எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

பறவைகள் குறித்த சில தவறான நம்பிக்கைகள்.....

*சிட்டுக்குருவிகள் அழியும் நிலையில் உள்ளனவா? அதற்கு கைபேசி கோபுரங்களின் கதிர்வீச்சு காரணமா?

சிட்டுக்குருவிகள் அழியும் நிலையில் இல்லை. இவை உலகெங்கும் பரவியுள்ளன. ஒரு சில நாடுகளில், நகரமயமாதல், இனப்பெருக்கக் காலங்களில் குஞ்சுகளுக்கு ஏற்ற உணவு (பூச்சிகள்) கிடைக்காத காரணங்களால், ஒரு சில இடங்களில் மட்டும் குறைந்தும், அற்றும் போயிருக்கலாம். ஆனால், கைபேசிக் கோபுரங்களில் இருந்து வரும் மின்காந்த அலைகளினால் எண்ணிக்கையில் குறைகின்றன, முற்றிலுமாக அழிந்து வருகின்றன என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத கூற்று.

*ஆந்தை, கூகை இனப் பறவையாகும். இது ஆஸ்திரேலியாவிலிருந்து வருவதா??

செய்திகளில் அவ்வப்போது வெளியிடப்படும், கூகை அல்லது வெண்ணாந்தை, தலை உச்சியில் கொத்தாகச் சிறகுகள் கொண்டு கொம்பு போலக் காட்சியளிக்கும் ஆந்தைகள் வெளிநாட்டில் இருந்து வருபவை என்பது தவறான தகவல். கூகை உலகின் பல பகுதிகளில் பரவலாகத் தென்படும் ஒரு பறவை. அவை கோயில் கோபுரங்கள், பழைய கட்டிடங்களில் பகலில் அடைந்து இரவில் வெளியே வந்து இரைதேடும். தென்னிந்தியாவிற்கு Short-eared Owl (Asio flammeus) எனும் ஒரே ஒரு ஆந்தை வகை மட்டுமே வலசை வருகிறது. ஏனையவை இங்குள்ளவையே.

*பாறு கழுகுகளை தவறான கருத்துக்களின் பிரதிநிதிகளாக, தீய எண்ணங்களின் உருவகமாக, எதிர்மறையாக வரைபடங்களில் சித்தரிக்கப்படுவது சரியா?

பாறு கழுகுகள் அழிவின் விளிம்பில் உள்ள பறவை இனம். இவை இறந்த கால்நடைகளையும், பெரிய பாலூட்டிகளான யானை, மான், காட்டெருது முதலிய காட்டுயிர்களின் இறந்த உடல்களையும் உண்டு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைக்க உதவுகின்றன. 

கால்நடைகளுக்கு வலிநீக்கி மருந்தான டைக்லோபீனாக் (Diclofenac) கொடுக்கப்படுகிறது. இந்த மருந்து செலுத்தப்பட்ட கால்நடைகள் இறந்த பின்னும் இம்மருந்து அவற்றின் உடலில் தங்கிவிடுகிறது. இம்மருந்து, இந்த இறந்த கால்நடைகளை உண்ணும் பாறு கழுகுகளுக்கு நஞ்சாகிறது. தமிழ் நாட்டில் நீலகிரி மாவட்டத்தில், மாயாறு பகுதியில் சிறிய எண்ணிக்கையில் இப்பாறு கழுகுகள் உள்ளன. அங்குள்ள பூர்வக்குடியினர் இப்பறவைகளை அவர்களது மூதாதையர்களாக மதிக்கின்றனர். ஆனால் அப்பகுதிகளில் குடியேறிய மக்கள் இப்பாறு கழுகுகளைக் காண்பதைக் கெட்ட சகுனமாக நினைக்கின்றனர்.

அழிந்து வரும் ஒரு பறவையினத்தைப் பற்றி, தவறான கண்ணோட்டத்தைப் பொதுமக்களிடம் பரப்புவது முறையாகாது. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல, இது போன்ற எதிர்மறைக் கண்ணோட்டங்கள் அப்பறவையினத்தினை பாதுகாக்கும் முயற்சிகளுக்கு தடங்காலாக அமையும்.

===============================================================

நன்றி: quora 

https://uyiri.wordpress.com/2020/02/17/birds_myths-and-scientific-explanations/