காம வெறியை வளர்த்துக்கொண்டார்கள் என்பதே உண்மை.

அவனுடையதைக் காட்டிலும் இவளுடைய காமம் கட்டுக்கடங்காததாக இருந்திருக்கிறது.

அது கட்டுடைந்த நிலையில், அன்பான கணவனையும், தாய்ப் பாசத்துக்கு ஏங்கும் பிள்ளைகளையும் துறந்து(கணவனைப் பிடிக்கவில்லை என்றால் குழந்தை பெறுவதற்கு முன்பே அவனை விவாகரத்துச் செய்திருக்கலாம்) பாகிஸ்தானில் அவனிருக்கும் கிராமத்துக்கு ஓட வைத்திருக்கிறது.

காமம் வலிமையானதுதான். அது எத்தனை இழிவானது என்பதையும் இவளின் செய்கை உலகறியச் செய்திருக்கிறது.

இந்துவான இவள் இஸ்லாம் மதத்துக்கு மாறி, பாத்திமாவாக ஆகி அவனைத் திருமணம் செய்துகொண்டு, அவனுடன் கைபர் பக்துவா மாகாணம் அப்பர் டிர் மாவட்டம் குல்ஷொ கிராமத்தில் வசிக்கிறாளாம்[இனியும், முகநூல் மூலம் ஒரு கிறித்தவனுடன் பழக்கம் ஏற்பட்டால், அவனிருக்கும் நாட்டிற்கு ஓடிப்போய், கிறித்துவச்சியாக மதம் மாறி அவனை மணக்கமாட்டாள் என்பது என்ன நிச்சயம்?]

கள்ளக் காமுகர்களுக்குத் திருமணம் ஒரு கேடா?

அவனுக்கு வயது 29. இவளுக்கு 34. 

ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள் என்பார்கள். அவனுக்கும் இவளுக்குமான அந்தரங்க உறவு ஆறு மாதம் நீடிக்குமா?

அப்புறம், அவன் இவளை அடித்து விரட்டினால், முன்னாள் கணவனைத் தேடி இந்தியா வருவாளோ?

வந்தால்.....

முதல் கணவனான அரவிந்த்[ராஜஸ்தான்] இவளை ஏற்பானோ அல்லவோ, இந்த நாடு இவளை ஏற்கக்கூடாது.

இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பதுதான் இந்த மாதிரியான ‘அடங்காப்பிடாரி’களுக்கு வழங்குதற்குரிய சரியான தண்டனை ஆகும்.

                                     *   *  *   *   *

கூடுதல் தகவல்களுக்கு:

https://www.dailythanthi.com/News/World/married-indian-woman-anju-becomes-fatima-weds-her-pak-facebook-friend-after-converting-to-islam-1015786

செவ்வாய், 25 ஜூலை, 2023

அர்த்த ராத்திரியில் அலற வைக்கும் ‘அமுக்குவான்’ பேய்!!!

ழ்ந்த உறக்கத்தின்போது, குறிப்பாக மல்லாந்த நிலையில் துயில்கொள்ளும்போது ஏதோ ஒன்று நம்மைக் கொஞ்சமும் அசையவிடாமல் அமுக்கிகொள்வதும், “ஆய்...ஊய்” என்று சில வினாடிகள் அலறித் துடித்த பிறகே அதன் பிடியிலிருந்து விடுபடுவதுமான வெறுக்கத்தக்க அனுபவத்தைப் பெறாதவர் இல்லை என்றே சொல்லலாம்.


நம்மை அமுக்குவது ‘அமுக்குவான் பேய்’ என்பார்கள்.

உண்மையில், பேய்தான் நம்மை அமுக்குகிறது என்றால், அதற்குக் காரணங்கள் இருந்தாக வேண்டும்.

ஒன்று, உயிர் வாழ்ந்தபோது எதிரியாக இருந்த ஒருவர் மரணம் அடைந்து பேயான பிறகு, நம்மைக் கொன்று பழிவாங்குவதற்காக[உயிரோடு இருந்தபோது அதைச் செய்ய முடியவில்லை] இருக்கலாம். அவ்வாறு இருந்தால் சில வினாடிகளில் அது நம்மவிட்டு விலகிட வாய்ப்பே இல்லை.

