எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

சனி, 20 செப்டம்பர், 2025

புரியாத இயற்கையும் புரியவே புரியாத பாவப்புண்ணியமும் கடவுளும்!

டந்து செல்லும்போது கல் இடித்து விரலில் காயம் ஏற்பட்டாலோ, தடுக்கி விழுந்தாலோ, இவை கவனக்குறைவால் அல்லது செய்த தவறுகளால் நிகழ்ந்தன என்று நம்பும் மனிதர்கள், தாங்கள் செய்த பாவப்புண்ணியங்களையோ, விதியையோ கடவுளையோ இவற்றிற்குக் காரணம் ஆக்குவதில்லை.

ஆனால், செய்யும் தொழிலில் பெரும் சரிவு ஏற்படுவது, விபத்தில் சிக்கி உயிரிழப்பது, தீராத நோய்க்கு ஆளாவது போன்றவற்றிற்குத் தாங்கள் மட்டுமல்லாமல் பிறரும், எதிர்பாராத நிகழ்வுகளும், சூழல்நிலைகளும், வேறு காரணிகளும் காரணங்களாக அமைகின்றன என்பதை ஏற்கும் மனப்பக்குவம், அல்லது சிந்திக்கும் திறன் இல்லாத நிலையில், பாவப்புண்ணியங்களையும், விதியையும் காரணங்கள் ஆக்கியதோடு, கடவுள் என்றொருவரையும் கற்பித்தார்கள்.

இயற்கை[வெளியில் இயங்கிக்கொண்டிருக்கிற கோள்கள், நட்சத்திரங்கள், உயிர்கள் போன்றவற்றை உள்ளடக்கியது]யின் தோற்றத்திற்கான நோக்கத்தை இந்நாள்வரை மனித அறிவால் புரிந்துகொள்ள இயலவில்லை.

அது புரிந்திருந்தால், அதற்கேற்ப வாழும் முறைகளை வகுத்துக்கொள்வது சாத்தியமாகியிருக்கும். 

தோற்றத்திற்கான நோக்கமோ,  காரணமோ, வேறு கருமாந்தரமோ இவற்றில் எதையுமே புரிந்துகொள்ள இயலாத நிலையில்தான் ஆறறிவு படைத்த மனிதர்கள் இருக்கிறார்கள். 

இந்த ஆறறிவைப் பயன்படுத்தி ஓரளவுக்கு வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடிந்ததே தவிர, இயற்கையைப் புரிந்துகொள்வது .000001%[இயன்றவரை சுழிகள் சேர்க்கலாம்]கூடச் சாத்தியப்படவில்லை.

புரியாததைப் புரிந்துகொள்ளத் தொடர்ந்து முயற்சி செய்வதைத்  தவிர்த்து, எதை எதையோ அனுமானித்ததன் & கற்பனை செய்ததன் விளைவுதான் பாவப்புண்ணியம், பிறவிகள், விதி, கடவுள் எல்லாம். 

இதன் விளைவு.....

கணக்கிலடங்காத மூடநம்பிக்கைகளைச் சுமந்து வாழும் அவலநிலை உருவாகிவிட்டது.

மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு, மனிதாபிமானம் போற்றி, மனிதர்கள் ஒற்றுமையுடன் அமைதியாக வாழ்வதற்கான வழி.....

வாய்த்திருக்கும் ஆறறிவை உரிய முறைகளில் பயன்படுத்துவது மட்டுமே; ஆன்மிகம் வளர்ப்பது அல்ல.

ஆழ்ந்து சிந்தித்தால்தான் இந்த உண்மை புரியும்.

                                         *   *   *   *   *

வேண்டுகோள்:

பதிவில் போதிய தெளிவில்லை என்றால் மனம்போனபடி ஏசாதீர்; பொறுத்தருள்வீர்!