வியாழன், 31 மே, 2018

ஜோதிடலோகம்![பொழுதுபோக்குக் கதை]

சொர்க்கத்தை மேற்பார்வையிட்டுத் திரும்பிய இறைவி, இறைவன் வெற்று வானத்தை வெறித்து பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டு, “பிரச்சினை எதுவானாலும் தியானம் பண்ணினா தீர்வு கிடைக்கும்னு சொல்லியிருக்கேன். ஏதோ பிரச்சினையில் சிக்கியிருக்கீங்கன்னு உங்க முகமே சொல்லுது. மோனத்தவத்தில் மூழ்காம பிது பிதுன்னு முழிச்சிட்டிருக்கிங்களே, ஏன்?'' என்று கேட்டார்.

“அதுக்குத்தான் உட்கார்ந்தேன். மனசை ஒருமுகப்படுத்த முடியல” என்றார் இறைவன், வருத்தம் தோய்ந்த குரலில்.

“ஏனாம்?”

“பகுத்தறிவாளன்கிற பேர்ல, கண்ட கண்ட கசமாலங்கள் எல்லாம் 'கடவுள் எப்போ பிறந்தார்? எப்போ மறைவார்? எப்பவும் இருந்துகொண்டே இருப்பார்னா அது எப்படிச் சாத்தியம்?'னு அடுக்கடுக்கான கேள்விகளால கிடுக்கிப்பிடி போட்டுட்டே இருக்கானுக. நம்ம அவதாரம்னு சொல்லிட்டுத் திரியற ஆட்களால அவங்களைச் சமாளிக்க முடியல. யோசிச்சிப் பார்த்தா எனக்குமே பதில் தெரியல. இனி என்ன செய்யறதுன்னும் புரியல.”

“கவலையை விடுங்க. பூலோகத்திலிருந்து ஒரு ஜோதிடரை வரவழைச்சி, 'கோடிகோடி கோடானுகோடி பிரபஞ்ச ஆண்டுகளுக்கு முன்னால, இன்ன நட்சத்திரத்தில் கடவுள் தோன்றினார்; யுகயுகயுகாதி ஆண்டுகளுக்கு அப்புறம், இன்ன நட்சத்திரத்தில் மறைவார்; மறுபடியும் தோன்றுவார்...மறைவார்...தோன்றுவார்..மறைவார்..... இப்படியாகத்தானே, இடைவெளி விட்டுத் தோன்றுவதும் மறைவதுமாக எப்போதும் இருந்துகொண்டே இருப்பார்' அப்படீன்னு பூலோகத்திலுள்ள எல்லா ஊடகங்களுக்கும் அறிக்கை தரச் சொல்லிடறேன். யோசிச்சி யோசிச்சி மண்டை காய்ந்து நாத்திகர்கள் 'மெண்டல்' ஆயிடுவாங்க. அப்புறம் எவனும் கேள்வி கேட்க மாட்டான்” என்றார் இறைவி.

“ஜோதிடர்கள் விடுற அறிக்கையை மக்கள் நம்புவார்களா?” -இது இறைவனின் சந்தேகம்.

“என்ன நீங்க, உலகம் புரியாத கடவுளா இருக்கீங்க. பூலோகமே இந்த ஜோதிடர்கள் பின்னாலதான் போயிட்டிருக்கு” என்றார் இறைவி.

இறைவனின் வதனத்தில் பேரானந்தம் பரவியது!

---------------------------------------------------------------------------------------------------------------

புதன், 30 மே, 2018

தமிழனுக்குப் புத்தி கற்பிக்கும் கன்னடச் சிறுவன்!

தமிழ் தம் தாய்மொழியாக இருந்தும் அதை மதிக்காத பெற்றோரும், தப்பும் தவறுமாகப் பேசுவதையும் எழுதுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும் இளைஞர்களும் மாணவர்களும் நிறைந்து காணப்படும் மாநிலம் தமிழ்நாடு.

இம்மாநிலத்திலுள்ள கரூர் மாவட்டம் தளவாபாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் மனைவி தீபா. இவர்களின் 3 மகன்களில் இளையவர் பிரவீன்.
                                               நன்றி: தி இந்து[நாளிதழ்]
இக்குடும்பத்தாரின் தாய்மொழி கன்னடம். 

7ஆம் வகுப்பில் படிக்கும் பிரவீன், தமிழின் மீதான ஆர்வம் காரணமாகவும், தலைமை ஆசிரியை பவுனு அவர்களின் ஊக்குவிப்பு காரணமாகவும் தமிழைப் பிழையின்றிக் கற்றதோடு, 1330 திருக்குறள்களையும் மனப்பாடம் செய்திருக்கிறார்.

அதிகார எண்ணையும் குறளின் எண்ணையும் சொன்னால் போதும், அதை அடிபிறழாமல் பிழை சிறிதுமின்றிப் பொருள் புரியும் வகையில் ஒப்பிக்கிறார். இவருடைய தமிழ் மீதான ஆர்வத்தையும் சாதனையையும் பாராட்டிப் பலரும் மகிழ்கிறார்கள்.

பிரவீனின் அறிவாற்றல் கண்ட கரூர் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் அவர்கள் பெரிதும் அகமகிழ்ந்து இவரைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்திக் கவுரவித்திருக்கிறார்[தி இந்து, 30.05.2018].

''இனியும் தமிழ் வழியில் படிப்பதோடு[ஏற்கனவே தமிழ் வழியில்தான் கல்வி கற்கிறார்] எதிர்காலத்தில் சிறந்த தமிழாசிரியராக ஆவதே என் லட்சியம்'' என்றும் பிரவீன் அறிவித்திருக்கிறார்.

பிரவீனின் செயல்பாடு, தமிழின் பெருமையை ஒரு படி உயர்த்தியிருக்கிறது; தாய்மொழியாம் தமிழைப் புறக்கணிக்கும் மிக மிகப் பெரும்பான்மைத் தமிழருக்குப் புத்தி கற்பித்திருக்கிறது.

பிழைப்புக்காக வேற்று மொழிகளைக் கற்றாலும் தாய்மொழியை அவமதித்தல் கூடாது என்பதை இனியேனும் தமிழர்கள் உணர்வார்களா?

காத்திருப்போம்.

பிரவீனுக்கு ஒரு வேண்டுகோள்:

#தமிழாசிரியர் ஆவது தங்களின் குறிக்கோள் என்பதை அறிந்து மகிழ்கிறேன். ஆனால்.....

தமிழாசிரியரை மதிக்கும் நல்ல மனம் தமிழர்களுக்கு இல்லை; ''தமிழைப் போற்றுங்கள்'' என்று ஒரு தமிழாசிரியர் சொன்னால் அதைப் பொருட்படுத்துவதும் இல்லை. ஆகையினால்.....

தமிழாசிரியர் ஆவது என்னும் கொள்கையைக் கைவிடுங்கள். தமிழ் வழியில் கல்வி கற்று, ஒரு பொறியாளராகவோ, மருத்துவராகவோ, விஞ்ஞானியாகவோ உயருங்கள். இவர்களில் ஒருவராக இருந்து, ''நான் தமிழ் வழியில் கல்வி கற்றுத்தான் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை எய்தியிருக்கிறேன். உங்கள் பிள்ளைகளையும் தமிழ் வழியில் கற்க வையுங்கள்; ஆங்கில அறிவையும் வளர்த்துவிடுங்கள்'' என்று அறிவுறுத்தினால், அதற்குத் தமிழ்ப் பெற்றோர்கள் மதிப்பளிக்கக்கூடும்#

கரூர்ப் பகுதியைச் சார்ந்த வலைப்பதிவர்கள்  என்னுடைய இந்த வேண்டுகோளைப் பிரவீனின் கவனத்திற்குக் கொண்டுசென்றால் நான் மிகவும் நன்றி பாராட்டுவேன்.

நன்றி.
---------------------------------------------------------------------------------------------------------------





செவ்வாய், 29 மே, 2018

ஒரு 'கரு'வுக்கு 'இரு' கதைகள்!!

'old is gold' என்னும் ஆங்கிலப் பொன்மொழியை நினைவில் இருத்திக்கொண்டு வாசியுங்கள். கதைகள் பிடிக்கும்! எழுதியவரை மிகவும் பிடிக்கும்!!

கதை 1:
தலைப்பு: 'நீ தொட்டால்...’ [குமுதம் 08.09.10]
படைத்தவர்: பரமசிவம்

“கொட மிளகா பஜ்ஜி போடுன்னு ஒரு மாசமா சொல்லிட்டிருக்கேன். காதுல போட்டுக்க மாட்டேங்குறே. கண்ணுச்சாமியின் குரலில் ஏக்கம் கலந்த வருத்தம்.

“யோவ் முந்தா நாள் போட்டேனே. போடப் போடத் தின்னு தீர்த்தியே, மறந்து போச்சா?” என்றாள் கல்யாணி.

''ஏண்டி பொய் சொல்றே.”

“நான் எதுக்குப் பொய் சொல்லணும்? பத்து நாள் முந்தி, சுடச்சுடக் குழிப் பணியாரம் வேணும்னே. போட்டுத் தந்தேன். வயிறு முட்டத் தின்னே. அடுத்த நாளே, ‘பணியாரம் கேட்டேனே, ஏன் போடலே’ன்னு கோவிச்சுட்டே. நல்லா போதை ஏத்திட்டு வந்து திங்குறே. தூங்கி முழிச்சா எல்லாம் மறந்து போயிடுது! -முகம் சிவக்கச் சொன்னாள் கல்யாணி.

“என்னை மன்னிச்சுடு புள்ள.” -குழைவாகச் சொல்லிக் கொண்டே கல்யாணியின் இடையில் கை போட்டான் கண்ணுச்சாமி.

“குடிச்சுட்டு வந்து என்னைத் தொடுற வேலையை வெச்சுக்காதே. நான் கர்ப்பம் ஆயிட்டா ''எப்பத் தொட்டேன்?''னு சந்தேகமா பார்ப்பே” என்றாள் அவள்.

“இதோ பாருடி, நான் தாலி கட்டின புருசன். படுன்னா படுக்கணும்” என்று அவள் தோளைத் தொட்டான் அவன்.

அவனைத் தள்ளிவிட்ட அவள், “நான் சொன்னா சொன்னதுதான். இனியும் குடிச்சிட்டு வந்து என்னைத் தொடக் கூடாது. மீறித் தொட்டா என் உடம்பில் உசுரு இருக்காது” என்றாள் கண்டிப்பான குரலில்.