உயிரோடு இருந்தபோது நம்மைக் காதலித்து[உயிருக்குயிராய்] அது நிறைவேறாததால், செத்த பிறகு பேயாய் நம்மை ஆலிங்கனம் செய்து ஆசையைத் தணிப்பதற்காக இருக்கலாம். இருந்தால்.....

பெண்களை ஆண் பேய்களும், ஆண்களைப் பெண் பேய்[மோகினி]களும் இறுக்கி அணைத்தல் வேண்டும்[ஹி... ஹி... ஹி!!!]

அணைப்பில் வேறுபாடு தெரியாதது மட்டுமல்லாமல், அணைப்பு[அமுக்குதல்] சில நொடிகளில் முடிந்துபோவதால் அதுவும் சாத்தியமில்லை.

ஆக, நாம் அறிந்த இந்தக் காரணங்களாலேயே, நம்மை அமுக்குவது பேய் அல்ல என்பதை அறிந்திட இயலுகிறது.

இன்றைய அறிவியலும் இதை உறுதிப்படுத்துகிறது.

நாம் உறங்கும் அறையில் உயிர்க்காற்று[ஆக்சிஜன்] குறைவாக இருந்தால், உடல் தசைகளில் ரத்த அழுத்தம் குறைந்துபோகும்.

ரத்த அழுத்தம் குறைவதால் தசைகள் தளர்வடையும்..

அந்நிலையில், ஏதோ சில காரணங்களால், உடல் இயக்கத்திற்கு மூளை கட்டளை பிறப்பிக்கும்போது அது இயங்குவதற்குக் கால தாமதம் ஆகிறது.

“ஆ...ஊ...” என்று அலறும்போது, தசைகள் போதிய ஆக்சிஜனைப் பெற்றுவிடுவதால், சில நொடிகளில் சுயநினைவைப் பெறுகிறோம்.

ஆக, அமுக்குவான் பேய் நம்மை அரவணைப்பது தவிர்க்கப்பட  வேண்டுமாயின், உறங்கும் அறை நல்ல காற்றோட்டம் உள்ளதாக இருப்பது மிக அவசியம்.

அதீத மன உளைச்சல், கவலை போன்றவற்றிற்கு இடம் தருவதால், தசைகளில் உயிர்க்காற்று குறைவதற்கு வாய்ப்புள்ளது என்பதையும் நினனவில் பதித்தல் அவசியம்.

                                      *   *   *   *   *

***ஏற்கனவே வாசித்தறிந்த அறிவியல் காரணத்தை நினைவுகூர்ந்து எழுதிய பதிவு இது.

திங்கள், 24 ஜூலை, 2023

“விழாக்களில் குழு மோதலா? இழுத்து மூடு கோயிலை”... நீதியரசரின் ‘மரண அடி’த் தீர்ப்பு!!!

//மயிலாடுதுறை ‘அருள்மிகு ஸ்ரீ ருத்ர மகா காளியம்மன்’ கோயில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினரிடையே தகராறு[கோயிலுக்குள் விநாயகர் சிலை வைப்பதில் பிரச்சினை] ஏற்பட்டது.


வட்டாட்சியர் தலைமையில் அமைதிக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் இரு பிரிவினரும் கலந்துகொண்டனர். ஆனால் சமரசம் ஏற்படவில்லை.

கலவரம் மூளும் சூழல் ஏற்பட்ட நிலையில், இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்குப் பின்னர், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கீழ்க்காணும் தீர்ப்பை வழங்கினார்.

"கோயில் திருவிழாக்கள் பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதற்கு மாறாக வன்முறைகளை உருவாக்குகின்றன. இவை, பக்தியை வளர்ப்பதற்குப் பதிலாக, குழுக்கள் தங்களின் வலிமையை வெளிப்படுத்துவதற்கான காரணிகளாக மாறிவிட்டன. குழுவினரின் தகராறைத் தீர்ப்பதில் வருவாய்த் துறையும் காவல் துறையும் தேவையில்லாமல் தங்கள் சக்தியை வீணடிக்கின்றன. எனவே, கோயில்களை மூடிவைப்பதே நல்லது.”// -The Times of India

                                    *   *   *   *   *

இதே மாதிரியான பிரச்சினை, விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயிலில்[ஜூன், 2023] உருவானது.

இக்கோயிலில் நடைபெற்ற திருவிழாவின்போது, பட்டியலின இளைஞர்கள் கோயிலுக்குள் நுழைய முயற்சி செய்தார்கள்.