குடிசையின் ஒரு மூலையில் முடங்கிப் படுத்தான் கண்ணுச்சாமி.
கதை 2:
தலைப்பு‘தொட்டுப்பார்...’ [ராணி]
படைத்தவர்: ‘பசி’

ள்ளிரவு.

குடிசையின் தட்டிக் கதவைத் தட்டக் குனிந்தான் பொன்னுச்சாமி.

ஏனோ தயங்கினான்.

மேட்டுத் தெரு சம்பங்கி நினைவுக்கு வந்தாள். அளவான சதை மேடுகளுடன் ‘சிக்’கென்று இருப்பாள். அவள் ‘ரேட்’ அதிகம். ஒரே ஒரு தடவை அவளிடம் போயிருக்கிறான் பொன்னுச்சாமி.

பிள்ளையார் தெரு பிரபா சுமார்தான்; ஆளும் கறுப்பு. ஆனால், ‘ரேட்’ கம்மி. என்றாலும் இவன் கையில் இப்போது பைசா இல்லை. இருந்த கொஞ்சம் பணமும் ‘டாஸ்மாக்’குக்குப் போய்விட்டது.

பொன்னுச்சாமியால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. காந்திநகர் சரசுவைத் தேடிப் போனான்.

''போன வாரம் வந்து ‘இருந்துட்டு’க் கடன் சொல்லிட்டுப் போனே. இன்னிக்கும் கடனா? சீ...போ வெளியே” என்று இவனைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளினாள் அவள்.

'அதே’ நினைப்பாக இருந்த பொன்னுச்சாமி, வாடிய மனதுடன் தன் குடிசைக்குத் திரும்பினான்.

தட்டிக் கதவைத் தட்டியவாறே, “சிவகாமி...” என்று தன் மனைவியை அழைத்தான்.

கதவைத் திறந்துவிட்டுச் சுருண்டு படுத்துவிட்டாள் சிவகாமி.

மூலையில் சிம்னி விளக்கு எரிந்துகொண்டிருந்தது.

சிவகாமியின் காலடியில் அமர்ந்து, அவளின் கெண்டைக் காலைச் சுரண்டினான் இவன்.

இவனின் கையைத் தட்டிவிட்டாள் அவள்.

மனம் தளராத பொன்னுச்சாமி, மெல்லத் தன் ஒரு கையை அவள் மார்பின் மீது படரவிட்டான்.

‘விசுக்’கென எழுந்த அவள், “மரியாதையா விலகிப் போயிடு” என்று எச்சரித்தாள்.

“நான் உன் புருசன் சொல்றேன், படுடி” என்று குழறிக்கொண்டே அவளைக் கட்டித் தழுவ முற்பட்டான் இவன்.

எரவாணத்தில் செருகியிருந்த அரிவாளைச் ‘சரக்’கென உருவியெடுத்த சிவகாமி, “கையில் காசு இருந்தா தாசிகளைத் தேடிக்கிறே. பைசா இல்லேன்னா பொண்டாட்டி தேவைப்படுறா. பொண்டாட்டின்னா வெறியைத் தணிக்கிற வெறும் மிஷின்னு நினைச்சிட்டியா? இனி ஒரு தடவை படுடின்னு சொன்னா, கண்டதுண்டமா வெட்டிப் போட்டுடுவேன். ஜாக்கிறதை” என்று கர்ஜித்த சிவகாமி, உயர்த்திப் பிடித்த அரிவாளுடன் பத்ரகாளி போல் நின்றாள்.

குடிசையின் ஒரு மூலையில் சுருண்டு படுத்தான் பொன்னுச்சாமி.
000000000000000000000000000000000000000000000000000000000000000000000
நாளை புதுப்பதிவு வெளியாகும்.



ஞாயிறு, 27 மே, 2018

கொதிக்கும் எண்ணைக்குள் 'குளு குளு' சாமியார்!!!

கொதிக்கும் எண்ணைக்குள் கை துழாவி, வடைச்சட்டி[வானலி]யில் நம்ம ஊர்ச் சாமியார்களும் சாமியாரிணிகளும் வடை சுடுவதை ஊடகங்களின் மூலம் அறிந்து பிரமித்திருப்பீர்கள்.
இவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில், தாய்லாந்து நாட்டின் 'சோங் புவா லம்பு' மாகாணத்தில், எரியும் அடுப்பின் மீதுள்ள எண்ணை நிரப்பிய தாம்பாளத்தில்[[பத்திரிகையில் வேறு பெயர் போட்டிருந்தார்கள்] உட்கார்ந்துகொண்டு[இடுப்பளவு] பக்த சிரோன்மணிகளுக்கு ஆசி வழங்கியிருக்கிறார்[சில நாள் முன்பு 'தினத்தந்தி'யில் வாசித்தது] ஒரு சாமியார்.

இப்படியொரு அபூர்வ சக்தி படைத்த சாமியாரிடம் ஆசி பெறுவதோடு, இவர் தொட்டுக்கொடுக்கும் பொருள்களை வாங்கினால்[பணம் கொடுத்துதான்] வாழ்க்கையில் சுபிட்சம் கிட்டும் என்பது தாய்லாந்து வாசிகளின் நம்பிக்கை. இதன் மூலம், சாமியாருக்குச் சொந்தமான கடையின் பலசரக்கு விற்பனை அமோகமாம்.

பாவம், நம்ம ஊர்ச் சாமியார்களுக்கு இப்படியான அதிர்ஷ்டம் இல்லை. 

இவர்கள் கொதிக்கும் எண்ணையில் கை நனைப்பது குறித்து ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்ட நினைவு எனக்கு உள்ளது. 

'குதிவாதம்'  என்னும் நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

எனக்கு அப்போது முப்பது வயதிருக்கும். காலையில் தூங்கி எழுந்ததும் குதிகாலைத் தரையில் ஊன்றும்போது ரொம்பவே வலிக்கு. ஊன்றவே முடியாது. வெய்யில் வந்த பிறகுதான் படிப்படியாகக் குறையும். 

என் தந்தை ஒரு நாட்டு வைத்தியரிடம் அழைத்துச் சென்றார்.

வடைச்சட்டியில்[வானலி] கொதித்துக்கொண்டிருக்கும் எண்ணையில் மூலிகைச் சாற்றைக் கலந்தார் வைத்தியர்; என்னுடைய குதிகாலிலும் சாற்றைப் பூசினார்.

''பயம் வேண்டாம். கொஞ்சம்கூடச் சுடாது'' என்று சொல்லிக்கொண்டே, பச்சிலைச் சாறு பூசிய என் குதிகாலை அரை நிமிடம்போல் கொதிக்கும் எண்ணையில் அமுக்கிப் பிடித்திருந்து விடுவித்தார். ''வலி சரியாயிடும்'' என்று சொல்லிப் புன்னகையுடன் வழியனுப்பினார்.

நம்ப மாட்டீர்கள் நான்கு நாட்களில் வலி காணாமல் போனது.

எனக்குக் குதிவாதம் வருவதற்கு முன்னரேகூட, எண்ணையில் வடை சுடும்[கையில் மூலிகைச்சாறு பூசிக்கொண்டு] சாமியார்கள் ஏதோ சூது பண்ணுகிறார்கள் என்று நான் எண்ணியதுண்டு. சம்பவத்தை நேரில் காணும் வாய்ப்புக் கிடைத்தால், ''சாமிகளே, கொதிக்கிற எண்ணைக்குள் கையை விடுறீங்க. கொதிக்கிற அந்த எண்ணையைக் கொஞ்சம் உங்க வாய்க்குள்ள ஊத்துங்களேன், பார்க்கலாம்'' என்று சொல்ல நினைத்ததுண்டு. வாய்ப்பு அமையவில்லை.

ஆக, நாம் நம் சாமியார்களைச் சந்தேகப்படுகிறோம். தாய்லாந்துக்காரர்கள்?

தாய்லாந்தில், எண்ணைத் தாம்பாளத்திற்குள் குந்தியிருந்து பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் அந்தச் சாமியாரின் நடவடிக்கைமீது சில சமூக ஆர்வலர்களுக்குச் சந்தேகம் வந்ததாம்; அது குறித்து ஆய்வு நடத்தி உண்மையைக் கண்டுபிடித்தார்களாம்.

'சாமியார் பயன்படுத்திய தாம்பாளம் இரண்டு அடுக்குகளாக இருந்தது[பார்வைக்கு ஒரே பாத்திரமாகத் தெரியும்]. மேலடுக்கில் எண்ணை. கீழடுக்கில் தண்ணீர். எரியும் நெருப்பின் சூட்டைக் கீழடுக்குத் தண்ணீர் உள்வாங்கிக் கொள்வதால், மேலடுக்கு எண்ணை சூடாவதே இல்லை' என்பதே அந்தக் கண்டுபிடிப்பு.

சாமியாரின் ஏமாற்று வேலை இவ்வாறு அம்பலப்படுத்தப்பட்ட பிறகும் அதை நம்ப மறுத்துவிட்டார்களாம் பக்தர்கள். வழக்கம்போல, சாமியார் எண்ணைத் தாம்பாளத்தில் அமர்ந்து ஆசீர்வதிப்பதும் பக்தர்கள் அணி அணியாய்ச் சென்று ஆசீர்வாதம் பெறுவதும் இன்றளவும் நடந்துகொண்டிருக்கிறதாம்.

நம்ம ஊர்ப் பக்தர்கள் தேவலாம்போலிருக்கிறது.
--------------------------------------------------------------------------------------------------------------









வெள்ளி, 25 மே, 2018

யானையிடம் ஆசி! யோசிப்பாய் பக்தனே!!

'சமயபுரம் மாரியம்மன் கோயில்  யானைக்கு மதம் பிடித்தது. அது பக்தர்களுக்கு ஆசி வழங்கிகொண்டிருந்தபோது அவர்களைத் தாக்கியது. 8 பேருக்குக் காயம். பாகன் கஜேந்திரன் கொல்லப்பட்டார். கோயில் நடை சாத்தப்பட்டது. யனைக்கு மயக்க ஊசி செலுத்த வனத்துறையினர் முயற்சி.....' -இது இப்போது [நண்பகல் 12.00 மணி] 'தந்தி' தொலைக்காட்சி அறிவித்துக்கொண்டிருக்கும் செய்தி.

'ஜெயா என்ற யானை வரவழைக்கப்பட்டு, பாகனைக் கொன்ற மசினி என்னும் யானை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது' என்பது புத்தம் புதிய செய்தி[12.45 மணி].
பக்தகோடிகளின் சிந்தனைக்கு.....

கடவுள் ஒருவரே என்று உங்களின் ஆன்மிக வழிகாட்டிகள் அறிவுறுத்தியும், ஈஸ்வரன், விக்னேஸ்வரன், பெருமாளு, அலமேலு, கந்தசாமி, கருப்புசாமி, காளியம்மா, மாரியம்மான்னு மானாவாரியா சாமிகளை உற்பத்தி பண்ணியிருக்கீங்க; கோயில் கட்டிக் கும்பிடுறீங்க.

''உண்டு தின்று உடம்பை வளர்த்து, உடலுறவில் இனவிருத்தி செய்து ஒரு நாளில் இல்லாமல் போகிறவன் மனுசன். இவன் ஒருபோதும் கடவுள் ஆக முடியாது. கடவுளின் பிரதிநிதின்னு வேஷம் போட்டு ஆசீர்வாதம் பண்ணுகிறவர்கள் அயோக்கியர்கள்''னு, உங்களுக்குள்ளேயும் கொஞ்சம் பகுத்தறிவோடு சிந்திக்கிறவங்க சொன்னால் கேட்க மறுக்கிறீங்க; குடும்பம் குடும்பமா, கூட்டம் கூட்டமாப் போயி விழுந்து கும்பிடுறீங்க; ஆசீர்வாதம் வாங்குறீங்க.

மனுஷ சாமிகள்கிட்ட ஆசி பெறுவதோடு நிக்கிறீங்களான்னா, ஊஹூம்.

ஒரு சாமிக்குப் பசுமாடு வாகனம். இன்னொரு சாமிக்குப் பெருச்சாளி வாகனம். இன்னும் ஒரு சாமிக்குப் பருந்து வாகனம்னு உங்க மூதாதையர்களில் சிலர் கட்டிவிட்ட கதைகளையெல்லாம் உண்மைன்னு நம்பி.....

பசுமாட்டுக்குப் பூஜை பண்ணி வழிபடுறீங்க. பெருச்சாளிக்குக் கோயில் கட்டிக் கும்பிடுறீங்க. இரை தேடி ஆகாயத்தில் அலையுற கழுகைக் கண்டா கன்னத்தில் போட்டுக்கிறீங்க. 

யானை ஒரு மிருகம். காடுகளில் வாழ்ந்து இனவிருத்தி செஞ்சி வாழ்றது அதன் இயல்பு. அதையும் நீங்க விட்டுவைக்கல.  கோயிலில் கட்டிவெச்சி, தும்பிக்கையைத் தூக்கி உங்க தலையைத் தொட்டுத் தடவுறதுக்குப் பாகனைக் கொண்டு பழக்குனீங்க.

பழக்க தோசத்துல அது தலையைத் தடவினா, நீங்க கும்பிடுற சாமியே உங்க தலையைத் தடவி ஆசீர்வாதம் பண்ணுறதா நம்புனீங்க. மத்தவங்களையும் நம்ப வைச்சீங்க.  நீண்ட நெடுங்காலமா இந்த மூடநம்பிக்கையிலிருந்து உங்களால் விடுபட முடியல. விளைவு.....

இன்று ஒரு பாகன் பலி. ஆசீர்வாதம் வாங்கப்போன பலருக்குக் காயம். இதற்கு முன்பும் இது மாதிரி உயிர்ப்பலிகளும் காயம்படுதலும் நிகழ்ந்திருக்கு.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனியேனும் கொஞ்சம் சிந்தியுங்கள். மனிதர்களை வழிபடுவதையும் விலங்குகளிடம் ஆசீர்வாதம் பெறுவதையும் நிறுத்துங்கள்.

செய்வீர்களா?
000000000000000000000000000000000000000000000000000000000000000000000









வியாழன், 24 மே, 2018

''குமுதமே, 'அப்படி' வேண்டாம்; 'இப்படி' எழுது!''

புலனடக்கத்துடன் வாழ்ந்த, பலராலும் நன்கு அறியப்பட்டுப் போற்றப்பட்ட, மிக நல்ல ஒரு மனிதரைக் கடவுள் ஆக்குவது நகைப்பிற்குரியது. இதற்கான குமுதம் அதிபரின் உள்நோக்கம் நல்நோக்கமாக இருக்க வாய்ப்பில்லை.
'மகா பெரியவர்' எனப்படும் காஞ்சி பரமாச்சாரியாருக்குத் தூப, தீப ஆராதனை செய்த பிறகுதான் சாப்பிட அமர்வார் அந்தப் பக்தர். 

சாப்பாடு பரிமாறப்பட்டவுடன், ''எல்லாம் அவருக்கே அர்ப்பணம்'' என்று சொல்லி, கொஞ்சம் நீரைக் கையில் எடுத்து, உணவைச் சுற்றித் தெளித்துவிட்டு உண்ணத் தொடங்குவது அவரின் வழக்கம்.

அன்று, பரிமாறப்பட்ட உணவில் கத்தரிக்காய் கருகியிருப்பதைப் பார்த்து மனம் நொந்தவர், உணவு சமைத்த மருமகளிடம் குறைபட்டவராய், ''பகவானே மன்னிச்சுடுங்கோ'' என்று முறையிட்டு உண்டு முடித்தார். தன் கவனக்குறைவுக்காக மருமகளும் வருந்தினாள்.

இது நடந்து ஆறு மாதம் கழிந்த நிலையில்,  பக்தர் தன் மருமகளுடன் 'மகா பெரியவா'வைச் சந்திக்க நேர்ந்தது. 

பெரியவா, ''அன்னிக்கி ஒரு நாள் எனக்குத் தீய்ஞ்ச கத்தரிக்காய் பண்ணிக் குடுத்தது நீதானே?'' என்று மருமகளைப் பார்த்துக் கேட்க, அவள் உணர்ச்சி வசப்பட்டுத் தேம்பித் தேம்பி அழுதாளாம்.

'தம் பக்தர்கள் வாழ்வில் நிகழும் வித்தியாசனமான சம்பவங்களையும் அவர்களுக்கு நேரும் குறைகளையும் அவர்கள் சொல்லாமலே ஞானதிருஷ்டியால் முன்கூட்டியே அறிவதோடல்லாமல், பக்தாளின் குறைகளையும் நிவர்த்தி செய்தவர் மகா பெரியவா' என்பதாக, ஓராண்டுக்கும் மேலாகக் கதைகள் எழுதி, மகா பெரியவாளை மகா பெரிய கடவுளாக்கியிருக்கிறார்கள் 'குமுதம்' குழுவினர்.

மகிழ்ச்சி...மிக்க மகிழ்ச்சி.

தனிப்பட்ட பக்தர்களையும் மகா பெரியவாவையும் தொடர்புபடுத்தி இவர்கள் உருவாக்கும் கதைகள் நம் பொதுமக்களை வெகுவாக ஈர்க்காது என்பது என் எண்ணம். எனவே..... 

'மகா பெரியவா, ..... ஊர்களில் நாளை ஜாதிக்கலவரம் மூள இருக்கிறது என்று ஞானதிருஷ்டியால் அறிந்து எச்சரிக்கை செய்தார். அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. கலவரங்கள் தடுக்கப்பட்டன' என்பதாகக் குமுதம்காரர்கள் கதைகள் எழுதலாம். எழுதினால், பொதுமக்களும் பெரியவாவைப் போற்றித் துதிபாடுவார்கள்.

பன்றிக்காய்ச்சல், எலிக்காய்ச்சல் போன்ற நோய்களின் தாக்குதல், கற்பழிப்பு, அவ்வப்போது நாட்டில் நிகழும்  கொலை கொள்ளைச் சம்பவங்கள் போன்றவற்றையும் பெரியவா முன்கூட்டியே அறிந்து சொல்ல, அரசும் தொண்டு நிறுவனங்களும் உரிய தடுப்பு/நிவாரண நடவடிக்கைகளை எடுத்து ஏற்படவிருந்த சேதாரங்களைத் தவிர்த்ததாகக் கதைகள் பரப்பினால், பாதிப்புக்குள்ளான மக்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த நாடும் அவரின் தொண்டுள்ளத்தைப் பாராட்டி விழா எடுத்து மகிழும்.

திடீர் எரிமலைச் சீற்றம், நிலநடுக்கம், சுனாமி போன்றவற்றின் தாக்குதல்களைச் சில வாரங்கள் அல்லது மாதங்களுக்கு முன்னதாகவே பரமாச்சாரியார் அனுமானித்து எச்சரிக்கை செய்ததால் சம்பந்தப்பட்ட நாடுகள் விழிப்புணர்வுடன் செயல்பட்டுத் தத்தம் மக்களைக் காத்ததாகக் கதைகள் படைத்தால் உலக அளவில் மகா பெரியவாவின் பக்தர் எண்ணிக்கை மளமள என்று உயரும்.

தமிழின் நம்பர் 1 வார இதழான குமுதத்தின் அதிபர் அவர்கள் எளியேனின் ஆலோசனைகளை ஏற்று நடைமுறைப்படுத்துவார் என்பது என் நம்பிக்கை.

'சர்வேஸ்வரனைப் போலவே சர்வவியாபியாக இருப்பவர்' என்று குமுதம் இதழால் புகழ்ந்தேத்தப்படுகிற[குமுதம் 30.05.2018] மகா பெரியவா வாழ்க! அவர்தம் புகழ் தரணியெங்கும் பரவுக!!
=================================================================================






செவ்வாய், 22 மே, 2018

பெரியார் 'அந்த' மதத்தை மட்டும் ஆதரித்தாரா?

//எனக்கு மோட்சத்திலோ, பாவமன்னிப்பிலோ, கடவுள் ஆட்சியிலோ சிறிதும் நம்பிக்கை கிடையாது. ஆத்மா என்றோ ஜீவன் என்றோ ஒன்று இருப்பதாக நம்புபவன் அல்ல நான். 

எனக்கு மதங்கள் மீதும் நம்பிக்கை கிடையாது; தியானத்திலும் ஈடுபாடு இல்லை.