அவர்களை மற்றொரு சமூகத்தினர் தடுத்தார்கள்.

பட்டியலினத்தவர் சாலை மறியலில் ஈடுபட, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மாதம் போல் கழிந்த நிலையிலும் பிரச்சினை தீரவில்லை{விழுப்புரம் கோட்டாட்சித் தலைவர் தலைமையில் 5 முறை சமரசக் கூட்டம் நடத்தியும் சுமுகத்தீர்வு ஏற்படவில்லை[தினகரன்,08.06.2023]}.

இந்நிகழ்வைச் சுட்டிக்காட்டி, போட்டிக் குழுக்களால் கோயில்களில் கலவரங்கள் ஏற்படாதிருக்க, அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்துக் கிழ்க்காணும் வகையில் நிரந்தரத் தீர்வு ஒன்றினை நான் பரிந்துரை செய்திருந்தேன்.

அந்தப் பரிந்துரை ஏற்புடையதே என்பதை மேற்கண்ட, நீதிபதியின் தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.

பதிவின் முகவரி: https://kadavulinkadavul.blogspot.com/2023/06/blog-post_11.html

பரிந்துரை:

//காலக்கெடு வைத்துக் காத்திருந்து, இரு தரப்பாரும் மனம் மாறவில்லை, என்றால்திரவுபதி அம்மனுக்கான அந்தக் கோயிலைக் கல்விக் கடவுளான கலைமகள் உறைகிற கல்விக்கூடமாக மாற்றுவதே ஊர் மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும் செயலாகும்.

இம்முடிவு குறித்து, அரசு சிந்தித்து விரைவில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என்பது நம் விருப்பம்.

அரசு எடுக்கும் இந்த நடவடிக்கை, கோயில்களைக் கலவரக் கூடங்களாக்கும் அனைத்து ஊர் மக்களுக்கும் ஒரு பாடமாக அமையும் என்பது உறுதி//

சனி, 22 ஜூலை, 2023

புரிந்த கேள்விகள்! புரியாத பதில்கள்!!


“அண்டவெளியும் அதிலுள்ள பொருள்களும் உயிர்களும் பிறவும்[?] தோன்றியது எப்படி?” -இது கேள்வி.

“அனைத்தும் கடவுளால் தோற்றுவிக்கப்பட்டவை” என்பது கடவுள் நம்பிக்கையாளர்கள் தரும் ஒரு பதில்.

“தோற்றுவித்தவர் கடவுள் என்றால், அவரைத் தோற்றுவித்தவர் யார்?” -இது இரண்டாவது கேள்வி.

“அவரை எவரும் தோற்றுவிக்கவில்லை.” -இது 2ஆவது கேள்விக்கான பதில்.

“தோற்றுவிக்கப்படாமல் எந்த ஒன்றும் ‘இருப்பது’ சாத்தியமில்லை. கடவுளின் ‘இருப்பு’ மட்டும் எப்படிச் சாத்தியமாயிற்று?” -இது மூன்றாவது கேள்வி.

“அவர் இருந்துகொண்டே இருப்பவர்.” -இது மூன்றாவதற்கான பதில்.

“இது மட்டும் எப்படிச் சாத்தியமாயிற்று?” -4ஆவது கேள்வி.

“....................” -பதில் தெரிந்தவர் இல்லை.

பதில் தெரியாத கேள்விகளுக்கு, “தெரியவில்லை” என்று சொல்வது உயர் பண்பு; நேர்மைக் குணம்.

பதில் தெரியாத கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்டுக் கேட்டு, பதில் அறியும் முயற்சியை மேற்கொண்டால், விடைகள் கிடைப்பது சாத்தியம் இல்லாமல்போயினும் மனிதருக்கான சிந்திக்கும் அறிவு வளரும் என்பது உறுதி.

கற்பனைக் கதைகளைச் சொல்லிச் சொல்லி மக்களிடையே கடவுள் நம்பிக்கையையும் மூடநம்பிக்கைகளையும் திணிக்கும் ஆன்மிகர்களும் அவதாரங்களும் இதைப் புரிந்துகொள்வது நல்லது.

அது நம் மக்களுக்கு மட்டுமல்ல, மற்ற உயிரினங்களுக்கும் நன்மை பயப்பதாக அமையும் என்பது உறுதி.