சாதி, மதம், தெய்வம், தியானம் என்கிற நான்கின் மீதும் உள்ள மக்களின் நம்பிக்கை அழிந்தாக வேண்டும். இவை அழிந்தாலொழிய மனித சமுதாயத்திற்கு அமைதி, மகிழ்ச்சி போன்றவை கிட்டவே கிட்டா.

'மதம் மக்களுக்கு அபினி' என்றார் ஒரு பெரியார். ஆனால், நான் அதைக் கொடிய விஷம் என்பேன்.

மதத்தைப் பின்பற்றுபவனுக்குச் சுயமரியாதையோ சுய சிந்தனையோ இல்லை என்பதையும் உறுதியாகச் சொல்வேன்.

மனிதனின் ஒற்றுமைக்கு உலை வைப்பது மதம்; அவனுடைய சிந்திக்கும் அறிவைச் சிதைப்பதும் அதுதான். ஆகையால்.....

நான் எந்தவொரு மதத்தையும் ஆதரிப்பவன் அல்ல; எல்லா மதங்களுக்கும் நான் விரோதிதான்//.

[ஆதாரம்: ஓவியர் தமிழேந்தியின், 'பெரியார் தூரிகைக் கவிதைகள்', வங்கனூர், திருவள்ளுவர் மாவட்டம். நன்றி தமிழேந்தி].
=================================================================================
*பதிவு மிகவும் சுருக்கமாக முடிந்துவிட்டது. எனவே, இணைப்பாக ஒரு [பழைய] மன்மதக் கதை!


ன்னைத் கட்டியணைக்க வந்த  வினோதனின் கைகளைத் தட்டிவிட்டாள் அமுதா.

கட்டிலிலிருந்து இறங்கிப் பத்தடி தள்ளி, கட்டாந்தரையில் அவனுக்கு முதுகு காட்டிப் படுத்தாள்.

“ஏண்டா இத்தனை கோபம்?” -தயங்கித் தயங்கி அவளை நெருங்கி, பட்டும் படாமலும் அவளின் வழவழத்த இடையில் விரல் பதித்துக் கோட்டோவியம் தீட்டினான் வினோதன்.

“அடச்சீ...” என்று சீறிய அவள், மரவட்டை போல் தன் பொன் மேனியைச் சுருக்கிக் கொண்டு, மேலும் ஓரடி தள்ளிப் படுத்தாள்.
“நான் தப்பேதும் பண்ணலையே. ஏன் தண்டிக்கிறே?” -தழுதழுத்தான் அவன்.

“ஏழெட்டு பொண்ணுகளைக் காதலிச்சிருக்கீங்க. அத்தனை பேரோடவும், பீச், பார்க், ஆத்தங்கரைன்னு டூயட் பாடியிருக்கீங்க. லாட்ஜ்களில் ரூம் போட்டுக் கூத்தடிச்சிருக்கீங்க. நினைச்சாலே குமட்டுது.....சீய்.....'' -வெறுப்புடன் நெருப்பு வார்த்தைகளைக் கக்கினாள் அவள்.

 அவன் மருண்டான்; துவண்டான்.

“இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?” -கவலை தொனிக்கக் கேட்டான்.

“உங்க டைரியில் படிச்சேன்.”

டைரியை எடுத்து வந்து, அவளிடம் நீட்டி, “முழுசும் படிச்சியா?” என்றான் வினோதன்.

வாங்க மறுத்த அவள்.....

“பாதி படிச்சதும் நெஞ்சு வெடிச்சுடும் போல இருந்துச்சி. தூக்கிக் கடாசிட்டேன்.”

“அமுதா, பெண்கள் விசயத்தில் ‘தில்’ உள்ளவன் கல்யாணத்துக்கு முந்தியே ஆசை தீர விளையாடி முடிச்சுடறான். என்னை மாதிரி நல்லவன்...கோழைன்னு வெச்சிக்கோ, ‘அந்தச் சுகத்தை’க் கற்பனையில்தான் அனுபவிச்சுத் திருப்தி பட்டுக்கிறான். என்னைப் பொருத்தவரைக்கும், டைரியில் குறிப்பிட்ட மாதிரி எந்தப் பெண்ணையும் நான் காதலிச்சதில்ல; கூடிக் களிச்சதும் இல்ல; சும்மா எழுதி வெச்சேன். அதைப் படிக்கிறதில் இனம் புரியாத சுகம்.....

.....நம் கல்யாணம் நிச்சயம் ஆனதும், டைரியில், ‘இவை அனைத்தும் கற்பனையே’ன்னு கடைசிப் பக்கத்தில் எழுதி வெச்சேன். அதை நீ  படிக்கல. இந்த டைரியை எரிக்காம 'கற்பனை'ன்னு குறிப்பு எழுதி வெச்ச நான் ஒரு முட்டாள்.  

.....என் மனசைத் திறந்து நடந்ததையெல்லாம் சொல்லிட்டேன். நம்புவாயா செல்லமே?”

-சொல்லி முடித்த வினோதன், அமுதாவின் முதுகுப் பக்கம் வாகாகச் சரிந்து படுத்து, மென்மையாய் அவளின் கருங்கூந்தலை வருடிக் கொடுத்தான்.

பதில் ஏதும் தராத அமுதா கணப்பொழுதில் புரண்டு படுத்தாள்; அவனுடன் இணைந்தாள்.....இணைந்தார்கள். வெறும் கட்டாந்தரை அதிநவீன சொர்க்கபுரியாக மாறிக்கொண்டிருந்தது!
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
கதாசிரியர்? 
சொல்லத்தான் நினைக்கிறேன்..... தன்னடக்கம் தடுக்கிறது!

சனி, 19 மே, 2018

'உள்ளங்கையில் உலகளாவிய ஆபாசம்!'...எச்சரிக்கும் 'ராணி' வார இதழ்.

இந்த வார 'ராணி'[20.05.2018] வார இதழ், தரமானதொரு தலையங்கத்தைத் தாங்கி வெளிவந்திருக்கிறது. 'தமிழராய் வாழ்வோம்; தமிழால் உயர்வோம்' என்று முழக்கமிடும் இந்த இதழை வாரம் தவறாமல் வாசிப்பது தமிழரின் கடமை.

தலையங்கம்:
'எமனின் வாகனம் எருமை' என்பார்கள். அது உண்மையோ...பொய்யோ...நவீன எமன்கள் எல்லாம் வாகனம் இன்றி வலம் வருகிறார்கள்!

அறிவியல் என்கிற அதிசயம் எத்தனையோ அரிய வரங்களை நமக்கு அருளி வருகிறது. அவற்றால் பலாபலன்கள் அதிகம் என்றாலும்...பல விஷயங்களை அபாயமாக்குகிறோம். உதாரணம்...இணையம் எனும் 'இன்டர்நெட்', அலைபேசி என்னும் செல்ஃபோன்'!

இவை இரண்டும் தகவல் பரிமாற்றப் புரட்சி என்றாலும், இவற்றின் மறுபக்கம் பதைபதைக்க வைக்கிறது. தாம்பத்திய ரகசியங்கள் அன்றைய புதுமணத் தம்பதியருக்கு அவ்வளவாகத் தெரியாது. அவர்கள் அவற்றை அறிந்துகொள்ளவும், அவற்றைக் கடந்து பக்தி கொள்ளவுமே ஆலயக் கோபுரங்களில் 'செக்ஸ்' சார்ந்த சிலைகள் வைக்கப்பட்டன. அவர்கள் ஆபாசப் படங்கள் பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. இன்று அப்படி அல்ல! 'செல்ஃபோன்'- 'இன்டர்நெட்' வழியாக வீடுகளுக்குள்ளும், நமது கைகளுக்குள்ளும் உலகளாவிய ஆபாசங்கள் குவிந்து வருகின்றன. அவற்றுக்குக் கடிவாளம் போட வாய்ப்பில்லை.

சினிமாக்களிலும் சின்னத்திரையிலும் அதிகரித்துவரும் பாலியல் - வன்முறைக் காட்சிகளுக்கு மனம் சலிக்கிற நாம், 'செல்ஃபோன்' - 'இன்டர்நெட்' வழியாக வரும் இவற்றுக்கு ஆரத்தி எடுக்கிறோம்.

சின்னப் பிள்ளைகள் உட்பட எவ்வளவோ பேரின் சிந்தனைகளை இது சிதைக்கிறது...வக்கிர உணர்வைத் தூண்டுகிறது. அதனால்தான் பாலியல் கொடூரங்கள் அதிகரித்து வருகின்றன.

இதோடு தவறான தகவல்கள், வதந்திகள், அபத்தமான படங்கள், மற்றவர்களை நோகடிக்கும் 'மீம்ஸ்'கள் என்று எல்லை மீறிப் போகிறது. இதற்கு லாடம் கட்டுவார் இல்லை. 'பத்து ரூபாய் நாணயம் செல்லாது' என்பது உட்பட உண்மைக்குப் புறம்பான பல செய்திகளைப் போட்டுச் சிலாகிக்கிறார்கள். அதனால் மற்றவர்களுக்கு எவ்வளவு பாதிப்புகள்-நேர வீணடிப்பு என்பதை மறந்துவிடுகிறார்கள்.

மிகப் பழைய செய்திகளைப் புதிய செய்திகள் போல அனுப்புவது, திடீரென பரபரப்பைக் கிளப்புவது எல்லாம் நல்லதல்ல! எல்லோரும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிற அதி நவீன யுகம் இது. சிலருடைய பொழுதுபோக்குக்காக எவ்வளவோ பேரை இம்சைக்கும் இடையூறுக்கும் உள்ளாக்குவது சரியல்ல!

நவீனங்களை 'முன்புத்தி'யோடு பயன்படுத்த வேண்டுமே தவிர...'பின்புத்தி'யோடு பழக்கப்படுத்துவது அறிவியலுக்கு மட்டுமல்ல...அனைவருக்கும் செய்யும் துரோகம். எதையும் நல்லதாகப் பயன்படுத்துவோம். அதுவே நமக்கும் நாட்டுக்கும் நல்லது!  
----------------------------------------------------------------------------------------------------------------------------------
முக்கியக் குறிப்பு:
இந்தப் பதிவு, இப்போது[பிற்பகல் 02.30 மணி] சூடான இடுகைகள் பட்டியலில் 2ஆம் இடம் பெற்றுள்ளது. ஆனால், தமிழ்மணத்தின் முகப்புப் பக்கத்தில் காணப்படவில்லை..

தலைப்பில், 'ஆபாசம்' என்னும் சொல் இடம்பெற்றிருப்பது காரணமா?  

ஆபாசமானதும் அசிங்கமானதுமான தலைப்புகளைக் கொண்ட பதிவுகளைத் தமிழ்மணம் இதுபோல ஓரங்கட்டியிருக்கிறதா?!?!

வெள்ளி, 18 மே, 2018

அன்று 'சாதி நீக்கம்' செய்யப்பட்ட பெரியார்!

1909இல் தம் குடும்பத்தில் நடந்த வெகு சுவாரசியமானதொரு நிகழ்வு பற்றிப் பெரியார் சொன்னது. படியுங்கள்; பகிருங்கள்.
#என் தங்கைக்கு ஒரு பெண் இருந்தது. ஒன்பது வயதிலேயே அதற்குத் திருமணம் செய்துவிட்டார்கள்.

எங்கள் ஜாதியில், கல்யாணம் ஆகி முப்பதாவது நாளில் ஒரு சடங்கு செய்வார்கள்; பலகாரம் பச்சடியெல்லாம் செய்து எல்லோரும் வயிறு முட்டச் சாப்பிடுவார்கள்.

அந்த நாள் பார்த்து ஒரு விபரீதம் நடந்துவிட்டது. மாப்பிள்ளைக்குத் திடீர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. ஏழுட்டு தடவை போனது. என்ன செய்தும் காப்பாற்ற முடியவில்லை. பிள்ளையாண்டான் போய்ச் சேர்ந்துவிட்டான். அப்போது அவனுக்கு வயது பன்னிரண்டுதான்.

கொஞ்சம் வருசங்களுக்குப் பிறகு, அந்தப் பெண் பெரிய மனுஷி ஆகிவிட்டாள். அவளுக்கு இரண்டாம் திருமணம் செய்வதென்று முடிவெடுத்தேன்; யாருக்கும் தெரியாமல் மாப்பிள்ளை பார்த்தேன்.

சிதம்பரத்தில் ஒரு நாயுடு இன்ஸ்பெக்டர் இருந்தார்; மிகவும் வேண்டியவர். என் மைத்துனர், ஒரு நம்பிக்கையுள்ள அம்மை, மாப்பிள்ளைப் பையன், தங்கை மகள் என்று நால்வரை மட்டும் சிதம்பரம் ஆருத்ரா தரிசனம் பார்க்கப்போவதாகப் பிறரிடம் பொய் சொல்லி இன்ஸ்பெக்டரிடம் அனுப்பிவைத்தேன்.

அவர், பல பெரிய மனிதர்களின் ஆதரவோடு திருமணத்தைச் சிறப்பாகச் செய்து முடித்தார்.

இரண்டு நாட்களில் விசயம் வெளியே தெரிந்தது. என் அப்பா, அவமானம் நேர்ந்துவிட்டதே என்று அழாத குறையாகத் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டார். எங்கள் அம்மாவோ தூக்கில் தொங்க முயற்சி பண்ண, காப்பாற்றிவிட்டோம்.

என் ஜாதிக்காரர்கள் பலரும் கூடி, எங்களின் மூன்று குடும்பத்தாரை ஜாதி நீக்கம் செய்துவிட்டார்கள். நான் கவலைப்படவில்லை.

பிறகு, சேர்மன் தேர்தல் வந்தது. போட்டியிட்டு ஜெயித்தேன்.

மற்ற சமூகத்தார் பலரும் என்னைப் பார்த்துச் சீர் செய்தார்கள். அப்புறம்தான் அந்த எதிர்பாராத சம்பவமும் நடந்தது.

''யார் யாரோ சீர் கொண்டுபோய்ப் பார்க்கிறார்கள். நம்ம ஜாதிக்காரன் சேர்மனா வந்திருக்கான். நாம் சும்மா இருப்பதா?'' என்று என் ஜாதிக்காரர்களில் ஒருவர் சொல்ல, மற்றவர்களும் ஆமோதிக்க, மேளம் வைத்துக்கொண்டு ஏழெட்டு ரூபாயில் வேட்டியும் எடுத்துக்கொண்டு என்னை வந்து பார்த்தார்கள்.

முன்கூட்டியே அவர்கள் வருவதாகத் தகவல் வந்ததால், ஒரு அண்டா நிறையக் காபி வைத்துக்கொண்டு காத்திருந்த நாகம்மையார், டம்ளர்களில் காப்பி ஊற்றிக் கொடுக்க, முதலில் தயங்கிய ஜாதிக்காரர்கள் அப்புறம் குடிக்க ஆரம்பித்தார்கள். ஒரு அண்டா காப்பியும் காலியானது.....#
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இவ்வுரை, 31.03.1959இல், குற்றாலத்தில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவில் இடம்பெற்றது.

நண்பர், முனைவர் அ.ஆறுமுகம்[திருமழபாடி] அவர்களுக்கு நன்றி.


வியாழன், 17 மே, 2018

விரிவடையும் பிரபஞ்சங்'கள்'...சில கேள்விகளும் சந்தேகங்களும்!

எச்சரிக்கை: இது அறிவியல் கட்டுரையல்ல; சில அறிவியல்  தகவல்கள் குறித்த சந்தேகங்களின்/கேள்விகளின் தொகுப்பு மட்டுமே. கத்துக்குட்டித்தனமாக நான் உளறியிருந்தால் கண்டுகொள்ளாதீர்!

அண்டவெளியில் 'பிரபஞ்சம்'[All existing matter and space considered as a whole; the cosmos...https://en.oxforddictionaries.com/definition/universeஇடம்பெற்றிருப்பதும், பெருவெடிப்பின் மூலம் உருவான இது விரிவடைந்துகொண்டே இருக்கிறது என்பதாக  அறிவியல் அறிஞர்கள் சொல்லிக்கொண்டிருப்பதும் நாம் அறிந்ததே.
விரிவடைந்துகொண்டிருப்பதாக[The universe is believed to be at least 10 billion light years in diameter and contains a vast number of galaxies; it has been expanding since its creation in the Big Bang about 13 billion years ago]ச் சொல்லப்படும் பிரபஞ்சம் ஒன்றல்ல; இது போல் இன்னும் பல பிரபஞ்சங்கள் உள்ளன என்னும் கருதுகோளை[multiverse theory] முன்வைத்திருக்கிறாராம்[இறப்பதற்குச் சிறிது காலம் முன்பு?] மறைந்த அறிவியலாளர் 'ஸ்டீபன் ஹாக்கிங்'. உரிய விளக்கங்களுடன் அவர் வெளியிட்ட ஆய்வறிக்கை Journal of High Energy Physics என்னும் அறிவியல் இதழில் வெளியாகியுள்ளதாம்['தினத்தந்தி' நாளிதழ்[14.05.2018]க் கட்டுரை]. 

அதில்.....

'விண்வெளியில் பெருவெடிப்பு நிகழ்ந்தது[இதற்கு ஆதாரமான  அணு/அணுக்கள் பற்றிய ஆய்வெல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன. கடவுள் அணு’ என்று விஞ்ஞானிகளால் செல்லமாக அழைக்கப்பட்ட, எல்லா அணுக்களிலும் நுண்ணியதும், ஆதாரமானதுமான நுண்மையான அணுவை, சுமார் 14 ஆண்டுகள் முயற்சி செய்து, ஏறக்குறைய ரூ.20,000 கோடி செலவு செய்து, ஸ்விட்சர்லாந்து – பிரான்ஸ் நாட்டு எல்லையில் உருவாக்கப்பட்ட ‘செர்ன்’ என்கிற விஞ்ஞான ஆராய்ச்சி சாலை, அடையாளம் கண்டு விட்டதாக ஜூலை 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது என்றும் சொல்கிறார்கள்]. அதைத் தொடர்ந்து பிரபஞ்சம் விரிவடையத் தொடங்கியது. அவ்வாறு விரிவடைவது [அண்ட வெளியில்]சில இடங்களில் தடைபட்டுப்போனது. அத்தகைய தடைபட்ட இடங்களிலும் பெருவெடிப்புகள் நிகழ, புதிய புதிய பிரபஞ்சங்கள் தோன்றலாயின. இதன் விளைவாகப் பிரபஞ்சங்களின் எண்ணிக்கை பலவாக ஆயிற்று' என்னும் விளக்கமும் இடம்பெற்றுள்ளதாம்[இக்குறிப்பு, 14.05.2018 தினத்தந்தி நாளிதழ்க் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது].

கூடுதல் தகவல்களை அறியும்  ஆர்வத்தில் நாம் நான் எழுப்பும் சில கேள்விகளும் சந்தேகங்களும்:

*பெருவெடிப்பிலிருந்து உருவானது பிரபஞ்சம் எனின், பெருவெடிப்பு நிகழ்வதற்கு முன்பு அண்டவெளியில் ஆற்றல் மிக்க கடவுள் அணுக்கள்[கடவுளால் படைக்கப்பட்ட அணுக்களா, அல்லது கடவுளே அணுக்களாக இருக்கிறாரா?] மட்டுமே இருந்தனவா? வேறெதுவும் அல்லது எவையும் இல்லையா? இது குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்ந்திருக்கிறார்களா? ஆய்ந்துகொண்டிருக்கிறார்களா?

*பெருவெடிப்பிலிருந்து உருவான பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டே இருக்கிறது...சரி, எப்போதிருந்து இது நிகழ்கிறது? எவ்வளவு காலத்திற்கு விரிவடைந்துகொண்டே இருக்கும்? முற்றுப்பெறுவது எப்போது? எந்தவித அளவுகோலுக்கும் கட்டுப்படாத அண்டவெளியில் முற்றுப்பெறுதல் என்பது சாத்தியப்படுமா? 

*ஒன்றுக்கும் மேற்பட்ட பிரபஞ்சங்கள் இருப்பதாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங். முதலில் உருவான பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டிருந்தபோது, அதன் விரிவடைதல் தடைபட்டதால், காலியாக உள்ள இடங்களில் எல்லாம் புதிய புதிய வெடிப்புகள் நிகழ்ந்ததன் விளைவாக மேலும் பல பிரபஞ்சங்கள் தோன்றியதாகச் சொல்கிறார் அவர்.

விரிவடைதல் என்பது, கோள வடிவில் [உருண்டையான பலூன் விரிவடைவது போல்?] நிகழ்வதுதானே? சில இடங்களில் மட்டும் தடைப்படுவது எவ்வாறு? அதற்கான காரணங்கள் எவை? விளக்கியிருக்கிறாரா ஸ்டீபன் ஹாக்கிங்?