                              *   *   *   *   *
***பதிவுகளுக்குள்[ஆங்காங்கே] இடம்பெற்ற, ‘கடவுள்’ குறித்த கருத்துகள், அவற்றின் முக்கியத்துவம் கருதி இங்கே தொகுத்துப் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

வெள்ளி, 21 ஜூலை, 2023

வாழ்க ‘மெய்தி’[மணிப்பூர்] இனப் பெண்கள்! வெல்க பெண்ணினம்!!

ங்கள் இனப் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட கொடூர வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்து, அம்மாநிலத்தின் சூர்சந்த்பூர் வீதிகளில் நூற்றுக்கணக்கான பழங்குடியினர் கண்டனப் பேரணி நடத்தியிருக்கிறார்கள்[https://www.hindutamil.in/news/].

பழங்குடிப் பெண்கள்[ஆண்கள் உட்பட] தங்கள் இனத்துப் பெண்களின் மானத்தையும் கவுரவத்தையும் கட்டிக்காத்திட, ஒன்றுதிரண்டு போராடிய செயல் பாராட்டுக்குறியது.

"குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டனை கிடைக்கும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன்” என்ற மணிப்பூர் முதல்வரின் மனப்பூர்வமான அறிவிப்பு பெரிதும் வரவேற்கத்தது.

இவற்றைவிடவும்,

“ஹேராதாசின்[32 வயது] செயல் ஒட்டுமொத்த மெய்தி இன மக்களுக்கே அவமானத்தைத் தேடித் தந்துள்ளது” என்று சாடியதோடு, மெய்தி இனத்தவனான அவனின் வீட்டை, அவனின் இனத்தைச் சார்ந்த ‘மெய்தி’ இனப் பெண்களே அடித்து நொறுக்கித் தீயிட்டுக் கொளுத்தியிருப்பது[https://www.dailythanthi.com/] கட்டுக்கடங்காத பெரும் வேதனைக்கிடையே ஆறுதல் அளிக்கும் செயலாகும்.

ஜாதி மத இனக் கலவரங்களின்போதெல்லாம் பெண்கள் குறிவைத்துத் தாக்கப்படுவது, வன்புணர்வு செய்து கொல்லப்படுவது போன்ற கொடூரக் குற்றங்கள் அவ்வப்போது நிகழ்தன; நிகழ்ந்துகொண்டுள்ளன.

இதையே வேறொரு கோணத்தில் சிந்தித்தால், ஒட்டுமொத்த[பெரும்பாலான?] ஆண்களும் ஒட்டுமொத்தப் பெண் இனத்தைப் போகப் பொருளாகக் கருதும் வக்கிரக் குணம் கொண்டவர்களே என்பது புரியும்.

காலங்காலமாய்த் தங்களுக்கு நேரும் இந்த அவலத்தைக் களைந்தெறியப் பெண்ணினம் இணைந்து போராடுவது அவசியமாகும்.

பெண்கள் இதை உணரத் தொடங்கிவிட்டார்கள் என்பதை, மெய்தி இனப் பெண்களே மெய்தி இனத்தைச் சேர்ந்த கயவனின் வீட்டை அடித்து நொறுக்கித் தீ வைத்த நிகழ்வு உறுதிப்படுத்துகிறது.

மெய்தி இனப் பெண்களின் உயர் குணத்தைப் போற்றுவது பெண்ணினத்தின் நலனில் அக்கறை கொண்ட அனைவரின் கடமையாகும்.

* * * * *

https://www.hindutamil.in/news/india/1059513-manipur-violence-tribal-protest-rally-against-humiliation-of-women-1.html

https://www.dailythanthi.com/News/India/manipur-brutality-meithi-women-who-smashed-the-house-of-the-criminal-1012651?infinitescroll=1


                                        *   *   *   *   *

***//தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரும், பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு மணிப்பூர் வீடியோ விவகாரம் குறித்துக் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: “மணிப்பூர் விவகாரம் கடும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தச் சம்பவம் குறித்துத் தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா இதுகுறித்து ‘ட்வீட்’ செய்துள்ளார்.

மனிதாபிமானமுள்ள மக்களாகிய நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும். நாம் அனைவரும் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கூட்டாக எதிர்த்துப் போராட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.” // https://news7tamil.live/we-should-bow-our-heads-in-shame-khushbu-condemns-the-manipur-video-issue.html