*பிரபஞ்சங்கள் ஒன்றுக்கும் மேற்பட்டவை என்றால், அவை அத்தனையும் விரிவடைந்துகொண்டே இருக்கின்றன என்றால்.....

ஏதோவொரு காலக்கட்டத்தில் அவை அனைத்தும் ஒன்றிணைந்து ஒரே பிரபஞ்சமாக மாறிவிடுவது சாத்தியம்தானே? பல[?] சூரி மண்டலங்களை உள்ளடக்கியுள்ள, நாம் வாழும் இந்தப் பிரபஞ்சமே இவ்வகையில் உருவானதாக இருக்கக்கூடுமோ?

*பிரபஞ்சம் விரிவடைவது உண்மை என்றால்.....

பிரபஞ்சத்தின் சுற்றுவட்ட எல்லைக்கப்பால் அது மேலும் விரிவடைவதற்கான வெற்றிடம் தேவை. அந்த வெற்றிடம் அதி நவீன விஞ்ஞானக் கருவிகளின் மூலம் அளந்து அறிதற்குரியதா?

தங்களால் இயலுமெனின், அன்புகொண்டு இங்குள்ள கருத்துப்பெட்டியிலேயே விளக்கத்தைப் பதிவு செய்யுங்கள். விரும்பாவிடின் தனிப்பதிவு வெளியிடலாம். அது என் போன்ற அறிவியல் ஆர்வலர்கள் அனைவருக்கும் பயன்படுவதாக அமையக்கூடும்.

நன்றி.
----------------------------------------------------------------------------------------------------------------------------------














செவ்வாய், 15 மே, 2018

புரியாத மந்திரமும் பரிதாப மனிதர்களும்!!![வைரவரிக் கவிதை]

நான் கவிதைகளை விரும்பிப் படிப்பதில்லை. படித்தது பிடித்துவிட்டால் எளிதில் மறப்பதும் இல்லை. படியுங்கள்; நண்பர்களையும் படிக்கத் தூண்டுங்கள்.



கோயிலில்
புரியாத மந்திரத்திற்கு
வேண்டிக்கொண்டே நூறு ரூபாயைத்
தட்டில் காணிக்கை செலுத்திய
வெள்ளை வேட்டி
வெளியே வருகையில்.....
'அய்யா......சாமீ
தர்மம் பண்ணுங்கய்யா'வின்
விரித்த துணியில்
சட்டைப்பையில் நோண்டியெடுத்து
ஒரு ரூபாயைப் போட்டுவிட்டு நகர்ந்தபோது
வெளிக்கோபுர மாடமெங்கும்
எதிரொலித்தது
கால் வீங்கிக்கிடந்த
அய்யா.....சாமீயின் குரல்.....
''நீங்க நல்லாருக்கணும் சாமி''
=============================================
கவிதையைப் படைத்த செ.செந்தில்மோகன் அவர்களுக்கும், பிரசுரித்த 'குங்குமம்'[18.05.2018] வார இதழுக்கு என் நன்றியும் பாராட்டுகளும்!

ஞாயிறு, 13 மே, 2018

''அய்யா, குட்டிக் கதை சொல்லித் தலையில் கொட்டிக்கொள்ள வேண்டாம்!''

அய்யா அவர்களுக்கு, வணக்கம்.

சிந்திக்கத் தூண்டும் சின்னஞ்சிறு குட்டிக்கதைகளைத் தங்களின் சொற்பொழிவுகளில் அவ்வப்போது கேட்க முடிகிறது. மகிழ்ச்சி.

நேற்று நடைபெற்ற ஒரு விழாவிலும் குட்டிக் கதை சொல்லி எதிரணியினரைக் கலங்கடித்திருக்கிறீர்கள். அதை, இன்றைய 'தி இந்து'[13.05.2018]வில் வாசிக்க நேர்ந்தது.
முதல்முறை பார்வையை ஓட்டியபோது, ''கதை பரவாயில்லை'' என்று சொல்லத் தோன்றியது. மீண்டும் ஒருமுறை வாசித்து, மனதில் சேமித்து, ஆற அமர அசைபோட்டபோது கதையின் 'உள்ளடக்கம்' பிடிபடாமல் போக்குக்காட்டியது.

''ஒரு விவசாயி, ஆற்றிலிருந்து குடத்தில் தண்ணீர் மொண்டுவந்து செடிகளுக்கு ஊற்றுகிறார். குடத்திலிருந்து தண்ணீர் வழிந்து வழியெல்லாம் சிந்துகிறது. பாதையோரமாகப் பயனற்றுக் கிடந்த ஓர் ஓட்டை அலுமினியக் குடம், இந்த நிறைகுடத்தைப் பார்த்து, 'கெக்கேபுக்கே'ன்னு சிரிச்சிட்டு, ''தண்ணியைச் சிந்தாம சிதறாம உனக்கு எடுத்துவரத் தெரியலையே''ன்னு கேலி செய்ததாம். ஓட்டைக் குடத்துக்குப் பதிலடி கொடுக்கும் வழி புரியாமல் வருத்தப்பட்ட தண்ணீர்க் குடம் விவசாயியிடம் நடந்ததைச் விவரித்ததாம்.

விவசாயி, உரத்த குரலில், ''நீ சிந்துற நீர்த்துளியெல்லாம் வழியிலுள்ள பூச்செடிகளுக்குப் பாயுது. அதுகள்ல மலர்கிற பூக்களையெல்லாம் கடைகளில் வித்து நிறையச் சம்பாதிக்கிறேன்''னு சொன்னாராம். கிண்டலடித்த அலுமினியக் குடம் வாயைப் பொத்திகொண்டு பேச்சுமூச்சில்லாம கிடந்ததாம்.'' -இதுதான் தமிழக முதல்வரான நீங்கள் சொன்ன குட்டிக் கதை.

இந்தக் கதையில்  குடங்கள் பேசுகின்றன. ஜடப்பொருள்களான குடங்கள் பேசுமா என்றெல்லாம் நான் கேட்கமாட்டேன். ஏனென்றால், ஜடப்பொருள்களாகட்டும் வாயில்லா ஜீவன்களாகட்டும் அதுகளையெல்லாம் பேசவிடுவது ஒருவகைக் 'கதை சொல்லும் உத்தி' என்பது எனக்குத் தெரியும். 

இங்கே, உண்மையில் குடங்கள் பேசவில்லை. குடங்களைப் பேசவிட்டு நீங்கள் உங்களின் சொந்த அரசியலைப் பேசுகிறீர்கள்..

உங்கள் எதிர்[ரி]க்கட்சியான தி.மு.க.வைத்தான் பயனற்றுக் கிடக்கிற அலுமினியக் குடம்[ஓட்டை அலுமினியக் குடம்னு இன்னொரு நாளிதழில் வாசித்த ஞாபகம்] என்று உருவகம் பண்ணியிருக்கிறீர்கள். உபயோகமில்லாத என்பதற்கு மாறாக, சீந்துவாரற்றுக் கிடக்கும் என்று நீங்கள் வர்ணித்திருந்தாலும் பொருத்தமே. இதன் மூலம், தி.மு.க., மக்களால் சீந்தப்படாத கட்சி என்பதை வெகு சிறப்பாகப் புரியச் செய்திருக்கிறீர்கள்.

ஓட்டை அலுமினியக் குடம் தி.மு.க.வைக் குறிக்கிறதென்றால் தண்ணீர் நிறைந்த குடம் எதைக் குறிக்கிறது? நிச்சயம் உங்களையோ உங்கள் கட்சியையோ அல்ல. குடத்தில் நீர் எடுத்துச் சென்று தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுகிற விவசாயி நீங்கள் என்பதால்.

நீங்கள் விவசாயி. நீங்கள் பயன்படுத்துகிற குடம் உங்கள் ஆட்சியா, நீங்கள் வகுக்கும் திட்டங்களா?

ஆட்சி என்பதே இங்கு பொருந்தி வருகிறது. அதாவது.....

விவசாயி ஆன நீங்கள், உங்களின் ஆட்சி என்னும் குடத்தில், நீர் என்னும் நலத்திட்டங்களை எடுத்துச் சென்று மக்களிடம் சேர்க்கிறீர்கள்.

அய்யா, நீங்கள் சொல்ல வந்தது இதுதானே?

இப்போது சில சந்தேகங்கள்.....

வழிய வழிய குடத்தில் நீர் எடுத்துச் செல்கிறீர்கள். அப்போது நீர் சிந்துவதாவும் அலுமினியக் குடம் கிண்டலடிப்பதாகவும் சொல்லியிருக்கிறீர்கள்.

நிறைகுடத்தில் நீர் சிந்துவது இயல்பு. அவ்வாறு சிந்துகிற நீர் உங்கள் நலத்திட்டங்களில் சிலவோ பலவோ[சில என்றே வைத்துக்கொள்வோம்] வீணாவதைத்தானே குறிக்கிறது?

சிந்துகிற நீர், மலர்ச்செடிகளுக்குப் பயன்படுகிறது. அதுபோல், வீணடிக்கப்படும் திட்டங்களால் பயன் விளைவதில்லையே? இங்கு உருவகமும் அது உணர்த்தும் பொருளும் முரண்படுகின்றனவே.

நீர் சிந்துவதைப் பார்த்து அலுமினியக் குடம் எள்ளிநகையாடுகிறது. அதாவது, உங்களின் நலத்திட்டங்களில் உள்ள தவறுகளைப்[ஊழல்களை என்பார்கள் எதிரணியினர்] பார்த்து தி.மு.க. நகையாடுகிறது. சரிதானே?

அன்புள்ள அய்யா,

குட்டிக் கதையோ நெட்டைக் கதையோ, சொற்பொழிவில் கதைகளைக் கையாள்வது மிக எளிது. ஆனால் அந்தக் கதைகள் உங்களின் எதிர்பார்ப்புக்கு மாறான விளைவுகளைத் தந்துவிடவும்கூடும் என்பதை ஒருபோதும் மறத்தல் கூடாது. இது அறிவுறுத்தல் அல்ல; வெறும் பரிந்துரை மட்டுமே.

நன்றி.
=================================================================================








சனி, 12 மே, 2018

ஞானிகளுக்கு இது அழகல்ல; அறிவுடைமையும் அல்ல!

உடம்பைச் சிதைப்பது மட்டும் குற்றச்செயலன்று; அதனினும் மேம்பட்ட அறிவைச் சிதைப்பதும் தண்டனைக்குரிய குற்றம்தான். ஆளும் வர்க்கம் இதை உணராத அவலம் இன்னும் எத்தனை ஆண்டுகள் நீடிக்குமோ!

அவர் ஞானி; புகழின் உச்சியைத் தொட்டவர். தமிழில் பிரபலமான இன்றைய[12.05.2018] முன்னணி நாளிதழில்[பெயர் வேண்டாம். தமிழ் உணர்வு மிக்கவர்களால் நடத்தப்படும் இதழ் அது] மறைந்த ஓர் ஆன்மிகப் பிரபலம் குறித்துக் கட்டுரை எழுதியிருக்கிறார்.

மறைந்த ஆன்மிகவாதியைப் பாராட்டுவதோ, அவரின் குறைகளைப் பட்டியலிடுவதோ நம் நோக்கம் அல்ல. அந்த ஞானியின் புகழ் பரப்பிட நினைத்து, மனம்போன போக்கில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தாங்கிய இந்த ஞானியின் கட்டுரை குறித்த விமர்சனம் மட்டுமே இங்கு இடம்பெறுகிறது[பல்லாயிரவர் வாசிக்கும் தினசரியில் இக்கட்டுரை வெளியாகாமல் இருந்திருந்தால் நம் விமர்சனத்திற்கும் தேவை நேர்ந்திருக்காது].

இந்த ஞானி யார் என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள். அவரேதான். 
அவர் இளையராஜா. இந்த இசை ராஜா, தம் கட்டுரையின் தொடக்கத்தில், 'என் மனதில் உன்னை[இறைவன்]த் தொழுவதற்காகக் கிடைத்த இந்தப் பிறப்பில் என்னைத் தொழுது கிடக்கின்றேன்' என்று நொந்துகொள்கிறார். ஆனாலும், 'உன்னை மட்டுமே முழுமையாகத் தொழுதிட மீண்டும் ஒரு பிறவி தா' என்றும் வேண்டுகிறார். [இன்னொரு பிறவி எடுத்து, வேலைவெட்டி எதுவுமில்லாமல், எதற்கும் எவருக்கும் பயன்படாமல், நெஞ்சுருக ஊனுருக அவனை மட்டுமே போற்றித் துதிபாடி ஒட்டுமொத்த ஆயுளையும் அவர் கழிக்க நினைக்கிறார்போலும்]. 

தொடர்ந்து, ரமண மகரிஷியைப் பற்றி எழுத முனைந்த இசைஞானி, 'ரமணர் 16 வயதில் பிணமாகத் தன்னைக் கிடத்தி, 'உண்மை நிலை'யை உணர்ந்து திருவண்ணாமலைக்கு வந்தார்' என்கிறார்.

ரமணர், 'உண்மை நிலை'யை உணர்வதற்காகத் தம்மைப் பிணமாக்கிக்கொள்ளுதல் தேவையா?' என்பது நம் கேள்வி['உண்மை நிலை'யை விவரிப்பது அத்தனை எளிதல்ல என்பதால் அது குறித்துக் கேள்வி எழுப்பவில்லை].

ஒருவர் தன்னைப் பிணமாக்கிக்கொள்ளுதல் என்பது தற்கொலை செய்துகொண்டால் மட்டுமே சாத்தியம். அவ்வாறில்லாமல், அவர் தன்னைப் பிணமாக்கிக்கொண்டதும் மீண்டும் உயிர் பெற்று எழுந்ததும் எப்படி என்பது வாசிப்பாளருக்கு இயல்பாக எழும் கேள்விகளாகும். இப்படியெல்லாம் கேள்விகள் கேட்கப்படக்கூடும் என்பதை இசைஞானி எதிர்பார்க்கவில்லை போலும்!

ஒருவேளை, 'இது, கடவுளின் அவதாரங்களுக்கு மட்டுமே வாய்க்கும்' என்று அவர் சொல்லவும்கூடும்; தாம் சொல்வதை மக்கள் நம்ப வேண்டும் என்று நினைப்பதும் சாத்தியமே.

இசைஞானி இசையில் ஞானியாக இருக்கலாம். ஆன்மிகத்துறையிலும் ஞானியாக ஆவதற்குரிய தகுதியை அவர் வளர்த்துக்கொள்ளுதல் வேண்டும் என்பதை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.

ஒரு தொழுநோயாளி ரமணரின் கால்களில்  விழுந்து வணங்கினாராம். ''இனி என்னைப் பார்க்க வரவேண்டாம். திருவண்ணாமலையைச் சுற்று'' என்றாராம் ரமணர். நோயாளியும் சுற்றினாராம். நோய் குணமாகிவிட்டதாம். இதையும் இசைஞானிதான் சொல்லியிருக்கிறார்.

இந்த ஞானி, ரமண மகரிஷி வாழ்ந்த காலத்தில்தான் தமிழகத்தில் மானாவாரியாய்த் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை பெருகிக் கிடந்தது என்னும் அவல நிலையை அறியார் போலும்! நோயாளிகளுக்காக, ரமணரே மலையை வலம் வந்து அத்தனை நோயாளிகளையும் குணப்படுத்தியிருக்கலாமே என்ற நினைப்பு இசைஞானிக்கு வராமல் போனது ஏன் என்று புரியவில்லை.

அப்போது ரமணருக்கு 18 வயது. ஞானி என்று பிரபலமடைந்திருந்த அவர் மீது பொறாமை கொண்ட ஒருவர் விஷத்தைக் கொடுத்துக் குடிக்கச் சொன்னாராம். ரமணரும் குடித்தாராம். பற்களில் காறை படிந்ததைத் தவிர எந்தவொரு பாதிப்பும் இல்லையாம். இதைச் சொல்லிப் புளகாங்கிதப்படுபவரும் இந்த இசை மேதைதான். பற்களில் காறை மட்டும் படிந்தது ஏன் என்பது நம் போன்றோர் கேட்கும் கேள்வி. அப்படிக் கேட்பது பாவ காரியம் என்று ஞானியார் நினைத்திடக்கூடும்.

''முழுமுதல் கடவுளான சிவபெருமானுக்கு, நஞ்சை அருந்தியதால் அவரின் கண்டத்தில்[தொண்டையில்] கறை படிந்தது; எனக்கு என் பற்களில் கறை படிந்தது'' என்று ஜோக் அடித்தாராம் ரமணர். சுற்றியிருந்தவர்கள் ரசித்துச் சிரித்து மகிழ்ந்தார்களாம்.

விஷம் குடித்தும் சாகாமலிருந்த இந்த ஞானி[ரமணர்]க்குத்தான் புற்று நோய் கண்டு 6 முறை அறுவை நடந்ததாகவும் இசைப் பேரரசர் குறிப்பிட்டிருக்கிறார்.

புற்றுநோய் என்ன, வேறு எந்தவொரு நோயும் அவதாரங்களைத் தீண்டுவதற்கு அஞ்சுமே. ரமணரும் அவதாரம்தானே? புற்றுநோய் தாக்கியது எப்படி என்று நாம் கேட்கப்போவதில்லை. கேட்டால் நம் ஞானி பதில் தருவாரா என்ன?

கட்டுரையில், இன்னும் பல கதைகளைச் சொல்லியிருக்கும் இசைஞானி, 'தன் பிணத்தைத் தானே கண்டறிந்து நான் யார் என்று நிஜ சொரூபத்தில் வாழ்ந்து காட்டினார் ரமண மகரிஷி' என்பதாக அதற்கு இறுதி வடிவம் தந்திருக்கிறார் 

இவர் போன்றவர்களின் இம்மாதிரிக் கட்டுரைகளை வாசித்தால், இருப்பில் இருக்கிற அறிவையும் இழந்து, வெறும் சதைப் பிண்டங்களாய்  மூடநம்பிக்கைகள் சுமந்து நம் மக்கள் நடமாட வேண்டியிருக்கும் என்பதை இசைப்பேரரசு இளையராஜா அவர்கள் ஏனோ சிந்திக்கத் தவறிவிட்டார்.
***************************************************************************************************************

வியாழன், 10 மே, 2018

இது என் சொந்தக் கதை!!!

நம்புகிறவர்களுக்கு இது ஓர் அனுபவப் பகிர்வு. நம்பாதவர்களுக்கு..... வெறும் கற்பனைக் கதை! இதை நீங்கள் ஏற்கனவே படித்திருக்கவும்கூடும்!
து நடந்து மிகப்பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது, சென்னைக் கல்லூரி ஒன்றின் மாணவன் நான்.

விடுமுறையைச் சொந்தக் கிராமத்தில் கழித்துவிட்டு, அன்று சென்னை திரும்ப இருந்தேன்.

“பரமு.....” - அப்பா அழைத்தார்.

“சொல்லுங்கப்பா.”

“மெட்றாஸ் போனதும் கடுதாசு போடு. மறக்காம திருப்பதி போயி ஏழுமலையானைத் தரிசனம் பண்ணிட்டு இதை உண்டியலில் போட்டுடு” என்று என்னிடம் இரண்டாயிரம் ரூபாயையும் நீட்டினார்.

அப்பா என் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். மூன்று பொட்டைக் கழுதைகளுக்கு [அப்பா அடிக்கடி கையாண்ட வசவு வார்த்தைகள் இவை] அப்புறம், அறிந்த, அறியாத அத்தனை கடவுள்களுக்கும் வேண்டுதல் வைத்துப் பெற்ற ‘தவப் புதல்வன்’ நான் என்பது காரணம்.

அவர் மனம் நோகும்படியாக நடந்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லைதான். இருப்பினும், பள்ளிப் பருவத்திலேயே ஒரு தமிழாசிரியரால் பக்குவப்படுத்தப்பட்ட என் பகுத்தறிவு மூளை இப்படிக் கேட்டது..........

“எதுக்கு உண்டியலில் போடச் சொல்றீங்க? சாமியா செலவு பண்ணுது?”

அப்பாவின் முகம் சுண்டிச் சிவந்துபோனது; சொன்னார்: “லாபம் கிடைச்சா போடுறேன்னு சாமிகிட்ட வேண்டிகிட்டேன். சாமி கருணை காட்டிச்சி. சொன்ன வாக்குத் தவறாம நடந்துக்க நினைக்கிறேன். உனக்கு இஷ்டம் இல்லேன்னா சொல்லிடு. நானே போய்ப் போட்டுட்டு வர்றேன்” என்று கொடுத்த பணத்தைப் பெற்றுக்கொள்ளக் கை நீட்டினார்.

நான் தொடர்ந்து வாதம் புரிவதற்கான ஆயத்த நிலையில் இருந்தாலும் பணத்தைத் திருப்பித் தராமல், சென்னை செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தேன்.

பரம்பரை விவசாயக் குடும்பம் எங்களுடையது. அப்பா விவசாயத்தை ஆள் வைத்துக் கவனித்துக்கொண்டே பக்கத்து டவுனில் தானிய மண்டி வைத்து வியாபாரமும் செய்து வந்தார்.

அவருக்குத் தெய்வ பக்தி அதிகம். பக்திக்கு முன்னால் ஐந்தாறு ‘மிக’ போடுவது பொருத்தமாக இருக்கும்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை ‘லாப நட்ட’க் கணக்குப் பார்ப்பார். கிடைக்கும் லாபத்தில் 5% ஐ ஏழுமலையான் கோயில் உண்டியலில் போட்டுவிடுவார். நான் சென்னையில் இருந்ததால், முதல் தடவையாக அந்தக் கடமையை என்னிடம் ஒப்படைத்திருந்தார்.

நான் சென்னை போய்ச் சேர்ந்ததும் தந்தை சொல்படி கடிதம் எழுதினேன்; திருப்பதியும் போனேன்; கோயில் குளமெல்லாம் ‘சுற்றிப்பார்த்துவிட்டு’, லட்டு[லட்டும் எள்ளுருண்டையும் எனக்கு ரொம்பப் பிடித்தமானவை] வாங்கி ருசித்துச் சாப்பிட்டேன். உண்டியலில் பணம் மட்டும் போடவில்லை! என் பகுத்தறிவு போட விடவில்லை.

பணத்தை என் வங்கிக் கணக்கில் பத்திரப்படுத்தினேன்!

அதற்கப்புறமும் இந்த என் கைங்கரியம் தொடர்ந்தது; தொகையும் பெருகிக்கொண்டே போனது.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். வியாபாரத்தில் அப்பாவுக்கு நஷ்டம் ஏற்பட்டால் இந்தச் சேமிப்பு உதவும் என்ற நல்ல எண்ணத்தில்தான் இந்தத் தப்பான காரியத்தில் ஈடுபட்டேன்.

கடவுள் நம்பிக்கை இல்லயென்றாலும், மனதில் அவர் இருந்த இடத்தில் ஒரு சிம்மாசனம் போட்டு அதில் பெற்ற தகப்பனை அமரவைத்து வழிபட்டவன் நான். அவருக்கு எதிராக ஒரு சிறு துரும்பைக்கூட நகர்த்தியதில்லை.

எதிர்பாராத வகையில், நான் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகப் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகி மனம் ஒடிந்து போனார் என் தந்தை.

பூர்வீக நிலத்தை விற்றேனும் கடனை அடைக்க வேண்டிய நெருக்கடியான நிலையில், பணம் சேமித்த வகையைச் சொல்லி என்னிடம் இருந்த சேமிப்புப் பணத்தைக் கொடுத்துக் கடனை அடைக்கச் சொன்னேன்.

நான் செய்தது தப்பா சரியா என்பது பற்றி வாயே திறக்காமல், “சந்தோஷம்ப்பா” என்று பணத்தைப் பெற்றுக்கொண்டவர் சற்றே தாமதித்து, “நான் அப்பப்பக் குடுத்த பணத்தை நீ ஒழுங்கா உண்டியலில் சேர்த்திருந்தா எழுமலையான் நஷ்டம் வராம காப்பாத்தியிருப்பான்” என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னார்.

அப்புறம் ஒருநாள், அவரே திருப்பதி சென்று நான் கொடுத்த ஒட்டுமொத்தத் தொகையையும் கோயில் உண்டியலில் போட்டுவிட்டுத் திரும்பினார். 

அதற்கப்புறமும், ஒரு மகனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர் செய்யத் தவறியதில்லை என்றாலும், மனம் திறந்து என்னுடன் பேசியதே இல்லை.

அவருடைய அறுபதாவது வயதில் இது நடந்தது. அறுபத்தைந்தில் காலமானார்.

அவர் சொன்னது போல, உண்டியலில் பணம் போட்டிருந்தால் ஏழுமலையான்  காப்பாற்றியிருப்பார் என்பதில் இன்றளவும் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால், பாசமிகு தந்தையின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாக நான் நடந்துகொள்ள இல்லையே என்னும் வருத்தம் என்னுள் உறைந்து கிடக்கிறது.
*************************************************************












நேற்று கும்பாபிஷேகம்! இன்று இடி விழுந்து சிதறிய கோபுரம்!!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு - சேலம் செல்லும் சாலையில் 'மல்லசமுத்திரம்' என்னும் ஊர் இருக்கிறது. அங்கிருந்து சிறிது தொலைவில்  உள்ளது 'கருமானூர்' கிராமம்.

பல ஆண்டுகள் ஊர் மக்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக, கூத்தாண்டேஸ்வரருக்குக் கோபுரத்துடனான கோயில் எழுப்பப்பட்டது.

இரண்டு நாட்கள் முன்பு, வேதமந்திரங்கள் எல்லாம் ஓதப்பட்டுக் குடமுழுக்கு[மகா கும்பாபிஷேகம்] நடத்தி, கூத்தாண்டேஸ்வரர் சிலைக்கு உயிர் கொடுத்து, கோயிலைப் புனிதப்படுத்தினார்கள் அர்ச்சகர்கள். 

இந்நிகழ்வுக்கு மறு நாள் கருமானூரில் இடிமின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்தது. கனமானதொரு இடி இறங்கியதால் கோபுரத்திலிருந்த சில குட்டிச் சாமிகளின் சிலைகள் சேதம் அடைந்தன.

பயங்கர இடிமின்னலுடனான மழையின்போது இடி விழுவது இயற்கை. அது எங்கு விழுகிறதோ அங்குள்ள பொருள் சிதைவுறும் என்பதும் இயற்கை நிகழ்வே. கருமானூர் கோயில் கோபுரத்தின் மீது இடி விழுந்ததால் அந்த ஊர் மக்களுக்குத் தீங்கு விளைவதற்கான வாய்ப்பு இல்லவே இல்லை என்பதை நம்புவது ஆறறிவின் பயனாகும்.

ஆறறிவு வாய்த்திருந்தும், கோயிலின்மீது இடி விழுந்ததால் பெரும் தீங்கு விளையும் என்று நம்புகிற பலவீனம் கருமானூர் மக்களைப் போலவே நம் எல்லோருக்கும் உள்ளது. காரணம், ஏற்கனவே பல மூடநம்பிக்கைகள் நம் மீது திணிக்கப்பட்டிருப்பதுதான்.

இப்போதைக்குத் தகர்க்கவே இயலாத சில மூடநம்பிக்கைகள் நம்மவர்களிடம் உள்ளன. அவற்றில், சாமி கும்பிடுவதும் ஒன்று.

கடவுளைக் கண்முன் நிறுத்துவதாக நம்பிச் சிலை வைக்கிறோம். கோயில் கட்டிக் கோபுரமும் எழுப்புகிறோம். அப்புறம் என்ன, மூத்தோர்களை முன் நிறுத்தித்  தமிழில் பக்திப் பாடல்கள் பாடி வழிபாட்டைத் தொடங்கலாம்.  ஆண்டுக்கொரு முறையோ இரு முறையோ ஒருங்கிணைந்து பண்டிகை கொண்டாடலாம். அதற்கு மாறாக.....

கடவுளுக்குப் புரியுமோ என்னவோ, நமக்குப் புரியாத, அவர்களுக்கு மட்டுமே புரிகிற மொழியில் அவர்களால் கற்பிக்கப்பட்ட மந்திரங்களை ஓதச் சொல்லி 'மகா...மகா...மகா...கும்பாபிஷேகம்' நடத்தச் செய்தோமே அப்போதே நாம் மூடர்கள் ஆக்கப்பட்டுவிட்டோம்.

கிடைத்ததைத் தின்று, கழித்து, மூத்திரம் பெய்து நம்மைப் போல் வாழ்கிற அவர்கள் சொல்லும் மந்திரங்களால் சிலையானது கடவுளாக மாறும் என்று நம்பினோமே, அப்போதே அவர்கள் நம்மைப் படு மூடர்கள் ஆக்கிவிட்டார்கள்.
நாம் முறையிட்டால் கடவுள் கேட்க மாட்டார் என்று நினைத்து, அவர்களைக் கடவுளின் பிரதிநிதிகள் ஆக்கினோமே அப்போதே நாம் படு படு மூடர்கள் ஆகிவிட்டோம்.

இத்தனை கனத்த மூடநம்பிக்கைகளை ஏற்கனவே நாம் சுமந்துகொண்டிருப்பதால்தான் குறைந்தபட்சம் சிந்திக்கும் ஆற்றலைக்கூட நம்மால் பெற்றிட இயலவில்லை.

மழைக்காலங்களில் எங்கெல்லாமோ தற்செயலாக விழுகிற இடி, ஒரு கோயில் கோபுரத்தின் மீது விழுந்ததை எண்ணி அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிற[இன்று ஊடகங்களின் எண்ணிக்கை பெருகிவிட்டதால், இம்மாதிரி நிகழ்வுகள் மிக எளிதாக மக்களைச் சென்றடைகின்றன.  இதற்கு முன்பும் அவ்வப்போது கோயில் கோபுரங்களின் மீது இடி விழுந்திருக்க வாய்ப்புள்ளது] நாம்,  சிந்திக்கக் கற்றல் வேண்டும்; இம்மாதிரி மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடுதல் வேண்டும். ஆனால், இந்நாள்வரை அது சாத்தியப்படவில்லை.

கருமானூரில் நிகழ்ந்தது போல, தமிழகமெங்கும் ஆங்காங்கே கோயில் கோபுரங்களின் மீது இடி விழுந்தால்தான், வேதமந்திரம் ஓதி, குடமுழுக்குச் செய்வதால் பயன் ஏதுமில்லை  என்பதை நம்மால் உணர முடியுமோ என்னவோ!?

காலம் பதில் சொல்லும்.